Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 9.2

“என்னங்க சக்தியாரே எப்படி இருக்கீங்க?”

“நீ எதுக்குடா இங்க வந்த?” என்றும் வராதவன் இன்று வந்ததில் ஆச்சரியமும், அவன் மேல் பல நாட்களாக இருந்த கோபமும் ஒன்று சேர்ந்து காட்டமாகத்தான் வந்தது.

“எதுக்கா… தங்கச்சி வந்திருக்கிறதா கேள்விப்பட்டு வராம இருக்க முடியுமா? தள்ளு” அவளை விலக்கிவிட்டு இவனே உள்ளே நடந்தவன், “அடடே அன்பு எப்படிம்மா இருக்க?” என்றான்.

பல நாட்கள் பழகிய பழக்கத்தின் வாசனை தமிழ்ச்செல்வனின் பேச்சில் இருந்தது. அவனைப் பற்றிச் சக்தி மூலம் கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் முதல்முறை பார்த்தவளுக்கு அவனின் இத்தனை உரிமைப் பேச்சு ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. அதுவும் அவளைப் பார்த்தவன், “என்னாச்சு அழுதியா?” என்கிற கேள்வியைத் தான் முதலில் கேட்டான்.



Advertisement

அன்பரசி வேகமாகத் தலையை அசைக்க, சக்தியிடம் திரும்பியவன், “என்ன சக்தி எதுவும் பிரச்சனையா?” என்றான் கூர்மையாக.

அன்பரசி சக்தியைப் பார்த்து வேண்டாம் எனத் தலையசைக்க, “அண்ணி, அவனுக்கு நம்ம வீட்டைப் பத்தி எல்லாமே தெரியும்” என்று கூறிய சக்தி, அன்பரசி தன்னிடம் கூறியதைச் சுருக்கமாகத் தமிழ்ச்செல்வனிடம் கூறி முடித்தாள்.

“இதெல்லாம் ஒரு விசியம்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கியா நீ?” என்கிற கேள்விதான் உடனே தமிழிடமிருந்து அன்பரசிக்கு வந்தது.

Advertisement

“எவ்வளவு ஈஸியா சொல்ற செல்வா நீ? அண்ணா மேல தப்பிருக்கு. அந்தப் பொண்ணு கூப்பிட்டா உடனே இவர் ஏன் போகணும்? அதை அண்ணிகிட்டயே வந்து வேற சொல்லிருக்காங்க” என்றாள் சக்தி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி.

Advertisement

சக்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “முதல்ல இந்த மாதிரி லூசுங்க சொல்றதைக் கேட்காத அன்பு. அவளுக்கே யாரைப் பத்தியும் ஒன்னும் தெரியாது” என்றான் தமிழ். தமிழின் இந்த வாக்கியத்தில் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த சக்தியின் பார்வை கூடச் சாந்தமாகியது.

“சரி நீ சொல்லு, இவ அண்ணன் எதுக்கு உன்கிட்ட அதை சொன்னான்னு நீ நினைக்கிற?”

அன்பரசிக்கு தமிழிடம் பேசவே யோசனை. இவனிடம் இதுவரை ஒருமுறை கூடப் பேசியதில்லையே, இதில் கணவனைப் பற்றித் தன்னுடைய எண்ணத்தை எதற்குப் பேச வேண்டும் என்கிற யோசனையோடு சக்தியைப் பார்க்க, அவளோ விழி மூடித் திறந்து பேசுமாறு தலையசைத்தாள்.

Advertisement

“புருஷனைப் பற்றிச் சொல்ல அவ்வளவு யோசனை?” கேலி சிரிப்போடு கேட்ட தமிழின் சிரிப்பில் அன்பரசியால் அதற்கு மேல் வாய்க்குப் பூட்டு போட முடியவில்லை.

“அப்படியெல்லாம் இல்லை அண்ணா. அவர் மேல தப்பு சொல்ல எதுவும் இல்லை” என்றாள் விட்டுக்கொடுக்காமல்.

“அவனை ஜட்ஜ் பண்ண நான் இங்க வரலம்மா. நான் கேட்டதுக்குக் பதில் சொல்லு” என்றான்.

“அவங்களுக்கு அந்தப் பொண்ணோட ஞாபகம் இன்னும் இருக்குன்னு சொல்லத்தான்” என்றாள்.

தலையை ஆட்டியவன், “பொண்ணுங்களே இப்படித்தானா? இதுதான்னு ஒரு கன்க்ளூஷன்க்கு நீங்களே வந்துட்டு கண்ட கற்பனை பண்றீங்க” என்றான்.

“அப்புறம் ஏன் வந்து அப்படிச் சொல்லணும், அதுவும் உடனே?”

தமிழ், “ஏன்ம்மா, எதையும் நல்லவிதமா யோசிக்க மாட்டியா? சரி சொல்லு, அவன் லவ் பண்ணதை உன்கிட்ட மறைக்கல, அந்தப் பொண்ணை மறந்துட்டேன்னு உன்கிட்ட பொய் சொல்லல, இப்போ அந்தப் பொண்ணைப் பார்த்ததையும் உன்கிட்ட மறைக்கல. இவ்வளவு டிரான்ஸ்பரன்சி இருக்கேம்மா. இதுல என்ன தப்பு கண்டுட்ட நீ?”

அன்பரசி பேசாமல் கையை அழுத்திக்கொண்டிருப்பதை கண்டவன், “திங்க் மீ அஸ் யுவர் பிரதர்” என மென்மையாகக் கூறியபடியே அவள் விரல்களைத் தன் இரண்டு கைகள் கொண்டு பிடித்தான். அந்தத் தொடுகையில் சிறிதும் தவறெண்ணத்தை உணராதவள், ஈர விழிகளோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“தப்பு செய்ய அவனுக்கு ஒரு நிமிஷம் ஆகாதும்மா. இரண்டு பக்கமும் கோல் அடிக்கலாம். அதை அவன் பண்ணலையே, மனசுல இருக்கிறதை மறைக்காமல் ஓப்பனா சொல்றான். அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு வந்ததை மறைக்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகிடும்?”

“இப்போ என்ன சொல்ல வர்றீங்க?” கேட்டாள் அழுகையோடு.

அதில் சிரித்த தமிழ், “லவ் ரொம்ப ஸ்பெஷல்ம்மா. அதுவும் முதல் தடவை வர்ற காதலோட பவர் ஜாஸ்தி. மறந்தா அது காதலே இல்லை. சிலர் அதை புதைச்சு வச்சு அடுத்த வாழ்க்கையைப் பார்ப்பாங்க. சிலர் மறக்க மாட்டாங்க. உன் புருஷன் முதல் ரகம். அதை ஒதுக்கி வச்சு உன்கூட அமைஞ்ச வாழ்க்கையை அக்சப்ட் பண்ணிக்க அவனுக்கு டைம் தேவைப்பட்டுச்சு. போதுமான நாட்களை நீ கொடுத்துட்ட. இப்போ அதுல இருந்து வெளியே வந்தானா இல்லையான்னு நீதான் அவனோட நடவடிக்கைகளைப் பார்த்துப் புரிஞ்சுக்கணும்” என்றான்.

“ஆனா அண்ணா, அவங்க கண்ணில் அவ்வளவு வலி இருந்ததே. அந்தப் பொண்ணு சாய்ந்த கையைக் கூடப் பார்த்துட்டே இருந்தாங்க” விம்மலோடு அழுகையும் கண்ணீருமாக கூறினாள்.

“இந்தக் கேள்வியையெல்லாம் அன்னைக்கே அவன்கிட்ட நீ கேட்டிருக்கணும். அவனையும் பேச விடாமல் நீயும் பேசாமல் வந்தது எந்த அளவு சரின்னு தெரியலை. யோசிச்சு முடிவெடு அன்பு. உன்னோட பொறுமைக்கு ஒரு முடிவு கிடைக்கிற நேரம், அவசரத்துல எமோஷனலா எந்த முடிவும் எடுத்திடாத” என அவள் கைகளைப் பற்றியிருந்தவன், அதில் மெல்லத் தட்டி அவள் கைகளுக்கு விடுதலை கொடுத்து, சிந்தனைகளுக்கு வேலை கொடுத்தான்.

தெளிவாக, வீராந்தகனின் நடவடிக்கையின் மேல், அவர்கள் திருமணத்திற்கு அவன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என உறுதியாக இருந்தவளின் இதயத்தில் கல்லை எறிந்து குழப்பி விட்டிருந்தான் தமிழ்.

“சாப்பாடு வந்துடுச்சு” அப்பொழுதுதான் வந்திருந்த உணவை வாங்கி வந்த சக்தி தமிழ்ச்செல்வனைப் பார்த்துக்கொண்டே கூற, “நான் எடுத்து வைக்கிறேன்” என யோசிக்க நேரம் தேவைப்பட, உணவை வாங்கிக் கொண்டு அன்பரசி உள்ளே சென்றுவிட்டாள்.

“அப்புறம் லீவு எப்படி இருந்துச்சு?” இத்தனை நேரம் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தவன் நன்றாகப் பின்னே தள்ளி அமர்ந்து அதன் மென்மையை உணர்ந்து, அமர்ந்த வாக்கிலேயே குதித்துப் பார்த்தான். “அடடே… உன் அண்ணன் நல்ல சோபாதான் வாங்கியிருக்கான். ஸ்பிரிங் பெட் மாதிரி துள்ளி குதிக்குதே!”

“டேய் லூசு, வந்த வேலை முடிஞ்சதுல, போடா!” என்றாள் சக்தி வற்றாத கோபத்தோடு.

“அட இரும்மா, சாப்பிட்டுப் போறேன். எனக்காகச் சாப்பாடு வாங்கியிருக்க மாட்டியா?”

சக்தி, “சார், உனக்காக நான் வாங்கல. வெளியே போடா” என்றாள்.

இவள் பேச்சைக் கேட்டு வேகமாக வந்த அன்பரசி, “அண்ணி, சாப்பாடு நிறையவே இருக்கு. அவரும் சாப்பிடட்டும்” என்றாள்.

அதில் தமிழ்ச்செல்வன் குஷி ஆகிவிட்டான், “இதுதான் பாசம். இதோ வந்துட்டேன்ம்மா” என எவரும் அழைக்காமல் அவனே உணவுண்ணச் சென்றான்.

“அண்ணி நீங்க வாங்க, நீங்க சாப்பிட்டதும் நான் சாப்பிடுறேன்” என்றாள் அன்பரசி. சக்தியின் கையில் இன்னும் காயம் ஆறாமல் இருக்க, அவளது உணவை வீட்டினர்தான் ஊட்டி விடுவர். அதே எண்ணத்தில் அன்பரசி உணவை எடுத்து வைக்க வர, “இவ சாப்பிட ரெண்டு நாள் ஆகும் அன்பு. நீ தா, நானே சாப்பிட்டு அவளுக்கும் ஊட்டி விடுறேன்” என்றான் தமிழ்.

“அண்ணி, எனக்குச் சாப்பாடே வேண்டாம்” என்றாள் சக்தி வீம்பாக.

“நீ போம்மா” அன்பரசியின் தயக்கம் புரிந்தவன், தானே எழுந்து சக்திக்கு அவள் வைத்திருந்த உணவை வாங்கிக்கொண்டான்.

கணவனின் காதலைக் கண் பார்த்து அறிந்துகொண்டவளுக்கு, தமிழின் காதல் கண்டுகொள்ளும் வித்தை பெரிதாகச் சிரமத்தைத் தரவில்லை. அவன் கண்ணிலிருந்து வந்த கண்ணியம், அவளை அளவிற்கு அதிகமாகச் சந்தேகப்படவும் விடவில்லை.

“என்ன மேடம், வாயைத் திறக்கத் தெரியாதா?” அப்படியும் திறக்காதவளை வலுக்கட்டாயமாகத் திறக்க வைத்து, அவளுக்குப் பிடித்தது போல் உணவை ஊட்டினான்.

“பார்த்தீங்களா, நான் தான் சொன்னேன்ல சாப்பாடு நமக்குத் பத்தாதுன்னு. இவனே சாப்பிட்டான் எல்லாத்தையும்” என்று அன்பரசியிடம் சக்தி கூற, அவளோ சிறு சங்கடத்தோடு, “அண்ணி… ஆக்சுவலா நீங்க அண்ணா பேசுறதைக் கேட்டுட்டே நல்லா சாப்பிட்டீங்க, அவர் கொஞ்சம் கூடச் சாப்பிடல” என்று அமைதியாகக் கூறவும், சக்திக்கு ஏப்பம் வரவும் சரியாக இருந்தது.

அதில் தமிழ்ச்செல்வன் சிரிக்காமல் புருவத்தை உயர்த்த, “நீங்க இவனைக் கவனிக்கல” என்று எழுந்து சென்றவள், தமிழைப் பார்த்துத் தாடையைத் தோளில் இடிக்கத் தவறவில்லை.

“அடேங்கப்பா…” பெண்ணவளைத் தமிழ்ச்செல்வன் மறைத்து வைத்த சிரிப்போடு நோக்க, அவளோ இரவு உறக்கத்தைப் பிடிக்க அறைக்குள் புகுந்தாள்.

இரண்டு நாட்கள் ஆகியது சக்தி மீண்டும் வேலையில் சேர்ந்து. அவளது கை சரியாகவில்லை என்றாலும் ஓரளவிற்கு வேலை பார்க்க முடிய, உதவிக்கு ஒரு ஆளை வைத்துவிட்டான் தமிழ்.

“என்ன தமிழு, இப்போதெல்லாம் இந்தப்பக்கம் வர்றதே இல்லை…” இவளை நெருங்கி வந்தவன் ஒருவன் கேள்வி எழுப்ப, ஏற்கனவே கோபத்தில் இருந்தவள், “அதை என்னத்துக்குடா என்கிட்ட கேக்குறீங்க? வராத அவன்கிட்ட கேளுங்க!” என்றாள். உச்சக்கட்ட எரிச்சலில் அவள் சற்று குரலை உயர்த்த, வந்தவர்கள் அதே வேகத்தில் சென்றிருந்தனர்.

இந்த இரண்டு நாட்களில் நடந்தது இல்லையே அது… பல நாட்களாக இதுதானே வாடிக்கையாகிவிட்டது. முன்பெல்லாம் சக்தியை வேலையே செய்ய விடாமல் தமிழின் படை மொத்தமும் இங்கு கூடாரமிட்டு அமர்ந்திருக்கும். கேலி, கிண்டல், கூச்சல் என அமர்க்களப்பட்டுப் போகும் கூட்டம் இன்றி அவ்விடம் மட்டும் இல்லை, அவளது மனம்கூட வெறுமையாகத்தான் இருந்தது.

அதே கடுப்பில் ஒரு கையை வைத்து அங்கிருந்த இயந்திரத்தில் தட்டிக்கொண்டிருந்தவளின் கையை, அவளது உதவியாளன் வேகமாகப் பிடித்தான். “அக்கா, என்ன பண்ற?”

“என்னடா உனக்கு இப்போ?” எரிச்சல் மாறாக் குரலில் பெண்ணவள் கேட்க, “இவ்வளவு நேரம் மாங்கு மாங்குன்னு பார்த்த வேலை எல்லாம் அழிச்சு விட்டிருப்ப அக்கா” என்றான்.

தலையைப் பிடித்து முகம் கவிழ்ந்தவள் கண் மூடி அப்படியே அமர்ந்திருக்க, “சக்தி…” என்ற சுசிகரனின் உற்சாக விளையாட்டு குரலில்கூட அவள் அசையவில்லை.

“சக்தி, சவுண்ட் சிங்க் பண்ணியாச்சா? தமிழ் கேக்குறான்.”

வேகமாகத் தலை உயர்த்தியவள், “ஏன் அண்ணா, இதை அவன் வந்து கேட்க மாட்டானா?” என்றாள்.

“அவன் ரொம்ப பிஸியா இருக்கான்ம்மா, ஒரு சீன் ஓட்டிப் பார்க்கலாமா?” அவளோடு அமர்ந்திருந்தவனைப் பார்த்து, “இவன் வருவான், டேய் போடா” என உதவியாளனை அமர்த்தி வைத்து இவள் அங்கேயே அமர்ந்துவிட, அரை மணி நேரத்தில் தமிழ்ச்செல்வன் அவளைத் தேடி வந்திருந்தான்.

“என்ன சக்தி, எதுவும் மூட் அவுட்டா? கோவமா இருக்கிறதா கேள்விப்பட்டேன்” என்றான்.

அவளோ வேலையில் கவனமாக, “அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எதுவும் கரெக்ஷன்ஸ்?” என்றாள்.

அவளது ஒட்டுதல் இல்லாத பேச்சில் ஏதோ உணர்ந்தவன், அவளது சக்கர நாற்காலியை இழுத்துத் தன்னைத் பார்க்கச் செய்து, தானும் ஒன்றில் அமர்ந்தான். “என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு, பசிக்குதா?”

“இல்லை” என்றாள் அவன் முகம் பார்க்காமல், அடக்கப்பட்ட கோபத்துடன்.

“உடம்பு சரியில்லையா? ஒரு வாக் போகலாமா?”

“ஐ அம் குட்.”

“இல்லை சக்தி, யு சீம்ஸ் ஆஃப்.”

எத்தனை நேரம்தான் அவளும் பொறுமை காக்க முடியும்? அந்தச் சிறு இதயமும் வெடித்தது. “ஆமாடா, நான் நல்லா இல்லைதான். உனக்கு என்ன? எப்பவும் போலக் கண்டுக்காமல் இருக்கலாம்ல… போ!” அவன் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிவிட்டு அவள் குரல் உயர்த்த, “ஷ்ஷ்… காம் டவுன் சக்தி, மெதுவா பேசு” என்று சுற்றத்தை நினைவூட்டினான் தமிழ்.

அவளோ இதழ் கடித்து அழுகையை அடக்க முயன்று தோல்வியை மட்டுமே சந்தித்தாள்.

“நான் உன்னை எதுவோ ஹர்ட் பண்ணியிருக்கேன், சரியா?”

“ஆமா, நீ எல்லாமே சரியா கெஸ் பண்ணுவ. என்னைப் பத்தி, என்னோட மூட் பத்தி, பிடிச்சது பிடிக்காதது, எப்படிச் சாப்பிடுவேன், எதை எந்த அளவு தொட்டுச் சாப்பிடுவேன்னு கூட உனக்குத் தெரியும். ஆனா தெரிஞ்சு என்ன யூஸ்? மொத்தமாகக் கண்டுக்காமல் தானே போற?” தன்னுடைய ஆதங்கத்தை அமைதியாக, சில பல கண்ணீர் கோடுகளை வெளியிட்ட வண்ணமே கூறினாள்.

“சக்தி…”

“பேசாத செல்வா, நீ மட்டும் தயவு செஞ்சு பேசாத. எனக்குக் கல்யாணம்னு முடிவாச்சுன்னா நான் மொத்தமா யாரோ ஆகிடுவேனா? இல்லை எனக்குன்னு பிரண்ட்ஸ் யாரும் இருக்கக் கூடாதா?”

“அப்படி இல்லை சக்தி, வேலை கொஞ்சம் அதிகம் இங்க…”

“இதெல்லாம் உனக்கு ஒரு வேலையா? நீ என்கிட்ட சரியா பேசி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. மெசேஜ் இல்லை… ஏன், எனக்குக் கையில காயம் பட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப கூட வந்து பார்க்கத் தோணலை. சரி, நீ சொன்ன மாதிரி பிஸியா இருந்த. அதுக்கப்புறம் ஒரு கால் கூடவா பண்ணத் தோணலை? மொத்தமா தண்ணி தெளிச்சுதானே அனுப்பி வச்சுட்ட!”

“நான் அங்கதான் சக்தி…”

“என்ன அங்க வரணும்னு நினைச்சிருப்ப, ஆனா வேலை, வரவே முடியாத மாதிரி இருந்துச்சா? எல்லாமே பொய்தானே? இப்போ சொல்றதுல இருந்து அப்போ, லவ் பண்ணலனாலும் பரவாயில்லை, இப்போ பேசுற மாதிரி எப்பவும் பேசு போதும்னு சொல்றது வரை வண்டி வண்டியா கதை விட்டியேடா! கடைசியில் நீயும் எல்லா ஆம்பளைங்க மாதிரிதான் இருக்க. போடா, பாசம் பாசம்னு சொல்றது எல்லாம் வேஷம்தான் போல!”

அழுகையோடு அவனைத் தாண்டிச் சென்றவளின் பேச்சில் தமிழ் அப்படியே உறைந்து நின்றுவிட்டான். இவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டு நின்ற நிமலன் மற்றும் பேரழகன் இருவருக்குமே வாயடைத்துப் போனது.

பேரழகன் தமிழ்ச்செல்வனை நோக்கிச் செல்ல, நிமலன் சக்தியைத் தொடர்ந்தான். அவளோ குளியலறை நோக்கிச் செல்ல, தேங்கி நின்றவன் மீண்டும் அவள் வெளியே வரக் கண்டான். சக்தி மேல் தளத்திலிருக்கும் உணவகத்திற்குச் செல்வதைக் கண்டவன், தானும் சென்று அவள் முன்பு அமர்ந்தான்.

“ஹே நிமல், என்னடா உன்னப் பார்க்கவே முடியறது இல்லை, ஒரேடியா என்னை மறந்துட்டீங்களா?”

“ஏன் அக்கா, தலைகிட்ட இப்படிப் பேசுன?” நேரடியாகவே விஷயத்திற்கு வந்திருந்தான், அவளது கேலி வினவலை முற்றிலும் நிராகரித்து.

சட்டென சக்தியின் முகம் சுருங்கிவிட, “எதைடா?” என எதிர் கேள்வி கேட்டாள் அறியாதது போல்.

“இப்போ நீ அவர்கிட்ட பேசுனியே…”

“அது சும்மா அவன் கூட எப்பவும் போடுற விளையாட்டுச் சண்டை” என்றாள் கட்டாயச் சிரிப்போடு.

“ஓ, நீங்கெல்லாம் விளையாட்டுக்குப்போடுற சண்டையில அடுத்தவனோட உயிரை மொத்தமா உருவி எடுத்துடுவீங்களா?”

“எதுக்கு நிமலா இப்படி எல்லாம் பேசுற?”

“நீங்கிறதால இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன் அக்கா. வேண்டாம், உன்னை அந்த மாதிரி எல்லாம் பார்க்க முடியாதுன்னு தானே அவரை விட்டுப் போயிட்ட? இன்னும் உனக்கு என்னதான் வேணும்? பாதி உயிரா இருக்கிற மனுஷனை மொத்தமா சாய்ச்சுப் பார்க்கணும்னு ஆசையா?” அவனது கேள்வியில் சக்தியின் உயிரே துடித்துப்போனது.

அவள் தவிப்போடு, “என்னடா இப்படிப் பேசுற? நான் எப்படிச் செல்வாவுக்கு…”

“இந்தச் சப்பைக்கட்டு கட்டுறதை நிறுத்து முதல்ல. கடுப்பாகுது” கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் அமைதி காக்க, அதற்குள் சக்திக்குச் சொல்ல முடியாத துக்கம் தொண்டையை அடைத்துக் கண்ணீரைத் தோற்றுவித்தது.

அதற்குள் தன்னைத் தளர்த்தி, கட்டுப்பாட்டுக்குள் இழுத்திருந்த நிமலன், “உனக்கு என்னதான் வேணும்? அவர் அவர் வழியில்தானே போயிட்டு இருக்கார், எதுக்கு இப்படி வந்து வந்து தொந்தரவு பண்ற?”

“நான் தொந்தரவு பண்றேனா நிமலா? வாழ்க்கையில நம்ம கூட பதினெட்டு வருஷத்துக்கு மேல ஒருத்தர் டிராவல் பண்ணிட்டு, திடீர்னு ஒரு நாள் இல்லாம போகிறது எவ்வளவு வலிக்கும் தெரியுமா? ஏன், அதை அவன்கிட்ட கேட்கக் கூட எனக்கு உரிமை இல்லையா?”

“அப்படி உன் மேல பைத்தியமா இருக்கிறவரோட அன்பை வேஷம்னு சொல்றதுதான் உரிமையா?”

“அப்படி இருக்கிறவன்தான் என்னை ஹாஸ்பிட்டல்ல கூட வந்து பார்க்கலையா?”

“ஓ, உன்னைப் பார்க்கலைன்னு நீ கோவம் வேற படுவியா? உன்னை மட்டுமே பார்த்ததுனாலதான் இன்னைக்கு அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை எடுத்துட்டு இருக்காரு!” அவனது பேச்சில் சினம் வரப் பெற்றவளின் கண்ணீர், கோபத்தில் சூடேறியது.

“அசிங்கமா பேசாத நிமலன், எல்லாம் ஒரு அளவுதான்!”

“கோவம் வருதா? ஏன், உனக்குத் தெரியாது எது உண்மைன்னு? அவர் இப்படி இருக்கக் காரணமே நீதானே அக்கா!”

சக்தி, “அவன் சந்தோஷமாத்தான் இருக்கான், படம், காசு, நீங்கன்னு…”

அவளைப் பேச விடாமல் நிறுத்தியவன் உள்ளே அப்படி ஒரு கோபம். “நிறுத்திரு, அவ்வளவுதான் உனக்கு மரியாதை!” விரல் நீட்டி மிரட்டியவன் கையைக் கோபமாக அடித்துத் தட்டியவள், “கை நீட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத. அவனைச் சொன்னா உனக்கு எதுக்குடா கோவம் வருது? இது எங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனை, நான் அவனை என்ன வேணாலும் சொல்லுவேன். அதைக் கேட்கிற உரிமை உனக்கு இல்லை” எனப் பற்களைக் கடித்து எச்சரித்தாள் மாது.

“என்ன வேணாலும் சொல்லுவியா? உனக்காக அவர் மொத்தக் காசையும் தெண்டமா வீணாக்குனது தான் மிச்சம். ஒரு நாள் சந்தோஷம்கூட…”

“நில்லு… என்ன சொன்ன? எனக்காக அவன் காசை…”

“அட ஆமா, இது மேடம்க்குத் தெரியாதுல்ல!” இளக்காரமாகத் தாடியைத் தேய்த்தவன் இன்னும் நலிந்துபோன குரலில், “கொஞ்ச நேரம் முன்னாடி அவர்கிட்ட சொன்னியே, ஹாஸ்பிட்டல்ல பார்க்க வரல, ஒரு கால் இல்லை, அவர் படம், காசுதான் முக்கியம்னு… பணம்னு ஒன்னு இருந்தால்தானே அதைப்பற்றி யோசிக்க! மொத்தத்தையும் உன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கிற சுயநலவாதிக்குக் கொட்டியிருக்கார். என்ன புரியலையா? உன் மிஸ்டேக்கால பயர் ஆச்சுன்னு மயக்கம் போட்டு நீ போயிட்ட, அதுகுறித்த காசு யார் தருவா? இந்தப் படத்தோட சம்பளம், அடுத்த படத்தோட சம்பளம் மொத்தத்தையும் தூக்கிக் கொடுத்துட்டாரு அந்த மனுஷன்! அத்தனை நூறு கோடி சொத்து வச்சிருக்கேன்னு உன்கிட்ட வந்து நிற்கலையே. இவர் உனக்குச் சுயநலவாதின்னா, அப்போ உலகத்துல எவனும் நல்லவன் இல்லை!”

ஊசி முனையாய்க் குத்திய நிமலனின் வார்த்தைகளில், செயலாற்ற உடலாய்க் குறுகி நிற்க வேண்டிய நிலைக்குப் பெண்ணவள் தள்ளப்பட்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!