Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்த பூந்தோரணம்

Aanandha Poonthoranam 53

ஆனந்தம் – 53

எதையுமே எதிர்பார்க்காத அன்பு.. எனக்கு நீ மட்டுமே போதும்.. வேறெதுவும் வேண்டாமென்ற தூய நேசம்… லட்சுமி மனதில் இருப்பது இது தான். அதை ஈசன் புரிந்துகொள்ள… உணர்ந்துகொள்ள இத்தனை நாட்கள்.

புரியாமல் பேசுகிறாள்… பிடிவாதம் ஜாஸ்தி.. எதையுமே யோசிப்பதில்லை.. என்றெல்லாம் வருத்தம் கொண்டிருந்தவனுக்கு லட்சுமி இப்படியெல்லாம் நடந்துகொள்ள காரணம் என்னவென்று தெரிந்த பின் உடைந்து தான் போனான்.

வசதியான வாழ்வும், நகை நட்டு, சேலை, பங்களா, கார், வேலையாட்கள் இதெல்லாம் மட்டும் ஒரு பெண்ணுக்கு நிறைவை கொடுத்திடாது. அனைத்துக்கும் மேலாய் அவளை அவளுக்காகவே நேசிக்கின்ற வாழ்க்கைத் துணை இருந்தால் அவளைப் போல் பாக்கியசாலி உலகில் யாருமில்லை.



Advertisement

‘உங்களுக்காக உங்க கூட வாழணும்னு நினைச்சேன் மாமா…’ என்று லட்சுமி சொல்லியது நினைவில் வர,

தான் அப்படித்தான் நினைத்தோமா என்ற கேள்வி எழ, ‘அப்படி நினைச்சிருந்தா, அவளை நான் போக விட்டிருப்பேனா???’ என்று தோன்றியது.

‘நமக்காக என்னை நீங்க கூப்பிடனும்னு தோணவேயில்லையா மாமா…???’ என்று கண்ணீர் விழிகளில் ஒரு நாள் கேட்டாள்.

Advertisement

பெரிய இவன் போல, ‘நானா போக சொன்னேன்.. நீயாத்தான போன…’ என்று பதில் சொல்கையில் அப்போது என்னவோ பெரிய நியாயம் பேசியது போலிருந்தது. ஆனால் இப்போது அவள் மனம் எப்படித் துடித்திருக்கும் என்று தோன்றியது.

Advertisement

லட்சுமியின் காதலில்… லட்சுமியின் கண்ணீரில்… லட்சுமியின் பிடிவாதத்தில்.. லட்சுமியின் பொறுமையில்… ஈசனின் தான் என்ற அகங்காரம் அவளிடம் நொறுங்கிப்போனது..

பிறரிடம் வேண்டுமானால் நான் பெரியவன் என்ற தோரணை காட்டலாம். ஆனால் நீயே எனக்கு அனைத்தும் என்று இருப்பவளிடம் நான் இப்படிதான் என்று காட்டினால் அவள் என்ன செய்வாள்.. ஆனாலும் செய்தாள்..

அவனுக்காக அவனிடமே சண்டையிடுவாள்..

Advertisement

அவனுக்காக அவனிடமே முகம் திருப்புவாள்..

அவனுக்காக அவனிடமே தோற்றுப் போவாள்..

அவனுக்காக அவனிடமே கெஞ்சி கொஞ்சி நிற்பாள்..

அவனுக்காக அவனிடமே போராடுவாள்..

இறுதியாய் அவனுக்காக மட்டுமே அவள் நெஞ்சில் காதல் வளர்ப்பாள்.. ஆனால் அவளது சுய கௌரவம் எங்கே மதிக்கப் படவில்லையோ அந்த இடத்தில் நீ யாராக இருந்தாலும் சரி நீ செய்தது தவறுதான் என்று பொங்கியும் எழுவாள்..

அவளே லட்சுமி.. ஈசனின் ‘லஷ்மி…’

‘என்ன பொண்ணுடா இவ…’ என்று ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரி அவனை, நினைக்க வைத்தவள்.

அப்பா அம்மா நடத்தி வைத்த திருமணம்.. அதன்மூலம் அவளோடான வாழ்வு என்று எண்ணியிருந்தவனுக்கு, ‘ஆமா நான் உங்களை விரும்பித்தான் கல்யாணம் பண்ணேன் இப்போ அதுக்கென்ன…’ என்று அவள் நேசத்தைக் கூட நிமிர்வுடன் சொன்ன லட்சுமி தான் இப்போது மனதில் நின்றாள்.

அதிலும் ரேவதியின் திருமணத்திற்கு சென்றுவந்ததில் இருந்து ஈசனது மனதில் பெரும் மாற்றம்.

ஆம் நேற்று தான் ரேவதியின் திருமணம் முடிந்திருந்தது. லட்சுமிக்கு நகைகள், சேலைகள் எடுக்கவென்று அழைத்துக்கொண்டு சென்று வந்தவன் மனதில் முதல் கல் எறிந்ததும் லட்சுமியே..

“நான் உன்னிடம் எதிர்பார்ப்பது உன்னை மட்டும் தான்…” என்று சொல்லாமல் சிறு செயலில் காட்டிவிட, ஈசன் கலங்கித்தான் போனான்.

கண்கள் கலங்கி, நெஞ்சம் வேகமாய் துடிக்கும் உணர்வு. அவனது சிந்தை அவனது ஆளுமையில் இல்லாது போக, செய்வது அறியாது திகைத்துத் தான் நின்றான். ஆனால் லட்சுமியோ வெகு இயல்பாய் இருந்தாள். காரணம் அவள் ஒரு தெளிவிற்கு வந்துவிட்டாளே.

“மாமா இப்படியே தூங்க போறீங்களா.. மேல வரலையா??” என்று இடுப்பில் கை வைத்து கேட்டவளிடம் இல்லையென்று அவனறியாமல் தலையை ஆட்ட,

“சரி நான் போறேன், டயர்டா இருக்கு…” என்று திரும்பியவளை பிடித்து நிறுத்தியவன்,  “என்னை கூப்பிடல..??” என்றான் குறையாய்..

‘ஈஸ் மாமா என்ன லூசா…’ என்பது போல் லட்சுமி பார்க்க, முத்தழகு இத்தனை நேரம் இவர்களை வேடிக்கை பார்த்தவர்,

“ஈசா.. என்னாச்சு உனக்கு.. அவ அப்போயிருந்து கூப்பிட்டா…” என்று சொல்ல,

“ஓ.. சரி சரி…” என்று தலையை உருட்டியவன், “சரி நீ போ.. நான் வர்றேன்…” என்று சொல்ல,  ‘என்னாச்சு இவருக்கு…’ என்று பார்த்தபடிதான் சென்றாள்.

லட்சுமி அவனருகே நிற்கையில் மூச்சு முட்டுவது போல் இருந்தது, இப்போதோ எதுவோ குறைவது போல் இருக்கவும், கண்களை மூடி, வாயினால் சுவாசக் காற்றை வெளியேற்றி, தலையை இப்படியப்படி ஆட்டியவனுக்கு அவனே அவனை நினைத்தால் சிரிப்பாய் இருந்தது. கலவையான உணர்வுகள், கலந்து கட்டி ஈசனை அடிக்க, இது தான் காதலா என்பதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் இவையனைத்துமே பிடித்திருந்தது. முன்னொரு முறை லட்சுமி மேல் கொண்ட மோகத்திலும், திருமணமும் அது கொடுத்த உறவின் மேல் இருந்த தாபத்திலும் லட்சுமியிடம் தன்னை மூழ்கடிக்க நினைத்தவன் இன்று அவள் மனதில் மூழ்கிப்போக எண்ணம் கொண்டான்.

‘லஷ்மி…’ என்று ஈசனது இதழ்கள் முணுமுணுக்க, தலையை கோதியபடி மாடியேறி செல்ல, லட்சுமியோ இவன் வருவதற்கு முன்பே உறங்கியிருந்தாள்.

‘எனக்காக வெய்ட் பண்ண மாட்டாளோ…’ என்று சுருங்கிய மனதை ஈசனே ஆச்சர்யமாய் தான் பார்த்தான்.

தன்னை ஒருவர் நேசிப்பது வேறு.. அவர்களின் அன்பில் நாமே அவர்களை நேசிக்கத் தொடங்குவது வேறு. ஏனோ இத்தனை நாள் இல்லாத ஓர் உணர்வு ஈசனை ஆட்டிபடைக்க, லட்சுமியின் அருகே அவளை இறுக அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.

அடுத்து வந்த நாட்களில் வேலைகள் நிறைய இருக்க, துரைசாமி வேறு இடைஞ்சல் செய்துகொண்டு இருந்தான். லட்சுமிக்கு பரிட்சை நெருங்குவதால் அவளைக் கடைக்கு வரவேண்டாமென்று சொல்லியிருந்தான். ஆனாலும் அவனுக்கு இந்த வசூல் வேலைகள் இருக்க, சரியாய் அங்கேயும் நிற்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது போனாலோ, அங்கே வேலை செய்பவர்கள்,

“அண்ணா.. அந்த துரைசாமி ரொம்ப பிரச்னை பண்றாருண்ணா.. கடைக்கு வர்றவங்கள வெளிய நின்னு அவங்க கடைக்கு கூட்டிட்டு போயிடுறாரு…” என்று சொல்ல, ஈசனுக்கு பொறுமை கரைந்தது.

‘இவனுக்கு ஒரு வழி செய்யணும்…’ என்று யோசிக்க, முதலில் அவனை தட்டி வைக்கவேண்டும் என்றும் தோன்றியது.

“நான் பார்த்துக்கிறேன்…” என்று சொல்லி வெளிய வர, துரைசாமியோ, “என்ன ஈசா.. வியாபாரம் சூப்பரா நடக்குது போல…” என்று நக்கலாய் வினவ,

“உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா…??” என்று விரைத்து நின்றான் ஈசன்.

“அட என்ன தம்பி… கேபிள் நடத்தக் கூடாதுன்னு சொன்ன.. சரி கடை வச்சு பொழைக்கலாம்னு பார்த்தா அதுக்கும் முறைச்சா எப்படி..??”

“உன்னை இத்தனை நாள் சும்மா விட்டதே தப்பு.. இன்னும் நீ பேசின வீடியோ என்கிட்ட தான் இருக்கு தெரியும்ல. ஊரு முழுக்க ஒளிபரப்ப ஒருநிமிஷம் ஆகாது..”

“அட என்னப்பா… நீ.. அப்படி செய்யனும்னு நினைச்சிருந்தா எப்பவோ செஞ்சிருப்ப. இங்க பாரு.. என்கிட்ட இருக்க மொத்த பணத்தையும் போட்டு இந்த கடையை ஆரம்பிச்சிருக்கேன்.. பின்ன நான் லாபம் பார்க்க வேணாமா…” என்று துரைசாமி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே லட்சுமி ஸ்கூட்டியில் வந்திறங்கினாள்.

அவளைப் பார்த்தவன், அன்றே லாரி விட்டு ஏத்துவேன் என்றாளே என்று நினைக்க, “போ போ.. முடிஞ்சா நீயும் வியாபாரம் செய்.. அதைவிட்டு என்னை சொல்லாத…” என்று சொல்லிக்கொண்டே நகர்ந்துபோக,

ஈசனோ பல்லைக் கடித்தவன், “என்ன லஷ்மி??” என்றான் வந்தவளைப் பார்த்து.

“என்ன மாமா பிரச்சனை ??” என்று போகும் துரைசாமியைப் பார்த்துக் கேட்க,

“வழக்கம்போல தான். என்னன்னு கேட்டா மொத்த பணமும் போட்டிருக்கேன் லாபம் பாக்க வேணாமான்னு சொல்றான்..” என்றான் இன்னும் கோவம் அடங்காமல்.

“உடனே உங்களுக்கு கோவம் வந்திடுச்சா.. விடுங்க மாமா.. பார்த்துக்கலாம்..” என்றவள், “உங்கக்கிட்ட பேசத்தான் வந்தேன்..” என்றாள்.

என்று கேள்வியாய் பார்க்க, “ஒண்ணு கேள்வியா கேளுங்க.. இல்ல கேள்வி கேட்கிறது போல பாருங்க…” என்று தலையை ஆட்டி சொன்னவளிடம் மொத்தமாய் தான் அந்த நொடி கோபம் போய் வீழ்ந்து போனான் ஈசன்.

“உள்ள போய் பேசுவோம்..” என்று லட்சுமி முன்னே நடக்க,  உள்ளிருக்கும் அறைக்குச் சென்றதும் “ஓனர் மேடம் உட்காருங்க…” என்று எப்போதும் அவன் அமரும் இருக்கையை காட்ட,

‘அட…’ என்று தான் இருந்தது அவளுக்கு.

ஈசனிடம் ஒரு மாற்றம்  தெரிவது லட்சுமிக்கு வெகு நாட்களாகவே தெரிந்துதான் இருந்தது. ஆனால் இந்த கொஞ்ச நாளில் அது இன்னும் ஜாஸ்தியாகி இருக்கிறது.

“உக்காரு லஷ்மி…” என்று அவளை அமர்த்தியவன், அவள் எதிரே வந்து தானும் அமர்ந்துகொண்டான்.  அவளின் இதழில் சிறு புன்னகை ஒட்டியிருக்க, ஈசனை கொஞ்சம் காதலாய் தான் வருடியது அவள் பார்வை.

“ஓய்.. என்ன சைட் அடிக்கத்தான் வந்தியா.. படின்னு சொல்லிட்டு வந்தா  கிளம்பி வந்திருக்க…” என்று வேண்டுமென்றே ஈசன் கண்களை திரட்டி மிரட்ட, அவனுக்குமே உள்ளே உற்சாகமாய் இருந்தது.

“அடேங்கப்பா.. சைட்.. நானு.. உங்கள… ஏன் அடிக்க கூடாதா..” என்றவள், “நிஜமாவே பேசணும்னு மாமா..” என்றாள் கொஞ்சம் சீரியஸாய்.

அவள் முகத்தைப் பார்த்தவன் எதுவும் பிரச்சனையா என்று யோசித்தபடி  “ம்ம் சொல்லு லஷ்மி..” என,

“ரேவதி கல்யாணம் வருதுல்ல.. அம்மா அவளுக்கு நகை எடுத்துட்டாங்க.. அத்தை நம்ம பணமா கொடுத்திடலாம்னு சொல்லிட்டாங்க.. ஆனா நம்ம எதாவது தனியா செய்யணும்ல… வீட்ல செய்றது வேற, நம்ம செய்றது வேறதானே…” என்று சொல்ல அவனுக்கும் புரிந்தது.

“ம்ம் ஆமா… நான் இதை யோசிக்கவேயில்ல லஷ்மி…”

“ஆமா யோசிச்சிட்டாலும்…” என்று உதட்டை சுழிக்க, “வர வர நீ என்னை ரொம்ப கிண்டல் பண்ற…” என்றான் சிரித்தபடி..

“ஹா ஹா சரி இப்போ சொல்லுங்க என்ன பண்றதுன்னு.. பாலா தனியா செய்ய போறேன்னு சொல்லிட்டான்.. அப்போ நம்ம என்ன செய்றது…”

“யோசிப்போம் லஷ்மி… இப்போதானே சொல்லிருக்க, கொஞ்சம் டைம் குடேன்…”

“ஹா.. பார்ரா.. எதுன்னாலும்  டக்கு டக்குனு முடிவு எடுக்கிற திருவாளர் ஈசன்.. கொஞ்சம் டைம் கேட்கிறார்…” என்று அதற்கும் லட்சுமி அவனை கிண்டல் அடிக்க,

“அடி லஷ்மி.. கொஞ்சம் தான் டைம் கேட்டேன்… கொஞ்சுறதுக்கு கேட்கலை…” என்று பதிலுக்கு அவனும் அவளை சீண்ட,

“கொஞ்சம் கேட்டாலும் சரி.. கொஞ்சுறதுக்கு கேட்டாலும் சரி.. நைட் வீட்டுக்கு வர்றபோ பதில சொல்லுங்க.. டைம் ரொம்ப இல்ல.. இன்னும் நாலு நாள் தான் இருக்கு…” என்று அசால்ட்டாய் சொல்லிச் சென்றவளை அசந்து போய் தான் பார்த்தான்..

‘ஹ்ம்ம் இவ இருக்காளே…’ என்று மனம் சொல்லிக்கொள்ள, ‘இங்க இருக்கா…’ என்று தன் நெஞ்சை தொட்டுக்கொண்டான்..

‘பிடிவாதம் பிடிச்சு பிடிச்சே பிடிக்க வச்சிட்டா…’ என்று தோன்றியது அவனுக்கு..

அவள் சொன்னது போலவே இரவு சென்றதும், “லஷ்மி.. பேசாம ஒரு ஹனிமூன் பேக்கேஜ் போல அவங்களுக்கு கிப்ட் பண்ணிடலாமா??” என்று கேட்க,

‘கட்டின பொண்டாட்டிய ஹனிமூன் கூட்டிட்டு போகக் காணோம்.. இதுல கிப்ட் வேற…’ என்று மனதில் தோன்ற, அதை அப்படியே அடக்கியவள்,

“ம்ம்ம் சூப்பர் மாமா.. எங்க?? என்ன ப்ளான் பண்ணலாம்???” என, நொடி பொழுது என்றாலும் அவள் முகத்தில் தோன்றி மறைந்த மாற்றங்களை ஈசன் பார்த்துகொண்டு தான் இருந்தான்.

மீண்டும் மனதில் ஒரு வலி…

அவளது சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை கூட தான் பூர்த்தி செய்யவில்லை என்று.. வாழ்வில் எத்தனையோ சிறு சிறு சந்தோசங்கள் இருக்கிறதே… அதெல்லாம் தோன்ற ஈசனது மனம் வேறு வேறு யோசனைகளுக்குச் சென்றது..

“மாமா….” என்று இரண்டு முறை அழைத்தவள், “ஈஸ் மாமா…” என்று அவன் காதருகே கத்த,

“ஷ்… என்ன டி…” என்றான் காதுகளை தேய்த்து.

“என்ன அப்படியே நின்னுட்டீங்க..??” என்றவளிடம் என்ன பதில் சொல்லவென்று தெரியாமல்,

“அது.. நீதான எங்க ப்ளான் பண்றதுன்னு கேட்ட.. அதான் யோசிச்சேன்.. ரேவதி கல்யாணம் முடிஞ்சு பத்து நாள்ல டெல்லி போயிடுவா.. அதுக்குள்ள அவங்க போய்ட்டு வர்ற மாதிரி ஏதாவது செய்யணும்.. ” என்றவன் “சரி நெட்ல பாப்போம்” என்றவன் அவளையும் அமர்த்திக்கொண்டு பார்க்க,  மூன்று நாட்கள் குன்னூர் ரிசார்ட்டில் அவர்களுக்கு தேனிலவு சூட் தயாரானது.

அந்தா இந்தா என்று ரேவதியின் திருமண நாளும் வந்துவிட, முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியே தடபுடலாய் நடந்தது.

ஈசனுக்கு வந்திருந்தவர்களிடம் பேசவே நேரம் சரியாய் போனது.. வந்திருப்பவர்களில் முக்கால்வாசி உறவினர்கள்.. வந்து பேசுபவர்களிடம் பேசாமலும் இருக்க முடியாது.  ஆக அவனுக்கு லட்சுமியை கவனிக்கவெல்லாம் நேரமில்லை. அவளோ மேடையில் ரேவதி அருகே நின்றிருந்தாலும், அடிக்கடி ஈசனைக் கவனித்துகொண்டு தான் இருந்தாள்.

அவன் தேர்வு செய்த சேலைக் கட்டி, நகை போட்டு, கொஞ்சம் ஒப்பனையில் அழகாய் வந்திருந்தாள்.. கிளம்பும் போதே ஈசன் சொல்ல நினைத்தான் தான் ‘இந்த கலர் உனக்கு நல்லா இருக்கு…’ என்று, ஆனால் அப்போது பார்த்து அலைப்பேசி அழைத்துவிட, அதனோடு சென்றுவிட்டான்.

என்னதான் அவனிடம் இனிமேல் எதையும் எதிர்பார்க்க கூடாது என்று லட்சுமி நினைத்திருந்தாலும், மீண்டும் மீண்டும் ஈசனது பார்வையை எதிர்பார்க்கும் மனதை அவளால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஈசனுக்கும் லட்சுமிக்கும், அன்று தங்குவதற்கு மண்டபத்திலேயே அறை ஏற்பாடு செய்திருக்க,  அவனோ “அய்யா சும்மா அலைய வேணாம்.. அதுனால நீங்க இருந்துக்கோங்க.. நானும் லஷ்மியும் வீட்டுக்கு போயிட்டு காலைல வந்திடுறோம்…” என, அவன் சொல்வதும் சரியாய் இருக்க, மரகதம் சரியென்றுவிட்டார்.

‘அட நானும் ஈஸ் மாமாவும் வீட்ல.. தனியா…’ என்று துள்ளிய மனதை, “லட்சுமி… சும்மா இரு….” என்று அடக்கிவிட்டாள்..

வீட்டிற்கு வந்தபின்னோ, ஈசன் எதுவோ வேலையாய் இருக்க, லட்சுமி குளித்துவிட்டு வர, “இப்போ எதுக்கு லஷ்மி குளிச்ச..??” என்றவனை பார்த்து,

“கசகசன்னு இருந்தது மாமா…” என்றபடி அவள் முடியை அன்று போல் கொண்டை போட முயல, அதுவோ அடங்க மறுத்தது.

“ம்ம்ச்…” என்றபடி மீண்டும் தலையை சீவி முயற்சித்தவளை காண ஈசனுக்கு சிரிப்பாய் தான் வந்தது..

“என்ன சிரிப்பு???”

“ஒண்ணுமில்லயே…”

“நிஜமா???” என்று அவனைப் பார்த்து திரும்ப, அவள் கேசமும் மொத்தமாய் முன்னே வந்து விழுந்தது..

“ம்ம்…” என்றவன் என்ன நினைத்தானோ, வேலையை ஒதுக்கிவிட்டு அவளிடம் செல்ல,  லட்சுமியோ ‘என்ன கிட்ட வர்றாங்க…’ என்பது போல் பார்த்திருக்க,

“இப்படி வந்து உக்காரு…” என்று மெத்தை மீது அமர வைத்தவன்,  “அன்னிக்கு நீ இப்படி போடல…” என்று அவள் கேசத்தை மொத்தமாய் சுருட்ட,

“மாமா என்ன பண்றீங்க???” என்று குரலை உயர்த்தினாள்..

“சைலன்ட்….” என்று அவள் இதழில் விரல் வைத்தவன், “அன்னிக்கு நீ போட்டியே ஒரு முனிவர் கொண்டை அது போட ட்ரை பண்றேன்…” என,

‘நான் எப்போ போட்டேன்…’ என்று யோசித்தவளுக்கு, எப்போது என்று நினைவு வர, அவளுக்கு லேசாய் சிரிப்பு வந்தது.

“என்னடி நீயா சிரிக்கிற…” என்றபடி ஈசன் அவளை இன்னும் நெருங்கி நிற்க,

“ஒண்ணுமில்லையே…” என்று அவளும் அவனைப்போலவே தோள்களை தூக்கிச் சொல்ல,

“ஹ்ம்ம் சொல்ல மறந்திட்டேன்.. இன்னிக்கு சேலை உனக்கு சூப்பரா இருந்துச்சு…” என்றான் ரசனையாய்.

‘ஆகா… இது நிஜமாவே ஈஸ் மாமா தான…’ என்று கண்களை ஆச்சர்யத்தில் விரித்துப் பார்த்தாள் லட்சுமி.

“ஓய் என்ன அப்படி பாக்குற…??”

“இல்ல ஒண்ணுமில்ல…” என்று தலையை இடமும் வளமுமாய் ஆட்டியவள் என்ன நினைத்தாளோ,  நின்றிருந்தவனை அவன் வயிற்றோடு அணைத்து, அவன் வயிற்றிலேயே முகம் புதைத்துக்கொண்டாள்.

அவள் செய்கையில் லேசாய் திடுக்கிட்டவன், “லஷ்மி என்னடி…” என,

“கொஞ்ச நேரம் மாமா ப்ளீஸ்…” என்றவள் அடுத்து ஒன்றுமே சொல்லவில்லை. அப்படியேத் தான் இருந்தாள்..

ஈசனுக்கு புரியாதா என்ன?? இப்போது லட்சுமி என்ன நினைத்திருப்பாள் என்று.. கண்களை இறுக மூடி தலையை கோதியவன், லேசாய் குணிந்து அவனும் அவளை அணைத்துக்கொண்டான்..

சின்ன சின்ன ரசனைகள்.. சின்ன சின்ன பாராட்டுக்கள்.. சின்ன சின்ன மெச்சுதல்கள் வாழ்கையை எத்தனை அழகாக்கி விடுகிறது என்பது ஈசனுக்கு இப்போது நன்றாகவே உணர முடிந்தது.. அப்படியொரு உணர்வைக் கொடுத்தவள் லட்சுமி.. சொல்லப்போனால் வாழ்வென்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்று அவனுக்கு சொல்லிக்கொடுத்தவளே அவள் தான்..

நேரம் அப்படியே செல்ல, “ஹ்ம்ம் நாளைக்கு சீக்கிரம் எழணும் மாமா… தூங்குவோம்…” என்றவள் தள்ளிப் படுக்க, அவனும் அமைதியாய் படுத்துக்கொண்டான்.

‘லஷ்மி லஷ்மி…’ என்று மனம் வேகமாய் அடித்துக் கொண்டது.. அருகே தான் அவளும் இருக்கிறாள். ஆனால் மனம் அமைதியில்லாமல் தவித்தது.. அவளைப் போல் தான் அவளை முக்கியமாய் நினைக்கவில்லையோ என்று தோன்ற,

‘அட லூசு ஈசா… உனக்கு வாழ்க்கையே அவதான்டா…’ என்று அவன் மனசாட்சி இடித்து சொல்ல,

இந்த வார்த்தைகள் எத்தனை உண்மை என்று ஊர்ஜிதமானது மறுநாள் ரேவதியின் திருமணத்தில் கதிரவனையும் அவன் மனைவி வசுமதியையும் காணும் பொழுது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!