Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 21

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 21
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல் ,பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தம், அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” பாரதியார்.
இந்த பாடலின் அர்த்தம்.ஆயிரம் அன்னசத்திரங்கள் அமைப்பதை விடவும், பத்தாயிரம் ஆலயங்கள் கட்டுவதை விடவும், பிற எல்லா தர்மங்களையும் செய்வதை விடவும்
மேலான புண்ணியம் ஒன்று உண்டு எனில் அது ஒரு ஏழைக்கு எழுத்தறிவு கற்பிப்பது.
அதாவது, கல்வி கொடுப்பதற்குச் சமமான தர்மம் இல்லை.அதனால்தான் எழுத்தறிவித்தவன் இறைவன் என்கிறோம்.


Advertisement

மேற்சொன்ன பாரதியின் வரிகளுக்கு ஏற்ப குறைந்த கட்டணத்தில், ஏழை மாணவர்களுக்கும் தரமான ஆங்கில வழி கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ராஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அது. புற்றுநோய் என்னும் பெயரில் அவரின் உயிரை கொடிய விதி பறித்து விட,அவரின் மனைவி வனிதா தற்போது பள்ளியை நிர்வகித்து வருகிறார்.
காலை, கங்கா பள்ளிக்கு கிளம்ப லட்சுமி, “இங்க பாரு கங்கா ராஜன் சார் ரொம்ப ரொம்ப நல்லவரு. நீயும், கெளசியும் சின்ன பிள்ளைகளா இருந்த அப்ப,ரெண்டு பிள்ளைகளையும் நல்லா படிக்க வைக்கனுனு” என்கிட்ட சொன்னாங்க.
இப்ப நீ அவங்க ஸ்கூலுக்கே டீச்சரா போறே. சார் இப்ப உயிரோடு இருந்து இருந்தா ரொம்ப சந்தோச படுவாரு, வனிதா மேமும் ரொம்ப நல்லவங்க. நீ அவங்க கிட்ட நல்லபேரு எடுக்கலனா கூட பரவா இல்லை. கெட்ட பேர் மட்டும் எடுத்தராதே.

Advertisement

அங்க போய் உன்னோட புடிவாதம் எல்லா காட்ட கூடாது. குழந்தைகளுக்கு பொறுமையா சொல்லி கொடு. கோபத்துல அடிச்சறாதே என மகளுக்கு தலை வாரிக் கொண்டே ஆயிரம் அட்வைஸ் பொலிந்தார்.

Advertisement

‘சரி சரி’ என கிளம்பி அப்பா முன்பு வர, இந்தா கங்கா பத்து ரூபா காலையிலே அஞ்சு,வர அஞ்சு டவுன் வண்டி மட்டுதா அந்த ஸ்டாப்லே நிக்கும். பாத்து போய்ட்டு வா என தன் பங்குக்கு ஆயிரம் பத்திரம் சொன்னார் சிவராமன்.
பிள்ளைகள் ஒரளவு வளர்ந்த பின் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு, தேவையான இடத்தில் கண்டிக்க வேண்டும் என சிவராமனும் கொஞ்சம் விட்டுப் பிடித்தார். மகள்கள் வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்ப மாற,இவரும் அவர்களின் வளர்ச்சியை எட்ட நின்று ரசித்து தேவையான இடத்தில் மட்டும் கண்டிப்பை காட்டி வந்தார். மகள்களும் சுதந்திரமாக இருந்தாலும், அப்பா என்ற பெயரில் ஒரு பயம் இருந்தது.
கங்கா டவுன் வண்டியை பிடித்து வந்துவிட்டாள். ஸ்டாப்பில் இருந்து சிறிது தூரம் பள்ளிக்கு நடந்து வர வேண்டும். இரண்டு பக்கமும் வானம் பார்த்து விளையும் பசுமையான பூமியை ரசித்து கொண்டே நடந்தாள்.

Advertisement

பள்ளி வாசலை அடைந்ததும் வாட்ச்மேன், யார்? என கேட்க, புதுசா சாயிண்ட் பண்ணிருக்க டீச்சர் என்றாள். டீச்சர் என்றதும் கொஞ்சம் பவ்வியமாக எல்லாரும் எட்டரைக்குதா வருவாங்க நீங்க ஏழே முக்காலுக்கே வந்துட்டீங்க,நாளைலே இருந்து எட்டு மணி வண்டிக்கு வந்தீங்கனா கரைக்ட்டா இருக்கும்.
ஆபிஸ் ரூம் முன்னாடி சேர் போட்டு இருக்கும் அங்கே போய் உட்காருங்க. பிரின்சிபல் சார் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க என்றார்.
அதேபோல் ஆபீஸ் ரூம் முன் சென்று , பிரிசின்பல் ரூமிற்கு நேர் எதிரில் அமர்ந்தாள். அங்கே சுவற்றில் வெள்ளை சட்டையில் சாந்தமான முகத்துடன் ஒரு போட்டோ ரோஜா மாலையுடன் மாட்டப்பட்டிருந்தது.
அதில் திரு.ராஜன், நிறுவனர் என்று எழுதி இருந்தது.
அம்மா சொன்ன ராஜன் சார் இவர் தானோ என நினைத்து,அந்த போட்டோ அருகில் சென்று ,சார் நான் இன்னைக்கு உங்க ஸ்கூல்ல பர்ஸ்ட் டே வொர்க் பண்ண வந்துருக்கே.
டெய்லியும் இங்க படிக்கற குழந்தைகளுக்கு ஏதாவது புதுசா கத்து கொடுக்கனும், அவங்க அறிவை பெரிய அளவுல வளர்த்து விடனும். உங்களோட ப்ளஸ்ஸிங்ஸ் எனக்கு வேண்டும் சார் என மனதார கும்பிட்டு விட்டு அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் பருமனான ஒருவர் வர இவர்தான் பிரின்சிபல் என எழுந்து குட்மார்னிங் சொன்னாள்,அவர் இவளை மேலும் கீழும் பார்த்து விட்டு குட்மானிங் சொல்லி, அருகில் இருந்த ஸ்டாப் ரூம் சென்று அமர்ந்து கொண்டார்.அவர் பிரின்சிபல்இல்லை என கங்கா புரிந்து கொண்டாள்.
அடுத்து இன்னொருவர் சற்று மிடுக்காக போனில் பேசியபடி வர இவர்தான் பிரின்சிபல் என எண்ணி குட்மார்னிங் சொல்ல அவரும் பதிலுக்கு சொல்லிவிட்டு ஸ்டாப் ரூம் சென்று அமர்ந்து கொண்டார்.’ ச்சை’ இவரும் இல்ல போல என நினைத்து அங்கிருந்த கிரவுண்டை வெறித்து பார்த்தாள்.
கொஞ்சம் யங்காக ஒருவர் வர இவரும் இருக்க போவது இல்லை என சாதாரணமாக உட்கார்ந்து கொண்டாள்.
அவளது கெட்ட நேரம் அவர் நேராக பிரின்சிபல் ரூமில் சென்று அமர, உடனடியாக ஒரு அட்டன்டர் வந்து அவரிடம் ஏதோ பேசிவிட்டு கங்காவை நோக்கி வந்தார்.
மேடம் நீங்க யாரு? பிரின்சிபல் சார் உங்கள உள்ளே வர சொல்கிறார் என்றார். கங்கா ,”பர்ஸ்ட் இம்ப்ரெஷன் பெஸ்ட் இம்ப்ரெஷன் இப்படி சொதப்பிட்டையே” என தனக்குள்ளே பேசிக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவர் ஆரம்பிக்கும் முன் “இவளே சார் குட்மார்னிங் ஐ எம் கங்கா” என்றாள்.
ஓ! என்ற யோசனையுடன் நீங்க பிரைமரி டீச்சரா அப்பாயின்ட் ஆகி இருக்கீங்க. கொஞ்ச நேரத்துல உங்க கோ ஆர்டினேட்டர் சுதா மேம் வருவாங்க அவங்கள பார்த்துட்டு க்ளாஸ்க்கு கிளம்புங்க என்றார்.

சரி என தலையை ஆட்டி விட்டு வந்து அமர்ந்தாள். பள்ளி வாகனங்கள் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்து விட , அங்கிருந்த சப் ஸ்டாப்கள் அவர்களை அவர்கள் க்ளாஸ்ஸில் விட்டனர்.

கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் ஒரே பரபரப்பு. கங்கா என்னவென்று பார்க்க, வெள்ளை பென்ஸ் காரில் இருந்து இறங்கி புன்னகை முகமாக அங்கிருந்த குழந்தைகள், ஃபேக்கல்டிஸ், சப்ஸ்டாப் என அனைவருக்கும் அவர்கள் சொன்ன ‘குட்மார்னிங்’ க்கு பதில் குட்மார்னிங் சொல்லிக் கொண்டு வந்தார் பள்ளியின் கரஸ்பான்டன்ட் திருமதி.வனிதா ராஜன்.
பார்த்தால் எதிரே இருப்பவர்கள் தங்களை அறியாமல் கை எடுத்து கும்பிட வைக்கும் மரியாதை கலந்த தோரணையுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.
கங்கா எழுந்து குட்மார்னிங் மேம் என சொல்ல சற்று யோசனை உடன், லட்சுமி பொண்ணுதானே? என கேட்டார்.

ஆமாங்க மேம்

அம்மா நல்லா இருக்காங்களா?கேட்டனு சொல்லுங்க
சரிங்க மேம்
சுதா மேம் வந்துட்டாங்களா?என அங்கிருந்த சப்ஸ்டாப்பிடம் கேட்க, அதற்குள் சுதா வேகமாக வந்து குட்மார்னிங் மேம் என்றார். சுதா மேம் கோ ஆர்டினேட்டர்தா பர்ஸ்ட் வரனும். ஆன நீங்கதா லாஸ்ட்டா வரீங்க என்றார்.
சாரி மேம் இனி நேரமா வரே.
இதோட இதை நீங்க ஆயிரம் தடவை சொல்லி. நா கேட்டுட்டே விடுங்க இவங்களுக்கு என்ன க்ளாஸ் னு சொல்லி அனுப்புங்க என்று தன் அறைக்கு சென்று விட்டார்.
தன் எதிரே அமர்ந்திருந்த கங்காவை பார்த்து , உங்க டெமோ ஓ.கே பட் இங்லீஸ் ஃப்ளுயன்சி இல்ல. இது மெட்ரிகுலேசன் ஸ்கூல் இங்க இங்லீஸ் தா பிரதானம். அதுதா நா உங்கள ரிஜக்ட் செஞ்சே.
ஆனா மேம் நீங்க அவங்களுக்கு வேண்டப்பட்டவங்க ஒரு சான்ஸ் கொடுக்கலானு சொன்னதுனாலே உங்கள அப்பாயிண்ட் பண்ணிருக்கே. உங்களுக்கு பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் பி செக்சன் அலாட் செஞ்சிருக்கு.
அது போக ஃபிப்த் ஸ்டான்டர்ட் வரைக்கும் மேத்ஸ் ஹேண்டில் பண்ணணும் என்றார்.

கங்காவிற்கு வேப்பங்காய் கூட இனிப்பாக தோன்றும் மேத்ஸ் உடன் கம்பேர் செய்யும் போது, ஆனால் சுதா மேமின் முகத்தில் அவள் மீதான பிடித்தமின்மை தெரிய,சரி என ஒப்புக் கொண்டு முதன் முதலாக வகுப்பிற்குள் சென்றாள்.

வகுப்பின் உள்ளே, ஒரே சத்தம் ஒரு மாணவன் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்தான்.ஒருவன் பூமரில் இருக்கும் ஸ்டிக்கரை இன்னொருவன் கையில் ஒட்டிக் கொண்டிருந்தான். ஒரு மாணவி ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டிருந்தாள். ஒருத்தி அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தாள்.
கங்கா உள்ளே நுழைய ஒரு நிமிடம் இவளை யார்? என்ற தோனியில் பார்த்து விட்டு, தங்கள் வேலையில் மும்முரமானார்கள். அவர்களை பார்த்து ‘சைலன்ட்’ என கத்தினாள். பிறகு ‘நான் கங்கா உங்க க்ளாஸ் மேம்’ என்றாள்.
அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டு, மறுபடியும் தங்கள் வேலையை ஆரம்பித்தனர். கங்காவிற்கு என்ன செய்து இவர்களை தன்பக்கம் ஈர்ப்பது என தெரியாமல் விழித்தாள்.
அப்போது ஒருவன் அழுது கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தான். அவன் வாயில் உலகமே தெரிந்தது. அந்த அளவிற்கு ஆ வென கத்தி அழ, மீதம் உள்ளவர்கள் காதை அடைத்து அமைதியானர்கள்.
கங்கா அவனை சமாதானப்படுத்த எவ்வளவு முயன்றும் முடிய வில்லை. தனது பேக்கை கூட தோலில் இருந்து கழற்றாமல் கத்தினான். கங்காவும் காதை அடைத்து குழந்தைகளிடம் யார் இவன் ? ஏன் இப்படி அழுகிறான்? என கேட்க, இவன் பெயர் தீபன் குமார் எப்பவும் இப்படிதா மேம் அழுவான் என்றனர்.
இவன் சத்தம் கேட்டு பக்கத்து க்ளாஸ் டீச்சர்ஸ் எல்லாம் வந்து விட்டனர். அவனை சாமாதான படுத்தி தண்ணீர் குடிக்க வைத்தனர். அவன் தண்ணீரை ஒரு ஆசிரியை மீது துப்பி விட்டான்.
அவர் அமைதியாக துடைப்பதை கங்கா பார்த்து, இந்த டீச்சர் வேலை ரொம்ப கஷ்டம் போலவே என நினைத்தாள். அதற்குள் தேவி என்ற மேம் எதுக்கு மேம் மேலே துப்புனே உன அவனை அடிக்க ஐய்யோ! என்ன கொல்லறாங்க என கத்த ஆரம்பித்தான்.
வேறு வழி இல்லாமல் சுதா மேம் இடம் கூட்டிச் சென்றாள். அவர் சற்று சலிப்புடன் இங்க பாருங்க கங்கா இன்னைக்கு பர்ஸ்ட் டே குழந்தைங்க இப்படிதா வருவாங்க. நீங்கதா சமாளிக்கனு,எல்லாதுக்கு எங்க கிட்ட வர கூடாது.உங்க க்ளாஸ்ல இருக்கற முப்பது குழந்தைகளுக்கு நீங்கதா ரெஸ்பான்சிபல். சோ நீங்கதா ஏதாவது செஞ்சு அவனை க்ளாஸ்குள்ள உட்கார வைக்கனு என்றார்.
எதுவும் பேசாமல் தலையை ஆட்டிவிட்டு திரும்ப க்ளாசிற்கு வந்தாள். அவனை போர்ட் முன்பு நிற்க வைத்து ,அனைத்து குழந்தைகளையும் அழைத்து கையை தட்ட சொன்னாள். அனைவரும் தன்னை நோக்கி கையை தட்ட இவனும் அழுகையை நிறுத்தி அவர்களுடன் கையை தட்ட ஆரம்பித்தான்.
கங்காவிற்கு அவனை சமாளிக்க ஒரு வழி கிடைத்ததை நினைத்து, அப்பாடா! என்றிருந்தது.
எவ்வளவோ கேடிதனங்களை பள்ளியில் படிக்கும் போது செய்திருக்கிறாள். இன்று தன்வினை தன்னைச் சுடும் என்பதை போல, அவளை மாதிரியே அறுந்த வால்களை அவளுடைய பொறுப்பில் தந்தனர்.

முதல்நாள் தொண்டை வலியுடனும், கால் வலியுடனும் வீடு வந்து சேர்ந்தாள்.

அடுத்தநாள் அதிகாலை நான்கு மணிக்கு பாப்பம்மாள் தன் இன்னுயிரை தன் ஆசை மகனான சிவராமன் மடியிலேயே விட்டார்.
கங்காவிற்கு தனி போன் எல்லாம் கிடையாது,ஊருக்கு கிளம்பும் முன் அருள் லட்சுமியின் மொபைல் எண்ணை வாங்கி சென்றிருந்தான்.
எப்படியோ பாப்பம்மாள் இறந்த செய்தி அவனுக்கு போய்விட,காலை ஆறு மணிக்கு போன் அடித்து விட்டான்.
கங்கா உங்க வீட்டு முன்னாடி கூட்டமா இருக்குனு நம்ம கூட வேலை செஞ்சே கதிர் சொன்னா என்ன ஆச்சு?
எங்க பாட்டி இறந்துட்டாங்க.
எப்படி? என்ன?என்ற துக்கம் விசாரித்து விட்டு,இரு எங்க அக்கா உன்கிட்ட பேசனுனு சொல்றாங்க தரே என இவள் பதிலை எதிர் பார்க்காமல் கொடுத்து விட்டான்.
அவர் துக்கம் எதுவும் விசாரிக்க வில்லை. “கங்கா, உங்க அப்பா உங்க ரெண்டு பேரு கல்யாணத்துக்கும் ஒத்துக்குவாரா?”
யார் ரெண்டு பேர் கல்யாணம்? அக்கா என்றாள் கங்கா.
உனக்கும் அருளுக்கும் தான்
இல்ல ஒத்துக்க மாட்டாருக்கா.இந்த விஷயம் எல்லா அவரு காதுக்கு போனா கண்டந்துண்டமா வெட்டி எரிஞ்சுருவாரு.
அப்பானா அப்புடிதான் இருப்பாங்க. நீதான் ஸ்ட்ராங்க இருக்கனும். அவரு ஒத்துக்கலனா நீ வீட்டை விட்டு ஓடி வந்துரு. நாங்க இருக்கோம்.உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வெக்கறோம் என்றார்.
கங்காவிற்கு இந்த பேச்செல்லாம் சுத்தமாக பிடிக்க வில்லை.அப்போது கூட எதிர்ப்பை காட்டாமல் போனை கட்செய்து விட்டாள்.
–தலைவன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!