Skip to content
Post Views: 643
மரகத்திற்கு மாத்திரைகளைக் கொடுத்து உறங்க வைத்துவிட்டு, மற்றொரு அறைக்குள் நுழைந்தாள் மதுரா.
காற்றுகூட நுழையாதபடி சாளரங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு, எதிரொலிகளை உள்வாங்க அதன் மேல் திரைச்சீலை அமைக்கப்பட்டிருந்தது. கதைகளை வாசிக்கவே கண்டன்சர் மைக்கை மடிக்கணினியில் இணைத்து, பாப் பில்டர் வைத்து, கதைகளைப் பதிவு செய்யவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அறை அது.
அவள் வாசிக்க வேண்டிய கதைகள் நிறைய இருந்தன. தனக்குக் கிடைத்த நேரத்தில் கதைகளை வாசித்து, சொன்ன தேதியில் ஒலி வடிவில் கொடுத்துவிடுவாள். குறை சொல்லாதபடி ஒவ்வொரு கதையையும் அருமையான தமிழ் உச்சரிப்போடும் ஏற்ற இறக்கங்களோடும் வாசித்து அனுப்புவாள்!
Advertisement
அவளது குரலிலேயே ஆண், பெண் என்ற வித்தியாசத்தைக் காட்டி வாசிப்பாள். அவளது குரலை வைத்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தனித்துக் காட்டுவாள். இதுவரை அப்படித்தான் வாசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், பிரபல எழுத்தாளர் ஒருவர், அவரது அந்தக் கதைக்கு மட்டும் பிரத்யேகமாக நாயகனின் குரல் ஓர் ஆணின் குரலாக இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதுவும் அந்தக் கதையில் நாயகன் ஒரு திக்குவாய். நிஜ வாழ்க்கையில் திக்கிப் பேசுவது போல இயல்பாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவளுடன் பணிபுரியும் டப்பிங் கலைஞர்களிடம் கேட்டுப் பார்த்தாள்; யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
Advertisement
Advertisement
குறிப்பிட்ட நேரத்தில் அவருக்குக் கதையைக் கொடுக்க வேண்டும்; நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முகநூலில் கூட ‘ஆண் குரல் கலைஞர் தேவை’ என்பது போலப் பதிவுகளைப் போட்டுப் பார்த்தாள். பதில் ஏதும் வரவில்லை. சிலரின் குரலில் உச்சரிப்பு சரியாக இருக்கவில்லை; திருப்தியாகவும் இல்லை. ‘என்ன செய்வது?’ என்று தவித்த வேளையில்தான், அவளது வாட்ஸ்அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தியும் குரல் குறிப்பும் வந்திருந்தது.
செய்தியை வாசித்துவிட்டு குரலையும் கேட்டாள். அப்பா! அபாரமாக இருந்தது.
அனுப்பியது வேறு யாரும் இல்லை, அர்ச்சனாதான். தன் நண்பனின் குரலைத்தான் மதுராவிற்கு அனுப்பியிருந்தாள்.
Advertisement
அர்ச்சனாவின் தாய் ஒரு புத்தக விரும்பி. நிறைய புத்தகங்களை வாங்கிப் படிப்பார். கண்களில் ஏற்பட்ட பிரச்சினையால் கதைகளை ஒலி வடிவில் கேட்கத் தொடங்கியிருந்தார். மதுராவின் வாசிப்பு அவருக்கு மிகவும் பிடித்துப்போக, அவளைப் பாராட்ட வேண்டும் என்று அர்ச்சனாவிடம் கேட்டுக்கொண்டார். முகநூலில் மதுராவின் ஐடியைக் கண்டுபிடித்து, அர்ச்சனாவின் தாய் வைதேகி சொல்லச் சொன்ன குறுஞ்செய்தியை அர்ச்சனா அனுப்பி வைத்தாள். தொடர்ந்து பதிலளிக்க, அப்படி ஏற்பட்ட பழக்கம் புலனம் வரையிலும் நீடித்தது. சில நேரம் வைதேகியே நேரடியாக மதுராவிற்கு அழைத்து பேசிடுவார். அப்படித்தான் அவர்களுக்குள் நட்பு உருவானது.
முகநூலில் போட்ட பதிவைக் கண்டதும் அர்ச்சனாவிற்குத் தன் நண்பன் மதியூரன் நினைவிற்கு வர, அவன் சமீபத்தில் பேசி அனுப்பியிருந்த குரல் குறிப்பை மதுராவிற்கு அனுப்பி வைத்தாள்.
அவனது வாசிப்பும் தமிழ் உச்சரிப்பும் மதுராவிற்குப் பிடித்துப்போக, அர்ச்சனாவிடம் மதியூரனின் அலைபேசி எண்ணைக் கேட்டாள். அவளும் அனுப்பியிருந்தாள்.
மதுரா, மதியூரனுக்கு அழைத்த நேரம் அவனோ தற்கொலைக்கு முயன்றான். மின்விசிறியில் சேலையைச் சுற்றிப் போட்டு, கழுத்தை உள்ளே விட்ட நொடி அவனது அலைபேசி அலறியது. முதலில் அசட்டை செய்தவன், பின் சலிப்புடன் அதைச் செவியில் வைத்தான்.
“ஹலோ!” – ஒரு பெண்ணின் இனிமையான குரலைக் கேட்டு, ‘நம்ம போன்ல ஒரு பெண்ணோட குரலா?’ எனச் சந்தேகமாக மீண்டும் திரையைப் பார்த்தான். ‘அன்னோன் நம்பர்’ என்று இருந்தது. யாரென்று தெரியவில்லை; மேற்கொண்டு பேசினான்.
“ஹ… ஹ… லோ… யா… யா… யாருங்க நீ… நீங்க? எ… எ… என்ன வே… வே… வேணும் உ… உ… உங்களுக்கு?”
அர்ச்சனாவிடம் அவனைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகுதானே அவனுக்கு அழைத்தாள்! அவன் திக்குவாய் என்று அர்ச்சனா சொல்லும்போதே அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டாள். ஒரு திக்குவாயால் எப்படி அருமையாக, பிசிறில்லாமல் கதை வாசிக்க முடியும் என்ற யோசனை ஒருபக்கம் இருந்தது அவளுக்கு.
ஆனால், இது சாத்தியம்தான் என்பது அவளுக்கே தெரியவில்லை.
இதைத்தான் பேச வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத்த பின், இடையில் எதையும் யோசிக்காமல் தொடர்ச்சியாக அவர்களால் திக்காமல், திணறாமல் வாசிக்க முடியும். ஆனால், அதுவே எதிரே ஒருவரிடம் பேசும்போதும், அவர்கள் அடுத்தடுத்துக் கேள்விகளைக் கேட்கும்போதும், சட்டெனப் பதில் சொல்ல முடியாமல் திணறிப் பதற்றம் கூடி, இயல்பிலிருந்து வெளியே வரும்போது அவர்கள் திக்கிவிடுகிறார்கள். திக்கிப் பேசுவது குறை இல்லை. முயற்சி செய்தால் இதைச் சரி செய்துவிடலாம். இதைக் குறையாக வைத்து முடக்கவும் கூடாது, முடங்கிவிடவும் கூடாது.
“நான் மதுரா! வாய்ஸ் ஆர்டிஸ்ட்! சீரியலில் டப்பிங் செய்வேன். அதுபோக, யூடியூப்பில் கதைகள் வாசிப்பேன். ஆக்சுவலா எனக்கு ஒரு மேல் வாய்ஸ் ஆர்டிஸ்ட் வேணும். ஒரு பிரபல எழுத்தாளரோட கதைக்குக் குரல் கொடுக்க உங்க குரலை உங்க பிரெண்ட் அர்ச்சனா அனுப்பியிருந்தாங்க! ரொம்ப அருமையா, அபாரமா இருந்தது. உங்களால் அந்தக் கதைக்குக் குரல் கொடுக்க முடியுமா? அதற்கான ஊதியம் உங்களுக்குத் தந்திடுவேன். என்ன சொல்றீங்க?” எனக் கேட்டாள்.
காதல் தோல்வியிலும் விரக்தியிலும் இருப்பவனுக்கு வாய்ப்பு அலைபேசி வழியாகத் தேடி வர, அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், அர்ச்சனாவின் பெயரைக் கேட்டதும் இன்னும் கூடுதலாக வலியும் தன்னை நிராகரித்த கோபமும் ஒன்று சேர, அதுவும் அர்ச்சனாவால் கிடைத்த வாய்ப்பு என்பதால் “வேண்டாம்” என்று அசட்டை செய்தான்.
“இ… இ… இல்லைங்க! எ… எ… எனக்கு இ… இதுல வி… வி… விருப்பம் இ… இ… இல்லை. வ… வ… வச்சிடுங்க” என்று துண்டித்துவிட்டான்.
மீண்டும் மீண்டும் அழைத்தாள். அழைப்பை ஏற்றவன், “ஒ… ஒ… ஒரு தடவை சொ… சொ… சொன்னா உ… உங்களுக்குப் புரியாதா? ஏ… ஏ… ஏங்க தொ… தொ… தொந்தரவு செ… செ… செய்றீங்க?” எனக் கடுப்புடன் கடிந்தான்.
“நான் சொல்றதைக் கேளுங்க! நான் குறிப்பிட்ட தேதிக்குள்ள கதையைக் கொடுக்கணும். அந்த ரைட்டர் வேற ‘என்ன ஆச்சு’ன்னு கேட்டுக்கிட்டே இருக்கார். என்ன பதில் சொல்றது நான்? உங்க வாய்ஸ் அருமையா இருந்தது. ஒரு தடவை வந்து வாசிங்க. என்கிட்ட டைம் இல்லை, ப்ளீஸ்” எனச் கெஞ்சினாள்.
“வே… வே… வேற ஆ… ஆ… ஆளே இல்லையா உங்களுக்கு? நா… நா… நான் தான் கி… கி… கிடைச்சேனா? வேற ஆளைப் பாருங்க, எ… என்னை வி… விடுங்க.”
“சார், சார்… வச்சிடாதீங்க! எனக்கு என்னவோ கதையில வர்ற நாயகனுக்கு உங்க குரல் சரியா இருக்கும்னு தோணுது. அதுபோக, கதையில் வர்ற நாயகனும் திக்கித் திக்கித் தான் பேசுவார்!” என இழுக்க, அவள் அவ்வாறு சொன்னது அவனுக்குச் சுள்ளெனக் கோபம் வரவழைத்தது.
“அ… அ… அதனால நீ… நீ… நீயும் தி… தி… திக்குவாய் தானே… பே… பே… பேச ஈ… ஈ… ஈஸியா இ… இ… இருக்கும்னு சொ… சொ… சொல்ல வ… வ… வர்றீங்க, அதானே!” எனக் கிட்டத்தட்ட கத்தியிருந்தான்.
காதிலிருந்து அலைபேசியைத் தூரமாக வைத்தவள், மீண்டும் காதில் வைத்து, “சார்! ஏன் தப்பா எடுத்துக்கிறீங்க? உங்க குறையை நான் மேம்படுத்திச் சொல்லல, உங்களால மிக எளிமையா பேசிட முடியும்னு சொல்ல வந்தேன் சார். உங்க வாய்ஸ் ரொம்ப அபாரமா இருக்கு, அதை உபயோகிக்க நினைக்கிறது தப்பு இல்லையே. உங்களைப் பற்றி அர்ச்சனா சொன்னாங்க சார். உங்களுக்கு டப்பிங் பேசணும்னு ஆசையாமே! கண்டிப்பா இந்தக் கதை மூலமாக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் சார். எனக்கு அப்படித்தான் வாய்ப்பு கிடைச்சது, கொஞ்சம் யோசிங்க சார்…” என்றாள்.
“எ… எ… எனக்கு எ… எ… எந்த ஆ… ஆ… ஆசையும் எ… எ… எந்த வா… வா… வாய்ப்பும் த்தே… தே… தேவையில்லை. நீ… நீ… நீங்க வே… வே… வேற ஆ… ஆ… ஆள் பாருங்க! எ… என்னை ம… ம… மறுபடியும் தொ… தொ… தொந்தரவு செய்யாதீங்க” என்று அழைப்பைத் துண்டித்தான்.
இவளும் மீண்டும் அழைக்கவில்லை. “எதற்காக இவனிடம் கெஞ்ச வேண்டும்? போடா… வேற ஆளா இல்லை!” என்று எண்ணிக்கொண்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.
மின்விசிறியில் தொங்கவிட்டிருந்த சேலையும் அவிழ்ந்து அவன் மீது விழ, அதைத் தூக்கி எறிந்துவிட்டு ஓரமாக அமர்ந்துவிட்டான்.
இரவு உணவைச் செய்துவிட்டு, அவனது தாய் கதவைத் தட்டிச் சாப்பிட அழைத்தார். இரண்டு முறை தட்டினார். வேண்டா வெறுப்பாகத்தான் சாப்பிட வந்தான்.
“வேலை வெட்டி இல்லை! நேரத்துக்கு ஆக்கி வைக்கிறதைத் திங்க உனக்கு என்ன கொள்ளை வந்ததுன்னு கேக்குறேன்? துரைக்கு வெற்றிலை பாக்கு வச்சு அழைக்கணுமா? வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கத் துப்பில்லை. வீட்ல மூணு வேளைக்கு ஆக்கி வைக்கிறதைத் திங்கக்கூட முடியலையாக்கும் உனக்கு! ஏதோ உங்க அப்பனும் தாத்தனும் சேர்த்து வச்ச சொத்தும் வீடும் இருக்கப்போய் கொஞ்சம் கௌரவமா இருக்கோம். இதெல்லாம் இல்லைன்னா ரோட்ல பிச்சைதான் எடுக்கணும். ஒத்த சொந்தமும் நம்மளை மதிக்காது.”
“இவ்வளவு சொத்து இருந்தும் என்ன பிரயோஜனம்? மாப்பிள்ளை என்ன பண்றார்னு தானே பொண்ணு வீட்ல கேக்குறாங்க ; வேலை வெட்டி இல்லாம வீட்ல இருக்கான்னு சொல்ல முடியுமா? வேலை வெட்டி இல்லைன்னா எவன் பொண்ணு கொடுப்பான்? உன் மாமன் அந்தக் கேனையனைத் தவிர!
என் அண்ணன் ‘மாப்பிள்ளையை நான் மகன் மாதிரி பார்த்துக்கிறேன், எல்லாச் சொத்துக்கும் வாரிசு ஆக்குறேன், என் பொண்ணைக் கட்டிக்கச் சொல்லு’ன்னு கெஞ்சுறான். எந்த மடையனாவது இப்படி கேட்பானா? வேலைக்குப் போகலைன்னு தெரிஞ்சும் ‘என் மாமனைத்தான் கட்டிப்பேன்’னு நிப்பாளா ஒருத்தி? இருக்காளே! இப்படி என் அண்ணன் பொண்ணும் என் அண்ணனும் கெஞ்சுறது துரைக்கு ஒத்துக்க வலிக்குதோ!
வேலைக்குப் போகலைன்ற கவலை இருக்கா? எப்படித்தான் திங்கிற சோறு செரிக்குதோ!” எனத் தொலைக்காட்சி முன்னே அமர்ந்தபடி புலம்பினார்.
உணவைப் பிசைந்தவனுக்கு ஒற்றை வாய் அள்ளிச் சாப்பிட முடியவில்லை. உணவும் கசந்து போயிருந்தது. உணவு உள்ளே சென்று முள்ளாய்க் குத்தியது.
இவ்வளவு பேச்சைக் கேட்டு அந்த மானங்கெட்டச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டுமா என்று எண்ணிக்கொண்டு, அப்படியே போய்க் கொட்டிவிட்டு கை கழுவிவிட்டு வந்தான்.
அவன் சாப்பிடவில்லை என்ற கவலை யாருக்கும் இல்லை. தாயும் “வேளா வேளைக்கு இவனுக்குச் செஞ்சு வைக்கிறேன்ல அந்த கொழுப்பு! திங்காட்டி போடா!” என்று முனங்கிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் கவனத்தை வைத்தார்.
அறைக்குள் வந்தவனுக்கு இந்த வீட்டில் இருப்பதே நரகமாகத் தெரிந்தது. தாயின் ஒவ்வொரு சொல்லும் கூர்மையான ஈட்டியைப் போலக் குத்திக்கொண்டே இருந்தது. அவன் வேலைக்குச் செல்லாமல் இல்லை; அவனை யாரும் வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. “நீ பேசுறதுக்குள்ள கஸ்டமர் பொருள் வாங்காமலே போயிடுவாங்க!” என்று சூப்பர் மார்க்கெட் மேனேஜர் சொல்ல, அவ்விடம் விட்டு வந்தான்.
சர்வர் வேலைக்குக் கேட்டுச் சென்றான். “நீ என்னென்ன சாப்பாடு இருக்குன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவங்க வேற கடையைப் பார்த்துச் சாப்பிடப் போயிடுவாங்க! வேணும்னா எச்சில் எடுக்கிற வேலை இருக்கு, பார்க்கிறியா?” என்றதும் அங்கிருந்து அப்படியே நடந்து வந்தான்.
விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்த முதல் பட்டதாரி அவன். அவனுக்கு இப்படி ஒரு நிலமை. அவன் திக்கும்போதே “வேலை இல்லை” என்றிடுவார்கள்.
இல்லையென்றால், மிக அடிமட்ட வேலையைச் சொல்லி அவனே அங்கிருந்து சென்றுவிடுவது போலச் செய்திடுவார்கள். இவ்வாறு அவன் வேலை கேட்டு ஏறி இறங்கிய இடங்கள் ஏராளம்.
அலைபேசியை எடுத்து மதுராவின் எண்ணிற்கு அழைத்தான்.
அவனது அழைப்பை ஏற்றதுமே, “நா… நா… அ… அ… அந்தக் க… க… கதையை வா… வா… வாசிக்கிறேன்” என்றான்.
“நாம நாளைக்கு பேசலாம். நீங்க வரவேண்டிய லோகேஷனை அனுப்புறேன், வந்துடுங்க” என்று அழைப்பைத் துண்டித்தவள், அவன் வரவேண்டிய இடத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தாள். கண்களை மூடி அப்படியே சாய்ந்து கொண்டான் மதியூரன். இமைகளிலிருந்து கண்ணீர் துளிகள் பிரிந்து கன்னத்தில் வழிந்தன.
error: Content is protected !!