Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ -21

 

 

அத்தியாயம்:21



Advertisement

 

 

 ரஞ்சனா, அவளது பெற்றோர் மற்றும் மீராவைச் சமஸ்தானத்து பெரியம்மாக்கள் இருவரும் புன்னகையோடு வரவேற்று  ஆலாத்தி எடுத்து திலகமிட்ட கையோடு அவர்களை மெல்ல அந்த விஸ்தாரமான டைனிங் அறைக்கு அழைத்து வந்தனர்… அங்கே அந்த குடும்பத்தின் அனைவரும் குழுமியிருந்தனர்.

Advertisement

ரஞ்சனாவின் அம்மா சுமதி அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.

Advertisement

தன் மகளின் கையைப் பற்றி முன்னால் இழுத்து அறிமுகப்படுத்தத் தொடங்கினார்.

Advertisement

“அக்கா… இவதான் என் மகள் ரஞ்சனா. நீங்க போன்ல பேசினீங்கள்ள … அவதான்,”
என்று சுமதி சொல்ல, மூத்த பெரியம்மா ரஞ்சனாவின் கன்னத்தைத் தடவி முத்தமிட்டார்.
“இவ கலெக்டர் மீரா…”
பெரியம்மா உடனே அடுத்திருந்தவரிடம்
“நம்ம வர்மனோட பொண்ணு ம்மா”… என
மறுபுறம், சொக்கலிங்கம் ஐயா அந்த குடும்பத்தின் மூத்த பெரியப்பா ரஞ்சனாவின் குடும்பத்தினருக்கு “அய்யா, இவங்க ரெண்டு பேரும் சமஸ்தானத்தோட மூத்த இளவரசிகள், செம்பியன் தம்பியோட பெரியம்மாக்கள். இவங்கதான் இப்போ அரண்மனையோட மொத்தப் பொறுப்பையும் பார்த்துக்கிறாங்க என்றார்.
பின்னர் அந்த பெரியம்மா அங்கிருந்தவர்களை சின்னம்மா அத்தை ஒன்றுவிட்ட பெரியம்மா என ஒவ்வொருவராய் அறிமுகப்படுத்த
மீராவும் ரஞ்சனாவும் அனைவருக்கும் நெகிழ்வாய் தலை அசைத்தனர்.
ஒரு ஆறு வயது குழந்தை வந்து
“எங்க செம்பியன் மாமாக்கு வரப்போற அத்தை நீங்களா?” என மீராவிடம் கேட்க… மீரா ரஞ்சனாவை காட்டிவிட்டாள். அங்கு அனைவரின் முகங்களிலும் அவ்வளவு மகிழ்ச்சி.
மீரா மெல்ல ” பாட்டிமா…. ” என கேட்க…
” பாட்டிமா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க நாளைக்கு காலைல வந்து உங்கள பார்ப்பாங்க.”
களைச்சு வந்திருப்பீங்க … முதல்ல சாப்பிட வாங்க” என்று அழைத்தார்.
நெடும்பயணத்தின் களைப்பு தீர, நீண்ட தேக்குமர மேஜையில் அரச விருந்து தயாராக இருந்தது.
வாழை இலையிட்டு, நறுமணமிக்க சம்பா அரிசி சாதம் பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமநாதபுரத்திற்கே உரிய தனித்துவமான பாரம்பரியக் கறி வகைகள் ஒவ்வொன்றாக வர….
ராமநாதபுரத்து ஸ்பெஷல் அரைத்துவிட்ட கத்திரிக்காய் மொச்சை மசாலா, வறுத்தரைத்த மசாலாவின் வாசம் தூக்கலாக மூக்கைத் துளைத்த பூண்டு மிளகு வறுவல், மற்றும் அந்த வறண்ட நிலத்திற்கே உரிய பிரத்யேகமான பனங்கிழங்கு பொரியல் ஆகியவை இலையை அலங்கரித்தன. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, அந்தப் பகுதி மக்கள் நெஞ்சோடு கொண்டாடும் காரசாரமான, புளிப்பும் காரமும் சரிபாதியாக நாக்கில் நடனமாடிய இராமநாதபுரம் குண்டு மிளகாய் புளிக் கறி பரிமாறப்பட்டது.
மண்ணின் பாரம்பரிய சுவை மாறாத அந்த உணவுகளை, அரண்மனைக்கே உரிய பிரத்யேக இனிப்பான பால் திரட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு முடித்ததும், அனைவருக்கும் பசியும் களைப்பும் நீங்கி ஒரு பரம திருப்தி ஏற்பட்டது.
சாப்பிட்டு முடித்து கைகளைக் கழுவியதும், “வாங்க பிள்ளைகளா… அப்படியே சாப்பிட்ட சாப்பாடு செரிக்க ஒரு நடை போவோம். நம்ம அரண்மனையை ஒரு சுத்து சுத்திப் பார்த்துட்டு வரலாம்,” என்று சொக்கலிங்கம் அவர்கள் அனைவரையும் இராமலிங்க விலாசத்தின் வரலாற்றுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார்.
அரண்மனையின் நீண்ட, குளிர்ந்த நடைபாதைகளில் நடக்கும்போதே அந்தச் சுவர்களின் பழமையும், கம்பீரமும் மீராவை வெகுவாகக் கவர்ந்தது.
“ஐயா, இந்தச் சேதுபதி மன்னர்களைப் பத்தி நாங்க புத்தகங்கள்ல படிச்சிருக்கோம். ஆனா, நேரடியா இந்த அரண்மனைக்குள்ள நின்னு கேட்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு,” என்றாள் மீரா வியப்புடன்.
சொக்கலிங்கம் பெருமிதத்தோடு சிரித்தார். “ஆமாம்மா, நம்முடைய மறவர் குலச் சேதுபதி மன்னர்களோட வரலாறு சாதாரணமானது இல்லை. இவங்க வெறும் நிலத்தைக் கைப்பற்றின அரசர்கள் மட்டும் இல்லை….ராமேஸ்வரம் தீவையும், அங்க இருக்குற ராமநாதசுவாமி கோவிலையும் காக்குற ‘சேது காவலர்கள்’ (Protectors of the Holy Bridge). அதனாலதான் இவங்களுக்குச் ‘சேதுபதி’ன்ற பட்டமே வந்தது. இவங்களோட கொடி சின்னத்துல ‘அனுமன்’ உருவம் இருக்கும். அது ஏன்னா, ராமபிரானுக்குப் பாலம் கட்ட உதவின நன்றிக்காகவும், காவலுக்காகவும் அவங்க அதைத் தங்களோட ராயல் எம்பளமா ஏத்துக்கிட்டாங்க.”
அவர் பேசிக்கொண்டே வந்து, ஒரு பிரம்மாண்டமான சுவரோவியத்தின் முன்னால் நின்றார். அது மன்னர் கிழவன் சேதுபதி என்று அழைக்கப்படும் ரகுநாத சேதுபதியின் கம்பீரமான தோற்றம்(ஆட்சிக்காலம்: 1671 – 1710).
“இந்த ஓவியத்தைப் பாருங்கம்மா… இதுதான் வீரமன்னர் ரகுநாத சேதுபதி …. இவரோட காலத்துலதான் இந்தச் சமஸ்தானம் மதுரை நாயக்கர்களிடம் இருந்து முழுசா சுதந்திரம் அடைஞ்சு, உச்சகட்டப் புகழோடு இருந்தது. அப்போ மதுரையை ஆண்டுட்டு இருந்த ராணி மங்கம்மாளின் படைகள் நம்ம எல்லைக்குள் அத்துமீறி நுழைஞ்சப்போ, இதே ரகுநாத சேதுபதி தன் அசாத்தியமான போர் வியூகத்தால மதுரைக் கோட்டைப் படையைத் தோற்கடிச்சு, ராணி மங்கம்மாளையே பின்வாங்க வச்சார். அந்த வரலாற்றுப் போர்க்களக் காட்சிதான் இது,” என்று அவர் விளக்க, நம்ம நாயகியரின் கண்கள் அந்த ஓவியத்தில் இருந்த மன்னரின் கம்பீரத்தையும், போர்க்களத்தின் தீவிரத்தையும் உற்று நோக்கின.
“அப்போ… இவங்க மதுரை நாயக்க வம்சத்துக்கே சவால் விடுற அளவுக்குப் பவர்ஃபுல்லா இருந்திருக்காங்க, இல்லையாங்கய்யா?” என்று ரஞ்சனாவின் தந்தை ஆச்சரியமாகக் கேட்டார்.
“ஆமாங்கையா! அதுமட்டும் இல்ல, முகலாயர்களோட படையெடுப்புல இருந்து ராமேஸ்வரம் கோவிலைப் பாதுகாத்த பெருமையும் இவங்களையே சேரும். அப்படியே இந்தப்பக்கம் வாங்க…” என்று அடுத்த ஓவியத்திற்கு அழைத்துச் சென்றார் சொக்கலிங்கம். அங்கே கைகளில் வாளோடு, கண்களில் பிரிட்டிஷாருக்கு எதிரான தகிப்புடன் ஒரு இளம் மன்னரின் படம் இருந்தது.
“இவர் முதலாம் முத்துராமலிங்க சேதுபதி (ஆட்சிக்காலம்: 1762 – 1795)!” என்றார் சொக்கலிங்கம் பெருமிதத்தோடு. “வெறும் பதினோரு மாசக் குழந்தையா இருக்கும்போதே இவருக்கு முடிசூட்டப்பட்டது. வளர்ந்த பிறகு, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கும் ஆற்காடு நவாபுக்கும் அடிபணிய மாட்டேன்னு சிங்கம் மாதிரி நெஞ்சு நிமிர்த்தி நின்னவர். ராமநாதபுரக் காடுகள்ல ரகசியமா ஆயுதக் கிடங்குகளை உருவாக்கி, டச்சுக்காரர்களோடு கூட்டணி வச்சு பிரிட்டிஷாரை எதிர்த்தார். 1795-ல இவரைத் தந்திரமா கம்பெனி அரசு கைது செஞ்சு, திருச்சியிலும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஆயுள் முழுக்கச் சிறையில வச்சாங்க. தன் வாழ்க்கையோட பாதியைச் சிறையிலயே கழிச்ச நிஜமான சுதந்திரப் போராட்ட வீரர் இவரு!”
அடுத்ததாக, ஒரு பட்டுப்புடவையில், கையில் செங்கோலுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஒரு அரசியின் கம்பீரமான ஓவியத்தின் முன்னால் அவர்கள் நின்றனர்.
“இவர் ராணி மங்கலேஸ்வரி நாச்சியார் (ஆட்சிக்காலம்: 1803 – 1807). முத்துராமலிங்க சேதுபதியை வெள்ளைக்காரங்க ஜெயில்ல வச்சப்போ, இந்தச் சமஸ்தானத்துக்குப் பெரிய வாரிசுப் போட்டி வந்தது. ஆனா, இந்தப் பெண் சிங்கம் அசரவே இல்லை. பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு எதிராகவும், எதிரிகளுக்கு எதிராகவும் கோர்ட்லயும் அரசியல் களத்திலயும் சண்டை போட்டு, தன் உரிமையை நிலைநாட்டி இந்தச் சமஸ்தானத்தை ஆண்ட மகாராணி இவங்க!” என்று சொக்கலிங்கம் விவரிக்க, மீராவுக்குள் இருந்த ஐஏஎஸ் அதிகாரி அந்த அரசியின் தீரத்தை எண்ணி வியந்து போனாள்.
மேலும் சில படிகள் கடந்து, அடுத்த பகுதிக்குச் சென்றபோது அங்கே ஒரு அமைதியான, தெய்வீகக் களை பொருந்திய மன்னரின் படம் இருந்தது.
“இவர்… மன்னர் பாஸ்கர சேதுபதி (ஆட்சிக்காலம்: 1889 – 1903),” என்றார் மேலாளர், அவரது குரலில் இப்போது மரியாதையும் பெருமிமமும் இன்னும் கூடியிருந்தது. “வீரத்துக்கு மட்டும் இல்லம்மா, இந்தச் சமஸ்தானம் ஆன்மீகத்துக்கும் அறிவாற்றலுக்கும் பெயர் போனது. சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டுக்கு போகணும்னு நினைச்சப்போ, அவரோட ஆன்மீக ஆழத்தைப் புரிஞ்சுகிட்டு, தனக்குக் கிடைச்ச வாய்ப்பை விட்டுக்கொடுத்து, அவருக்கு முழு நிதி உதவியும் செஞ்சு மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பி வச்சதே நம்ம பாஸ்கர சேதுபதி மன்னர்தான்! 1897-ல விவேகானந்தர் சிகாகோவுல ஜெயிச்சு பாரத மண்ணுக்குத் திரும்பினப்போ, அவரோட ரதத்துல இருந்த குதிரைகளைக் கழட்டிட்டு, இந்த மன்னரே தன் கைகளால அந்த ரதத்தை இழுத்துட்டு வந்தார்.”
“நிஜமாவா?! சுவாமி விவேகானந்தரை சிகாகோவுக்கு அனுப்பினதே இந்தச் சமஸ்தானம்தானா? வாட்ஸ்ஆப் ல  மெசேஜா என்னிக்கோ வாசிச்சேன், இப்போ நேர்ல பார்க்கும்போது சிலிர்க்குதுப்பா!” என்றாள் ரஞ்சனா கண்களை விரித்து.
வரலாற்றின் பக்கங்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டே வந்த மீராவின் பார்வை, அந்த நீண்ட வரிசையின் இறுதியில் இருந்த ஒரு நவீன காலப் புகைப்படத்தின் மீது நிலைத்தது. அது ஒரு கம்பீரமான, அதே நேரத்தில் கனிவு நிறைந்த ஒரு வயதான பாட்டியின் புகைப்படம்.
மீராவுக்குள் பெருஞ்சிலிர்ப்பு ஓடியது.
“இவர் தான் நம்ம சமஸ்தானத்தோட பெரிய பாட்டிமா… ராஜேஸ்வரி நாச்சியார் பாட்டிமா (காலம்: 2023-இல் மறைவு),” என்றார் மேலாளர் சற்றே கரகரப்பான குரலில்.
(இது வரையிலான சேதுபதி சமஸ்தான விவரங்கள் அனைத்தும் வரலாற்று உண்மைகளே… இனி வருவது கதைக்காக புனைந்தது)
” எஸ்பி வர்மன் தம்பியை கண்ணுக்குக் கண்ணா வளர்த்தவங்க இவங்கதான். கடந்த 2023-ஆம் வருஷம் இவங்க மறைஞ்சப்போ, இந்த ராமநாதபுரமே அழுதுச்சு. இப்போ அவங்க இல்லைனாலும், அவங்களோட ஆசிர்வாதம் தான் இந்த அரண்மனையை இன்னும் தாங்கிட்டு இருக்கு.”
“அப்போ செம்பியன் வீரன்????”
” அவங்கள நாகேஸ்வரியம்மா வளர்த்தாங்க …
நம்ம பெரிய பாட்டிம்மா வோட இரட்டை சகோதரி! “
அவங்க தான் இப்போ உயிரோட இருக்காங்க”
இங்கு ஒருத்தி ஸ்தம்பித்திருந்தாள்.
மீராவுக்குள் ஒவ்வொன்றாக முடிச்சுகள் அவிழத் துவங்கியது….
என்னவோ விளங்கியும் விளங்காததாக புரிந்தது!
மேலாளர் சொன்ன அந்த விபரம், மீராவின் மனதில் இருந்த புதிருக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது. ஏதேதோ நினைவுகள் ஏதேதோ புரிதல்கள் …அவளது நெஞ்சைக் கூட்டி அடைக்க, ரஞ்சனாவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“சரிம்மா.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என பெற்றோருக்கும்…… இவர்கள் இருவருக்கும் என இரு அறைகள் காட்டி சென்றார்.
மீராவும் ரஞ்சனாவும் அறைக்குள் நுழைந்தது தான் தாமதம் என மீரா
” இருடீ வந்திர்றேன்” என சொக்கலிங்கம் ஐயா பின்னோடே ஓடினாள்.
” அய்யா எனக்கு இப்பவே பாட்டி மாவை பார்க்கனும்”
சொக்கலிங்கம் ஒரு நொடி பார்த்தார்.
அவள் ஏதோ தவிப்பில் இருப்பதை உணர்ந்தாள் . பாட்டி மாவின் அறையை காட்டிவிட்டார்.
மீரா அந்தப் பெரிய அறையின் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தபோது, அங்கே பரவியிருந்த சந்தன வாசம் அவளை எதிர்கொண்டது. மெல்லிய நிலவொளி ஜன்னல் வழியே வந்து விழ, அந்தப் பிரம்மாண்டமான தேக்குமரச் சாய்வு நாற்காலியில், வெள்ளை உடையில், அமைதியின் வடிவமாய் வீற்றிருந்தார் நாகேஸ்வரி பாட்டிமா.
அவரைக் கண்ட கணத்தில், மீராவுக்குள் என்ன உணர்வு ஓடியதோ… அவளையறியாமல் கண்கள் பனிக்க, ஓடிச் சென்று அந்தப் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.
பாட்டிமா…” என்று தழுதழுத்த குரலில் அவள் கூப்பிட, சாய்வு நாற்காலியில் இருந்த பாட்டிமா சட்டென்று நிமிர்ந்தார். எதிரே ஐஏஎஸ் அதிகாரிக்கே உரிய மிடுக்கையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு, ஒரு சாதாரணக் குழந்தையாய் தன் காலடியில் அமர்ந்திருக்கும் மீராவைப் பார்த்ததும் அவரது கண்கள் கனிந்தன.
அப்படியே குனிந்து, மீராவின் கைகளைப் பற்றித் தூக்கி, தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “வாம்மா மீரா… ,” என்று பாட்டிமாவின் கரகரப்பான, அதே சமயம் தாய்மையுள்ள குரல் அரண்மனை அறைக்குள் எதிரொலித்தது.
பாட்டிமாவின் மடியில் தலைசாய்த்து அமர்ந்தவள், நெஞ்சைக் குடைந்த அந்தப் பெருங்கேள்வியை, பதினொரு வருடங்களாகத் துரத்தும் அந்தப் ரகசியப் புதிரை மெல்ல அவிழ்க்கத் தொடங்கினாள்.
“பாட்டிமா… எனக்கு ஒரு உண்மை தெரியணும். 11 வருஷத்துக்கு முன்னாடி, மதுரை அழகர் திருவிழாவுல எனக்கொரு விபத்து… அந்தத் தாக்குதல்… அதுல சிக்கி…” மீராவின் குரல் திக்கியது, நெஞ்சு அடைத்தது.
அவள் அந்த கொடூரத்தை விவரித்தாள்.
பாட்டிமா அவளது தலையை மென்மையாக வருடிக்கொடுத்தபடியே, ஒரு பெருமூச்சோடு பேசத்
தொடங்கினார்: “அன்னைக்கு அழகர் திருவிழாவுக்குப் போனது நான் இல்லைம்மா… என் இரட்டைச் சகோதரி, நம்ம பெரிய பாட்டிமா ராஜேஸ்வரி. அவளுக்கு மதுரை அழகர்னா உயிர். வருஷா வருஷம் தவறாம அழகர் ஆத்துல இறங்குறதைப் பார்க்கப் போயிடுவா…”
” எனக்கு இப்போ ஞாபகத்துக்கு வருதுமா.. அக்கா ரொம்ப வருத்தப்பட்டு அன்னிக்கு சொன்னா
“பூப்பெய்திய அந்த குழந்தைய அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்னு..”
மீராவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. சுவர்கள் எல்லாம் சுழல்வது போல இருந்தது. அவளது கைகள் பாட்டிமாவின் கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டன.
“அப்போ… அன்னைக்கு அவங்க கூட யார் பாட்டிமா போயிருந்தது? “மீராவின் குரலில் தவிப்பும், உண்மையை எதிர்கொள்ளப் போகும் பயமும் கலந்திருந்தது.
பாட்டிமா தங்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மனின் படத்தை ஒரு கணம் நோக்கிவிட்டு, மீராவின் முகத்தைத் தாங்கிப் பிடித்து, கண்கள் கலங்கச் சொன்னார்:
“உன் வீரன் .. அந்த பதிமூன்று வயசுப் பையன் … வேற யாருமில்ல … நம்ம வர்மன்!இந்தச் சமஸ்தானத்தோட வாரிசு..உன் வர்மன்….. வீர ராஜா வர்மன் சேதுபதி… எல்லாரும் அன்போடு கூப்பிடுற வி.ஆர். வர்மன்!
“வர்மனா…??!!”
அந்தப் பெயர் காற்றில் ஒலித்த அடுத்த நொடி, மீராவின் உடம்பிற்குள் ஒரு பிரம்மாண்டமான அதிர்ச்சி அலை பாய்ந்தது போல இருந்தது. அவளது கண்கள் அப்படியே உறைந்து போயின. நெஞ்சுக்குள் இருந்த அத்தனை உணர்ச்சிகளும், இத்தனை காலமாய் மூடி வைக்கப்பட்டிருந்த நினைவுகளின் கதவுகளும் ஒரே அடியாய் உடைந்து சிதறின.
முசோரியில், எல்.பி.எஸ்.என்.ஏ.ஏ அகாடமியின் பனி படர்ந்த காலைப் பொழுதுகளில், ஃபவுண்டேஷன் கோர்ஸின் முதல் நாளில் இருந்து… இன்று இந்த இராமநாதபுரம் அரண்மனையின் வாசல் வரை அவளோடு நிழலாக, நினைவாக, உயிராகப் பயணித்துக் கொண்டிருக்கும்… அவளது வர்மன் தான் அவளது வீரன்!
இத்தனை காலமாய் அவளோடு இருந்தும், அவளது தேடலின் மையப்புள்ளியே அவன்தான் என்று தெரியாமல், அவளது கண்களுக்குள் இத்தனை பெரிய உண்மையை மறைத்துக் கொண்டு அவன் எப்படி உலா வந்தான்?
“பாட்டிமா… என் வர்மனா? எஸ்பி வர்மன்… அவரா அன்னைக்கு அங்கே…?” மீராவின் உதடுகள் நடுங்கின. அவளது கண்ணீர் அணை கடந்து பாட்டிமாவின் மடியை நனைத்தது.
“ஆமாம்மா…” என்றார் பாட்டிமா…
மீராவுக்குள் இத்தனை காலமாய் இருந்த புதிர்கள், விளங்காப் பக்கங்கள் அத்தனையும் நொடியில் அவிழ்ந்து விழுந்தன. அவளது வர்மன்…
அவளது வீர ராஜா வர்மன்!
தன் வர்மனின் உண்மையான பின்னணியையும், உணர்ந்த அந்த நெகிழ்ச்சியான கணத்தில், சொல்லொண்ணாப் பெருமிதத்தோடும் காதலோடும் பாட்டிமாவின்  மடியில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள் கலெக்டர் மீரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!