Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 4

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 4

திருமணம் முடிந்த உடன் தன் அக்கா மகள் உடனான காதலை லட்சுமியிடம் கூறிவிட்டார் சிவராமன்.

“லட்சுமி…
என் அக்கா மகள் என்னை வேண்டானு சொன்ன உடனே உன்னை திருமணம் செஞ்சிகிட்டேனு நினைக்காதே.

ஒருத்தி மறுத்ததால் இன்னொருத்தியைத் தேர்ந்தெடுப்பவன் நான் இல்லை.



Advertisement

என் வாழ்க்கை எங்கே உடைஞ்சது தெரியுமா? எங்க அப்பா போன அப்போ கூட சமாளிச்சிட்டோம் …

ஆனா எங்க சங்கரா அம்மா இறந்ததுக்கு அப்பறோம் இந்த வீட்டில் பெரியவங்க குரல் நின்னு போச்சு.

நல்லதுக்கு ஆசீர்வாதம் சொல்லவும், கெட்டதுக்கு தடை போடவும் யாரும் இல்லை.

Advertisement

என் தங்கச்சி கல்யாணத்துல நான் அனுபவிச்ச கஷ்டம்… பணம் இல்லாம வீட்டை வித்த வலி.

Advertisement

‘பார்த்துக்க பெரியவங்க இல்லை’ன்னு நிக்கற அந்த வெறுமை.
அதெல்லா சொன்னா புரியாது என்ன மாறி கஷ்டப்பட்டு தனிமரமா நின்னு குடும்பத்தை கரை சேர்த்தரே ஒவ்வொரு ஆணுக்கு என் வலி புரியும்.

ஆலோசனை சொல்ல யாரும் இல்லை.
தவறா போறோமா? சரியா போறோமா? என்று கையை பிடிக்க யாரும் இல்லை.

அந்த நாளிலிருந்து நான் முடிவு பண்ணுனே.என் வீட்டில் இனிமேல் வெறுமை இருக்கக் கூடாது.

Advertisement

இந்த வீட்டுக்கு நல்லதை நினைக்கற ஒரு மனசு வேணும்னு. அந்த மனசு நீயா இருப்பைனு நான் நினைக்கிறேன், என்றார்.

அத்தோடு அக்கா மகள் தனக்கு அனுப்பிய கடிதங்கள்,பரிசு பொருட்கள் அனைத்தையும் லட்சுமி முன்பு தீயில் இட்டு கொளுத்திவிட்டார்.

எதிர் பதில் எதுவும் பேசாமல் பொறுமையாக அனைத்தையும் கேட்டுக் கொண்டார் லட்சுமி.

மனதிற்கு பிடித்தவனுடன் திருமணம் நடந்து விட்டது.அதுமட்டும் ஒரு பெண்ணிற்கு போதுமா? அவனது கடந்த காலம் நிகழ்காலம் இரண்டிலும் எந்த ஒளிவும் மறைவும் இல்லாது தன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் கணவனை அல்லவா ஒரு பெண் எதிர்பார்ப்பாள். அந்த வகையில் லட்சுமி தன்னை பெரும் பாக்கியசாலியாக கருதிக் கொண்டார்.

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”

இப்பாடல் வரிகள் அவர்கள் திருமண பந்தத்தில் உண்டான அன்பிற்கு உவமையாகி போனது .

எங்கள் அன்பு நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது, கடலை விட ஆழமானது. கரிய கிளையையுடைய குறிஞ்சிப் பூவிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிப்பது போல, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தேடிச் சேகரித்துக் கொண்ட அன்பு இது! என பூரித்து வாழ்ந்தனர்.அவர்கள் அன்பிற்கு ஆதாரமாக கங்கா உருவானாள்.

ஆரம்பத்தில் சிவராமன் கொள்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் லட்சுமி திணறினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

வீட்டின் பின்பகுதி விற்கப்பட்டு விட்டது அல்லவா… இதுவரை ஒன்றாக இருந்த கழிவு நீர் கால்வாயை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.

இது வீடு விற்றதில் இருந்து நடந்து கொண்டுதான் உள்ளது.ஆனால் சிவராமன் தேவர்சோலையில் இருந்ததால்,இந்த பிரச்சனை அவர் காதுகளுக்கு செல்லவில்லை.

இப்போது அது பூதாகரமாக வெடித்து விட்டது.முதலில் சிவராமனும் இறங்கி போயே பேசினார். காரணம் லட்சுமியும், வயிற்றிலுள்ள கருவும் வீண் சண்டை வேண்டாம் என நினைத்தார்.

அவர் வேலைக்கு சென்றவுடன் சண்டை ஆரம்பித்து விட்டது. “வீடு வாங்கிய பெண்மணி என்னது உங்க கூட எங்க வீட்டு கழிவு தண்ணீ சேருவதா?என்றாரே பார்க்கலாம்.

அவர் கேட்ட தொனி நீங்க எல்லாம் எனக்கு சரிசமமா? அதாவது அவங்க கழிவு தண்ணீ கூட இவங்க வீட்டு கழிவு தண்ணீ கூட சேர தகுதி இல்லாதது மாறி பேசிவிட்டார்.

பானுமதி இதை எப்படியோ சமாளித்து சண்டை இல்லாமல் முடித்து விட்டார்.

இரவு எட்டு மணிக்கு சிவராமன் வீட்டிற்கு வர லட்சுமி காலையில் நடந்ததை கூறி விட்டார்.அவர் அவ்வாறு கூறியதை மற்ற மூவர் வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் சிவராமன்?

அதுவரை பொறுமையாக இருந்தவருக்கு கோபம் வர இரு வீட்டிலும் சண்டை ஒருவர் மீது ஒருவர் கைவைத்துக் கொண்டனர்.

இந்த பக்கம் சிவராமனும்,பழனிச்சாமியும் மட்டுமே.அந்த பக்கம் அந்த பெண்ணின் கணவர், அவர்களின் மூன்று மகன்கள். வீதியே கூடிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

நிலைமை கைமீறி போவதை உணர்ந்த பானுமதியும்,லட்சுமியும் சிவராமனை உள்ளே இழுத்து வந்து விட்டனர்.பழனிச்சாமி கூட பொறுமையாக போய்விடுவார் என எண்ணினர் இரு பேதைகளும்.

சிவராமன் உள்ளே வந்ததும் சண்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.லட்சுமி அவரை வெளியே விடவில்லை,அவர்கள் மீதிருந்த கோபம் இவர் மீது திரும்ப ஓங்கி கண்ணத்தில் அடித்து விட்டார்.

ஏற்கனவே சண்டையில் அதிர்ந்து போயிருந்த லட்சுமி இவரின் எதிர்பாராத அடியில்,”இனிமே உன்கூட என்னால வாழ முடியாது என தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

இரவு ஒன்பது மணி மகள் அழுத கோலத்தில் வந்து நிற்க ஒரே பதட்டம் தொற்றிக் கொண்டது அனைவருக்கும்…

லட்சுமியும் அழுது கொண்டே நடந்த விஷயங்களை கூற,அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர் அவளின் தங்கைகள் ராதாவும்,கலாவும்….

இங்கிருந்து ஒரு படையே கிளம்பி விட்டது சிவராமன் வீட்டிற்கு சமாதானம் பேச…

பழனியம்மாளும் தங்கை ராதாவும் வயித்துல புள்ளையோட இருக்கா அது எப்படி அடிக்கலாம்?என வியாக்கியானம் பேசினர்.

கலா மட்டும் நீ என்ன பண்ணின? நீ எதாச்சும் மாமாவுக்கு கோபம் வர மாறி செஞ்சிருப்பே அதான் மாமா உன்னை அடிச்சு இருக்கும் என்றாள்.

“நீ என்னடி அக்காவை கொற சொல்றே, அப்படியே கோபம் இருந்தாலும் கைநீட்டி எதுக்கு அடிக்கனும்” என பழனியம்மாளின் ஜெராக்ஸாக சண்டைக்கு தயாரானாள் ராதா.

லட்சுமிக்கு சிவராமனை பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஏன்டா இங்கு வந்தோம் என்றாகி விட்டது.

சமாதானம் பேச போனவர்கள் சிறிது நேரத்தில் வந்து விட்டனர். அதெல்லாம் ஒன்னு இல்லை லட்சுமி,” நாங்க பின்னாடி வீட்டுக் காரங்க கிட்டையும் பஞ்சாயத்து பேசிட்டோம். அவங்களுக்கு தனி கழிவு நீர் கால்வாய் நாமே கட்டி கொடுத்தரலாம்.

இனி சண்டை எதுவும் வராது அவங்களும் சமாதானமா போறதா சொல்லிட்டாங்க.நீ கவலைப்படாதே. இந்த ராத்திரி அங்கே போக வேண்டா நாளைக்கு காலைலே நாங்களே உன்னை அங்கே கொண்டு போய் விடுறோம் என்றனர் அந்த வீட்டு பெரியவர்கள்.

அண்டைவீட்டுகாரர்களுடன் நல்ல உறவை பேண வேண்டும் என்பார்கள்.ஏனென்றால் உறவினர்கள் ஏதாவது விசேஷ தினங்களில் மட்டுமே வந்து போவர்.எதாவது அவரச தேவைகளுக்கு உடன் வருபவர்கள் அண்டை வீட்டார்கள்தான்.

ஆனால் அவர்களுடன்தான் ஒருபிடி செங்கல் அவர்களது எல்லைக்குள் எச்சுகமியாக சென்றால் கூட சண்டை வந்துவிடும்.இங்கு சிவராமன் கதையில் வினோதம் என்னவென்றால் அந்த அண்டை வீட்டுக்காரர் வேறு யாரும் இல்லை அவரின் மூன்றாம் பங்காளிதான்.

இருவருக்கும் அந்த இரவு பல யுகங்களாக தோன்றியது.எப்போது விடியும் என ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

காலை விடிந்ததும் லட்சுமியை அழைத்து வர, சிவராமன் சைக்கிளை எடுத்து கிளம்ப தயாரானார். அதற்குள் லட்சுமி , அவிநாசியப்பன், கலா, லட்சுமியின் தம்பி ரமேஷ் என நால்வரும் வீட்டிற்கு வந்தனர்.

சிவராமன் வீட்டிற்குள் அழைக்க,லட்சுமி எதுவும் பேசாமல் உள்ளே சென்று காபி வைத்தார்.

அவிநாசியப்பன் மட்டும் காபி குடித்து விட்டு விடைபெற ரமேஷும்,கலாவும் அக்காவிற்கு துணையாக இருந்தனர்.

“மாமா இனி எங்க அக்கா மேலே கைவச்சே அவ்வளவுதான். திருப்பாச்சிலே அருவாளுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கறே என” சிவராமனை பார்த்து கண்ணடித்த வாறே ரமேஷ் அக்காவை சமாதான படுத்த கூறினான்.

மொதல்ல அருவாள் எப்படி இருக்குனு தெரியுமாடா? உனக்கு என தனது கடைசி மச்சுனனிடம் நக்கல் பேசினார்.

மாமா,”எங்க அக்கா கொஞ்சம் பயந்துக்குவா நீங்க இனிமே யார் கிட்டையும் சண்டை போடக் கூடாது” என்றாள் கலா.

லட்சுமி உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் என்றாலும் ரமேசிடமும்,கலாவிடமும் அதிக பாசம் கொண்டார் சிவராமன்.

இருவரும் வீட்டிற்கு வந்திருப்பதால் அன்று கடைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, தலைக்கறியும் ,மட்டனும் எடுத்து சமைத்து உண்டனர் நால்வரும்.

என்னதான் சண்டை பிடித்தாலும் அக்கா பரிமாறுகையில் தங்கள் தட்டைவிட இரு கறித்துண்டு அதிகமாக சிவராமன் தட்டில் வைப்பதை கலா பார்த்து அவர்களின் அன்பின் ஆழத்தை உணர்ந்து கொண்டாள்.

லட்சுமி வீட்டினரே முன்வந்து, கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுத்தனர்.அந்த செயல் சிவராமனின் மனதை நெகிழச் செய்தது.

அந்த நிமிடம் அவருக்குத் தோன்றியது, “இதுதானே குடும்பம். நல்லதிலும் கெட்டதிலும் முன்னாடி நிற்கும் உறவுகள்.

தங்கச்சி கல்யாணத்தில அனுபவிச்ச வெறுமை இப்போது இல்லை.
ஒரு காரியம் செய்ய முன் யோசனை சொல்ல பெரியவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு பிரச்சினை வந்தால் “நாங்க இருக்கோம்” என்று சொல்ல மச்சினன்கள் இருக்கிறார்கள்”.

அந்த நாள் சிவராமன் மனதளவில் ஓர் நிம்மதி அடைந்தார். இனி இந்த வீடு தனிமையில் இல்லை என்று.

“இப்படித்தான் எப்போதும் இருக்கணும்…” என்று அவர் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார்.

ஆனால் வாழ்க்கை ஒரே மாதிரி ஓடாது. ஒரு நல்ல எண்ணம் எல்லாராலும் ஒரே விதமாகப் புரிந்து கொள்ளப்படாது.

சில சமயங்களில்,
நிம்மதியாக இருந்த உறவிலே…ஒரு சொல், சிறு தவறு, ஒரு தவறான புரிதல்
பெரிய பிளவை உருவாக்கும். அப்படித்தான் சிவராமன் கதையிலும் நடந்தது.

அடுத்தடுத்த நிகழ்வுகள் லட்சுமியின் வீட்டார் கண்களில்,
சிவராமனை அழுத்தக்காரன், பிடிவாதகாரன்,பெரியவர்களை மதிக்காதவன் என பல பிம்பங்களை காட்டியது.

ஆவணித் திங்களில் தலைச்சன் பிள்ளையாக கங்கா பிறந்தாள். சிவராமனை கையில் பிடிக்க முடியவில்லை.வானத்தையே வில்லாக வளைத்த சந்தோசம் அவருக்கு…
மார்பிலும் தோளிலும் சீராட்டி வளர்த்தார்.

பத்து கடை ஏறி இறங்கி பார்த்து பார்த்து பால்புகட்ட சங்கடை,வெள்ளி அரைஞாண் சங்கிலி, கொளுசு,துணிமணி,உணவு உண்ண தனி தட்டு,தண்ணீர் குடிக்க தனி டம்ளர், குளியலுக்கு பச்சை பயிறும்,கடலை மாவும் கலந்த குளியல் பொடி என அனைத்தும் வாங்கினார்.

கங்கா கொஞ்சம் சினுங்கினால்கூட இரவு முழுவதும் கண்விழித்து தாலாட்டு பாடி தட்டி கொடுத்து தூங்க வைப்பார். தாயின் கதகதப்பை விட தந்தையின் கதகதப்பில் நன்றாக தூங்கிப்போவாள்.

“இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னை சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட” என அவரது கம்பீர குரலின் தாலாட்டு அவளுக்கு மட்டும் கற்றோடு கலந்து வரும் மெல்லிசை ஆனது.

இவரது அலப்பறையை பார்த்த லட்சுமி “என்னமோ உனக்கு மட்டும் புள்ளை பொறந்து இருக்கறமாறி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கறே, எங்க அப்பாக்குதான் மூனு புள்ளைங்க ஆன உன்ன மாறி எல்லா எங்க அப்பா பண்ணுல சாமி” என நொடித்துக் கொண்டார்.

“ஆமா உங்க அப்பன் வதவதன்னு ஆறு உருப்படி பெத்து வெச்சுருக்கான் அத்தைனைக்கு இப்படி வாங்குனா அப்பறோம் திருவோடு ஏந்திட்டுதான் போகனும்”என்றார்.

எங்க அப்பன பேசுலேனா உனக்கு தூக்கம் வாரதே என்றார் லட்சுமி.

அப்படி இப்படி என இனிமையாக நாட்கள் நகர்ந்தது.அந்த இனிமையை கலைக்கும் செய்தியும் வந்து சேர்ந்தது.

லட்சுமியின் இரண்டாவது அண்ணன் அருணாச்சலம் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதில் சிவராமனுக்கு என்ன கோபம் என்றால் பெரிய மச்சினனுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்க, சிறியவன் செய்து கொண்டாரே என… இனிமேல் உங்க சின்ன அண்ணன் கிட்ட எந்த பேச்சுவார்த்தையும் வெச்சுக்க கூடாது என் கட் அண்ட் ரைட்டாக லட்சுமியிடம் கூறி விட்டார்.

–தலைவன் வருவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!