Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 44.2

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 44.2

சிவராமன் காலம் சென்ற செய்தி உறவுகளுக்கு முறையாக சொல்லப்பட்டது.
லட்சுமியும்,கெளசியும் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுதனர்.

சிவராமன் இருந்தால் என்ன செய்வார்?அதையே கங்கா செய்ய ஆரம்பித்தாள். மீள முடியாத இழப்புதான்.நாமும் இவர்களை போல அழுதால்…யார் சிவராமனை வழியனுப்புவது?அவரை உரிய மரியாதையுடன் வழி அனுப்ப முடிவெடுத்தாள்.

பாப்பம்மாள் மறைவின் போது, சிவராமன் எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்க முடிவெடுத்துக் கொண்டாள்.ஒரு நல்ல சட்டையை எடுத்து போட்டு விட்டாள்.ப்ரிசர் பாக்ஸ் வாங்கி அதனுள் அவரை படுக்க வைத்தாள்.



Advertisement

நள்ளிரவு ஒருமணி கலா,வெண்ணிலா, ஈஸ்வரி மூவருமே முதலில் வந்தனர்.

கலா,”மாமன் நம்மள விட்டு போய்ருச்சு” என லட்சுமி கதற…அவரை விலகி சிவராமனை பார்த்து கதறி அழுதார் கலா.

சிவராமன் கண்ணாடி பெட்டியுனுள் இருக்க… மற்ற ஆறு பெண்களும் கீழே அமர்ந்தனர்.

Advertisement

அம்மா!பெரியப்பா எனக்கு சின்ன வயசுல வெள்ளை ப்ராக் எடுத்து கொடுதுச்சு. உனக்கு எதாச்சு பண்ணிருக்கா?என கலாவை பார்த்து கேட்டாள் வெண்ணிலா.

Advertisement

“எனக்கு உடம்பு முடியாம இருந்தப்போ, லட்சுமியும்,மாமாவும் பார்க்க வந்தாங்க.. எனக்கு வாந்தி வருதுன்னு சொன்னதும் ரெண்டு கையும் நீட்டி இதுல எடு கலானு சொன்னாங்க.
என்ற பொறந்தவனுங்க கூட ஓரமா நிக்கையிலே. எங்க மாமா முன்னாடி வந்தாரு”என்றார் அழுத படியே..

சித்தி!கைலே சுத்தமா காசு இல்ல.எங்க அப்பா பாக்கெட்ல அஞ்சாயிரம் இருந்துச்சு.ஒரு ஐநூறு ரூபாய் பாக்கெட்ல வெச்சிட்டு மிச்சத்தை எடுத்து வெச்சிருக்கே. அது போக பணம் இல்ல சித்தி.உன்கிட்ட இருந்தா கொடு.

என் கைலேயும் பணம் இல்ல கங்கா. விடியட்டும் வெண்ணிலா ஜெயின் அடமானம் வெச்சு பணம் வாங்கிக்கலாம்.

Advertisement

கங்கா,அப்பா உன் கல்யாணத்துக்கு எடுத்த அஞ்சு பவுன் மட்டும் திருப்பி வெச்சிருக்கு.அதே அடமானம் வெச்சுக்கலாம் என்றார் லட்சுமி.

சரிம்மா.

கங்கா, அது உனக்காக அப்பா ஆசையா எடுத்துச்சு..கடைசியா அப்பா முன்னாடி கொஞ்ச நேரம் கழுத்துல போட்டுக்க என லட்சுமி போட்டு விட்டார்.அந்த ஜெயின் மாப்பிள்ளை வீட்டாருக்கு பதில் சிவராமனே எடுத்து வைத்தது.

அதிகாலை இரண்டரை மணிக்கு வந்த பழனிச்சாமி குடும்பம் மகள் கருவுற்றிருப்பதால், எந்த சடங்கும் செய்ய முடியாது என ஒதுங்கிக் கொண்டனர்.

அதன்பின் வந்த சிவராமனின் தங்கை சிவகாமி,’என்ற பொறந்தவனே கொன்னுடீங்களா’ என லட்சுமியை நோக்கி கேட்ட வாறே வந்தார்.

கங்காவிற்கு கோபம் ‘சுர்’ என தலைக்கு ஏறியது.’வேண்டாம்’ என கலா தலையை ஆட்ட அமைதியானாள் கங்கா.

காலை விடிந்தது. எப்போதும் சுறுசுறுப்பாக எழுந்து கடைக்கு செல்லும் சிவராமன் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.
திரும்ப எழ முடியாத உறக்கம்.இவ்வளவு சொந்தங்கள் வீட்டில் இருக்க…இப்படி உறங்கும் ஆள் இல்லயே..

அவிநாசியப்பனும்,
பழனியம்மாளும் தலையில் அடித்துக் கொண்டே வந்தனர். நாங்க உயிரோட இருக்கையிலே…ஏன் என்ற மருமகனை கூட்டிட்டு போகனும்? என கதறல். சிவராமன் இதை பார்த்தால் என்ன செய்திருப்பாரோ?என்ற யோசனை கங்காவிற்கு…

வீட்டினுள் நிற்க இடமில்லாத அளவிற்கு சொந்தங்கள் சூழ்ந்து விட்டது. கங்காவிற்கு வலிதான்..இருந்தும் வெளி காட்டவில்லை. சிவராமன் முகத்தை லட்சுமி கையில் ஏந்திய போது பார்த்ததோடு சரி..அதன் பிறகு பார்க்கும் தைரியம் வரவில்லை. அந்த நிலையில் இருந்து தன்னை வெளி கொண்டு வர வீட்டிற்கும்,வாசலிற்கும் நடந்தாள்.

கிராமங்களில் ஒருவர் இறந்துவிட்டால், உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னால் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்ப்பார்கள்.

“எந்த நட்சத்திரம்?” “எந்த திதி?” என்று ஆராய்வார்கள்.அந்த ஆய்வுக்குப் பின்னால் ஒரு பழமையான நம்பிக்கை இருந்தது.

சில குறிப்பிட்ட நட்சத்திரங்களிலும் நாட்களிலும் உயிர் பிரிந்தால், அதற்கு “அடைப்பு” ஏற்படும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

அடைப்பு என்றால், அந்த உயிரின் கர்மப் பயணம் முழுமையடைவதற்கு முன்பே மரணம் நிகழ்ந்து விட்டதாக நம்பப்பட்டது.

அப்படிப்பட்ட ஆத்மாக்களால் உடனடியாக மேலுலகப் பயணத்தை தொடரவும் முடியாது. மீண்டும் பூமியில் தங்கவும் முடியாது.

இரண்டு உலகங்களுக்கும் நடுவே,கண்ணுக்குப் புலப்படாத ஒரு நிலையிலே அவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று கிராமத்து மூதாதையர்கள் சொல்வார்கள்.

அந்த காலகட்டத்தில் அந்த ஆத்மாக்கள் “தனிஷ்டா பஞ்சமி” என்னும் தேவதையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் நம்பப்பட்டது.

அதனால்தான், அடைப்பு ஏற்பட்டதாக கருதப்படும் வீடுகளில் ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்படும்.

தினமும் மாலை ஆறு மணியாகும் போது, உயிர் பிரிந்த இடத்திலேயே ஒரு சிறிய சூடம் பற்ற வைப்பார்கள்.

இருளின் நடுவே எரியும் அந்த சிறிய ஜோதி, பிரிந்த ஆத்மாவிற்கு வழிகாட்டும் வெளிச்சமாக கருதப்பட்டது.

“பாதை தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிற உயிருக்கு, இந்த வெளிச்சம் துணையாக இருக்கட்டும்…” என்ற மனநிலையோடு அந்த விளக்கை ஏற்றுவார்கள்.

நாட்கள் கடந்து, அடைப்புக் காலம் முடிந்ததும், அந்த ஆத்மா தனது அடுத்த உலகப் பயணத்தை தொடங்கி விடும் என்று நம்பப்பட்டது.
அதன்பிறகு அந்த வீட்டில் ஏற்றப்பட்டு வந்த சூடமும் நிறுத்தப்படும்.

ஏனெனில், வழி தேடிய உயிர் தனது பாதையை கண்டடைந்து விட்டதாக அவர்கள் கருதுவார்கள்.

கிராமத்து மாலைகளில் அமைதியாக எரியும் அந்த சிறிய தீப்பொறி, ஒரு விளக்கு மட்டுமல்ல…

பிரிந்த உயிருக்கும், பின்னால் நிற்கும் உறவுகளுக்கும் இடையிலான கடைசி அன்பின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது.

‘ஒரு அறையில் மரணம், மறு அறையில் வாரிசுச் சண்டை’ என்பது இங்கே நிரூபணம் ஆனது.யார் கொள்ளி போடுவது?என்ற அலசல்.

அப்பா புதைக்க சொல்லிருக்கு அத்தே என்றாள் சிவகாமியிடம்…இல்ல அப்பாக்கு ஆறுமாதம் அடைப்பு இருக்கு… அடைப்பு இருந்தா புதைக்க கூடாது.. எரிக்கனும்..

கங்கா உறுதியாக மறுத்துவிட்டாள். சிவகாமியின் பேரன் அங்கிருந்த சேர்களை இழுத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அவனை சுட்டிக் காட்டி, அங்க பாரு… குழந்தை குட்டி எல்லாம் இருக்கு…அதுக எல்லாம் நல்லா வாழனுமா?இல்லையா?

அடைப்பு நட்சத்திரத்துல இறந்தவங்கள புதைச்சா…நாளைக்கு அவங்களுக்குதான் எதாச்சு பாதிப்பு வரும் என்றார்..ஈரம் இல்லாமல்…

அப்போ எங்க அப்பா உங்கள எல்லாம் வாழ விடாதா? ஆட்டோ நிறைய சீர் கொண்டு வந்து உனக்கு கொடுத்தப்போ வாழ வெச்ச எங்க அப்பா, இப்போ உன்னையும் உன் பேரனையும் வாழ விடாதா?யார் எங்க அப்பாவே கொன்னா?
நீ பேசாம கொன்னே… உங்க அண்ணே தண்ணீ கொடுக்காம கொன்னான்.

நீங்க ரெண்டு பேரும் கொன்னுட்டு… எங்க அம்மாவே பாத்து கொன்னுட்டீங்களானு கேட்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு…எங்க அப்பா கூட பொறந்துட்டையேனு உன்ன விடறே என வெடிக்க ஆரம்பித்தாள் கங்கா.

‘அதற்குள் சத்தம் வேண்டாம்’ என இருவரையும் உறவுகள் பிரித்து விட்டனர்.

“கங்கா,இந்த ஒரு முறை அவங்க சொல்றதே கேளு. நம்மள விட அவங்களுக்குதான் உரிமை அதிகம். அடைப்பு நட்சத்திரத்துல இறந்தா புதைக்க மாட்டாங்க..நம்ம புதைச்சு அப்பறோம் எதாச்சு ஆனா உங்க அப்பாவைதான் குறை சொல்லுவாங்க…
நாம்ம எரிச்சுக்கலாம்” என்றார் கலா..

உண்மையில் கலாவிற்கு இருக்கும் வருத்தத்தில் பாதி கூட சிவகாமிக்கு இல்லை. பேசாமல் கலாவே சிவராமனக்கு தங்கையாக பிறந்து இருக்கலாம் என தோன்றியது கங்காவிற்கு.

அவிநாசியில் பிறந்தவர்களுக்கு இன்னொரு ஆழமான நம்பிக்கையும் இருந்தது.

வாழ்நாள் முழுவதும் எங்கு வாழ்ந்திருந்தாலும், இறுதியில் தங்கள் உடல் அவிநாசி மண்ணில் கலக்க வேண்டும் என்பதே பலரின் ஆசை.

அதற்குக் காரணம் வெறும் பூர்வீக பாசம் மட்டுமல்ல.அந்த ஊரின் பிரதான தெய்வமாக விளங்கும் பெருங்கருணை நாயகி அம்மனின் அருள்தான்.

ஊரின் மூத்தவர்கள் சொல்லுவார்கள்…
“பெருங்கருணை நாயகி அம்மன் ஊரை மட்டும் இல்லை. இந்த ஊரின் மயானத்தையும் தன் கருணைப் பார்வையால் காத்துக் கொண்டிருக்கிறாள்…” என்று.

அது வெறும் வார்த்தை அல்ல.தலைமுறை தலைமுறையாக கடந்து வந்த நம்பிக்கை.

அம்மனின் அருள் பார்வை பட்ட ஆத்மாக்களுக்கு, பிறவி சுமைகள் விரைவில் குறைந்து விடும் என்றும், அவர்களுடைய ஆன்மா சீக்கிரமாக முக்தி அடையும் என்றும் நம்பினர்.

அதனால்தான், வெளியூரில் வசித்த பல குடும்பங்கள் கூட இறுதி நேரத்தில் சொந்த ஊருக்கே உடலை கொண்டு வருவார்கள்.

“எங்க இருந்தாலும் பரவாயில்லை…
கடைசில இந்த மண்ணுல தான் படுக்கணும்…”என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அந்த நம்பிக்கையின் பின்னால் ,ஒரு தாய் மடியை நாடும் குழந்தையின் ஏக்கம் இருக்கும்.

தன் உயிர் பிரிந்த பின் கூட, தன்னை அரவணைக்கும் கருணை நிறைந்த ஒரு சக்தியின் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் எல்லோரைப் போலவும் சிவராமனிடமும் இருந்தது.

உயிர் எங்கு பிரிந்தாலும் பரவாயில்லை…
உடல் மட்டும் பெருங்கருணை நாயகியின் கருணை விழும் அந்த மண்ணில் கலந்துவிட வேண்டும் என அவர் எண்ணினார்.

அங்கே இருந்து முக்திப் பயணம் தொடங்கினால், அது இன்னும் எளிதாகும் என்று அவர் மனமார நம்பினார்.ஆனால் இன்று அந்த பெருங் கருணை நாயகியும் சிவராமனுக்கு கருணை காட்ட மறுத்து கைவிட்டு விட்டாள்.

—தலைவன் மறைந்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!