Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 11.2

 

“இன்னுமா எடுக்குற?” என்று கேட்கவும் தான் தன் கவனத்தை திருப்பினாள் அரசி.

 

அப்போது தான் உணர்ந்தாள் கையை உயர்த்தியதில் புடவை கொஞ்சம் இடுப்பை விட்டு விலகுவதை. அதுவரை பெரிதாய் தெரியவில்லை. இப்போது அவன் முன் பெரிதாய் தெரிந்தது. அதுவும் அவன் நின்றிருக்கும் புறம் விலகியிருக்க, அப்படியே கையை இறக்காது கீழே பார்த்தவள், ஒருகையால் புடவையை இழுத்து இடுப்பை மறைத்தபடி மறுகையால் அட்டாலியைத் தடவினாள்.



Advertisement

 

ஸ்டூலின் மேலே நின்றபடி கையை மாற்றி மாற்றி இப்படியே சில நொடிகள் தொடர, பொறுமை இழந்தவனோ,

 

Advertisement

“ஒன்னு இதப் புடி இல்ல அதப் புடி” என்றிட,

Advertisement

 

“நீங்க குனிஞ்சு ஸ்டூல மட்டும் புடிங்க” என்றுவிட்டு விரைவாக மத்ததையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்க, அவனும் வழிவிட்டு நிற்க, முகத்தை வெடுக்கென திருப்பிச் சென்றாள்.

 

Advertisement

“இதை எடுத்துட்டு வர இத்தன நேரமா?” என்று புலம்பியபடி அரசியிடம் இருந்து அதை வாங்கி, புளி போட்டுத் தேய்த்து விலக்கி, குங்குமப் பொட்டு வைத்து, அரிசி கழிந்த தண்ணீரை அதில் ஊற்றி அடுப்பில் வைத்தார் நாயகி. அவர் செய்தது போலவே அருந்தமிழ், மற்றுமொரு அடுப்பில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாள்.

 

விக்ரமன் கிளம்பச் செல்ல,

 

“இரு கண்ணு அரிசி போட்டுட்டு போலாம்” என்றுவிட, அரசியின் அருகில் நின்று கொண்டான்.

 

“என்ர சீதனத்தை எப்படி ஒடுக்கி வெச்சிருக்கா பாரு. இவகிட்ட சொன்னதுக்கு நானே போய் எடுத்துட்டு வந்திருக்கலாம். சூதானமா வேலை செய்யோணும் அரசி. நாளப்பின்ன உன்ர மாமியா வீட்டுக்கு போனப்பறம், இதே மாதிரி பாத்திரத்தை போட்டு உருட்டுனா, புள்ள வளத்தி வெச்சிருக்கா பாருன்னு என்னைய பாத்து சிரிக்க மாட்டாங்க?” என்று கடிந்து கொள்ள,

 

‘நீங்க என்னைய மட்டும் வளத்தாம அட்டாலில எலியையும் சேர்த்து வளத்துனது தான் பிரச்சனை’ என நினைத்து அவள் அமைதியாய் நின்றிருக்க, அவளை பார்த்து லேசாய் சிரித்தான் விக்ரமன்.

 

அவன் சிரிப்பதைக் கண்டு அவனை முறைத்துப் பார்த்தபடி கொஞ்சம் அவனருகில் நெருங்கி நிற்க, அவன் விலகி நிற்கும் முன்னர் அவன் கால் பெருவிரல் அவளிடம் அகப்பட்டுக் கொண்டது.

 

படாதபாடு பட்டு அதை அவளிடம் இருந்து விலக்கிக் கொண்டவன் அவளை முறைக்க, சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள் அரசி.

 

[the_ad id=”6605″]

 

 

பின் இரண்டு பொங்கலுமே கிழக்கு திசையில் பொங்கி வர, அனைவரும் அதில் அரிசியிட்டு தொட்டுக் கும்பிட்டுக் கொண்டனர். சில நிமிடங்களில் விக்ரமன் கிளம்பிக்கொள்ள, நாயகியும் தன் பேத்திகளோடு அம்மன் திருக்கல்யாணம் காண கோவில் சென்றார்.

 

நேரம் நகர்ந்திருக்க, மாலை ஏழுமணி அளவில் செல்லாண்டியம்மன் கோவிலில் பூ குண்டத்திற்காக பூவளர்த்தல் துவங்கியது.

 

ஊர்மக்கள் அனைவரும் சூடம் மற்றும் நவதானியங்களை வாங்கி பூவில் போடுவது வழக்கம். வீட்டில் ஒருவர் தவறாது அனைவரும் வருகை புரிய, விடியும் வரை வீதிகளில் ஆள் வரத்து இருந்துகொண்டே இருக்கும்.

 

பூ குண்டத்திற்கான வழி நெடுகிலும் எரிகரும்புகள் எரிந்து கொண்டிருக்க, தகதகவென எரியும் தீ ஜுவாலையில், அலங்கரிக்கப் பட்ட தேரில் வீற்றிருந்த செல்லாண்டியம்மனின் முகம் ஆயிரம் சூரியனாய் பிரகாசித்தது. கடந்த பதினைந்து நாட்கள் விரதம் இருந்து கைகளில் காப்பு கட்டிய பக்தர்கள் எல்லாம் குண்டத்தில் இறங்கும் நொடிக்காக அம்மனை மனதில் எண்ணியபடி காத்திருந்தனர்.

 

நெடிய வழியெங்கும் வண்ண விளக்குகள் மின்ன, கண்கவரும் கடைகள் பல இடம்பெற்றிருந்தன. குண்டத்தில் நவதானியங்களை வாங்கிப் போட்டுவிட்டு திரும்பிய நாயகி தன் பேத்திகளிடம்,

 

“தமிழு.. அரசி.. எதாவது வேணும்னா வாங்கிக்கோங்க” என்று சொல்ல, அக்கா தங்கை இருவரும் ஒவ்வொரு கடைகளாய் பார்வையை செலுத்தியபடி வந்து கொண்டிருந்தனர்.

 

சில நொடிகளில் விக்ரமனின் குரல் அருகில் கேட்கவும் மெல்லத் திரும்பினாள் அரசி. நாயகியோடு தான் அவன் பேசிக்கொண்டிருந்தான்.

 

“உங்க மச்சானே வந்தாச்சு அப்பறம் என்ன, அவன்கிட்டயே வேணுங்கறதை கேட்டு வாங்குங்க” என்று நாயகி விளையாட்டாய் சொல்ல, அரசி அவனையும் அவன் சட்டை பாக்கெட்டையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

 

‘பாக்கெட்டை காலி செய்யாம விட மாட்டா போலையே இந்த கட்டக்காரி’ என அவன் கை தானாய் பாக்கெட்டை பற்றியது.

 

அருந்தமிழ் அவர்களுக்கும் சற்று தொலைவில் இருந்த வளையல் கடைமுன் நின்று ஒவ்வொன்றாய் பார்த்திருக்க, பூவளர்த்துவதை காண அவ்வழியே மாறனோடு வந்த சாரதா அவளைக் கண்டுகொண்டு,

 

“டேய் மாறா! மருமக நிக்குறா பாரு” என மண்ணைப் பார்த்து வந்துகொண்டிருந்த தன் மகனை நிமிர்ந்து பெண்ணை பார்க்கும்படி கூறினார். அவன் அருந்தமிழை பார்த்துவிட்டு அசையாது நின்றிருக்க,

 

“வளையல் வாங்குவா போல. நான் போய் என்ர கையில இருக்குற நம்ம பரம்பரை வளையலை கழட்டி அவ கையில போட்டுட்டு வந்திறட்டா?” ஆசையாய்க் கேட்க,

 

“ம்மா! அதெல்லாம் வேண்டாம் கொஞ்சம் பேசாம இருங்க” என்று அவன் தடுக்க, அவரோ அதற்குள் அவளருகில் விரைந்திருந்தார்.

 

‘போச்சு டா’ என அவன் அங்கிருந்த கடைக்குள் அவர்களைப் பார்க்கும்படி நின்று கொண்டான்.

 

“வளையல் வாங்குறியா ம்மா?” என்ற குரலில் திரும்பிய தமிழ்,

 

“சும்மா பாத்துட்டு இருந்தேனுங் ஆன்ட்டி” என்றாள் புன்னகைத்து.

 

“தனியாவா வந்த?” என அவளிடம் பேசிக்கொண்டிருக்க, பதிலளித்தவள்

 

“நீங்க ஆன்ட்டி?” என்று கேட்டவாறே அவருக்குப் பின்னால் பார்வையை சுழலவிட, மாறனின் அதரங்களில் அழகிய புன்னகை வந்தமர்ந்தது.

 

சாரதாவும் தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு,

 

“நான் மட்டும் தான் வந்தேன் ம்மா. என்ர பையனுக்கு எதோ முக்கியமான வேலையாமா. நான் கூப்புட்டும் வேலை தான் முக்கியம்னு என்ர கூட வரமாட்டேன்னு சொல்லிட்டான்” என்று சோகமாய் சொல்ல,

 

“அம்மாவை விட வேலையாங் ஆன்ட்டி முக்கியம்” என்றாள் இயல்பாய்.

 

“அதானே! இப்படி எல்லாம் அவனை கேக்க ஆளில்லாமத்தேன் அவன் இஸ்டத்திற்கு சுத்திக்கிட்டு கெடக்குறான் ம்மா” என்றவர்,

 

“நீ என்ன தமிழ் வார்த்தைக்கு வார்த்தை ஆன்ட்டி ஆன்ட்டிங்குற. கேக்கவே எப்படியோ இருக்கு. அழகா தமிழ்ல அத்தைன்னு கூப்பிடு” என்றுவிட, முழித்து வைத்தாள் அவள்.

 

தன் அன்னை தன்னை நொடிக்கொரு முறை வாரினாலும் அவர் செல்லும் பாதை, தன்னை கரை சேர்க்கும் பாதை என்பதால் அமைதியாய்ப் பார்த்திருந்தான் மாறன்.

 

[the_ad id=”6605″]

 

 

நாயகியை அவரது தோழிமார்கள் சூழ்ந்து கொண்டதில், அவர்களோடு பேசவே அத்தனை விஷயம் இருந்தது அவருக்கு. விக்ரமனின் கண்காணிப்பில் தான் பேத்திகள் இருக்கின்றனர் என்று அவரும் சூப் கடை சுப்பாத்தாளோடு பேசிக் கொண்டிருந்தார்.

 

ஆனால் அரசி மட்டுமே விக்ரமனின் கண்காணிப்பில் இருந்தாள்.

 

ஒவ்வொரு கடையாய் சென்று நின்று அதில் ஏதாவது ஒரு பொருளை கையில் எடுத்து ஆர்வமாய் பார்ப்பதுமாய் பின் வாங்காது கீழே வைப்பதுமாய் இருக்க,

 

“சட்டுன்னு எதையோன்னு எடுத்து விடு. எவ்வளவு நேரம் தான் பண்ணுவ” என்று அவனும் பொறுமை இழக்க,

 

“உங்களை யாரு என்ர பின்னாடியே வரச் சொன்னது? பாக்கெட்டை பத்திரப் படுத்துறவங்க கிட்ட இருந்து எனக்கு ஒன்னும் வேண்டாம். நாங்களும் பணம் வெச்சிருக்கோம். உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க குச்சி மிட்டாய் வாங்கித்தாரேன்” என,

 

அவளை முறைத்துவிட்டு திரும்ப, சற்று முன்பு பார்த்த இடத்தில்  நாயகியையும் தமிழையும் காணாது சுற்றிலும் தேடினான் விக்ரமன்.

 

தமிழோடு சேர்ந்து அவளுக்கு வளையல் தேர்வு செய்துகொண்டிருந்தார் சாரதா.

 

இறுதியில் எதுவுமே நன்றாக இல்லை என்றவர் தன் கையிலிருந்த தங்க வளையல்களை கழற்றி அவளுக்கு அணிவித்து,

 

“இது நல்லா இருக்கே” என்று சொல்லவும் தான் அவள் அதை கவனித்தாள்.

 

“ஐயோ அத்தை என்ன பண்ணுறீங்க” என்று கழட்டச் செல்ல, அவளது அழைப்பில் அகம் மகிழ்ந்தவர் அவளைத் தடுத்து,

 

“இருக்கட்டும் கண்ணு. உன்ர அம்மா வள்ளியம்மாலும் நானும் சின்ன வயசுல ஒட்டுக்கா படிச்சவங்க. உன்னைய பாக்கும்போது அவளையே பாக்குறதோட்டம் இருக்குது. உன்ர அம்மா உனக்கு கொடுத்தா வேண்டாம்னு சொல்லுவையா? என்னையும் அப்படி நெனச்சுக்கோ” என்று சொல்ல அவளால் மறுக்கவே முடியவில்லை.

 

“சரி நான் கெளம்புறேன் தமிழ். அடிக்கடி கோவிலுக்கு வரும்போது பாக்கலாம்” என்றுவிட்டு அவர் நகர, தமிழும் வளையலைத் தடவியபடி நாயகியை தேடிச் சென்றாள்.

 

சாரதா மாறனைத் தேட, வேகமாய் வந்து அவர் கையைப் பிடித்தவன்

 

“ம்மா! எப்படிங் ம்மா இப்படி கலக்குறீங்க” என,

 

“கைய விடுடா” என்று அவன் கையை உதறியவர்,

 

“இதெல்லாம் நீ பண்ணோனும்” என்றார்.

 

“உங்க மகனை நீங்க இப்படி வளத்தி வெச்சுட்டு இப்போ வந்து கொறை சொல்லுறீங்களா? இத்தனை வருசத்துல இப்போ தான் நான் யாருனே தமிழுக்கு தெரிஞ்சிருக்கு. இதுல அவங்க கையை புடிச்சு வளையல் போடுறது தான் பாக்கி” என்று புலம்ப,

 

புன்னகைத்த சாரதா,

 

“அதான் என்ர கிட்ட சொல்லிட்டயல்லோ, இனி உங்கப்பா கிட்ட பேசி ஆறுச்சாமி அண்ணன் வீட்டுல பொண்ணு எடுக்குறோம்” என்றார் உறுதியாய்.

 

நாயகி தன் தோழிமாரோடு கதை அளந்துவிட்டு வர, விக்ரமனோடு தமிழ் மட்டுமே நின்றிருந்தாள். அரசியைக் காணவில்லை. சிறிது நேரத்தில் அவளே அவ்விடம் வர,

 

“அட சின்னக் குட்டி நீ எங்க ஒருத்தியும் போன?” என்று கேட்க,

 

“அதுவந்துங் ஆத்தா, உங்களயோட்டம் ஒரு வெள்ளச்சீலை கட்டுனவங்களை பாத்துட்டு நீங்க தான்னு நெனச்சு அவங்க பின்னாலயே போய்டேன்” என்றாள் பாவமாய். விக்ரமனும் தமிழும் நம்பாது பார்க்க,

 

நாயகியோ, “அட அப்பறம் என்னாச்சு கண்ணு” என,

 

“அப்பறம் என்னாகும் முன்னால போய் மூஞ்சிய பாத்தேன். அது நீங்க இல்லைன்னு தெரிஞ்சதும் பின்னால திரும்பி வந்த வழியே வந்துட்டேன்” என்று சொல்ல, கலகலவென சிரித்த நாயகி,

 

“சரி வாங்க போலாம்” என, தலையசைத்த இரு பேத்திகளும் அவரோடு செல்கையில், அரசியின் கையில் எதோ தட்டியதுபோல் இருக்க கையைப் பார்த்தாள்.

 

களிமண்ணால் செய்யபட்டு வண்ணங்கள் பூசிய பசுமாட்டின் சிலை ஒன்று அவளை நோக்கி நீட்டப்பட்டிருந்தது.

 

நிமிர்ந்து பார்க்க, அதை நீட்டிவிட்டு வேறெங்கோ பார்த்திருந்தான் விக்ரம பாண்டியன்.

 

[the_ad id=”6605″]

 

 

லேசாய் புன்னகைத்தவள் அதை வாங்கிகொண்டு அதே போல் அவன் கையைத் தட்டினாள். அவன் அவளைப் பார்க்க, அவள் வேறெங்கோ பார்த்திருந்தாள்.

 

அதே களிமண்ணால் செய்யப்பட்டு வண்ணங்கள் பூசப்பட்ட காளையின் சிலை ஒன்று அவனை நோக்கி நீட்டப்பட்டிருந்தது.

 

அதரங்களில் அரும்பிய மென்னகையுடன் அதை பெற்றுக்கொண்டு சென்றான் விக்ரம பாண்டியன்.

 

செல்லும் அவனையே பார்த்திருந்த வேங்கையரசி, தன் கையில் இருந்த சிலையை பத்திரப்படுத்தி பொக்கிசமாய் பாதுகாத்துக் கொண்டாள்.

 

மஞ்சள் விளக்குகளில் ஒளியில் தமிழின் கையிலுள்ள வளையல் மின்ன அதை கவனித்த நாயகி,

 

“ஏது தமிழ் இந்த வளையல்?” என்று கேட்கவும், அரசியும் அதை கவனித்து தன் அக்காவைப்  பார்த்தாள்.              

        

இருவரும் அவளது பதிலுக்காக காத்திருக்க, திருதிருத்தாள் அருந்தமிழ் தேவி. 

 

 

 

வாசம் வீசும்..!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!