காஞ்சனா உள்ளே சென்றிருக்க விஸ்வா ஒரு முடிவோடு இருந்தான் இன்று எதுவும் தெரியாமல் விடப்போவதில்லை என்று. அவன் எழுந்து அவள் பின்னோடு சென்றான்.
காஞ்சனா சன்னலை வெறித்தவாறே நின்றிருந்தாள். இவன் வரும் அரவம் கேட்க திரும்பி நின்றாள்.
“விஷ்வா நான் கேக்கறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க??”
“நான் கேள்வி கேட்டா நீ பதில் சொல்ல மாட்டே?? ஆனா நீ கேட்டா நான் பதில் சொல்லணுமா??”
“விஷ்வா அந்த கடை என்னோடதுன்னு நானோ என் தம்பியோ உங்ககிட்ட சொன்னோமா??”
‘இதென்ன புதுக்கதை’ என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்த விஸ்வா அப்போது தான் யோசித்தான். சம்மந்தப்பட்ட இருவருமே அதை சொல்லவில்லை என்று.
ஆனா அந்த டிசைன்ஸ் எல்லாம்… அவனுக்கு குழப்பம் என்ன நடக்கிறது என்பதாய் பார்த்தான்.
“அந்த டிசைன்ஸ் எல்லாம் நான் அவங்ககிட்ட தான் வித்தேன்… எனக்கு தெரிஞ்ச கடை அப்படிங்கறதால தான் அவங்ககிட்ட போனேன்”
“அந்த கடை எங்களோடதுன்னு நீங்க நினைச்சது உங்க தப்பு… ஒண்ணு வேணா ஒத்துக்கறேன், அந்த கடை எங்களோடதுன்னு நீங்க சொன்னப்போ அதை நாங்க மறுக்காதது மட்டும் தான் எங்க தப்பு” என்றாள் ஒட்டுமொத்த தப்பையும் அவன் மேல் திருப்பி.
“அப்போ நீங்க ரைட் நான் தப்பு…”
“நாங்க ரைட்ன்னு நான் சொல்லலை… இந்த விஷயத்துல தப்பு எங்க மேல இல்லைன்னு சொன்னேன்…”
“உங்க மேலயும் ஒரேடியா தப்பு சொல்ல முடியாது. அந்த கடையோட பேரை என் பேரோட நீங்க பொருத்தி பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்”
“இரண்டு வருஷத்துல ஒருத்தர் இவ்வளோ பெரிய நகைக்கடை எல்லாம் வைக்க முடியுமா சொல்லுங்க விஷ்வா…”
“அதெல்லாம் சினிமால தான் நடக்கும். நான் பிறக்கும் போதே எங்களுக்கு கஷ்ட ஜீவனம் தான் விஷ்வா. என்ன ஒண்ணு அப்போ லோயர் மிடில் கிளாசா இருந்த நாங்க இப்போ அப்பர் மிடில் கிளாஸ்ன்னு வேணா சொல்லிக்கலாம்…”
“நாங்க இருக்கற இந்த வீடு கூட ஒத்திக்கு தான் எடுத்திருக்கோம். அது கூட இப்போ தான் ஒரு வருஷமா இங்க இருக்கோம்…”
“உங்க டிசைன்ஸ் எல்லாம் எனக்கு காசா தான் உருமாறிச்சு. அதை வைச்சு நகைக்கடை எல்லாம் ஆரம்பிக்க முடியாது விஷ்வா, ஆனா கொஞ்சம் நல்லபடியா இருந்தோம் அவ்வளவு தான் உண்மை…”
“நீ சொல்றது…”
“நம்புற மாதிரி இல்லைன்னு சொல்றீங்களா?? இதெல்லாம் உனக்கு தேவையான்னு கேட்கறீங்களா??”
“தேவை தான் எனக்கு தேவை தான்…”
“உனக்கு தேவை பணம் தான்னா அதை வாங்கிட்டு போயிருக்கலாமே, இப்படி திருடியிருக்க வேண்டாமே…”
“திருடறதுன்னா என்னன்னு கத்துக்கொடுத்தே உங்க வீட்டு ஆளுங்க தான். போய் அவங்ககிட்ட கேளுங்க யார் பணத்தை யார் திருடினாங்கன்னு…”
“காஞ்சனா எங்க வீட்டில எல்லாரும் நல்லவங்க நீ ஏதோ அவங்களை மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்கிட்டேன்னு நினைக்கிறேன்…”
“நீங்க ரொம்ப பாவம் விஷ்வா, வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கறீங்க… எல்லாமே விஷம் கொடிய விஷம். அந்த பாம்பு எல்லாம் சாது போல நடிக்கலாம், ஆனா அதோட நடிப்பு எவ்வளவு நாளைக்கு…”
“அது விஷத்தை கக்கும், அன்னைக்கு நீங்க புரிஞ்சுக்குவீங்க நான் சொன்னதை…”
“அவங்க பத்தி நான் தெரிஞ்சுக்கறது இருக்கட்டும், உன்னைப்பத்தி நீ முதல்ல சொல்லு…”
“நான் யாருன்னு நீங்க முதல்ல தெரிஞ்சுக்கறதை விட நீங்க யாருன்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க”
“என்னைப்பத்தி நான் தெரிஞ்சுக்க என்னயிருக்கு??”
“நெறைய இருக்கு…”
“உனக்கு தான் தெரிஞ்சிருக்கே நீயே சொல்லேன்…”
“என்னை நம்பாத நீங்க நான் சொல்றதை நம்பவா போறீங்க… நீங்களே தெரிஞ்சுக்கோங்க…” என்றுவிட்டு பேச்சு முடிந்தது என்பது போல் கட்டிலில் அமர்ந்தாள்.
“நாம நாளைக்கு காலையிலேயே ஊருக்கு கிளம்பிடலாம், நீங்க தனியா நான் தனியான்னு போக வேண்டாம்… ரேகாவையும் அமுதனையும் கூட்டிட்டு போய்டலாம்…”
அவள் எப்போதும் போல் அவனை தன் வழிக்கு வரவைத்திருந்தாள். பிடிக்காது போனாலும் அவன் வேறு வழியில்லாது அவர்களோடு மறுநாள் கன்னியாகுமரிக்கு கிளம்பினான்.
தப்பு அவனது தானே, அவனாகத் தான் கேஎம் ஜூவல்லர்ஸ் அவர்களது என்று நினைத்துக் கொண்டான்.
இதில் தன் வீட்டினரிடம் காஞ்சனாவின் கௌரவம் குறைந்துவிடக் கூடாது என்று எண்ணி தான் நினைத்தை அவர்களிடமும் சொல்லி அவர்களும் நம்பி இதோ அமுதனை வீட்டு மாப்பிள்ளை ஆக்கிவிட்டனர்.
அவனின் அண்ணன்கள் விடாகண்டன் கொண்டாகண்டன்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த மறுவீட்டு அழைப்புக்கு தாங்கள் செல்வதாக ஆளாளுக்கு கூறிக் கொண்டிருந்தவர்களை கனகவேல் தான் அடக்கினார்.
பெண்ணுக்கு அண்ணன் அண்ணியாகவும் அந்த வீட்டு ஆளாகவும் அவர்கள் செல்லட்டும் என்று சொல்லித் தான் விஸ்வாவையும் காஞ்சனாவையும் அனுப்பி வைத்திருந்தனர்.
எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மாப்பிள்ளை வீட்டை பார்க்க இங்கு வந்து நிற்பர். திருமணத்திற்கு முன் ஒரு முறை வந்திருந்தனர் தான்.
வீடு பற்றிய கவலையில்லை, நல்ல பெரிய வீடு தான். சொந்த வீடில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் வந்திருந்த அன்று கடை விடுமுறை தினம் என்பதால் வெளியில் இருந்தே பார்த்து சென்றிருந்தனர். நிச்சயம் ஒரு முறை கடைக்கு நேரில் வந்து அவர்கள் பார்ப்பார்கள் என்று விஸ்வாவிற்கு நன்றாகத் தெரியும்.
அவனின் அண்ணன்களுக்கு காஞ்சனாவை பிடிக்கவில்லை என்பது அவர்களின் பேச்சிலேயே தெரிந்தது. அதற்கேற்றார் போல் தான் அவன் மனைவியும் நடந்துக் கொள்வாள்.
“என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க??”
“நம்ம வீட்டு ஆளுங்க நாளைக்கு எப்ப வேணாலும் இங்க வந்து பார்ப்பாங்க. அவங்க வீடு பார்க்க வந்தப்போ பெரிசா எந்த சந்தேகமும் வந்திருக்கலை. கடையும் அன்னைக்கு லீவுன்னு பார்க்க முடியலை…”
“யார் சொன்னா அவங்க கடையை பார்க்கலைன்னு”
“என்ன சொல்றே நீ??”
“எல்லாம் உங்க அண்ணனுங்க ரெண்டு பேரும் கடையை தேடி விசாரிச்சுட்டு போய் மறுநாள் ஊருக்கு போறதுக்கு முன்னாடி பார்த்திட்டு தான் போனாங்க…”
“எல்லாரும் வீடு பார்க்க வந்தப்போ நீங்கலாம் அன்னைக்கே கிளம்பிட்டீங்க… உங்க அண்ணனுங்க ரெண்டு பேரும் சென்னையில ஒரு வேலை இருக்குன்னு சொல்லிட்டு இங்க தங்கிட்டு மறுநாள் வந்தாங்க ஞாபகம் இருக்கா உங்களுக்கு??”
ஆம் அவள் சொன்னது சரியே!! வீடு பார்ப்பதற்கு வந்த போது அண்ணன்கள் இருவரும் சென்னையில் தங்கி மறுநாள் வந்தது நினைவுக்கு வந்தது அவனுக்கு.
“அவங்க வருவாங்கன்னு நான் முன்னாடியே கெஸ் பண்ணேன். நீங்க வீட்டுல கடை எங்களதுன்னு சொன்னதால வேற வழியில்லாம நாங்க பொய்யான அந்த விஷயத்தை கொஞ்ச நேரத்துக்கு உண்மை ஆக்கினோம்”
“தவிர அந்த கடையில நானும் ஒரு பார்ட்னர் அப்படிங்கறதால அவங்க நானும் ஒரு ஓனர்ன்னு சொல்லியிருக்காங்க…”
“உன்னை மாதிரி ஒருத்தி இருக்கவே முடியாது. எப்படியெல்லாம் ஏமாத்தலாம்ன்னு எந்நேரமும் யோசிச்சுட்டே இருப்பியா நீ??”
அவள் அதற்கு பதில் சொல்லவில்லை சிரித்து வைத்தாள். “சிரிச்சு சிரிச்சு சாதிக்கலாம்ன்னு நினைக்கிறே போல…”
“ஆஹான்!! நான் அப்படி என்ன சாதிச்சுட்டேன்னு நீங்க நினைக்கறீங்க??”
“என்ன சாதிக்காம விட்டே என்னை பழிவாங்கணும்ன்னு நினைச்சே, இப்போ அதை சிறப்பா தானே செஞ்சிட்டு இருக்கே…”
“உங்களை பழி வாங்க வந்தேன்னு நான் எப்போ சொன்னேன்??”
“அதை நீ சொல்ல வேற செய்யணுமா என்ன. எல்லாம் தான் உன் செயல்லையே தெரியுதே!!”
“நீங்க ரொம்ப அப்பாவிங்க…”
“இப்படி சொல்லி சொல்லியே என்னை மட்டம் தட்டி வைக்க பார்க்கறியா நீ…” என்றவனுக்குள் அவ்வளவு கோபம் வந்தது.
“உண்மையை தான் சொன்னேன். சொல்ல வேண்டாம்ன்னா சொல்லலை விட்டிடுங்க…”
“கடைசியா கேட்கறேன் காஞ்ச்சு உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு. பேசி தீர்த்துக்கலாம்…”
“பேசினா தீர்ந்திடுமா… எத்தனை வருசத்தோட வலி தெரியுமா?? அதெல்லாம் பேசினா மட்டும் தீர்ந்திடாது…” என்றவளின் குரலில் வேதனையின் சாயல்.
காலையில் இருவரும் இருந்த மனநிலைக்கு முற்றிலும் எதிரான மனநிலை இப்போது.
இரண்டையுமே அவன் அறவே வெறுத்துக் கொண்டிருந்தான். எப்படி கேட்டாலும் அவளிடத்தில் இருந்து பதிலில்லை.
அவனுக்கு நடந்ததை தெரிந்து கொள்ளும் எண்ணம் உள்ளே விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. பல வருடப் பகை என்றால் பெரியவர்கள் தான் பகையாளிகளாக இருந்திருக்க வேண்டும்.
அதை அவன் தெரிந்து கொள்ள சரியான நபர்கள் இருவர் என்பதை அவன் மனம் குறித்துக் கொண்டது. அதை பற்றி அவர்களிடம் சமயம் பார்த்து பேச வேண்டும் என்பதை முடிவெடுத்துக் கொண்டான்.
மறுநாள் மணமக்களை அழைத்துக்கொண்டு விஸ்வாவும் காஞ்சனாவும் கன்னியாகுமரிக்கு சென்றனர்.
ரேகாவின் முகம் முன்பை விட இப்போது தெளிந்திருப்பதை கண்டு சகுந்தலாவிற்கு மனநிம்மதி.
இரண்டு நாட்கள் அவர்கள் அங்கு தங்கிவிட்டு பின் சென்னைக்கு திரும்பினர்.
நாட்கள் எப்போதும் போலவே சென்றுக் கொண்டிருக்க அன்று காலை கனகவேல் அந்த பேச்சை ஆரம்பித்தார். காலை உணவுக்கு பின் வீட்டு ஆண்கள் சற்று நேரம் அமர்ந்து அன்றைய அலுவல்கள் முதல் நாள் நடந்தது என்று பேசுவது வழமை.
அதே போல் தான் அன்றும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தான் கனகவேல் பேச்சை ஆரம்பித்தார் விஸ்வாவிடம்.
“விச்சு…”
“சொல்லுங்க தாத்தா…”
“நம்ம பேத்தியோட கடையையும் நம்ம கடையோட இணைச்சுட்டா என்ன. நமக்கும் சென்னையில ஒரு கடை இருந்தா நல்லா தானே இருக்கும்”
“அங்க நாம புதுசா ஒரு கடை பார்த்து எல்லாம் ரெடி பண்ணி செய்யறதுக்கு நம்ம நேம் போர்டு அங்கயும் செஞ்சிட்டா என்ன?? ஏம்மா காஞ்சனா உனக்கு அதுல எதுவும் ஆட்சேபனை இருக்காம்மா??” என்று இப்போது காஞ்சனாவையும் பேச்சில் இழுத்தார்.