Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மெய்யறிவாயோ மெல்லினமே 15

அத்தியாயம் 15

மனைவியின் அமைதியில் தான் பேசியது அதிகப்படியோ என எண்ணியவன் “இல்லை நான் தப்பா சொல்லல. எனக்கு உண்மையாவே எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியாது… ம்ப்ச்…” அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்றும் புரியவில்லை.தான் பேசுவது சரியா தப்பா என்றும் தெரியவில்லை…



Advertisement

தன் கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டவனுக்கு அந்த நிமிடத்தை கடக்க அத்தனை சிரமமாக இருந்தது.அக்கணம் அவனை காப்பாற்றாவே கேட்டது ஈஸ்வரின் குரல்..

“ஹான் அப்பா இருங்க வரேன்…” என்றவன் “நான் போயி பார்க்குறேன்”என்று இதயாவிடம் கண் காட்டிவிட்டு செல்ல முற்பட்டவனிடம் “நானும் வரேன்…” என்று எழுந்தவள் அவனுக்கு முன் நடந்திருந்தாள்.

Advertisement

Advertisement

“ம்ம்…” என தோளை குலுக்கி விட்டு அவளுடனே கீழிறங்கி நடந்தான்.

“அத்தை…” என்றழைத்தப்படியே வாசலில் நின்ற ஈஸ்வரனையும், காமாட்சியையும் நோக்கி நடந்தாள். அத்தை என்றழைத்தப்படி வந்தவளை தான் பெரியவர்கள் இருவரும் பார்த்தனர்.

Advertisement

மங்கையின் சோர்ந்த முகமே அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லாமல் சொல்ல அவசரமாக மருமகளின் அருகில் ஓடினார்.

“நீ எதுக்கு இப்படி வர…” என கடிந்து கொண்டே மருமகளை நெருங்கியவர் மங்கையின் கழுத்தை தொட்டு பார்த்தார். உடல் சூடு இன்னுமே இருக்க “வாண்டு வண்டியெடு..” என்றார் காமாட்சி.

“உங்கம்மா பொங்குனாலும் ரொம்ப பொங்குவா…” என மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினார் ஈஸ்வர்.

தந்தையின் பேச்சில் நமட்டு சிரிப்பு சிரித்தவன் தாயிடம் திரும்பி

“மீ, அப்பா என்னவோ சொல்றாரு. என்னனு கேளுங்க” என்றான்.  மகனை முறைத்துக் கொண்டே மனைவியை பார்த்தார். காமாட்சியின் கவனம் முழுவதும் மருமகளின் மீதிருக்க மகனை நக்கல் பார்வை பார்த்தபடி மருமகளின் அருகில் சென்றார்…

“இப்ப எப்படி மா இருக்கு…” என மருமகளின் கேசத்தை கோதிக் கொடுத்தபடி கேட்டார்.

“நல்லா இருக்கேன் மாமா…” என்றவள் தன்னையே முறைத்தப்படி நின்ற மாமியாரை பாவமாக பார்த்தாள்.

இரண்டே நாட்களில் உடல் மெலிந்தது போல் தோன்றியது காமட்சிக்கு “ரெண்டு நாளா காய்ச்சல்ல இருந்திருக்க…ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணலையா உனக்கு…” எனக் கேட்டவருக்கு அவரையும் மீறி குரல் கடுமையாக தான் வெளிவந்தது.

“காமாட்சி…”என தன் அதிருப்தியை காட்டினார் ஈஸ்வர்.

“பின்ன என்னங்க…நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணலை பாருங்க இவளுக்கு.இவ

நம்ம வீட்டு பொண்ணுங்கறதயே மறந்திட்டா போல…கொஞ்சமாச்சும் அந்த எண்ணம் இருந்திருந்தா கல்யாணமாகி இரண்டு வாரத்திலேயே இப்படி இங்க வந்திருப்பாளா?…” என்றதும் விக்கித்து நின்றாள்.

“அத்தை அப்படியெல்லாம் இல்லை,..” என்றவளுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. நிஜமாகவே இப்படியொரு கோணத்தில் அவள் யோசிக்கவே இல்லை… அந்த நிமிடம் கணவனின் மீதிருந்த கோபம் மட்டுமே முன்னால் நிற்க கிளம்பி வந்துவிட்டாள். இப்போது மாமியார் கூறும் போது தான், தான் செய்தது தவறோ என்று தோன்ற முகம் சுண்டி விட்டது பெண்ணிற்கு “சாரி அத்தை…” மீண்டும் மன்னிப்பை வேண்டினாள்.

மருமகளின் முகத்தில் தெரிந்த பாவம் இவருக்கிருந்த மொத்த கோபத்தையும் விலக்கி நிறுத்தியது “எதுக்கு இத்தனை சாரி சொல்ற, பரவாயில்ல விடு, உன்னோட நிலைமையும் எனக்கு புரியுது…” என்றவர் மருமகளின் கேசத்தை கோதிக் கொடுத்தபடி “சாப்ட்டியா…” எனக் கேட்டார் பரிவான குரலில்..

“ம்ம்…” என்பதை போல் தலையாட்டினாள்.

அதற்குள் வாசுவும், மணியனும் இவர்களின் இல்லம் தேடி வந்திருந்தனர்… இங்கு வரவரவே வீட்டிற்கு வந்தது யாரென்று தெரிந்ததால் இருவரும் பொறுமையாகவே நடந்து வந்தனர்.

“வாங்க மா, வாங்க ப்பா…” வாசுவின் குரலோடு சேர்ந்து “வாங்க… வாங்க…” என்ற மணியனின் குரலும் கேட்க, சட்டென  குரல் வரும் திசையை பார்த்தனர் நால்வரும்.

“எப்படி இருக்கறீங்க? வந்து வெகு நேரமாகுதுங்களா? இன்னைக்கு பொடி வேற ஊருப்பட்டது அடிக்குது…” என ஆரம்பித்து அடுத்த சில நிமிடங்கள் பொதுவான நல விசாரிப்புகளுடன் சென்றது.

அதற்கு பிறகு மெல்லிய குரலில் “சாரிங்க ப்பா.எங்க போனுக்கு டவரே கிடைக்கல.ஒரு மேசேஜ் கூட பண்ண முடியல.அது இல்லாம இங்க வந்த நாள்ல இருந்தே இவளுக்கும் உடம்பு சரியில்லைங்க ப்பா…இவளை பார்க்கவே எங்களுக்கு நேரம் சரியா இருந்தது. இன்னிக்கு இவ கொஞ்சம் எழுந்து நடமாடவும் தான் கோவில் வரைக்கும் போனோம்…” என்றான் வாசு.

வாசு, ஈஸ்வரிடம் நீளமாக பேசியது இதுதான் முதல் முறை. அதுவே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆச்சரியத்தை முகத்தில் காட்டாமல் “உங்க நிலைமையும் புரிது தம்பி… இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு…” என்றார்.

அவர் அப்படி கூறவும் தான் மூச்சே வந்தது வாசுவிற்கு. அவர்கள் தங்களை  தவறாக நினைத்து விடக் கூடாதே என்று ஒரு பக்கம் மனம்  அடித்துக் கொண்டது… தற்போதைய  ஈஸ்வரின் பேச்சில் மனம் தன்னாலேயே சமாதானமானது…

அதே சமயம் இங்கு ஹரியோ வாசுவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். வந்ததில் இருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட  பேசாது நிற்பவனை கண்டவன் அவனை நெருங்கி

“சாருக்கு என் மேல என்ன கோபம்?” புருவம் உயர்த்தி கேள்வியாக கேட்டான். அதற்கு பதில் கூறாமல் நின்றான் வாசு…

அவனின் கழுத்தை சுற்றி கையைப் போட்டுக் கொண்டவன் “என்ன சாருக்கு கோபமெல்லாம் வருது. ஆனா எதுக்கு இந்த கோபம்ன்னு சொன்னா தானே தெரியும்…” வாசுவின் காதில் முணுமுணுக்க அப்பொழுதும் பதில் சொல்லாமல் நின்றான் வாசு…

இதற்கு மேல் பொறுமையில்லாமல் அவனை அப்படியே  பின் பக்கம் இழுத்து வந்தவன் “என்னவாம்…”  எனக் கேட்டான்.

அதற்கு பதில் கூறாமல் “என்னை விடுங்க…” என சுதனின் கைகளை எடுத்து விட்டபடி விலகி நின்றான் வாசு. அவனது செய்கையில் சுதனின் புருவங்கள் உச்சியை தொட வாசுவை அழுத்தமாக பார்த்தான்.

சுதனின் அழுத்தமான பார்வையில் நீண்ட நெடிய பெருமூச்சுடன், இழுத்து வைத்த பொறுமையான குரலில் “நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை…என் இதயாவை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு நினைச்சது எல்லாமே பண்ணேன். ஆனால் அவளை நீங்க அழ வைச்சு இருக்கீங்க…”என்றதை முழுதாக முடிக்காமல்  “ப்ச்ச்…” என்று சலித்தப்படி “இனிமே அவளை உங்களோட அனுப்ப நான் யோசிக்கணும்…” என்றவன் முன்னால் நடந்தான்.

“அடேய்…என்ன டா சொல்ற…” மெல்லிய அலறலோடு கேட்க, அதனை துளியும் கண்டுகொள்ளவில்லை வாசுதேவன்.

***

வீட்டிற்கு பின்னாலிருந்து வந்த கணவனையும், வாசுவையும் என்னவென்பது போல் பார்த்தாள் இதயா.

அதற்கு வாசு பதில் சொல்லாமல் நிற்க “ஒன்னுமில்லை…” என்பதை போல் தோள் குலுக்கினான் சுதன்…

“சரி” என்பதைப் போல் தலையாட்டியவள் காமாட்சியிடம் திரும்பிக் கொண்டாள்…

அது என்ன மாயமோ  தெரியவில்லை சுதனை கண்ட அடுத்த அரைமணி நேரத்தில் இதயாவின் காய்ச்சல் சற்றே குறைய ஆரம்பித்திருந்தது.

அவளின் காய்ச்சல் நன்றாக குறையவும் “அப்ப நாங்க கெளம்பறோம்ங்க ப்பா…” என்றார் காமாட்சி. மருமகளை அழைத்து செல்லும் எண்ணம் தான் அவருக்கு.

அதை வாசு உணரவே உடனே மறுக்க நினைத்து வாயை திறக்கும் முன் “என்ன சாமி வந்ததும் வராம கிளம்பரேன்னு நிக்கறீங்க. கருப்பனை கும்பிட்டுட்டு ரெண்டு நாளைக்கு இருந்துபோட்டு போலாம்ல…”  என்றார் மணியன்.

“இல்லீங்கய்யா… கடைகண்ணியெல்லாம் பார்த்துக்கம்ணுங்க. இரண்டு,மூனு வாரமா கல்யாண வேலையில  அந்த பக்கமே போகாம இருக்கறனுங்க. நிறையா வேலை கிடக்கு…” என்றார் ஈஸ்வர்.

“அப்ப பையனும், பிள்ளையும் இரண்டு நாளைக்கு  இருந்துட்டு போகட்டும் தம்பி…” என்றதும் மறுக்க முடியவில்லை சுதனின் பெற்றோரால்.

மணியன் கூறியது போல கருப்பணை வணங்கி விட்டு மதியம் போல காமாட்சியும், ஈஸ்வரும் ஈரோட்டிற்கு புறப்பட, சுதனும், இதயாவும் இங்கேயே தங்கி விட்டனர்…

இரண்டு நாட்களாக சரியாக உறக்கமில்லை  என்பதால்  இளையவர்கள் உறங்க, மற்றவர்கள் விழித்து தான் இருந்தனர்.

வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் கண்களை மூடி மணியன் அமர்ந்திருக்க, ஜானகி வீட்டு திண்ணையிலிருந்த பெரிய தூணில் சாய்ந்து அமர்ந்திருக்க,  அய்யம்மாள் நடு திண்ணையில் அமர்ந்தபடி நேற்று காய வைத்திருந்த கம்பை புடைத்து கொண்டிருந்தார்.

அக்கணம் நான்கு சக்கர வாகனத்தின் ஹார்ன் சத்தம் கேட்க ஜானகியும், அய்யமாளும் எதிர்ப்புறமிருந்த சாலையை தான் பார்த்தனர். சாலையில் நின்ற காரை பார்த்ததும் அய்யமாளின் முகம் பூவாய் மலர்ந்து போனது. தாயின் முக மாற்றத்தை பார்த்துக் கொண்டே பின்னால் திரும்பி வந்தவர்கள் யாரென்று பார்த்தார் ஜானகி.

காரிலிருந்து இறங்கி வருபவளை கண்டதும் ஜானகியின் முகமும் புன்னகை பூசிக் கொண்டது…

மிதமான ஒப்பணையில் பட்டு தாவணியில் மினி தேவதையாய் தெரிந்தாள் நவினா. பெண்ணை பார்க்க பார்க்க ஜானகியின் இதழ்கள் புன்னகை பூசிக் கொண்டது என்றால் அய்யமாளின் கண்கள் அடக்கமாக வருபவளை கண்டு ஆச்சரியமாக விரிந்தது.

கண்களை விரித்து ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த

பெரியவளின் அருகில் வந்தவள் “பாட்டி இப்ப எப்படி இருக்கீங்க…” என பணிவாக கேட்டாள். அவளின் பணிவான விசாரிப்பில் நெஞ்சைப் பிடித்து விட்டார் அய்யம்மாள்.

காரிலிருந்து இறங்கியதும் மான்குட்டி போல் துள்ளிக் குதித்து ஓடி வருபவள் இன்று அடக்க ஒடுக்கமாக நடந்து வருவதே அய்யமாளுக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது. இதில் அவளின் பாட்டி என்றழைப்பு அவருக்கு அட்டக் வரும் போல் இருந்தது…

“என்னடி அதிசமயமா பாட்டின்னெல்லாம் கூப்படற…” வாய்விட்டே கேட்டுவிட்டாள் பெரியவள்.

அவரின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டியவளுக்கு தூணின் மறைவில் அமர்ந்திருந்த ஜானகி தெரியாமல் தான் போனார்.

“ஊப்…” என வாயில் காற்றை நிரப்பி வெளி விட்டவள் இடுப்பில் கை வைத்து பெரியவளை பார்த்தாள்.

“என்ன கேட்ட கிழவி…” எனக் கேட்டவளிடம் முன்பிருந்த மரியாதை தற்போது துளியும் இல்லை. அவளின் இந்த தவனி தூணின் மறைவில் அமர்ந்திருந்த ஜானகியின் கண்களில் ஆச்சரியமும் அதே சமயம் இதழில் மெல்லிய புன்னகையையும் கொடுத்தது.

இங்கு அய்யாம்மாளோ நெஞ்சிலிருந்து கையை எடுத்தபடி

“நல்லா தான் இருக்கா…” என சத்தமாகவே சொல்ல அவரை முறைத்தாள் நவினா…

“இல்லடி திடுதுப்புனு பாட்டின்னு சொன்னதும் ஷாக் ஆயிட்டேன்… வர வழியில பேய் ஏதாவது அடிச்சுருச்சா? கருப்பன் கோவிலுக்கு கூட்டிட்டு போகலாமாங்கறளவுக்கு யோசிச்சுட்டன்னா பாரேன்..” என்றார் சீரியஸான குரலில்.

பெரியவாளின் பேச்சில்

பல்லைக் கடித்தவளுக்கு அந்த நிமிடம் வீட்டில் ஜானகியும், வாசுவும்  இருப்பது மறந்து தான் போனது.

“கிழவிக்கு உடம்பு சரியில்லையே நல்லாகற வரைக்கும் பொண்ணா அடக்கம் ஒடுக்கமா இருந்துட்டு போகலாம்ன்னு நினைச்சா விட மாட்ட போலிருக்கே…” என்றவள் நிமிடம் யோசிக்காது அய்யமாளின் கன்னத்தை கடித்து இழுத்தாள்..

“அடியே கூறுகெட்டவளே உடு டி…”என்று அய்யமாள் கத்த

தாயின் கத்தலில் இத்தனை நேரம் தூணின் மறைவில் அமர்ந்திருந்த ஜானகியோ பதட்டமாக எழுந்து இருவரையும் கண்டார்.

இருவரின் நிலையை கண்டதும் குபீரென்ற சிரிப்பைக் கொடுத்தது ஜானகிக்கு… இதழ்களை கடித்து சிரிப்பை அடக்கியவர் அவசரமாக வெளியில் வந்த தந்தையிடம் பாருங்க என்பதை போல் கண் காட்டினார்.

“ஏனுங்க மாமா பார்த்துட்டே நிக்கறீங்க, இவளை வந்து பிடிங்க…” அய்யமாள் சத்தம் போடவும் அவசரமாக இளையவளிடம் சென்றவர்

“ஏஞ்சாமி? வந்ததியும் அவகிட்ட வம்பு பண்ற…” என்றபடி  நவியிடமிருந்து அய்யமாளை காப்பாற்றினார் மணியன்..

“இதோ பாரு மணியா…மொதல்ல வம்பு பண்ணது நானில்லை உன்ற அம்மணி தான். முதல்ல உன்ற அம்மணியை என்னனு கேளு அப்பறம் என்கிட்ட வந்து பேசு…” உதட்டை சுழித்து அழகு காட்டிவிட்டு திரும்பியவளின் கண்களில் முறைப்போடு  நின்ற ஜானகி விழுந்தார்.

“அவ்…” என்று மனம் அலற கண்களை உருட்டி ஜானகியை பார்த்தவள்  “அத்தை… நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?.” எனக் கேட்டு ஈயென்று அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

நவியின் பதட்டமான அழைப்பில் ஜானகியின் குவிந்த இதழ்கள் சிரிப்பில் வளைய ஆரம்பிக்கும் முன்பே .. கன்னக்கதுப்புகளை கடித்து சிரிப்பை அடக்கி கொண்டவர் நவியை பார்த்தார்.

இவளோ ஜானகியை பார்த்து நெளிந்தாள் “ஹிக் ஹிக்…த…ண்ணி தண்ணி குடிச்சிட்டு வரேன்…” பொதுவாக கூறிவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டினுள் ஓடிவிட்டாள்.

அவள் உள்ளே செல்லும் வரை அமைதியாக நின்ற ஜானகியோ அவள் உள்ளே சென்றதும் சத்தமாக சிரித்தார். “எப்பவும் இப்படி தானா மா. ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன்…” என்றார் சிரிப்போடு.

“யாரு இவளா அமைதி? சரியான ஜில்லா ரவுடி…” என்றவர் சிறு அமைதிக்கு பின்

“இப்ப வரைக்கும் இந்த ரவுடியாலதா ஏதோ நடமாடிட்டு இருக்கறோம். லீவு உட்டா போதும் இங்க தான் வருவா.. அங்க கூட அதிகம் போக மாட்டா. இப்ப வாசு தங்கியிருக்கிற ரூம் கூட இவ வந்தா போனா தங்கிக்குவா..” என்றவருக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது.

“அட ராமா, வாசு அந்த ரூம்ல இருக்கறத இவளுக்கு சொல்லவே இல்லையே…” மெல்லிய குரலில் கூறிக் கொண்டே எழுந்தவர்

“இரு கண்ணு, அந்த சிறுக்கியை போயி பார்த்திட்டு வந்துடறேன்…” என்றவரிடம்

“ம்ம்…” என்றார் ஜானகி…  அக்கணம் ஜானகியின் மனம் குற்ற உணர்ச்சியில் தவிப்பதைத் தடுக்க முடியவில்லை.

பதினேழு வயதில் அப்படியென்ன காவிய காதலை கண்டு விட்டாய். அவன் விட்டு சென்றதும் தாய், தந்தையை தேடி வந்திருந்தால் இத்தனை இழப்புகளை தவிர்த்து இருக்கலாமா? என குற்றம் சாட்டும் மனதை என்ன செய்ய முடியும் அவரால்.

சிறு வயதிலயே அதீத பக்குவத்தை பெற்றதும் மட்டுமல்லாமல் விட்டு சென்ற கணவனை நினைத்துக் கொண்டே தன் கல்லூரி படிப்பை முடித்து படிப்பிற்கான வேலையில் அமர்ந்தார்.

படிப்பிற்கும்,முட்டாள் தனத்தனத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை தன்னை விட்டு சென்ற கணவனை ஒன்றுக்கு மூன்று முறை ஏற்று நிருப்பித்தார்.. அதை நினைத்து தற்போதும் கூனிக்குறுகி போனார் ஜானகி.

மகள் தலைக் குனிந்து நிற்கவும் “சாமி…” என தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்தார் மணியன். தந்தையின் உள்ளங்கை கொடுத்த கதகதப்பில் சற்றே தெளிந்தவர் மணியை பார்த்து புன்னகைத்தார்.

“இதுதான் நடக்கும்னு விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும் சொல்லு. இனி நடந்ததை பத்தி யோசிக்காம இரு மா…” தன்மையாகவே கூறினார்… வருடங்கள் கடந்திருந்ததால் என்னவோ மகளின் மீது கோபம் வரவில்லை…

வாழும் வயதிலேயே கணவனை இழந்து எவரின் துணையும் இல்லாமல் மகனை வளர்த்தி ஆளாக்கியதே பெரியதாக இருந்தது மணிக்கு. இருந்தும் மகளின் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே முடிந்து விட்டதே இளம் வயதின் ஆசைகளென்று எதையும் அவள் அனுபவிக்கவில்லையே என்ற எண்ணம் மனதின் ஓரம் இருந்து கொண்டே இருந்தது…

இதில் மணியன் மீதும் தவறு இருக்கிறது அல்லவா… மகள் நம்பி செல்பவன் கொடியவன் என்று அறிந்தும் மகளை அவனிடம் விட்டது மட்டுமல்லாமல் மீண்டும் மகளின் நிலை என்ன என்று அறியாமல் இருந்தது இவரின் தவறு தானே.

காலம் கடந்து வருந்தி என்ன பயன்?

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!