Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 14 (2)

ஒருவழியாக வீடு வந்து சேரும்போது இருள் பரவ தொடங்கியிருந்தது. கேட்டில் இருந்து  நீண்ட பேவ்மெண்டும் சில ஏக்கர்களில் தோட்டமும் சூழ்ந்திருக்க  நடுவே கால்னியல் அமைப்பில் தனித்து கம்பீரமாய் நின்றது ரெமிஜியஸின் இல்லம்..!!

இவர்கள் வந்ததும் வேலையாள் ஒருவர் வந்து கதவை திறந்துவிட முன்னால் சென்ற ரெமியஜியஸ் அவரிடம் ஏதோ கூறிவிட்டு,

“சாரி.. வீட்டில் இருந்து வரவேற்க யாருமில்ல..” என்று சிரித்து,

 “வெல்கம் ஹோம்.. வா ம்மா..” என்று இன்முகமாய் கூறினார்.



Advertisement

அவர் சாதாரணமாய் சொன்னது அவனுக்கு என்னவோ போல் ஆனது. ரெமிஜியஸிற்கு ஒரே மகள் தேவிப்ரியா தான்.

தேவிப்ரியா திருமணம் முடித்த சில நாட்களிலே ரெமியின் மனைவி நோய் வாய்ப்பட்டு இறந்துவிட அப்பொழுதில் இருந்தே அவர் தனிக்காட்டு ராஜா தான்.

ஜோஷ்வா தன் பதினொராம் வயதில் பிடிவாதமாய் வந்து தங்கியபின் அவனும் அவரும் மட்டுமே..!! 

Advertisement

தாத்தா – பேரன் என்பதை தாண்டி அவனுக்கு ஒரு நண்பர் போல் சரிசமமாய் நிற்பதிலும் நல்லவை பலவற்றை கற்று கொண்டதிலும் அவனின் வழிக்காட்டி  எல்லாம் ரெமிஜியஸ் தான்.. பழைய நினைவுகள் அவனில் அலைமோத,

Advertisement

“நம்ம வாழ்க்கையோட ஓட்டத்தில் இந்த மனிதரை அலட்சியப்படுத்தி விட்டோமே..” என்று உண்மையிலே வருந்த,

“ஜோஷ்.. ஏன் அங்கேயே நிற்கிற.. வாடா..”

என்று அவர் அழைக்கவும் தான் சுதாரித்து உள்ளே நுழைந்தான்.

Advertisement

வீடு வெளியே பழையபடியே இருந்தாலும் உள்ளே நிறைய மாற்றி அமைத்துள்ளார் என்பதனை பார்வையிட்டபடி,

“என்ன தாத்தா வீட்டையே மாத்திட்டீங்க.. என் ரூம் இருக்கா..? இல்ல மாத்தியாச்சா..”

இலகுவாய் கேட்க அதற்கு அவர் முகத்தில் அத்தனை சிரிப்பு..!!

“நீ எப்படியும் ஒரு நாள் வருவேணும் தெரியும்.. இப்படி கேட்பேணும் தெரியும்.. எதையும் மாத்தல.. நீ வேணா போய் பாரேன்..”

என்று சொல்லவும் அதரங்கள் புன்னகையில் விரிய நடையில் சிறு துள்ளலோடு தன் அறை நோக்கி ஓடினான்.

“அவன் திங்க்ஸோடு ரொம்ப அப்ஸஸ்டா இருப்பான் ஜென்சி.. எதேதோ பண்ணி வைச்சு இருப்பான். என்ன பண்றானே புரியாது.. நாம தொட்டாலே உடைஞ்சிடும்னு மாதிரி பிகு பண்ணுவான்… அந்த பழக்கமா தான்.. இப்பவரை யாரையும் தொடவிட மாட்டேன்..”

பழைய நினைவோடு புன்னகையாய் அவர் சொல்ல, 

“இப்பவும் ஜோஷ்வா பண்றது யாருக்கும் புரிய மாட்டேங்குது தாத்தா..” என்றாள் கேலியாய்..

அதற்குள் வேலை செய்யும் பெண்மணி குளிர்பானம் எடுத்து வந்து கொடுத்து ஜென்சியிடம் அறிமுகமாய் சிரிக்க,

“இவங்க தான் ராஜம்மா.. இங்க சமையல் செய்றவங்க.. உனக்கு எது தேவைனாலும் தயங்காமல் கேளு..”

என்று சொல்ல தலையசைத்தவள் ஜூஸை எடுத்துக் கொண்டு அவரிடம் பதிலுக்கு புன்னகைத்தாள்.

ஜூஸ் அருந்தியதும் அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த அறையை காட்ட ரெஃப்ரஸாகி வந்தவள் தன் அன்னையிடம் போனில் பேசி வைத்ததும் பயண களைப்பில் தூக்கம் கண்ணை கட்ட கட்டிலில் படுத்து நிமிடத்தில் உறங்கி போனாள்.

மீண்டும் கண்விழித்தபோது இரவு ஒன்பதை நெருங்கி இருக்க,

‘இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே..’ 

தலையை கோதி எழுந்தமர்ந்தாள். வேலை தொடர்பாய் வெளியூர்கள் செல்ல நேர்ந்திருந்தாலும் பிறர் வீட்டில் தங்கியது கிடையாது. எனவே பழக்கமில்லாத ஒருவர் வீட்டில் வந்து தங்கியிருப்பது சங்கடமாய் இருக்க சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தவள் பின் முகம் கழுவி தன் கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியே வர ஹாலில் புத்தகம் படித்தபடி சோஃபாவில் அமர்ந்திருந்தார் ரெமிஜியஸ்.

“விழிச்சாச்சா..?? வா ம்மா..சாப்பிடலாம்..” 

என்று பரிவோடு அழைக்க தயக்கதோடே அவருடன் வந்தாள். அதை அவரும் உணர்ந்து,

“ஏன் ஒருமாதிரி இருக்க ஜென்சி.. இயல்பா இரு.. அக்வோர்டா ஃபீல் பண்ணாத.. உன்னோட தாத்தா வீட்டுக்கு தான் வந்திருக்க..”

என்றவர் முகத்தின் ஒவ்வொரு தசையும் புன்னகைத்தது.

‘இந்த என்றென்றும் புன்னகை சிரிப்பு இவருட்ட இருந்து தான் ஜோஷ் கத்துகிட்டு இருந்திருக்கணும்..’ அவள் மனம் கருத்து சொன்னது.

டைனிங் டேபிளில் ராஜம்மா உணவு பாத்திரங்களை கொண்டுவந்து வைக்க அவளுக்கும் தனக்கும் பரிமாறி பேசி கொண்டே உண்ண அதில் சற்று இயல்பானாள்.

“ஜோஷ்வா சாப்பிடலையா தாத்தா..”

சுற்றி அவன் தென்படுகிறானா என்று பார்த்துக் கொண்டே கேட்க,

“அவன் அப்போவே சாப்பிட்டு போயிட்டான் ம்மா…”

என்றதும், ‘ஓஹோ..’ என்று தலையசைத்தாள். இப்பவரை அவன் தன்னிடம் பேசவில்லை என்பது நியாபகம் வர  தன் முகமாறுதலை ரெமி கவனிப்பதை உணர்ந்து,

“இன்னும் மூணு நாள்ல ஃபங்ஷன்ல தாத்தா… ஸோ.. என்னலாம் ப்ளான்.. நான் எதாவது ஹெல்ப் பண்ணலாமா..?” என்று பேச்சை மாற்றினாள்.

“ஆல்மோஸ்ட் எல்லாமே முடிச்சாச்சுடா.. ரெண்டு நாள் நடைபெற இருக்கு… சைன்ஸ் & ட்ராயிங் எக்ஸிபிஷன், கம்பெடிஷன்ஸ் போன்ற ப்ரோக்ரெம் எல்லாம் முதல் நாள் முடிஞ்சது மறு நாள் மத்த ஃபங்ஷன்.. ஸ்டாஃப்ஸூம் சரி ஸ்டூடென்ஸூம் சரி நிறையவே ப்ரோக்ரெம்ஸூம் எஃபோர்ட்டும் போட்டு இருக்காங்க.. அவங்க நினைச்ச மாதிரி சிறப்பா நடக்கணும்..”

உற்சாகமாய் அவர் சொல்ல, “ஸ்டூடென்ஸை விட நீங்க ரொம்ப எக்ஸைட்டா இருக்கீங்கள்ல தாத்தா..” என சிரித்தாள் ஜென்சி.

“உண்மை தான்… இந்த ஸ்கூல் என் மனைவி நியாபகமா ஆரம்பிச்சது.. யங் ஏஜ்ல நிறைய பிஸ்னெஸ் பண்ணேன்.. கால் பதிக்காத இடமே இருக்க கூடாதுனு அத்தனை வெறி… பட் ப்ரியா கல்யாணம் ஆகி போனது,

அப்புறம் மேரி இறந்தது எல்லாம் யாருக்காக நாம ஓடுறோனு என்னை தடுமாற வைச்சுது.. எனக்காக இந்த உலகத்தில் தேட வேண்டிய செல்வத்தை எல்லாம் பார்த்தாச்சு.. ஸோ மேல மேல அள்ளி கொட்டிக்க எனக்கு நாட்டம் இல்ல.. அதுக்கு அப்புறம் ஆரம்பிச்சது தான் இந்த ஸ்கூல்..!! 

அதை பிஸ்னெஸாக எடுக்காமல் ஒரு ஆத்ம திருப்திகாக ஆரம்பிச்சது.. அதனால ரேங் ஹோல்டர்ஸையும் மார்க் மிஷினையும் உருவாக்கும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை… தரமான கல்வி எளிமையா கிடைக்கணும் அதை மட்டும் நோக்கமா வைச்சு தொடங்கினேன்.. இருந்தாலும் எந்த அளவுக்கு சாத்தியபடும்னு என்னுள்ள ஒரு தயக்கம் இருக்கும்.. அதெல்லாம் தாண்டி இன்னைக்கு ஓரளவு வெற்றி பாதை அடைஞ்சு இப்ப இருபத்தி அஞ்சாவது வருஷம்.. அதனால ரொம்ப ஸ்பெஷல் தான் ஜென்சி..”

சுருக்கமாய் கூறினாலும் பள்ளி படிப்பையும் மீறி பல ஆயிர பிள்ளைகளின் மேற்படிப்பு கனவுகளை நினைவாக்கி தந்தவர் என ஜோசஃப் வழி அறிந்த ஜென்சிக்கும் அவர்மீது மிகுந்த மரியாதை இருந்தது.

பேசி கொண்டே சாப்பிட்டு முடித்ததும் இரவு வணக்கம் கூறி தன் அறைக்கு வந்தவளுக்கு மீண்டும் தூக்கம் வரவில்லை.சிறிது நேரம் அலுவலக வேலையில் மூழ்கியவள் உட்கார்ந்தே இருந்ததால் உடல் வலிக்கவும் எழுந்து சோம்பல் முறிந்தபடி அறையை சுற்றி பார்த்தாள்.

 நல்ல விஸ்தாரமான அவள் அறையில் மறுபுறம் இருந்த கதவு தோட்டத்திற்கு செல்லும் வழி என்று புரிய இப்போதைக்கு தூக்கம் வரபோவது இல்லை என்று அறிந்து அக்கதவை திறந்து வெளியே வந்தாள்.

குளிர் காற்று ஊசியாய் அவள் உடலை குத்த தான் அணிந்திருந்த ஓவர்கோட்டை மேலும் இறுக்கி பிடித்து கொண்டு புல் தரையில் நடக்க செப்பலையும் தாண்டி காலில் பனி ஏறியதை அவள் லட்சியம் செய்யவில்லை.

ஏகாந்த இரவின் அசாத்திய அமைதியும் தொலைவில் தெரியும் மலை முகடுகள் ஆங்காங்க பெட்டி போல் தொரிந்த வீடுகளின் அழகும் அவள் இரசிக்கும் வண்ணம் இருக்க,

‘எனி டைம் பிஸினு சுத்திட்டு இருந்த நீ கூட நின்னு நிதானமா இயற்கையை அனுபவிக்கிறியே.. பரவாயில்லை.. முழுசா கம்ப்யூட்டரைஸ் ஆகாமல் இரசனை காண ஹார்மோன்ஸ் எல்லாம் உன்னிடமும் இருக்கு தான்..’

என்று அவள் மனமே அவளை கிண்டலடித்தது.

“தூங்கலையா நீ..”

அந்த அமைதியை குலைத்து திடீரென பக்கத்தில் கேட்ட குரலில் திடுக்கிட்டு அவள் திரும்ப  ட்ரேக் ஷூட்டில் அவளையே பார்த்தபடி ஜோஷ்வா நின்றிருந்தான்.

“நீ தானா..” என்று மூச்சை இழுத்துவிட்டு,

“வந்ததும் தூங்கிட்டேன்.. அதனால இப்ப தூக்கம் வரல..” என்றாள்.

 “அதுக்கு ஏன் இங்க நிற்கிற.. எவ்வளவு பனி பேயுது பார்.. உள்ள வா..”

“இல்ல.. பரவாயில்லை.. தாங்க முடியலனா நானே உள்ள போயிடுவேன்..”

அதற்கும் மேல் அவன் ஒன்னும் சொல்லவில்லை. ஆனால் தானும் செல்லாமல் அவள் அருகிலே அமைதியாய் நின்றான். சில நொடிகள் மௌனமாய் கரைய,

“நீ பேசவே போறது இல்லைனு நினைச்சேன்..”

என்று ஜென்சி தான் கேட்டாள். அதில் கேலி இழையோடி இருக்க அதனை புரிந்து,

“அப்போவாச்சும் எதாவது விளக்கமோ காரணமோ சொல்வேன்னு நினைச்சேன்.. ம்ஹூம்.. அழுத்தக்காரி..”

பல்லை கடித்து சொன்னவனிடம் கடுமை இல்லை. ஜென்சிக்கு சிரிப்பு எட்டி பார்க்க அதை காணாமல் கண்டவனிடமும் புன்னகையின் சாயல்..!!

முதன்முறையாய் கோபங்கள் எரிச்சல்கள் இன்றி இயல்பாய் ஒரு பேச்சு வார்த்தை அவர்களிடையில்..! அது அந்த பனி விழும் இரவை இன்னும் இரம்மியம் ஆகியதோ.. அங்கிருந்த செடிகளும் மரங்களும் அதில் உறங்கும் பறவைகளுமே அதற்கு சாட்சி…!!

“நான் ஒன்னு கேட்பேன்.. உண்மையை தான் சொல்லனும் ஜென்சி..”

என்று அவன் பீடிகை போட அவளோ,

“நான் ஏர்போர்ட்டில் சொன்னதே உண்மை தான் ஜோஷ்… எத்தனை தடவை கேட்டாலும் அதே தான் சொல்லுவேன்..” 

என்ன கேட்பான் என்று அறிந்து உறுதியாய் சொல்ல, “சரி..நம்புறேன்..” என்றான் ஒருவழியாய்..

“அன்னைக்கு அக்‌ஷிடெண்ட் பண்ணாங்களே.. அவங்களால மறுபடியும்.. மறுபடியும்… எதுவும் தொல்லை இல்லைலல..”

வெகு நாளாய் அவள் மனதில் உறுத்திய விஷயத்தை சிறு தயக்கத்தோடு கேட்டாள்.

“இதுவரை இல்ல.. அக்சுவலீ அவங்களுக்கு கிடைத்தது ஒரே வாய்ப்பு தான்.. அதில் என்னை போட்டு தள்ளி இருந்தால் உண்டு.. தே மிஸ்ட் த சான்ஸ்.. இப்ப அவங்க தான் என்னை கொல்ல ட்ரை பண்ணாங்கனு நிரூபனம் ஆகிடுச்சு.. இனி என்ன நடந்தாலும் அவங்க தான் மாட்டுவாங்கன்னு நல்லா தெரியும்.. ஆனால் வேறு பக்கத்தில் இருந்து வரலாம்… நமக்கு தான் ஊரெல்லாம் பங்காளி இருக்கானுவளே…”

விளையாட்டாய் சொன்னவனை கண்டு, ‘எவ்வளவு சாதாரணமா சொல்றான் பார்..’ என்று முறைக்க, 

“ச்சில் ஜென்சி.. ஒரு விஷயம் செய்ய நினைச்சால் அத்தோட கான்ஷிக்வென்ஸையும் எதிர் கொண்டு தான் ஆகணும்..” 

கண்சிமிட்டி சொல்ல ‘திருத்த முடியாது..’ என்ற விதமாய் தலையசைத்து கொண்டாள் ஜென்சி.

இப்பேச்சை மேலும் தொடர விரும்பாத ஜோஷ்வா,

“சரி.. கோவை எப்போ போற..? என்ன வேலைனு நான் தெரிஞ்சுகலாமா..”

என்று கேட்க அவன் பேச்சை மாற்றியது புரிந்து அவளும் அதை விட்டுவிட்டாள்.

“அவரிடம் நாளைக்கு வரதா சொல்லியிருக்கேன்..” என்றவள்,

“நான் என்னோட ஜாப்பை விட்டுடலாம்னு இருக்கேன் ஜோஷ்வா.. சொந்தமா கம்பெனி வைக்க சரியான நேரம் இது தான்னு தோணுது.. அதற்கான வேலைகள் தொடங்கி சில வாரங்கள் ஆகிடுச்சு.. இங்க வந்ததும் அதற்கு தான்..எனக்கு சீனியர்.. மிஸ்டர் பார்த்திபன்… என்னோட கம்பெனி பார்ட்னரா இருக்க அவரை அப்ரோச் பண்ணலாம்னு..”

என்றதில் ‘இங்கு வந்ததும் அதற்கு தான்..’ என்ற வரி மட்டும் பாதி தான் உண்மை.

“ஹோ.. மும்பைலையே யாரும் இல்லையா என்ன..?? ஏன் இவ்வளவு தூரம் வந்து இவரை அப்ரோச் பண்ணனுமா..?”

“மும்பைல நிறைய பேர் கிடைப்பாங்க தான்.. ஆனால் எனக்கு அவ்வளவா யாரோடையும் வேவ்லெந்த் கனெக்ட் ஆகாது.. எனக்கு டர்மஸ் சிலரோட தான் செட் ஆகும்.. அதனால் புதுசா யாரையும் நம்ப தயாரா இல்ல.. அண்ட் பார்த்திபன் ரொம்ப திறமைசாலி.. நான் ஜாயின் பண்ணபோது என்னை ட்ரயின் பண்ணவர்.. அவரோட டேலெண்டை என் கம்பெனி யுடிலைஸ் பண்ணாமல் விட்டுடாங்க.. இப்ப இங்க ஒரு ஐடி பார்க்ல வொர்க் பண்றாங்க..

என் கம்பெனி தான் என் ட்ரீம் ஜோஷ்வா.. ஸோ புதுசா ஆரம்பிக்கும்போது டெலெண்ட் அண்ட் வெல் எக்ஸ்பிரியன்ஸ்ட் ஒருத்தர் கூட இருப்பது எனக்கும் பெனிஃபிட்.. என்னால அவங்களுக்கும் பெனிஃபிட்..” என்று தன் எண்ணங்களை தெளிவாய் பேசவும் அன்று தாமஸிடம் அவனை கலட்டி விடுவதற்காக இல்லை.

நிஜமாகவே தன் லட்சியம் குறித்து அவள் மனதில் இருந்து தான் கூறியிருக்கிறாள் என்பது புரிய சிரிப்போடு,

“க்ரேட் ஜென்சி.. ஆல் த பெஸ்ட்…” என்றான்.

“தேங்க்ஸ்… சரி நான் உள்ள போறேன்.. குட் நைட்..” என்று திரும்பி சில அடிகள் எடுத்து வைத்திருப்பாள்.

“ஜென்சி நானும் உன் கூட வரலாமா..”

என்று அவன் கேள்வியில் அவள் மறுத்து ஏதோ கூற வர, “ஹே..ப்ளீஸ்..” என்று கண்களை சுருக்கி அவன் கேட்ட பாவனையில் அவள் தலை தன்னைபோல் அசைத்து ஒப்புக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!