Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 14

அத்தியாயம் 14

“என்ன டா! பேய் எதாவது அடிச்சிருச்சா? வந்து ஒரே இடத்துல அசையாம அரை மணி நேரமா உக்காந்திருக்க?” தீபக் கேட்டபடி வந்து ஒரு கப் காபியை அர்ஜுனுக்கு நீட்டிவிட்டு அவனருகில் தானும் ஒரு காபியோடு அமர்ந்தான்.



Advertisement

எதுவும் சொல்லாமல் அர்ஜுன் காபியை பருக, “நீ போனதே பேயோட தான் இல்ல! அதை மறந்துட்டேன் பாரு!” என்றவனை முறைத்தான் அர்ஜுன்.

“என்ன டா வாங்கின?” என்ற தீபக் அர்ஜுனின் அருகில் இருந்த கவரை எடுத்து பிரித்தான்.

Advertisement

Advertisement

“ம்ம்ம் உன் செலக்ஷன் என்னைக்கு நல்லா இல்லாம இருந்திருக்கு?” என்றான் ஜிமிக்கியைப் பார்த்துவிட்டு.

எதற்கும் பதில் சொல்லாமல் அர்ஜுன் அமர்ந்திருக்க, “நிஜமாவே பேய் தான் அடிச்சிருக்கணும்.. இவ்வளவு கத்துறேன். ஆ ஊ’னு எதாவது சொல்லேன்!” தீபக் கோபமாய் சொல்ல,

Advertisement

“என்ன டா வேணும்? நசநசன்னு புலம்பிகிட்டு இருக்க? வெளில போகலையா நீ?” என்றான் அர்ஜுன்.

“வெளில போ டா அயோக்கிய ராஸ்கல்! அதை தான இவ்வளவு டீசண்டா சொல்ற? சண்டே அதுவுமா என்னை தனியா விட்டுட்டு போனோமேன்னு கொஞ்சம் கூடவா குற்றஉணர்ச்சி இல்ல உனக்கு?” 

“நான் கூப்பிட்டேனா இல்லையா?”

“கூப்பிட்ட! ஆனா என்ன சொல்லி கூப்பிட்ட? அந்த பரணி வர்றா! நீயும் வரணும்னா வானு சொல்லி கூப்பிட்ட!”

“பரணி இல்ல டா! ப்ரணி!”

“ஸ்பெல்லிங் மிஸ்டேக் ரொம்ப முக்கியமா இப்போ?”

“இப்போ அவ வந்தா என்ன உனக்கு? ஏன் கார்ல இடம் இல்லையா?”

“உன் மனசுல தான் டா இடம் இல்ல! அம்புட்டுக்கு நான் ஆகிட்டேன்ல உனக்கு?”

“உனக்கு நேரம் போகலைனு எதாவது பேசிட்டு இருக்காத! நானே இப்ப தான் கொஞ்சம் ஃபிரீயா இருக்கேன். எதாவது சொல்லி டென்ஷன் பண்ணாத தீபக்!”

“ஃப்ரீயா இருக்கியா? வாட் யூ மீன் மேன்? அந்த பரணிக்கு செட் ஆகிட்டியா என்ன?” என்றவனை அர்ஜுன் தீயாய் முறைக்க,

“இல்ல! அது தான் உன்னை செட் பண்ண ரொம்ப நாளா உன் பின்ன சுத்தின மாதிரி தெரிஞ்சது. அதான்…” என்றவன் அர்ஜுன் கோபமாய் பார்த்ததில் வார்த்தையை நிறுத்திவிட்டான்.

“ப்ரணி மேல உனக்கு என்ன கோவம்? எப்ப பாரு அவளை எதாவது சொல்லிட்டு இருக்க நீ!” அர்ஜுன் சொல்ல,

“எனக்கென்ன டா கோவம்? அவ்வளவுக்கெல்லாம் சீன் இல்ல!” என்றான் தீபக்.

“ம்ம்ஹும்! அவளை பத்தி பேசினா இல்ல அவ கால் எனக்கு வந்தா கூட நீ கடுப்பாகுற! எனக்கு தெரியாதா?” என்றான் அர்ஜுன்.

“ஓஹ்! என்னை அவ்வளவு நோட் பண்ற நீ?” தீபக் சொல்ல,

“அவ பாவம் டா. ஹாஸ்டல் ஆபீஸ்னு வெளி உலகமே தெரியாம இருக்கா. அதான் போரா இருக்குன்னு எப்பவாச்சும் வெளில வர்றா! அவளை போய் கிண்டல் பண்ற நீ!. அவளுக்குன்னு யார் இருக்கா? நீயே சொல்லு?”

“அய்யயோ! என்ன டா பச்ச குழந்தையை நான் என்னவோ பேசிட்ட மாதிரி கோவப்படுற? அதுவும் உலகம் தெரியாத குழந்தையாம்! அடேய்! ஒரு பொண்ணு உலகத்துல தனியா சர்வைவ் பண்ணினா அந்த பொண்ணும் பெருமைப்படணும். அவளை தெரிஞ்சவங்களும் அந்த பொண்ணுக்காக பெருமைப்படணும். ஏன் பாவமா பாக்குற நீ? அப்ப நீ பாவப்படனும்ன்ற மாதிரி தான் உங்கிட்ட பேசுறாளா?” என்ற தீபக்,

“என்னவோ ஒன்னு! எனக்கு கோவமெல்லாம் இல்ல. ஆனா எதுவோ சரி இல்லைனு தோணும் அந்த பொண்ணைப் பார்க்கும் போது!”

“தீபக்!”

“சரி சரி! டென்ஷன் ஆகாத! உன் மாமா பொண்ணு வேற! உனக்கு கோவம் வர தான செய்யும்! நாளைக்கே உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுன்னா நான் வேற வீட்டைப் பார்த்து வேற போகணும்!” என்ற தீபக் வார்த்தைகளில்,

“ப்ச்! டேய் லூசு மாதிரி பேசாத! ப்ரணியை போய்… பைத்தியமா டா நீ?”

“யாரு நானு? ரைட்டு விடு! இப்போ ஏன் நீ டென்ஷன் ஆகுற? இந்த டாபிக்கே வேணாம்! யார் எப்படி போனா எனக்கென்ன! நீ நல்லார்ந்தா சரி தான் எனக்கு!” என்ற தீபக் இன்னமும் தன்னை முறைக்கும் அர்ஜுனை சமாதானம் செய்ய எல்லாம் விரும்பவே இல்லை.

என்னவோ ப்ரணித்தா மேல் அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. அதற்காக அர்ஜுனை ஏன் படுத்த வேண்டும் என அமைதியாகியவன்,

“ஆமா அக்காக்கு ஃபன்க்ஷன் எப்போ?” என்று கேட்டு பேச்சை மாற்றினான்.

“ஏன் மாமா உனக்கு கால் பண்ணலையா?” என அதையும் கோபமாய் கேட்டான் அர்ஜுன்.

“சரி டா! ப்ரணித்தா மாதிரி ஒரு நல்ல சக்கரக்கட்டி இந்த உலகத்துலயே கிடையாது போதுமா? மூஞ்சை அப்படி வச்சுக்காத! கண்ஃபார்மா வெட்னெஸ்டே தானான்னு கேட்டேன்!”

“ம்ம்!”

“ஓஹ்! அப்போ என்னால வர முடியாதே!”

“ஏன்? எங்க பொறுக்க போற?”

“பொறுக்க போகல டா. பொண்ணு பார்க்க அன்னைக்கு தான் போறேன். ஒரு நல்ல வார்த்தை வருதா உன் வாயில?” என்று தீபக் சொல்லவும் தான் கொஞ்சம் மனநிலை மாறியது அர்ஜுனிற்கு.

“ப்ச்! ஆமால்ல? அதுவும் வெட்னெஸ்டே தானா? அப்ப நீ வர மாட்டியா?” அர்ஜுன் கேட்க,

“எனக்கும் ஒருத்தன் பொண்ணு தர்றானே! அவனை ஏமாத்தணுமானு பாக்குறேன்!” தீபக் சொல்ல,

“எல்லாமே உனக்கு விளையாட்டா போச்சு டா!” என்று சிரித்தான் அர்ஜுன்.

“பொண்ணு இது தான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க வீட்டுல. ஆனா பொண்ணும் அது அப்பாவும் தான் மாப்பிள்ளைக்கு கை கால் எல்லாம் நல்லாருக்கா. வச்சு வாழ தெரியுமானு பாக்கணும்னு சொல்லிருப்பாங்க போல! போய் அவங்களை பார்த்து சும்மா கெத்தா ஸ்டைலா நாலு லுக் குடுத்துட்டு கல்யாண தேதியை வாங்கிட்டு வரலாமேனு போறேன்!”

“ஹ்ம்ம் சரி டா! எப்ப கிளம்புற? வந்து அனுவை பாரு!” அர்ஜுன் சொல்ல,

“வந்து பாக்குறதா? உன் மாமாகிட்ட மாட்டிகிட்டு முழிக்கவா? நாளைக்கு உனக்கு போன் பண்ணுவேன். உன் மாமாவும் நீயும் ஆபீஸ்ல இருக்கீங்க! நான் அனு அக்காவை பார்த்துட்டு அப்படியே ஊருக்கு எஸ் ஆகி கிளம்புறேன்!” என்றதும் அர்ஜுன் சிரிக்க,

“ஒரு வார்த்தை தெரியாம வாய்ல வந்ததுக்கு வச்சு செய்யுறார் மனுஷன். நல்லவேளைக்கு லோன் கட்டுற அமௌன்ட்டை உன்கிட்ட குடுத்து விட்டார்! சீக்கிரமா அந்த குள்ளச்சி தங்கச்சிக்கும் ஒரு கல்யாணம் நடக்கட்டும் அப்பவாச்சும் மலை இறங்குறாரா பார்ப்போம்!” என்ற தீபக் அர்ஜுனின் முக மாற்றத்தை கவனித்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தான்.

மீண்டும் சில மணி நேரங்களுக்கு முன் விஜயலக்ஷ்மி நின்ற கணம் அர்ஜுன் மனதுக்குள் விரிய, அது அவனையும் மீறி மனதுள் பதிந்து கொண்டது.

**************************************

கலையரசி ஐந்து வகை சாதத்தினை தயார் செய்து கொண்டிருக்க, விஜயலக்ஷ்மி அன்னைக்கு உதவியாய் நின்றாள் சமையலறையில்.

“இன்னுமா அர்ஜுன் வர்ல? நீங்க கால் பண்ணிங்களா இல்லையா?” என திருமணப் புடவையை அணிந்து தயாராய் நின்று கணவனை முறைத்தாள் அனன்யா.

“வருவான் டி! மார்னிங் கால் பண்ணினேன். ஏதாச்சும் வேலை இருக்கா மாமா? சொல்லுங்க செய்யுறேன்னு சொன்னான். நீ தானே சொன்ன? இது லேடிஸ் ஃபன்க்ஷன். உங்களுக்கு வேலை இல்லைனு! அதுவும் சிம்பிளா நம்ம வீட்டுல இருக்கவங்க மட்டும் போதும்னு சொல்லிட்ட! அதை நானும் அவன்கிட்ட சொல்லிட்டேன். அதான் அந்த டைம்க்கு வந்து நின்னா போதும் நினைச்சிட்டான் போல!” என்றான் விவேக்.

“உங்களை யாரு இதையெல்லாம் அவன்கிட்ட சொல்ல சொன்னா?” என அதற்கும் அவள் முறைக்க,

“கொஞ்சம் ரிலாக்ஸா இரு அனும்மா! அவன் வரட்டும். அவன் வர்றதே போதும் தானே நமக்கு?” என்ற சொல்லில் அனன்யாவும் அமைதியாகிவிட்டாள்.

“அத்தை! நான் கேட்ட வளையல் எல்லாம் வாங்கிட்டிங்களா? எல்லா கலர்ஸும் இருக்கனும்!” அனன்யா கலையரசியிடம் கேட்க,

“இதோ இங்க தான் இருக்கு! நீங்களே பாருங்களேன்!” என வளையல்களை காண்பித்தாள் விஜயலக்ஷ்மி.

“சூப்பர்! எல்லாமே நான் கேட்ட மாடல்ஸ்! வாவ்!” என்று சொல்ல,

“கொழுப்பை பார்த்தியா! விவேக் தங்கத்துல கைக்கு ஆறு ஆறுன்னு அத்தனை வாங்கி வச்சிருக்கான்! இதென்ன மாடல்னு அவனை நாலு கேள்வி கேட்டுட்டு இந்த கண்ணாடி வளையலுக்கு வாவ்வாம்!” என்றார் கலையரசி.

“தங்கத்துல போடுறதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் அத்தை! எங்க அந்த தங்க வளையலை இது மாதிரி சத்தம் போட சொல்லுங்க பார்ப்போம்!” அனன்யா வளையல்களை குலுக்கி காண்பித்து மகிழ்ந்து சொல்ல,

“எங்க! இந்த கண்ணாடி வளையலை குடுத்து ஒரு ஐநூறு ரூபா வாங்கிட்டு வா பார்ப்போம்!” என்றார் கலையரசியும் விடாமல் மருமகளிடம் வம்பிழுத்து.

“அடடா! மேட்ச் ட்ரா ஆகிப் போச்சே!” அனன்யா சொல்ல, சிரித்துக் கொண்டிருந்தாள் விஜயலக்ஷ்மி.

“சிரிக்காத டி! போய் இதை எல்லாம் ஹால்ல செட் பண்ணு! முதல் வளையல் நீ தான் போடணும். அதை யாருக்கும் விட்டுக் குடுத்த!” என விஜயலக்ஷ்மியை விரட்டினாள் அனன்யா.

காரில் அர்ஜுன் அருகே அமர்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள் ப்ரணித்தா.

மனம் திடும் திடும் என அடித்துக் கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் முன் அவன் பேசிய வார்த்தைகள் கொடுத்த தாக்கம் கொஞ்சமும் இன்னும் மனதில் இருந்து குறையாமல் அனலைக் கொடுத்துக் கொண்டிருக்க, இன்று மீண்டுமாய் அவளை அவள் வீட்டிலேயே பார்க்க இருக்கிறானே என மனம் பேயாட்டம் போட்டது ப்ரணித்தாவிற்கு.

விஜயலக்ஷ்மியை சில நொடிகள் என்றாலும் அன்று அர்ஜுன் அவளைப் பார்த்த பார்வையும் தொடர்ந்து அவன் தடுமாறி சமாளித்த விதமும் என நினைக்க நினைக்க மனதெல்லாம் எரிதழல்கள்.

இப்பொழுது வரை அவன் தன்னிடம் பேசிய பேச்சிற்கான அர்த்தங்கள் மட்டும் புரியவே இல்லை ப்ரணித்தாவிற்கு. எப்பொழுதும் தன் காதல் அவள் மீது தான் என்று அவன் கூறியதில் ப்ரணித்தாவிற்கு மூச்சு முட்ட செய்ய, ஆனால் அவள் எனக்கு வேண்டாம் என்ற வார்த்தைகள் மட்டும் தான் கொஞ்சம் நிதானத்தையும் நிம்மதியையும் தந்திருந்தது எரியும் மனதிற்கு.

என்ன செய்ய? யாரிடம் சென்று பேச? இவனிடமே தன் காதலை கூறிவிடலாமா? தன்னைப் புரிந்து ஏற்றுக் கொள்வானா? என பல கேள்விகள் மூளைக்குள் வண்டாய் சுற்றி வந்து கொண்டிருந்தது ப்ரணித்தாவிற்கு.

ஆனால் இது அதற்கான சமயம் அல்ல என்றும் புத்திக்கு புரிந்தது. கடந்த மூன்று வருடங்களில் எத்தனை முறை முயன்றுவிட்டாள்? அவனிடம் பேசிட முடிந்ததா என்ன?

அவன் அன்னை இறந்து ஒரு வருடங்கள் அவன் உயிர்ப்பில்லாமல் அல்லவா இருந்தான். தொடர்ந்த அடுத்து ஒன்று ஒன்றரை வருடங்களிலும் தனக்கென சிறு சலுகைகள் அவனிடம் கிடைத்ததே ப்ரணித்தாவிற்கு மகிழ்வாய் இருந்தது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பேசி அவனை கரைத்து தன் வழிக்கு கொண்டு வர அவள் நினைத்திருக்க, இப்படி விஜயலக்ஷ்மி வந்து சேருவாள் என்று நினைக்கவே இல்லையே!

சரி தன் காதலை சொல்ல நேரமெடுத்தாலும் பரவாயில்லை அந்த விஜயலக்ஷ்மி மீது வெறுப்பையாவது வளர விடலாம் என நினைத்து அவள் பெயரைக் கூறினாலே கேட்க மறுத்தான்.

சரி அதையும் தனக்கு சாதகமாக அவள் பேச்சையே இவன் கேட்க விரும்பவில்லை என நினைத்து தனக்குள் இவள் மகிழ்ந்திருக்க, மொத்தமாய் அவளை பற்றி மட்டுமே இப்படி ஒரு நாள் முழுவதும் தன்னிடமே கதை சொல்கிறானே! என்று உள்ளம் ஆதங்கத்தில் கொதித்தது.

நிச்சயம் இதை வளரவிடுவது நல்லதே இல்லை என்று மூளை எடுத்துக் கொடுத்தாலும் என்னவென்று செயலாற்ற என தெரியாமல் தான் இப்பொழுதும் நகம் கடித்து வந்தாள்.

“என்ன ப்ரணி! அமைதியா வர்ற? ஆபீஸ்ல லீவ் குடுத்தாங்க தானே? எதுவும் பிரச்சனை இல்லையே?” 

அத்தனை அக்கறையாய் அவன் கேட்க, அவனின் அந்த ஆளுமை நிறைந்த குரலே அவளுக்கு அத்தனை பிடித்து அவன் பக்கமாய் இழுத்தது.

“அதெல்லாம் இல்ல மாமா! சும்மா தான்!”

“இன்னுமா ஹாஸ்டல்ல ஆபீஸ்ல எல்லாம் பிரண்ட்ஸ்னு யாரும் கிடைக்கல? எப்பவும் தனியா இருக்குறதா சொல்ற? அஞ்சு வருஷமா நீ அங்க தான் இருக்க இல்ல?” என்றான்.

“எனக்கு அவ்வளவு சீக்கிரம் எல்லாம் யாரோடவும் பேச வராது மாமா!”

“சீக்கிரமா? ஹே! நீ அதே ஆபீஸ் அதே ஹாஸ்டல்ல அஞ்சு வருஷமா இருக்குறனு சொல்றேன்!” என்று அவன் சிரிக்க, அவன் சிரிப்பில் தான் இவள் கண்கள் முழுதும்.

“ஹ்ம்! எனக்கென்னவோ நீ தான் சரி இல்லைனு தோணுது!” என்றதும் பக்கென்று ஆனது ப்ரணித்தாவிற்கு.

“மாமா!”

“நீ ரொம்ப சைலன்ட் டைப் தானே? அதான் யாரோடவும் பேச தயங்குற! அது தான் உன் பிரச்சனைனு நினைக்குறேன். இந்த வயசுல இப்படியா இருப்பாங்க? ஜாலியா இருக்க வேண்டாமா?” என்றவன்,

“அனு எல்லாம் காலேஜ் படிக்கும் போது சரியான அராத்து! வீக்லி பிரண்ட்ஸ் கூட வெளில போறது பிரண்ட்ஸ்ஸை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுன்னு அராஜகம் பண்ணுவா!” என்றான் அந்த நினைவோடு சிரித்து.

“ரொம்ப ஹாப்பியா இருந்தோம்!” என்று மென்னகைக்கு மாறியவன்,

“நீயும் பேச ட்ரை பண்ணு! பிரண்ட்ஸ் கூடவெல்லாம் எப்பவும் இருக்க முடியாது. இருக்குற நேரத்தை என்ஜாய் பண்ண கத்துக்கோ!” என அவன் பேசிக் கொண்டு வர, அதெல்லாம் காதிற்குள் நுழைந்தாலும் மனதிற்கு ஏறவில்லை.

இவளுக்கு தெரியாதா என்ன? அலுவலகம் விடுதி என நண்பர்களுக்கு எல்லாம் பஞ்சமில்லை. இவனுக்காக இவனுடன் நேரத்தை செலவிட அவர்களை ஒதுக்கி அல்லவா இவனோடு நேரத்தை நீட்டுகிறாள்!.

ஏற்கனவே கூப்பிடும் நேரமெல்லாம் அவளோடு இணைந்து கொள்ளமாட்டான். பத்து முறை அழைத்தால் ஒரு முறை வந்து நிற்பான் அவள் மனம் வருந்திட கூடாதே என்று. இதில் நண்பர்கள் இருப்பது தெரிந்து அவர்களுடன் செல் என்றுவிட்டால்? அதற்காகவே மறைத்து வைத்தாள்.

விவேக் வீட்டு வாசலில் காரை நிறுத்தி அர்ஜுன் இறங்க, “எவ்வளவு நேரம் டா! அனு என்னை ஒரு வழி பண்ணிட்டா!” என்று அர்ஜுன் வரவை எதிர்பார்த்து நின்று வரவேற்ற விவேக்,

“வா ப்ரணித்தா!” என அவளையும் வரவேற்றான்.

“வா அர்ஜுன்!” என்று சந்தானமும் அழைக்க,

“மாமா!” என்று அவரிடம் பேசியவன், அடுத்து அனுவைக் காண என உள்ளே நுழைந்தான்.

அர்ஜுன் உடனேயே அவன் அருகிலேயே என ப்ரணித்தாவும் வர, கலையரசி அர்த்தமாய் வருபவர்களைப் பார்க்க, அனன்யா கொஞ்சம் அதிர்ச்சியாய் பார்த்து கணவனைக் காண அவன் இவளை கவனிக்கவில்லை.

ஓரமாய் நின்று ஒருவரின் வரவை எதிர்பார்த்து அதில் பயமும் கொண்டு என தனியே நின்ற விஜயலக்ஷ்மி கண்களும் அர்ஜுன் ப்ரணித்தா இருவரிடமும் தான் நின்றது. 

அர்ஜுன் போன்ற ஒருவனை இழந்த தன் நிலை எண்ணி எப்பொழுதும் போல இப்பொழுதும் சிறு வருத்தம் என்றாலும் இதோ அவனருகில் புன்னகையோடு வரும் ப்ரணித்தாவிற்கு அவள் விரும்பியது கிடைத்தால் அவளுக்கு அது எவ்வளவு பெரிய கனவு வாழ்க்கை? என நினைக்கவும் தவறவில்லை.

“கரெக்ட்டா அந்த டைம்க்கு தான் வருவியா? கொஞ்சம் முன்ன வந்தா தான் என்ன அர்ஜுன்?!” என அனன்யா அர்ஜுனை திட்டிக் கொண்டிருக்க, வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயலக்ஷ்மி,

“எங்க போனாங்க?” என்று முணுமுணுத்து தலை சாய்த்துப் பார்த்தவள், அருகில் நின்ற அன்னையின் தோள்களில் கைவைத்து பார்வையால் வெளியே தேட,

“என்ன பண்ற நீ?” என்றார் திரும்பி மகளைப் பார்த்த கலையரசி.

“யாரடி தேடுற?” என்றார் மகள் பதுங்கி நிற்கும் பாவனையில்.

“என்னை பார்த்தா அத்தை டென்ஷன் ஆவாங்களா ம்மா? எங்க இன்னும் காணும்?” என கேள்வி கேட்டு வாசலை மட்டும் பார்க்க, கலையரசிக்கு அது வரையும் அந்த எண்ணமே இல்லை.

“ம்மா! இது அவங்க பொண்ணு ஃபங்க்ஷன்! அதுக்கு கூட வரலையா?” இவ்வளவு நேரமும் நிச்சயம் அனன்யாவிற்காக வருவார் என நம்பி நின்றவள் இன்னும் காணவில்லை அர்ஜுனோடும் வரவில்லை என்றதும் அதிர்ந்து அன்னையிடம் கேட்டாள்.

“ம்மா! முறைப்படி அவங்க வீட்டுக்கு போய் சொல்லி இருப்பிங்க இல்ல? அனு அண்ணி ஃபன்க்ஷனுக்கு கூட வரலைனா எப்படி ம்மா? அவ்வளவு கோவமா என் மேல?” என அதிர்ச்சியோடு கேட்டவள் கண்களும் கலங்கிவிட்டது தன்னால் தானே? என்ற எண்ணத்தில்.

“நீங்க பேசினீங்களா இல்லையா? அவங்க கோபம் நியாயம் இருக்கலாம். அதுக்காக நீங்களும் பேசவே இல்லையா அவங்ககிட்ட? அண்ணி தேடுவாங்க இல்ல? கவலைப்படுவாங்க தானே?” 

தானாய் அவள் பேச, அனன்யா அர்ஜுனிடம் கோபமாய் பேசி சமாதானமாகி முடித்திருக்க, அமைதியாய் இருந்த வீட்டில் விஜயலக்ஷ்மியின் சத்தம் மட்டும் மிக மெதுவாய் என்றாலும் அவள் வாதிடுவது புரியுமளவுக்குக் கேட்டது.

“என்ன விஜி?” என விவேக் தான் அவளருகே நகர்ந்தான்.

“நீ உட்காரு டா. ப்ரணி நீயும் தான்!” என்ற அனன்யா,

“அத்தை ஜூஸ் எதாவது எடுத்துட்டு வர்றிங்களா?” என கேட்க, கலையரசி மௌனமாய் நகர்ந்தார்.

அன்னையிடம் கேட்டதை அப்படியே விவேக்கிடம் விஜயலக்ஷ்மி கேட்க,

“அதை அப்புறம் பேசலாம் விஜி! உன்னை தான முதல்ல வளையல் போடணும்னு அனு கேட்டா? முகத்தை துடைச்சுட்டு வா!” என்று சொல்லி நகர்ந்துவிட, என்னவோ பெரிய சண்டை நடந்திருக்கிறது தான் இல்லாத போது என்று தான் நினைத்தாள் விஜயலக்ஷ்மி.

யாருமே கயல்விழியிடம் பேசுவது இல்லை போல! தன்னால் தானே என்ற நினைவில் நின்றவள் அனன்யாவிற்காக அப்பொழுது அமைதியாய் வந்து நின்றாள் அவள்முன்.

“நீ என்ன கலர் வளையல் எனக்கு போட்டுவிட போற விஜி?” என்று கேட்ட அனன்யா,

“வெயிட் நானே சொல்றேன்!” என்று தானே ஒரு கலரை அவளிடம் காட்ட, அதையே எடுத்து அவள் கைகளில் அணிவித்து சாதத்தையும் ஊட்டிவிட்டாள் விஜயலக்ஷ்மி.

அடுத்ததாய் கலையரசிக்கும் அதே போல அனன்யா தான் வளையல் தேர்வு செய்ய, ப்ரணித்தாவிற்கும் அதே அனன்யா விருப்பப்பட்ட வளையல்கள் தான்.

“நீங்க என்ன பாக்குறீங்க? தங்க வளையல் உங்களுக்காக வைட்டிங்!” என கணவனை அனன்யா அழைக்க, புன்னகையோடு வந்து முதலில் அவள் தலையில் கொட்டு வைத்துவிட்டே வளையல்களை கையில் எடுத்தான் விவேக்.

அவன் அணிவித்ததும், “எப்படி இருக்கு அனு?” கலையரசி கேட்க,

“இது சுமார் தான் த்தை!” என்று சொல்ல அனைவருமே புன்னகைத்தனர்.

“மாமா!” என்று அனன்யா அழைக்கவும் சந்தானம் மலர்களை தூவி அவளை வாழ்த்தினார்.

“அர்ஜுன் வா!” என்று அனன்யா அழைக்க, அவன் பரிசை நீட்டிட,

“என்ன டா இது?” என கண்களை விரித்தவள் அதை திறந்து பார்த்து, “ஹே க்யூட்டா ஜிமிக்கி!” என விழி விரித்து அவள் பார்க்க,

“என்னனு டா இவளை சமளிக்குற? நீ வாங்கினது ஒல்ட் ஸ்டைல்.. சுமார்ன்னு சொல்லிட்டு இப்ப மட்டும் பாரேன்! வாயில இருக்க பல்லு எல்லாம் தெரிய சிரிக்கிறா!” என்று கலையரசி சொல்ல, அனைவருமே சிரித்தனர்.

“இது லேட்டஸ்ட் மாடல் ஜிமிக்கி த்த! உங்க மகனுக்கு டேஸ்ட் சரி இல்ல!” அனன்யா சொல்ல,

“அதான் அஞ்சு வருஷம் முன்னவே சொன்னேன். கேட்டானா? அப்பவே தெரியும் அவன் டேஸ்ட் என்னனு எனக்கு” என்ற கலையரசி சொல்வது புரிந்து அனன்யா முறைக்க, அனைவருமே சிரிக்க அர்ஜுனுமே வாய்விட்டு சிரித்திருந்தான் அந்நேரம்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!