ஜில்லென்ற காற்று சற்று சத்தமாக ஆடவனின் காதை தீண்டியதோடு “ஏய்யா, வாசு…” என்ற மணியனின் குரலையும் சேர்த்தே கொண்டு வந்தது.
Advertisement
பட்டென தன் நினைவிலிருந்து வெளி வந்தவன் அண்ணார்ந்து பார்த்தான். அகழிக்கு மேலே தீப் பந்தத்தோடு நின்றிருந்தனர் ஊர்க்காரர்கள்.
அவர்கள் அங்குமிங்கும் நடக்கும் விதமும், சத்தமாக பேசும் விதமுமே இவர்களை கண்டுக் கொண்டனர் என்பது புரிந்தது. சட்டென தொற்றிக் கொண்டப் பரபரப்போடு “தாத்தா…” என்று சத்தமாக அழைத்தான்.
Advertisement
முதன் முதலாக பேரனின் வாயிலிருந்து வரும் அழைப்பு இப்படியான சூழ்நிலையிலிருந்தா வர வேண்டும் என்று நினைத்த மணியனுக்கோ மனம் கலங்கிப் போனது.
Advertisement
கலங்கிய மனதைத் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அகழியை பார்த்தார். தீப் பந்தத்தின் உதவியோடு வாசு மட்டுமே அவரது கண்களுக்கு தெரிந்தான்.
Advertisement
அவர்கள் கொண்டு வந்த தீப்பந்தங்களும், தீவெட்டி வெளிச்சமும் அந்த அகழியின் பாதியை ஆக்கிரமித்து இருந்தது. மீதி பாதிக்கு கடும் இருட்டை கொடுத்திருந்தது. அதன்விளைவு வெளிச்சத்தில் நின்ற வாசு மட்டுமே நன்றாக தெரிய, இருட்டில் அமர்ந்திருந்தவளின் உருவம் மட்டுமே தெரிந்தது..
அவளிடம் அசைவே இல்லை என்பதை உணர்ந்த பெரியவரோ சற்றே பதட்டமான குரலில்
“ஏய்யா சாமி, இரண்டு பேரும் பத்திரமா தானே இருக்கீங்க, பாப்பா நல்லா தானே இருக்கறா…” எனக் கேட்டார்.
பெரியவரின் ‘பாப்பா நல்லா தானே இருக்கறா?…’ என்ற கேள்வியில் தான் நவி என்பவள் வாசுவின் நினைவிற்கே வந்தாள்.
சட்டென கண்களால் அவளைத் தேடினான். அவனுக்கு நேர் எதிரே இரண்டடி தள்ளி கற்சிலைப் போல் அமர்ந்திருந்தாள். அவளது இறுகிய முகமும், உயிர்ப்பில்லா கண்களும் சற்று முன் அவளிடம் நடந்து கொண்ட விதத்ததை நினைவுப் படுத்தியது. உறைந்து போய் கனத்து நின்று விட்டான்.
‘காதலாய், அன்பாய், ஆழ்ந்து உணரக் கூடிய அணைப்பை நொடியில் கலங்கப்படுத்தி விட்டேனே…’ என நினைத்தவனுக்கு கண்கள் கலங்கும் போலிருந்தது. ‘இதற்காக தானே அவளது காதலை ஏற்க மறுத்தான். இதற்காக தானே அவளே தேடி ஓடி வரும் நேரமெல்லாம் விரட்டினான். இதற்காக தானே தனது மனதையும் மறைத்தான்…’ கேசத்தை அழுத்திக் கோதி கொண்டே காய்ந்த இதழ்களை அழுத்திக் கடித்து கொண்டவனுக்கு இதயம் வேகமாக துடித்தது. உண்மையாகவே இந்த நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை.
படபடவென அடித்துக் கொண்ட நெஞ்சைத் தடவியப்படி பெண்ணைப் பார்த்தான். நிலத்தில் அழுந்த புதைத்திருந்த கால் விரல்களும், ஒன்றோடு ஒன்று இறுக கோர்த்திருந்த கை விரல்களும் அவளது நிலையை சொல்லாமல் சொல்லியது.
இமைக்காமல் பெண்ணைப் பார்த்தான். அவளது நிலைக் குலைந்தத் தோற்றத்தை கண் கொண்டுப் பார்க்க முடியவில்லை அவனால். இக்கணமே அவளை தன்னுள் இறுகணைத்து ‘உன்னை என் உசுரளவுக்கு மேல காதலிக்கிறேன் நவினா…’ எனக் கூற தோன்றியது.
அக்கணம் ‘உன்னால பிசிக்கல் லைஃப்க்குள்ள போக முடியுமா வாசு…’ என்ற இதயாவின் கேள்வி சம்பந்தமே இல்லாமல் கண்முன்னே மின்னி மறைய, பட்டென அவனது கண்களை விட்டு வெளிவந்தது சூடான கண்ணீர்.
ஆடவனின் கண்ணீரைக் கண்டதும் இத்தனை நேரம் கற்சிலை போல் அமர்ந்திருந்தவளின் கண்களை கண்ணீர் சூழ்ந்தது. கண்களை நிறைத்த கண்ணீரோடு ஆடவனைப் பார்த்தாள்.
பாவையின் கண்ணீரை கண்டதும் மென்மேலும் தவித்து போனான் வாசுதேவன். அவளிடம் செல்லென்று ஒரு மனம் கூற, ஒரு மனம் அவளிடம் செல்லாதே என்று தடுக்க, இவ்விரண்டு மனங்களையும் அடக்கும் முன் அவனது கைகளும்,கால்களும் பெண்ணவளை நெருங்கி, அணைக்க கூறியது…
அக்கணம் தன் மொத்த உணர்வுகளையும் அடக்க முடியாமல் ஐயோவென்று கத்த தோன்றியது அவனுக்கு… எங்கே தானொரு ஆண் மகன் என்றும் பாராமல் கதறி அழுது விடுவோமோ என்று வெகுவாய் பயந்தான். சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்.
தோள்பட்டையில் முகத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டே மேலே அண்ணார்ந்து பார்த்தான். மணியன் இவனது பதிலுக்கு காத்திருப்பது புரிந்தது…
நீண்ட நெடிய பெருமூச்சுடன் கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே கலங்கிய குரலை சரி செய்தபடி “ஹான் தாத்தா, நல்லா இருக்காங்க, நீங்க பயப்பட வேண்டாம்…” என்றவன் கண்கள் மணியனுக்கு அருகில் இவர்கள் மேலேறி வருவதற்கான ஏற்பாடுகளை செய்தபடி நின்றவர்களை கண்டது.
அவர்களை பார்த்தவாறே “தாத்தா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?…” எனக் கேட்டான்.
அதற்கு மணியன் பதில் கூறும் முன்பே “தம்பி, இந்தாண்ட வாங்க…” ஊரார் ஒருவர் குரல் கொடுத்தார்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் இளையவர்கள் இருவருமே அகழியிலிருந்து மேலேறி இருந்தனர்.
****
இங்கு,யானை காட்டிற்குள் விரட்டியடிக்கப் பட்டதுமே அய்யம்மாள், ஜானகி உட்பட நவியின் பெற்றோர்களும் காட்டிற்கு விரைந்து விட்டனர். அவர்கள் காட்டை நெருங்க நெருங்கவே இளையவர்கள் இருவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்து விட்டது. உண்மையைச் சொல்லப்போனால் அப்பொழுது தான் மூச்சே வந்தது பெரியவர்களுக்கு.
அதுவும் பானுமதிக்கெல்லாம் உயிரேயில்லை.ஒரே மகள் அல்லவா அத்தனை பயந்து விட்டார். அவளும், அவளைத் தேடி சென்றவனும் நல்லபடியாக வீடு திரும்பி விட்டால் பால்குடம் எடுப்பதாக வேண்டியிருந்தார்.
அதிலும், அய்யம்மாள் ஒருபடி மேலே போய் “அய்யா, எழுதியமரத்தையா இரண்டு பேரையும் பத்திரமா வீடு சேர்த்துடு சாமி… உன் சன்னதில வைச்சே இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணிப் போடறேன்…” சற்று சத்தமாகவே வேண்டுதலை வைத்தார். அக்கணம் அவரது வேண்டுதலை கவனிக்கும் நிலையில் தான் மற்றவர்கள் இல்லை. ஆனால் கவனிக்க வேண்டியவர் கவனித்து விட்டார் போல கம்பீர மீசைக்கு கீழிருந்த இதழ்கள் சிரிப்பில் வளைந்தது.
அகழியிலிருந்து வாடிய பூவாய் பூவாய் மேலேறிய மகளை கண்டதும் ஓடி சென்று அணைத்து கொண்டார் பானுமதி. மகளை அணைத்த கையோடு அவளது மேனி முழுக்க ஆராய்ந்தார். மகளுக்கு பெரியதாக ஒன்றுமில்லையென்று அறிந்த பின்னரே “இந்த நேரத்தில இங்க எதுக்கு டி வந்த…” எனக் கேட்டு மகளின் முதுகிலேயே ஒன்று போட்டார்.
அவர் அடித்தடி ஜானகி, அய்யம்மாளோடு நின்றிருந்த வாசுவிற்கும் கேட்டது. அவளைத் திரும்பி பாரென கூறிய மனதினை அடக்கி கொண்டவன் மணியனை பார்த்தான். பேரனின் பார்வை அவருக்கு புரிந்ததோ என்னவோ உடனே திரும்பி பானுமதியை பார்த்தார்.
மணியனின் பார்வையை கவனிக்கும் நிலையிலா பானுமதி இருந்தார். அவரது கவனம் முழுக்க மகளை திட்டுவதில் தானிருந்தது.
“அப்பத்தா கூப்பிட கூப்பிட விசுக்குனு கெளம்பிட்டியமா? பெட் ரூமுக்காக சீராட்டிட்டு மலங்காட்டுக்கு வந்து உட்கார அளவுக்கு சின்ன பொண்ணா நீ…” எனக் கேட்டு மீண்டும் ஓரடி போட்டார்.
அவரது ஒவ்வொரு அடிக்கும், திட்டிற்கும் பதில் பேசாமல் சிலைப் போல் நின்றாள் பேதை… இதுவே மற்ற நாட்களாக இருந்திருந்தால் ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது பேசி இருப்பாளோ என்னவோ இன்றைக்கு அத்தனை அமைதி அவளிடத்தில்.
மகள் பதிலுக்கு பதில் பேசுவாள் நாலு திட்டு சேர்த்து திட்டுவோம் என்று நினைத்த பானுமதிக்கு அவளது அமைதி மேலும் கோபத்தை தர
“பதில் சொல்றாளா பாரு முணுக்கி…” என்று மீண்டும் ஓரடி முதுகிலேயே வைத்தார்.
இதுவரை அமைதியாக நின்ற அய்யமாளோ”வயசுக்கு வந்த பிள்ளையை எதுக்கு இப்படி பொழுதினுக்கும் அடிக்கிற பொண்ணு… கம்ன்னு இருக்க மாட்டியா?” சற்று சத்தமாக அதட்டினார்.
அவரது அதட்டல் கொஞ்சமே கொஞ்சம் வேலை செய்தது “பின்ன என்னங்க த்தை, இவளுக்கு எதுக்கு இத்தனை சீராட்டு… இவலென்ன சின்ன புள்ளையா கேட்கிறேன். அதுவும் இல்லாம கண்ணு மண்ணு தெரியாமல் குழில விழுந்திருக்கா, இவ நல்ல நேரமோ என்னமோ வெறும் சிராய்ப்போட போயிடுச்சு, பெருசா அடிகிடி பட்டிருந்தா அம்மான்னா வருமா? அப்பான்னா தான் வருமா சொல்லுங்க… எந்த சாமி புண்ணியமோ தம்பி கண்ணுல பட்டிருக்கா, இல்லைன்னா என்ன ஆகறதுங்க?…” எனக் கூற கூறவே குரல் கரகரத்து விட்டது பானுமதிக்கு.. கலங்கிய கண்களை முந்தானையால் அழுத்தி துடித்துக் கொண்டே மகளை தோளோடு தோள் சேர்த்தணைத்துக் கொண்டார் இனி உன்னை தனியே விட மாட்டேன் என்பது போல..
அதே நேரம் பானுவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அய்யம்மாளுக்கு சரியென்று தான் தோன்றியது. இருந்தும் “ஏதோ கெட்ட நேரம் இப்படி நடந்துடுச்சு பொண்ணு, இதுக்கு போயி எதுக்கு கண்ணு கலங்கிட்டு இருக்க,புள்ளை தான் நல்லபடியா வந்துட்டல்ல…” என்று சொல்ல, அதற்கு பானுமதி பதிலுக்கு பேச என்று அவர்களது பேச்சு நீண்டது.
இவர்களது சம்பாஷனை காதில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை நவிக்கு. இதுவே பழைய நவியாக இருந்திருந்தால் பானுவையோ, மற்றவர்களையோ இந்தளவுக்கு பெர்போர்மன்ஸ் செய்ய விட்டிருக்க மாட்டாளோ என்னவோ. ஆனால் இன்று அவளது மனநிலை முற்றிலும் வேறாக இருக்க, மற்றவர்கள் பேச்சு காதில் கேட்டும் கேட்காத நிலை தான். ஏதோ கை பொம்மை போல பானுமதியின் கைகளுக்குள் அடங்கி நடந்தாள்.
அதே நேரம் இங்கு, மகனின் கையை இறுக பற்றியப்படி வந்தார் ஜானகி. மகனின் முகத்தை பார்ப்பதும், வழி தடத்தை பார்ப்பதுமாக வந்தவரின் முகம் முழுவதும் இறுகி கறுத்திருந்தது. தூக்கத்தில் அவன் அலறி எழுந்த காட்சி கண்முன்னே மின்னி மறைந்தன…
‘ஐயோ, பெரிய தப்பு பண்ணிட்டேனே, என் வாழ்க்கையும் அழிச்சுட்டு, என் புள்ளை வாழ்க்கையும் ஒன்னுமில்லாமல் ஆக்கிட்டேனே…’
‘தப்பு பண்ண என்னை விட்டுட்டு என் பையனுக்கு தண்டனையை குடுத்துட்டியே கடவுளே… என் வயித்துல பிறந்த பாவத்தை தவிர வேற என்ன பண்ணான். அவனுக்கு இப்படியொரு கொடூரத்தை நடக்க விட்டுட்டியே ஆண்டவா…’ மனம் ஓவென்று கதறி அழுதது.
இந்த துக்கத்தை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… அதுவும் மகனுக்கு நடந்த அனைத்தும் புரிந்து கொண்ட பின்னும் கூட இந்த உயிர் இவ்வுடலை விட்டு பிரியவில்லையே என்ற எண்ணம்.
‘ எனக்கு இப்பொழுதே சாகும் வரத்தை தருவாயா ஆண்டவா…’ மனதிற்குள் கேட்டுக் கொண்டார்.
இவர் கேட்டதும் கொடுக்க கடவுள் என்ன மிட்டாய் கடைக்கரானா? மொத்த வட்டியும் வாங்கிய பின்பு தானே அசலை வாங்குவான். ஒருவேளை ஜானகியின் வட்டி கணக்கு இன்னும் மீதமிருக்கிறதோ என்னவோ…
அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் வீட்டிலிருந்தனர்.
களம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த வாசலின் நடுவே வேப்பமர கம்பத்தில் தொங்க விடப்பட்டிருந்த குண்டு பல்புகள்,மங்கிய மஞ்சள் நிற ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது.
அதன் அருகிலேயே கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருக்க, மகளை கட்டிலில் அமர வைத்த பானுமதியோ அவளது காயத்திற்கும் களிம்பு பூசி விட்டு, திண்ணையில் ஜானகியின் அருகில் அமர்ந்திருந்த வாசுவிற்கும் களும்பை பூசிவிட்டார். இருவருக்குமே கைக் கால்களில் சிராய்ப்பு இருந்தது.
நல்லவேளை பெரும் பாறையோ இல்லை கற்களோ இல்லை… இருந்திருந்தால் என்னவாகி இருக்கும் நினைக்க கூட முடியவில்லை அவரால்… அதே நேரம் கிடா வெட்டும் அன்றே பால் குடமும் எடுத்து விட வேண்டுமென்று நினைத்தார்.
இளையவர்கள் இருவருக்கும் களிம்பை பூசி விட்டு நிமிர்ந்த நேரம்
அதனைத் தொடர்ந்து “இரண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்க ஆபிஸ்ல ஷாக் அடிச்சு ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தாங்க. எங்களுக்கு காலையில தான் தகவலே தெரிஞ்சுது… அவசரமா கிளம்பி போனால் பேச்சு மூச்சில்லாம கிடைக்கிறா. பார்த்ததும் உசுரே இல்லை எங்களுக்கு. என் புள்ளை நல்லபடியா வந்துட்டா உனக்கு கிடா வெட்டி, பொங்க வைக்கிறேன்னு எழுதியமரத்தையனுக்கு வேண்டிக்கிட்டேன்.இன்னைக்கு…” அடுத்து பானுமதி பேசும் முன்பே
“நானும் தான் புள்ளைங்க இரண்டு பேரும் பத்திரமா வீடு திரும்பிட்டா,உன் சன்னதில வைச்சே இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கிறேண்ணு வேண்டியிருக்கேன்…” என்றார் அய்யம்மாள்.
அவரது பேச்சில் இத்தனை நேரம் சலசல நீரோடை போல் கேட்டுக் கொண்டிருந்த பேச்சு சத்தம் அப்படியே நின்றது… அதே நேரம் அனைவரின் பார்வையும் தற்பொழுது அய்யம்மாளிடம். நிலைத்தது.
அனைவரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு நவியின் அருகில் அமர்ந்திருந்த ஆறுமுகத்திடம் திரும்பி “ஏய்யா என் பேரனுக்கு உன்ர மவளை கட்டித் தர மாட்டியா?…” எனக் கேட்டார். அந்த குரலில் என் பேரனை நீ வேண்டாமென்று கூறிவிடுவாயா? என்ற தொனியிருந்தது.
அவரது கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்றாலும் “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்குங்கம்மா. பிள்ளைகளுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு இருந்தா முறையா கட்டி வைப்போம்…” என்றார் மகளை பார்த்தபடி. ஆரம்பித்திலிருந்தே பானுமதியின் எண்ணம் இதுதான் என்பதால் அவரிடம் கேட்காமலேயே தனது விருப்பத்தை கூறினார் ஆறுமுகம்.
அக்கணம் “இல்லை ப்பா, எனக்கு இஷ்டமில்லை…” என்ற நவியின் குரலோடு
“இல்லை பாட்டி இது சரி வராது…” என்ற வாசுவின் குரலும் இணைந்து கேட்டது.