Skip to content
Post Views: 330

யாரோ யாரோடி -3
வெண்பாவின் வீட்டு அழைப்பு மணியை அடித்துவிட்டு படபடக்கும் இதயத்துடன் காத்திருந்தான் கார்த்திக்..
Advertisement
நேற்றைய இரவிலிருந்தே அவனுக்கு பதற்றம் தொடங்கிவிட்டது
இந்நேரம் அவளுக்கு நான் யார் என்ற உண்மை தெரிந்திருக்கும் அவள் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று அவனுக்கு சுத்தமாக ஐடியா இல்லை..
விடிந்ததும் விடியாமல் அவளைப் பார்த்து பேசிவிட வேண்டும் என்று வந்துவிட்டான்.
Advertisement
நகரும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகத் தோன்ற அந்த கொடைக்கானல் பனியிலும் அவனுக்கு வியர்த்தது..
Advertisement
நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி நின்றவனைப்பார்த்த முகிலன்..
“எவ்வளவு தைரியமான ஆளுங்களையும் இந்த காதல் இப்படி பலவீனமாக்கிடுதே… பாவம் கார்த்திக் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பம்முறான்.. கல்யாணம் ஆனா அவ்வளவுதான்.. கால்லயே விழுந்துடுவான்னு நினைக்கிறேன்…” என்று மனதில் நினைத்துக்கொண்டு நமுட்டுச்சிரிப்பு சிரித்தான்.
“என்னடா சிரிப்பு..?” என்று எரிந்து விழுந்தான் கார்த்திக்
Advertisement
“ஒன்னும் இல்ல மச்சி… உலகத்த நினைச்சேன்… சிரிச்சேன்…” முகிலன் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல
“டேய் உன்ன பத்தி எனக்கு தெரியும்டா.. உலகத்த நினைக்கிற மூஞ்சிய பாரு… ஒழுங்கா என்ன நினைச்சேன்னு சொல்லு!”
“அது ஒன்னும் இல்ல மச்சி.. நேத்து வரைக்கும் லவ் பண்றதுக்கெல்லாம் எவன் டா எஃபர்ட் போடுவான்னு பந்தாவா சீன் போட்டுட்டு இருந்த.. ஆனா பாரு இன்னைக்கு ஒரு பொண்ணுக்காக இப்படி பிச்சைக்காரன் மாதிரி யார் வீட்டு வாசல்லயோ வந்து நிக்கிறியே.. அதை நினைச்சேன்.. சிரிச்சேன்… இட்ஸ் ஆல் ஃபேட், யூ நோ? எழுதி வைக்கப்பட்ட விதி…” என்று பாவனையுடன் கூறிவிட்டு முகிலன் இன்னும் சத்தமாக சிரித்தான்.
“அவனவன் இங்க செம்ம டென்ஷன்ல இருக்கான்.. நீ என்னடான்னா என்னைய பார்த்து சிரிக்கிற… சிரிடா சிரி.. நீயும் ஒரு நாள் மாட்டுவல்ல, அப்ப இருக்குடி உனக்கு கச்சேரி…” கார்த்திக் எரிச்சலுடன் அவனுக்கு சாபம்விட
“மாட்டினா தானே.. சிறுத்தைதான் சிக்கும் ஆனா சில்வண்டு சிக்காது மச்சான்.. நமக்கு லவ்லாம் செட்டே ஆகாது.. அதுவும் பார்த்த உடனே காதல்லாம் சான்ஸே இல்லை…” என்றான் அலட்சியமாக
முழுசாக இரண்டு நிமிடங்கள் கழிந்தும் கதவு திறக்காமல் போக..
கார்த்திக்கின் மனம் சோர்ந்தது.. அவனது கவலைதோய்ந்த முகத்தைப்பார்த்த முகிலன்..
“டேய் மச்சான் ஃப்ரீயா விடுடா… எல்லாம் நல்லபடியா நடக்கும்…” என்று அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தியசமயம் கதவு திறந்தது.
கார்த்திக் ஆவலோடு உள்ளே பார்த்தான், ஆனால் அங்கே வெண்பாவைப் பார்த்ததும் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
ஆனால் முகிலனின் கண்களோ சட்டென்று விரிந்தன.. அவன் இதயத்தில் மணி அடித்தது, தலையில் பல்பு எரிந்தது.!
“என்ன டிரைவர் சார்.. திரும்ப வந்திருக்கீங்க? இங்கே டிரைவர் வேலை எதுவும் காலியா இல்லையே..” என்று அவள் கார்த்திக்கைப் பார்த்து சிரித்து கேலி செய்தாள்.
“சாரி.. அது சும்மா விளையாட்டுக்கு..” என்று கார்த்திக் சங்கடத்துடன் வாக்கியத்தை முடிக்காமல் இழுக்க
“நான் சும்மா கிண்டல் பண்ணேன்… உள்ள வாங்க..” என்று அவர்களை வரவேற்று உட்காரச் சொன்னாள். கார்த்திக் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஹாய், நான் கார்த்திக்.. இவன் என் ஃப்ரெண்ட் முகிலன்..”
“ஹலோ.. நான் வெண்பா…”
“வெண்பா.. ரொம்ப அழகான பேரு..குறள் வெண்பா வா இல்லை கலிவெண்பா வா..?” என்று அவனது காமெடி சென்ஸை காட்டினான் முகிலன்..
“ம்ம் வெறும் வெண்பா தான்..”என்று கூறி அவனை முறைத்தாள் அவள்.
கார்த்திக்கின் கண்கள் வீடு முழுவதும் அலைந்து தனது ஆசைமுகத்தை தேடிசோர்ந்தது. கடைசியில் பொறுமை இழந்து
“ஏங்க மித்ரா எங்க?” என்று வெண்பாவிடமே கேட்டான்..
அவள் பின்புற தோட்டத்தை கண்களால் சுட்டிக்காட்ட
கார்த்திக் தயக்கத்துடன், “நான் போகலாமா?” என்றான்.
“நிச்சயமா நீங்க தான் போகணும். ஏன்னா அவ உங்க மேல செம கடுப்புல இருக்கா..”என்றாள் வெண்பா.
கார்த்திக்கின் இதயம் திக் திக்கென்று அடிக்க ஒரு பெருமூச்சுடன்.. கொல்லைப்புறம் நோக்கி நடந்தான்.
“பார்த்து கார்த்திக்… கோவத்துல எதையாவது தூக்கிப் போட்டு மண்டைய உடைச்சிடப் போறா.. அவ கராத்தே பிளாக் பெல்ட் ஹோல்டர்… கவனமா இருங்க!” என்று வெண்பா உள்ளேயிருந்து கூற..
“அதெல்லாம் அவன் கரெக்டா கேட்ச் பிடிச்சிடுவான்.. காலேஜ் கிரிக்கெட் டீம் கேப்டன் அவன்…” என்று முகிலன் ஒரு அசட்டுச் சிரிப்புடன் சொன்னான். வெண்பா அவனை சந்தேகமாக மேலும் கீழும் பார்த்துவிட்டு அமைதியாக இருக்க..
“ஏங்க, கார்த்திக் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அதே மாதிரி மித்ரா.. உங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்…” என்று தொடங்கினான் அவன்..
“அதுக்கு..?” என்றாள் வெண்பா குழப்பத்துடன்
“நாமளும் அவங்கள மாதிரியே…” முகிலன் இழுக்க
“அவங்கள மாதிரியே?..” என்று வெண்பா கண்களில் கனல் எழ முறைக்க.
“இல்லை.. அவங்க வர்ற வரைக்கும் சும்மா பேசிட்டு இருக்கலாம்னு சொல்ல வந்தேன் அவ்வளவுதான்…” என்று உடனே சமாளித்து வைத்தான்.
அவன் பீதியடைந்த முகத்தைப் பார்த்து வெண்பா லேசாக சிரிக்க.
முகிலன் மைண்ட் வாய்ஸில் “எனக்கும் லைஃப் செட் ஆயிடும் போல இருக்கே.. டேய் மச்சி.. தேங்க்ஸ் டா!” என்று உயிர் நண்பனுக்கு நன்றியுரைத்தான்.
கார்த்திக் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கும் போதும் அவன் இதயத் துடிப்பு ஏறிக்கொண்டே போனது..
மித்ரா நேற்று பார்த்த அதே பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
அவள் அருகே சென்று அந்த பெஞ்சின் மற்றொரு ஓரத்தில் பேச்சின்றி அமர்ந்தான். சற்று பொறுத்து ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான்.
வெள்ளி ஜரியில் வேலைப்பாடு செய்த வெளிர் இளஞ்சிவப்பு (Pink) ஷிஃபான் புடவையில் அவள் தேவதை போல மிளிர்ந்தாள்.அவன் பேச்சிழந்து அவளை வெறிக்க..
அவளோ அவனை சற்றும் பொருட்படுத்தாமல் பேசாமடந்தை போல அமர்ந்திருந்தாள்.. அவளது மௌனமும் அலட்சியமும் அவனை இன்னும் அதிகமாக பயமுறுத்தியது.
மெதுவாக அவளது பெயரை அழைத்தான்… “மித்ரா…”
அவன் வாயால் முதல்முறையாக தன் பெயரை கேட்டதும் மித்ரா அப்படியே ஸ்தம்பித்து போனாள். அவன் குரலில் அவளது பெயர் காதுகளுக்கு சங்கீதம் போல ஒலித்தது. ஆனால் அவள் தன் பலவீனத்தை காட்டிக்கொள்ளாமல் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
“மித்ரா… ஐ அம் சாரி… ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.. நான் இதையெல்லாம் முன்னாடியே பிளான் பண்ணி பண்ணல.. எதிர்பார்க்காம நடந்தது தான். நாம ஆக்சிடென்டா சந்திச்சதை, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஒரு நல்ல வாய்ப்பா எடுத்துக்கிட்டேன்..அவ்ளோதான்.”
“யோசிச்சுப் பாரு.. இது ஒரு முறையான பெண் பார்க்கும் படலமா இருந்திருந்தா எவ்ளோ ஃபார்மலா இருந்திருக்கும்? நம்மளோட உண்மையான குணமே தெரிஞ்சிருக்காது.. ஆனா இப்போ நான் உன்னைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்… நீயும் என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சுருப்பன்னு நினைக்கிறேன்.. நான் என் அடையாளத்தை மறைச்சிருக்கலாம், ஆனா எந்த இடத்திலயும் நான் நடிக்கல.. நான் நானாவே இருந்தேன் மித்து.. நீ என்னை நம்பணும்.. உன்னை காயப்படுத்தவோ ஏமாத்தவோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை…” அவனையறியாமல் அவன் மித்து என்று செல்லமாக அழைத்ததை அவள் கவனிக்கத்தவறவில்லை… அந்த அழைப்பில் அவள் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது..
“இதுக்கு அப்புறமும் நான் உன்னை ஏமாத்திட்டேன்னு நீ நினைச்சா.. உண்மையிலேயே சாரி.. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.. இனி நீ தான் சொல்லணும்..”
அவன் தன் விளக்கத்தை முடித்துவிட்டு பதிலுக்காக அவள் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்திருந்தான்..
ஆனால் அவள் அப்போதும் சிலைப் போல அமர்ந்திருக்க, மிகுந்த ஏமாற்றத்துடன் பேச்சின்றி அங்கிருந்து கிளம்பினான்.
கேட் வரை வந்த பிறகுதான் முகிலனை உள்ளேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. அவன் உள்ளே செல்ல திரும்பியபோது, அங்கே எதிரே மித்ரா கைகளைக் கட்டிக் கொண்டு கோபமான முகத்துடன் நிற்பதைப் பார்த்து திடுக்கிட்டான்.
“என்ன?..” என்று கார்த்திக் குழப்பத்துடன் கேட்டான்.
“எதுவும் சொல்லாம போனா என்ன அர்த்தம்?..” என்று அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்.
“எதுவுமே சொல்லாம இருந்தது நீ தான்.. நான்தான் என்னோட காரணங்களை சொல்லிட்டேனே..”
“ஆமா என்ன சொல்லணுமோ அதைச் சொல்லாம.. வெட்டி கதை பேசிட்டு இருந்தா.. நான் என்ன பேச முடியும்?..” என்றாள் எரிச்சல் மறையாத குரலில்..
“இன்னும் என்ன சொல்லணும் மித்ரா… நான்தான் சாரி சொன்னேனே..?”
“மண்ணாங்கட்டி சாரி… பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை… லூசு.”என்று அவள் அடிக்குரலில் முணுமுணுத்தாலும் அவன் பாம்புக்காதுகளில் தெளிவாக கேட்டது.. அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் அவன் விழிகள் விரிந்தன.
“முழிக்கிறதைப் பாரு… குரங்கு..” என்று அதற்கும் அவனைத் திட்டிவிட்டு.. முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே போகத் திரும்பினாள். ஆனால் அவன் சட்டென்று அவள் கையைப் பிடித்து தடுத்தான்.
அவன் தொடுகையில் உள்ளுக்குள் ஏதேதோ தலைகீழாக புரள.. வெட்கத்தை மறைக்க அவள் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள்.
“மித்து…” என்று வியப்புடன் அழைத்தவன்..
தான் பிடித்திருந்த கையை சுண்டியிழுக்க அந்த வேகத்தில் அவன் மார்பில் மோதி நிலைதடுமாறியவள் பற்றுதலுக்கு அவன் தோள்களையே பிடித்துக்கொண்டு அவனை முறைத்தாள்.
அவன் அவள் கண்களை நேராகப் பார்த்து..
“ஹேய் உன்ன பிடிக்காம தான் இப்படி வந்து கெஞ்சிட்டு இருக்கேனா..?இதுகூட தெரியாத நீ தான் லூசு..” என்று கொஞ்சலாக கண்டித்தான்.
“அப்போ சொல்லு..”
“ என்ன சொல்லனும்..?” என்று அவன் வேண்டுமென்றே தெரியாதவன் போல நடிக்க..
“ச்சு..” என்று முகம் சுளித்துவிட்டு உள்ளே போகத் திரும்பியவளை, இடையை சுற்றி வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்தபடி அவள் முகம் பார்த்துக் குனிந்து..
“நான் வெறும் சாதாரண டிரைவர் தான் மேடம்.. இருந்தாலும்.. உங்களை கண்கலங்காம கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவேன்…” என்று விளையாட்டாகத் தொடங்கியவன்..பின் சீரியஸான குரலில்..
“ஐ லவ் யூ மித்து… உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னை கல்யாணம் பண்ணிப்பியா?” என்று கேட்டான் உளப்பூர்வமாக..
அளவில்லா மகிழ்ச்சியில் அவள் இதயம் சிறகடித்துப் பறக்க
“டிரைவரை கல்யாணம் பண்ணிட்டு வாழ்றது கொஞ்சம் கஷ்டம் தான்.. இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. ஆனா இனிமே ஆக்சிடென்ட் மட்டும் பண்ணக் கூடாது… ஓகேவா?” என்று நிபந்தனையிட்டாள்.
“மித்து.. உன்கிட்ட இன்னொரு உண்மையும் சொல்லணும்… ஆக்சிடென்ட் பண்ணப்போ காரை ஓட்டினது நான் இல்லை முகிலன்..”
அவள் அவன் மார்பில் செல்லமாக ஒரு குத்து விட்டு
“இதுவும் பொய்யா? இன்னும் என்னென்ன பொய் சொல்லி இருக்க நீ?” என்றாள் சிணுங்களாக..
“இனிமேல் உன்கிட்ட எந்தப் பொய்யும் சொல்ல மாட்டேன் கண்மணி.. பிராமிஸ்..” என்று அவள் கையைப் பற்றி தன் இதயத்தின் மேல் வைத்து அழுத்தினான்…
“சரி.. நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே…?” என்று அவளையே விழுங்குவது போல பார்க்க..
அவள் வெட்கத்தில் தலை குனிந்து ‘சரி’ என்பது போல தலையசைத்தாள்.
“என்னைப்பார்த்து சொல்லு மித்து..”
“யெஸ்..” என்றாள் அவள் மிருதுவாக
“அவ்வளவுதானா?” என்று அவன் விடாமல் கேட்க..
ஒரு நிமிடம் தயங்கிவிட்டு
“ஐ லவ் யூ டூ கார்த்திக்..” என்றவளின் முகம் செந்நிறம் கொண்டிருந்தது..
தன்னவள் சொன்ன அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும் மனம் வானத்தில் சிறகடித்து பறக்க
அவள் செவ்விதழ்களில் தன் இதழ்களை ஒற்றியெடுத்து தங்கள் காதலின் முதல் அச்சாரதைப் பதித்தான் அவன்.
முற்றும்
error: Content is protected !!