Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 30

அம்பிகா புவனையும் பூமிகாவையும் வீட்டிற்கு ஒன்றாக அழைத்து பேசலாம் என்று முடிவு செய்து கொண்டார். பூமிகா பள்ளி செல்லும் காலங்களில் வீட்டில் அவருக்கும் கமலநாதனுக்கும் சண்டை வந்துக்  கொண்டே இருந்தது. வெகு நாள் நண்பர் ஒருவரின் அக்கவுண்ட்ஸ் இனி தான் பார்க்க மாட்டேன் என்று கமலநாதன் சொன்னதும்  அம்பிகாவுக்கு மிகவும் வருத்தம், கோபம் அதில் தொடங்கிய சண்டைதான் ஒவ்வொன்றாக கமலநாதன் செய்யும் வேலைகளை பற்றி அலசி ஆராய்ந்து இது வேண்டாம் இது தப்பு  என்று அவர்  சொல்லத் தொடங்கவும் வீட்டில் சண்டை பெரிதாக வெடிக்க தொடங்கியது.

அம்பிகாவுக்கு அவர் திருமணம் ஆனதிலிருந்தே தெரியும் கமலநாதனுக்கும் தாழ்வு மனப்பான்மை அதிகமென. எங்கு விருந்துக்கு சென்றாலும் உடனுக்குடன் அவரை அவர் கண்களுக்கு தெரிபவர்களுடன் எல்லாம்  ஒப்பிட்டு பார்த்து அவரை பெருமை பேசிக்கொள்வார். அம்பிகாவையே ‘நீ என்ன பெரிய ஜீனியஸா? ஸ்வாமிநாதன் மகளா பிறந்து நல்ல சூழல்ல படிச்சதுனால உனக்கு இவ்ளோஅறிவு. என்னை போல கஷ்டப்படற சூழல் எல்லாம் இருந்திருந்தா பத்து பாத்திரம் தேய்க்க போயிருப்ப’என்பார். அவர் குணாதிசயம் பலரை எரிச்சல்படுத்த வேண்டுமெனவே அவரை  கீழ்மை படுத்த நடத்தியவர்கள் ஏராளம். அப்போதெல்லாம் அவர் காழ்ப்புணர்ச்சியை காட்ட எந்த நிலையும் இறங்குவார். கமலநாதனின் இந்த தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக அசுரனை போல வளர்ந்து ஒரு கட்டத்தில் ‘நான் பெரியவன் நீ ஒன்றுமே இல்லை’ என்று அம்பிகாவை குத்தி காட்டுவதில் திருப்தி அடைய தொடங்கியது. அதிலும் மகள் ஸ்கூலுக்கு ஆண்டு விழாவில் விருந்தினராக  சென்று  பத்து நிமிடம் மேடையில் பேசுவதில் திருப்தி அடையவும் மகள் முன்  தான் ஒரு ஹீரோ என்று காட்டிக்கொள்வதில் அவருக்குள் ஒரு வெறியே இருந்தது. 

பூமிகாவை புவனுடன் பார்த்ததும் தந்தைக்கே உரிய கோபத்தில் தான் அவனை மிரட்டினார். அதில்  மகள் வளர்ந்துவிட்டாள் என்பது புரிய தொடங்கவும்  ஏற்கனவே அவர் செய்யும் வேலைகள் கொடுக்கும் அழுத்தத்தில் இருந்தவர் சற்று இளக தொடங்கியிருக்கிறார். பூமிகா பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பூமிகா  அவர் செய்வது கவனிக்கிறாள் என்பது அவருக்கு தெரிய தொடங்கியது. அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அம்பிகாவுக்கும் அவருக்கும் பயங்கர சண்டை. அம்பிகா “இனி நீங்க சம்பாதிக்கிற காசுல நானும் என் பொண்ணும் சாப்பிட மாட்டோம்”  என்றெல்லாம் பேசி இருந்தார். அது போலவே அப்போது இருந்தே அவர் அப்பா பணத்திலும் அவர் சம்பாதிக்கும் பணத்திலும்தான் பூமிகாவின் தேவைகளுக்கும் அவர் தேவைகளுக்கும் உபயோகிக்க தொடங்கினார்.  மனைவியின் அடமும் பூமிகாவின் எதிர்காலமும் கண்களுக்கு முன் தெரியும் போது கமலநாதன் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மாற்றிக் கொள்ள முற்பட்ட.., அந்த  கும்பலுக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நல்வழியில் பயணப்படலாம் என்று நினைத்தார்…  அப்போதே அவர் காலம் முடிந்தது.

அம்பிகா பூமிகாவிடம் உண்மையான சூழ்நிலையை எடுத்து சொன்னார்  ‘நீ நினைக்கிற மாதிரி உங்க அப்பா கெட்டதே செய்யலைன்னு சொல்ல முடியாது பூமிகா ஆனா அவருடைய மரணத்தில எந்த வகையிலுமே உன்னோட பிரெண்ட்ஸ் சம்பந்தப்படவே கிடையாது.உங்க அப்பா கடத்தல்காரங்க கூட பிரச்சனை செய்துக்கறார்ன்னு விஷயம் தெரிஞ்ச உடனே  இது வேறு வகையில் போய் முடியலாம்ன்னு கபிலன் வீட்டுக்கு வந்து உங்க அப்பா கிட்ட ஜாக்கிரதையாக இருக்க சொல்ல வந்தார். அந்த டைம்ல இங்க இருந்த ஒரு மினிஸ்டர் மனைவி அந்த வைரத்தை வாங்கி அது நேச்சுரல் வைரம் கிடையாதுங்கறது தெரிஞ்சுக்கிட்டு அப்பவே போலீஸ் டிபார்ட்மென்ட் ஸ்டெப் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க .இது செய்றவங்க யாரு அவங்கள எப்படி  புடிக்கலாம்ன்னு விசாரணை தொடங்கவுமே கபிலன் அவரை அந்த கும்பல்கிட்ட இருந்தும், கேஸ் எதுவும் ஆகம இருக்கவும் காப்பாத்த முயற்சி செய்துட்டு இருந்தார். புவன் கூட உன் பிரண்ட்ஷிப் பார்த்து உங்க அப்பாக்கு கோவம் அதே சமயத்துல புவன் குடும்பத்தில் ரொம்ப நியாயமானவங்க. அவங்களோட நம்ம சம்பந்தம் வச்சுக்கணும்னா நம்மளும் நியாயமானவங்களா இருக்கணும்ங்கறது உங்க அப்பா உணர்ந்தப்பறம் தான் அதிலிருந்து வெளியில் வர நினைச்சார். சொல்லு உனக்கு புவனை கல்யாணம் செய்துக்க ஆசை இருந்தா நான் கல்யாணம் செய்து வைக்குறேன்”  என்றார்



Advertisement

பூமிகா “முதல்ல ஆடிட்ட்டர்  ஆகணும்ன்னு சொன்னீங்க. இதோ பாதி கிணறு தாண்டிட்டேன். எப்படியாவது இன்னும் ரெண்டு இல்ல மூணு வருஷத்துல ஆடிட்டர் ஆகிடுவேன். அப்புறம் பாடகி ஆகணும்ன்னு சொன்னீங்க, அதையும் செஞ்சேன். இப்போ என்ன இவனுக்கு நான் பொண்டாட்டியாகனும்  சொல்றீங்களா? அதையும் நான் செய்யணுமா? நான் செய்றேன்” கோபமாய் சொல்லிவிட்டு எழுந்தாள் 

அம்பிகா “இல்ல இல்லவே இல்ல நான் அப்படி சொல்லல. ஆனா உனக்கு புவன் மேல  ஆசை இருந்ததே அதனால உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கிறேன் நீ அவன் மேல ஆர்வம் இருக்குன்னு சொல்லு அவனையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சொல்றேன்”

பூமிகா “அந்த இன்ட்ரஸ்ட் எல்லாம்  போய்ருந்துச்சு. அப்புறம் இப்ப என்ன தொந்திரவு செய்யாம விடுங்க.எனக்கு கல்யாணம் வேண்டாம். ஆடிட்டர் ஆகுறேன், ஊர்லே பெரிய ஆடிட்டர்ன்னு பேர் வாங்குறேன். தாத்தா பெயரை காப்பாத்துறேன்.உங்ககிட்ட இருக்கிற பைல்ஸ் எல்லாம் நல்லா மைண்டைன் பண்றேன். சரியா” அவள் முடிவை சொல்லிவிட்டு அகன்று நடக்க எத்தனிக்க 

Advertisement

அம்பிகா “என் ஆச நீ குடும்பமா சந்தோஷமா வாழனும்ங்கறதுதான் பூமி”

Advertisement

பூமிகா “பட் எனக்கு அந்த ஆசை இல்லம்மா”

புவன் “எனக்கு இருக்கு ஆண்டி”

அம்பிகா எதுவும் செய்யமுடியாமல் தவித்தவர் “சரி சொல்லு பூமி வேற பையனை பார்க்கவா” கேட்டார் 

Advertisement

புவன் சட்டென “ஆண்ட்டி டைம் குடுங்க. எதுனாலும் ஆறு மாசம் கழிச்சு செய்யலாம்”

பூமிகா கோபமாக “இந்த ஜென்மத்துல நடக்காது” என்று உறுமிவிட்டு செல்ல 

அம்பிகா புவனிடம் “என் பொண்ணுக்கு பிடிச்சதை மட்டுமேதான் தம்பி நான் செய்வேன்.ஆறு மாசம் டைம் தரேன். இல்லன்னா வேற மாப்பிளை பார்க்கலாம்” என்றார்.

புவன் பூமிகாவிடம் “நீ கல்யாணம் செய்துக்காம எல்லாம் இருக்க முடியாது. நமக்குள்ள செட் ஆகுதான்னு செக் பண்ணி பார்க்கலாம்ல”

பூமிகா எரிச்சலாக புவனை கோபப்படுத்த  “ரைட்டு தம்முவும் பிசியா இருக்கா, நானும் லோன்லியா இருக்கேன்  ட்ரை பண்ணி பார்க்கறேன்” என்று  சொன்னவள் “இப்போ கிளம்பு” என்றாள்.

புவன் “ஊஃப் ட்ரை பண்ணுவோம்” என்றவன் பூமிகாவின் திமிரை பார்த்து “இந்த திமிருக்கு என்கிட்டே பதில் இல்லன்னு நினைக்காத” என்று மிரட்டிவிட்டே கிளம்பினான்.  

தமயந்தி முருகா பரிந்துரையில் கொஞ்சம் பெரிய படம் ஒன்றை விநியோகம் செய்வதற்கு வாங்க முற்படும்  போதே அவளுக்கு முன்பு அருணின் நிறுவனம் வாங்கிவிட்டது.முழுதாக ஒரு படத்தை ப்ரொடியூஸ் செய்வதற்கு இயலாத நிலையில் பாதிப்பங்கு பைனான்ஸ் செய்வதற்கு மற்ற தேவையான வேலைகள் எல்லாம் செய்துமுடித்து வருவதற்கு முன் திரும்பவும் அந்த படத்தை அருண்  நிறுவனம் கைப்பற்றியிருந்தது.அதேபோல தயாரித்த படத்தை வாங்கிய ரிலீஸ் செய்யலாம் என்று போகும் சமயம் அருண்  நிறுவனம் அதை வாங்க முற்பட தமயந்தி அவர்களுக்கு முன் கூடுதலாக காசு கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்தாள். அவள் நல்ல நேரம் அந்த படம் சுமாராக ஓடி லாபம் ஈட்டி தந்தது. ஆனாலும் கல்யாண் அவளை குறையாக பேசினார். அருணிடம்  தோற்ற போதும் குறையாக பேசியவர் அருணிடம் ஜெயித்த போதும் பணத்தை அதிகமாக செலவு செய்து விட்டாய் என்று பேசினார். கோபம் வந்தது, பேச முடியாத சூழ்நிலை. 

தமயந்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக  சினிமா பிசினஸ் கணிக்க முடிந்ததாக மாறத் தொடங்கியது.இந்நிலையில் ஸ்கை புரொடக்சன் நிறுவனத்திற்கு நான்கு விஸ்காம் கம்யூனிகேஷன் படித்த மாணவர்கள் அவர்களை படத்தை தயாரித்து ரிலீஸ் செய்ய கோரி வந்தனர். அவர்களிடம் இருக்கும் கதை நன்றாக இருப்பதாகவும் ஹிட் ஆக வாய்ப்புள்ளதாகவும் முருகா சொல்லவும் தமயந்தி அவர்களை நம்பி படம் புரொடியூஸ் செய்ய ஒத்துக்கொண்டாள்.

கல்யாண் “நஷ்டம் வந்தால் உன் கணக்குல தான் எழுதுவேன்” என்று மட்டுமே சொன்னார்  மத்தபடி உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டார். தமயந்தி தைரியமாக படத்தை தயாரிக்க தேவையானதை செய்ய தொடங்கினாள். அடுத்த மூன்று மாதத்தில் படம் ரிலீஸாகி  சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 

முதல்முறையாக தயாரிப்பாளர்கள் யூனியனில் தமயந்தி ஒரு ஆளாக கவனிக்கப்பட்டாள். யாரும் அவளை புகழவில்லை மாறாக ஜாடை பேசினார்கள்.

“சும்மா ஒரு படம் ஹிட் ஆயிட்டா போதுமா” 

“மொத படத்த ஹிட் ஆயிட்டு அடுத்த படத்துல தலையில் துண்டு போட்டுட்டு போனவங்க ஏராளம்”

“அடுத்த ரெண்டு படத்தை இதே வேகத்துல ஹிட் பண்ணி காட்டு பார்க்கலாம்”

என்று நிறைய பேசி  பயமுறுத்தினார்கள்.

கும்பல்களுக்கு நடுவே அருண் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். தமயந்திக்கு அவர்கள் பேச்சை காட்டிலும் பேசாத அருண் மீது எரிச்சல் உண்டானது. மனம் அவனிடம் இருந்து வாழ்த்து எதிரிபார்க்கிறதோ! அது கிடைக்கவில்லையோ!

அருந்ததீ தியேட்டர்களில் சமீபமாக ஓடும் ஹிட் படம் பார்த்துவிட்டு அருணிடம் “அதெப்படி எதோ புது கம்பெனி ஹிட் ஆகலாம். நீ என்ன பண்ணிட்டு இருக்க” என்று கேட்டார்.

அருண் சலிப்பாக பதில் பேசாமலே கைபேசி இணைப்பை துண்டித்தான். 

அந்த வார இறுதி புவன் அருண் சிரஞ்சீவி மூன்று பேரும் புவன் வீட்டில் சந்தித்துக் கொண்டனர். புவனிடம் பேச வந்த தமயந்திக்கு அருணை அங்கே பார்த்து தயக்கம். ஆனாலும் அங்கே அருண் என்பவன் ஒருவன் இருக்கிறான் என்றே கண்டுகொள்ளாமல் மற்ற இருவரிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள். அருண் எதுவும் பேசாமல் அவள் பேச்சை மட்டுமே கவனித்து கொண்டிருந்தான். பேச்சுவாக்கில் தமயந்தி “இந்த ப்ரொடியூசர் யூனியன்ல ஒரு என்னை  மனுஷியாவே பார்க்க மாட்டேங்கிறாங்க கடுப்பா இருக்கு” என்றாள் 

அருண் நக்கள் தொணியில் “இன்னும் ஸ்கூல் பிள்ளை மாதிரியும் காலேஜ் பொண்ணு மாதிரியும் டிரஸ் பண்ணிக்கிட்டு வந்தா அப்படித்தான் பார்ப்பாங்க. அவங்களுக்கு ஈக்குவலா நிக்கணும்னா  அவங்களுக்கு ஈக்குவலா டிரஸ்ஸிங் மாத்தணும்”என்றான்

தமயந்தி முழித்தவள் “தினமும் சீரியல் ஹீரோயின் மாதிரி போகுறதா… என்னாலல்லாம் முடியாது”

அருண் எகத்தாலமாக ” சினிமா வெறும் கதை கேமரா காசு  மட்டும் இல்ல. அது தனி ஒரு ஃபேஷன் உலகம். அங்க  எல்லா வகையிலும் ஏமாத்துறது தான் ஃபேஷன். போடுற டிரஸ்ல இருந்து நகையில், சிர்க்கிற சிரிப்பு வரை பொய் பொய் பொய் மட்டுமே. உண்மையா இருக்கிற ஆட்களுக்கு அங்க இடம் இல்ல” என்றான்

புவன் “அருண் சொல்றதுலே பாயிண்ட் இருக்கு தம்மு. அவங்க வீட்ல எல்லாம் சின்ன பசங்களை பார்த்துட்டு தொழில்ல வேற மாதிரி பார்ப்பாங்க. அதனால ஒரு ப்ரோட்யூசர் எப்படி போவாங்களோ அப்படி போ”

தமயந்தி பாவமாக பார்த்தவள் “எனக்கு சும்மாவே எல்லாமே கஷ்டமாக இருக்கு நீ என்ன இன்னும் இன்னும் ஸ்ட்ரெஸ் எல்லாம் கூட்டுறீங்க”

அருண் அவள் கண்களை பார்த்தவன் “நேரத்துக்கு சாப்பிடு. இந்த பிஸ்னஸ் ஸ்லோவா தான் பிக்கப் ஆகும்” என்றவன் அவளை கடந்து போனான்.

அடுத்து பூமிகாவும் தமயந்தியும் சேர்ந்து தமயந்தியின் தோற்றத்திலும் ஆடைகளிலும் மாற்றத்தை கொண்டு வந்தனர்.

முதல் படம் கொடுத்த வெற்றியில் தமயந்தி அடுத்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்க தொடங்கினாள். விஷயத்தை கேட்டு அருண் சிரஞ்சீவி புவன் எல்லோருமே அதிர்ந்தாலும் யாருமே தமயந்தி சிக்கலில் மாட்டுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!