Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 44.3

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 44.3

அடைப்பு நட்சத்திரத்தில் சிவராமன் இறந்ததால், அவரை எரியூட்டவே முடிவு செய்யப்பட்டது. அவரது ஊரை அடுத்த ஊரில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கொளஞ்சிநாதனுக்கு விஷயம் சொல்லப்பட காலை ஆறு மணிக்கே வந்து விட்டார்.

வீட்டில் எல்லா சடங்குகளும் முடிய அவரை இறுதியாக வாழ்ந்த வீட்டை விட்டு வெளியே எடுக்க, லட்சுமி அவரை எடுக்க விடவில்லை.



Advertisement

“ஏய் என்னையே இப்படி ஏமாத்திட்டு போறையே.என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு?இனி நீ இல்லாம நான் எப்படி இருப்பே? ஒரு வாட்டி என்னை கண்ணை திறந்து பாரு. எந்திருச்சு வா”என கதறினார்.

பலன்தான் இல்லை.. திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்று விட்டார் சிவராமன். அவரை வண்டியில் ஏற்றியபின் உறவுகள் ஒரு வண்டியில் ஏறினர்.

கங்காவிற்கு லட்சுமியை தனியே விட மனமில்லை. ஒருமுறை அவரை உள்ளே சென்று பார்க்க…ஒரே கதறல்… பழனியம்மாள் அழுது கொண்டே அவரை தேற்றிக் கொண்டிருந்தார்.

Advertisement

பட்டாசு சத்தம் காதை பிளந்தது.அவரது இறுதி பயணம் தொடங்கியது. எப்போதும் வீட்டை விட்டு கிளம்பும் போது…”போய்ட்டு வரேன்” என சொல்லி கிளம்பும் அவர்.இன்று ஏனோ எதும் சொல்லாமலே கிளம்பி விட்டார்.

Advertisement

‘கங்கா வா நேரமாச்சு’ என கலா இவளை அழைத்துக் கொண்டு சென்றார்.

ராதா வீட்டில் ஒரு இறப்பு.அங்கு அவர் சீர் செய்திருப்பதால்..
இங்கே வர முடியாத நிலை.இருந்தும் மனம் கேட்காமல்..சிவராமன் வீட்டு மாரியம்மன் கோவிலின் அருகே நால்வரும் நின்று அவருக்கு தங்களின் கடைசி அஞ்சலியை செலுத்தினர்.

மயானத்தில் வாய்க்கரிசி போடப்பட, கொளஞ்சி நாதனை அழைத்து போடச் சொன்னாள் கங்கா.

Advertisement

யார் கொள்ளி வைப்பது?என்ற அலசல்.’நானே வெக்கறே’ என கங்கா சொல்ல.. ஒரு பெரிசு கொள்ளி வெச்சா மொட்டை அடிக்கனும் என்றது.

சரி என்றாள்.

வலது தோளிலில் பானையை வைத்து மூன்று முறை சுற்றி வந்து சிவராமன் தலைமாட்டில் உடைக்க..தகன மேடையில் அவரது உடல் வைக்கப்பட்டது.

ரமேஷ் கொள்ளி எடுத்து தர மனதை இரும்பாக்கிக் கொண்டு,எந்த மார்பிலும் தோளிலும் தன்னை சீராட்டி வளர்த்தாரோ,அதே மார்பில் கொள்ளியை வைத்தாள் கங்கா.

அந்த பாசம் நிறைந்த முகம்..கணீர் குரல்.. இரும்பு கரம்.. இதெல்லாம் இனி எங்கு தேடினாலும் கங்காவிற்கு கிடைக்கப் போவது இல்லை.

“பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
தேசம் அளாவிய
கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக
எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க”

வீட்டிற்கு வந்து லட்சுமியை காண… தன் இதயத்தை யாரே வெளியே பிடிங்கி எறிந்ததை போன்ற வலியுடன் அழுது அழுது தொண்டை தண்ணீர் வற்றி போய் சோர்ந்து சுவற்றில் சாய்ந்த படி அமர்ந்திருந்தார்.

அடுத்து சொந்தங்களுக்கு உணவு,டீ காபி எதாவது கொடுக்க வேண்டும். மற்ற சடங்குகளுக்கும் பணம் வேண்டும். கழுத்தில் இருந்த ஜெயினை கழற்றி ஹேண்ட் பேக்கில் போட்டு,வெளியே வந்தவளை தடுத்து விட்டார்கள்.

காரியம் செய்திட்டு எங்கே போறே?பதினாறு நாள் இனி வெளியே போக வேண்டாம் என தடை போட்டனர்.

கலா,’ நான் போறேன்’ என பொறுப்பு எடுத்துக் கொண்டார். கங்கா வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.மாலை ஒவ்வொருவராக கிளம்ப வீடு தனிமை அடைந்தது.

கொளஞ்சிநாதன்,
“மூனு பேரும் என் கூட வாங்க நானே உங்கள பார்த்துக்கறே” என்றார்.

‘இல்ல வேண்டா நாங்க வரலே’ என மறுத்து விட்டார்கள் மூவரும். பின் அவர் தைரியம் சொல்லி கிளம்பினார்.

நித்யாவை எல்லா வகையிலும் தவிர்த்து இருந்தால் கங்கா. இருந்தும்சிவராமனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து, வீட்டிற்கு வந்து சென்றாள்.

சுமதியும் வந்து,” கங்கா இனி நீதான் அம்மாவையும்,
கெளசியையும் பாத்துக்கனும்” என தைரியம் சொல்லி கிளம்பினாள்.

லட்சுமி, ‘சாப்பிட மாட்டேன்’ என ஒரே அடம்.’நானும் அப்பாகூடவே போறேன்’ என…கலாவும் அருணாச்சலமும் அவரை தேற்ற முடியவில்லை.

சரி நீயும் மாமன் கூடவே போய்ருவையாமா.
கெளசியே கல்யாணம் பண்ணி கொடுத்தறலாம். கங்காவே நான் என்கூட கூட்டிட்டு போறேன் என கலா சொல்ல..

இல்ல.இல்ல.. நான் கங்காவே விட மாட்டேன்.எனக்கு கங்கா வேணும் என்றார்.

இங்க பாரு கெளசிக்கு,கொளஞ்சி இருக்கு,கங்காக்கு ஒரு வாழ்க்கை துணை அமையறே வரை நீதான் துணை. அழாதே கண்ணை துடைச்சிட்டு சாப்பிடு என அவரை சமாதானப்படுத்தினர்.

அவரும் நிலையை புரிந்து கொண்டு இயல்பாகினார்.
இல்லையில்லை இயல்பாக காட்டிக் கொண்டார்.அடுத்த ஓட்டம் உள்ளதே என்று..

“கங்கா தெளிவா இருக்கா.இனிமே அப்பா திரும்ப வராது.நாம்ம தான் எல்லா பாத்துக்கணும்னு. இந்த கெளசியும், லட்சுமியும்தான் அழுதுட்டே இருக்காங்க”என கலா சொல்ல..

“ஆமா அத்தே..கங்கா அக்கா தெளிவா இருக்கு..

அக்கா, மாமா எங்கையும் போகுலே. நீதான் மாமா.எனக்கு இன்னைக்கு உன்னை பார்க்கும் போது மாமாவாதா தெரிஞ்சே” என கங்காவை பார்த்து கூறினாள் திவ்யா.

யார் தெளிவாக இருப்பது?எத்தனையோ உடைந்த துண்டுகளை ஒன்றாக இழுத்து பிடித்து உள்ளே வைத்துக் கொண்டுள்ளாள்…
அவள் தெளிவாகவெல்லாம் இல்லை. தெளிவாக காட்டிக் கொண்டாள். போர் வண்டி பின்னால் சென்றால்,அப்பாவை பார்த்துக் கொள்ளலாம் என மூச்சு வாங்க ஓடினாலே இன்னமும் அதே சிறுமிதான் கங்கா.

லட்சுமியை நடுவில் படுக்க வைத்துவிட்டு கங்காவும் கெளசியும் அவரது இருபுறமும் படுத்துக் கொண்டனர். சிவராமன் இல்லாத முதல் நாள் இரவு. தூக்கமே வரவில்லை கங்காவிற்கு.. அதுவரை சொந்தங்கள் இருக்க, அவர்களை பார்ப்பது.. மற்ற விசயங்களை விவாதிப்பது என மற்ற வேலைகளைளில் கவனம் சென்றதால் துக்கம் பாதிக்காமல் பார்த்துக் கொண்டாள்.

இப்போது துக்கம் தொண்டையை அடைத்தது.அவர் இல்லாத தனிமை கண்களில் நீராக பெருக்கெடுக்க… “வேண்டாம் கங்கா. நீ அழுதேனுவையே துக்கம் போய்ரும். உனக்கு இந்த தண்டனை வேணும் கங்கா.அவரது இறப்பிற்கு நீயும் ஒரு காரணம்”என அழுகாது துக்கத்தை தன்னுள் மறைத்து அடக்கிக் கொண்டாள்.

நாட்கள் நகர்ந்தன. மாலை ஆறு மணிக்கு சிவராமனுக்காக சூடம் ஏற்றப்பட்டது.இது நாள் வரை உடலாக உணர்வாக வாழ்ந்தவர் இப்போது ஒளியாக வழிகாட்ட ஆரம்பித்தார்.

லட்சுமி சிவராமன் இருவரும் ஒன்றாகவே கடைக்கு சென்று திரும்ப, இன்று அவர் இல்லாத நிலையில் தனியாக பஸ்ஸில் கடைக்கு சென்றார் லட்சுமி.

பஸ்ஸை விட்டு இறங்கிய அவரை சிவராமனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வரவேற்றது.துக்கம் தாங்காது அதை அணைத்தவாறே கதறி விட்டார்.

மாலை மூவரும் ஆறு மணிக்கு சூடம் பற்ற வைக்க ஆஜராகி விடுவர்.இன்று கெளசியை காணவில்லை.
ஏழரை மணிக்கே வீடு திரும்பினாள்.

கங்கா,”ஏன் லேட்?” என சாதாரணமாகத்தான் கேட்டாள்.

“ஸ்கூல்ல மீட்டிங். எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டுதான் போகனுமா?எங்க அப்பா இருந்தப்போ இருந்த ஃபிரிடம் இப்போ இல்ல” என கங்காவை பார்த்து கத்த ஆரம்பித்தாள்.

இனி எப்படி இருந்தாலும் சிவராமன் நிலையில் இருந்து அனைத்தையுமே தான்தானே பார்த்தாக வேண்டும். அதுவும் தற்போது நாட்டுநடப்புகளை பார்க்கையில்,ஆறு மணிக்கு மேல் கெளசி வீடு திரும்ப வில்லை எனில் பதற்றம் தொற்றிக் கொள்கிறது அவளுக்கு…
இதைப்பற்றி கெளசியிடம் சொல்ல.. கங்கா மேல் கோபம் கொள்கிறாள்.

பள்ளி சென்ற கங்காவிற்கு சிவராமன் சாயலில் உள்ளவர்கள் கண்ணில் பட அவரை பார்க்க வேண்டும் போல இருந்தது.

உறங்கும் முன் சிவராமனிடம்,” அப்பா நீ எங்கே இருக்கே?எப்படி இருக்கே?ஒரு வாட்டி என் கனவுல வாப்பா” என ஏக்கமாக அவரிடம் பேசிக் கொண்டு படுத்தாள். அன்றிரவு அவள் கனவில் வந்தார் சிவராமன்.

அது ஊட்டி மலை போல தெரிந்தது. விடிந்தும் விடியாத அழகான காலைப் பொழுது..சூரியன் மெல்ல தன் கதிர்களை இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியே கொண்டு வந்து கொண்டிருக்க..
லேசான மழைத் தூரல் வேறு…அங்கே ஒரு மரத்தடியில் சிவராமன் அமர்ந்திருந்தார்.

கங்கா அவரை பார்த்தவுடன்,அப்பா நீ இங்கே இருக்கையா நான் எங்கே எல்லாவோ உன்ன தேடுனே..என அவர் அருகில் நெருங்க நெருங்க ஜாதி மல்லி மணம்..

எங்கே கங்கா கிளம்பிட்டே?

கோவிலுக்குப்பா..

“வா நானே உன்னே கூப்பிட்டுட்டு போறே” என சிவராமன் வண்டி ஓட்ட கங்கா பின்னே உட்கார்ந்து கொண்டாள்.

இங்க பாரு கங்கா, இனிமே வண்டி ஓட்டும் போது, இந்த வெள்ளை கோட்டுக்கு உள்ளேதான் ஓட்டனும். ரெண்டு பக்கமும் பாத்து வண்டியே திருப்பனும்..

சரிப்பா..

கங்கா நமக்கு இந்த வீடு வேண்டா. அதை வித்துடுங்க.

உனக்கு அந்த வீடு ரொம்ப இஷ்டமேப்பா

வேண்டா கங்கா. இவ்வளவு விஷயம் நடந்ததுக்கு அப்பறோம் அந்த வீடு நமக்கு வேண்டா. அப்பா இப்போ வந்தேன் எல்லாத்தையும் எடுத்துட்டா வந்தே இல்லை இல்ல.நீ இந்த வீட்டை கட்டிட்டு அழுதுட்டு உன் வாழ்கையே விட்றாதே. உனக்கு பிடிச்ச வாழ்க்கையே அமைச்சுக்க.நீ என்ன முடிவெடுத்தாலும் அப்பாக்கு சம்மதம்தான்.

சரிப்பா..

அம்மாதான் நான் இல்லாம எப்படி இருப்பானு தெரிலே. ஆனா அம்மாவ மட்டும் நீ விட்றாதே கங்கா

சரிப்பா.அம்மாவே நான் நல்லா பாத்துப்பே…

என்மேல உனக்கு கோபம் இல்லையேப்பா.

உன்மேல எனக்கு என்ன கோபம் கங்கா. அதெல்லா ஒன்னும் இல்ல.

சரிப்பா என்றாள் மகிழ்ச்சியாக…

சரி கங்கா கோவில் வந்துருச்சு.நீ உள்ளே போ.ஆனா நீ திரும்பி வரும்போது அப்பா இருக்க மாட்டேன்.

கண்களில் நீரோடு சிவராமன் கையை பிடித்துக் கொண்டே.. நடந்த எதையுமே மாத்த முடியாதாப்பா? என கங்கா கேட்க..

‘ஹா ஹா ஹா’ என கம்பீரமாக சிரித்துக் கொண்டே…காற்றோடு காற்றாக…மழை நீரோடு நீராக கலந்து விட்டார் சிவராமன்.

“அப்பா, என்னை விட்டுப் போகாதேப்பா” என தரையில் விழுந்து அழுதாள் கங்கா.

—தலைவன் வருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!