Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகம் சேர்ந்தாய் அதிசயனே

ASA 15

அகம் 15

கடற்கரையில் மணப்பந்தல் அமைத்து திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராகவி ஒருமுறை இப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று நிகர்வேலனிடம் கூறியிருந்தாள். அவளது ஆசையை நிறைவேற்றவே, ஏதாவது பெரிய திருமண மண்டபத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற பெரியவர்களின் பேச்சை மீறி இந்த ரெசார்ட்டில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தான் அவன்,



Advertisement

இங்கு வந்த ஆரம்பத்தில் ஒருமுறை அதைப்பற்றி ராகவி நயந்தினியிடம் கூறியிருக்க, “வாவ் அக்கா, கடல் பக்கத்தில் கல்யாணமா? இப்படி பெரிய பெரிய ஆளுங்க தான் கல்யாணம் செய்வாங்கன்னு கேள்விபட்டிருக்கேன். நேரில் பார்த்ததேயில்லை.” என்று நயந்தினி வியப்பாக பேசியவள்,

Advertisement

‘இவங்களும் பெரிய ஆளுங்க தானே, அதிலும் இந்த ரெசார்ட்டை வாடகைக்கு கூட எடுக்க வேண்டாம், சொந்தமா இருக்கப்போ இந்த கல்யாணத்தை இங்க வச்சு நடத்தறாங்க, நம்ம வீட்டுப் பக்கமெல்லாம் ஒரு மண்டபம் பார்க்கவே பட்ஜெட் இடிக்குதுன்னு புலம்புவாங்க,” என்று மனதிற்குள் பேசிக் கொண்டாள்.

Advertisement

ஆனாலும் இதுபோல என் திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்? என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் நினைத்தது போல் தான் இன்று அவளுக்கும் இதே இடத்தில் திருமணம் நடக்கப் போகிறது. ஆனால் அதில் துளி கூட மகிழ்ச்சியில்லாமல் மணமேடையில் விதியே என்று அமர்ந்திருந்தாள். 

Advertisement

அவளை அழைத்து வந்து தன்னருகில் அமர வைத்ததிலிருந்து அடிக்கடி நிகர்வேலன் அவள் முகம் பார்த்தான். அந்த இரவிற்குப் பிறகு அவளை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. “நயனிக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதம் தான்,” என்று ராகவி வந்து கூறியிருந்தாலும், அவனுக்கு அவளை நேருக்கு நேராய் அவளது முகம் பார்த்து கேட்க வேண்டும், அப்போது தான் அவனுக்கு மனதிற்கு நிம்மதியாக இருக்கும்,

ஆனால் வந்ததிலிருந்து அவன் முகத்தை அவள் ஏறெடுத்து பார்க்கவில்லை. அவளது முகத்தில் மலர்ச்சியும் இல்லை. இந்த திருமணம் நடக்கும் முறை குறித்து அவள் இப்படியிருக்கிறாள் என்று அவன் தன் மனதை சமாதானப்படுத்திக் கொள்ள நினைத்தாலும், மனம் வெகுவாக சமாதானம் ஆக மாட்டேன் என்றது.

மாங்கல்யம் சூடுவதற்கு முன்பான சடங்குகள் முடிந்து புரோகிதர் மணமகனை எழுந்து நிற்க சொல்லி கையில் பொன் சங்கிலியுடன் சேர்த்த மாங்கல்யத்தை நிகர்வேலனின் கையில் கொடுத்தார். கெட்டிமேளம் முழங்க இன்னொரு மேடையில் மாதேஷ் ராகவியின் கழுத்தில் மகிழ்ச்சியுடன் மாங்கல்யத்தை சூட்ட, அவளும் தலைகுனிந்து மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டாள்.

ஆனால் நிகர்வேலன் மாங்கல்யத்தை சூட்டாமல் நயந்தினியை அப்படியே பார்த்தப்படி நின்றிருந்தான். அவனது செயலில் பெரியவர்களெல்லாம் பதட்டமாகிவிட்டனர். நயந்தினி கட்டாயத்தின் பேரில் தலைகுனிந்து அவன் சூட்டும் மாங்கல்யத்தை ஏற்க தயாராக தான் இருந்தாள். ஆனால் அப்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்றதும், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அதற்குள், “என்ன வேலா, எதுக்கு தயக்கம், தாலியை போடு,” என்று நாகராஜன் கூற, அதற்குள் ஆளாளுக்கு ஏதேதோ அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத நிகர்வேலன், அவனை தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நயந்தினியிடம், “உனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதமா?” என்று கேட்க, அந்த கேள்வியில் எங்கே மகள் விருப்பமில்லை என்று சொல்லிவிடுவாளோ என்று நளினிக்கு இன்னுமே பதட்டமாகிவிட்டது

நயந்தினி நினைத்தால் ஒரு நொடியில் சம்மதமில்லை என்று சொல்லி அந்த மணமேடையிலிருந்து அவள் எழுந்து செல்ல யாரும் தடை சொல்லமாட்டார்கள். ஆனால் நளினியின் மிரட்டல் மட்டுமில்லை. அந்த நேரத்திலும் அவளிடம் அனுமதி கேட்கும் நிகரின் செயலும் அவளை சம்மதமென்று தலையசைக்க வைத்தது. அதில் மகிழ்ந்து போனவன் அதன்பின் எந்த தயக்கமும் இல்லாமல் அவள் கழுத்தில் பொன் சங்கிலியோடு இணைந்த மாங்கல்யத்தை சூடி அவளை தன் இணையாக்கிக் கொண்டான்.

விடியற்காலையே எழுந்து கொண்டதால் சிறிதுநேரம் ஓய்வெடுத்தால் மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு கலந்துக் கொள்ளும்போது கஷ்டம் தெரியாது என்று மணமக்களை ஓய்வெடுக்க சொல்லி கூறினர். ஆனால் ஜோடியாக இல்லை தனித்தனியாக தான், நயந்தினி முன்பு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கே சென்றுவிட்டாள். அவளுடன் அவளின் சகோதரிகளை துணையிருக்க சொல்லி நளினி அனுப்பி வைத்தார்.

ஆனால் ராகவி, மாதேஷ், நிகர் எல்லாம் சிறிதுநேரம் பேசிவிட்டு பின் ஓய்வெடுப்பதற்கு செல்வதாக இருந்தவர்கள், ஒரு அறையில் கூடியிருந்தனர். அப்போது அங்கு சாகரி வந்தவர், “என்ன எல்லாம் பேசிட்டு இருக்கீங்க, கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்தா தானே சாயந்தரம் முகம் சோர்வில்லாம தெரியும்,” என்றவர்,

“இந்தா ராகவி, இது சாயந்தரம் நீ போட்டுக்க வேண்டிய டிரஸ், நகையெல்லாம் இருக்கு, பியூட்டிஷியன் 4 மணிக்கெல்லாம் வந்துடுவாங்க, போய் உன்னோட ரூமில் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு,” என்றவர், 

“நீங்களும் ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை.” என்று மாதேஷிடமும் கூறினார்.

பின், “ஆமாம், நயனி உங்களோட இல்லையா?” என்று கேட்டவர், 

“அவளுக்காக டிரஸ்ஸை கொடுக்கணும், அவளும் உங்களோட இருக்கான்னு நினைச்சேனே,” என்று வாய்விட்டு கூறியவர்,

“ரோஹன் இதை நீ கொண்டு போய் கொடுத்திட்றீயா?” என்று மகனிடம் கேட்கவும்,

“சரி ம்மா,” என்று அவன் வாங்கியதும், அவர் சென்றுவிட்டார்.

பின் ராகவியும் மாதேஷும் அவரவர் அறைக்கு சென்றுவிட, அன்னை கொடுத்த வேலையை செய்ய தயாரக இருந்தவனிடம், “ரோஹன், உனக்கு தனியா போக கஷ்டமா இருக்கும் தானே, நானும் உன்னோட துணைக்கு வரேன்.” என்று நிகர்வேலன் கூற,

“மாம்ஸ், உங்களுக்கே இது ஓவரா தெரியல, உங்க ஆளை பார்க்கணும்னா அதை நேரா சொல்லுங்க, அதைவிட்டு என்னை சின்ன பையனா ட்ரீட் செய்யாதீங்க, இப்போ என்னோட வரப் போறீங்களா? இல்லை நீங்களே கொண்டு போய் கொடுக்கறீங்களா?” என்று ரோஹன் கேட்க,

“ரெண்டுப்பேரும் போவோம் வா,” எனறு நிகர் அவனுடன் சென்றான்.

இங்கு அறையிலிருந்த நயந்தினியோ எப்போதும் போல் எங்கேயோ பார்த்தப்படி சோகமே உருவாக அமர்ந்திருக்க, அவளின் சகோதரிகள் இருவருக்கும் அவளை அப்படி பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அவர்களுக்கும் தான் விக்கியை பிடிக்காது. ஆனால் அதற்காக அன்னை இப்படி ஒரு முடிவெடுத்திருக்க வேண்டாமென்று தான் அவர்களுக்கும் தோன்றியது.

ஆனால் இந்த திருமணம் நடந்து முடிந்த பின்பும் தமக்கை இப்படி இருப்பது அவர்களுக்கு கவலை அளிக்கவே, “அக்கா, நிகர் மாம்ஸ் ரொம்ப நல்லவங்க, பார்த்தீங்கல்ல இந்த கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பமான்னு கேட்டு தான் கல்யாணம் செய்துக்கிட்டாங்க, அதுபோல உங்க ட்ரீம்ஸ் எல்லாம் அவங்க நிறைவேத்தி வைப்பாங்க, உங்க லைஃப் ரொம்ப சந்தோஷமா இருக்கும் க்கா,” என்று சமாதானம் கூற, ஆனால் அவள் அதை காதில் வாங்கினாளா? என்று தான் தெரியவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே நளினி அறைக்குள் வந்தவர், மகளிடம் சென்று, “எங்க எல்லோர் முன்னாடியும் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயமா இருந்தது. இப்போ தான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, உனக்கு என்மேல கோபம் இருக்கும், அம்மா நமக்கு இப்படி இரு அநியாயத்தை செய்துட்டாங்களேன்னு கூட நீ நினைப்ப, ஆனா நிகரோட நடந்த இந்த கல்யாணம் உனக்கு நல்லதுன்னு நீ புரிஞ்சிக்கும்போது இந்த அம்மா மேல உள்ள கோபமெல்லாம் போயிடும்,” என்று கூறியவர், ஆதரவாக அவள் மீது கை வைக்கப் போக, அதை தட்டியவளோ,

“நீங்க சொல்ற மாதிரி நான் நிகரோட சந்தோஷமான வாழ்க்கையே வாழ்ந்தாலும் உங்களை மட்டும் கடைசிவரை மன்னிக்க மாட்டேன். நீங்க மிரட்டினதை நான் இப்போ உங்களுக்கு ஞாபகப்படுத்தறேன் கேட்டுக்கோங்க,

நீங்க சொன்னமாதிரி இந்த ரெசார்ட்ல இருந்து நிகரோட மனைவியா தான் வெளியே போகப் போறேன். அதாவது நிகரோட மனைவியா மட்டும் தான், இனி உங்களுக்கு இவங்க ரெண்டுப்பேர் மட்டும் தான் பொண்ணுங்க, உங்களுக்கு மூத்தப் பொண்ணு ஒருத்தி இருந்தா என்பதை சுத்தமா மறந்திடுங்க, எங்க நான் உங்களை விட்டு முழுசா விலகிடுவேனோன்னு நினைச்சு தானே என் எதிர்கால கனவுகளை மண்ணோடு மண்ணாக்கிட்டு என்னை மிரட்டி எனக்கு இந்த கல்யாணத்தை நடத்தி வச்சீங்க, இப்போதும் அதுதான் நடக்கப் போகுது. உங்க 3 பேர் வாழ்க்கையில் இனி நான் இல்லை. இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் தண்டனை.” என்று அவள் பேசிய வார்த்தையில் நளினி அதிர்ந்து போனவர்,

“அதான் சொன்னேனே, நீ இப்போ கோபமா இருக்க, கோபத்தில் இப்படியெல்லாம் பேசற, கொஞ்ச நாளில் இந்த கோபமெல்லாம் போய் நிதானத்துக்கு வந்துட்டீன்னா எல்லாம் சரியாகிடும்,” என்றார்.

“அப்படி நடக்கும்னு தப்பு கணக்கு போடாதீங்க, அதுமட்டும் என்னைக்கும் நடக்காது.” என்றாள் அவளும் உறுதியாக,

அப்போது கதவு தட்டப்படவே, ‘யாராக இருக்கும்? தாங்கள் பேசியதை  கேட்டிருப்பார்களா?’ என்று நினைத்து நளினி பதறியவர்,

“கதவு திறந்து தான் இருக்கு உள்ள வாங்க,” என்று கூற,

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ரோஹன், “ஆன்ட்டி, இதை அம்மா கொடுக்க சொன்னாங்க, இது நயனி ஈவ்னிங் போட வேண்டியது. 4 மணிக்கெல்லாம் பியூட்டிஷியன் வந்துடுவாங்க, அதுவரைக்கும் நயனியை ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க,” என்று கொண்டு வந்ததை அவரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

‘நல்லவேளை அவர்கள் பேசியதை ரோஹன் கேட்கவில்லை.” என்று நினைத்து நளினி நிம்மதியடைந்தார்.

ஆனால் அவர்கள் பேசியதை ரோஹன் மட்டுமல்ல, நிகர்வேலனும் கேட்டது அவருக்கு தெரியவில்லை. அவர் உள்ளே வந்தபோது சரியாக கதவை சாற்றாமல் வந்ததால் அவர்கள் வந்தபோது உள்ளே நயந்தினி பேசியது அவனுக்கு நன்றாகவே கேட்டது. அவள் சம்மதத்துடன் அவளை மனைவியாக்கிக் கொண்டதில் காலையிலிருந்து உற்சாகத்துடன் திரிந்து கொண்டிருந்தவனுக்கு நயந்தினியை மிரட்டி தான் நளினி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார் என்ற கசப்பான உண்மையை ஜீரணிக்க அவனுக்கு சிரமமாகவே இருந்தது. உள்ளே சென்று அவளது முகத்தை பார்க்கத் தோன்றாமல் பக்கக்திலிருந்த அவனது அறைக்கு சென்றுவிட்டான்.

அடுத்து ரோஹனும் நேராக நிகர்வேலனின் அறைக்கு செல்ல, நிகர்வேலன் அங்கு சோஃபாவில் கவலையாக அமர்ந்திருந்ததை பார்த்தவன், “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல நிகர் மாம்ஸ், ஆரம்பத்திலிருந்தே நயனிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லைன்னு எனக்கு தோனிட்டே இருந்தது. எனக்கென்னமோ நயனியை யாரையோ காதலிக்கிறான்னு தோனுது,” எனறதும், நிகர்வேலன் அதிர்ச்சியாக ரோஹனை நிமிர்ந்து பார்த்தவன், 

“இதை ஏன் முன்னாடியே சொல்லல நீ.” என்று கேட்க,

“இது என்னோட கெஸ் தான் மாம்ஸ், இதைப்பத்தி ராகவி அக்காவிடம் சொன்னதுக்கு அவ அதை பெருசாவே எடுத்துக்கல, இருக்க பிரச்சனையில் புது பிரச்சனையை கிளப்பாதன்னு என்னை அமைதியாக்கிட்டா, யாரிடமும் குறிப்பா உங்களிடம் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா, நானும் அதனால அமைதியா இருந்துட்டேன். கல்யாண மேடையில் நீங்க சம்மதம் கேட்டு நயனி சம்மதம் சொல்லவும் நான்தான் தேவையில்லாம யோசிச்சிட்டேனோன்னு நினைச்சேன். ஆனா இப்போ நயனி பேசினதை கேட்டதில் நளினி ஆன்ட்டி அவளை மிரட்டியிருக்காங்கன்னு நல்லாவே தெரியுது. அப்படி மிரட்டி தான் நயனி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கான்னா, அப்போ நான் கெஸ் செய்தது உண்மையா இருக்குமோன்னு தோனுது, விக்கி என்கிற பையனை நயனி காதலிக்கிறான்னு நினைக்கிறேன்.” என்ற ரோஹன்,

“இப்போ என்ன செய்யப் போறீங்க மாம்ஸ்,” என்று கேட்க, நிகர்வேலனால் அதற்கு என்ன பதில் கூற முடியும்? 

“என்னை கொஞ்சம் தனியா விடு ரோஹன், யாராவது கேட்டா தலைவலி ரெஸ்ட் எடுக்கிறேன். என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு சொல்லு, அப்புறம் ராகவி சொன்னது தான், என்னிடம் சொன்னமாதிரி எல்லோரிடமும் இதையோ, நளினி ஆன்ட்டி நயாவை மிரட்டினிதையோ சொல்லாத, என்ன செய்யணும்னு நான் யோசிச்சு முடிவெடுக்கிறேன்.” என்று ரோஹனிடம் கூற,

“பிராமிஸா இதை வேற யாரிடமும் நான் சொல்ல மாட்டேன் மாம்ஸ். என்னைக் கேட்டா நயனிக்கு நீங்க தான் பொருத்தம். அப்படியே விக்கி என்கிற பையனை அவ காதலிச்சிருந்தாலும், அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பா இருக்கும்னு தோனுது. அதனால எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடுங்க,” என்று சொல்லிவிட்டு  அவன் சென்றதும், உண்மையிலேயே நிகர்வேலனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. மூளை அந்தநேரம் வேலைநிறுத்தம் செய்திருந்தது.

இது யூகம் தான் என்று ரோஹன் சொன்னதுபோல் அது யூகமாகவே இருக்க வேண்டுமென்று தான் நினைத்தான். இதைப்பற்றி கண்டிப்பாக நயந்தினியிடம் பேச வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டான்.

இதனால் மாலை நடந்த வரவேற்பில் அவனும் சரி நயந்தினியும் சரி கடமையென கட்டாயமாக புன்னகையை வரவழைத்து கொண்டு கலந்து கொண்டனர். மாதேஷ், ராகவியிடமிருந்த மலர்ச்சி இவர்களிடத்தில் சுத்தமாக இல்லை. அதிலும் நிகர்வேலன் மனதிற்கு பிடித்த பெண்ணை மணந்திருக்கிறான். ஆனால் அந்த மகிழ்ச்சி அவனிடத்தில் துளி கூட இல்லை.

அன்று இரவு அந்த ரெசார்ட்டிலேயே இரு ஜோடிகளிக்கு முதலிரவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இருவரின் விருப்பத்துடன் நடந்த திருமணம் என்பதால் மாதேஷ், ராகவிக்கு அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை இனிதே துவங்கியது. ஆனால் நிகர்வேலனுக்கு அறைக்கு போகவே தயக்கம். தாத்தா கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம் என்று தான் அந்தநேரம் அவனுக்கு தோன்றியது. இனி எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக சந்திக்க வேண்டுமென்பதை உணர்ந்ததால் அவர்களுக்கான அறைக்குள் சென்றான்.

அவன் போகும்போது நயந்தினி ஏற்கனவே உள்ளே கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்த உடன் அவள் எழுந்திருக்க, “இருக்கட்டும் பரவாயில்லை நயா,” என்றவன், 

அவள் மீண்டும் அமர்ந்ததும், அவள் அருகில் அமர்ந்தவன், “உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லையா? உன்னோட அம்மாவின் மிரட்டலுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியா?” என்று எடுத்ததுமே கேட்க, அந்த கேள்வியில் அதிர்ந்தவள், ஆமாம் என்பதுபோல் தலையசைத்தாள்.

“விருப்பமில்லைன்னா அதை என்னிடம் வெளிப்படையா சொல்லியிருக்கலாம், நான் கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன் நயா,” என்றவன்,

“இந்த கல்யாணத்தில் ஏன் உனக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று காரணம் கேட்க,

“எப்படி விருப்பம் இருக்கும்? நான் இங்க ராகவி அக்கா கல்யாணத்துக்கு தான் வந்தேன். ஆனா வந்த இடத்தில் ஏதோ ஒரு சின்ன விஷயத்துக்காக நமக்கு கல்யாணம்னு சொன்னா எப்படி அதை ஏத்துக்க முடியும் நிகர், நான் இப்போ தான் என்னோட படிப்பை முடிச்சேன். எனக்கு வெளிநாட்டில் போய் எம்.எஸ் படிக்கணும், அப்புறம் வேலைக்குப் போகணும், கல்யாணத்தை பத்தி நான் யோசிச்சதே இல்லை. அப்படியிருக்க அதுக்குள்ள கல்யாணம்னு சொன்னா அதை எப்படி ஏத்துக்க முடியும், அதுவும் இது திட்டமிட்ட சதி. எங்க அம்மாவோட சதி. அது தெரிஞ்சும் என்னால எப்படி இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியும்?”  என்று அவள் கூறிய பதிலைக் கேட்டு, நிகர்வேலன் அதிர்ந்தான்.

“உள்ள ரூம் தாழ்ப்பாள் போட்டிருக்க, நான் எப்படி வெளியே போயிருக்க முடியும், அம்மாக்கு அது தெரியாமலா இருக்கும், நான் உங்க ரூம்ல இருந்தது அம்மாக்கு தெரிஞ்சு தான் இருந்தது. பால்கனி வெளியே தாழ்ப்பாள் போட்டதும் அவங்க தான்,” என்று நயந்தினி சொன்னது அவனுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.

நடந்த பிரச்சனையில் பால்கனி கதவை யார் மூடியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்க நினைத்ததை மறந்தே போய்விட்டான். ஆனால் நளினி அதை செய்திருக்க கூடுமென்று அவனால் நம்பவே முடியவில்லை. “என்ன சொல்ற நயா, உன்னோட அம்மா ஏன் அப்படி செய்யணும்?” என்று அவன் கேட்க, 

“நான் வெளிநாட்டுக்கு போய் மேல படிக்கக் கூடாது. அதுதான் அவங்களை இப்படி செய்ய வச்சிருக்கு, அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சா என்னை வெளிநாடு போக விடாம ஏதாவது செய்வாங்கன்னு நான் நினைச்சது தான், ஆனா இப்படி செய்வாங்கன்னு நான் நினைக்கல, என்னோட கனவை மொத்தமா பொசுக்க, கல்யாணம் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்துட்டாங்க, நான் இந்த கல்யாணத்தை செய்துக்கலன்னா செத்துடுவேன்னு மிரட்டினாங்க, 

அவங்க நினைச்சது நடக்கணும் என்பதற்காக இதில் உங்களையும் இழுத்து விட்டுட்டாங்க, எனக்கும் அவங்க சொன்னதை செய்துடுவாங்களோன்னு பயத்தில் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். எனக்கொரு எதிர்கால கனவு இருந்ததுபோல் உங்களுக்கும் உங்க எதிர்கால மனைவிப் பத்தி நிறைய எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும் தானே, அம்மாவோட சதியால் என்னை நீங்க கல்யாணம் செய்றது போல் ஆகிவிட்டது. நான் எல்லாம் வெளிப்படையா சொல்லிட்டேன். இனி நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே தான்,” என்று அவள் கூறிவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

அவன் அதற்கு என்ன பதில் கூறுவான்? நீதான், நீ மட்டும் தான் என் எதிர்காலம் என்று சொல்லிட இத்தனைநாள் எதிர்பார்த்திருந்தான். ஆனால் இன்று அதை வெளிப்படையாக கூற கூட அவனால் முடியவில்லை. “எப்படி நடந்திருந்தாலும் நடந்தது கல்யாணம் தானே, அதை நான் முழு மனசா ஏத்துக்கிட்டேன். ஆனா உனக்கு விருப்பமில்லாம நீ இந்த கல்யாணத்தை ஏத்துக்கணும்னு இல்லை. நீ இதுக்குப்பிறகு என்ன முடிவெடுத்தாலும் அது எனக்கு சம்மதம் தான், இனியும் உன்னோட அம்மாக்காக பயப்படணும்னு இல்லை. கட்டாயத்தில் இந்த வாழ்க்கை வாழணும்னு இல்லை.” என்று அவன் கூற,

அவன் இப்படி கூறுவான் என்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, இப்படி நான் யோசிக்கல, அதே சமயம் இதை முழு மனசாகவும் ஏத்துக்க முடியல, எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு,” என்றாள்.

அவளின் இந்த பதிலில் அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகிழ்ச்சயடைவதா? இல்லை வருத்தப்படுவதா? அதுவும் தெரியவில்லை. “எதுவா இருந்தாலும் குழப்பத்தில் முடிவெடுக்க வேண்டாம், கொஞ்சநாள் போகட்டும், நீ எம்.எஸ்க்கு அப்ளை செய்றதை பத்தி முதலில் யோசி, அப்புறம் இதைப்பத்தி யோசிக்கலாம்,” என்று ஒரு தற்காலிக தீர்வை கூறினான். அவளும் அதற்கு சம்மதமாக தலையசைத்ததும்.

“நீ மேல படிக்க நினைச்சதால மட்டும் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு நினைச்சீயா? இல்லை இன்னும் வேற ஏதாவது காரணம் இருக்கா?” என்று கேட்டான்.

ரோஹன் சொன்ன விக்கியைப் பற்றி நேரடியாக கேட்க யோசனையாக இருந்தது. ரோஹனே அது யூகமாக இருக்குமென்று சொன்னதால் அதை அவனால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. அதேசமயம் நளினி வெறும் படிப்பு விஷயத்துக்காக இவ்வளவுதூரம் சென்றிருப்பார் என்றும் நம்பமுடியவில்லை. அதனால் மறைமுகமாக அவன் அப்படி கேட்க,

நயந்தினிக்கும் விக்கியைப் பற்றி அவனிடம் சொல்வதா வேண்டாமா என்ற தயக்கம்? அவளுக்கு வெளிநாட்டில் போய் எம்.எஸ் படிப்பதில் பிரச்சனையில்லை ஆனால் விக்கியுடன் போக முடியுமா என்று தான் தெரியவில்லை. ஒரு நொடியில் அவன் பிரிவைப் பற்றி பேசிவிட்டாலும், ஏனோ அவளால் அப்படி உடனே முடிவெடுக்க முடியவில்லை. ஆனால் அவள் பிரச்சனையில் விக்கிக்கு  கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியுமா? என்றும் தெரியவில்லை. நினைத்தாலே மனம் குழம்ப, அதில் தலை வலிப்பது போல் இருக்கவே, அவள் தலையை அழுத்தவும், அதை கவனித்தவன்,

“உனக்கு டயர்டா இருந்தா தூங்கு நயா, பெருசா போட்டு குழப்பிக்காத, எந்த பிரச்சனைக்கும் ஏதாவது தீர்வு இருக்கும்,” என்று அவன் கூற, அவளும் அமைதியாக படுத்துக் கொண்டாள்.

ஆனால் அவளது பிரச்சனைக்கு தீர்வு தான் தெரியவில்லை. இதில் இந்த திருமணம் பற்றி விக்கிக்கு தெரிந்தால் என்னாகும் என்ற பயம் வேறு, இந்த திருமண பேச்சு எழுந்ததுமே அவளது அலைபேசியை அணைத்துவிட்டாள். எப்படி தன் நிலையை விக்கிக்கு புரிய வைப்பது என்று யோசித்து பின் விக்கியிடம் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்.

ஆனால் அவள் சொல்லவில்லையென்றால் விக்கிக்கு இந்த திருமண செய்தி தெரியாமல் போகுமா? தெரிந்து கொண்டு விக்கி எடுத்த விபரீத முடிவு இவளுக்கு தெரிய வருமா?

அகம் சேர்வான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!