Skip to content
Post Views: 5,488
ஆனந்தம் – 54
ஈசனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. அவனறிந்த கதிரவன் முற்றிலும் வேறொருவன்.. ஆனால் இப்போது அவன் காணும் கதிரவனோ ஈசன் நினைத்ததற்கு மாறாய் இருந்தான்.
ரேவதியின் திருமணத்திற்கு கதிரவனும் குடும்பம் சகிதமாய் வந்திருந்தான். கதிரவன், வசுமதி.. கதிரவனின் கரங்களில் அவர்களின் இரண்டு வயது மகள் நட்சத்திரா.. வந்ததில் இருந்து மகளைத் தன் கைகளில் தான் வைத்திருந்தான்.
Advertisement
முதலில் ஈசன் இவர்களை கவனிக்கவில்லை.. மேடையில் ரேவதியோடு மாப்பிள்ளையின் அக்கா இருக்க, லட்சுமி ஈசனருகே வந்து முதல் வரிசையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
கதிரவனும் வசுமதியும் வந்தவர்கள், அவர்களும் முதல் வரிசையில் வந்தமர, ஈசன் பின்னே யாருடனோ பேசிக்கொண்டு இருந்தவன், லட்சுமியின் “வாங்க..” என்ற வரவேற்பு பேச்சில் தான் திரும்பிப் பார்த்தான்.
லட்சுமியும், வசுமதியும் வெகு இயல்பாய் முன்பே பழகியவர்கள் போல் பேசிக்கொண்டு இருக்க, கதிரவன், மடியில் பாதித் தூக்கத்தில் இருந்த மகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்..
Advertisement
“மாமா…” என்று லட்சுமியும், “அத்தான்…” என்று வசுமதியும், தங்கள் கணவன்மார்களை ஒருசேர அழைக்க, இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..
Advertisement
ஈசனுக்கு கதிரவனைப் பார்த்ததும் அந்த இடம் கைவிட்டு போனது மனதில் வர, இயல்பாய் இருக்க முடியாமல் போக, கதிரவனோ, மகளைத் தூக்கியபடி இவனருகில் வந்து அமர்ந்துகொண்டான்.
ஈசன் ஆச்சர்யமாய் பார்க்க, “லேடீஸ் ப்ரீயா பேசட்டுமே…” என்று கதிரவன் சிரிக்க, அந்த சிரிப்பை வீம்பாய் தன் முகத்திலும் ஈசன் பதித்துக்கொண்டான்.
லட்சுமியும் வசுமதியும் வெகு இயல்பில் பேச, ‘என்னடா இது..’ என்பது போல் ஈசன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே கஜேந்திரன் வர, வேகமாய் நட்சத்திராவை தூக்கிக்கொண்டு எழுந்த கதிரவன்,
Advertisement
“அய்யா நல்லா இருக்கீங்களா…” என்று மரியாதையாய் விசாரிக்க, கஜேந்திரனும் அதற்குதக்க பதில் பேசியபடி அங்கேயே அமர, ஈசனுக்கோ தான் மட்டும் என்னவோ தனித்துவிடப் பட்டது போலிருந்தது.
“பாப்பா பேரென்ன..???” என்று லட்சுமி கேட்க,
“நட்சத்திரா.. எங்க பேருக்கு பொருத்தமா வைக்கனும்னு வச்சோம்” என்று வசுமதி சொல்கையில், கதிரவன் மீதிருந்த காதலும், தங்கள் வாழ்வில் அவள் எத்தனை மகிழ்வாய் இருக்கிறாள் என்பதும் அப்படியே முகத்தில் பிரதிபலிக்க,
கதிரவனின் பார்வையும், வசுமதியின் பதிலில் காதலையும், ஒரு பெருமிதத்தைக் காட்ட, ஈசனது பார்வை சட்டென்று லட்சுமியின் முகத்தில் படிந்தது..
சிரித்துக்கொண்டு தான் இருந்தாள்.. மகிழ்வாய் இருப்பது போல் தான் தெரிகிறது.. ஆனால் லட்சுமியின் கண்களில் எதுவோ ஒன்று குறையாய் இருப்பது போல் தோன்ற, அது என்னவென்று சிந்திப்பதற்குள்,
“மாமா மேடைக்கு கூப்பிடுறாங்க…” என்று லட்சுமி சொல்ல, “ம்ம் போ லஷ்மி…” என்றான் அவள் முகத்தையே பார்த்து.
வசுமதியும் போகவா என்பதுபோல கதிரவன் முகம் பார்க்க, அவனோ ‘போ..’ என்று தலையசைத்தான்..
“பாப்பா முழிச்சா இதை கொடுங்கத்தான்…” என்று ஃபீடிங் பாட்டிலை அதன் உரையோடு கொடுத்தவள், லட்சுமியைப் பார்த்து “போலாம்..” என்று சொல்லி இருவரும் நடக்க,
வசுமதி சென்று மேடையேறும் வரைக்கும் கதிரவன் பார்வை அவளையேத் தான் தொடர்ந்தது. அவளும் அவன் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான் என்ற உறுதியில், மேலே ஏறி நின்றதுமே தன் கணவனைப் பார்த்து ஒரு புன்னகையை சிந்திவிட்டே மற்றவர்களோடு பேசலாயினாள்.
ஈசன் பார்வையில் இதெல்லாம் பட, அடுத்து அவனும் வேகமாய் லட்சுமியைப் பார்க்க, லட்சுமி ரேவதியோடு எதுவோ பேசியவளின் பார்வை தன்னப்போல் ஈசனை காண, அவன் காண்கிறான் என்றதும் லேசான ஒரு அதிர்வோடு கண்கள் விரிந்து இதழ்கள் புன்னகைக்க, ஈசனுக்கு அதுவொரு புது உணர்வாய் இருந்தது.
அவள் மீது படிந்த பார்வையை அகற்ற முடியாமல் போக, லட்சுமியின் ஒவ்வொரு அசைவையும், மனதில் பதித்துக்கொண்டு இருந்தான்..
பாலாவும் அவன் நண்பர்களும் கேமிராவும் கையுமாய் அலைய, நேராக ஈசனிடம் வந்தவன்,
“அண்ணா அப்படியே ஒரு போஸ் கொடு…” என்று சொல்ல,
“என்னடா..??” என்று திரும்பக் கேட்க, “சுத்தம்..” என்றவன்.. “அப்படியே ஒரு போஸ் குடுண்ணா..” என்று சொல்ல, ஈசனுக்கு என்ன தோன்றியதோ
“இல்லடா லஷ்மி வரவும் எடுப்போம்…” என்றுவிட, பாலா கூட ‘நீயா பேசியது..’ என்பதுபோல் பார்க்க,
“ப்பா…” என்ற நட்சத்திராவின் குரலில் அண்ணன் தம்பி இருவருமே அங்கே திரும்ப,
“குட்டிம்மா.. அங்க பார் அம்மா…” என்று கதிரவன் மேடையை நோக்கி கை காட்ட,
“ம்மா…” என்று அதுவும் சொல்ல, “சமத்து பேபி.. இதை குடிக்கணும்..” என்றபடி ஃபீடிங் பாட்டிலை மகளின் வாயில் வைக்க, அதுவோ “அம்மாட்ட..” என்று மேடையை கை காட்டியது.. வசுமதி இதெல்லாம் பார்த்தவள் இறங்கி எல்லாம் வரவில்லை..
லட்சுமிதான், “அக்கா பாப்பா இங்க வரணும் சொல்றா போல..” என்றுசொல்ல,
“அவரே பார்த்துப்பார் லட்சுமி….” என்று அதற்கும் ஒரு புன்னகை புரிந்தாள் வசுமதி.
பாலாவோ இது தான் சாக்கு என்று நட்சத்திராவை கதிரவனின் அனுமதியோடு புகைப்படங்கள் எடுக்க, அதுவோ தன்னை வைத்து என்னவோ செய்கிறான் என்று கேமாராவைப் பார்த்தது.
ஆனால் ஈசனுக்கோ ‘எப்படி ஹேண்டில் பண்றார்..’ என்று கதிரவனைப் பார்க்க, அவனோ மிக மிக பொறுமையாய் இஷ்டமாகவே தன் மகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அத்தனை நேரம் பாலா புகைப்படங்கள் எடுத்ததால் அமைதியாய் இருந்த நட்சத்திரா, அவன் “தேங்க்ஸ் ண்ணா.. பிரிண்ட் போட்டு உங்களுக்கு அனுப்புறேன்..” என்று சொல்லி நகர்ந்திட,
அடுத்தநொடி அம்மாவிடம் போவேன் என்று பிடிவாதம் பிடிக்க, “பேபி அம்மா பிசி.. சோ அப்பாக்கிட்ட… ம்ம்..” என்று அவனும் குழந்தையாய் மாறி தலையை ஆட்டியபடி பாலைப் புகட்ட, அதுவோ விளையாடிக்கொண்டே குடித்தது.
அதற்கும் ஒருமுறை கணவனும் மனைவியும் பார்த்து சிரித்துக்கொண்டனர். முன்னே என்றால் ஈசனுக்கு இதெல்லாம் அதிகப்படியாய் தோன்றியிருக்குமோ என்னவோ, ஆனால் இப்போது ஈசனுக்கு அதெப்படி இத்தனை காதலாய் ஒரு ஜோடி என்று.
“என்ன ஈசன் அமைதியா இருக்கீங்க??” என்ற கதிரவனின் குரலில் திரும்பியவனை நட்சத்திராவும் பார்க்க, அவளைப் பார்த்து சிரித்தவனுக்கு அதற்குமேல் பேசாமல் இருக்க முடியவில்லை.
“ஹ்ம்ம் எப்பவும் பாப்பா இப்போ தூங்குற நேரம்.. இங்க வந்ததுனால தூங்கல..” என்று கதிரவனும் பேச்சை வளர்க்க,
“எப்படி ஹேண்டில் பண்றீங்க..” என்று கேட்டான் ஈசன்.
“ஹா ஹா.. குழந்தைக்கு அப்பா அம்மா ரெண்டுபேரும் தானே பொறுப்பு.. மதி எனக்காக எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிறா.. சோ, நான் சம்பாரிக்கிறது மட்டும் தான் வேலைன்னு இருக்க முடியுமா…” என்று கதிரவன் கேட்ட கேள்வியில் ஈசனுக்கு புத்தியில் ஆணி அடித்தது போலிருந்தது.
ஏற்கனவே லட்சுமியிடம் தான் நடந்துகொள்வது சரியல்ல என்ற எண்ணம் இருந்தாலும், இன்னமும் அவன் மனம் திறக்கவில்லையே.. இப்போது கதிரவன் வசுமதியை கண்கையில் தான் எத்தனை தவறிழைக்கிறோம் என்று தோன்றியது..
ஈசன் முகம் யோசனைக்கு மாற, “நான் சொன்னது சரிதான..” என்று கதிரவன் கேட்க, “ம்ம் ஆமா.. சில நேரம் நம்ம பண்றத ரியலைஸ் பண்ண லேட்டாகிடுது..” என்றான் ஈசனும் மனமார்ந்து.
“கண்டிப்பா.. அதுவும் எனக்கெல்லாம் ஒரு ஸ்டேஜ்ல மதி என் லைப்ல இல்லவே இல்லைங்கிற நிலை.. மறுபடியும் அவக்கிட்ட இருந்து எனக்கான லைப் அண்ட் லவ்வ திரும்பக் கொண்டுவர நான் பட்ட பாடு.. யப்பா.. கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சி… பிடிவாதமா கல்யாணம் பண்ணி.. எங்க அம்மாக்கிட்ட அடிக்கூட வாங்கினேன்…” என்றவனின் முகத்தில் அப்பட்டமாய் அத்தனை காதல் தெரிந்தது.
ஆனால் ஈசனுக்கோ ‘நீ பண்ற வேலைக்கு நான் அம்மாக்கிட்ட திட்டு வாங்குறேன்… நீயாதான போன நீயா தான் வரணும்…’ என்று லட்சுமியிடம் பேசியது நினைவில் வர, லட்சுமி எத்தனை வருந்தியிருப்பாள் என்றிருந்தது.
“என்ன ஈசன் அப்பபோ பிரீஸ் ஆகிடுறீங்க..” என்ற கதிரவனின் குரலில்,
“இல்ல.. நீங்க சொல்றதை கேட்கிறப்போ.. எனக்கு நான் பண்ண தப்பெல்லாம் மனசுல வருது..” என்று வெளிப்படையாகவே பேச, கதிரவனுக்கு புன்னகை மலர்ந்தது.
“நானும் நிறைய தப்பு பண்ணிருக்கேன். ஆனா அதெல்லாம் ஒண்ணுமேயில்லங்கிற மாதிரி மதி காட்டின அன்பு தான் என் வாழ்க்கைக்கு பக்கபலம்.. ம்ம்ஹும்.. என் லைப்பே மதி தான்..” என்றவன்,
“கொஞ்சம் லேடீஸ புரிஞ்சுக்கிறது கஷ்டம் தான்.. நம்ம நினைச்சே பார்க்காத ஒரு விஷயத்தை ரொம்ப சாதாரணமா செய்வாங்க.. சொல்வாங்க.. அவங்க எதிர்பார்ப்பு ஆசைகள் எல்லாம் சின்ன சின்ன சாதாரண விசயங்களா இருக்கலாம். ஆனா கண்டிப்பா அவங்க சாதாரணம் கிடையாது…” என்று கதிரவன் அவனுக்கு தோன்றியதைத் தான் சொன்னான்.
ஆனால் ஈசனுக்கோ அவன் இதயத்தில் கத்தி கொண்டு திருகியது போல் இருந்தது. ‘அப்போ நான் உங்களுக்கு சாதாரணமா…’ என்று கண்ணீர் விழிகளில் கேட்டவளுக்கு, அவன் இன்றுவரைக்கும் கூட சரியான சமாதானம் சொல்லவில்லையே.
கோபத்தில் பேசினாலும், எப்படி பேசினாலும் வார்த்தைகளின் வீரியங்கள் ஒன்றுதானே.. இன்றுவரைக்கும் கூட அவளை ‘எனக்காக வா…’ என்று அழைத்திடவில்லையே ..
அவளாக வரவேண்டும்.. அவளாக அவனை புரிந்துகொண்ட அவனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும்.. அவளாகவே எல்லாம் செய்ய வேண்டும்..
பின் அவன் எதற்கு?? தாலி கட்டி, கொஞ்ச நாளில் ஒரு குழந்தையை கொடுக்கவா?? அப்போ ஈசன் வாழ நினைத்த வாழ்க்கை இதுதானா?? அப்படியானால் அதுதானே சாதாரண வாழ்வாய் போயிருக்கும்..
‘எதோ கல்யாணம் பண்ணோம்.. சம்பாரிச்சோம்… குழந்தை பெத்தோம்…’ என்று அவனும் ஒரு சாதாரண வாழ்வு வாழவா ஆசைப்பட்டான். அவளை சாதாரணம் என்று சொல்லிவிட்டு, கடைசியில் அவனல்லவா உப்பு சப்பில்லாத வாழ்வு ஒன்றிருக்கு வரிந்துகட்டி நின்றிருக்கிறான். லட்சுமியின் உணர்வுகளின் பிரதிபலிப்புகள் மட்டும் இல்லையென்றால் நிச்சயம் உப்பு சப்பில்லாத வாழ்க்கை தான் அவனுக்கு இந்நேரம்.
அனைத்தையும் நினைக்கையில் இன்று ஈசனது மனமோ, அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தாண்டி லட்சுமிக்காக அவள் பின்னே ஓடத் தொடங்கியது..
‘என் லஷ்மி.. என் லஷ்மி…’ என்று ஓயாது ஈசனின் மனம் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது..
கதிரவன் மற்றவர்களோடும் பேசிக்கொண்டிருக்க, வசுமதி கீழே வந்து நட்சத்திராவை வாங்கிக்கொள்ள, அதுவோ நன்றாய் அம்மாவின் மடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தது. அம்மாவை போல் இருந்தாலும் செயல்கள் எல்லாம் அப்பாவைக் கொண்டிருந்தது. பார்க்கும் பார்வை கூட.
குறிக்கப்பட்ட சுப வேளையில், ரேவதியின் கழுத்தில் மாங்கல்யம் ஏற, ரேவதியிடம் சொல்லிவிட்டு லட்சுமி கீழே வந்துவிட்டாள்.
error: Content is protected !!