Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

வண்ணம் – 9.2

இன்று நண்பனுக்கு திருமணம். இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதால் மெதுவாக காலை உணவை உண்டு, குடிலுக்கு போக மனம் வராமல் உணவகத்தில் அமர்ந்து நேரத்தை ஓட்டும் முயற்சியில் இருந்தவனை அழைத்திருந்தார் திவ்யாவின் தந்தை.

எடுத்து பேசியவனுக்கு அவர் கூறிய செய்தி நிம்மதியை தந்ததா, சொல்ல முடியாத வேதனையை கொடுத்ததா என தெரியவில்லை.

இரண்டு மனதாக கொடுக்க வேண்டிய தகவல்களை கொடுத்து திவ்யா குடிலில் இல்லை என்று தெரிந்த பிறகே தான் சென்று தயாராகி திருமணத்தில் வந்து நின்றது.

அவனை அங்கு பார்த்த அனைவரும் ஏன் நேற்று ஆளையே பார்க்க முடியவில்லை என கேள்விகளால் துளைக்க, அதை விட தன்னை தொடரும் அவளின் பார்வையினை சந்திக்க உடலில் தெம்பில்லை.



Advertisement

சங்கடத்துடன் அந்த பார்வையை தவிர்த்தவன் திருமணம் நடந்து முடிந்த கையேடு தினேஷை பின்தொடர வேண்டாம் என கூறி அந்த பெரிய ஹாலின் இறுதியில் அமர்ந்திருந்த திவ்யாவை தேடினான்.

நீண்ட தேடலுக்கு பிறகு அவளை கண்டும் கொண்டான். ஆரஞ் நிற பட்டு புடவையில் நீளமும் பச்சையும் கலந்திருந்த நிறத்தில் பார்டர் வைத்து அதே நிற ரவிக்கை அணிந்து ஒரு ஓரத்தில் அவன் தோழிகளோடு இருந்தாள். பெயருக்கு கூட முகத்தில் புன்னகை இல்லை.

யோசனையோடு தான் அவளை நோக்கி சென்றான். அவனை பார்த்ததும் பாராதது போல் அவள் இருக்க அருகில் இருந்த பெண்கள் அவளை திரும்ப வைத்திருந்தனர்.

Advertisement

“வா திவ்யா” ரகுவின் அழைப்பை அனைவர் முன்னிலையிலும் நிராகரிக்க முடியவில்லை.

Advertisement

அவனை தீயாய் முறைத்தாள், அசரவில்லை ரகு.

நீ வந்தால் தான் நான் நகர்வேன் என ரகு நிற்க அவனை விட அவள் தான் முதலில் அந்த மண்டபத்தை விட்டு முதலில் வெளியே வந்தது.

தன்னை விட வேகமாக வந்தவளின் நடைக்கு ஈடாக வந்தவன் அவள் கை பிடித்து வேறு பக்கம் அழைக்க உச் கொட்டி கையை முக சலிப்புடன் உறுவிக்கொண்டாள்.

Advertisement

எந்த உரிமையில் என் கையை பிடிக்கிறாய் என்ற கேள்வியை தாங்கி நின்றவள் முகம் பார்த்து தான் தன்னுடைய செயலின் வீரியம் புரிந்தது. அதையும் தாண்டி அவன் முகத்தில் பிரகாசம் கூத்தாடியது.

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் திவ்யா கொஞ்சம் வேகமா வாயேன்”

“நீ ஏற்கனவே மூச்சு முட்டுற அளவு சர்ப்ரைஸ் குடுத்துட்ட ரகு. இதுக்கு மேல என் மனசு தாங்காது” கேலி இழைந்தோடிய குரலில் அவள் கூற அந்த கண்களில் இருந்த வலி அவனை வாட்டியது.

ஆனாலும் திடமாய் நின்றான், “இல்ல இல்ல இது உனக்கு பிடிக்கும். கண்டிப்பா நீ வந்தே ஆகணும்”

அவள் கைகளை பிடிக்க பரபரத்த கைகளை அடக்க முடியாமல் மீண்டும் நெருங்க அவனை நெருங்க விடாமல் தூரத்தில் தள்ளி நிறுத்தினாள் கை காட்டி. ஆனந்தத்தில் மின்னிய ரகுவின் முகம் நொடியில் மாண்டது.

தானே விலகி சென்றாலும் பூனை குட்டியாக பின்னே வருபவள் இன்று முகம் சுருக்கி தள்ளி நிற்க சொல்கிறாள். அதுவும் அவள் நன்மைக்கு என உணர்ந்தவன் உடனே முகத்தில் சிரிப்பை பூக்க செய்து பிடிவாதமாக அவளை அழைத்து உணவகத்திற்கு சென்றான்.

காலை பதினோரு மணியை தாண்டியிருக்க அந்த இடம் வெறிச்சோடி காட்சியளித்தது. உணவகத்தின் ரிஸப்ஷனை தாண்டி தனி தனி சிறு திறந்த வெளி குடில்கள் போல் அமைக்கப்பட்டிருக்க அதில் குறைந்தது பத்து பேர் அமரக்கூடிய ஒரு குடிலுக்கு அழைத்து வந்தான்.

வழக்கம் போல் நண்பர்களை அழைப்பான் என திவ்யா எண்ணி அமைதியாக இருக்க அவனோ இவளை விட்டு சென்றுவிட்டான். ரகு சென்ற திசையை பார்த்தவள் மனம் சோர்ந்து போக, தன்னுடைய விதியை எண்ணி இரவெல்லாம் உறங்காதிருந்தது தலை வலியை பரிசளித்திருந்தது.

அதை விட அவன் நிராகரிப்பும், உணர்ச்சிபூர்வமாக நடந்த சிறு நெருக்கத்தை உதறி தள்ளி தவறு செய்தது போல் அவன் சென்றதும் அவளது பெண்மையை வதைத்திருந்தது.

அவள் முன்னே ஒருவர் தண்ணீரை வந்து வைக்க, கண்ணீரை வெளி காட்ட விரும்பாமல் தலையை அந்த டேபிள் மேல் வைத்து கண்களை மூட, சில நொடிகளில் அவள் தலையை மிருதுவாக யாரோ வருட உடனே சுயமடைந்து எழுந்து அமர்ந்தாள்.

கண்கள் தன்னை சுற்றி பார்க்க, அங்கு இருந்த காட்சியை பார்த்து பேச்சற்று போனாள் திவ்யா. தந்தை, அன்னை, சகோதரர்கள், அண்ணி என அவள் மொத்த குடும்பமும் அங்கு தான் இருந்தனர், கண்களில் குற்ற உணர்ச்சியோடு.

அனைவரையும் பார்த்தவள் அடுத்து தேடியது ரகுவை தான். கண்கள் எங்கும் அலைபாய, அவள் குடும்பத்திற்கு பின்னால் தான் ஒரு தூணில் சாய்ந்து இவர்களை ஒரு சன்ன சிரிப்போடு பார்த்து நின்றான்.

“எப்படிடா இருக்க?” ஆதூரமாக அவள் தலையை கோதி கண்களில் கண்ணீரோடு கேட்டார் திவ்யாவின் தந்தை.

எதுவும் பேசாமல் தலையை அவள் ஆட்ட, “அம்மாவை மன்னிச்சிரு திவ்யா ம்மா, அன்னைக்கு உன் மேல கோவத்துல அப்டி பேசிட்டேன்” அவள் கை பிடித்து கெஞ்சினார். திவ்யா அசரவில்லை.

கண்ணீர் மல்க தான் பேசியும் சிறிதும் இறங்காத மகளின் கோவம் புரிந்து மேலும் இறங்கி வந்தனர்.

“தெரியும் ம்மா நீ என் மேல எவ்ளோ கோவத்துல இருப்பனு. உன் நிலைமை தெரியாம அப்டி ஏதேதோ பேசிட்டோம். அம்மாகிட்ட பேசு ம்மா”

“திவி…” அவளது மூத்த சகோதரன் அவள் அருகே வந்து அமர அவனை பார்த்தாள் தலை திருப்பி.

வாயை திறந்து அழைத்துவிட்டான், ஆனால் பேச தயக்கம், குற்றவுணர்ச்சி இயலாமை என சகோதரனை அதிகம் தடுத்தது. அவனை முந்தி அடுத்தவன் வந்து அவள் கரம் பற்றி தானே தன் கன்னத்தில் அறைந்தான்,

“அப்டி என்ன தான் கோவமோ தெரியலடா செல்லம். நீ எங்களை விட்டு போனப்போ உன்ன தெரு தெருவா தேடி சுத்தினோம். எங்க தங்கச்சி மேல இருக்க நம்பிக்கைல.

எங்கையும் கிடைக்கல நீ. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு வந்து நின்ன, அதுக்கு அப்றம் எங்க போனாலும் உன்ன பத்தி தெரிஞ்சே எங்க மனசை வார்த்தையால குத்தணும்னு கேக்குறாங்க.

அதான் கோவம், கோவம், கண் மண் தெரியாத கோவம். நீ வந்து நிக்கவும் எல்லாத்தையும் சேர்த்து வச்சு கொட்டிட்டோம்” என்றவன் சகோதரியின் ஓய்ந்த தோற்றத்தை பார்த்து கண்ணீரை சட்டென துடைத்து மேலும் தொடர்ந்தான்,

“தப்பு தான். எல்லாமே தப்பு தான். உன் ஆசைய கேக்காம, உனக்கு பிடிச்சதை செய்ய விடாம, எங்க விருப்பம் போலவே ஆட்டி படச்சது தப்பு தான். அதுக்காக என்ன தண்டனை வேணா எங்களுக்கு குடு டா.

ஆனா இப்டி இருக்காத. உன்ன பாக்கவே எங்களுக்கு கஷ்டமா இருக்கு. நாங்க இருக்கோம் திவிம்மா. உனக்குன்னு உன் குடும்பம் எப்பவும் இருக்கும், நீ எதுக்கும் கவலைப்படாத உன் நிலைமையை நினைச்சு”

“என்ன என் நிலைமை?” என்றாள் ஒட்டாத குரலில்.

திவ்யாவின் இளைய சகோதரன் பிரபு சகோதரியின் விவாகரத்து பற்றி பேச தயங்கி வீட்டின் மற்றவர்களை பார்க்க, அவனுக்கு கண் மூடி திறந்து ஆறுதல் கூறிய பெரிய சகோதரன் மனைவி அவனை எழ கூறி, தான் திவ்யா அருகில் அமர்ந்தாள்.

“ரகு அண்ணா சொன்னாங்கமா உங்க டிவோர்ஸ் பத்தி”

உணர்ச்சியற்ற பார்வையோடு தூரம் நின்றவனை வெறித்து பார்த்தாள் திவ்யா. அவள் பார்வை கண்டவன் தலை கோதி வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அந்த கண்கள் என்ன கூறுகின்றது என தெரியாமல்..

“அவங்க ஆஸ்திரேலியா போறத பத்தியும், உனக்கு ஒரு சப்போர்ட் வேணும்னும் சொன்னாங்க”

இந்த செய்தி அவள் சிறிதும் எதிர்பார்த்திராதது. வேதனையோடு அவனை பார்க்க, அவன் தான் அவளை பார்க்கவே இல்லையே.

திவ்யா வீட்டினர் பேசியதை எல்லாம் சற்று தள்ளி நின்று கேட்டான், அவளை யாராவது ஒரு வார்த்தை தவறாக பேசினால் கூட அவர்களை அடித்து துவைக்கும் எண்ணம் அவனிடம்.

ஆனால் அவளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அதன் பிறகு தான் வாக்கு கொடுத்தது போல் அவள் இருக்கும் திசையில் கூட திரும்ப கூடாதென்று முடிவோடு உறுதியாய் நின்றான்.

அதன் பிறகு ஏதேதோ அவளிடம் பேசினார்கள், திவ்யாவின் செவிகளில் அவள் அண்ணி கூறிய ரகுவை பற்றிய செய்தி மட்டுமே இருந்தது. மகளின் பார்வை மட்டுமல்லாது, சிந்தனை கூட ரகுவிடம் மட்டுமே இருப்பதாய் தோன்ற, அவள் தந்தை அவனிடம் சென்றார்.

அவரை தன் அருகில் உணர்ந்ததும், “சாரி சாப்பிட்டீங்களானு கூட கேக்கல. ஏதாவது சொல்லவா?” என்றான் தன்மையாக.

அவருக்கு அவனிடம் பேச பெருத்த தயக்கம். அடித்து மிதித்து, அவமானப்படுத்தி, அசிங்கமாக பேசியும் பிரிவின் போதும் மகளுக்காக துடிப்பவன் காதல் தங்கள் கௌரவத்தை விட பெரிதாக தோன்றியது.

“அதெல்லாம் வேணாம் ப்பா” என்றவர் மகளை பார்த்து மீண்டும் அவனிடம் வந்தார்,

“உங்களுக்குள்ள என்ன மன கசப்பு இருக்குனு இந்த பிரிவை தேடுறீங்க?”

“அதெல்லாம் லிஸ்ட் பெருசா போகும். திவ்யாவை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, அவளே சொல்லுவா வரிசையா. அவ்ளோ வெறுப்பு என் மேல அவளுக்கு” இதழ்கள் கசப்பில் சிரித்தது.

“நீங்க அவசரப்படுற மாதிரி தெரியிது ப்பா எனக்கு. திவ்யா உங்கள பாக்குற அந்த பார்…”

“போதும் நிறுத்துறீங்களா?” அவ்விடத்தையே உலுக்கும் குரலில் சத்தமெடுத்து கத்தினாள்.

ரகுவிடம் பேசிக்கொண்டிருந்த அவள் தந்தை மகளின் சத்தத்தில் அவளை அடைந்து, “என்னடா ஆச்சு?” மனைவியை முறைத்து நின்ற மகளை நோக்கி வேகமாக நடந்தார் ரகுவை மறந்து.

“போதும் ப்பா. உங்களோட அன்ப எல்லாம் பாக்குறப்போ மூச்சு முட்டுது” கோவம் கண்களை சூழ்ந்திருந்தது அவளுக்கு.

“யாரும் உன்ன எதுவும் சொல்லலையே திவ்யா. நீ எதுக்கு இப்போ கோவப்படுற? சரி ஒடனே எல்லாம் முடிவெடுக்க வேணாம். எங்க மேல கோவம் போனதும் நம்ம வீட்டுக்கு வா” பொறுமையாக எடுத்துரைத்தான் அவள் மூத்த சகோதரன்.

“நம்ம வீடு இல்ல. அது உங்க வீடு” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

“என்ன திவி இப்டி பேசுற?”

“சும்மா வருத்தம் இருக்க மாதிரி பேசாதீங்க. எப்போ உங்க கெளரவம் தான் என்ன விட முக்கியம்னு சொன்னிங்களோ அன்னைக்கே உங்க பாசம் அளவு என்னனு புரிஞ்சு போச்சு. இப்போ உங்க மேல வெறுப்பு தான் இருக்கு”

திவ்யாவின் இரண்டாம் சகோதரன், “வீட்டுல மக ஓடி போனா அதை சந்தோசமா ஏத்துக்குற அளவு நாகரிகம் அதிகமான நாட்டுல நாம இல்ல திவ்யா, அப்போ உன்ன புரிஞ்சுக்கல இப்போ புரிஞ்சுகுட்டோம்”

“எப்பா ரொம்ப தான் புரிஞ்சுக்கிட்டீங்க. ஒரு மாசம் கெஞ்சுனேன் எனக்கு அவன் தான் வேணும், அவனை தான் லவ் பன்றேன்னு சொன்னப்போ அவசரமா ஒரு மாப்பிளையை பாத்து கல்யாணம் பேச தான் பாத்திங்களே தவற, ரகு குணம் எப்படி, அவன் குடும்பம் எப்படினு தெரிஞ்சுக்க எந்த முயற்சியும் எடுக்கல. அப்போ என்ன புரிஞ்சுக்காதவங்க இப்போ எதுக்கு வந்துருக்கீங்க?”

“அப்போ நாங்க சொன்னதை கேட்டு கல்யாணம் பண்ணிருந்தா இந்நேரம் நீ டிவோர்ஸ்னு நின்னுருக்க மாட்ட திவ்யா” என்றான் பிரபு.

“ஓ..” கசப்பாக தந்தையை பார்த்து, “என்ன தேடி வந்தது காரணம் நான் டிவோர்ஸ் வாங்க போறது. அதாவது உங்களுக்கு பிடிக்காத ரகுவை விட்டு வர்ற காரணம் தான் அப்டி தான?”

“எதுக்கும் எதுக்கும்டா முடிச்சு போடுற?” மகனை முறைத்து, அவள் தந்தை அவளை நெருங்க பின்னால் சென்று அவரை நிறுத்தினாள்.

“அது தான் உண்மை. நான் அவன் கூட சந்தோசமா வாழ்த்திருந்தா ஏதோ ஒரு மூலைல இருந்து என்ன சபிச்சிட்டே தான் இருப்பிங்க. இப்போ ஊர்ல சொல்லிக்கலாம்ல, என் பொண்ணு என் பேச்ச புரிஞ்சுகிட்டு வந்துட்டானு.

உங்களுக்கு உங்க கெளரவம் தான் இப்பவும் முக்கியம், மக வாழ்க்கை எக்கேடோ கேட்டு போகட்டும். என் வாழ்க்கைல ரகு இல்லனு தெரிஞ்சதும் என்ன பாக்க ஓடி வர்றது என்ன, அவன்கிட்ட பொறுமையா பேசுறது என்ன… அப்பப்பா. முடியல புல்லரிக்கிது”

“எதார்த்தமா பேசுனத்துக்கு கூட இப்டி அர்த்தம் எடுக்காத திவ்யா”

“சரி இன்னைக்கு எதார்த்தமா பேசுனீங்க, ரெண்டு வருஷம் முன்னாடி உங்க ஆளுங்கள எல்லாம் கூட்டிட்டு போய் ரகுவ அடிச்சீங்களே அதுவும் எதார்த்தமா நடந்ததா?”

“திவ்யா இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிட்டு இருக்க, அவங்க உன்ன பாக்க வந்துருக்காங்க” அவள் பேச்சு போகும் திசை பிடிக்காமல் இடையிட்டான் ரகு.

“நீ இதுக்கு நடுல வராத ரகு”

“அப்பா ஏதோ கோவத்துல பண்ணிட்டேன் டா. என்ன இப்ப மன்னிப்பு கேட்கணுமா? கேக்குறேன் அந்த பையன்கிட்ட”

“அப்பா நீங்க எதுக்கு யார் யார்கிட்டையோ மன்னிப்பு கேக்கணும்?” கோவமாக முன்னே வந்தான் அவள் மூத்த சகோதரன்.

“ம், இது தான் நீங்க. இத்தனை வருஷம் காட்டுன பாசம் எல்லாம் வெறும் வேஷம் தான். பொண்ணோட வாழ்க்கை பாழாகிடுச்சுனு பீல் பண்ணாம, சந்தோசமா ஓடி வந்துருக்கீங்க”

“நீயா கற்பனை பண்ணி பேசாம நிதானத்துக்கு வா திவ்யா. உன் மனசு சரியில்ல” அவள் அண்ணி அவள் கை பற்றி ஆறுதல் படுத்த முயன்றாள்.

“உங்க வீட்டுகார் உங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணா அது சரி, குடும்பமே திருவிழா மாதிரி கல்யாணத்தை நடத்துவாங்க. இதுவே நான் பண்ணா பாவம், கெளரவம் போய்டும், மானம் போய்டும். மரியாதை போய்டும்”

ஆதங்கம் தாங்காமல் அனலாக வந்தது திவ்யாவின் வார்த்தைகள்.

“தப்பு செய்யாதவங்க யாரும் இல்லையே ம்மா, அத திருத்தக்க தான் எல்லாரும் வந்துருக்கோம்” என்றாள் மீண்டும் அவள் அண்ணி.

“ஓ அப்போ உங்க காதலுக்கு சரி சொன்னபோவே என்ன பாத்து பேசிருக்கலாமே, உங்களுக்கே கல்யாணம் ஆகி ஒரு வருசமாச்சு. நேத்து வரைக்கும் என்ன தேடி வர யாருக்குமே மனசு வரல.

ரகுவ அடிச்சு மிரட்டுன உங்க மாமா, அதே மாதிரி லவ் பண்ண தன்னோட பையனுக்கு அந்த நிலைமை வந்திருந்தா அப்போவும் இதே மாதிரி தான் இருந்திருப்பாரா? போலீஸ், கோர்ட்னு உங்க வீட்டு ஆளுங்கள இழுத்துருக்க மாட்டாரு?

ஆனா ரகு அம்மா அப்பா அப்டி இல்ல, மகனை ஏத்துக்க முடியலைனாலும் அவனுக்கு பிடிச்சதை செஞ்சு சந்தோசமா இருக்கட்டும்னு விட்டாங்க. அவங்க எங்க, காசு பணம்னு உயிரை விடுற உங்க மாமா குடும்பம் எங்க?”

“திவி, ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. விடு எல்லாத்தையும். வா வீட்டுக்கு. புதுசா வாழ்க்கையை ஆரமி”

“என்னோட சந்தோசத்தை பாத்து அழுது, துக்கத்துல போலியா கூட நிக்க வர்ற நீங்க வேணாம். எனக்கு நான் போதும். தயவு செஞ்சு எல்லாரும் போங்க”

ரகு, “திவ்யா உன்ன தேடி வந்த பெரியவங்கள பாத்து இப்படியா பேசுவ?”

“இல்ல தம்பி, விடுங்க. நாங்க பண்ண தப்புக்கு எங்க பொண்ணு பேசிட்டா. அவளோட ஆதங்கம் அப்படிப்பட்டது” மகளை பார்த்து கண்ணீர் பெருகி நின்ற அவள் அன்னை ரகுவை தடுத்தார்.

திவ்யாவுக்கு அங்கு நிற்க பிடிக்கவில்லை. கோவம், இயலாமை, அழுகை, சுய பச்சாதாபம் போன்ற உணர்வுகளுக்கும் சிக்கி தவித்து அங்கிருந்த எவருக்கும் தன்னுடைய நிலையை எடுத்துக்காட்ட விரும்பாமல் அவ்விடத்தை விட்டு அகல, செல்லும் அவளையே சுருங்கிய முகத்தோடு பார்த்த அவள் குடும்பத்தினரின் தவிப்பு புரிந்தவனாக தான் பேசி பார்ப்பதாக கூறி அவளை தேடி குடிலுக்கு சென்றான் ரகு.

திவ்யா தன்னுடைய உடைகளை எடுத்து வைக்கும் முனைப்போடு அனைத்தையும் திணித்து உடையை கூட மாற்றாமல் தயாராக, கதவை திறந்து வந்த ரகு அவள் கையை பிடித்து,

“என்ன ஆச்சு திவ்யா உனக்கு? இந்த நாள் வராதானு எத்தனை நாள் பீல் பண்ணிருக்க, இப்போ ஏன் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுன?” தன்மையாக கேட்டவன் கையை உதறி பிடிவாதமாக வெளியேற வந்தவளை மீண்டும் பிடித்து நிறுத்தினான்.

“ஏன்டி இப்டி பைத்தியம் பிடிச்சு அலையிற?” சற்று கோவம் வெளியிட அதட்டினான்.

“ஆமாடா பைத்தியம் தான். செருப்பாலேயே அடி வாங்குவேன்னு தெரிஞ்சும் மறுபடியும் மறுபடியும் உன்கிட்டயே ஓடி வருது பாரு இந்த மனசு அது பைத்தியம் தான். உனக்கு நான் உன்ன விட்டு போகணும், அப்டி தான? போறேன், நீ அந்த உன்னோட சோ கால்ட் ப்ரன்டோட சந்தோசமா ஃபாரின்ல இரு. நான் போறேன்”

கோவமாக கூறி வெளியேறியவள் வார்த்தைகள் அவன் மூளை நரம்புகளை சென்று சேரவே சில நொடிகள் தேவைப்பட்டன. அந்த வார்த்தைகள் தந்த அதிர்வில் அதன் பொருள் உணர்ந்து சுயநினைவுக்கு வந்தவன் மனமும் மூளையும் செயல்பட மறந்து நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!