Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 19

சித்தார்த் தினமும் காலை நேத்ராவை கல்லூரியில் விட்டு விட்டு, மருத்துவமனைக்கு செல்ல தொடங்கினான். மாலையில் அவளை அழைத்து வர வேறொரு டிரைவரை ஏற்பாடு செய்திருந்தான்.

 

மருத்துவகல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்ததே பெரிய விஷயம், இதில் தினமும் காரில் சென்று வருவது சற்று அதிகப்படியாகவே தோன்றியது அவளுக்கு. கணவனிடம் எத்தனையோ முறை, “நான் பஸ்ஸில் போயிட்டு வர்றேனே” என்றாள் தயக்கத்துடன்.

 



Advertisement

சித்தார்த் பதில் ஏதும் பேசாமல் அவளை அழுத்தமாக பார்க்கவும், அமைதியாகி போனாள். இப்படியே ஒரு வாரம் கழிந்தது. சித்தார்த் வழக்கம்போல இரவு உணவை முடித்ததும் படுக்கையை நோக்கி செல்லும் போது நேத்ரா தன் இடத்திற்கு செல்லாமல் தயங்கி நின்றாள்.

 

“என்ன?” என்றான் புருவம் உயர்த்தி

Advertisement

 

Advertisement

“இன்னைக்கு நடத்தின சப்ஜெக்ட்ல கொஞ்சம் டவுட் இருக்கு. உங்களுக்கு டயர்டா இல்லைனா கொஞ்சம் சொல்லித் தரீங்களா?” என்றாள்.

 

உண்மையில் அன்று சித்தார்த்துக்கு அதிகமான வேலையால் சோர்வாக தான் இருந்தான். முதல்முறையாக பாடத்தில் சந்தேகம் கேட்கிறாளே என்று, “சரி உன் புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா, சொல்லி தரேன்” என்றான்.

Advertisement

 

உடனே புத்தகங்களை எடுத்து வந்து அவன் கட்டில் முழுவதும் பரப்பி வைத்தாள். சித்தார்த்தும் சுவாரசியமாக தனக்கு பிடித்த மருத்துவ பாடங்களை பற்றி விளக்கி கூறினான். நேத்ராவிற்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கல்லூரியில் பாடம் நடத்திய பேராசிரியர்களை விட சித்தார்த் விளக்கியது நன்கு புரிந்தது. கன்னத்தில் கைவைத்தபடி அவன் பேசுவதையே ஆர்வமாக பார்த்திருந்தாள்.

 

முதன் முறையாக தன் கணவனுடன் மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து, அவன் பேச பேச கேட்டுக் கொண்டிருந்தாள். சித்தார்த்தின் அருகாமையும், பிரத்தேயக வாசனையும் அவளின் கவனத்தை திசை திருப்பியது. ஒரு கட்டத்திற்கு மேல் நயனியின் நயனங்கள் தன்னவனின் மேல் ஆராய்ச்சியாக படிந்தது.

 

அலையலையான கேசம் நெற்றியில் விழுந்து கொண்டிருக்க, லாவகமாக ஒற்றைக் கையால் அதை புறந்தள்ளிக் கொண்டிருந்தான், அகன்ற நெற்றியில் அடர்த்தியாய் புருவம், கூரான நாசி, அவனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதற்கு சாட்சியாக அவனின் அழுத்தமான உதடுகள் சிவந்திருந்தன. கருகருவென்று அடர்த்தியான மீசை, அவன் முகத்திற்கு அழகாக இருந்தது. 

 

தாடியை டிரிம் செய்யாமல் விட்டிருக்கிறான். முன்பை விட கொஞ்சம் அதிகம் வளர்ந்திருந்தது. தூங்க போவதால் இலகுவான மேல் சட்டையில் பட்டன் போடாமல் விட்டிருந்தான். சட்டையின் வழியே தெரிந்த அவனின் வெற்றுடம்பில் சதைக் கோளங்கள் உருண்டு திரண்டு இருந்தன. வயிறு ஒட்டியிருந்தது.

 

சித்தார்த் புத்தகத்தை பார்த்துக் கொண்டே விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தவன், “புரியுதா?” என்றான். அவளிடம் பதில் இல்லாமல் போகவும் நிமிர்ந்து அவளை பார்த்தான். கட்டிலின் மேல் அவன் எதிரே குத்துகாலிட்டு, கன்னத்தில் கைவைத்தபடி சற்று குனிந்த வாக்கில் அவள் அமர்ந்திருந்த விதத்தை பார்த்து மூச்சடைத்தது அவனுக்கு. மீண்டும் சட்டென புத்தகத்தை நாேக்கி குனிந்தவன், “நயனி” என்றான். அவளிடம் பதில் இல்லாமல் போகவும் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். நயனியின் நயனங்கள் அவன் வெற்றுடம்பில் பதிந்திருந்தன.

 

“நயனி” என்றான் சத்தமாக

 

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், “ம்” என்றாள்.

 

“இப்போ கல்லூரி பாடம் எடுக்கவா? இல்லை காதல் பாடம் எடுக்கவா?” என்றான் ஆழ்ந்த குரலில், அவள் நயனங்களை ஊடுருவும் பார்வை பார்த்தபடி.

 

திக்கென்றது அவளுக்கு, உடனே தலையை கவிழ்ந்துக் கொண்டு. “இல்லை சாரி, தாடி ரொம்ப வளர்ந்திருக்கேன்னு பார்த்தேன், வேறொண்ணும் இல்லை” என்றாள் திக்கி திணறியபடி

 

“அப்படியா, தாடி இங்கேயா இருக்கு?” என்று தன்னையே குனிந்து பார்த்தான்.

 

நயனிக்கு தன் கையாலேயே தலையில் குட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. தலை குனிந்தவள் நிமிராமல், “கொஞ்சம் சர்ட் பட்டனை போட்டுக்கிறீங்களா ப்ளீஸ்” என்றாள் மெல்லிய குரலில்.

 

“அப்போ நீயும் உன் சுடிதார் மேல துப்பட்டா போட்டுட்டு வா” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

திடுக்கிட்டு போய் தன்னை குனிந்து பார்த்தாள். வீட்டில் இருப்பதால் துப்பட்டா அணிந்திருக்கவில்லை. அவன் எதிரே சற்றே குனிந்த படி அமர்ந்திருந்ததால்… அய்யோ அதனால் தான் அவன் நிமிராமல் புத்தகத்தையே பார்த்தபடி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தானா? வெட்கம் பிடுங்கி தின்றது அவளுக்கு.

 

ஓடிச்சென்று துப்பட்டாவை எடுத்தவள் கழுத்தை சுற்றி போட்டு, தன்னை முற்றிலும் மறைத்துக் கொண்டு வந்து அவன் எதிரே அமர்ந்தாள். அவளை அழுத்தமாக பார்த்தவன், “இதுல எல்லாம் விவரமா இருப்பாளே” என்று எண்ணியபடி தன் சட்டை பட்டனை போட்டுக் கொண்டான்.

 

அதன்பிறகு மேலும் சில மணி நேரம் அவளுக்கு சொல்லிக் கொடுக்க, அவளும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் தூக்கத்தினால் சோர்ந்திருப்பதை கண்டவன், “இன்னைக்கு இது போதும், போய் தூங்கு” என்றான்.

 

“ம், வந்து ரொம்ப தேங்க்ஸ். நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது. நீங்க பேசாமல் எங்க காலேஜ்ல புரபசராக இருந்து இருக்கலாம். எனக்கு பரவாயில்லை, நீங்க சொல்லீட்டிங்க. மத்தவங்களுக்கும் சரியா புரிஞ்சு இருக்காதுனு நினைக்கிறேன்” என்றாள் நேத்ரா மனதை மறைக்காமல்.

 

“ஏன் காலேஜ்ல பாடம் சரியா நடத்தலையா?” என்று கேட்டான் யோசனையுடன்.

 

“நடத்துறாங்க தான். ஆனால் புரிஞ்ச மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும். உங்களை போல தெளிவா சொல்ல மாட்டாங்க” என்றாள் நேத்ரநயனி.

 

“சரி, இனி நான் புரபசராக வர்றதெல்லாம் நடக்காத காரியம். தினமும் நான் சொல்லி கொடுக்கறதை உன் பிரண்ட்ஸ்க்கும் தேவைப்பட்டா சொல்லிக் கொடு” என்றான்.

 

“ஓகே, தேங்க்ஸ்” என்றவள் தன் புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, அவள் படுக்கையின் அருகே இருந்த அலமாரியில் வைத்துவிட்டு வந்து அவன் முன்னே நின்றாள்.

 

“என்ன?” என்றான் கேள்வியாக

 

“குட்நைட்” என்றாள் சிநேகமாக அவனை பார்த்து சிரித்து

 

“ம் நல்ல முன்னேற்றம் தான்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி “குட்நைட்” என்று புன்னகைத்தான்.

 

அதற்கடுத்த நாளில் இருந்து இருவரும் சற்று சகஜமாக பேச தொடங்கியிருந்தனர். நேத்ரநயனியும் யாரோ போல் அவனிடம் ஒதுங்கி இருக்காமல், அவன் மருத்துவமனையில் இருந்து வந்ததும், அவனருகே சென்று அன்று கல்லூரியில் நடந்தவற்றை பற்றி பேச ஆரம்பித்து விடுவாள்.

 

அவள் ஆர்வமாக சொல்வதால் சித்தார்த்தும் முகம் கோணாமல், அவள் பேச்சை கேட்டபடி அவளுடன் சாப்பிட்டு முடிப்பான். இரவில் கொஞ்ச நேரம் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு உறங்கி விடுவான்.

 

வீட்டில் இருந்த வேலைக்காரர்களுக்கு இப்போது சித்தார்த்தும் நயனியும் மனமொத்த தம்பதிகள் போல காட்சியளித்தனர். சரோஜாவும் வேலுவும் நயனியிடம் மிகுந்த மரியாதையுடன் நடக்க தொடங்கியிருந்தனர்.

 

அன்று சித்தார்த் மருத்துவமனை போகாமல் கேஷூவல் உடையணிந்து கொண்டிருந்தான். “இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகலையா?” என்றாள் நயனி

 

“இல்லை இன்னைக்கு தான் அப்பா வரப்போறாரே. அவர்கூட கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்னு நினைச்சு, லேட்டா வர்றதாக சொல்லியிருக்கேன்” என்றான்.

 

“அப்போ நானும் இன்னைக்கு காலேஜூக்கு லீவு போட்டுடட்டமா?” என்றாள்

 

“இல்லை நான் போய் அப்பாவை கூட்டிட்டு வர்றேன். நீ ரெடியாயிட்டு இரு. அவர் வந்ததும் அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, நீ காலேஜ் போயிடு. ஈவ்னிங் அவர்கிட்ட பேசிக்கலாம்” என்றான்.

 

“இல்ல நானும்..” என்று தயங்கியவளை, “அப்பா எதுவும் நினைச்சிக்க மாட்டார். நீயும் டாக்டருக்கு படிக்கிறனு தெரிஞ்சா சந்தோஷம் தான் படுவார். அவரே உன்னை லீவு எடுக்க விடமாட்டார்” என்றான்.

 

சம்மதமாக தலையசைத்துவிட்டு, கல்லூரிக்கு தயாராக சென்றாள். சித்தார்த் ஏர்போர்டிற்கு தன் தந்தையை அழைத்து வரச் சென்றான். இன்ப அதிர்ச்சியாக மகேந்திரனுடன் அவன் அக்கா பவிஷ்காவும் அவளின் செல்ல மகள் ரம்யாவும் வந்திருந்தனர்.

 

ரம்யா சித்தார்த்தை கண்டதும், “மாமா” என்று பாய்ந்து ஓடி வந்து அவன் மேல் ஏறிக் கொண்டாள். அவளை அள்ளி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டபடி,

 

“வாட் எ சர்ப்பரைஸ், ஏய் பவிக்கா, நீ வர்றதா சொல்லவே இல்லை” என்றான் சித்தார்த் சந்தோஷமாக.

 

“உன் கல்யாணத்துக்கு தான் வர முடியல. உன் பொண்டாட்டியை பார்த்து அறிமுகமாவது ஆக வேண்டாமா? அதுதான் உன் மாமாவையே அங்கே பார்த்துக்க சொல்லிட்டு அப்பா கூட வந்துட்டேன்” என்றாள் பவிஷ்கா சிரித்துக் கொண்டே

 

சித்தார்த் தந்தையின் முகஜாடை என்றால், பவிஷ்கா அவர்கள் தாயின் முக ஜாடை. ஐந்தடியில் சற்றே பூசினாற் போன்ற உடல்வாகுடன் இருப்பாள். ஆனால் நிறம் மட்டும் சித்தார்த்தை போல நல்ல சிவந்த நிறம்.

 

“சரி வா போகலாம்” என்றபடி அக்காவின் தோள்மேல் கைப்போட்டபடி நடந்தான் சித்தார்த்.

 

“இல்லடா, உங்க மாமா வீட்டு சொந்தகாரங்க எல்லாம், அது வேணும் இது வேணும்னு ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்திருந்தாங்க. அதெல்லாம் லக்கேஜ்ல போட்டு எடுத்து வந்திருக்கேன். நான் முதல்ல அவங்க கிட்ட எல்லாத்தையும் கொடுத்திட்டு சாவகாசமாக இரவு எட்டு மணிக்கு மேல் வர்றேன், நீ அப்பாவை மட்டும் கூட்டிட்டு போ. நான் டாக்சியில் போய்க்கிறேன்” என்றாள் பவிஷ்கா.

 

“சரி, ரம்யா குட்டி எங்க கூட வரட்டும். நீ  மட்டும் போய் எல்லாத்தையும் கொடுத்திட்டு பேசிட்டு வா. எப்போ வர்றியோ எனக்கு போன் பண்ணு, நானே கார் எடுத்திட்டு வர்றேன்” என்றான் சித்தார்த்.

 

“இல்ல சித்து. என் மாமியார் வீட்டில் அவளையும் கேப்பாங்க. ரம்யாவும் என் கூட வரட்டும். எனக்கென்ன நம்ம வீட்டுக்கு வர வழி தெரியாதா? நானே வந்துடுவேன். தேவைப்பட்டா உனக்கு போன் பண்றேன்” என்ற பவிஷ்கா தம்பியின் உதவியுடன் கொண்டுவந்திருந்த லக்கேஜ்களை எல்லாம் டாக்சியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினாள்.

 

காரில் தந்தையுடன் பேசிக் கொண்டே வீட்டை அடைந்தான் சித்தார்த்.

 

நேத்ரா கல்லூரிக்கு செல்ல ஆயத்தமாகி அமர்ந்திருந்தவள், மகேந்திரனை கண்டதும், “மாமா” என்று ஓடி அவர் காலில் விழுந்து வணங்கினாள்.

 

“நல்லா இரும்மா, ரொம்ப சந்தோஷம்மா. சித்தார்த் உன்னை மருத்துவம் படிக்க காலேஜ் சேர்த்திருக்கானாமே. நல்லா படிச்சு நீயும் டாக்டர் ஆயிட்டால், சித்துக்கு கொஞ்சம் வேலை சுமை குறையும். இரண்டு பேரும் சேர்ந்து ஆஸ்பிட்டல் நிர்வாகத்தை பார்த்துக்கலாம்” என்றவர் மேலும் தொடர்ந்து

 

“ஆனா ஒரே ஒரு சின்ன வருத்தம் தான்” என்றார் சற்று கவலையாக

 

“என்ன மாமா அது” என்றாள் நேத்ரா பதட்டமாக. சித்தார்த்தும் கேள்வியுடன் தந்தையை பார்த்தான்.

 

“சீக்கிரம் குழந்தையை பெத்துக் கொடுக்க சொல்லி கேட்ட நானே, இப்போதைக்கு குழந்தை எல்லாம் வேண்டாம்னு சொல்லும்படி ஆயிடுச்சு. உடனே குழந்தை குட்டினு ஆயிட்டால் உனக்கு படிப்புல கவனம் குறையும். அதனால கொஞ்ச வருஷம் இதெல்லாம் தள்ளிப்போடறது நல்லது” என்றவர் சித்தார்த்திடம் திரும்பி, “சித்து நான் சொல்றது புரியுது இல்ல?” என்றார்.

 

“இல்லனா மட்டும் உங்க மருமக குழந்தை குட்டினு பெத்து தள்ளிடுவா பாருங்க” என்று மனதிற்குள் முனகிக் கொண்டு நயனியை அழுத்தமாக பார்த்தான்.

 

அவள் குனிந்த தலையை நிமிரவே இல்லை. “சித்து உன்கிட்ட தான் கேட்கிறேன்” என்றார் மகேந்திரன் மீண்டும்.

 

“டாடி, ஐ நோ தீஸ் ஆல், ஐ வில் டேக் கேர்” என்றபடி நேத்ராவிடம் திரும்பி, “நயனி கிளம்பு போகலாம்” என்றான்.

 

நேத்ரா தன் மாமானாரிடம் சொல்லிக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள். ஆனால் அன்று மாலை வழக்கத்துக்கும் மாறாக சற்று சீக்கிரமாக வீட்டிற்கு வந்தவள், மாமனாருக்காக தானே உணவு தயாரிக்க சமையலறைக்கு சென்றாள்.

 

அவருக்காக விதவிதமாக சமைத்து டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டிருக்கும் போதே சித்தார்த் உள்ளே நுழைந்தான். “பார்த்தியா சித்து, என் மருமகள் எனக்காக விருந்தே சமைச்சு வச்சிருக்காள்” என்றபடி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார் மகேந்திரன்.

 

நயனியை பார்த்து முறைத்தபடி வந்தான் சித்தார்த். இத்தனை நாளில் ஒரு நாள் கூட அவள் அவனுக்காக சமைத்ததே இல்லை. ஏன் ஒரு காபி கூட கொடுத்ததில்லை. அவன் மனப்போக்கை உணராதவளாக, “வாங்க நீங்களும் மாமா கூட உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றாள்.

 

“இல்ல எனக்கு வேண்டாம்” என்றான் சித்தார்த் பட்டென்று

 

“சித்து, சமைக்கும் போதே வாசனை நல்லா இருந்ததுடா, எப்போ என் மருமக சாப்பிட கூப்பிடுவாள்னு காத்திட்டு இருந்தேன். சும்மா பிகு பண்ணாமல் என்கூட வந்து சாப்பிடு” என்றார் மகேந்திரன்.

 

வேறுவழியில்லாம் மனைவியை அழுத்தமாக பார்த்தபடி சாப்பாட்டு மேஜை அருகே அமர்ந்தான். முதன்முறையாக கணவனுக்கு உணவு பறிமாறினாள். சப்பாத்தியும் பன்னீர் பட்டர் மாசாலாவையும் எடுத்து வாயில் வைத்தவன், அதன் ருசியில் மெய்மறந்து போனான். நேத்ரா கணவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். முதன்முறையாக சமைத்திருக்கிறாள், அவன் எப்படியிருக்கு என்று சொல்வானா? என்று சித்தார்த்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சித்தார்த்தோ, அவ என்ன எனக்காகவா சமைச்சா? அவளோட மாமனாருக்காக சமைச்சிருக்கா என்று மனசுக்குள் புகைந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நேத்ரா ஆர்வமாக கணவனை பார்ப்பதும், அவன் கண்டுக் கொள்ளாமல் உண்பதையும் கவனித்த மகேந்திரன், “மருமகளே, அருமையா சமைச்சிருக்க மா, என் மனைவி இறந்ததுக்கு அப்புறம் இப்போ தான் இவ்வளவு ருசியா சாப்பிடுறேன். என் மகன் ரொம்ப கொடுத்துவைத்தவன், என்ன சித்து சொல்றே?” என்று மகனையும் தன் பேச்சில் இழுத்தார்.

 

“இந்த மாதிரி சாப்பாடு எல்லாம் தினமும் சாப்பிடக்கூடாது, ஹெவி கொலஸ்ட்ரால்” என்றான் வேண்டுமென்றே.

 

அவள் என்ன தினமுமா செய்ய போகிறாள்? நல்லா இருக்குனு சொன்னால் குறைஞ்சுடுவானா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

 

சித்தார்த் பவிஷ்கா தான் வந்திருப்பாள் என்று நினைத்தவனாக சாப்பாட்டிலிருந்து எழ எத்தனித்தான்.

 

“பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்திரிக்காதீங்க, நான் யாருனு பார்க்கிறேன்” என்றவள் வாசலை நோக்கி சென்றாள்.

 

கதவை திறந்ததுதும் பவிஷ்கா நின்றிருந்தாள். நேத்ராவை பார்த்து சிநேகத்துடன் சிரித்து, “ஹாய்” என்றாள்.

 

நேத்ராவோ புருவம் சுருக்கி வந்திருந்தவளை ஆராய்ச்சியாக பார்த்தாள். இவங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்தவள், “நீங்க அந்த அபியோட அக்கா தானே?” என்றாள் அழுத்தமாக

 

சிறுவயதில் சித்தார்த்தின் அம்மா அவனை அபிமன்யு என்று தான் அழைப்பார்கள். அதனால் மகேந்திரனின் சொந்த ஊருக்கு அவர்கள் செல்லும்போதெல்லாம் சித்தார்த்தை அந்த ஊரில் இருக்கும் அவன் நண்பர்கள் அபி என்று தான் அழைப்பார்கள்.

 

எனவே பவிஷ்கா, “ஆமா நான் அபியோட அக்கா தான்” என்றாள்.

 

“உங்களை தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்” என்றாள் நேத்ரா.

 

“என்னையா? எதுக்கு?” என்றாள் பவிஷ்கா ஒன்றும் புரியாமல்.

 

“உங்களைனா உங்களை இல்லை, உங்க தம்பி அபியை. அவனை தான் ரொம்ப வருஷமா தேடிட்டு இருக்கேன். அவன் மட்டும் என் கையில் கிடைச்சான்னா நல்லா நாலு வார்த்தையாவது கேட்கணும்னு வெறியோட இருக்கேன். எங்கே அவன்? உங்களோட வந்திருக்கானா?” என்றாள் சற்று கோபமாக.

 

வாசலுக்கு சென்றவள் ஏதோ சத்தமாக பேசுவது போல தோன்றவும் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவசரமாக எழுந்து வெளியே வந்தனர்.

 

அங்கே நேத்ரா வாசலிலேயே பவிஷ்காவை நிற்க வைத்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

“நேத்ரா என்னாச்சும்மா?” என்றபடி மகேந்திரன் அவள் அருகில் வந்து நின்றார். மகளை கேள்வியாக பார்க்க, அவளோ தோளை குலுக்கி உதடு பிதுக்கினாள்.

 

“இல்ல மாமா? இவங்களோட தம்பி சரியான பொறுக்கி பையன். அதனால தான் அவங்க கிட்ட அவங்க தம்பியை பத்தி விசாரிச்சுட்டு இருக்கேன்” என்றாள் நேத்ரா.

 

சித்தார்த்துக்கு பலமாக புரை ஏறி விட்டது. தலையில் தட்டிக் கொண்டே பவிஷ்காவை அழுத்தமாக பார்த்தான். அவளும் தம்பியை பார்த்துக் கொண்டே, “ஏன் என்னை மட்டும் அடையாளம் தெரியுதே. என் தம்பியை உனக்கு அடையாளம் தெரியலயா?” என்றாள் கிண்டலாக 

 

“அவன் சைக்கிள்ல வேகமாக வருவான், நல்லா நெடுநெடுன்னு உயரமா இருப்பான். என்னை சோடாபுட்டினு சொல்லிட்டு வேகமா போயிடுவான். அவன் முகம் சரியா எனக்கு நினைவில் இல்ல. ஆனால் அவன் உங்க தம்பி என்றும் அவன் பேரு அபி என்றும் எனக்கு தெரியும். முழு பேர் அபிஷேக்கா?” என்றாள் நேத்ரா யோசனையாக பவிஷ்காவை பார்த்து.

 

சித்தார்த்தும் பவிஷ்காவும் இப்போது அர்த்ததுடன் பார்வையை பறிமாறிக் கொண்டார்கள். மகேந்திரனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. 

 

“என்னம்மா சொல்றே? புரியற மாதிரி சொல்லு” என்றார் 

 

“மாமா, நான் ஆறாவது படிக்கும் போது கண்ணாடி போட வேண்டியதா போயிடுச்சு, நானே அந்த கவலையில் இருந்தால், இவங்க தம்பி அபி என்னை எப்போ பாரு சோடாபுட்டினு கிண்டல் பண்ணுவான் மாமா. இத்தனைக்கும் என்னைவிட எவ்வளவு பெரியவன் தெரியுமா? என்னை எங்கே பார்த்தாலும் சோடாபுட்டினு சொல்லிட்டு சைக்கிள்ல வேகமா போயிடுவான்.

 

அவனால என்னோட பிரண்ட்ஸ், ஸ்கூல்லனு எல்லா இடத்திலயும் சோடாபுட்டினு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. என் பேரே எனக்கு மறக்கிற அளவுக்கு போயிடுச்சு. எல்லாரும் என்னை அப்படி கூப்பிட்டதால எனக்கு ஏதோ குறைனு நானே நினைக்க ஆரம்பிச்சுட்டேன். அவனால என்னோட தன்னம்பிக்கையே போச்சு. 

 

எப்படியும் யாராவது ஒருத்தராவது ஒரு நாளாவது சோடாபுட்டினு கூப்பிடாமல் இருக்க மாட்டாங்க. அப்படி அவங்க கூப்பிடும் போதெல்லாம் நான் இவங்க தம்பியை தான் மனசுக்குள்ள திட்டிப்பேன். உங்க மகன் கூட ஒருநாள் அப்படி கூப்பிட்டாரு, அப்பவும் எனக்கு அவன் மேல தான் கோபமா இருந்தது. என்னைக்காவது ஒரு நாள் அவன் என் கையில் சிக்கினால் அவன் நாக்கு புடுங்குற மாதிரி நாலு வார்த்தை கேட்காமல் விடக்கூடாதுன்னு நினைச்சுப்பேன். ஆனால் அவனோ இல்ல அவனோட அக்காவான இவங்களோ இதுநாள்வரைக்கும் என் கண்ணில் பட்டதே இல்லை.

 

இன்னைக்கு தான் இவங்களை பார்க்கிறேன். அதனால தான் இவங்க தம்பி எங்கேனு கேட்டுட்டு இருக்கேன்” என்றாள் ஆத்திரத்துடன்.

 

அதிர்ச்சியுடன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சித்தார்த் சிறு வயதில் அவளை கிண்டல் செய்தது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் அது அவள் மனதை மிகவும் காயப்படுத்திய இருக்கிறது என்பது அவள் பேச்சில் இருந்தே மூவருக்கும் புரிந்தது.

 

இப்போது பவிஷ்காவை எப்படியும் உள்ளே அழைத்து தானே ஆகவேண்டும்? அவள் யாரென்று நேத்ராவிடம் அறிமுகம் செய்வது? அந்த அபி தான் இந்த சித்தார்த் அபிமன்யு என்று தெரிந்தால் என்ன சொல்வாளோ?

 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!