Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மழை வரப் போகுதே

மழை 18

மனோவின் பைக் அந்த சாலையில் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. இன்றும் கயிறு ஆலைக்கே வண்டியை ஓட்டினான்.

 

பின்னால் நேற்றை போல கௌசி அமர்ந்திருந்தாலும் அவளிடம் பேசும் எண்ணம் அவனுக்கு துளிக்கூட இல்லை.

 



Advertisement

“மாமா, எனக்கு பூ வேணும்!” கௌசி வேண்டுமென்றே கேட்டாள்.

 

அவன் காதில் வாங்கியது போலவே இல்லாது இருக்க, “மாமா, உங்ககிட்ட தான் கேட்குறேன்! எனக்கு பூ வாங்கிக்குடுங்க!” என்றாள் அவன் காதருகே சத்தமாய்.

Advertisement

 

Advertisement

அசைவேனா என்றான் அவன்!!!

 

அவன் வேண்டுமென்றே தவிர்க்கிறான் என்பது தான் புரிகிறதே! இவளும் விடாமல் சீண்டினாள்.

Advertisement

 

“மாமா? இப்போ வண்டியை நிறுத்தி பூ வாங்கித்தர போறீங்களா? இல்லையா?”

 

“……………”

 

“இப்போ மட்டும் நீங்க வண்டியை நிறுத்தல… நான் அப்படியே குதிச்சுடுவேன்!” இரு பக்கமாய் கால் போட்டு அமர்ந்திருந்தவள் சொல்ல, அப்போதும் கூட இளகவில்லை அவன்.

 

இதற்குமேல் பூச்சாண்டி வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள், வண்டியை விட்டு குதிப்பதை போல அவன் தோளை பற்றிக்கொண்டு லேசாக எழுந்துக்கொள்ள, வண்டியின் பேலன்ஸ் தப்பி ஆட்டம் கொண்டது.

 

அப்போதும் கூட அவனிடம் இருந்து எந்தவித இசைவும் இல்லை.

 

லேசாக எழுந்திருந்தவள், இப்போது ஒற்றை காலை காற்றில் உதற, தடுமாறிய வண்டியை ஒரு கையால் சமாளித்தவன், தன் இடக்கை பின்பக்கமாய் கொண்டு சென்று அவள் தொடையை அழுத்திப்பிடித்து அவளை அமர்த்தினான்.

 

அவன் தொட்ட மறுநொடி அவளது செயல்கள் நின்றுபோயின. கிட்டத்தட்ட அதிர்ந்துப்போய் அமர்ந்திருந்தாள்.

 

அவன் இன்னும் பிடித்த பிடியை விடவில்லை. ஒற்றை கையால் தான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.

 

அவன் பிடியோ இரும்பாய் இருக்க, அழுத்தி பிடித்திருப்பது வேறு கூச்சமாய் போனது. அவன் கரத்தை விலக்கிவிட அவள் முயற்சிக்க பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்!

 

அவன் பிடியில் அழுத்தத்தையும் மீறிய ஒன்று… கோபமோ… இயலாமையோ… வீம்போ… எதுவோ ஒன்று சேர்ந்திருப்பதாய் தோன்றியது அவளுக்கு.

 

‘இவ்ளோ இருக்குன்னா நேத்து எதுக்கு அப்படி பண்ணனும்?’ மனம் சுனங்க, முதல்நாள் நடந்தது மனதுக்குள் ஓடியது.

 

முன்தினம் அவளுக்கு பூவைப்பதை பார்த்ததும் விறுவிறுவென வெளியேறியவன், அதன்பிறகு வெளியே வரவே இல்லை. அவன் என்ன நினைக்கிறான்? எப்படி உணர்கிறான்? என்பது அவனுக்கே புரியாத புதிராக தான் இருந்தது. வாய் ஒன்று சொல்ல, மனம் ஒன்று சொல்ல… என்று இரண்டு முரண்களுக்கும் நடுவே முட்டிக்கொண்டிருந்தான்.

 

கெளசிக்கோ அப்படியொரு சூழலில் அவன் தன்னை விட்டுவிட்டு சென்றது உரிமையான கோபத்தை கிளப்பியது.

 

அவர்கள் அங்கிருந்து போகும்வரை பொறுத்தவள், “யாரை கேட்டும்மா இப்படி செஞ்சீங்க?” என்றாள் அன்னையிடம். குரல் மிக மெலிதாய், வார்த்தைகள் அழுத்தமற்று, லேசாக திக்கித்தான் என்றாலும், அவர் கண்களை பார்த்து நின்றாள் கௌசி.

 

“யாரடி கேட்கணும்?” முறைத்துக்கொண்டு வந்தார் புவனா.

 

“என்னை கேட்கணும் தானே ம்மா?”

 

“நீயா இழுத்துவிட்டு வச்சதெல்லாம் பத்தாதா? இனியும் வேற உன்னை நம்ப சொல்றியா? இங்கப்பாரு முடிவெடுக்குற யோக்கியதை எல்லாம் உனக்கு கொஞ்சமும் கிடையாது, தெரிஞ்சுகோ!” வார்த்தைகள் சூடாக வந்தது அவரிடம் இருந்து.

 

அவர் சொற்களில் மனம் காயப்பட்டாலும், இது தான் ஒடுங்கி அமர வேண்டிய நேரம் அல்ல என்பதை நெஞ்சில் ஏற்றியவள்,

“வாழப்போறது நான்தானே ம்மா! நீங்க என்கிட்ட சொல்லிருக்கணும்!” என்றாள் பொறுமையாக.

 

“சொல்லல டி… சொல்லனும்ன்னு தோணல… இப்போ அதுக்கு என்னவாம்?”

 

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லம்மா!” என்றவளை நின்ற இடத்தில் இருந்தே தீயென முறைத்தார் புவனா.

 

மொபைலில் பேசிவிட்டு இவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டே வந்த அன்பழகன், ‘இதுக்கு தான் நான் சொன்னேன்!’ என்பதை போல மனைவியை ஏறிட்டார்.

 

“உனக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ… இதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்!” தீவிரமாய் ‘இதுதான் என் முடிவு’ என்று புவனா பேச,

 

“இஷ்டம் இல்லாதவளை எதுக்கு கட்டாயப்படுத்திட்டு இருக்கீங்க?” என்று பொங்கிக்கொண்டு வந்தாள் ஆர்த்தி.

 

அசோக்கையும் அவன் வீட்டினரையும் கண்டதும் சந்தோசத்தில் தலைக்கால் தெரியாமல் குதூகலித்திருந்தவள், கௌசியை அவர்கள் பெண் கேட்டது தெரிந்து நொந்து போனாள்.

 

இப்போது கௌசி மட்டும் மறுப்பு தெரிவிக்காது போயிருந்தால், ஆர்த்தியிடம் இருந்து ஓர் வசைப்பாடல் கண்டிப்பாக கிடைத்திருக்கும்.

 

புவனாவுக்கு மண்டை காய்ந்தது. இஷ்டம் இல்லாத கணவனை சமாளித்து, சம்மந்தி வீட்டினரிடம் நயமாய் பேசி முடித்து, மறுப்பு சொல்லும் பெரியவளை சரிக்கட்ட என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருப்பவருக்கு, சின்னவளும் கூட்டு சேர்ந்து பேச, ‘மறுப்பு சொல்ல வேண்டியவன் கம்முன்னு போய்ட்டான்! இதுங்க ஆடுற ஆட்டம் இருக்கே’ என்று எரிச்சலாய் வந்தது.

 

“நீ சின்ன பொண்ணு! ஒழுங்கா படிக்குற வேலையை பாரு போ!” விரட்டிவிட நினைத்தார் புவனா.

 

“யாரு சின்ன பொண்ணு? எனக்கும் பதினெட்டு ஆச்சு! எல்லாம் புரியுற வயசு தான்! அக்காவுக்கு பிடிக்காததை எல்லாம் செய்யணும்ன்னு நினைக்காத… சொல்லிட்டேன்!!!”

‘ஏய் கௌசி’ இப்போது ‘அக்கா’வாகியிருந்தாள்.

 

இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூழ, ‘இனி தான் அங்கே அதிகப்படி!’ என்று உணர்ந்து தன் அறைக்கு சென்றாள் கௌசி.

 

‘எதற்கும் உடனே தீர்வு கிடைக்காது! சற்று ஆற போட வேண்டும்! முடியாது என தோன்றுவது கூட காலம் நகர்கையில் தன்னால் முடியும்!’

 

இதுக்கூட முன்பொருமுறை மனோகரன் அவளுக்கு சொன்னது தான்!

 

என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தவளின் அறைக்கு வேகமாய் வந்த ஆர்த்தி, “நீ எதுக்கும் கவலைப்படாத க்கா! உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் தானே? பிடிக்காது தானே? அந்த… அவரை… அதான் அசோக்கை உனக்கு பிடிக்கல தானே?” படபடவென உயிரை கையில் பிடித்துக்கொண்டு கேட்டாள் ஆர்த்தி.

 

“இல்லை!!!” என்று கௌசி சொன்னதும் தான் முகம் சற்று தெளிந்தது அவளுக்கு.

 

“உன் முடிவுல நீ உறுதியா இரு க்கா! அம்மா சொல்லுதுன்னு எல்லாம் நீ தலையாட்டாத!”

 

“சரி…”

 

“உனக்கு சப்போர்ட்டுக்கு நான் இருக்கேன்!”

 

“சரி!”

 

“ஆ…ம்ம்… அக்கா?”

 

“என்ன?”

 

“ஒருவேளை உனக்கு அவரை பிடிச்சுட்டா?”

 

“எவரை!?”

 

“அசோக்கை!!”

 

“பயப்படாத! எனக்கு பிடிக்கும், பிடிக்காதுன்னு எதுவுமே இல்லை! எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு! மனோ மாமா தான் என் புருஷன்! என் கல்யாண வாழ்க்கை அவரோட மட்டும் தான்!!!” இப்படிதான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் அவள் யோசித்திருக்கவில்லை.

 

தன்னால் அவள் வாயிலிருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.

 

கௌசி சொன்னதை கேட்டதும் திகைத்து தான் நின்றாள் ஆர்த்தி.

 

“சொல்றேன்ல? பயப்படாம போ!” என்று அவளை அனுப்பி வைத்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

‘கொஞ்சம் நிறமாய், உயரமாய், மொழு மொழுவென மீசை தாடியின்றி ஒரு ஆண்மகனை பார்த்துவிட்டால் போதும், எப்படி தான் இந்த பிள்ளைகளுக்கு பிடிக்கிறதோ?’

 

‘ஆம்பளைன்னா மீசை இருக்கணும் தானே? அதானே அழகு’

 

இப்படி நினைத்தவளுக்கு மனோகரனின் கத்தை மீசை நினைவு வர, ‘முன்னாடி மீசை இருக்காதே! இப்போ மட்டும் ஏன் இப்டி?’ என்று வினா எழுந்தது. அதே யோசனையில் பலதையும் கோர்வையாய் அவனை சுற்றியே நினைத்தவளுக்கு, கண்களும் சுழற்ற உறங்கியே போனாள்.

 

“வண்டியை விட்டு இறங்குறியா? இல்ல ஸ்டான்ட் போட்டுட்டு நான் மட்டும் போய்டவா?” கிட்டத்தட்ட கத்தினான் மனோகரன்.

 

கனவு கலந்ததை போல விழித்தவள், பைக் பேக்டரி வாசலில் நிற்பதை பார்த்ததும் வேகமாய் இறங்கினாள்.

 

அவளுக்கு முன்னே வேக எட்டுகளுடன் நடந்த மனோ, “நேத்தே எல்லாம் சொல்லிட்டேன், புதுசா சொல்ல ஒண்ணுமே இல்ல! அதனால நீயே என்ன நடக்குதுன்னு கவனிச்சு பார்த்துக்கோ! எனக்கு வேலை இருக்கு” மடமடவென சொல்லிக்கொண்டே திறந்தவெளியில் மேல்கூரை மட்டும் வேய்திருந்த இடத்துக்கு சென்றான்.

 

நீருக்குள் ஊறிக்கிடந்த தேங்காய் நாரை தரம் பிரித்துக்கொண்டிருந்த பெண்கள் இவனை கண்டதும் ‘வணக்கம்’ சொல்ல, இவனும் பதிலுக்கு சொல்லிக்கொண்டே அங்கிருந்த மாற நாற்காலியில் அமர்ந்துக்கொண்டான்.

 

உடன் வந்தவள் என்ன செய்கிறாள் என்ற பார்வை கூட இல்லை. அந்த நோட்டை பிரட்டுவது மட்டுமே தன் கடமை என்பதை போல பக்கங்களை ‘சரட்.. சரட்’டென்று புரட்டுபவனை காண்கையில் சிரிப்பு வந்தாலும், சினமும் சேர்ந்தே வந்தது.

 

‘புதுசா எங்கயும் கூட்டிட்டு போனா, என்னோட பேசனுமேன்னு இங்கேயே கூட்டிட்டு வந்துருக்காரு!’ அதுவே அப்போது தான் புரிந்தது அவளுக்கு.

 

இவள் எங்கேயும் போகாமல் நேரே அவனுக்கு எதிரே கிடந்த கதிரையில் வந்து அமர்ந்தாள். அடிக்கண்ணில் கண்டாலும் ‘என்ன?’வென்று கூட கேட்கவில்லை அவன்.

 

“மாமா?”

 

“மாமா…. கொஞ்சம் பேசணும்!”

 

பக்கங்களை புரட்டும் வேகம் அதிகரித்தது.

 

“நியாயமா நான்தான் கோவப்படனும்!”

 

ஒருநொடி நின்ற விரல்கள், இன்னும் வேகமாய் புரட்ட ஆரம்பித்தது.

 

“ம்ச்…. மாமா!? முன்னாடி நான் பேசிட்டே இருப்பேன்! நீங்க இப்படியே தான் அமைதியா இருப்பீங்க! நடுல எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தப்போ நீங்களா என்கிட்ட வந்து பேச ஆரம்பிச்சீங்க! அப்பறம் மறுபடி பேசுறதை நிறுத்தியாச்சு! நானும் பேசுறதையே மறந்து போயிருந்தேன்!

 

ஆனா, நேத்து சும்மா தொணதொணன்னு பேசி, என் வாயை கிண்டி பேசுற பழக்கத்தை ஆரம்பிச்சு வச்சுட்டு, இப்போ நீங்க மறுபடி முசுடாட்டம் மூஞ்ச திருப்பிக்கிட்டா எப்படி மாமா?”

 

அந்த நோட்டை மூடி மேசையில் வீசியவன், வேறு நோட்டை எடுத்தான். மீண்டும் அதே புரட்டல்…. ‘சிட்டி’ ரோபோவுடன் போட்டிப்போடும் அளவிற்கு அவன் பக்கங்களை புரட்ட,

 

“அப்போ மறுபடியும் நான் எதாவது பிரச்சனையை இழுத்து விட்டுக்கிட்டா நீங்க என்னோட பேசுவீங்களா?” என்றாள் உர்ரென!

 

ஒரே ஒரு நொடி! ஒரு நொடி மட்டுமே அவளை நிமிர்ந்து பார்த்தவன்…

 

“விசாலாட்சி க்கா!!” தூரமாய் வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை அழைத்தான்.

 

“என்ன தம்பி?”

 

“எப்பவும் ரேடியோ போட்டு தானே வேலை செய்வீங்க! ஆன் பண்ணுங்க அதை!” என்று சத்தமாய் சொன்னவன், “தேவையில்லாதது எல்லாம் காதுல விழாம இருக்கட்டும்!” என்றான் அவளுக்கு மட்டும் கேட்ட்கும்படி முனகலாய்.

 

அவள் முகம் அனிச்சமலராய் வாட, அதை எல்லாம் அவன் கண்டுக்கொள்ளவில்லை.

 

ரேடியோ இயங்க பாடல் ஓடியது….

 

‘ராசாவே… உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க!!!

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க… அது உசுரை வந்து உருக்குதுங்க….

வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா!

அது தப்பான கருத்தா? இல்ல தண்ணீரில் எழுத்தா?’

பாடல் நாலு வரிக்கூட தாண்டியிருக்கவில்லை.

 

“ம்ச்! யக்கா.. அந்த ரேடியோவ ஆஃப் பண்ணு மொதோ?” என சீறிக்கொண்டு கத்தினான் மனோகரன்.

கௌசிக்கு சிரிப்பில் இதழ் துடித்தது.

 

“நீதானே தம்பி போட சொன்ன!?”

 

இதற்குள், ‘பழசை மறக்கலையே… பாவிமக நெஞ்சு துடிக்குது!’ என வரிகள் பல்லவியில் இருந்து சரணத்திற்கு தாவ,

 

“ஐயோ… அமத்தி போடுக்கா!” என்ற அவன் காட்டுகத்தலில், ‘இன்னைக்கு என்னவோ ஆகிடுச்சு தம்பிக்கு!’ என்ற முனுமுனுப்புடன் ரேடியோவை நிறுத்தினார் அவர்.

 

பாட்டு சத்தம் நின்றதும் தான் அவன் மனமே அமைதியானது. முகத்தை அழுந்த தேய்த்தவன் எதிரே பார்க்க, அவனையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தாள் கௌசி.

 

அந்த பார்வை அவனை எதுவோ கேட்டது, என்னவோ செய்தது…!

 

அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என தொட்ன்ர வேகமாய் எழுந்துக்கொண்டான்.

 

“எனக்கு வெளில வேலை இருக்கு! நீ இருந்து பாத்துட்டு வா! நம்ம முருகன் காரோட இங்கதான் இருக்கான்!” என்றவன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு நகர, “மாமா…?” என்றாள்.

 

கால்கள் நின்றாலும், கண்கள் அவளை பார்க்க முயலவில்லை.

 

“நான் சொல்ல நினைச்சதெல்லாம் அந்த பாட்டே சொல்லிடுச்சு! உங்களுக்கு இன்னும் ரெண்டு நாள் அவசாகம் குடுக்குறேன்! நிதானமா யோசிங்க!

 

நியாயம், தர்மம், சரி, தப்பு இதெல்லாம் தாண்டி உங்க மனசு என்ன சொல்லுதுன்னு மட்டும் கேளுங்க! அது சொல்றதை மறைக்காம என்கிட்ட வந்து சொல்லுங்க!!!

 

இந்த முறையும் ‘பொய்’ சொல்லலாம்ன்னு நினைக்காதீங்க! நான் உங்க உண்மையான பதில்க்காக காத்துக்கிட்டு இருப்பேன்!” என்றவள் அவனுக்கு முன்னே கிளம்பிவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!