Skip to content
Post Views: 11,192
அத்தியாயம் 25
காலையில் தான் அர்ஜுன் விஜயலக்ஷ்மி திருமணம் சீரும் சிறப்புமாய் நடைபெற்றிருந்தது.
Advertisement
மண்டபம் நிறைய கூட்டம் மட்டும் தான். இருக்கும் சொந்த பந்தம் சுற்றம் என ஒருவர் விடாமல் அனைவர்க்கும் அழைப்பு விடுக்க அர்ஜுன் சொல்லியதின் பெயரில் மண்டபம் கொள்ளா அளவிற்கு நிறைந்தது மக்கள் கூட்டம்.
குழந்தை கயல்விழியை முன் வைத்து தான் மாங்கல்யத்தை விஜயலக்ஷ்மியிடம் சேர்ப்பித்தான் அர்ஜுன்.
Advertisement
Advertisement
“மிஸஸ் அர்ஜுன்!” அர்ஜுன் அழைக்க முகமும் அகமும் நிறைந்த புன்னகை விஜயலக்ஷ்மியிடம்.
முழு கொண்டாட்டம் தான். அர்ஜுன் விஜயலக்ஷ்மி வேறொரு உலகத்தில் தங்கள் கனவு வாழ்க்கையை நிறைவேற்றிக் கொண்ட களிப்பில் இருந்தார்கள் என்றால் அனன்யா தன் விருப்பத்திற்கு என ஓடி ஆடி திரிந்து அத்தனைக்கு அட்டகாசம் செய்தாள்.
Advertisement
“ஏன் டி இந்த ஆட்டம் ஆடுற?” கலையரசி கேட்டதற்கு,
“ஒன்பது மாசம் உங்க பேத்தியை பொத்தி பொத்தி பாதுகாத்து இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு அவ பிறந்த அப்புறமும் மூணு மாசம் ஆடாம அசையாம இருந்தேன்ல? அப்ப கேட்டீங்களா? அப்ப இப்பவும் கேட்க கூடாது!” என பேச்சு வேறு அனன்யாவிற்கு.
“என்ன அக்கா! செம்ம குஷி போல?” அனன்யாவிடம் தீபக் கேட்க,
“உன்னை ரொம்ப நேரமா என் வீட்டுக்கார் தேடுனாரே டா! எங்க போன நீ?” என்றாள் அனன்யா.
“மாப்பிள்ளை தோழன் எங்க போவான்? அவன் கூட தான் இருந்தேன்! அவனுக்கு ஆள் வந்ததும் என்னை கழட்டி விட்டுட்டான். அதான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்! ஆனா தேடுனாரே என்னனு உங்க வீட்டுக்காரரை தேடி மட்டும் போக மாட்டேன்! விருந்துக்கு வான்னு வீட்டுக்கு கூப்பிட்டு வச்சு இவனை போய் கல்யாணம் பண்ணிட்டியேன்னு என் பொண்டாட்டிகிட்ட சொல்றாரு அன்னைக்கு. மனுஷனா அவரு?”
“என்ன சொன்ன? மனுஷனாவா?” அனன்யா கேட்க,
“ஆமா! அப்படி தான்! நீங்களும் அன்னைக்கு சிரிச்சீங்க தானே? இன்னைக்கு என்ன செய்விங்க?” என வீராப்பாய் தீபக்கும் சொல்ல,
“இப்ப தான் டைனிங் ஹால்ல உன் வீட்டம்மா கூட விவேக் சாப்பிட்டுட்டே பேசிட்டு இருக்குறத பார்த்தேன்! அய்யோ பாவம் தீபக்! இந்த சின்ன வயசுல உன்னை தனியா இருக்க வச்சிடுவாரோனு நான் கூட கவலைப்பட்டேன்! ஆனா தப்பே இல்ல! நீயெல்லாம்…” அனன்யா சொல்ல,
“போச்சு போச்சு! போயும் போயும் அந்த மனுஷன் கூடவா சாப்பிட போவா இவ! அய்யோ!” என அலறி அடித்து அவர்களை தேடி சென்றான் தீபக்.
மோதிரத்தை குடத்தில் இட்டு அர்ஜுன் விஜயலக்ஷ்மியை தேட சொல்லி சுற்றி தீபக், தீபக் மனைவி, அனன்யா, விவேக் என சிறுவர் பட்டாளம் இருக்க, தேடிய ஜோடிக்கு இரண்டு மோதிரங்கள் ஆளுக்கு ஒன்றாய் கிடைத்திருந்தது.
அதுவும் விவேக், அனன்யாவிற்கு அர்ஜுன் வாங்கியது போன்ற மோதிரம். விவேக் தான் ஏற்பாடு செய்திருந்தான்.
“குடும்ப மோதிரமா? யாராச்சும் தொலைஞ்சு போய்ட்டா மோதிரத்தை காட்டி சேர்ந்துடுவீங்களா?” தீபக் கேட்க,
“ஒத்த நல்ல வார்த்தை வருதா!” என அவன் தலையிலேயே தட்டி இருந்தான் விவேக்.
ப்ரணித்தாவின் பெரியப்பா தன் மனைவியோடு கலந்த கொண்டவர் மணமக்களை வாழ்த்திவிட்டு கிளம்பிவிட்டனர்.
அனன்யா கேளாமலே அவளிடம் சென்று பேசியவர், “ப்ரணித்தா எங்க வீட்டுல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டா அனு! அவளுக்கு ஹாஸ்டல்ல இருக்குறது தான் சுதந்திரமாம்! அவ கல்யாணத்தை நாங்க முடிவெடுக்க கூடாதாம்! இந்த ஊரை விட்டே போறதா சொன்னா! எங்க என்னனு எதுவும் சொல்லல! எங்களை யாரோன்ற மாதிரி பேசிட்டு போய்ட்டா!” என மனம்விட்டு வருந்தி இருந்தார்.
“மாமா! சில மனுஷங்களை எல்லாம் திருத்த முடியாது! அவங்களா பட்டு தான் தெரிஞ்சுக்கணும்! தம்பிப் பொண்ணுன்னு நீங்க பாசமா தான் இருந்திங்க! அதோட மதிப்பு தெரியாம போனவளை நினச்சு வருத்தபடாதீங்க! காலம் தான் அவளுக்கெல்லாம் பதில் சொல்லும்! தன்னை கேட்க யாரும் இல்லைன்றது சிலருக்கு தான் வரம்! பலருக்கு சாபம் தான்! அவளும் புரிஞ்சிக்குற நாள் வரும். நாங்க இருக்கோம் உங்களுக்கு!” என்று அனன்யா அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவள் அர்ஜுனிடம் இதையெல்லாம் எதற்கு சொல்லி அவளை நினைக்கவே வைக்க கூடாது என்று விட்டுவிட்டாள்.
மாலை அர்ஜுன் வீட்டின் அருகே இருக்கும் மண்டபத்தில் வரவேற்பு நடைபெற, வந்தவர்கள் எல்லாம் சாப்பிட்டு மண்டபத்தில் இருந்தே கிளம்பி இருந்தனர்.
விவேக் உறவுகள் எல்லாம் கலையரசி சந்தானம் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட, அனன்யா விவேக்கோடு தீபக்கும் தான் மணமக்களை அர்ஜுன் வீட்டிற்கு அழைத்து வந்தது.
“நாம இன்னைக்கு எங்க வீட்டுல தங்கிப்போமா!” என்று அனன்யா விவேக்கிடம் கேட்டதற்கு அவனும் சம்மதித்திருந்தான்.
இரவு பத்து மணியை நெருங்க இருந்த நேரம்,
“அப்புறம் மாமா! நீங்க எப்ப கிளம்புறீங்க?” அர்ஜுன் கேட்டானே கேள்வி விவேக்கிடம்.
“அர்ஜுன்?” என விஜயலக்ஷ்மி அதிர, அவளிடமும் ஒரு கண் சிமிட்டல் அர்ஜுனுக்கு.
“அடேய்! எனக்கு தேவை தான் டா!” என மனைவியிடம் வந்து கூறி இருந்தான் விவேக்.
“அவமானம் அவமானம்! என தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள் அனன்யா.
“இதெல்லாம் நான் எப்பவோ பார்த்தாச்சு! நீங்க லேட்டு! சீக்கிரம் ஓடிடுங்க! நான் எஸ்கேப்!” என உடனே விடைபெற்று கிளம்பிவிட்டான் தீபக்.
“இன்னும் நமக்கென்ன வேலை இங்க?” என்று அனன்யா கேட்க,
“ஒரு பத்து நிமிஷம் அனு!” என்ற அர்ஜுன் விவேக்கை காரில் வெளியே அழைத்து சென்ற பின் அனன்யாவிடம் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள் விஜயலக்ஷ்மி.
‘என்ன செய்கிறான் இவன்?’ என சில நிமிடங்களில் மனதை பதறி படபடக்க வைத்துவிட்டான்.
ஏற்கனவே இரவை நினைத்து ஒரு மனம் அடித்துக் கொண்டிருக்க, அனன்யா இங்கே இருப்பதாய் சொல்லவும் கொஞ்சம் சமாதானம் அடைந்திருந்த விஜயலக்ஷ்மியை அனன்யாவை கிளம்ப வைத்து மீண்டும் அதிர்ந்து விழிக்க வைத்துவிட்டான் அர்ஜுன்.
“அண்ணி அண்ணி! ப்ளீஸ் அண்ணி! நீங்க மட்டும் இருங்களேன்! ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்! செல்லம்ல?” என அத்தனை கொஞ்சல் விஜயலக்ஷ்மியிடம்.
“உன் புருஷன் வெளில போனு சொல்றதுக்கு முன்னாடி நாங்களே மரியாதையா கிளம்புறோம்! அநியாயம் பண்ணாத டி!” என்றாள் அனன்யா.
“நீங்க தான் அநியாயம் பண்றீங்க! எந்த வீட்டுல இப்படி முதல் நாளே தனியா விட்டுட்டு போவாங்க?” விஜயலக்ஷ்மி கேட்க,
“அப்போ எந்த வீட்டுல கல்யாணம் ஆன முதல் நாள் கல்யாணப் பொண்ணு பொண்ணு கூட அவங்க அண்ணி தங்கி இருப்பாங்க? நீ சொல்லேன்!” என்றாள் அனன்யாவும்.
“உன் அண்ணா கார் எடுத்துட்டு போனார்! எங்க போனார் தெரிலயே!” என வாசலைப் பார்த்து நின்றாள் குழந்தையுடன் அனன்யா.
“அண்ணி! இது உங்க அம்மா வீடு! உங்க வீடு! உங்களுக்கு அப்புறம் தான் எனக்கு உரிமையே! நீங்க தான் அண்ணி உங்க தம்பி கூட சண்டை போட்டு உங்க உரிமையை நிலைநாட்டணும்!” விஜயலக்ஷ்மி கைகளைப் பிசைந்து நின்றவள் சட்டென யோசித்து இப்படி சொல்ல,
“வாஸ்தவம் தான்! நிலைநாட்டானும் தான். நாளைக்கு நான் இங்க வந்து ஒரு மாசம் இங்க தான் இருக்க போறேன்னு சொன்னா கூட அர்ஜுன் ஒன்னும் சொல்லமாட்டான்! ஆனா இன்னைக்கு இப்ப இந்த பத்து மணிக்கு அப்புறம் இருந்தேன்னு வையேன்! எனக்கு தான் டி அது அவமானம்! கொஞ்சமாவது புரிஞ்சிக்கோ! டாக்டர் மாதிரியா பிகேவ் பண்ற?” என்று அனன்யா சொல்லவும் காரில் இருந்து விவேக்கோடு அர்ஜுனும் இறங்க, பார்த்ததும் மீண்டும் படபடப்பு தொற்றிக் கொண்டது விஜயலக்ஷ்மி.
“அண்ணி அண்ணி! ப்ளீஸ் அண்ணி! ப்ளீஸ் அண்ணி!” பார்வையால் அவளை விழுங்கிக் கொண்டே அர்ஜுன் தூரத்தில் இருந்து நெருங்க நெருங்க அனன்யாவை ஒட்டிக் கொண்டு பார்வையை அவனிடம் வைத்து அத்தனை கெஞ்சல் விஜயலக்ஷ்மியிடம்.
“அய்யய்ய! என்னனு டா பொண்டாட்டியை வளத்து வச்சிருக்க?” அனன்யா கேள்விக்கு,
“அவன் இனி தானே வளக்கணும்?” என்று விவேக் வாய்விட்டு மாட்டிக் கொள்ள,
“அப்போ உங்களை தான் சொல்லணும்! சும்மா நசநசன்னுட்டு இருக்கா. போய் அவளை என்னனு கேளு! நாங்க கிளம்புறோம்!” என்றாள் அனன்யா அர்ஜுனிடம்.
‘விடமாட்டேன்!’ என்பதைப் போல அனன்யா கைகளை இறுகப் பற்றி இருந்த விஜயலக்ஷ்மியின் நிலை புரிந்து அத்தனை கள்ளப் புன்னகை அர்ஜுனுக்கு.
வேண்டுமென்றே அவள் கைகளை உரசி சென்று அனன்யாவிடம் இருந்த குழந்தையை கைகளில் வாங்கிய அர்ஜுன்,
“கயலம்மா!” என தூக்கிக் கொண்டு,
“இப்ப அவங்க இருந்தா மட்டும் என்ன பண்ணிடுவாங்க?” என்று விஜயலக்ஷ்மிக்கு மட்டும் கேட்கும்படி கூறி நகர்ந்துவிட, அதுவும் சரி தானே என தாமதமாய் தோன்றி விழித்தபடி நின்றாள்.
“ம்ம் இந்தா அர்ஜுன்!” என கையில் இருந்த கவரை விவேக் அர்ஜுனிடம் நீட்ட,
“என்ன அது?” என்றாள் அனன்யா.
“விஜிகிட்ட குடுங்க மாமா!” என்றான் அர்ஜுன்.
“ஓஹ்! நமக்கில்லை போல!” அனன்யா சொல்லியது எல்லாம் காதில் விழாமல் கவரைப் பிரித்த விஜயலக்ஷ்மி விழிவிரிக்க, இன்னுமே வெளிவரப் பார்த்தது அர்ஜுனின் புன்னகை.
“பாதுஷாவா? நான் கூட என்னவோ நினச்சேன்!” அனன்யா சொல்லவும் அர்ஜுன் விஜயலக்ஷ்மியைப் பார்க்க, ‘ஏன்?’ என்பதைப் போல பார்த்து வைத்தாள் அவன் மனைவி.
“ஏதோ கோட் வேர்டு மாதிரி இல்ல?” விவேக் அனன்யாவிடம் மெதுவாய் கேட்க,
“உங்களுக்கு அவ்வளவு புரியுதா மாமா?” என்றாள் அனன்யா.
“ஏன் டி! ரூம்ல அவ்வளவு ஸ்வீட்ஸ் வச்சிருக்கோம்! இவன் இந்நேரம் என்னை கூட்டிட்டு போய் கடைகடையா தேடி இதை வாங்கிட்டு வர்றான்னா சும்மாவா? நீ எதுவும் கேட்டுக்காத! டீசென்டா நில்லு!” விவேக் சொல்ல,
“இதுல என்ன டீசென்ட்டு? அவன் ஸ்வீட் சாப்பிடவே மாட்டானே!” என்ற அனன்யா,
“அப்படி தான டா?” என சத்தமாய் கேட்க,
“அச்ச்சோ அண்ணி!” என பல்லைக் கடித்தாள் விஜயலக்ஷ்மி.
“கன்ஃபார்ம் கோட் வேர்டு தான்!” விவேக்.
“அவளை குடு! நாங்க கிளம்புறோம்!” அனன்யா இருவரையும் பார்த்தவள் பின் குழந்தையை கேட்க,
“ஹ்ம்ம் இதோ!” என்றவன் குழந்தையோடு ஹாலில் சென்று அமர்ந்துவிட்டான்.
விடமாட்டான் என புரிந்து போனது விஜயலக்ஷ்மிக்கு. ‘இதுக்கு இவங்க ஸ்வீட் சாப்பிடாமலே இருக்கலாம்’ என நினைக்காமலும் இல்லை.
வேறு வழியே இல்லை! இருவரும் என்னவோ செய்கிறார்கள் என புரிந்து அனன்யா விவேக்கோடு பேசியபடி வாசலுக்கு பின் நிற்க,
“அர்ஜுன்! ப்ளீஸ்! அவளைக் குடுங்க! அவங்க கிளம்பட்டும்!” என்றாள் விஜி.
“நானும் அதான் சொல்றேன் விஜி! அவங்களுக்கு லேட் ஆச்சு! சீக்கிரம் குடு! அம்முக்கு வேற தூக்கம் வந்துடுச்சு!” என்றான் குழந்தையிடம் விளையாடியபடி அர்ஜுனும்.
இப்படியா செய்வான் என அத்தனை வெட்கம் வேறு! முன்பே நியாபகம் இல்லாமல் போனதே என்ற ஆற்றாமை என நின்றவள் தங்களுக்காக இவர்களை காக்க வைக்கவும் பிடிக்காமல் பாதுஷாவை திறக்க, ரகசிய புன்னகை அர்ஜுனிடம்.
இப்படி கயலை கைகளில் வைத்திருக்கும் போது தான் விஜி இனிப்பை தர வேண்டும் என அர்ஜுன் அன்று சொல்லி இருக்க, அதுவும் வேண்டுமென்றே இத்தனை நாள் விட்டு இன்று வாங்கி வந்திருக்கிறான் எனவும் புரியாமல் இல்லை அவளுக்கு.
“ரொம்ப பண்றீங்க நீங்க!” என்றவள் பாதுஷாவை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட நீட்ட, அத்தனை போக்குக் காட்டி அல்லவா வாங்கிக் கொண்டான்.
“இந்த ஸ்வீட் சாப்பிடாம வேற ஸ்வீட் சாப்பிட முடியாது விஜி! உனக்கு இன்னும் ரூல்ஸ் தெரியல!” என கள்ளப் பார்வை பார்த்தவன் பேச்சில்,
“அச்சோ! மூச் மூச்!” என்றவள் குழந்தையை கைகளில் அள்ளிக் கொள்ள, தானுமே எழுந்து கொண்டான் அர்ஜுன்.
“எல்லாம் ரூம்லயே வச்சுட்டேன் விஜி! பார்த்துக்கோ!” என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள் அனன்யா விவேக்குடன்.
“அவங்க இந்நேரம் வீட்டுக்கே போயிருப்பாங்க விஜி! உள்ள வா!” என்றவன் சொல்லை விட அவன் புன்னகை தான் பாடாய் படுத்தியது பெண்ணை.
“உக்காரு!” என ஹாலில் அமர்ந்து அவளையும் அமர சொல்ல,
“ஹ்ம்!” என்றவள் உணர்வு புரிந்து சில நிமிடங்கள் அவளுக்கு தனிமை கொடுத்து அர்ஜுன் எழுந்து சென்றிருக்க, தானும் உடன் செல்லவா வேண்டாமா என்றொரு குழப்பம் இன்னும் பதட்டத்தை கூட்டியது அவளுக்கு.
ஏன் கூப்பிடவே இல்லை என்றும் ஒரு எண்ணம்.
“காபி வேணுமா விஜி!” சென்ற இரண்டு நிமிடத்தில் அவனுமே வந்துவிட்டான்.
“ம்ம்ஹும்ம்!” என்றதோடு தலையசைப்பு மட்டும் அவளிடம்.
“ஹ்ம்” என்றவனுக்கு புரிந்து போனது அவளும் நிதானமாக போவதில்லை தானும் நிதானமாய் இல்லை என.
“ஓகே! அப்ப ரூம்க்கு போ! நான் டோர் எல்லாம் லாக் பண்ணிட்டு வர்றேன்!” என்று சொல்ல, மூளையில் ஒரு அலறல் சத்தம் இதயத்தில் ஒரு இரைச்சல் என உழன்றவள் தலையை உலுக்கிக் கொண்டு எதுவும் கூறாமல் படியேற, இதழ்களை மடக்கி உள்ளிழுத்து புன்னகையோடு பார்த்து நின்றான் அவள் செல்லும் வரை.
அவனது அறை! இனி என்னுடையதும்! எங்களுடையது! என்று கண்களை சுற்றிலும் பார்வையிட, பழங்களுடன் பால் மற்றும் அனன்யா கூறியது போல இனிப்புகள்! பார்த்ததும் புன்னகைத்தவள் அறையில் கட்டிலில் என பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் கவனித்தாள். அதில் கொஞ்சம் இலகுவானவள் நிதானமாய் மூச்சுவிட, கதவடைக்கும் மெல்லிய சத்தம் அவளை எட்டவில்லை போல.
“விஜி!” என பின்னிருந்து கேட்ட சத்தத்தில் அவள் திடுக்கிட்டுத் திரும்ப நினைக்கும் முன் அவன் அணைத்திருந்தான்.
“இவ்வளவு டென்ஷன் வேணாம்! நான் தான்! நான் மட்டும் தான் இங்க இருக்கேன்!” அர்ஜுன் சொல்ல, இவளுக்கு மூச்சு வாங்கியது.
“ஓய்! என்ன?”
“அர்ஜுன் ப்ளீஸ்! என்ன வாய்ஸ் இது? ஈவ்னிங் இருந்தே நீங்க சரி இல்ல?”
“ஹ்ம்! கவனிச்சியா!”
“பேசாதீங்க!” விஜயலக்ஷ்மி சொல்ல,
“பேசாம?” என்றவன் சொல் அவள் காதோடு உரசி செல்ல,
“ச்சோ!” என்று திரும்பி அவன் சட்டையில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“விஜி!” என்றவன் கைகள் இடையோடு அவளை வளைத்துக் கொள்ள,
“அர்ஜுன்! ப்ளீஸ்!” என்ற சத்தம் முணங்கலாய்.
“நானும் ப்ளீஸ்!”
“ப்ச்!” என்று அவனிடம் இருந்து அவள் விலகிவர முயல, அவன் வழிவிட வேண்டுமே!
“அர்ஜுன்!” என்று சிணுங்கலாய் அவள் பார்வை அவனிடம் செல்ல, அந்த கண்களின் பார்வை வீச்சையும் எதிர்கொள்ள முடியவில்லை.
“ஓஹ் நோ!” என்று மீண்டுமாய் அவன் நெஞ்சோடு சாய்ந்தவள், “என்ன லுக் இது? ஹப்பா! ம்ம்ஹும்ம்!” என தலையசைத்தவள் அடிவயிற்றில் புதுவித உணர்வில் மனதெல்லாம் சதிராடியாது.
“ஹே விஜி! என்ன பண்ற நீ?” என சிரித்தவன்,
“நீ எவ்ளோ நோட் பண்றனு தெரியுதா உனக்கு?” என்று கேட்க, இன்னுமாய் வெட்கத்தில் அவனோடு புதைந்தாள்.
“இன்னும் இன்னும் டெம்ப்ட் பண்ற!”
“ப்ளீஸ் அர்ஜுன்! வேறெதாச்சும் பேசுங்க!”
“எனக்கு பேச எதுவும் இல்லயே! நீ வேணா பேசு!” என்று அழைத்து வந்து கட்டிலில் அமர்ந்து அவளையும் அமர சொல்ல, எங்கே அவன் முகம் பார்க்க நேரிடுமோ என மறுத்து தோளோடு சாய்ந்து அமர்ந்தாள்.
“விவரம் தான்!” என்றவன் இடையோடு சேர்த்து தன்னருகில் வெகுவாய் இழுக்க, மீண்டும் மீண்டும் அவனோடு இணைந்தாள் அவள்.
“இப்பவும் நீ தான்! நானில்ல!” என்றவன் உல்லாச குரல் அவன் வேலையை காட்டி கொடுத்ததே!.
“ரொம்ப வெயிட் பண்ணிட்டோம்! நிறைய பேசிகிட்டோம். நிறைய தெரிஞ்சிகிட்டோம்! இன்னும் நிறைய தெரிஞ்சுப்போம் விஜி!” என்றவன் பேச்சில் கடந்த கால நினைவுகள்.
“எத்தனை வருஷம்ல?” விஜயலக்ஷ்மி.
“ஹ்ம்! ஆமா!” என்றவன் முத்தம் அவள் கழுத்தோரம் விழ, கண்களை மூடிக் கொண்டாள்.
“நானும் நமக்கான நேரமும்! புரியுதா?” என்றவன் அவள் முகம் பார்த்து கேட்க, கண்களை திறக்கவில்லை அவள்.
“ஸ்வீட் வேணுமே விஜி!” என்று கேட்டதில் சட்டென விழித்து அவனைப் பார்க்க, வேண்டுமென்றே கேட்டிருக்கிறான்.
“அர்ஜுன்!” என்றவள் சுத்தமாய் அந்த குரலையோ பார்வையையோ அவன் விரல் ஸ்பரிசத்தையோ என தாங்கவும் தாளவும் முடியாமல் தள்ளாடி தளர்ந்தாள்.
சின்ன சின்ன முத்தங்கள் இதயத்தை நனைய செய்ய, அவன் பார்வைபடும் இடங்கள் எல்லாம் கூசி சிலிர்த்து எழ, முழுவதும் அவன் ஆட்சி தான் அவளிடம்.
முதல் இதழ் ஸ்பரிசத்தில் உயிரெல்லாம் பனி சாரல்கள் என முற்றிலும் அவனோடு தொலைந்து போனவள் உயிரெல்லாம் உருகி இளகியது.
மென்மையானவனின் அத்தனை அத்துமீறல்களும் அவளுக்கான அவனை அவளுக்கு உணர்த்தி இருக்க, தன்னவளை தானே எடுத்து தன்னை கொடுத்து என உயிரில் உணர்வில் என கலந்து மீண்டு மீண்டும் மூழ்கி இருந்தனர்.
காலங்கள் கொடுத்த காயத்தின் வடுக்களை எல்லாம் மனதில் தேக்கி வைத்து தான் என்ன பயன்.
உணர்வுகளால் பிணைக்கப்பட்ட இருவருக்கு இடையில் நேசத்தின் சாயல் நிரம்பி இருக்குமெனில் காலங்கள் கடந்தேனும் அங்கே காதல் நிறைந்து தான் இருக்கும்.
“விஜி!” என்றவனின் தலைகோதலில் அவன் நேசத்தின் மொத்தமுமாய் தான் இருப்பதை உணர்ந்தவள் கொடுத்த நெற்றி முத்தம் அவனுக்கு இனி வாழும் காலத்தில் தான் பெற்ற மொத்த நேசத்தின் விதை.
என்றும் அர்ஜுனின் முதலும் முடிவுமாய் அவனவள்!
தொடரும்..
error: Content is protected !!