Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

வண்ணம் – 2.1

ரொம்ப ரொம்ப முக்கியமான அறிவிப்பு:  சில பல காரணங்களால என்னோட பேர் இத்தனை நாள் வெளிய சொல்லாம இருந்தேன், இப்போ சொல்ல தைரியம் வந்துடுச்சு. இனி என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம் எல்லாரும். என் பேர் அகிலா. என்னோட ப்ரொபைல் எல்லாம் இனிமேல் அகிலா ரவி-னு வரும். நன்றி மக்களே..

🎵 ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்



Advertisement

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும் 

ஆறு மனமே ஆறு அந்த

ஆண்டவன்கட்டளை ஆறு 🎵

Advertisement

வானொலியிலிருந்து வந்த மெல்லிய தத்துவ பாடல் அவ்விடத்தையே நிறைத்திருந்தது. அமைதியாக கேட்டால் அந்த பாட்டின் அர்த்தம் கூட இதமாக இருக்கும். ரேடியோ டீ கடை என செல்லமாக மக்கள் பெயர் வைத்ததன் காரணமும் கூட அது தான். எந்நேரமும் அமைதியாக வானொலியில் எஃப்.எம் ஓடிக்கொண்டே இருக்கும்.

Advertisement

“புண்பட்ட மனதை டீயை வச்சு ஆத்தூரியோ மாப்பிள்ளை?”

     இரு சக்கர வாகனத்தை தனக்கு முன்னே வந்து நிறுத்திய நண்பன் தினேஷை பார்த்து ரகு முறைக்க, “அப்டி முறைச்சா?” வீம்பிற்காகவே அவனை ஒட்டி வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்தான் தினேஷ்.

     தினேஷ். ரகுவின் நெருங்கிய நண்பன். பள்ளி காலத்தில் இருந்தே தோழர்கள். ஒருவருக்காக மற்றொருவர் செய்த உதவிகள் எண்ணற்றவை.

Advertisement

     ஆனால் ஒருவரை மற்றொருவர் கேலி கிண்டல் செய்யாமல் இருப்பதே இல்லை. இவனுக்கு பிடிக்காததை அவன் செய்வதும், அவன் செய்ய வேண்டாம் என கூறுவதை உடனே செய்வதும் தான் இவன் வேலை.

     “என்னைக்காவது வண்டிய எடுத்துட்டு போய் பாலத்துல இருந்து தூக்கி எரிய போறேன் பாரு” ஒரு வருடத்திற்கு முன்னர் ஜாவா வகை வாகனம் ஒன்றை வாங்கினான் தினேஷ்.

     வாங்கிய அந்த நாளில் இருந்து எவரையும் வாகனத்தில் அருகே விட கூட மாட்டான். எங்கு நிறுத்தினாலும் கண் முன்னே இருக்கும்படி தான் பார்த்துக்கொள்வான்.

     அலுவலகம் செல்ல என வீட்டில் இருக்கும் அவன் தந்தையின் வாகனத்தை எடுத்து சென்றிடுவான். அவன் செய்வதை எல்லாம் முதலில் பார்த்த ரகு சில நாட்கள் புதிய பொருளின் மீதுள்ள மோகத்தில் செய்கிறான் என விட்டான்.

     ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவன் செயல்கள் சிறிதும் குறையாமல் இருக்க கடுப்பாகியது அவனுக்கு.

     “வயிறு எரியுதுடா உனக்கு. சூடா டீக்கு பதிலா சில்லுனு ஜூஸ் வாங்கி குடி” என்றவன், “பாய் ஒரு இஞ்சி டீ ஸ்ட்ராங்கா”

     ஒரு தள்ளுவண்டி கடை தான். அந்த ஏரியாவில் இருக்கும் ஒரு பார்க்கின் எதிர்புறம் போடப்பட்டிருந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது போல் ருசி எல்லாம் அபாரமாக இருக்கும்.

     எந்த நேரமும் அங்கு குறைந்தது இருவது மனிதர்களை பார்க்கலாம். வருகிறவர்களுக்கு ஏதுவாக ஆள் உயர பெஞ்ச் சில நிற்பதற்கும், அமர்ந்து குடிப்பதற்கும் பெஞ்ச் சில ஆங்காங்கு போடப்பட்டு அதற்கு நாற்காலிகளும் இருந்தது.

     நின்ற வாக்கிலே டீயை உறிஞ்சிக்கொண்டிருந்த ரகு எதிரில் வந்து நின்றவன், “என்னடா நைட் ஏழு மணிக்கு வர சொல்லிருக்க?”

“ப்ச்” சலித்துக்கொண்டான் ரகு, “வீட்டுல இருக்க போர் அடிக்கிது” முகத்தில் அப்படி ஒரு எரிச்சல் அவனுக்கு.

“பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தப்போ நாயா சண்டை போடவே நேரம் பத்தலை. இப்ப வீட்டை விட்டு துரத்திவிட்டு சந்தோசமா தானே இருக்கனும் நீ?”

“எங்க..?? போனவ தான் திரும்பி வந்து என் சந்தோசத்தை கெடுத்துட்டாளே”

நண்பனுக்கோ அதிர்ச்சி, “என்னடா சொல்ற வந்துட்டாளா திவ்யா?”

ஆர்வமே இல்லாமல் முகத்தை திருப்பினான் கன்னத்தை சொரிந்து, “ஆமா, வர்றப்பையே எனக்கு செலவை இழுத்து வச்சிட்டு தான் வந்துருக்கா” என்றான் ரகு.

“ரகு, உன் கூட வாழணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ண ஏன்டா லூசு மாதிரி பேசுற?”

“நிறுத்து. என் கூட வாழ ஓடி வந்துருக்கானு நான் சொன்னேனா?”

“இல்லையா பின்ன?”

“ஒரு ஆணியும் இல்ல. கைல ஒத்த பைசா இல்ல, வேற வழி இல்லாம என்ன மிரட்டி என் கூட வந்து மறுபடியும் ஒட்டிகிட்டா”

“தோ பார்றா இவ்வளவு சலிப்பு அவளை கல்யாணம் பண்ணப்ப எங்க போச்சு? காசு தான் அவளுக்கு பிரச்சனைனா காசு குடுத்து வழக்கம் போல நீ நிம்மதியா இரு. அவளையும் இருக்க விடேன்”

     ரகு, “காசு கொடுத்துட்டா அவ எல்லாத்தையும் பாத்துக்குவாளா? ஒரு மயிரும் தெரியாது அவளுக்கு. வீட்டுல ஒன்னத்தையும் சொல்லி குடுக்காம பொத்தி பொத்தி வளத்து விட்ருக்காங்க” எரிச்சல்பட்டான் அவளை எண்ணி அல்ல, அவள் குடும்பத்தை மட்டுமே நினைத்து.

     தினேஷ் எதுவும் பேசவில்லை நண்பனை பேச விட்டான். இடையில் சிறு இடைவெளி விட்டாலும் இன்னும் பேச முயல்கிறான் என தெரிந்து அமைதியாக தனக்கு வந்த தேநீரை குடித்துக்கொண்டே நம்பனை பார்த்தான்.

     “விடிய காலைல வாசல்ல நிக்கிறா. கதவை தட்ட கூட இல்ல. எவ்வளவு நேரம் நின்னாளோ. நான் பால் பாக்கெட் எடுக்க போறப்போ உள்ள வந்துட்டு டிவோர்ஸ் வரைக்கும் இங்க தான் இருப்பேன் விடலனா போலீஸ்க்கு போவேன்னு மிரட்டி வந்தா”

     “போலீஸ்க்கு போற அளவு தைரியம் வந்துடுச்சா அவளுக்கு?” சிரித்தான் தினேஷ்.

     “உனக்கே தெரியுது. எனக்கு அவளை பத்தி தெரியாதானு அந்த லூசு யோசிக்கல. நான் பயந்துட்டதா நினைச்சு பெருமை வேற” தலையில் அடித்துக்கொண்டான் அவளை நினைத்து. தினேஷ் வாய் விட்டு சிரித்தான் இருவரையும் எண்ணி.

     “இதோட விட்டாளா சமையல் பன்றேன்னு கிட்சன் உள்ள மயக்கம் போட்டு கெடக்குறா”

   “ரகு…” அதிர்ந்து நண்பன் கை பிடித்து, “சண்டை சண்டைனு சொல்லிட்டே சைடு கேப்ல குழந்தைக்கு ரெடி பண்ணிட்டியேடா. நீ தாம்லே உண்மையான எளந்தாரி பய” எட்டி நண்பனின் தோள் தட்டி உற்சாகமாக பாராட்டினான் தினேஷ்.

     யோசிக்காமல் காலில் அணிந்திருந்த காலனியை அவிழ்க்க போன ரகு சுற்றம் கருதி நாவை மடித்து கடித்தான், “அடிங்க நாயே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”

     “சரிடா சரிடா… அப்றம் எப்படி அந்த புள்ள மயக்கம் போட்டா?”

     “நேத்து மதியத்துல இருந்து திங்காம சுத்திருக்கா. போதுமாடா நாயே” நண்பனை திட்டி மீண்டும் ஒரு தேநீரை வாங்கி வந்தான் ரகு,

     “போனவ அப்டியே போக வேண்டியது தான? பெருசா வீராப்போட பை எல்லாம் தூக்கிட்டு போனவ எதுக்கு திரும்ப வந்தாளாம்?”

     “இத உன் பொண்டாட்டிகிட்ட கேளு” என்றான் தினேஷ் நண்பனிடமிருந்து தேநீரை பிடுங்கி.

     “டேய் பொண்டாட்டி இல்ல, பொண்டாட்டி இல்ல. எக்ஸ்” திருத்தினான் ரகு கோவமாக.

     “டிவோர்ஸ் இன்னும் கிடைக்கல ப்பா தம்பி”

     “திருத்தம் ரொம்ப முக்கியமா இங்க?”

     “சரி டா நீ என்கிட்ட என்ன எதிர்பாக்குற?” நேராக விஷத்திற்கு வந்தான் தினேஷ் நண்பனை புரிந்தவனாக.

     தென்றல் காற்று மெல்ல மின்னலாய், இடியாய் உருமாற துவங்கியது இரவினில்.

     “ஒரு டாஸும் இல்ல. நீ கெளம்பு எல்லாம் தெரிஞ்சவன் மாதிரியே பேசுவான்” சத்தமிட்டு சிரித்த தினேஷ் யோசிக்காமல் தன்னுடைய கைபேசியிலிருந்து இருபதாயிரம் பணத்தை ரகுவின் வங்கி கணக்கிற்கு மாற்றியிருந்தான்.

     ரகுவுக்கும் அது மிகவும் தேவைப்பட்டது. கடந்த மாதம் தான் கையிலிருந்த அனைத்து பணத்தையும் புரட்டி இரண்டு லட்சம் முன் பணம் கொடுத்து புதிதாக ஒரு கார் வாங்கியிருந்தான்.

     இப்பொழுது திவ்யா வந்திருக்க நிச்சயம்செலவிற்கு ஏதேனும் தேவைப்படும் என்று தயங்கி தான் நண்பனை பார்க்க அழைத்தது, ஆனால் அது மட்டும் காரணமல்ல.

     சோர்ந்து கிடக்கும் மனங்களுக்கு காதல் மட்டுமே மருந்தல்ல, நல்ல நட்பும் அவர்களோடான கேலி பேச்சுகளும் கூட அருமருந்து தானே? அது தான் முக்கியமாக தினேஷை வரவழைத்தது.

     வந்தவனும் உடனே அவன் முகம் பார்த்தே அவனுக்கு தேவையானதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்திருந்தான். தலை தூக்கி நன்றி கூட சொல்ல வரவில்லை ரகுவுக்கு.

     இதுவரை சொன்னதில்லையே இன்று மட்டும் எப்படி சொல்ல வரும்? நண்பனிடம் சில வார்த்தைகள் பேசி செல்லலாம் என எண்ணியிருந்தவன் மனநிலை அங்கு தனியாக இருப்பவள் நிலையை எண்ணி கிளம்பினான்.

     “டேய் டேய் உன் காரியம் முடிஞ்சதும் கழட்டி விட்டு ஓடுற பாத்தியா… வண்டி வண்டியா டீ குடிச்சியே உங்கப்பனா காசு குடுப்பான்?”

     “எங்கப்பன் எதுக்கு குடுக்கணும்? சம்பத் மவன் குடுப்பான்” டீ-ஷர்டில் இருந்த கருப்பு கண்ணாடியை மாட்டிக்கொண்டு திமிராக செல்லும் நண்பனை குறி பார்த்து கல்லை எறிந்த தினேஷின் முயற்சி தோல்வியடைந்தது.

     இறுதியாக தானே இருவருக்குமான பணத்தை கொடுத்து வீட்டிற்கு சென்றான். டீ கடையிலிருந்து வரும் வழியிலேயே ஒரு கடையில் இரவு உணவை வாங்கி வீட்டிற்கு சென்றான்.

வீட்டினுள் நுழைந்ததுமே கேட்ட சத்தத்தில் பால்கனி பக்கம் சென்றவன் அங்கு அவளுக்கு அருகில் சமத்தாக அமர்ந்திருந்த அந்த பூனையை பார்த்து பற்களை கடித்தான்.

“இது என்ன?” என்றான் சலிப்பாக.

“பூனை”

“எனக்கென்ன மாலை கண் நோயா? அது பூனைனு தெரியுது. இங்க என்ன பண்ணுதுனு கேக்குறேன்” என்றான் கண்களை அதன் மேனியில் தடவும் அவள் கைகளில் வைத்து.

அவள் இதனை விடப்போவதில்லை என்பது தெரிந்தது அந்த வருடலே கூறியது.

“மாடிக்கு போன்னேன் அப்போ பாத்தேன். அழகா இருக்குல்ல ரகு?”

“உன்னைவிட இந்த உலகத்துல எல்லாமே அழகு தான்டி” அவனை முறைத்தவள் பார்வையை சட்டையே செய்யவில்லை அவன், “எங்க பாத்தியோ அங்கையே போய் விட்டுட்டுவா”

“என்ன ரகு, பாரு எவ்ளோ அப்பாவியா இருக்கு. இத போய் அப்டியே விட சொல்ற?”

“நீயும் தான் பாக்குறப்போ அப்பாவியா இருந்த, போக போக தானே உன்னோட உண்மையான ரூபம் தெரிஞ்சது எனக்கு”

கண்களை உருட்டி சலித்துக்கொண்டாள், “ப்ளீஸ்டா. நான் இத என் கூடையே வச்சுக்குறேனே ப்ளீஸ்” சலிப்பில் உருண்ட கண்கள் இப்பொழுது சுருங்கி கெஞ்சியது அவனை பார்த்து.

“நீ என்ன என் பொண்டாட்டியா கெஞ்சி கேக்கவும் நான் சரினு சொல்ல?”

உடனே முகம் வாடி போனது பெண்ணுக்கு. அதிகாலை வானமாய் நிர்மலமான முகத்தோடு இருந்தவளை அவனது வார்த்தை வீழ்த்தியது. ஆசைப்பட்டு தான் இருவரும் விவாகரத்து கேட்டது.

அதே விருப்பத்தோடு தான் இரு வேறு திசைகளில் பயணிக்க ஒருமனதாக சம்மதித்து விலகியும் இருந்தனர். இந்த மூன்று மாதங்களில் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்கவே நினைத்தனர்.

ஏதோ சிறையிலிருந்து வெளிவந்த நிம்மதியில் சுற்றித்திரிந்து தனக்கே தனக்காய் வாழ்ந்து வந்தவர்களுக்கு எதற்காக இந்த திடீர் உணர்வுகள்?

நூறாண்டு வரை எடுத்து செல்ல வேண்டுமென மனதிலே சூளுரைத்து ஏற்படுத்திய பந்தம் இரண்டே வருடத்தில் முடிந்திருக்க அதற்கான காரணத்தையும் ஆராயவில்லை இருவரும்.

வயதின் கோளாறு, முதிர்ச்சியில்லாத புத்தி, இன கவர்ச்சி என தங்களுக்குள்ளே பெயர் கொடுத்து இது தான் என முடிவெடுத்து அவரவர் வேலையை பார்த்திருக்க, எதற்காக மீண்டும் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கிறோம், இல்லை விதி நிறுத்தியதா என ஆராய்ந்து ஆராய்ந்தே ரகுவுக்கு தலை வலி வர தான் நண்பனை பார்க்க நினைத்தது.

திவ்யாவுக்கு வேறு சில சிந்தனைகள். மயக்கத்திலிருந்து வெளி வந்தவளை தனக்கு சில அடி தூரம் கபோர்டின் மீது சாய்ந்து அவளையே வெறித்து பார்த்திருந்த ரகுவின் பார்வை இரண்டு வருடங்களுக்கு முன்னே அவளை அழைத்து சென்றது.

அந்த நாட்களில் அவன் பார்த்த பார்வையின் ஒளி இதிலும் இருந்தது. ஒரு வேளை கற்பனையோ இது என்ற சந்தேகம் மனதை வாட்ட, எவ்வளவு புரண்டு படுத்தும் உறக்கம் வராமல் இறுதியாக காற்றாட மாடியில் நடந்து வர முடிவெடுத்து மேலே சென்ற பொழுது தான் அவளை யோசிக்க விடாமல் அந்த குட்டி பூனைக்குட்டி அவளது எண்ணங்களை தன்னுள் அடக்கிக்கொண்டது.

இப்பொழுது அவனை பார்த்ததும் தான் மீண்டும் அந்த எண்ணங்கள் வரிசைகட்டி நிற்க அவனது பேச்சுகள் தன்னை பாதிக்கவே கூடாதென உறுதியாய் இருந்தவள் சிறிதாய் முகம் சுளித்து பார்த்தாள் அவனை.

“உங்கிட்ட கேட்டேன் பாரு என்ன சொல்லணும். இந்த பூனை இங்க தான்டா இருக்கும். அப்டி இருக்க புடிக்கலைனா நீ வேற வீடு பாத்து போ”

நம்பாமல் பார்த்தான் ரகு, “என்னது என் வீட்டை நான் காலி பண்ணி போகணுமா… அடியேய் உனக்கு ஏத்தம் அதிகம்டி”

தாடையை தோளில் இடித்து குழந்தையை போல் பூனையை கையில் ஏந்தியவள் வீட்டினுள் நுழைய அவளை முறைத்துக்கொண்டே பால்கனி கதவினை பார்த்தான்.

“மழை பெய்யிற மாதிரி இருக்கு கதவை சாத்திட்டு வா-னு கூட உனக்கு சொல்லனுமா?”

“யார் கடைசியா வர்றா அவங்க தான் பூட்டனும்” அவ்வாறு அவள் சொல்லவும் முன்னே சென்றவள் இடையை இரு பக்கமும் பிடித்து அதே வேகத்தில் பால்கனியில் நிறுத்திவிட்டு உள்ளே ஓடிவிட்டான் சிறுபிள்ளை போல.

அவன் சென்றிட அவளோ அப்படியே நின்றுவிட்டாள். ஆறு மாதங்கள் மேல் ஆகியிருந்தது இருவரும் இருவருக்குமான நேரத்தை ஒதுக்கி காதலில் கரைந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!