Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 11.1

மண்வாசம் 11:

 

திருவிழாவின் இரண்டாம் நாள்!

 



Advertisement

அதிகாலை ஐந்து மணியளவில், ஊர்மக்கள் அனைவரும் தீர்த்தம் எடுத்து வர, ஆற்றை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்தனர்.

 

ஆற்றிற்கு சென்று குளித்துவிட்டு, ஈரம் சொட்டும் உடையோடு தீர்த்தக் கலசத்தில் நீரை நிரப்பி வேப்பிலையை அதன் மேல் சொருகி வைத்து, சக்தி கலசத்தோடு வாத்தியங்கள் இசைக்க அணிவகுத்து வருவது வழக்கம். அந்த தீர்த்தத்தை அம்மனுக்கு அபிஷேகம் செய்த பின்னரே திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.

Advertisement

 

Advertisement

“விக்ரமா! நான் தீர்த்தத்துக்கு போறேன். திருக்கல்யாணம் முடிஞ்சு சாய்ங்காலந்தேன் வருவேன். நீ வெளிய போறப்போ நம்மூட்டை பூட்டி தொறப்பு குச்சிய நாயகி ஆத்தா வூட்டுல கொடுத்துட்டு போயிடு. போசில பலகாரம் எடுத்து வெச்சிருக்கேன் அப்படியே அதையும் கொண்டு போயிரு” என்றார் முத்துலட்சுமி.

 

“பாத்து போய்ட்டு வாங்மா” என விக்ரமன் சொல்ல,

Advertisement

 

“சரி கண்ணு. பொறகால போய் நீ கொஞ்சம் வேப்பிலை பறிச்சாந்து கொடுக்குறதுதேனோ” என, அவன் தலையசைத்து பின்பக்கம் நகர்ந்தான்.

 

வேப்பமரத்தில் இருந்து சிறு சிறு வாதுகளை ஒடித்துக் கொண்டு திரும்புகையில், முன்பொருநாள் அரசி அம்மரத்தின் ஒரு பெரிய கிளையின் மீதேறி அமர்ந்திருந்தது நினைவில் வர, அக்கிளையைப் பார்த்தான்.

 

‘அரசி’ என்று அதில் பதித்திருந்தது காலங்கள் கடந்தும் அப்படியே இருந்தது. அவன் அதரங்களில் ஒரு மென்னகை பரவ, நினைவுவில் அவளும் அந்த நாளும்!

 

ரசி வேப்பிலை பறிக்க அவன் வீட்டிற்கு வந்த போது திண்ணையில் அமர்ந்திருந்தான் விக்ரமன். அவளோ அவனை கண்டுகொள்ளது வீட்டிற்குள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க,

 

“என்ன விஷயம்?” என்று வினவினான்.

 

“விஷயம் கொஞ்சம் பெருசு. உங்களயோட்டம் சிறுசுக கிட்ட அதைய சொல்ல முடியாது. பெரியவங்களைப் பாத்து தான் பேசோணும்” என்றவளை முறைத்தவன்

 

“வீட்ல யாரும் இல்ல” என்றுவிட,

 

“ஓஹ்! சரி அப்போ உங்க கிட்டயே சொல்லுறேன். தீர்த்தத்துக்கு கொஞ்சம் வேப்பிலை வேணும். அப்பத்தா பறிச்சிட்டு வரச் சொன்னாங்க. பறிச்சு கொடுங்க” அரசியாயிற்றே! கட்டளை தான் அவனை நோக்கிப் பாய்ந்தது.

 

“வேங்கைன்ற பேருக்கு எல்லாம் வேப்பிலை தர்றது இல்லை. கெளம்பு! கெளம்பு!” வேங்கையை வம்புக்கு இழுக்கவென்றே பிறந்தவன், அதை முறையாகச் செய்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

அப்போது தான் வாசலில் கிடந்த காலணிகளைப் பார்த்தவள் தன் மாமனும் அத்தையும் உள்ளிருப்பதை அறிந்து கொண்டு,

 

“மாமாஆஆஆஆஆ” என்று உரக்கக் கத்தினாள்.

 

விக்ரமன் காதை அடைத்துக் கொள்ள, பதறியடித்து வேகமாய் வெளியே வந்து நின்றார் வேலுச்சாமி. அவர் பின்னே உண்டு கொண்டிருந்த உணவை பாதியில் விட்டுவிட்டு, கைகூட கழுவாது வந்து நின்றார் முத்துலட்சுமி.

 

“என்ன கண்ணு என்னாச்சு? நீ உள்ளார வா மொதல்ல” என்று வேலுச்சாமி அழைக்க,

 

“எனக்கு வேப்பிலை வேணும்” என்றாள் அங்கிருந்து சிறிதும் நகராது.

 

“இது உன்ர வீடு கண்ணு. என்ன வேணுமோ வந்து எடுத்துக்கிட்டு போ” என்று சொல்ல,

 

“எனக்கு தரமாட்டேனு சொல்லிட்டாங்க” என்றாள் முகத்தை உம்மென்று வைத்தபடி.

 

“அப்படின்னு ஆரு சொன்னது?” என முத்துலட்சுமி கேட்க,

 

“மச்சான் தான்” என்றாள் விக்ரமனை முறைத்தபடி.

 

“அவன் கெடக்குறான். உனக்கில்லாததா கண்ணு, நீ வேணுங்கற அளவுக்கு கொண்டுட்டு போ சாமி” என்று வேலுச்சாமி அவளை பின்பக்கம் அனுப்பிவிட்டு,

 

“டேய்! மரமேறி புள்ளைக்கு பறிச்சு கொடுத்துப்போட்டு வா” என தன் மகனிடம் கூற,

 

“சரிங் ப்பா” என தலையசைத்து விக்ரமன் அரசியின் பின் செல்ல, முன்னால் சென்று கொண்டிருந்தவள் ஓர் நொடி பின்னால் திரும்பி தன் புருவத்தை உயர்த்தி ‘எப்படி’ எனப் பார்த்தாள்.

 

தன் தந்தை சென்றதை உறுதிப் படுத்திவிட்டு,

 

“ஏய் கட்டக்காரி! நீயே ஏறி பறிச்சிட்டு கெளம்புடி” என்றான்.

 

“மாமா சொன்னது காதுல விழலையா அத்தக்கருப்பா” என்றாள்.

 

“ஏன், மதில் ஏறுறவ மரம் ஏற மாட்டியோ?” என்று கேட்கவும், அவனை ஆழமாய் பார்த்தவள், சரசரவென மரத்தின் மீதேறி பெரிய வாதின் இருபுறமும் கால் போட்டு அமர்ந்துகொண்டு, தலையில் இருந்த ஹேர் பின்னை எடுத்து மரத்தில் தன் பெயரைப் ஆழமாய் பொறித்தாள்.

 

பின் சிறு சிறு வாதுகளை ஒடித்துப் போட, அவன் தோள் மீது ஒரு வாது வந்து விழ, நிமிர்ந்து அவளை முறைத்தவன் உள்ளே சென்றுவிட்டான்.

 

சிறிது நேரத்தில் அவள் அங்கிருந்து சென்றதும் மரத்தை வந்து பார்த்தவன் ஆடிப் போய்விட்டான்.

 

முழு மரத்தையே அவளோடு எடுத்துப் போயிருந்தாளே அவள்! இலையில்லா கிளைகளோடு அவனைப் பாவமாய் பார்த்து நின்றது அந்த மரம்.

 

“கட்டக்காரி!!!!! ” பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது அவனால். அடுத்த நாளிலிருந்தே அவளையே தண்ணீர் ஊற்ற வைத்து, அதில் இலை கண்டான் என்பது வேறு கதை.

 

[the_ad id=”6605″]

 

 

 

காலங்கள் எப்படிச் சுழன்றதென்றே நம்ப முடியவில்லை. சிறு வயதில் இருந்தது போலவே இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை என்று நினைக்க மனம் கனத்தது.

 

தீர்த்தக் கலசத்தையும் அதை சும்மாடு கட்டி தலையில் வைக்க ஒரு துண்டையும் எடுத்துக் கொண்டு முத்துலட்சுமி கிளம்பிவிட, சிறிது நேரத்தில் மாடு, கன்றை எல்லாம் பிடித்துக் கட்டித்  தீவனமிட்டுவிட்டு, தோட்டம் செல்லக் கிளம்பியவன் வீட்டைப் பூட்டி சாவியை நாயகியிடம் கொடுத்துச் செல்ல வந்தான்.

 

ங்கநாயகி பொங்கல் வைக்க, தன் சின்னப் பேத்தியோடு பெரிதாய் போராடிக் கொண்டிருந்தார்.

 

“அரசி கண்ணு இன்னுமா குளிக்கற? நீ குளிச்சு முடிச்சு வாரக்குள்ள திருவிழாவே முடிஞ்சு போயிரும் போலிருக்குது. அந்த பொங்கத் தவலையை (பானையை) எடுத்துட்டு வெரசலா வா சாமி. நேரங்காலமே பொங்க வெச்சு கோவிலுக்கு கொண்டு போகோணும். இல்லைனா திருக்கல்யாணம் பாக்க கூட்டம் வந்துபோடும்” என்று குரல் கொடுத்தார்.

 

சிறிது நேரத்திற்கு முன்பு தான் அருந்தமிழோடு அக்கப்போர் செய்து, படுக்கையில் இருந்து எழவே மனதில்லாமல் எழுந்து, ஒருவழியாக குளியலறைக்குள் புகுந்து அடுத்த சில நிமிடங்களில், குளித்து முடித்து வந்து சுடிதாரை கையில் எடுத்தாள் அரசி.

 

அதை எடுத்தவளுக்கு நேற்றைய வள்ளிக் கும்மயின் போது அவளையே பார்த்திருந்த விக்ரமனின் பார்வை நினைவு வர, அதை கீழே வைத்துவிட்டு, சிறு வேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய நீல நிற புடவையை எடுத்து உடுத்தினாள்.

 

ஒப்பனை செய்யச் சென்ற வேளையில் அப்பத்தாவின் குரல் காதில் விழவும்,

 

“பொங்க தவலையா! அது எங்கிருக்குதுங் ஆத்தாஆஆ?” என்று உள்ளிருந்தபடியே சலிப்பாய் குரல் கொடுத்தாள்.

 

“அட்டாலில இருக்குமோட்ருக்குது” என்று அவரும் சமயலறையில் இருந்தபடி குரல் கொடுக்க, முடியை தூக்கி கொண்டயிட்டபடி வந்தவள் அட்டாலியின் மேல் ஏறுவதற்காக பெரிய மர ஸ்டூலை இழுத்து வந்து போட்டு ஏறினாள்.

 

ஒரு பொங்கல் தவலையை எடுத்து ஸ்டூலின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு மற்றொன்றை எடுக்க கையை நீட்டிய நேரத்தில், எலியொன்று இந்தப் புலியின் கை மேல் குதித்தோடியது. திடுக்கிட்டு விரைந்து கையை எடுத்தவள் அப்படியே பின்னால் சாய, அடுத்து நடந்த நிகழ்வுகளை சொல்லவும் வேண்டுமா?

 

பொங்கல் தவலை கீழே விழ, தரை தாங்கிக்கொண்டது.

 

அவளை?

 

அவளையும் தரை தான் தாங்கிக் கொண்டது.

 

“என்ன கண்ணு அங்க சத்தம்?” என்ற நாயகியின் குரலில் சமையல் அறை வரை சத்தம் எட்டிவிட்டதை அறிந்து,

 

“ஒண்ணுமில்லீங் ஆத்தா. கை நழுவி தவலையை கீழ போட்டுட்டேன்ங்” என்றவள் மெல்ல எழுந்து நின்று, ஒரு பெருமூச்சோடு இடுப்பை இப்படியும் அப்படியுமாய் வளைத்துக் கொண்டாள்.

 

“ஒடுக்குழுந்து போச்சா? என்ர அம்மா வீட்டு சீதனம் அது. அதைய போட்டு நொறுக்கிப்போடாத கண்ணு மொல்ல எடுத்து வையு” என்றார் நாயகி.

 

‘நானே நொறுங்கிப்போய் கெடக்குறேன். இதுல பாத்தரம் பத்தரமா?’ எனப் பல்லைக் கடித்தவள் மீண்டும் ஸ்டூலை நிறுத்தி அதன் மீது ஏறினாள். இன்னும் இரண்டு தவலைகளை எடுக்கவேண்டி இருந்தது.

 

கையை உயர்த்தியவளுக்கு அவ்வறைக்குள் யாரோ நுழைவதுபோல் இருக்க, உடனே திரும்பிப் பார்த்தாள். சுவரோடு சாய்ந்து நின்றபடி அவளை தான் பார்த்திருந்தான் விக்ரமன்.

 

“நீங்க எப்போ வந்தீங்க?”

 

“இப்போ தான்”

 

“இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டியது தானே” என்றாள் குரலில் மெல்லிய லேசான சோகம் தென்பட.

 

‘ஏன்’ என்பதாய் அவன் பார்க்க, இயல்பாக முகத்தை வைத்தவளோ,

 

“இல்ல பொங்க தவலை கீழ விழுந்திருச்சு நீங்க வந்திருந்தா விழாம பிடிச்சிருக்கலாம்” என்றாள்.

 

“தவலையவா?”

 

அழகாய் புருவம் உயர்த்தி அவன் கேட்பது,

 

[the_ad id=”6605″]

 

‘தவலையவா இல்ல உன்னையவா?’ என்று கேட்பதாய் பட, கொஞ்சம் அதிர்ச்சியாய் பார்த்திருந்தாள்.

 

சின்ன சிரிப்புடன் அவளருகில் வந்தவன்,

 

“இல்ல, இங்க தவலை மட்டும் விழுந்ததோட்டம் தெரியலையே” என்றவன் தொனியில் கேலி தொற்றியிருந்தது.

 

‘தவலையோட சேர்த்து இந்த தவக்காயும் இல்ல விழுந்திருக்கு’ என்பதை மனதில்  மட்டும் நினைத்துக் கொண்டான். வெளியே சொன்னால் அவள் நெற்றிக்கண்ணை திறக்க வாய்ப்புள்ளது என்றறிந்து. ஆனால் அவன் முன்பு கூறியதற்கே அவள் நெற்றிக்கண்ணை திறந்துவைக்க,

 

“நீ நகரு நான் எடுக்குறேன்” என்று உதவிக் கரம் நீட்டிவிட்டான்.

 

அவனுக்கு பதிலளிக்காது அவளே முயற்சியை தொடர, இம்முறை ஸ்டூலை மட்டும் பிடித்துக் கொண்டான்.

 

சாவியையும், பலகரங்களையும் நாயகியிடம் கொடுக்க வந்த போது அவருக்கும் அரசிக்கும் நடந்த உரையாடல்களை அவனும் கேட்டுக் கொண்டிருந்தான். நாயகி அவனோடு பேசிக்கொண்டே பொங்கலிட அரிசியை நீரில் கழிந்து வைத்தும் பொங்கல் தவலை வராதிருக்க, அவனை சென்று பார்க்குமாறு சொல்ல, அவ்வறைக்குள் வந்திருந்தான் விக்ரமன்.

 

பாத்திரம் விழும் சத்தம் கேட்ட சில நொடிகளில் அவன் உள்ளே நுழைகையில் அரசி எழுந்துகொண்டாள். அவள் இடுப்பை வளைப்பதிலேயே கண்டுகொண்டான்.

 

“அடி பலமோ?” சத்தியமாய் அக்கறையாய் தான் அவளிடம் கேட்டான். ஆனால் அவளோ,

 

“பேசாம இருக்குறதுனா இருங்க. இல்லைனா கெளம்புங்க” என்றாள் காட்டமாய்.

 

“அதெப்படி வேங்கை? மறுபடியும் பொங்கத் தவலை கீழ விழுந்தா பிடிக்கணுமில்ல”

 

“மச்சாஆஆ..!” என்று பல்லைக் கடித்தாள்.

 

“முடியலைன்னா இப்போவே ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திரு. விழுந்ததை வெளிய சொல்ல வெக்கப் பட்டுக்கிட்டு பேசாம இருந்துக்காத” என்றவன் அவள் முறைப்பை பொருட்படுத்தாது,

 

“ஆமா நீயே டாக்டர் தானே! அப்போ பிரச்சனை இல்லை. எதாவது மருந்து மாத்திரை முழுங்கிக்கோ. டாக்டர்க்கு படிக்க தானே இங்கிருந்து அவ்வளவு தூரம் போன. இத்தனை வருஷம் இங்க வராமயே இருந்திருக்க” என்று அவன் பேசிகொண்டிருக்க, அரசி எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலே தேடிக் கொண்டிருந்தாள்.

 

 அவன் தொனி.. அவன் பேச்சு.. அது மட்டுமே அவள் கவனத்தில்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!