Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நேசிக்க நியதி அழைக்கிறதா 02

நேசம் 02

பல்லாவரம்…



Advertisement

பெரிய வீடாக இருந்தாலும் அவ்வீட்டில் நிம்மதி என்பது பெயரல்லவிலே காணப்பட்டது. அதற்கு முழுமுதற் காரணமும் அவ்வீட்டின் மூத்த மகன் அன்பு.

மகனை நினைத்தே பெற்றவர்கள் இருவரும் துவண்டு போனார்கள். வருடங்கள் செல்ல செல்ல மகனின் மாற்றங்கள் இருவரையும் உடைய செய்தது.

Advertisement

Advertisement

பேரும் செல்வமும் இருந்து என்ன பயன் வீட்டில் நிம்மதி சந்தோஷம் என்பது இல்லையே.

அன்பு என்ற‌ பெயரிற்கு ஏற்ப அன்போடு இருந்த மகனின் முகம் இப்போதெல்லாம் ஒருவித இறுக்கத்தை கொண்டு இருப்பதை காண சுகிக்கவில்லை பெற்றவர்களுக்கு.

Advertisement

அவன் ஒரு காலத்தில் மழை போல் அனைவரையும் நனைத்தவன். ஆனால் இப்போது, வெப்ப காற்றாக மாறிவிட்டான். அவன் முகத்தில் இருந்த ஒளி, கருமேகத்தில் மறைந்த சந்திரனைப் போல மங்கியது.

மகனின் கவலையாலே மற்ற பிள்ளைகளை கூட கவனிக்க மறந்து போயினர்.

தவமாய் தவமிருந்து வரமாய் பெற்ற பிள்ளை தான் அன்பு. அவனுக்கு பிறகு இரண்டு மகள்கள் மூத்தவள் அனுராதா திருமணமாகி கோவையில் வசிப்பவள், இரண்டாமவள் நந்தினி.

தம்பிதுரை சீதாலட்சுமிக்கு திருமணமாகி ஐந்தாண்டுகளுக்கு பிறகு பிறந்த மகன் தான் அன்பரசு. அவர்களின் அன்பின் அடையாளமாகவும் இவ்வீட்டின் அரசன் என்பதாலுமே அன்பரசு என்று பெயர் சூட்டினர்.

ஏன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரையிலுமே அனைவரிடமே அன்பாய் தான் பழகினான்.

ஆனால் சில வருடங்களாக அனைத்தும் மாறப்பட்டது. அனைத்தையும் மாற்றியமைத்திருந்தான் அன்பு.

எதையெல்லாம் விருப்பத்தோடு செய்தானோ, அவை அனைத்தையும் இன்று வெறுத்து ஒதுக்கினான். அதில் பெற்றோரும் அடங்கிருக்க, பெற்றவர்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத துயரமாய் மாறிப்போனது.

தம்பிதுரையும் சீதாலட்சுமியும் இப்போது மகனுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாமல் திகைத்து போயினர். மகன் பேசினால் மகிழ்ச்சி, பேசாமல் இருந்தால் கவலை என அவர்களுடைய வாழ்க்கையின் மையம் முழுவதுமாக மகனின் மனநிலையையே சுற்றி வந்தது.

இவை யாவையும் புரிந்து கொள்ளாமல் அனைவரிடத்தும் தனித்து நின்று மற்றவர்களை வருத்திக் கொண்டிருந்தான்.

காலையிலே வெளியே சென்ற மகன் திரும்பி வராது இருக்கவே தாய் சீதாவிற்கு கவலையாகி போக, வாசலை பார்த்த நிலையிலே அமர்ந்திருந்தார்.

அன்னை தூங்காமல் வாசலில் நிற்பதை‌ கவனித்த நந்தினி, ” அம்மா தூங்க போகலையா நீங்க?” என்று அக்கறையுடன் அவள் வினவ,

“இன்னும் இல்ல மா. உன் அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரல அவனுக்காக தான் காத்திருக்கேன்” கவலை தேய்ந்த குரலில் அவர் கூற, கேட்ட நந்தினிக்கு சலிப்பு தட்டியது.

“ம்மா, அண்ணா என்ன இன்னைக்கு நேத்தா லேட்டா வருது. தினமும் தானே லேட்டா வராங்க. வந்துடுவாங்க மா. நீங்க போய் படுங்க” என அன்னையை தூங்க சொல்லி அனுப்பி வைக்க பார்க்க, அன்னையோ மகளை பரிதவிப்பாய் பார்த்தார்.

“என்ன மா?”

“இன்னைக்கு என்ன நாள்ளுன்னு மறந்து போய்ட்டியாமா?” என்றார் விழிகளில் நீரை தேக்கி.

அன்னை சொன்ன பிறகு தான் அவளுக்கே புரிந்தது இன்று என்ன நாள் என்று.

பிப்ரவரி 14 என்று பார்த்த நொடியிலே அன்னையின் பரிதவிப்பிற்கான காரணம் புரிந்து விட, மனது அண்ணனுக்காக வெதும்பியது.

அவள் ஆசை அண்ணன்‌ தன்னை செல்லமே தங்கமே என்று அன்பொழுக அழைத்த அண்ணன், இப்போது பெயரளவில் மட்டுமே அண்ணனாக இருக்கிறான்.

காலம் அனைத்தையும் மாற்றியிருந்தது. காரணம் தான் புரியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

திறந்த புத்தகமாக இருந்த அண்ணன் இப்போது எந்தவொரு புத்தகத்தையும் திறந்துவிட கூடாது என்பதில் திண்ணமாய் இருந்தான்.

“எனக்கு பயமா இருக்கு நந்தினி. அன்பு நமக்கு இல்லாமலே போய்டுவானோன்னு இருக்கு டி” என்றவரால் மகனை நினைத்து நினைத்தே அந்த வயதிலும் கண்ணீர் வடித்தார்.

“ம்மா, பயப்படாம இரு. நான் டோனி அண்ணனுக்கு கூப்பிட்டு கேக்குறேன் ” என்றவள் சற்று தூரம் வந்து அண்ணனின் நண்பனான டோனிக்கு அழைப்பு விடுத்தாள்.

முதலில் அவனின் அழைப்பு ஏற்கப்படாமல் போக, தன்னையே தவிப்புகள் நிறைந்த விழிகளோடு பார்க்கும் அன்னையை காண்கையில் அண்ணன் மீது கோபமாக வந்தது.

அப்படி என்ன தான் அவன் வாழ்வில் நடந்தது என இப்படி அவனையும் கஷ்டப்படுத்தி மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறான் என புரியவில்லை. பிரியமான அண்ணன் மீது ஆத்திரம் வந்தது.

“டோனி எடுத்தானாமா?”

“இன்னும் இல்ல மா. இருங்க இன்னொரு முறை கூப்பிட்டு பார்க்கிறேன்” சொல்கையிலே டோனி அழைத்து விட, அவற்றை ஏற்று பேசினாள் நந்தினி.

“அண்ணா!!!!” என்ற அழைப்பிலே டோனிக்கு புரிந்துபோனது.

“நான் அவனை கூட்டிட்டு வரேன் மா. நீங்க கவலைப்படாம இருங்க” என்று தைரியம் கூறி அழைப்பை வைத்தவன் நண்பனை தேடிச் சென்றான்.

அவன் எங்கிருப்பான் என்று தெரிந்தமையால் வேறெங்கும் செல்லாமல் நேரே அங்கேயே செல்ல, அவனை ஏமாற்றாமல் அன்பு அந்த கொட்டும் மழையில் அங்கே தான் அமர்ந்திருந்தான்.

வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு அங்கே செல்ல, நண்பனை அப்படியொரு கோணத்தில் காண வருத்தமாக இருந்தது.

காலடி சத்தத்திலே வந்திருப்பது யாரென்று புரிந்தாலும் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

“அன்பு!!!” அழைக்க பதில் சொல்லாது வெறித்திருந்தான்.

“டேய் மணியை பாரு டா. அங்க வீட்ல எல்லாரும் உன்னைய தேடிட்டு இருக்காங்க நீயென்னென்னா இப்படி வந்து உக்காந்துருக்கியே மச்சான். வா டா போகலாம்” டோனியின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும் எந்தவொரு எதிர்வினையும் காட்டாது இருந்தான்.

மழை அதன் தீவிரத்தை காட்ட, இடியுடன் மின்னல் ஒளிர்ந்து மறைந்தது. வானம் குமுறி அழுவதுபோல் அந்தச் சப்தம் அன்புவின் உள்ளத்தின் கதறலை ஒட்டிக்கொண்டு வந்தது.

அவன் முன்னே இருக்கும் உலகமே இருளில் மூழ்கி விட்டது போல் தோற்றம். ஒளி இல்லாத பாதை. முடிவில்லாத இரவு. அவளில்லாத வாழ்க்கை.

ஒருபோதும் வாடாத மல்லிகைப்பூ போல இருந்த அவன் மனம், இப்போது மண்ணில் விழுந்து காலால் மிதிக்கப்படும் பூவைப் போல நசுங்கி கொண்டிருந்தது.

“மச்சான், நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல டா. உன் ஒருத்தனால மொத்த குடும்பத்தோட நிம்மதியையும் கெடுத்துட்டு இருக்க” என்று டோனி கத்தாத குறையாக சொல்ல, அவனோ அழுத்தமாய் அவள் விட்டு சென்ற இடத்தில் அமர்ந்திருந்தான்.

அந்த நாளின் தாக்கம் அவன் மனதில் தீப்பிழம்பாய் எறிய, அவனின் அந்த நாளின் செய்ட்பாடுகளை நினைத்து தன்னையே வெறுத்து ஒதுக்கினான்.

“டேய், நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ இப்படி சிலைப்போல உட்காரந்திருந்தா நடந்ததை மாற்ற முடியுமா மச்சான்?” என்றவன் மேலும்,

“அப்படி முடியும்னா எப்பவோ மேகாவை உன்கிட்ட கொண்டு வந்துருப்போமே. உன் கஷ்டத்தை பார்த்துக்கிட்டு அமைதியா இப்படி நின்னு பேசிட்டு இருந்திருக்க மாட்டோமே டா”

“அன்பு புரிஞ்சிக்க டா. உன்னோட வாழ்க்கைல மேகா இல்லன்றது நான் நிதர்சனம். அதை ஏத்துக்கப்பாரு” என்றதுமே என்னவோ அன்புவின் இதயத்தில் அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியை போல் தாக்கியது.

“அன்பு!!!”

…..

“மச்சி, அமைதியா இருந்து நீயும் செத்துட்டு மத்தவங்களையும் சாகடிக்காத டா. புரிஞ்சிக்க அன்பு” நண்பனின் தோள் தொட்டு கூறவுமே, அவனை சிவப்பேறி கண்களுடன் திரும்பி பார்த்தவனின் விழிகளில் வேதனைகள் நிறம்பிருந்தன.

அவனின் வாழ்வில் மிகவும் முக்கியமானவள் அவனின் மேகமலை.

இன்று அவளுக்கான நாள். அவளுடைய நாளும் கூட. அந்த நாளில் கூட தன்னை நிம்மதியாக விடாத இவ்வுலகத்தை வெறுத்தான்.

இப்போது அவளுடன் தான் இருக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிய தன் மீதே கோபம் கோபமாய் வந்தது.

இருப்பினும் அமைதியாய் இருந்தான். அமைதியாய் எங்கோ இருந்து அவனை ஆட்சி புரிந்தாள்.

“அன்பு!!!”

“போய்டு மச்சி. என்னால அவங்க சொல்ற மாதிரி முடியவே முடியாது டா. நீ போ நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் ” என்று நண்பனை வற்புறுத்தி அனுப்பி வைத்தான்.

சற்று தூரமாய் அவனுக்கு தெரியாத வகையில் நின்றுக் கொண்ட டோனி நண்பனை கவனித்த நிலையிலே அந்த கொட்டும் மழையில் நின்றிருந்தான்.

நண்பனை இப்படியாக காண வேதனையாக இருந்தது. இது வருடாவருடம் நடக்க, வருடங்கள் செல்ல செல்ல அன்புவின் இறுக்கங்கள் கூட, யாரையும் அவன் நெருங்க விடவில்லை.

சிறிது நேரம் அங்கேயே இருந்தவன் பின்னர் வீட்டிற்கு செல்ல, அவனுக்கு தெரியாமலே நண்பன் வீடு செல்லும்வரை பின்தொடர்ந்தவன் அதன் பின்னே அவனின் வீட்டிற்கு சென்றான்.

மழையில் நனைந்து போய் வரும் மகனை கண்டதில் பதறி போன சீதா மகனை நெருங்க, அவரை எட்டி நிறுத்திய அன்பு அவரை கடந்து உள்ளே சென்றான்.

“ஏய்யா, அன்பு! கொஞ்சம் நில்லு பா” என மகனை அழைக்க, அன்னையின் குரலில் நின்றாலும் திரும்பவில்லை.

“மழையில நனைஞ்சு வந்திருக்க பா. சூடா சுடு தண்ணி போட்டு குளிச்சிடு தம்பி. நான் சாப்பிட எடுத்துட்டு வரேன்” அவர் வேகமாய் சொல்லி முடிக்கவுமே நகர்ந்துவிட்டான்.

மகன் மறுத்து பேசாததே போதும் என்றிருந்தது அந்த பாசமிகு அன்னைக்கு.

வேகமாய் சமையற்கட்டிற்கு சென்றவர் அவனுக்கு பிடித்த வகையில் மூன்று தோசை வாற்றி அவனது அறைக்கு எடுத்துச் சென்றார்.

அறைக்குள் வந்தவர் சாப்பாட்டை மேஜை மீது வைத்து விட்டு வெளியேறிவிட்டார்.

குளித்து விட்டு வெளியே வந்தவனுக்கு மழையின் தாக்கத்தினாலும் அவனின் அழுகையினாலும் கண்கள் எரிய துவங்க, தலை வேறு பயங்கரமாய் வலி எடுத்தது.

தலையை பிடித்துக் கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டான்.

அதில் மேஜையில் இருந்த படமொன்று கீழே விழ, அதனை எடுத்தவன் கைகள் மெல்ல அதனை பிரித்தது.

அவனின் படத்திற்கு கீழ் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த படம் வெளிப்பட்டது.

அந்த படத்தில் அவளோடு அவன்.

அது அவர்கள் காதலிக்க துவங்கிய ஆரம்பத்தில் எடுத்த முதல் புகைப்படம்.

அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நினைவுகளையும் பொக்கிஷங்களாய் வைத்திருந்தான்.

அப்படி தான் இப்படமும் புகைப்படமாக்கப்பட்டது.

புகைப்படமாக மாற்றிய போது அவளுடன் பேசியது தானாகவே முன்வந்தது.

நினைவலைகள்…

“அன்பு!! யூ ஆர் சச்ச க்ரேசி காய் மேன். ஐ நெவர் எக்ஸ்பெக்ட்டட் திஸ் ஃப்ரம் யுவர் எண்ட் . ” என்றாள் ஆனந்தமாய் ஆர்ப்பாட்டமாய்.

“ஏன் பிடிக்கலை யா மேகமலை?”

“பிடிச்சிருக்கே. ரொம்ப பிடிச்சிருக்கே இந்த அன்பை” என்றாள் அவனின் காதலில் கரைந்து.

“அன்புன்னா எதை சொல்ற மேகமலை?” மேகாவை சற்று சீண்ட எண்ணி கேட்க,

“அன்பு” அவனின் சீண்டல்களில் பெண் சிணுங்க, வீழ்ந்தான் ஆண்மகன்.

“சொல்லுங்க மேகமலை?”

“ப்ளிஸ் விடுங்களேன் பா. நம்ம காஃபி ஷாப்ல இருக்கோம் நினைவு இருக்கட்டுமே” என்றாள் சிறிதான குரலில்.

“விட நான் ஒன்னும் உன்னை நெருங்கலையே” என்றவன் மெல்ல அவள் உள்ளங்கையை தன் கைகளுக்குள் உள்ளடக்கம் செய்தான்.

“ப்ளிஸ் அன்பு, ஒருமாதிரி ஷை ஆகுது பா. முடியல” என அவனின் மேகமலை தலை சாய்த்து கெஞ்சல் போல் கொஞ்சல் குரலில் பேசினாள்.

“ஓகே…ஓகே… காஃபி குடி” என்றவன் அழகாய் அவள் அருந்தும் காஃபியை இரசித்து பார்த்திருந்தான்.

அந்த பார்வையின் தாக்கத்தில் ப்ளஷிங் போடாமலே அவளின் இரு கன்னங்களுயும் செம்மையுற்றது.

********

இப்போது நினைக்கையில் கூட ஏதோ இன்று நடந்தது போலான ஒரு தோற்றம் அவனுள் புன்னகையை உதிர்க்க செய்தது.

அந்த புகைப்படத்தினை வருடியவன் அப்படியே அதனை நெஞ்சினில் வைத்து அணைத்தாற் போலவே அந்த இரவு பொழுதினை கடத்தினான்.

இரவு தாமதமாக உறங்கியதாலே விடியல் சற்று நேரம் எடுத்திட, அன்பு குளித்து கிளம்பி வெளியே வரவே மணி பத்தை கடந்திருந்தது.

கீழே வந்து பார்த்தால் அவனின் பெரியப்பா தில்லையப்பன் அவரின் மனைவி ஆண்டாளும் வந்திருப்பதை கண்டு முகம் சுருக்கினான்.

“வாங்க பெரியப்பா! வாங்க பெரியம்மா!” என பெயரளவில் அழைத்தவன் வெளியே சென்றுவிட்டான்.

போகும் மகனை ஏக்கமான விழிகளோடு பார்த்திருந்தார் சீதாலட்சுமி.

“இங்க பாரு துரை, இப்படி அன்புவை நினைச்சு கவலை பட்டுட்டே இருந்தா மத்த பிள்ளைகளை எப்ப பார்க்க?” என்றார் வீட்டின் பெரியவராய்.

“புரியுது தான் அண்ணா. ஆனா இவன் இப்படி சுத்திட்டு இருக்கிறதை பார்க்க மனசு கேக்கமாட்டேங்கிது” துரை கவலையாக கூறவும்,

“அவன் இன்னைக்கு நேத்தியா இப்படி இருக்கான். கிட்ட தட்ட நாலு வருஷமா இப்படி தான் இருக்கான். நாமளும் என்ன பிரச்சினைன்னு கேட்டு பார்த்தாச்சு வாய தொரந்து ஏதாவது சொன்னா தானே அடுத்து என்னென்னு யோசிக்கவே முடியும். இப்படி கல்லு போல நின்னா என்ன பண்ண” என்றவருக்கு மகனின் மீது கவலை தான். இருப்பினும் மற்ற பிள்ளைகளை விட முடியாதே.

திருமண வயதில் நந்தினி இருக்கிறாள் என்பதையே இருவரும் மறந்திருந்தனர்.

அனுராதாவிற்கு அன்புவே பார்த்து பார்த்து திருமணத்தை செய்து வைத்தான். ஆனால் இப்போது அந்த சூழல் இல்லையே.

இருவரும் மகனை நினைத்தே மகளை விடுவதில் தில்லைக்கு விருப்பமில்லை. அதனால் தான் அவராகவே பேச்சை எடுத்துவிட்டார்.

“நந்தினிக்கு இப்பவே இருபத்தியஞ்சு ஆகப் போகுது. எப்ப தான் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்க துரை?” அண்ணன் கேட்ட பின்பு தான் மகளுக்கு வயதாகிறது என்றே உணர்ந்தார்.

“பாக்கணும் னா ” என்றார் தயங்கிய குரலில்.

“உங்க கவலை எல்லாம் புரியாம இல்லை துரை. ஆனாலும் மத்ததையும் பாக்கணும் தானே. நந்தினியோட கல்யாணம் கூட அன்புவோட இப்போதைய வாழ்க்கையை மாத்த வாய்பிருக்கே” என்றதும் கணவனும் மனைவியும் ஒவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அன்பு மாறுவானா மாமா?” சீதா கவலையான குரலில் கேட்கவும்,

“மாற வாய்பிருக்கு சீதா. நீ ரொம்ப யோசிச்சு உன்னை வருத்திக்காத” என்றார் ஆண்டாள்.

“நாளைக்கு தரகரை வர சொல்லியிருக்கேன். நந்தினியோட ஃபோட்டோவை கொடுத்துவிடு. ஏதாவது நல்லது நடக்கும். கவலைப்படாத துரை” என்று சற்று ஆறுதல்கள் கூறினார்.

தில்லையப்பன் கூறிய வார்த்தைகள் தம்பிதுரைக்கும் சீதாவிற்கும் சற்றே ஆறுதலாக இருந்தாலும், அன்புவின் வாழ்க்கையில் இது எப்படி மாற்றியமைக்க போகிறது என்று தான் புரியவில்லை.

************

“அம்மா சீக்கிரமா டிஃபன் கொண்டு வாங்க. பசிக்குது. வெளிய போகணும் பாருங்க” என டைனிங் டேபிளில் அமர்ந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் இளவரசி.

“ஏன் டி நீ என்ன வெட்டி முறிக்க போறன்னு இத்தனை வேகமா வந்துருக்க” என்று சமையலறையில் இருந்து கத்தினார் செண்பகம்.

“ஏன் ஏன் ஏன் நான் வரக்கூடாதா என்ன?” என்றவள்,

“டாடிஈஈஈஈ…” என சத்தமாக அழைத்தாள்.

வேகமாய் வெளியே வந்த செண்பகம் மகளை முறைத்தவர் அவளுக்கு ஊற்றிய தோசையை தட்டில் வைத்தவர்,

“என்ன உங்க அப்பாவா சப்போர்ட்க்கு கூப்பிடுறியோ. படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகாம ஊரை சுத்திட்டு திரியிற உனக்கு பேச்சை பாரேன்” தோசையோடு சேர்த்து மகளையும் சுட்டு எடுத்தார்.

“மம்மி நான் ஒன்னும் ஊர் சுட்டிட்டு இல்ல. ஐம் ஏ யூட்யூபர் மாம். நீங்களே இப்படி பேசினா எப்படி?” என வராத கண்ணீரை துடைப்பது போல் பாவனை செய்ய, அதற்குள் அவள் தந்தை சந்திரசேகர் அங்கே வந்தார்.

“அம்மு, என்ன டா பண்ணுது?” அக்கறையுடன் வினவியவர்,

“ஏன்டி என் புள்ளையை நிம்மதியா ஒரு வாய் சாப்பிட விடுறியா நீ? சாப்பிடுற நேரத்துல தான் ஏதாவது பேசி அவளை சாப்பிட விடமா பண்றது” என மனைவியை திட்டினார் சந்திரசேகர்.

“அப்படியே உங்க பச்சை மண்ணு சாப்பிடாம இருந்துட்டாலும் போங்க பா. காலையிலே காமெடி பண்ணிக்கிட்டு” என வந்தமர்ந்தான் வீட்டின் மூத்த மகன் கார்த்திகேயன்.

ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறான்.

“உனக்கு என்ன டா வந்துச்சு. எங்க ப்பா எனக்காக பேசுறாரு உன்னக்கென்ன” அவளும் சீறிக்கொண்டு வர என அண்ணனும் தங்கையும் காலையில் ஆரம்பித்து விட்டனர்.

இது தினமும் நடப்பது தான் என்பதால் தாயும் தந்தையும் இதில் தலையிடவில்லை. தள்ளியே நின்று வேடிக்கை பார்க்க, இறுதியில் இரண்டும் பெரியவர்களை தான் முறைத்தது.

“நாங்க தான் அடிச்சிக்கிறோமே யாராவது காப்பாத்த முன்வரீங்களா. யாருக்கும் பாசமே இல்லை” என்றவள் மேலும் இரண்டு தோசையை தட்டில் வைத்து சாப்பிட்டாள்.

பின் கார்த்திக்கிற்கு நேரமாக, அவன் கிளம்புவதற்கு வண்டி எடுக்கவுமே அவள் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“என்ன பண்ற?”

“டேய் அண்ணா, போற வழில்ல அப்படிக்கா என்னைய ட்ராப் பண்ணிட்டு போ” என்றவளை திட்டினாலும் அழைத்து சென்றான் அவன்.

இந்த அனைத்து சேட்டைகளுக்கும் சொந்தமானவள் மங்கை. மங்கை எனப்படும் மங்கையர்க்கரசி.

அம்முவின் குடும்பத்தில் ஒருபக்கம் சந்தோஷமான சூழ்நிலை, மறுபக்கம் அன்புவின் குடும்பத்தில் கனமாகும் நிலை.

இரண்டு உலகங்கள். இரண்டு வாழ்க்கைகள். இருவரின் பாதைகள் எங்கே சந்திக்கப் போகின்றன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!