ராகம் – 21.2
அதிர்துடியனின் ‘ஸ்டார்ட் ஆரு’ என்ற குரலில் அதிர்வோடு யாழி அவனை பார்க்க அதேநேரம் அவன் எதிரில் இருந்த ஆராதனா கேமராவை பார்த்து மெல்லிய புன்னகையுடன், ‘குட் மார்னிங் பிரெண்ட்ஸ் தி டாப்பிக் டுடே வி ஆர் கோயிங் டூ ஹாவ் இஸ் செக்ஷுவல் ஹாராஸ்மென்ட்‘ என்று ஆரம்பிக்கவும் தலைப்பு அவள் பின்னணியில் இருந்த வெள்ளை திரையில் ஒளிபரப்பப்பட்டது..,
யாழி என்று அழைத்த மரகதத்தின் வார்த்தைக்கு செவி சாய்த்து இப்போது அதிரிடம் இருந்து யாழியின் கவனம் திரைக்கு திரும்ப அங்கு அவள் நடத்த வேண்டிய பாடத்தின் ஸ்லைட் ஷோவை ப்ரித்வி ஒவ்வொன்றாக அவள் பேச்சிற்கு ஏற்ப அடுத்தடுத்து ஒளிபரப்பினான்.
அன்றைய தலைப்பு பாலியல் வன்கொடுமை குறித்து இருக்க முதலில் தலைப்பு பற்றிய அறிமுகம் கொடுத்தவள் பின் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதன் சட்டப்பிரிவுகள் குறித்தும் விரிவாக பாடம் எடுத்தவள் காலப்போக்கில் அது எந்த வகையில் எல்லாம் வடிவ மாற்றம் கொண்டு பெண்களை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்று புள்ளி விவரங்களுடன் விவரிக்க தொடங்கினாள்.
Advertisement
யாழியோ விரிந்த விழிகள் மூடாமல் அவள் பேசுவதை கேட்டு கொண்டிருக்க தொடர்ந்த ஆராதனா சொந்த வீடு, வேலை செய்யும் இடம் தொடங்கி பொதுவெளி வரை பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும் அது குறித்த வழக்குகளையும் ஆங்கிலத்தில் தெளிவான உச்சரிப்போடு விளக்கிக்கொண்டே செல்ல சுற்றி இருந்தவர்களும் அவள் பேசுவதை கவனமாக கேட்டு கொண்டு இருந்தனர்.
‘இந்திய அளவில் நாள் ஒன்றிற்கு நடக்கும் குற்றங்களையும் அது குறித்த புள்ளி விவரங்களை வழங்கியவள் மாநில வாரியாகவும் எங்கு அதிக கொடுமைகள் நடக்கிறது அதன் பின்னணி என்ன..?? கல்வி அறிவு இல்லாமை, வறுமை என்று அது சார்ந்த பிரச்சனைகளையும் அடுக்கி பின் முக்கிய வழக்குகள் அதில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, சட்ட திருத்தங்கள் என்று எல்லாமுமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வகுப்பு எடுத்து நன்றி சொல்லி முடிக்க யாழியின் பிரமிப்பு இன்னுமே அகலவில்லை.
அவள் முடிக்கவும் அனைவரும் கை தட்டி அவளை வாழ்த்த அதியிடம் வந்தவள் ‘ஓகேவாண்ணா ஏதாவது கரெக்ஷன் இருக்கா..?? திரும்ப எடுக்கணுமா..??’ என்று கேட்க,
Advertisement
‘இல்லடா பெர்பெக்ட்..!!’ என்றிடவும் புன்னகையுடன் ப்ரித்வி அருகே சென்றவள் அவனிடமும் குறை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டு சாருவின் பாராட்டிற்கும் நன்றி கூறியவன் அவளிடம் இருந்த குழந்தையை தூக்கி கொண்டு மரகதத்திடம் சென்று அமர்ந்தாள்.
Advertisement
அதே நேரம் ‘நீ வா யாழி’ என்ற அதிர்துடியனின் குரல் அவளருகே கேட்க,
அதை எதிர்பாராமல் மருளும் விழிகளோடு அவனை பார்த்த யாழி ‘ஏன் … எது… எதுக்கு..??’
“உனக்கு இன்னைக்கு டெஸ்ட் வைக்கிறேன் சொன்னேனே நியாபகம் இருக்கா..? உன்னோட டாப்பிக்கு ரிலவென்ட்டா நானே பவர்பாயின்ட் ரெடி பண்ணிட்டேன் இப்போ நீ வந்து படிச்சதை மத்தவங்களுக்கு சொல்லு” என்று யாழியை கேமரா முன் நிறுத்திட இதை எதிர்பாராத அவளுக்கு முதல் முறையாக கை கால் உதறல் எடுத்தது.
Advertisement
இருக்காதா பின்னே..!! இரு நாட்களுக்கு முன்பு தான் படிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்து அதிர்துடியனுக்காக படிக்க ஆரம்பித்து இருக்கும் அவளுக்கு இப்படி செய்ய போகிறார்கள் என்று கூட தெரியாதே அப்புறம் எப்படி அவள் பேச..?? அதுவும் ஆராதனா ஆங்கிலத்தில் அத்தனை புலமையுடன் தெளிவாக புள்ளி விவரம் சட்ட பிரிவு அது இது என்று தேர்விற்கான எத்தனை வருட தயாரிப்பை கொண்டு பேசிய நிலையில் அவள் அளவிற்கு எப்படி அவளால் முடியும்..??
நிச்சயமாக யாழிக்கு மற்றவர்கள் முன் பேசும் தைரியம் கூட இல்லை ஆனால் அதிரன் அவளை கேமரா முன் நிறுத்திட அங்கே குழுமி இருந்தவர்களோ கைதட்டி அவளை உற்சாகபடுத்த தொடங்கவும் யாழிக்கு அழுகை பீறிட்டது ஆனாலும் தன்னை கட்டுபடுத்தி கொண்டு நின்றாள்.
அதேநேரம் ஆராதனாவின் பேச்சை கேட்ட பிறகு படித்த அத்தனையும் அவளுக்கு மறந்து போயிருந்தது… அவன் தேர்வு வைப்பான் என்று நினைத்தாலே ஒழிய இப்படி என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
அதிர்துடியனோ அமைதியாக அவள் உணர்வுகளை அவதானித்து கொண்டிருந்தான்…,
“ஒரு நிமிஷம்மா முதல் முறை கேமரா முன்னாடி நிற்கிறதால நெர்வஸா இருக்கா போல நான் பேசி கூட்டிட்டு வரேன்” என்று அவர்கள் அறைக்கு கூட்டி சென்றான்.
யாழியோ பேச்சின்றி கலங்கிய விழிகளுடன் அவனை பார்க்க, ‘எதுக்குடி தொட்டதுக்கு எல்லாம் சும்மாவே அழுது வடியுற…?? என்ன பிரச்சனை உனக்கு..?? சொல்லு..??’ என்றிட,
பல நிமிடங்களுக்கு அவனை சோதித்து பின் வாய் திறந்தவள், ‘நீ… நீங்க ஏன் வீடியோ எடுப்பேன் சொல்லல..??’ என்று அழுகையினூடே கேட்க,
‘உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்சேன்டி, ஏன் பிடிக்கலையா..??’
“எது பிடிக்கலையாவா..?? அது அவளுக்கே தெரியவில்லையே கேமரா முன்பு பேசுவது அவளுக்கு தண்ணீர்பட்ட பாடு, விரும்பி செய்யும் ஒன்று ஆனால் முன்தயாரிப்பு இன்றி திடுதிப்பென்று எப்படி நிற்ப்பது..??
ஒரு கோவிலுக்கு செல்லும் முன் அது குறித்த அத்தனை விவரங்களையும் சேகரித்து பல கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தெளிவான தகவல்களை குறிப்பெடுத்து என்று பல நாட்கள் ஒரு வீடியோவிற்க்காக மெனக்கெடுபவளின் உழைப்பு அத்தனை சாதாரணமானது இல்லை.
அவளது இந்த குணம் பற்றிய புரிதல் கொண்டிருப்பதாலேயே அதிர்துடியன் அவளை கலெக்டர் ஆக்கியே தீருவது என்று தைரியமாக களம் இறங்கி இருக்கிறான்.
*******************************************
ஆம் !! மகேஷ்வரனிடம் யாழியின் சேனல் லிங்க் பெற்று அவளது முழு தொகுப்பையும் பார்த்தவனுக்கு ஒரு வீடியோ எடுக்க அது குறித்த தகவல்களை அக்குவேறாக ஆணிவேராக அலசி ஆராய்ந்து அதை பற்றி அவள் எடுத்து கூறும் விதமும் கேமரா குறித்த பயமும் இன்றி தெளிவான உச்சரிப்புடன் தெளிந்த நீரோடையாக பயணிக்கும் அவள் பேச்சு திறமையும் கண்ட பிறகே அவள் பொய்யை நிஜமாக்க முடிவு செய்தான்…!!
என்னதான் தன் மீதான காதலுக்காக கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாலும் அதை செயலாற்றுவது அத்தனை எளிதல்ல… எந்த தடுமாற்றமும் மனசிதறலும் இல்லாமல் குறிக்கோளை அடைய இரு வருடங்கள் பகுதி நேரமாகவும் ஒரு வருடத்திற்கும் மேலாக முழு நேரமும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் அவன் தங்கையை அருகே இருந்து பார்ப்பவனல்லவா..??
அது எத்தனை கடினம் என்பது அவனுக்கு தெரியாதா..??
அதுவும் படிப்பு என்றால் காத தூரம் ஓடும் யாழிக்கு அது அத்தனை சுலபமில்லை என்பதையும் அவன் அறிவான்… ஆனால் தன் மீதான காதலோடு அவள் விரும்பி செய்ய கூடிய ஒரு விஷயமாக அதை மாற்றும் போது நிச்சயம் அதன் பலன் அமோகமாக இருக்கும் அப்படி அவள் கலெக்டர் ஆகவில்லை என்றாலும் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளம் குறித்த புரிதலை அவளிடம் கொண்டு வர நினைக்கும் அவன் முயற்சி வெற்றி பெறுமல்லவா.. அந்த நம்பிக்கையுடனே திருமணத்தை விரைவாக நடத்த முடிவு செய்தான்.
ஒரு வீடியோ எடுப்பதற்கு முன் ஸ்தலம் குறித்த அனைத்தையும் கரைத்து குடித்து தங்கு தடை இன்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதில் வல்லமை பெற்றிருக்கும் அவள் திறமையை தனக்கு ஏற்ப உபயோகித்து கொண்டான்.
யாழி ஒருவித வலியோடு அவனை பார்த்தவாறு அமர்ந்திருக்க பல நிமிடங்களுக்கு பின் தன் குரலை செருமி, ‘யாழி நீ படிச்சிருக்க தானே..??’ என்று கேட்க,
‘ஹ்ம்ம்’
“அப்புறம் என்ன..?? அதை அப்படியே மத்தவங்களுக்கு சொல்ல போற, அன்னைக்கு கூட எங்க அம்மா கிட்ட இடுக்கு பிள்ளையார் கோவில் பத்தி எவ்ளோ விஷயம் சொன்னியாமே..” என்று நிறுத்தி அதிர்துடியன் அவளை பார்க்க,
‘உங்களுக்கு தெரியுமா..??’ என்றவளுக்கு ஒருவேளை அன்று அவர்கள் வீடியோ எடுத்ததும் தெரியுமோ..?? என்ற பதட்டம்.
‘உன்னை பார்த்ததுல இருந்து ரெண்டு மூணு நாளைக்கு அம்மா இதை பத்தி தான் பேசிட்டே இருந்தாங்க சின்ன பொண்ணு தான் ஆனா இந்த வயசுலேயே எவ்ளோ ஞானம்ன்னு சொன்னாங்க’ என்று கூறவும் யாழியிடம் ஆசுவாச மூச்சு.
‘அதனால கண்டிப்பா உன்னால முடியும் எந்திரி வா’ என்று அழைக்க அவளோ தலையை இருபுறமும் அசைத்து ‘முடியாது’ என்பதாக அமர்ந்திருந்தாள்.
‘பின்னே யாழிக்கு ஆங்கிலம் ஓரளவிற்கு தான் வரும் ஆராதனா அளவிற்கு பெரிதாக புலமை இல்லை இப்போது வீடியோவில் ஆங்கிலம் பேச வேண்டுமே’ என்ற பயமும் அவளை ஆட்கொள்ள கண்கள் கலங்கி விட்டது.
‘ஷ்ஷ்ஷ் யாழி’ என்று அவள் முகத்தை தன்னோடு சேர்த்து கொண்டவன் அவள் முதுகை வருடி கொடுக்க இப்போது அதிகரித்து இருந்த அவள் இதயத்துடிப்பு ஓரளவு மட்டுப்பட்டது..,
‘உன்னால முடியும்டா அதனால தான் நம்பிக்கையோட கூப்பிடுறேன்’
அது நேரம் வரை அவளையும் அறியாமல் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்து இருந்தவள் இப்போது அவன் வயிற்றில் இருந்து முகம் நிமிர்த்த,
‘இப்போ எதுக்கு இந்த அழுகை..??’ என்று அவள் முகத்தை கையில் ஏந்தி துடைத்தான் கணவன்.
‘அது நான்… இப்பதானே படிக்க ஆரம்பிச்சி இருக்கேன் எனக்கு, என்னால் எப்படி..??’ என்று தொண்டை குழி ஏறி இறங்க அவனை பார்த்தாள்.
‘அப்போ நீ படிச்சிருக்க.., ரைட்..!!’
‘ஆமா.., ஆனா…’ என்று அவள் தயங்க,
‘அப்புறம் என்ன என் கிட்ட சொல்ல போறதை கேமரா முன்னாடி சொல்ல போற அவ்ளோ தான் வித்யாசம்’
‘ஆ… ஆ அனா நான்…’
‘இதோ பார் எதுவும் யோசிக்காத நான் கூட இருக்கேன் இங்க்லீஷ்ல தான் பேசனும்ன்னு இல்லை அது ஆராதனாவோட இங்க்லீஷ் சேனல்க்காக எடுத்தது சாருவோடது முடிச்ச பிறகு அவளோட தமிழ் வீடியோ எடுப்போம் அதனால..’ என்று நிறுத்தியவன் கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பை திறந்து,
‘உனக்கு இன்னும் ஒரு மணி நேரம் டைம் கொடுக்குறேன் இதோ உனக்காக நான் தயார் பண்ணின பவர் பாயின்ட் ப்ரேசெண்டேஷன் முதல்ல ஆருக்கும் நான் தான் செஞ்சு கொடுப்பேன் இப்போலாம் அவளே படிக்கிறப்போ சைட் பை சைட் பண்ணிப்பா…, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறதுக்காக உன்னை படிக்க சொன்ன டாப்பிக்ல இருந்து நானே பண்ணிட்டேன்.., சோ நீ படிச்சது அப்புறம் இது ரெண்டையும் ஒரு முறை சரி பார்த்து ரெடி ஆகு நாம ஷூட் பண்ணிடலாம்… இதை முடிச்சிட்டு எனக்கும் மதியம் மீட்டிங் இருக்கு கிளம்பனும்’ என்று கூற,
சரி என்று தலை அசைத்தவள் எத்தகைய உணர்வை கொண்டாள் என்று அவளாலேயே வரையறுக்க முடியவில்லை…
ஆனால் அதியிடம் அவளது சேனல் குறித்து சொல்லிவிடுவோமா..?? என்று ஒரு எண்ணம் எழ..,
“இல்ல இல்ல வேண்டாம்.. இப்பதான் அவர் என்கூட சகஜமா பேசறார் இது தெரிஞ்சா அப்புறம் என்னை பிடிக்காம போயிடும்…, வேண்டாம் இனி அது பத்தி அவருக்கு தெரியவேண்டாம்… நான் தான் இனி படிக்க போறேனே படிச்சி முடிச்சி கலெக்டர் ஆன பிறகு சொல்லிக்கிறேன் அப்போ திட்ட மாட்டாங்க தானே..?? என்று தனக்கு தானே முடிவு செய்து கொண்டவள் … கணினியை பார்வை இட தொடங்கினாள்.
கீழே வந்தவன் சாருவிடம், ‘சாரு உன்னோடது ரெடியா..??’
‘ரெடி மாமா’
‘ஸ்டார்ட் பண்ணலாமா..??’ என்று கேட்க அவளும் சரி என்று தலையசைக்க,
‘சரி பட் இன்னைக்கு ப்ரித்வி ஷூட் பண்ணட்டும் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்’ என்றிட,
ப்ரித்வி, சாரு இருவரும் அவனை சிறு திடுக்கிடலுடன் பார்த்தனர்.
ஆம் ஒரே அறையில் இருந்தாலும் இருவருக்கும் சகஜமான பேச்சுக்கள் இல்லை பிறகு ஏன் இப்படி அவர்களை என்று இருவருமே யோசிக்க,
‘ப்ரித்வி நீ ஷூட் முடிச்சிட்டு எடிட்டிங் பார்த்துடு நான் நாளைக்கு பைனல் பண்ணி அப்லோட் பண்ணிடுறேன்’ என்றவன் யாருக்கோ அழைத்தவாறு வெளியில் செல்ல வேறு வழி இன்றி ப்ரித்வி சாருவிடம்,
‘ஸ்டார்ட் பண்ணலாமா..??’ என்று கேட்க
‘ஹ்ம்ம்’ என்று தலை அசைத்தாள்.
********************
ஒரு மணி நேரம் கடந்த நிலையில் அதிர்துடியன் அறைக்குள் நுழைய யாழியும் முகம் கழுவி வந்தாள்.
‘ரெடியா..??’ என்று கேட்கவும்
ஆம் என்றவள் முகத்தில் இப்போது ஓரளவு தெளிவு பிறந்திருந்தது…
‘இப்படியேவா வரப்போற..??’ என்றான் நலுங்கி இருந்த அவள் உடையை கண்டு,
‘வேற மாத்தணுமா..??’
‘அது உன் விருப்பம்’ என்று அவன் தோள்களை குலுக்க, விம்மும் மனதோடு அவனை பார்த்து நின்ற யாழி கண்ணீரை கட்டுபடுத்தி கொண்டு தன் கப்போர்டை திறக்க அவள் பின்னே வந்து நின்றான் அதிர்துடியன்.
தன் முதுகோடு ஒட்டி நின்றவனை எதிர்பாராது யாழி சட்டென திரும்பிட அவனோ அவளை தாண்டி பார்வையை செலுத்தி கொண்டு இருந்தான்.
அதை கண்டதும், ‘எ… என… என்ன’ என்று அவள் திணற அவனோ அவளுக்கான உடையை எடுத்து அவள் கையில் கொடுத்தவன் ‘மாத்திட்டு வா வைட் பண்றேன்’ என்று அவள் நெற்றியில் தன் அதரங்களை அழுத்தமாக ஒற்றி எடுக்க யாழியோ நம்ப முடியாமல் அவனை பார்த்தாள்.
‘வீடியோக்கு ஏத்த மாதிரி ப்ளேசன்ட்டா இருக்கணும் அதான் உனக்கு ஓகேன்னா…’ என்று அவன் ஆரம்பிக்கவுமே அவனை தடுத்தவள்,
அவளுக்கான அவன் தேர்வு அதுவே மனதில் இனம் புரியா மகிழ்வை தோற்றுவிக்க,
‘பிடிச்சிருக்கு’ என்று யாழி அவன் தேர்வையே அணிந்து வர திருப்தியாக அவளை பார்த்தவன் கண்ணாடி முன் நிறுத்தி நெற்றி மத்தியில் அவள் வழக்கமாக வைக்கும் ஸ்டிக்கரையும் வகிட்டில் குங்குமத்தையும் வைத்து மீண்டும் அவள் உச்சியில் இதழ் பதித்தவன் ‘சீக்கிரம் வா’ என்று கிளம்பி செல்ல,
யாழிக்கோ அவள் படிக்க தொடங்கியதும் அவனிடமான முதல் மாற்றம் மனதில் அத்தனை தித்திப்பை கொடுக்க சில நொடிகள் அவன் இதழ் தீண்டி சென்ற நெற்றியை கண்ணாடியில் பார்த்து கொண்டு நின்றவள் அடுத்த சில கணங்களில் கீழே இறங்கினாள்.
***************************************************

