Skip to content
Post Views: 9,005
ஆறு மாதத்திற்கு பிறகு, சென்னையில் வேல்முருகன், ரோகிணி, செல்வதுரை, மீனா என மொத்த குடும்ப உறுப்பினர்களும் கூடியிருந்தனர். எல்லோரது முகத்திலும் சந்தோஷம் நிரம்பியிருந்தது.
அஞ்சனா கருவுற்றிருந்தாள். நேற்றுதான் மருத்துவமனை சென்று வந்து போன்மூலம், தேவநாதன் மனைவி கருவுற்றிருந்த செய்தியை எல்லோருக்கும் தெரிவித்திருந்தான்.
இதோ மறுநாளே குடும்பம் முழுவதும் வந்திருந்தது. பெரியவர்களின் பேச்சுக் குரலும், குழந்தைகளின் ஆர்ப்பாட்டமும் என வீடே களை கட்டியிருந்தது.
வேல்முருகனுக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. மகள் வந்து அவரது கையைப் பிடித்ததும் ஆனந்த பரவசத்தில், கண்கள் கலங்கி, அவளைக் கட்டிக்கொண்டார், மகிழ்ச்சியில். அஞ்சனாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது, அவரைப் பார்த்து.
Advertisement
தந்தை இதுவரை இப்படி எதற்கும் உணர்ச்சி வசப்பட்டு பார்த்ததில்லை. ஆதலால் அவளும் மௌனமாக நின்றிருந்தாள்.
வேல்முருகனுக்கு என்னவோ அஞ்சனாவை பொறுத்தவரை, இன்னமும் பச்சிளங்குழந்தை மாதிரிதான். ஆனால் அவளுக்கே ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என நினைத்துப் பார்க்கும் போது அவருக்கு ஆனந்தமாக இருந்தது.
அடுத்த நாளே தேவநாதன் குடும்பம் கிளம்பியிருந்தது. அஞ்சனாவின் பெற்றோர் ஒரு வாரம் இருந்து அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்து சீராட்டிவிட்டுதான் சென்றிருந்தனர்.
Advertisement
அஞ்சனாவும் ஆரோக்கியமாக இருந்ததால் யாரையும் எதிர்பார்க்காமல், அவளது தேவைகளை அவளே செய்துகொண்டாள். அம்மா அப்பா அல்லது மாமனார் மாமியார் என்று ஒருத்தர் மாற்றி ஒருத்தர் யாராவது அவளுடன் இருந்து கொண்டனர். அவர்கள் உடன் இல்லாத சமயங்களில் தேவநாதன் வந்து தங்கிக் கொள்வான்.
Advertisement
சில சமயங்களில் வொர்க் அட் ஹோம் எடுத்து திண்டிவனத்திற்கு சென்று, அங்கிருந்தே வேலை செய்வாள். இப்படியாக அவளது பிரசவ காலமும் நெருங்கியிருந்தது.
இரண்டு வீட்டாரும் மனமகிழ்ச்சியுடன் ஒத்துமையாக நின்று அவளது சீமந்த வைபவத்தை பெரிய மண்டபமாக பிடித்து கோலாகலமாக நடத்தியிருந்தனர்.
பிரசவம் சென்னையில் அவள் ஆரம்பத்தில் இருந்து பார்க்கும் அதே மருத்துவரிடமே பார்க்கலாம் என அஞ்சனாவும் தேவநாதனும் முடிவு செய்ததால் குடும்பத்தினரும் ஏக மனதாக ஒத்துக்கொண்டனர்.
Advertisement
இரண்டு குடும்பத்திற்கிடையே இருந்த விரிசல்கள் எல்லாம் சரியாகிவிட்டதா என்றால் அது இன்னும் சந்தேகம்தான். சொல்லிக்கொள்ளும்படி ஒட்டுதல் இல்லையென்றாலும், சண்டை சச்சரவுகள் இல்லாமல் சென்றது.
அதுவே பெரிய விஷயமாக இருந்தது. இன்னும் வேல்முருகன் மகளின் புகுந்த வீட்டிற்கு வருகை தரவில்லை. ஆனால் செல்வதுரை குடும்பத்தினர் அதையெல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. அஞ்சனாவுக்கு ஐந்தாவது மாதம் தாய் வீட்டில் வைத்து பூ முடிக்கும் போது, அவளுடைய புகுந்த வீட்டினர் எல்லோரும் வந்திருந்து சிறப்பாகவே செய்துவிட்டு சென்றிருந்தனர்.
வேல்முருகன் மீனாவைத் தவிர ஒரளவு எல்லோருடனும் சகஜமாக பழக ஆரம்பித்திருந்தார். மீனா வேல்முருகனிடம் பேசவில்லையே தவிர ரோகிணி லட்சுமி என எல்லோரிடம் நன்றாகவே பேசி பழகினார்.
அஞ்சனா தாய்மையடைந்ததில் இருந்து, மருமகளிடம் முன்பு போலவே அன்பாக நடந்துகொண்டார். காஞ்சனாவும் அஞ்சனாவுடன் மனம் விட்டு பேச தொடங்கியிருந்தாள்.
கார்த்திக் அவளை மிரட்டியிருந்தான். ‘’வீணான விரோதத்தை மனசுல வச்சிட்டு, வீட்டுல எல்லார் கிட்டயும் நீ கெட்ட பேர் எடுத்துடாத. அம்மாவே அவங்க கோவம் எல்லாம் மறந்து அஞ்சனாகிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிட்டாங்க. இன்னமும் நீ அந்த பொண்ணோட விரோதம் பாராட்டினா…. அம்மா அப்பா மட்டுமில்ல, தேவாவும் உன்னை மதிக்க மாட்டான். பார்த்துக்கோ. இதுவரைக்கும் இந்த வீட்டுல மூத்த மருமகள்னு மரியாதையோட எல்லோரும் உன்னை மதிக்கிறாங்க. அந்த மரியாதைய நீயே கெடுத்துக்காத…” என அவளை பயமுறுத்தியிருந்தான். அது கொஞ்சம் வேலை செய்தது.
இப்படி ஒவ்வொருத்தரும் தங்களது பழைய சஞ்சலங்களிலிருந்து வெளிவரவும், வெளிவந்தும் சுமூகமாக வாழ ஆரம்பித்திருந்தனர்.
படியேறி மேலே வருவதற்குள் அஞ்சனாவுக்கு மூச்சு வாங்கியது. அவள் பின்னாடியே காரை பார்க் செய்துவிட்டு ஒடிவந்தான் தேவநாதன்.
“காரை பார்க் பண்ணிட்டு வரதுக்குள்ள என்ன அவசரம்” என அவளது கையைப் பிடித்து அழைத்துகொண்டு வீட்டிற்குள்ளே வந்தான். உள்ளே வந்ததும், ஹாலில் இருந்த சோபாவிலேயே, காலை நீட்டி உட்கார்ந்துவிட்டாள். படியேறி நடந்து வந்தது, காலெல்லாம் வலித்தது.
மீனா பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். “என்ன செய்யுது அஞ்சு’’ என.
“ஒன்னுமில்ல த்தை….. படியேறி நடந்து வந்தது, டையர்டா இருந்தது”.
ரோகிணி அவளுக்கு குடிப்பதற்காக தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்.
“அம்மா சில்லுனு ஜூஸ் சாப்பிடனும்போல இருக்கு. தொண்டையெல்லாம் வறட்சியா இருக்குமா…”
“ஜூஸ் தரேன்டா. ஆனால் ஜஸ் இல்லாம தரேன். சலி வச்சிடப் போகுதுமா….”
“ப்ளீஸ் மா. இந்த ஒரு தடவை மட்டும். நாக்கெல்லாம் வறண்டு போயிருக்கு”.
“அத்தை அவளுக்கு ஜஸ் இல்லாம குடுங்க. தினமும் இப்படியே ஏதாவது சொல்லிதான் ஜஸ் போட்டு குடிச்சுட்டு அப்புறம் இராத்திரியெல்லாம் தும்மிட்டு உட்கார்ந்திருப்பா…” என முறைத்தான் மனைவியை
அவனை திரும்பி முறைத்தவள், “போங்க… எனக்கு ஜூசே வேணாம்” என முறுக்கிக் கொண்டாள்.
மீனா, “அவள்தான் ஆசையா கேட்கிறாள் இல்ல, இன்னைக்கு ஒருநாள் தான, குடேன் ரோகிணி…”
“அம்மா நீயுமா…? இவளை நம்பாத. நாளைக்கும் இதே மாதிரி ஏதாவது டிராமா பண்ணுவா…”
“விடுறா… பிள்ளைதாச்சி…. ஆசையா கேட்கிறா. அப்புறம் கால் வீங்கிடப்போகுது…”.
அஞ்சனா திரும்பி கணவனை பார்த்து உதட்டை சுழித்து சிரித்தாள். அவளை நெருங்கி அவளது தலையில் செல்லமாக கொட்டியவன் “எல்லாரையும் மயக்கி கைக்குள்ள போட்டு வச்சிருக்கடி…” என்றான் சிரித்துகொண்டே.
“டேய் தலையில கொட்டாத டா. அவள் என்ன தாயில்லா பிள்ளையா…” என மீனா தேவநாதனைப் பார்த்து அதட்டினார்.
அவன் மீனாவின் அதட்டலில் பே…. என விழித்து நின்றான்.
தேவா பாவமாக பார்த்து முழித்ததில் அஞ்சனாவுக்கு சிரிப்பு பொங்கியது. வாய்விட்டு ஹா… ஹா… என சிரித்தாள்.
“இந்தா.. நெறமாசம் பிள்ளைதாச்சி பொம்பளை, இப்படி சிரிக்ககூடாது. கண்ணுபடும். எங்கயாவது பிடிச்சிக்க போகுது…” என லட்சுமி அதட்டினார்.
“ம்ம்… அப்படி சொல்லுங்க பாட்டி. இப்ப என்னடி பண்ணுவ…?” என அவளுக்கு பழிப்பு காட்டி நின்றான். “நான் எங்கம்மாகிட்ட திட்டு வாங்கினா உனக்கு அவ்வளவு சந்தோஷமாடி…” என அவளை காது பிடித்து திருகினான் விளையாட்டாக.
வேல்முருகனும் சிரிப்புடன் இதையெல்லாம் பார்த்துகொண்டுதான் உட்கார்ந்திருந்தார்.
ஒன்பதாவது மாதம் சீமந்தம் முடிந்ததும் பெண்ணுடனே வந்து தங்கிவிட்டனர், வேல்முருகன் குடும்பத்தார்.
இன்று ஹாஸ்பிட்டலில் செக்கப் இருந்ததால், தேவநாதன் நேற்றுதான் திண்டிவனத்தில் இருந்து வந்திருந்தான். அவன் வரும்பொழுது அவனுடன் மீனாவும் கிளம்பி வந்திருந்தார்.
மீனா, “டாக்டர் என்ன சொன்னாங்க தேவா…..?”
“ஸ்கேன் பண்ணாங்க மா. பாப்பா நல்லாயிருக்கு. குறிச்சு குடுத்த டேட்ல வந்து அட்மிட் பண்ண சொல்லியிருக்காங்க மா”.
மீனா மகன் மருமகளுடன் அமர்ந்து டாக்டர் சொன்னதைப் பற்றி கேட்டு, அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இதோ மருத்துவர் குறித்த கொடுத்த நாளில் அஞ்சனாவைக் கொண்டுவந்து மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். பிரசவத்திற்காக செல்வதுரையின் மொத்த குடும்பமும் புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தனர்.
அஞ்சனாவை அட்மிட் செய்த அன்று இரவிலிருந்து அவளுக்கு வலியெடுக்க ஆரம்பித்திருந்தது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த வலி அடுத்தடுத்து சிவியராக ஆரம்பித்திருந்தது.
பிரசவ அறைக்குள் செல்வதற்கு முன்னமே எல்லோரையும் ஒரு கதி கலக்கி சென்றிருந்தாள்.
வேல்முருகன் சிறு குழந்தைபோல் உட்கார்ந்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தார் மகளின் கதறலில். அவரால் அஞ்சனா கதறுவதை பார்க்கவே முடியவில்லை. முகத்தை கைகளால் மூடிக்கொண்டு சிறுகுழந்தைபோல் அழுது கொண்டிருந்தார்.
ரோகிணிக்கு மகளின் பிரசவ வலி வேதனை ஒரு பக்கம் என்றால், கணவரின் இந்த பரிணாமம் அவரை கலங்க செய்தது.
தேவநாதன் தைரியமாக இருக்க முயன்றாலும், அஞ்சனாவின் கதறல் அவனை பயம் கொள்ள செய்தது. அவனும் பயத்தில் முகமெல்லாம் வெளிறிப் போய் செய்வதற்று நின்றிருந்தான்.
இது முதல் பிரசவம் என்பதால் வலி அதிகமாகதான் இருக்கும் என மீனாதான் அவனை தேற்றினார். ஏழு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேவநாதன் அஞ்சனாவின் மகன் தாயின் கருவிலிருந்து இந்த பூவுலகில் ஜனனம் செய்திருந்தான்.
குழந்தை பிறந்ததை அறிந்து எல்லோருமே ஒரு வித பரவசத்தில் இருந்தனர். நர்ஸ் குழந்தையை எடுத்து வந்து “யார் குழந்தையை வாங்கறீங்க…?” என கேட்ட போது, மீனா எழுந்து சென்று தனது கைகளில் பேரனை ஏந்தி மார்போடு அணைத்து கொண்டார். அவரைச் சுற்றி எல்லோரும் வந்து நின்று குழந்தையை எட்டி எட்டி பார்த்து நின்றனர்.
பன்னீர் ரோஜா நிறத்தில், பட்டு போன்ற மேனியுடன், கைவிரல்களை இறுக்க மூடிக்கொண்டு, உதடு பிதுக்கி, கண் திறப்பதும் மூடுவதுமாக இருந்த குழந்தையை பார்க்க பார்க்க எல்லோருக்கும் ஆனந்தம்.
என்னவோ பேரனை பார்த்த பரவசத்தில் தன்னை மறந்து சட்டென்று வேல்முருகன் அவனை தூக்குவதற்காக கையை நீட்டிவிட்டார் மீனாவை நோக்கி.
எல்லோரும் அவரை ‘’ஆவ்’’ என்று ஆச்சர்யமாக பார்த்தனர். இத்தனை நாள் மீனா இருந்த பக்கம்கூட திரும்பமாட்டார். இன்று என்னவென்றால் மீனாவின் பக்கத்தில் நின்றது மட்டுமில்லாமல், பேரனை அவரிடம் இருந்து வாங்குவதற்காக கையையும் நீட்டியிருந்தார் மீனாவை நோக்கி.
மீனாவிற்கும் வேல்முருகனின் செயலில் உள்ளம் நெகிழ்ந்திருந்தது. மீனாவே வேல்முருகனிடம் ‘’நீங்க உட்காருங்க ….ண்ணே, நான் உங்க மடியில கொடுக்கறேன் என, வேல்முருகன் உட்கார்ந்ததும், அவரது மடியில் பேரனை பத்திரமாக எப்படி பிடித்துகொள்ளவேண்டும் என காட்டிகொடுத்தார்.
வேல்முருகன் பேரனை மடியில் தாங்கியதிலிருந்து, அவரது பார்வை மொத்தமும் பேரனின் மேல்தான். அவரின் பக்கத்திலேயே தேவநாதனும் அமர்ந்து மகனை பார்த்து கொண்டிருந்தான்.
வேல்முருகன், “நீங்க தூக்கறீங்களா… மாப்பிள்ளை” என தேவநாதன் “இல்ல மாமா. எனக்கு பயமாயிருக்கு…” என்றுவிட்டான்.
அடுத்த சில மணிநேரங்கள் கழித்து, அஞ்சனாவை அறைக்கு அழைத்து வந்திருந்தனர். சுகப்பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என கூறியிருந்தார்கள்.
அன்று இரவு ரோகிணியும் தேவநாதனும் மட்டும் அஞ்சனாவுடன் ஹாஸ்பிட்டலில் இருந்துகொண்டனர். மற்ற எல்லோரும் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
தேவநாதன் மனைவியின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தான். குழந்தை அஞ்சனாவுக்கு பக்கத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.
ரோகிணியும் அங்கேயே விசிட்டருக்காக இருந்த படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
தேவநாதன் மட்டும் உறங்காமல் மனைவியின் பக்கத்திலேயே அமர்ந்து அஞ்சனாவையும், மகனையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க தூங்கலையா…..?”
“தூக்கம் வரலமா…. நீ தூங்கு”.
மனைவியின் தலையை கோதிவிட்டுக்கொண்டே அவளது பக்கத்தில் சேரை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தான்.
“ரொம்ப பயமுறுத்திட்டனா…?”
“ம்ம்… நீ அப்படி கதறுனதும், எனக்கு கஷ்டமாயிடுச்சு. ரொம்ப வலிச்சுதா…?” என்றான் அவளது நெற்றியில் குனிந்து முத்தமிட்டுக்கொண்டே.
“ம்ம்…. உயிர் போய்டுச்சு”.
பொறுமையாக அவளையே பார்த்துகொண்டு, அவளது முகத்தை வருடிவிட்டான்.
“ஏன் இப்படி பார்க்கறீங்க…?”
“ஒன்னுமில்ல. இப்ப எப்படியிருக்கு. வலியிருக்கா…?”
இல்லை என தலையசைத்தாள். குழந்தையின் அசைவில் இருவரும் அவனைத் திரும்பி பார்த்தனர்.
“தம்பிய தூக்குனீங்களா…?”
“ம்கூம். தூக்கனும்னு ஆசையாயிருந்தாலும், பயமாயிருக்கு. அவனோட உடம்பு வழவழன்னு இருக்கறத பார்த்ததுமே, பயமாயிடுச்சு.
“பொறந்த குழந்தை அப்படிதான் இருக்கும்…”
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா…? இன்னிக்கு நம்ம வீட்ல ஒரு அதிசயம் நடந்தது” என மீனாவும் வேல்முருகனும் பேசிக்கொண்டதை மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
“நம்மால முடியாதத நம்ம பையன் வந்து சாதிச்சுட்டான்…” என மகனைப் பார்த்து சிரித்தாள் அஞ்சனா. உண்மைதான் என தலையசைத்த தேவநாதனுக்கும் மகனின் மீதுதான் பார்வை.
தாய் தந்தையின் பாஷை புரிந்ததுபோல அந்த நிசுவும் கைகளை ஆட்டி உடலை வளைத்தது தூக்கத்திலேயே.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைப் போல, காலம் எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. குற்றம் குறை இல்லாத மனிதர்களே இல்லை. அதை அனுசரித்து விட்டுப்பிடித்து நடப்பதில்தான் வாழ்வு சிறக்கிறது.
உறவுகள் கூட அப்படிதான். ஏற்றத் தாழ்வுகளுடன் எல்லோரையும் அரவணைத்து வாழ்வதிலே இன்பம் நிலைக்கிறது.
ஊடலும் கூடலும், காதலர்களுக்கு, கணவன் மனைவிக்கு, நட்புகளுக்கு மட்டுமில்லை, உறவுகளுக்குகூட பொருந்தும்போல.
வசதி வாய்ப்புகள் இருந்தாலும், உறவுகளுடன் கூடி களித்து வாழும் இன்பமே தனியில்லையா…?
இத்தனை பிரச்சினைகளையும், சண்டை சச்சரவுகளையும் தாங்கி குடும்பத்தை ஒன்று சேர்த்த தம்பதியருக்கு, இனி வரும் காலம் அவர்கள் வாடாமல் இருக்க வாழ்க்கை வசந்தங்களை பரிசளிக்கட்டும்.
சுபம்.
error: Content is protected !!