இவள் பற்களுக்கு கிளிப் அணிந்திருப்பதை பார்த்து தர்ஷி கூட, “உடம்ப குறைக்கிற, கிளிப் போடுற.. புதுசு புதுசா பண்ற?” பெருமூச்சுவிட்ட தர்ஷி, மண்டையில் பல்ப் எரிந்ததை போல “என்னடி என் மாமாவுக்கு போட்டியா வரலாம்னு இருக்கியா.. நீ எப்படி கெட்டப்ப மாத்தினாலும் என் மாமாவோட அழகுக்கு ஈடாகாது பார்த்துக்க.. ஆணாழகன்டி என் மாம்ஸூ” என காலை வாரினாள் தர்ஷி.
‘எதே ஆணழகனா? சர்தான்.. இப்படியே சொல்லி சொல்லி தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிப்பாட்டிக்கார் கிரி.. இப்ப இவளுமா? தலையை உலுக்கி கொண்டாள் கமலி.
“ஜிம்மில் ஒர்க அவுட் பண்ணி வெயிட்டை குறைக்கனும்னா, முதலில் வாயை குறைக்கனும்.. எப்போ பாரு பேச்சு தான்.. அப்படி என்ன தான் பேசுவீங்க” இரண்டொரு வாக்கியங்கள் பேசியதற்கே, தடுகட்டை போட்டாள் மேனகா.
Advertisement
கமலி சிரித்து சமாளிக்க, தர்ஷியோ “வந்துட்டா ராட்சசி.. இன்னைக்கு எந்த மிஷினுக்கு வாக்க பட வைக்க போறானு தெரியலையே!” கமலியின் காதுகளில் ஓத, “வாய வச்சிட்டு சும்மா இருடி” நச்நென அவள் கால் விரல்களில் ஓங்கி மிதித்தாள் கமலி.
“அவுச்..” என தர்ஷி கத்த, அதற்கு மேனகா திரும்பி பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டாள் தர்ஷி.
பின்னர் புல் பாடி ஒர்க் அவுட்டை சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள். அதை பே என விழி விரித்து பார்த்த தர்ஷி, இவ என்ன ரப்பரா.. இப்படி குதிக்கிறா? வளையுறா! துள்ளுறா! எலும்பெல்லாம் இவளுக்கு இருக்கா இல்லையா? வழக்கம் போல பீதியானாள். கூடவே பேதியாகுமோ என கூட கவலை கொண்டாள்.
Advertisement
சில நாட்களுக்கு முன், பிகினர் ஒர்க் அவுட்டுகளுக்கு பிறகான அடுத்தடுத்த பயிற்சிகளை இவர்களுக்காக மேனகா ஆரம்பித்து வைத்த போது, சைக்கிலிங்கிற்கே கதறியவள் தர்ஷி.
Advertisement
இப்போது அப்பர்பாடி, லோயர்பாடி ஒர்கவுட்டுகள் மற்றும் கோர், பங்க்ஷனல் ஒர்கவுட்டுகளை (மிஷின்கள் மூலம்) மேனகா செய்து காட்ட, அதை பார்த்து முடிப்பதற்குள்ளாகவே உயிர் போய் வந்தது தர்ஷிக்கு.
அதை ஒர்க் அவுட்களை தர்ஷி செய்யும் போது, சொல்லவே வேண்டாம் உயிர் அவ்வப்போது போய் போய் வந்து கொண்டிருந்தது. தஸ் புஸ் என மூச்சு விடுவதும், அவ்வப்போது கால்களை விரித்து நீட்டியபடி ஓய்வெடுப்பதும் என ஒரு வழியானாள்.
ஆனால் கமலிக்கோ, ஏற்கனவே அந்த மிஷின்களின் மீது தீராத மோகம்.. இப்போது வாய்ப்பு கிடைத்திட, வகையாய் உபயோகித்து கொண்டாள். தர்ஷியை விட எடை அதிகம் இவள். சொல்ல போனாள் தர்ஷிக்கு இருக்கும் சிரிமங்களை விட, கமலிக்கே சிரமம் அதிகம். ஆனாலும் ஒர்க்அவுட்டுகளை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாள்.
Advertisement
இப்படி அதீத ஒர்க்அவுட்களை மிஷின்களின் மூலம் செய்ய துவங்கினர். வழக்கம் போல தர்ஷி புலம்பலுடனும், கமலி புத்துணர்ச்சியோடும் செய்யதுவங்கினர். அதுவும் சில பல நாட்களில் அவர்களின் உடலுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்க துவங்கிவிட்டது.
தர்ஷியின் சுறுசுறுப்பில்லாத நடவடிக்கைகளையும், கமலியின் அதீத ஈடுபாட்டையும் கவனித்து முன்னை விட அதிகமான நியூட்ரிசியஸ் உணவுகளை எடுத்து கொள்ள வைத்தாள் மேனகா. இருந்தும் அவ்வப்போது சோர்ந்து போய் இருக்கும் தர்ஷியை விடாமல் பேசி பேசியே, நம்பிக்கையூட்டி தன் பயணத்தில் இழுத்து சென்றாள் கமலி. இடையிடையே தர்ஷி கோகுலுடன் பேசுவதும், டேட்டிங் செல்வதும் என ஒரு பக்கம் அவர்களது காதல் களைகட்ட, கமலியோ தாய், தந்தை, அண்ணன், இரண்டாவதாய் கருதரித்திருக்கும் அண்ணி என ஒருவர் மாற்றி ஒருவருடன் போனில் பேசுவதுமாய் கழிந்தது அவர்களது நாட்கள்.
***********
கோவில் பிரகாரத்தில் மகள் பிரணித்தாவை மடியில் கையில் வைத்து கொஞ்சி கொண்டிருந்தான் செந்தில். அந்த குட்டி தேவதைக்கும் என்ன புரிந்ததோ ஆ..உ என தன் சின்ன குரலில் அவனை வசீகரித்து கொண்டிருந்தாள். அது பொறுக்காத அவன் மகன் பிரணவ்வோ, பின்னிருந்து கழுத்தை கட்டிகொண்டு செந்திலை கொஞ்சி கொண்டிருந்தான். அவர்களை வேடிக்கை பார்த்தபடி எதிரில் அமர்ந்திருந்தாள் ராஜி.
எப்போதும் வீட்டில் நடப்பது தான், இன்று கோவிலில் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு தான் வித்யாசம்.
ஆம், செந்தில் தான் ‘குழந்தைகளை பார்க்க வேண்டும், அவர்களை அழைத்து கொண்டு கோவிலுக்கு வா’ என போனில் கூறியிருக்க, மறுக்க தோன்றாமல் ஏதோ நினைப்பில் இவளும் குழந்தைகளை அழைத்து கொண்டு வந்துவிட்டாள்.
இவளுக்கு முன்பாகவே கோவிலுக்கு வந்து காத்திருந்தான் செந்தில். இவர்கள் வந்ததுமே, மகனை கொஞ்சிவிட்டு, பின் மகளை ராஜியின் கையிலிருந்து வாரி எடுத்து கொண்டான்.
“அப்பா.. நானு” என தவ்விய மகனை “பாப்பா கையில் இருக்காடா.. சும்மா இரு..” என இழுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டாள் ராஜி.
குடும்பமாய் சாமியை தரிசித்துவிட்டு, பிரகாரத்தில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் சென்று அமர்ந்து விட்டனர்.
இப்படி கோவிலிலேயே நேரம் கழிந்திருக்க, “வீட்டுக்கு போகனும், அம்மா தேடுவாங்க.. அப்புறம் திட்டுவாங்க” என பார்வையை வேறு பக்கம் வைத்தபடி செந்திலிடம் கூற
“என்ன அவசரம்? பொறுமையாய் போய்க்கலாம்.. புருஷன் தானே நான்? பின்ன எதுக்கு திட்ட போறாங்க!” செந்திலும் மகளிடம் பார்வை வைத்தபடி பேச,
“ஓ.. அந்த நினைப்புலாம் இன்னும் இருக்கா..!” இவள் நக்கலாய் கேட்டு வைக்க, அவளை முறைத்து பார்த்த செந்தில், “கண்ணா.. ஹோட்டல் போலாமாடா” எனவும், “போலாம் போலாம்” என இவன் குதிக்க, “அதெல்லாம் வேணாம்.. அம்மா திட்டும்” என ராஜி ஆரம்பித்தாள்.
கடுப்பான செந்தில் “உன்கிட்ட நான் கேட்கவே இல்லை. இஷ்டம்னா எங்க கூட வா.. இல்லை நாங்க போய்க்கிறோம். நீ வீட்டுக்கு கிளம்பு” என்றிட, செந்திலின் கோபம் கண்டு அமைதியாய் அவர்களுடன் கிளம்பிவிட்டாள் ராஜி.
பைக்கில் குடும்பமாய் வந்திறங்கினர் ஹோட்டலுக்கு. அவ்வப்போது முன்பெல்லாம் வருவது தான் ஆனால் உடன் காந்திமதியோ, செந்திலின் தம்பி குடும்பமோ யாராவது உடனிருப்பார்கள். இப்போது தனியாய் வந்திருக்கின்றனர்.
மகனுக்கு என்ன வேணும் என கேட்டு விட்டு, சர்வரிடம், மகனுக்கு நூடுல்ஸையும், மகளுக்கு இரண்டு இட்லிகளையும், தனக்கு பிரியாணியையும், மலாய் சிக்கனையும் ஆர்டர் செய்தான். “எனக்கு எதுவும் வேண்டாம்” என ராஜி அவசரமாய் கூற
“உனக்கில்லை எனக்கு போதுமா” என்றான் ஏக கடுப்புடன்.
ஆனால் அவன் ஆர்டர் செய்த பிரியாணியும் மலாய் சிக்கனும் அவளுக்கு தான் என தெரியுமே.. காரணம் கோவிலுக்கு போனால் அன்று முழுதும் நான் வெஜ்ஜை செந்தில் எடுத்து கொள்ளவே மாட்டான்.
இவள் தான் நாள் கிழமை பாராது எப்போதும் வேண்டுமானாலும் நான் வெஜ் என சப்பு கொட்டி கொண்டு திரிவாளே. அதை நினைத்தவள் பதிலுக்கு அவனை முறைத்து வைத்து “பார்ப்போம் இன்னைக்கு இவன் எப்படி நான் வெஜ் சாப்பிடுறானு” ராஜி வேடிக்கை பார்த்திருந்த படி அமர்ந்திருந்தாள்.
ஆர்டர்கள் சில நிமிடங்களில் வந்துவிட, நூடுல்ஸை மகன் பக்கமாய் நகர்த்தி உணவுண்ண சொன்னவன், மகளை டேபிளில் அமர்த்தியபடி இட்லிகளை பிய்த்து ஊட்ட தூவங்கிவிட்டான்.
‘பார்ரா.. இவனுக்கு ஊட்ட கூட தெரியுமா’ என விழியகலாது பார்த்திருந்தாள் ராஜி. இடையில் வந்த மட்டன் பிரியாணியையும், மலாய் சிக்கனையும் மெதுவாய் மனைவியின் பக்கம் நகர்த்தினான்.
ராஜி புருவங்களை சுருக்கி ‘அதானே’ என இவனை பார்க்க, “சாப்பிடுடி” என்றான் ஒற்றை வார்த்தையில் அதிகாரத்தை காட்டியபடி.
அவள் பதிலே கூறாமல் ‘இவனாவது நான் வெஜ் திங்கிறதாவது’ என வேறு பக்கமாய் பார்வையை திருப்பி ‘எனக்கு வேண்டாம்’ என்பது போல் அமர்ந்து கொண்டாள்.
பதிலுக்கு அவளை முறைத்தபடியே, மகறுக்கு உணவூட்டிய அதே கையால் பிரியாணியை அவளுக்கான தட்டில் பரிமாறி, அதிலிருந்து ஒரு வாயை எடுத்து எதிரில் அமர்ந்திருந்த மனைவியின் வாயில் திணித்து விட்டு “உனக்கு ஓகேன்னா, முழுசா நானே ஊட்டவிட தயார் தான்” என்றான் செந்தில்.
வாயில் உணவோடு திறந்த வாய் மூடாமல் இவள் செந்திலையே பார்த்திருக்க, “சாப்பிடு ராஜி..” என அதட்டலாய் கூறிட
சட்டென கண்களில் நீர் தேங்கி விட்டது ராஜிக்கு. அதோடு வாயில் இருந்த உணவையும் மென்று விழுங்க, அவள் புறமாய் பிரியாணி மற்றும் சிக்கனை நகர்த்தி வைக்க, கண்களை நாசுக்காய் துடைத்தபடி உண்ண துவங்கினாள்.
மனைவியின் மேல் ஒரு கண் வைத்தபடியே, மகளுக்கு உணவுட்டிய பின் வெஜ் பிரியாணி ஒன்றை இவனுக்காக ஆர்டர் செய்து இவனும் சாப்பிட்டான்.
இப்படி அனைவரும் வயிறாற உண்ட பின், ராஜியை, குழந்தைகளை அவனே கொண்டு வந்து கிரியின் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றான்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் “என்னடி நடக்குது இங்க? புருஷனும் பொண்டாட்டியும் நாடகம் போடுறீங்களா?” என்றிருப்பார் வசந்தா.
ஆனால் இன்றோ “நல்லது நடந்தா சரி்தான்” என முனுமுனுத்து கொண்டு, கண்டும் காணாததுமாய் சென்றுவிட்டார்.
அன்றைய இரவு ராஜி செந்திலை பற்றி, அவனது மாபெரும் மாற்றங்களை பற்றி யோசித்து கொண்டிருந்தாள். செந்திலுக்கு குழந்தைகள் சிரித்து கொண்டிருந்தால் நிரம்ப பிடிக்கும். அழுதால் இவனுக்கு எரிச்சல் வருகிறதோ இல்லையோ.. காந்திமதிக்கு எரிச்சல் வரும், தலை வலி வரும், அதன் பின் அவர் கத்தும் கத்தலில் ‘ராஜி குழந்தைகளை ஏன் அழ விடற..’ என செந்திலும் கத்த துவங்கிவிடுவான்.
ஆனால் இன்றோ சாமி கும்பிட வரிசையில் நின்ற போது அழும் மகளுக்கு விளையாட்டு காட்டி திசை திருப்பினான். தூக்கத்திற்கு சிணுங்கியவளை தோளில் போட்டு தட்டு கொடுத்து உறங்க வைத்துவிட்டான். ஹோட்டலில் அழகாய், உணவூட்டினான், அவன் மேலேயே யூரின் போனவளை ‘அபிஷேகம் பண்ணிட்டியா’ என பொய்யாய் கோபம் கொண்டான், அமைதியாய் எழுந்து சென்று சுத்தம் செய்து வந்தான். எத்தனை வித்யாசங்கள் இவனிடம். மெலிதாய் சிரித்து கொண்டவள் நல்ல மாற்றம் தான் என எண்ணி கொண்டாள்.