Skip to content
Post Views: 2,705
*13*
இடம் போதாது என்று முகிலன் பக்க நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் இரவு வள்ளி வீட்டிலும் கந்தசாமியின் தம்பிகள் வீட்டிலும் பிரிந்து தங்கிவிட்டனர். ஆள் வைத்து வீட்டிலேயே சமைக்க ஏற்பாடாகியிருக்க யாருக்கும் தொந்தரவு இல்லாமல் போனது. காலில் சலங்கை கட்டாத குறையாக மாரியம்மாள் வேலையாட்களை ஏவிக்கொண்டிருந்தார். காலை விடிந்ததும் அவரவர் கிளம்பி சிற்றுண்டிக்கு முகிலன் வீட்டிற்கு வருவதாய் திட்டம். வெளியே போட்டிருந்த பந்தலில் உணவு பரிமாற வேலை நடந்துகொண்டு இருந்தது. ஊரில் பாதி பேர் உறவினர்கள் என்பதால் அதில் முக்கியமானவர்களுக்கு மட்டும் இங்கேயே உணவு தயாரானது.
பொதுவான கழிப்பறை குளியலறை என்பதை முதல் நாளே கண்டுகொண்டதால் இரவு அலாரம் வைத்து காலை நேரமே எழுந்து குளித்துவிட்டாள் குழலி. கொல்லையில் நின்று புடவை கட்ட சிரமமாக இருக்குமென்று அவள் இரவுடை அணிந்து வர, மருமகளை பார்த்துவிட்ட மாரியம்மாள் முகத்தினில் அதிருப்தி.
“ஊருபட்ட வியாக்கியானம் பேசுறவளுக்கு இன்னைக்கு புடவை கட்டணும்னு தெரியாதாக்கும்… இதுக்குத்தான் முறை தெரிஞ்ச பொண்ணை கட்டணும்னு சொல்றது. என் பேச்சை யார் கேட்டா.” என்று வேண்டுமென்றே முணுமுணுப்புடன் அவளை கடந்து சென்றார்.
Advertisement
மாமியாரின் பேச்சில் சுணக்கம் கொண்டவளாக அவரை திரும்பிப்பார்த்தாள். முணுமுணுப்புடன் காபி போட்ட பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார்.
தயக்கத்துடன் அவரிடம் சென்றவள், “நான் பண்றேன் அத்தை.”
“எதுக்கு? கல்யாணம் ஆன மக்கா நாளே மருமவளை வேலை ஏவிட்டேன்னு எல்லாம் என்னைய ஏசவா? நீ முதல்ல புடவையை கட்டு.”
Advertisement
“அங்க பாத்ரூம்ல கட்ட சிரமமா இருக்கும்னு இதை போட்டுட்டு வந்தேன். ரூமுக்கு போய் மாத்திடுவேன் அத்தை.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவளுக்கு லேசாக பயம் வந்தது. மாமியாருக்கு தன்னை பிடிக்கவில்லையோ, முன்னரே அவரிடம் பேசி நல்லிணக்கம் உருவாக்கி இருக்க வேண்டுமோ என்ற வருத்தம் மேலிட அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
Advertisement
“இந்தா என்னத்துக்கு இப்படி என் மூஞ்சை பாத்துட்டு நிக்குற? இன்னும் செத்த நேரத்துல எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க. சாப்பிட்டு முடிச்சி கோவிலுக்கு போய்ட்டு வந்து மதிய விருந்து ஆரம்பிக்கணும். இப்படியே நின்னு எல்லார் வாய்க்கும் அவல் கொடுக்காத.” என்று அதட்டல் போல சொல்லவும் உள்ளே சென்றுவிட்டாள்.
அறையில் அவன் இன்னும் உறக்கத்தில் இருக்க, ஓரமாய் இருந்த தன் பெட்டியிலிருந்து எந்த புடவை கட்டுவது என்று ஆராய்ந்து ஒன்றை தேர்ந்தெடுத்தாள். அதற்கு தோதான எளிமையான அணிகலன்களை எடுத்தவள் பின் யோசித்து இன்னும் இரண்டு சங்கிலிகளை எடுத்துவைத்தாள். நேற்றே கழுத்து நிறைய என்ன போட்டிருக்கிறாள் என்று சிலர் ஆராய்ந்து கேள்வி கேட்டதன் பலன் இன்று வேலை செய்தது. முகிலனை ஒரு பார்வை பார்த்தாள் அவன் அசைவது போல் இல்லை.
‘எழறத்துக்குள்ள மாத்திடுவோம்.’ என்ற நினைப்புடன் அறைக்கதவை தாழிட்டு அவனுக்கு முதுகு காண்பித்து உடை மாற்ற, புடவை சுற்றும் சமயம் பின்னோடு வந்து ஒட்டிக்கொண்டான் முகிலன். அதிர்ந்து புடவையை நெஞ்சோடு பிடித்தவள் தன் தோளில் முகம் புதைத்திருப்பவனை காண முயல அவளை இன்னும் இறுக்கிப் பிடித்தான்.
Advertisement
“தூங்கிட்டுதான இருந்தீங்க.” அவள் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையை எல்லாம் எப்போதோ கடந்திருந்தான். அவள் கழுத்தில் ஆழப்புதைந்து சிறு சிறு முத்தங்கள் வைத்துக்கொண்டே முதுகு வரை ஊர்வலம் நிகழ்த்த, சிலிர்த்து நின்றது பெண்மை.
“ஏங்க குளிச்சிட்டேன்.” தந்தியடித்த அவள் வார்த்தைகள் அவனுக்கு கேட்டிருக்குமா என்பதே சந்தேகம். அவனுக்கு சற்றும் குறையாத மையலுடன் அவனை உணர்ந்து திளைத்துக்கொண்டிருந்தாள்.
நேரம் காலத்தை உணராமல் மனைவியை உணரும் நோக்கில் இடைஞ்சலாக இருந்த ஈரக்கொண்டையை அவிழ்த்து விட்டவன் இரு விரல் கொண்டு அவள் ரவிக்கை முடிச்சையும் உருவிவிட்டான். ஈரக்கூந்தல் அவள் முதுகை சில்லுப்பாக்க, அவனது சூடான முத்தம் அவள் ஆடை மறைக்கா தேகத்தில் அவசர அவசரமாய் தன் தடம் பதிக்க, கூச்சத்தில் அவன் மீதே சாய்ந்தாள். வாகாக தன் மீது விழுந்தவளை இன்னும் இன்னும் தன்னுடன் நெறுக்கிக்கொண்டவன் மனைவியின் பெண்மையை உணரும் சமயம் அறைக்கதவு தட்டப்பட்டது. திடுக்கிட்டு விலகியது அவள்தான்.
“மலர்.” மயக்கம் தீராது அவளை மீண்டும் தன்னிடம் இழுக்க, அவன் நெஞ்சில் முட்டி நின்றவள் தன்னுள் புதைந்தவன் முடியை கொத்தாக பற்றி நிமிர்த்தினாள்.
“என்னடி?” தடுக்கப்பட்ட கடுப்பில் அலுப்பாய் பார்த்தான் மனைவியை.
“கதவு தட்றாங்க. போய் பாருங்க.”
உச்சு கொட்டியவன் முகம் அப்பட்டமான எரிச்சல் காட்டியது.
“நான் போக முடியாது.” என்று அவள் தன் நிலையை சொல்ல, எரிச்சலில் பனிக்கொட்டியது போலாகியது. ஓரடி பின்னகர்ந்து மனைவியை ரசித்தான். நேர்த்தியாய் உள்நுழைந்தவள் இப்போது கலைந்து கிடந்தாள். அவளது ஈரக்கற்றைகள் கிடைக்குமிடத்தில் எல்லாம் ஒட்டிக்கொண்டு அவனை வா என்றது. உந்துதலில் மனைவியின் இடை பற்றியவன் தன்னை நோக்கி இழுக்க, அவன் நெஞ்சோடு மோதி நின்றாள்.
“ஏங்க?”
“ம்ம் நீதான் ஏங்க வைக்குற என்னை.” என்றான் போதையாய்.
காதலுடன் காமும் போட்டி போட்டுக்கொண்டு அவன் முகத்தினில் வழிய, அப்பார்வையே கூச்சம் கொடுத்தது பெண்ணவளுக்கு. அவன் செயலின் விளைவால் புதிதாய் தன்னுள் ஊறும் உணர்வுகளும் அவளை போட்டு படுத்த, பாய்ந்து அவன் கண்களை மூடியவள், “ச்சு இப்படி பாக்க கூடாது. அதுவும் வெளில யாரையோ காக்க வச்சிட்டு இப்படி… நோ நோ.” செல்லமாய் அவன் சிகை கலைத்தவள் அவனை தள்ளிவிட்டு புடவை எடுத்துக்கொண்டு அறையின் மூலைக்கு சென்றுவிட்டாள்.
“முகத்தை சரிபண்ணிட்டு கதவை திறங்க.” அப்படியே கதவை திறக்கப்போனவனை அவள் குரல் நிறுத்த, வெட்கச் சிரிப்புடன் தன்னை சீர்படுத்திக்கொண்டு கொஞ்சமாக கதவை திறந்தான். வெளியே அவன் பெரியத்தை தான் நின்றுகொண்டிருந்தார்.
“எழுந்து கிளம்புங்க ரெண்டு பேரும். சாப்பிட்டு கோவிலுக்கு போகணும். எல்லாரும் வந்துருவாங்க.” என்று அவர் சொல்ல தலையாட்டிக்கொண்டவன் கதவை சாற்றிவிட்டு மனைவியை பார்க்க, அவள் புடவை கட்டி முடித்திருந்தாள்.
‘வடை போச்சே.’ என்று பார்த்து வைக்க,
“என்ன பார்வை இது மிஸ்டர்.மலர்?” அவள் சீண்டலாய் பார்த்தாள்.
“இதெல்லாம் செல்லாது பாத்துக்கோ.” என்று சொல்லிக்கொண்டே அவளை நெருங்கினான்.
“நேத்திக்கு குப்புற படுத்து தூங்குனவங்களுக்கு இதுவே அதிகம்.”
“அடிங்க… காலைலேந்து ரெண்டு தடவை அழுதுட்டாளே நம்மாள தானோனு நான் கம்பியூஸ் ஆகி உன்னை விட்டா வாய் வாய்… பேச்சை பாரு.”
பேச்சினூடே அவள் இதழ்களை குவித்து துரித முத்தம் வைத்தான். உச்சி எடுத்து கிளிப் குத்தி விரித்துவிடப்பட்டிருந்த கூந்தலை விரலில் சுற்றி அவள் முகத்தினில் நுனிக்கொண்டு கோடிழுக்க, அவள் உடலில் எழுந்த அதிர்வலைகளை இனிமையாய் உள்வாங்கி இன்னும் இன்னும் அவளை அதிரச்செய்தான். இடை மறைக்க புடவையில் குத்தியிருந்த ஊக்கை மீறிக்கொண்டு அவளை தேடிச் சென்றது அவனது கரங்கள். தடுக்கத் தோன்றாமல் கணவனின் சேட்டையில் முகம் மலர அவனுக்கு இசைந்து நின்றவள் சில நொடிகளில் அவனை நகர்த்திவிட்டு வெளியேறினாள்.
வெளியே கந்தசாமியின் பங்காளிகள், மாரியம்மாள் வழி சொந்தங்கள் சிலர் என்று இருந்தனர். இவளை பார்த்ததும் இழுத்துப் பிடித்து அமர்த்தி சிலர் கேலி பேச, இவள் முகம் சிவந்தாள். சிலர் அவள் வேலை, குடும்பம் குறித்த விசாரணையில் இறங்க, நேர்க்காணலில் இருப்பது போல் உணர்ந்தாள். சிலர் இடக்காய் பேச, விரைப்பானாள். சற்று நேரத்திலேயே பலவிதமான ஆட்களை சந்தித்தது அயர்வாய் இருந்தது. எப்போதுடா இதிலிருந்து ஓய்வு கிடைக்கும் என்ற நிலைமைக்கு சென்றுவிட்டாள். கண்களால் கணவனைத் தேட வீட்டுனுள் இருக்கும் இடப்பற்றாக்குறையால் பெண்கள் கூட்டம் வரவும் எப்போதோ அவன் வெளியே சென்றிருந்தான்.
“பட்டணத்து பொண்ணுல்ல அதுதான் விசனப்படுது. செத்த மூச்சு விட்டுக்கட்டும் அது. நாம சாப்பிட்டு வருவோம்.” அவள் வயதொத்த பெண்ணொருத்தி அங்கிருந்த கூட்டத்தை கலைக்க நன்றியாய் பார்த்து வைத்தாள் குழலி.
“இங்க அப்படிதான் மனசுல எதையும் வச்சிக்காம சிலர் பேசிடுவாங்க, சிலர் மனசுக்குள்ள வச்சி செஞ்சிவிட்டுறுவாங்க.” என்று சொல்லிவிட்டு செல்ல, கொஞ்சம் கலவரமானது உண்மை.
இரண்டு தங்கைகள் திருமணத்திற்கு மறுநாள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் வீட்டினர் மட்டுமே இருந்தனர். அதனால் இவர்கள் கூட அங்கு சென்று தங்கி வந்தனர். இங்கோ பாதி ஊரே இன்னும் வீட்டு வாயிலில் இருப்பது போல் தோன்றியது. அதுவும் அளவாய் இருக்கும் சிறிய வீடு கச்சிதமாக தோன்றினாலும் சேர்ந்தாற்போல் நான்கு பேர் வந்தாலே போதாது என்பது போல் இருந்தது. நேற்று இருந்த அலைச்சலிலும் குடும்பத்தை பிரியும் வேதனையிலும் இருந்தவள் இதனை எல்லாம் கவனித்திருக்கவில்லை. இப்போதோ தன் குடும்பம் இரவு இங்கு தங்கியிருந்தால் சிரமம் தான் என்று நினைத்துக்கொண்டாள். தாங்கள் அறைக்குள் பேசுவது கூட வெளியே கேட்குமோ என்ற சந்தேகம் வேறு வர அமர்ந்தவாக்கிலேயே தங்கள் அறையைப் பார்த்தாள்.
“அங்க முகிலு சாப்பிடாம காத்துக்கிடக்கான் இங்க என்னத்தை வெறிச்சிட்டு இருக்க? சாப்பிடப்போ.” என்று மாரியம்மாள் வந்து சொல்லவும்தான் அவள் மட்டும் அங்கு தனித்திருப்பதே விளங்கியது. சட்டென்று எழுந்து வெளியே சென்றாள்.
“வா மா புதுப்பொண்ணே, வந்து மருமவன் பக்கத்துல உக்காரு.” என்று அவன் அத்தை கைகாண்பித்த திசையில் பார்க்க பந்தியில் அமர்ந்திருந்தான் முகிலன். அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தவள், “இன்னைக்கும் இவ்ளோ பேர் இருக்காங்க.”
“மதியம் விருந்து முடிச்சி எல்லாரும் கிளம்பிடுவாங்க.”
“எல்லாரும் நோண்டி நோண்டி க்வஸ்ட்டின் பண்றாங்க.” சிணுங்கலாக குறை படித்தாள்.
“நைட் என்னாச்சுன்னு கேட்டாங்களா?” என்று அவன் கேட்ட தொனியே அவனையும் அக்கேள்வி தொடர்ந்திருக்கிறது என்று புரிந்தது.
“உங்களையுமா?”
“எல்லா இடத்துலயும் இருக்குறது தான?” என்று அவன் இலகுவாக எடுத்துக்கொள்ள, அவளுக்குத்தான் அவர்கள் கேட்ட கேள்விகள் நினைவு வந்து முகம் சிவந்து போனது.
“நான் இப்படியெல்லாம் கேப்பாங்கனு நினைக்கவே இல்லை. அங்க ஊர்ல எல்லாம் பெர்ஸ்னலா எதுவும் கேட்டுக்க மாட்டாங்க.”
“இங்க அப்படித்தான். மிஞ்சிப்போனா இன்னும் ஒரு வாரம் இல்லை ஒரு மாசம் கேப்பாங்களா அப்புறம் கண்டுக்ககூட மாட்டாங்க.” என்று அவன் சொல்ல இவள் முகம் சுருங்கியது. ஒரு மாதத்திற்கு பின் விஷேஷம் எப்போது என்று கேட்கத் துவங்கிவிடுவார்களே அதன் பின் எங்கு கேலி பேச என்ற நினைப்பு தன்னால் வந்து போனது.
“சாப்பிடு மலர் என்ன யோசனை?” என்று அவள் கையில் லேசாக இடிக்கவும் சிந்தனைகளுக்கு முற்று கொடுத்து உணவில் கவனம் செலுத்தினாள்.
உணவு முடித்து சொந்தங்களை கட்டி இழுத்துக்கொண்டு கோவில் செல்லவே முற்பகல் ஆகிவிட்டது. அங்கேயே ஒரு ஓரமாக பொங்கல் வைக்க ஏதுவாக மூன்று கல் வைத்து அடுப்பு தயார் செய்து வைத்திருந்தார் கந்தசாமியின் தங்கை. ஆண்கள் ஒருபுறம் ஒதுங்கிவிட, பெண்கள் கோவிலுக்குள்ளும் பொங்கல் வைக்கும் இடத்திற்கும் என்று பிரிந்து சென்றனர்.
“மொத முறை கோவில்ல பொங்கல் விடுறது விஷேஷம். அடுத்த முறையெல்லாம் வீட்ல கூட செஞ்சி எடுத்துட்டு வந்துடலாம்.” என்று சொல்ல கேட்டுக்கொண்டவள் கலக்கமாக நின்றாள்.
கவனித்த மாரியம்மாள் அடுப்பு பற்றவைக்க ஏதுவாக விறகுகளை அடுக்கி தீப்பெட்டியை அவளிடம் நீட்டினார். அப்படியும் அவள் தடுமாற, “முன்னபின்ன இதெல்லாம் பாத்திருக்கியா இல்லையா?” என்று அதட்டல் போல் கேட்டவர் எப்படி செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுத்தார். சொதப்பாமல் செய்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவள் அவரின் பேச்சுக்களை மனதில் ஏற்றிக்கொள்ளவில்லை என்றாலும் ஒன்றிரண்டு முறை காற்றில் அணையப் பார்த்த தீயை மீண்டும் சரி செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. மனம் கணவனின் உதவியை நாட, அவன் கண்ணிலேயே படவில்லை. பொங்கல் இறக்கி வைத்து சுவாமி சந்நிதியில் நிற்கும் போதுதான் வந்தான். பூஜை முடித்து இவர்கள் பிரகாரம் சுற்றும் சமயம் சற்று தனிமை கிடைக்க,
“எங்க போனீங்க? எனக்கு இதெல்லாம் பழக்கமே இல்லை. அத்தை வேற டென்சன் ஆகிட்டாங்க.”
“அம்மா, அத்தையெல்லாம் உன்கூடதான இருந்தாங்க. அதான் நான் வெளில பேசிட்டு நின்னுட்டேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சா?” என்று கேட்டவனிடம் தன் கையை காண்பித்தாள். மணிக்கட்டில் கடுகளவில் கொப்பளித்து சிவந்திருந்தது.
“மலர்?” அவன் அதிர்ந்து பார்க்க,
“பொங்கல் கொதிக்கும் போது கையில தெரிச்சிடுச்சு. உங்க அத்தை தான் பக்கத்துல இருந்தாங்க சரியாகிடும்னு சொன்னாங்க. ஆனா ரொம்ப எரிஞ்சிச்சு.” என்றவள் முகமே அப்போது சுட்டக்கொண்டது போல் வேதனையை பிரதிபலித்தது.
“தண்ணியில கை காமிச்சியா?” என்று கேட்டுக்கொண்டே அவள் கையை தன் முகத்திற்கு நேரே உயர்த்தியவன் இதழ்குவித்து ஊதிவிட்டு, கொப்புளத்தை சுற்றி லேசாக தேய்த்துவிட, “சரியாகிடுச்சு.” என்று மலர்ச்சியாக கண்சிமிட்டினாள் மலர்.
“வளையல் நிறைய போட்டிருக்கியே புண்ணுல பட்டுற போகுது. கழட்டி வச்சிடுறியா?” என்று கேட்டவன் விரல்கள் அவள் கையிலிருந்த வளையல்களை நகர்த்திப் பிடித்தது.
அவனின் அக்கறை இனிக்க, உள்ளத்து நிறைவோடு அதனை அனுபவித்தவள், “அதெல்லாம் வேண்டாம். சின்னதுதானே சரியாகிடும்.”
“கவனமா இருக்கணும் மலர்.” என்று சொல்லி அவள் மணிக்கட்டிலேயே லேசாக முத்தம் வைத்தான். பதறியவளாய் கையை உருவிக்கொண்டாள் குழலி, “கோவில்ல வச்சி என்ன பண்றீங்க?” என்று அவனிடமிருந்து நகர்ந்தவள்,
“காலைலேந்து ஆளே சரியில்லை. பேசாம வாங்க.” என்று அவன் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள். சிரிப்புடன் அவள் இழுப்புக்கு சென்றவன் எதிரே சற்று ஓரமாய் நிழலில் ஒதுங்கி நின்று தங்களையே பார்த்துக்கொண்டிருந்த வள்ளியைக் கண்டு ஆணி அடித்தது போல் நின்றுவிட்டான்.
சட்டென்று அவன் நிற்கவும் திரும்பிப் பார்த்தாள் குழலி. தன் கையை அவளிடமிருந்து உருவிக்கொண்டவன், “நீ போ. நான் வரேன்.”
“இல்லை ஒண்ணா சுத்தி வர சொன்னாங்களே.”
“ஒரு சுத்து சுத்தி வந்துட்டோம் பாரு. போதும் நீ போய் கொஞ்சம் உக்காரு.”
“தனியாவா?” என்று தயங்கினாள் அவள்.
பெருமூச்செடுத்தவன் அவளுடன் சென்றான். தனியே அனைத்தையும் சமாளித்து வளந்தவளுக்கு அவ்விடத்தில் தனியாய் இருக்க யோசனை. கொண்டவன் உடனிருந்தால் அச்சூழலை எளிதாக கடக்க முடியும் போல் தோன்ற அவளுக்கே தன்னைக் குறித்து ஆச்சர்யம். இதற்கெல்லாமா அவனது அருகாமை தனக்கு தேவைப்படுகிறது, அத்தனை ஒன்றிவிட்டோமோ அவனிடம் என்ற வியப்பு. அன்பின் புறம் மனம் சாய்வது தானே நியதி.
அவளை ஓரிடத்தில் அமர்த்தி தானும் அமர்ந்துகொள்ள, பெண்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. இவன் மெதுவாக நகர்ந்து மீண்டும் பிரகாரம் வர, அதே இடத்தில் இருந்தாள் வள்ளி.
“ஏன் தனியா நிக்குற?” என்று அவன் கேட்கவும் கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு.
“சந்தோஷமா இருக்க அத்தான். அம்மா சொல்லுச்சு அத்தைக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு. ஆனாலும் இவங்க தான் வேணும்னு நீ கட்டியிருக்க. அன்னைக்கு இதை செய்யாம ஏன் என்னை விட்ட?”
பதறிப்போனவனாய், “என்ன பேசுற நீ? நீயும் அவளும் ஒன்னு கிடையாது. முயற்சி பண்ணோம் ரெண்டு வீட்லையும் ஒத்துவரலை. அதோட முடிஞ்சிச்சு அது.”
“நீ ஈஸியா என்னை மறந்துட்ட ஆனா என்னால முடியல. கஷ்டமா இருக்கு.” என்று சொல்லிச் சென்றவளை அதிர்வுடன் பார்த்தான்.
‘இன்னும் மறக்கமுடிலையா? அப்போ அவ புருஷன் கூட சந்தோசமா இல்லையா அவ?’ மொத்த மகிழ்வும் வடிந்தது போலானது.
எப்போதாவது அவள் நினைவு வரும் நேரம் சோர்வுற்றாலும் தன்னை எளிதாக தேற்றிக்கொண்டு மனைவியின்பால் மனதை செலுத்திவிட்டான். இவளானால் இன்னும் இப்படி சொல்கிறாளே என்று கவலையானான். இது வெளியே தெரிந்தால் அனைவரின் நிம்மதியும் குலையும் அபாயம் உள்ளதை உணர்ந்து பதட்டம் கொள்ள, இதனை யாரிடம் சொல்லி எப்படி சரி செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அதே யோசனையுடன் அவன் சுற்றிக்கொண்டிருக்க குழலி கூட கேட்டுவிட்டாள் என்ன யோசனை என்று. இத்தனை நாள் சொல்லாது இப்படி திருமணமான இரண்டாம் நாளே அவனின் கடந்த காலத்தை சொல்வது அபத்தமாய் தோன்ற மறைத்துவிட்டான். மதிய விருந்து முடித்து ஒவ்வொருவராய் சொல்லிக்கொண்டு கிளம்ப மாலையாகிவிட்டது.
“விளக்கு வைக்குற நேரம் ஆச்சு. வீட்டுக்கு வந்த புது மருமவ எனக்கென்னன்னு இருக்கா. ஒன்னும் நல்லாயில்லை சொல்லிட்டேன்.” கொல்லைப்புறத்தில் மாரியின் குரல் கேட்க,
“நம்ம பழக்கம் அதுக்கு என்ன தெரியும். நீதான் சொல்லிக் கொடுக்கணும்.” என்று கந்தசாமி சொல்லிக்கொண்டிருந்தார்.
“பொழுது சாய்ஞ்சா விளக்கு வைக்கணும்னு பொம்பளை புள்ளைக்கு தெரியவேணாம். இதெல்லாமா சொல்லிக்கொடுப்பாங்க? நல்லா பாத்து கூட்டிட்டு வந்திருக்கீங்க மருமவளை.”
கூடத்தில் இருந்த குழலி காதிலும் இது விழ, எழுந்து சென்று அடுப்பங்கரையில் இருக்கும் சாமி மாடத்தை பார்த்தாள். விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. அனைவரும் கிளம்பும் போதே ஆசீர்வாதம் வாங்கும் சமயம் விளக்கு எரிய வேண்டும் என்று அவளை தான் விளக்கு ஏற்ற சொல்லியிருந்தனர். அதுஅப்படியே எரிந்துகொண்டிருக்க, எண்ணெய் மட்டும் ஊற்றினாள்.
‘விளக்கு தான் எரியுதே வேற எதை சொல்றாங்க?’ என்று நினைத்துக்கொண்டே மாரியிடம் சென்றாள்.
“வேற எதுவும் வேலை இருக்கா அத்தை?” இவள் பணிந்து போகவும் முகம் திருப்பினார் மாரி.
“சாயங்காலம் திண்ணை மாடத்துல விளக்கு ஏத்துற பழக்கம் இருக்கு. அங்க ஏத்தி வச்சிடுமா.” என்று கந்தசாமி தான் பதில் கொடுத்தார்.
“எங்க வீட்ல வெளில எல்லாம் ஏத்த மாட்டோம் மாமா. அதான் தெரியல.” என்று பதில் கொடுத்துவிட்டே திண்ணைக்கு சென்றாள்.
அங்கிருந்த விளக்கை சுத்தம் செய்து ஏற்றிவிட்டு கணவனை தேடினாள். அறையில் அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தான். அவன் தோள் தொட்டவள், “எங்கேயாவது வெளில போலாமாங்க?”
அவள் கைபிடித்து அருகில் அமர்த்திக்கொண்டவன், “நாளைக்கு ரிஜெஸ்டர் ஆபீஸ் போணுமே அதுக்கான ஐடி எல்லாம் எடுத்து வச்சிக்கோ. ஊருக்கு பேக் பண்ணிட்டியா?”
“எல்லாம் பேக்ல தான் இருக்கு. உங்க டிரெஸ் தான் பேக் பண்ணனும்.” என்று பதில் கொடுத்தாலும் அவள் கண்கள் அவனை ஆராய்ச்சியாய் பார்த்தது.
“திடீர்னு டல்லான மாதிரி இருக்கீங்க. என்னனு சொல்லமாட்டேங்குறீங்க.”
“உன்கிட்ட சொல்லாம என்ன? இப்போ வேண்டாம்னு பாக்குறேன்.” சோர்வான புன்னகை கொடுத்தான்.
“எல்லாம் சரியாகிடும், சமாளிச்சிடலாம்.” என்னவென்று தெரியவில்லை என்றாலும் கணவன் கலக்கமாக இருக்கிறான் என்று அவன் கைபிடித்து ஆறுதல் சொன்னாள். மென்னகையுடன் அவளை தன் மீது சாய்த்துக்கொண்டான்.
“அத்தையும் மாமாவும் வெளில இருக்காங்க. அங்க போலாமா?” என்று கேட்டு அவனையும் வெளியே அழைத்து வந்தாள். மனம் கொஞ்சம் திசை மாற கொல்லைப்புறத்திலும் வெளிப்புறத்திலும் இருந்த செடிகளை காட்டினான். தங்களின் நிலம் எங்கிருக்கிறது என்னென்ன சாகுபடி செய்கிறோம் என்று பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள். இருள் கவிழ, உணவு முடித்து அறைக்குள் நுழைந்த இருவருக்கும் வெவ்வேறு உணர்வுகள்.
நான் மகிழ்வாக இல்லை என்று வள்ளி சொன்னபிறகு கணவனாக மனைவியை நெருங்க மனதிற்குள் தடை.
காலையே கணவன் எல்லைமீற பார்த்தானே இப்போது எல்லைகள் கடந்துவிடும் என்ற அவா மனைவியிடம்.
குழலி பாய் விரிக்க, அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த முகிலன் தலையணை எடுத்துப்போட்டு படுத்துவிட்டான். விளக்கணைத்து வந்து அவனருகில் படுத்தவள் இதோ அணைத்துவிடுவான் கணவன் என்று தன் மயிர்க்கால்கள் கூச காத்திருந்தாள். நிமிடங்கள் கடந்தும் அது நடக்காமல் போக, அவனை நோக்கி திரும்ப கண்களை மூடிப்படுத்திருந்தான். சுணங்கிப் போனவள் தன்னுடையை குனிந்து பார்த்தாள். அவனுக்காக புடவை கூட மாற்றாது ஊக்குகளை மட்டும் தளர்த்தி விட்டிருந்தாள். என்னானது இவனுக்கு என்ற யோசனையுடன் தானே நகர்ந்து சென்று அவன் தோளில் தலை வைக்க, லேசாக அவளை தட்டிக்கொடுத்தானே ஒழிய ஒன்றும் செய்யவில்லை. ஏமாற்றமாகிவிட்டது பெண்ணவளுக்கு.
தான் தான் அதிகம் நாடுகிறோமோ. இது தவறோ? அவனுக்கு எதுவும் இல்லையா என்ற கேள்விகளை வாய்விட்டு கேட்கலாம் என்றாலும் ஏதோவொரு தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. ஆண் வெளிப்படையாக பேசும் அந்தரங்கத்தை பெண் வெளிப்படுத்த வேண்டுமென்றால் அதற்கான நம்பிக்கையை உரியவன் அவளுக்கு கொடுக்கவேண்டும். இங்கு அது கேள்விக்குறியானது. அன்பை பரிமாறிக்கொண்ட அளவுக்கு முக்கிய முடிவுகளும் சந்தேகங்களும் வெளிப்படையாக பேசிக்கொள்ளப்படவில்லை. அனைத்தையும் தள்ளிப்போட்டான் அவன். விளைவு அவர்கள் அறியாமலேயே மெல்லிய திரை ஒன்று விழுந்தது. அவனுள் இருக்கும் யோசனைகளை தன்னிடம் பகிர தயங்குகிறான் என்று சுணக்கம் கொண்டாள் பெண். தான் அவனை அனைத்திற்கும் தேடுவது போல் அவன் தன்னை தேடவில்லை என்ற எண்ணம் கசப்பை கொடுக்க, அதோடு அவனது விலகலும் சேர்ந்துகொண்டது.
நாட்டமின்றி சம்மதம் சொன்னது போய் காதலித்து மணம் புரிந்துகொண்டது போலாகி இயல்பான காதல் வாழ்க்கையை எதிர்பார்த்தது மனது. அது பின்னடைய, முழுமையடையாத ஆண்களின் ஆசைகள் மட்டுமல்ல பெண்ணின் உணர்வுகளும் ஏமாற்றத்தை விதைக்கும் என்பதை அவன் அறியவில்லை.
error: Content is protected !!
மனம்விட்டுப் பேசலேனா, குடும்பம் நடத்துறது கஷ்டம்தானுங்க….
ஏங்க, இந்த எப்போ கலியாணமாச்சு…
நானும் 6 ஆவது எபியிலிருந்து திரும்பப் படிச்சுப் பார்க்கிறேன். எத்தனாவது எபினு கொஞ்சம் சொல்லுங்களேன்…