Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக💞21

­என்ன பேச வேண்டும்? எப்படி பேசவேண்டும் என்று பயம் பாப்பாத்திக்கு.

பேசத் தெரியாமல் பேசி அந்த பொண்ணை காயப்படுத்தி விடுவோமோ என்ற தயக்கம் அவருக்கு.

பேசாமல் ஒரு இரும்புத்திரை போடவும் அவருக்கு தெரியவில்லை.

சுபிக்கு பிகுவாக இருக்க வருகிறது என்றால் அவள் இளரத்தம் ஆனால் பாப்பாத்திக்கு ரொம்பவும் ரோஷமாக முறுக்கிக் கொள்ள  வரவில்லை நான்கு மகனை பெற்ற தாய் அல்லவா?



Advertisement

அவளை வேலை வாங்க வேண்டுமா? கூடாதா? மென்று விழுங்கியபடி இருந்தார்.

மதிய சமையலுக்கு சின்ன வெங்காயம் உரிக்கவா? அவளாக கேட்டாள்.

சரிம்மா என்று நாலாபக்கமும் தலையாட்டினார்.

Advertisement

என்ன பொரியல்?

Advertisement

அவரைக்காய் நிறைய இருக்கு. உனக்கு வேணும்னா கேரட் பீன்ஸ் பொரியல் பண்ணலாமா? எவ்வளவு தாக்குப்பிடித்தும் அவருக்கு எண்ணி எண்ணி பேச வரவில்லை. அவர் சுபாவம் அப்படி.

இல்ல அவரைக்காய் பொரியலே பண்ணுவோம் என்றாள்.

இப்படியாக ஒட்டியும் ஒட்டாமலும் பேச்சு இருந்தது.

Advertisement

“————————–“

மன்னர் இன்னும் இறுக்கமாகவே தான் இருந்தான்.

சட்டென்று கோபப்படவும் சட்டென்று சமாதானம் ஆவதும் சிலருக்கு தான் வரும்.

பெண்ணிடம் கை நீட்டும் அளவிற்கு பலகீனமானவாக அவனை வளர்க்கவில்லை.  அவன் தந்தை ஒரு நாளும் மனைவியை அடித்தது இல்லை ஏன் அதட்டியது கூட இல்லை. அண்ணன்மார்கள் மூவரும் தந்தையை விட ஒருபடி மேல், மனைவி சொல்லே மந்திரம் மனைவியே உலகம் என்று வாழும் மனைவிதாசர்கள். அந்த குடும்பத்தில் பிறந்த மன்னர் மட்டும் எப்படி இருப்பான்?

அக்கம் பக்கம் விசாரித்து இதெல்லாம் தெரிந்து தான் பூவராகன் இந்த மாப்பிள்ளை சூப்பர் இந்த வரனை விட்டுவிடக் கூடாது என்று விடாப்பிடியாய் சம்மந்தம் பேசி முடித்தார்.

மனைவியை அடித்து திருத்த அவள் என்ன அவன் ஸ்டேஷனில் இருக்கும் குற்றவாளியா?

அவ்வளவு பக்குவமாக நடத்தினான், மரியாதையோடு நடத்தினான் அவளுக்கு தான் வாழ்வின் அடிநாதம் விளங்கவில்லை.

எவ்வளவு தான் பொறுப்பது? என்று தான் அவள் உணர்வது? இந்த முறை கொஞ்சம் மனகசப்பு அதிகம் அவனுக்கு.

நீ கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வேன் என்பது போலவே நடந்து கொண்டான்.

டிபன் ரெடி சாப்பிட வாங்க!

இதோ வரேன்.

மிளகு, பெருங்காயம்,நெய் இல்லை.

சரி வரும்போது வாங்கிட்டு வரேன்.

இப்படி தான் அவர்களின் பேச்சு.

பாப்பாத்தி கண்டு கொண்டு தான் இருக்கிறார்.

“———————–“

தம்பி மன்னரு அம்மா சொல்றேன்னு தப்பா நினைக்க கூடாது சரியா? பாகற்காயை பறித்து அன்னக்கூடையில் நிரப்பிக் கொண்டே பேசினார்.

அம்மாவும் மகனும் தோட்டத்திற்கு காய் பறிக்க வந்திருந்தனர். இன்று ஞாயிறு விடுமுறை எப்படியோ மன்னர் வீட்டில் தங்கிவிட்டான், அது தான் காலையிலே கிளம்பி தோட்டத்துக்கு வந்து விட்டனர்.

சொல்லுங்கம்மா… மன்னரும் முற்றி விளைந்த காயை பார்த்து பறித்து போட்டான்.

நீ மருமகள் கிட்ட நடந்துக்குற முறை எனக்கு சுத்தமா பிடிக்கல. முகத்திற்கு நேரே சொல்லிவிட்டார்.

ம்மா…. அதிர்ந்துவிட்டான்!

தாய் பார்க்கும்படியா தன் நடத்தை இருந்தது? குறுகிவிட்டான்.

அக்கா தங்கச்சி கூட பொறந்தா தான் பொண்ணோட அருமை தெரியணும்னு இல்ல சாமி. அம்மாவை பார்த்து வளரும் பிள்ளை கூட பொண்ணுங்களை மதிப்பா நடத்தும்! அவருக்கு தெரிந்த வகையில் நறுக்கென்று திருக்குறள் போல் சுருக்கமாய் சொல்லிவிட்டார்.

அம்மா…. நீங்க நினைக்கிற மாதிரி இல்லை… சடுதியில் முகம் மாறிவிட்டது அவனுக்கு.

எனக்கு கல்யாணம் ஆகி நாப்பது வருஷம் ஆகுது சாமி என்றார்.

இதற்கு மேல் அவன் என்ன பேச?

ஒன்னே ஒன்னு தான் சொல்வேன் நீ புத்திசாலி, பொறுமைசாலி உன் வழிக்கு அந்த பொண்ணை கொண்டு வர உன்னால முடியும்! கொஞ்சம் விட்டுப்பிடி…. ஆனா விட்டுடாதே.

முதுமை அனுபவம் பேசும்போது இளமை அடங்கி கேட்டு கொள்ள தான் வேண்டும்.

வர சனிக்கிழமை சங்கீதா பிள்ளைகளை கூட்டிகிட்டு வரா, அவ வந்தா அஞ்சலியும் வந்து நிற்பா…. அவங்க கண்ணுக்கு உங்க விலகல் தெரிஞ்சுது ஊருக்கே தண்டோரா போட்டுடுவாங்க பார்த்துக்கோ!

இது காலாண்டு விடுமுறை நேரம் அது தான் அவர்களின் படையெடுப்பு.

“————————-“

வேறு உறவுகளிடம் பிணக்கு என்றால் வார கணக்கில் வருட கணக்கில் கூட கோபத்தை இழுத்து பிடிக்கலாம். கணவன் மனைவி உறவில் விலகல் நாள் கணக்கில் போனாலே தவறான பாதையில் குடும்ப வண்டி செல்கிறது என்று அர்த்தம்.

இந்த முறையும் மன்னர் தான் இறங்கி வந்து கொஞ்சி கெஞ்சி பேசி  மெல்ல மெல்ல சமாதான கொடியை நாட்டினான்.

பாப்பாத்தியிடம் நன்றாகவே பேசத் தொடங்கினாள் சுபி.

அவர் தான் மனதிற்குள் ஒத்திகை பார்த்து பேசினார்.

சங்கீதா வருகிறாள் என்று சொன்ன உடனே சுபிக்கு பயங்கர உற்சாகம்.

பேசி மகிழ ஆள் கிடைக்கும் என்று ஒரு சந்தோஷம்.

அஞ்சலியும் போன் செய்து தாங்களும் ஞாயிற்று கிழமை வருவதாக சொன்னாள்.

காத்தான் மனைவியை அழைத்து அவர்கள் அறையை சுத்தம் செய்து வைத்தார் பாப்பாத்தி.

மருமகள் பேரக்குழந்தைகள் என்று வீடே நிறைந்திருக்கும் என்று பாப்பாத்திக்கு அவ்வளவு ஆனந்தம்.

கோதுமை அரைத்து வந்தார், உளுந்து உடைத்து புடைத்து நோம்பி தயார் செய்து வைத்தார், உப்பில் ஊறிய எலுமிச்சையை தாளித்து ஊறுகாய் போட்டு வைத்தார்.

இந்தம்மா என்ன இவ்வளவு வேலை செய்யுது? எலும்பும் சதையும் கொண்ட மனுஷியா? ரோபோவா? சுபி வியந்து விட்டாள். உண்மையில் அவள் அம்மா கூட இவ்வளவு வேலை செய்து அவள் பார்க்கவில்லை.

“———————“

என்னத்த நாங்க இல்லைனா எங்க ரூமை களீன் பண்ண மாட்டீங்களா? சங்கீதா வந்த உடனே சிடுசிடுத்தாள்.

அக்கா முந்தா நாள் தான் க்ளீன் பண்ணாங்க! சுபி முந்திக்கொண்டு பதில் கூறினாள்.

க்ளீன் பண்ண ரூம் போலவா இருக்கு? பக்கத்தில் இருந்து பொறுப்பா வேலை வாங்கணும். குகனுக்கு தூசி அலர்ஜியாகும்.

எங்கம்மா அங்கே திருக்கோயிலூருக்கு வர சொன்னாங்க நான் தான் மாமியார் வீட்டுக்கு போகணும் ஓரகத்திங்க கூட இருக்கணும்னு ஆசையா இங்கே கிளம்பி வந்துட்டேன். இங்கே நம்மை காணும்னு யார் ஏங்கி கிடக்குறா?முகத்தை அவ்வளவு முறுக்கி அதிருப்தியை காட்டினாள்.

திறக்கவே கூடாது என்று திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டி வைத்துவிட்டு நாங்க வரும்போது மட்டும் க்ளீன் பண்ணுங்க என்றால் அது எப்படி சுத்தமாக இருக்கும். காற்றும் வெளிச்சமும் பட்டு புழக்கத்தில் இருந்தால் தானே அறை சுத்தமாக இருக்கும்? இதை யார் அவளிடம் சொல்வது?

குகன், ஸ்ருதியோடு பொழுது நன்றாக போனது சுபிக்கு.

சித்தி சித்தி என்று பிள்ளைகள் அவளை வட்டமடித்தது.

பூ கட்டிக் கொண்டிருந்த சுப்ரஜாவிற்கு உதவி செய்கிறேன்  பேர்வழி என்று ஒரு வழியாக்கி கொண்டிருந்தனர்.

ஏய் குட்டீஸ் போய் டிட்டு, புக்ரே பாய்ஸ் பாருங்க… குழந்தைகளை விரட்டிவிட்டு அருகில் அமர்ந்தாள் சங்கீதா.

என்ன சுபி இங்கே செட் ஆகிடுச்சா? அக்கறையாய் விசாரித்தாள்.

ம்ம்ம்ம் ஓகேக்கா என்றாள் புன்னகையுடன்.

உன் மாமியார் எப்படி? வாயை கிண்டினாள்.

அது என்ன உன் மாமியார்? உங்களுக்கு வேற மாமியாரா என்ன? சிரித்துக்கொண்டே கேட்டாள்.

குறும்பூர்காரி விபரம் தான்…. புருஷன்காரன் ட்ரெயினிங் கொடுத்திருப்பான் எப்படி பேசணும்னு! உள்ளுக்குள் புகைச்சல் தான் என்றாலும் வெளியில் சிரித்து சமாளித்தாள்.

என்ன தான் எனக்கும் மாமியார்னாலும் நீ தானே கூடவே இருக்க கடைக்குட்டி செல்ல மருமக.

ஆனா அத்தை எல்லாரையும் மருமகளா தான் பார்க்குறாங்க.

அடி எவடி இவ…. எமகாதகியா இருக்காளே… கடுப்பு தான் சங்கீதாவிற்கு.

அக்கா நீங்க வறீங்கன்னு பத்து வயசு குறைந்த மாதிரி அத்தை ஓடி ஓடி வேலை பார்த்தாங்க.

அது மருமகளுக்காக இல்ல, பேரப்பிள்ளைங்க மேல இருக்குற பாசம் என்றாள் சங்கீதா.

“——————-“

மூத்த மருமகள் மூன்று பேரிலும் சங்கீதா கொஞ்சம் டெரர். அஞ்சலி லூசு போல் உளறிகொட்டி கெத்து காட்டுவாள், தீபா முன் கோபம் கொள்பவள் நேருக்கு நேர் பேசிவிடும் ரகம் அவளுக்கு சூட்சும புத்தி இருந்ததில்லை.

ஆனால் சங்கீதா பெங்களூருவில் இருந்தாலும் முடியனூரில் நடக்கும் விஷயம் அனைத்தும் அவள் விரல் நுனியில் இருக்கும். அக்கம் பக்கத்து மனிதர்களோடு தொடர்பில் இருப்பாள்.  இங்கே பங்காளி வீட்டு மனிதர்களிடம் அவ்வளவு பாசம் போல் பேசுவாள். மாற்றி மாற்றி போன் பேசி சிரித்து சிரித்து பேசி விசாரணை செய்து தெரிந்து கொள்வாள்.

சங்கீதா நல்ல பொண்ணு! வேற்றுமை இல்லாம பழகும். அன்பா அக்கறையா இருக்கும் என்பார்கள் பூமாலையின் இரண்டு அண்ணன் வீட்டு மனிதர்களும்.

சங்கீதா வருகிறாள் என்றதுமே மனைவியின் மீது கோபத்தில் இருந்த மன்னர் அவசரமாய் சமாதானம் ஆகிவிட்டான். மனைவிக்கு வேப்பிலை அடித்து வைக்க வேண்டுமே…

சுப்பு, சங்கீதா அண்ணி பேச்சுல கில்லி. அவங்கட்ட கவனமா பேசு!  அவங்க யாரையும் நல்ல விதமா  நினைக்க மாட்டாங்க. எல்லாத்துலேயும் ஒரு குற்றம் கண்டுபிடிப்பாங்க.

நான் சொல்ல கூடாது நீ பார்த்து தெரிஞ்சுக்கறது தான் சரியா வரும். ஆனாலும் அவங்களை வைத்து இங்கே மனஸ்தாதபம் எதுவும் வந்துடக் கூடாதேனு தான் சொல்றேன். எச்சரித்தே வைத்திருந்தான்.

சங்கீதா எவ்வளவு கில்லாடி என்றால் திருமண சீர் வரிசையில் மாமியாரை கோர்த்து விட்டு பெரிய பிரச்னையை கிளப்பியவள் அவள்.

ம்மா…. ஒரு பொண்ணு தானே பூஜை சாமான் எல்லாம் பித்தளையில் தான் வாங்கி தருவாங்களா? வெள்ளியில் வாங்கி தரலாமேன்னு ஆன்டி கேட்கிறாங்க என்று கொளுத்தி போட்டாள்.

எப்போ கேட்டாங்க? எங்கட்ட இது சம்மந்தமா பேசலையே….?உங்க பொண்ணுக்கு என்ன செய்றீங்களோ உங்க இஷ்டம்னு சொன்னாங்களே என்றார் அம்மா.

இல்லம்மா முகூர்த்த புடவை வாங்க போகும் போது என்கிட்ட பேசுனாங்க என்றாள்.

அவ்வளவு செலவு நெருக்கடியில் ஒன்றரை கிலோ வெள்ளியில் செட்டாக பூஜை பாத்திரம் வாங்கினார்கள்.

சம்மந்தி பத்திரிகை வைக்க செல்லும்போது பேச்சு வாக்கில் நீங்க கேட்ட மாதிரியே பூஜை சாமான் எல்லாம் வெள்ளியில் வாங்கிட்டோம் சம்மந்திமா என்றார் சங்கீதாவின் அம்மா.

எது நாங்க கேட்டோமா? அவர் புரியாமல் பார்த்தார்.

நாங்களும் நிறைய செலவு பண்ணி தான் எங்க பொண்ணை MCA படிக்க வைத்தோம் இருந்தாலும் என்ன? கல்யாணம்னு வரும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கறது எல்லாத்தையும் செய்ய வேண்டி இருக்கே….பொண்ணை பெத்துட்டா இப்படி தான்! அவர் இங்கிதம் இல்லாமல் புலம்ப….

அம்மா என்ன இதெல்லாம்? ஜெயராமன் சத்தமிட…. தம்பி சத்தியமா இவங்க என்ன சொல்றாங்கன்னே எனக்கு புரியல என்றவருக்கு கண்ணீர் பெருகியது.

ஜெயராமன் உடனடியாக போன் செய்தான்.

சொல்லுங்க! என்றாள்.

என்ன சொல்லுங்க? நீ என்ன சொல்லி வைத்த உன் வீட்டில்? கடுப்பாகி போனான்.

என்ன சொன்னேன்னா?

ம்ம்ம்ம்ம் வெள்ளியில் பூஜை சாமான் வாங்கின கதையை கேட்டேன்.

அது…. அதுவா? பிடிப்பட்டு விட்டோம் என்று புரிந்துவிட்டது. அம்மா அப்பா அங்கு போய் என்கொயரி செய்துவிட்டனர் என்று புரிந்து போனது.

அது…. சும்மா…. அத்தை கேட்டாங்கன்னு சொன்னா தான் செய்வாங்க! இப்போவே கேட்டு வாங்கினா தான் உண்டு.

அடச்சீ… அதுக்கு ஏன் எங்கம்மாவை கோர்த்து விட்ட? ஜெயராமனுக்கு அவ்வளவு ஆத்திரம்.

ஸ்பீக்கர் போட்டு பேசினான் அல்லவா? சங்கீதாவின் அம்மா அப்பாவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

சரி விடுங்க! இதுக்கு ஏன் இவ்வளவு கோபம்? அவள் கூலாக கேட்க… பல்லை கடித்தவன் கோபத்தில் அழைப்பை துண்டித்தான்.

ஸாரி மாப்பிள்ளை…. மன்னிச்சுக்கோங்க சம்மந்தி என்றார் சங்கீதாவின் அப்பா. சங்கீதாவின் அம்மா முகம் கன்றி அமர்ந்திருந்தார்.

பாப்பாத்தி கண்ணீரை துடைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு உபசாரம் செய்துக் கொண்டிருந்தார்.

ஜெயராமனுக்கு மனம் படபடத்தது. என்ன இந்த பெண் இவ்வளவு கிரிமினலாக இருக்கிறாள். இந்த விஷயம் வெளியில் தெரியாமல்

போயிருந்தால் தன் அம்மாவை மோசமான பேராசை கொண்டவராக தானே நினைத்துக் கொண்டிருப்பார்கள்?

“—————————–“

தம்பி ஜெயராமா…. அது சின்ன புள்ள ஏதோ ஆசையில இப்படி நடந்துக்குச்சு. இதை மனசுல வச்சுக்காத சரியா என்றார் பூமாலை.

ஆமா ராசா…. எல்லா பொண்ணும் பிறந்த இடத்தில் இருந்து வாங்கிட்டு வரதை தான் பார்ப்பாங்க! இது உலக வழக்கம் தான்….. சீர் கொண்டு வருவதை கௌரவம்னு நினைப்பாங்க. இதை பெருசு பண்ணாம விட்டுடு சாமி என்றார் பாப்பாத்தி.

அவளுக்கு வேணும்னா அவ கேட்டு வாங்கிட்டு வரட்டும் அதுக்கு உங்களை ஏன் உள்ளே இழுக்கணும்? ஜெயராமன் மனம் சாந்தம் கொள்ளவில்லை. அப்படி இப்படி பேசி கொஞ்சம் கொஞ்சமாய் அவனை சமாதானம் செய்தனர்.

அங்கே சங்கீதாவின் அம்மா மகளிடம் புலம்பி தள்ளினார்.

ஏன் இப்படி திருகுதாளம் பண்ற? படிச்ச பிள்ளை மாதிரியா நடந்துக்குற? நாங்க அங்க சம்மந்தி வீட்டுல அசிங்கப்பட்டுட்டோம். அந்தம்மா பரவாயில்லை பெருந்தன்மையா நடந்துக்குட்டாங்க. ஆனா மாப்பிள்ளை முகத்தில் அவ்வளவு சஞ்சலம்.

ம்மா… இப்போ ஏன் புலம்பிட்டு இருக்க? எனக்கு செய்யறதில் என்ன குறைஞ்சுடப் போற?

தம்பிக்கு இவ்வளவு பெரிய வீடு இருக்கு, நாலு கடை வாடகை இருக்கு, மாந்தோப்பு இருக்கு. எனக்கு அறுபது பவுன் நகை போட்டு அனுப்பி விட்டுட்டா ரெண்டும் ஒண்ணாகிடுமா? எதை கேட்டாலும் அப்புறம் செய்றேன் அப்புறம் செய்றேன்னு சொல்லுறீங்க! எப்போ செய்யறது? அப்புறம் உன் பையனக்கு கல்யாணம் ஆகிட்டா அவன் பொண்டாட்டி செய்ய விடமாட்டா.

நியாயமா ஒரு அம்மாவா நீ தான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யணும். உனக்கே மனசு வரல! நான் பெண் பிள்ளைன்னு தானே இவ்வளவு ஒரவஞ்சனை உனக்கு? அழுது மாய்மாலம் செய்து சமாளித்தாள்.

அப்படி ஒரு கேடி சங்கீதா. அஞ்சலி தீபாவை எல்லாம் கையாளாக வைத்திருப்பாள்.

மன்னருக்கு சிடு சிடுவென்று பேசும் தீபாவை கூட கொஞ்சம் பிடிக்கும் உளறிகொட்டிவிடும் அஞ்சலியை கூட கொஞ்சம் பிடிக்கும். சங்கீதா விஷம் என்பதே அவன் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!