Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் வேண்டிநிற்கும் வரம் நீயே

வரம் நீயே 5

இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. அரசன் திருச்சியில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையின் முன்பு, தன் காரை நிறுத்தினான்.

கைபேசியை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கீழே இறங்கியவன், சுற்றியும் வேடிக்கை பார்த்தான். மருத்துவமனைக்கு உரிய பரபரப்போடு இறங்கிக் கொண்டிருந்தது அந்த மருத்துவமனை. காருக்குள் இருந்த பழங்கள் நிறைந்த பையை எடுத்துக் கொண்டு, காரை பூட்டினான்.

முடியை ஒரு கையால் கோதியபடி, அங்கிருந்த கேமராக்களை கண்களால் அலசியவாரே உள்ளே நுழைய, “ஹேய் அரசன் சார்” என்று ஆச்சரியமான குரல் கேட்டது.

மாதவன் அவனை நோக்கி வர, அரசன் புன்னகைத்தான்.



Advertisement

“ஹலோ டாக்டர். எப்படி இருக்கீங்க?”

“ஃபைன். அடிக்கடி மீட் பண்ணுறோம்ல? நீங்க இங்க? உடம்பு எதுவும் சரியில்லயா?”

“இல்ல டாக்டர். வேற வேலையா வந்தேன். நீங்க இங்கயா வேலை பார்க்குறீங்க?”

Advertisement

“இல்ல. ஒருத்தர பார்க்க வந்தேன்.”

Advertisement

“சேம் பின்ச். நானும் பார்க்க தான் வந்தேன். ஆனா ஒரு பேஷண்ட்ட”

புன்னகை மலர, “பின்ச்னு பின்ச் பண்ணாம விட்டீங்க” என்று மாதவன் கிள்ளுவது போல் வர, அரசன் அசராமல் நின்றான்.

மாதவன் சிரித்து விட்டான்.

Advertisement

“தைரியம் சார் உங்களுக்கு. யார பார்க்கனும்? இங்க அட்மிட் பண்ணி இருக்காங்களா?”

“ஆமா. அல்சர் ஓவராகி அட்மிட் பண்ணிருக்காங்க. பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“ரூம் நம்பர் தெரியுமா? வாங்க கூட்டிட்டுப் போறேன்”

“இல்ல ஜெனரல் வார்ட்ல இருக்கதா சொன்னாங்க”

“ஓ.. வாங்க” என்று அழைத்துச் சென்று லிஃப்டில் நுழைந்தான்.

“கல்யாண வேலை எல்லாம் எப்படிப்போகுது டாக்டர்?”

“சூப்பரா போகுது. உங்களுக்கு இன்விடேஷன் கொடுக்கனும். எப்ப வீட்டுல இருப்பீங்க?”

“எனக்கே தெரியாதே. எதுக்கும் கிளம்பும் போது கால் பண்ணி கேட்டுட்டே வாங்க”

மாதவன் தலையசைக்க, லிஃப்ட் கதவு திறந்து விட்டது. வயிற்று பிரச்சனைகளால் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் மாதவன்.

“அதோ இருக்காங்க” என்று ஒருவனை அரசன் கைகாட்ட, மாதவனும் உடன் சென்றான்.

“எஸ்.பி சார்” என்று வேகமாக நோயாளியின் மனைவி எழ, “இருக்கட்டும். தூங்குறாரா?” என்று விசாரித்தான்.

“இப்ப தான் தூங்குறாரு. ஏங்க.. எஸ்.பி சார் வந்துருக்காரு” என்று எழுப்ப, மெத்தையில் சுருண்டு கிடந்த நல்லதம்பி கண் விழித்தார்.

“எப்படி இருக்கீங்க சார்? இப்போ வயிறு வலி ஓகே வா?”

“உட்காருங்க சார். எதோ இருக்கு” என்று நல்லதம்பி எழ முயன்றும் முடியாமல் பதில் சொன்னார்.

படுக்கையை உயர்த்தி விட்டார் நல்லதம்பியின் மனைவி.

“இவங்க..” என்று மாதவனை பார்க்க, “ஃப்ரண்டு. இங்க பெட் தேடி அலையாம கூட்டிட்டு வந்தாங்க” என்றான் அரசன்.

“ஓகே நீங்க பேசுங்க. நான் கிளம்புறேன். டேக் கேர்” என்று பொதுவாக சொல்லியபடி மாதவன் கிளம்பி விட்டான்.

அங்கிருந்த ஒற்றை நாற்காலியை இழுத்துப்போட்டு, “உட்காருங்க சார். நான் போய் காபி வாங்கிட்டு வர்ரேன்” என்றார் நல்லதம்பியின் மனைவி.

“இல்லங்க இருக்கட்டும்”

“பரவாயில்ல சார். இவருக்கும் ஜூஸ் வாங்கனும். வந்துடுறேன்” என்று ஃப்ளாஸ்க்கோடு நகர, அரசன் நல்லதம்பியின் அருகே அமர்ந்தான்.

“என்ன சார் விசயம்? சீரியஸா இருக்கீங்க”

“விசயம் கொஞ்சம் சீரியஸ் தான்.” என்றவன், அவரருகே வந்து விவரங்களை கூறினான்.

அருகிலிருந்த மெத்தைக்காரனக்கு கூட கேட்காத அளவு, மெல்லிய குரலில் விளக்கி முடிக்க, “ஓகே சார். நான் பார்த்துக்கிறேன்” என்றார் நல்லதம்பி.

அவருடைய மனைவி காபியோடு வந்து விட, நலம் விசாரித்து விட்டுக் கிளம்பி விட்டான்.

அடுத்த இரண்டு நாட்களும் மின்னல் வேகத்தில் கடந்து போக, அரசன் அதே மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர் பிரகாசம் முன்பு அமர்ந்து இருந்தான்.

இந்த பிரகாசத்தின் விவரங்களை தான் நல்லதம்பியிடம் கேட்டிருந்தான் அரசன். அவர் மருத்துவமனையில் இருக்கும் நேரம். சாப்பிடப்போகும் நேரம். எல்லாவற்றையும் இரண்டு நாட்களாக சுற்றித் தெரிந்து கொண்டு, அரசனிடம் கூறி விட்டார் நல்லதம்பி. இப்போது அவர் முன்பு தான் அரசன் அமர்ந்து இருந்தான். கண்கள் அந்த அறையை நன்றாக வட்டமடித்துக் கொண்டிருந்தது.

அவனுடன் வந்திருந்த மற்றொரு காவலன், தலை வலிக்கிறது என்று காரணங்களை அடிக்கினான். அவனை பரிசோதித்து விட்டு, எம்.ஆர்.ஐ எடுக்க பணித்தார் பிரகாசம்.

“எங்க போகனும்னு நர்ஸ் சொல்லுவாங்க” என்று நர்ஸை உடன் அனுப்பி விட, அரசனும் அவர்களோடு வெளியே வந்து விட்டான்.

நர்ஸ் பாதையை விளக்க, “ஹய்யோ.. புரியலயே.. லிஃப்ட் மட்டும் எங்க இருக்குனு சொல்லுங்க. நான் போய்க்கிறேன்” என்றான் அவன்.

நர்ஸ் லிஃப்ட்டை காட்ட நடக்க, “நீங்க மேல போங்க. நான் கால் பேசிட்டு வர்ரேன்” என்று அரசன் பின் தங்கினான்.

மற்ற இருவரும் செல்ல, அரசன் பிரகாசம் இருக்கும் அறைக்கே திரும்ப வந்தான். வழக்கமாக பிரகாசம் உணவுண்ண செல்லும் நேரம் வர, அவர் கிளம்பி விட்டார்.

அரசன் ஒன்றும் தெரியாதது போல், அந்த அறைக்கதவை இரண்டு முறை தட்டி விட்டு, உள்ளே நுழைந்து விட்டான்.

கணினி அணைக்கப்படாமல் இருக்க, சதீஷ் சொன்ன வேலையை அதில் முடித்து விட்டு வேகமாக வெளியே வர, நர்ஸ் வந்து நின்றார்.

“என்ன சார்?”

“டாக்டர்…”

“அவர் சாப்பிடப்போயிருப்பாரு. ஏன்?”

“இல்ல.. அவருக்கு ரொம்ப தலைவலிக்குதுனு சொல்லுறாரு. எதாவது பயப்படுற மாதிரி இருக்குமோனு கேட்கலாம்னு. அவரு முன்னாடி கேட்க முடியாது இல்லையா?”

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அரசன் பேசியதை, நர்ஸ் நம்பியே விட்டார்.

“அப்படிலாம் எதுவும் இருக்காது சார். நீங்க எம்.ஆர்.ஐ எடுத்துட்டு வாங்க. பார்த்துட்டு சொல்லுவாங்க”

பிறகு நல்லபிள்ளையாக செக் அப் முடித்து, மருத்துவரின் அறிவுரையும் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டனர்.

மருத்துவமனையில் இருந்து கிளம்பியதும் சதீஷுக்கு அழைக்க, “ரொம்ப செக்யூர்ட்டா தான் வச்சுருக்காங்க. பேஷண்ட் டீடைல்ஸ் இல்லையா? நாளைக்குள்ள நீங்க கேட்டத சொல்லுறேன்” என்று வைத்து விட்டான்.

சதீஷ் ஐடி படித்தவன். ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையில் இருப்பவன். அவனுக்கு ஹேக்கிங் எல்லாம் பொழுது போக்கு சம்பந்தபட்டது. அதற்காக அவன் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவது இல்லை. அதனால் அரசனின் நம்பிக்கையை பெற்று இருந்தான்.

அவனிடம் பொறுப்பை கொடுத்து விட்டு, அரசன் காத்திருக்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே காவல்துறை பணியில் இருக்கும் ஒருவரிடம், பிரகாசத்தின் வங்கி கணக்குகளை ஆராயச்சொல்லி கேட்டு இருந்தான். ஆனால் அதில் எதுவும் சந்தேகப்படும் படி இல்லை.

“நான் தான் தப்பா நினைக்கிறனோ?” என்று தனக்குத்தானே கேட்டபடி காரை மதுரை நோக்கித்திருப்பிக் கொண்டிருக்க, கைபேசி அதிர ஆரம்பித்தது.

“சொல்லுங்கண்ணே” என்று ஸ்பீக்கரில் போட்டு விட்டு பேச, “அரசு.. நீ சொன்ன அட்ரஸுக்கு அடுத்த பார்ஸல் ரெடிபா. எப்ப அனுப்புறது?” என்று கேட்டார்.

வைசாலியின் நினைவு வந்ததும், அவன் முகத்தில் ஒரு புன்னகையும் காரணமில்லாமலே வந்து சேர்ந்தது.

“உடனே அனுப்புங்கணே. அங்க கல்யாண வீடு. தேவைப்படும்”

“ஆனா அரசு.. காசே இல்லாம இப்படி அனுப்பிட்டு இருக்கோமே. அம்மா கிட்ட என்ன சொல்ல?”

“நான் தான் சொன்னேன்னு சொல்லுங்க. அம்மா அடுத்து எதுவும் கேட்க மாட்டாங்க”

“சரிபா. நான் வச்சுடுறேன்.”

“சரிங்கணே”

“அரசு”

“ம்ம்..”

“ஊருக்கு வரலாம்ல? பார்த்து வருசமாகப்போகுது. போன திருவிழாவுக்கும் வரல”

“என் வேலை என்ன நினைச்சதும் விட்டுட்டு ஓடி வர்ரதா? அப்படி வந்தா நாடு என்ன ஆகுறது? நேரம் கிடைச்சதும் கண்டிப்பா வர்ரேன்”

“சரிபா. அம்மா வருத்தமா இருந்தாங்களேனு சொன்னேன். வேற ஒன்னும் இல்ல. வச்சுடுறேன்” என்று துண்டித்து விட்டார்.

அரசனுக்கு என்னவோ ஊருக்குப்போகப் பிடிக்கவே இல்லை. மனம் போகாதே என்று கூறிக் கொண்டே இருக்க, வேலை இருப்பதாக எல்லோரிடமும் சொல்லி விட்டு சுற்றுகிறான்.

ஊரை பற்றிய நினைவை ஒதுக்கி விட்டு, வைசாலியை பற்றி நினைக்க ஆரம்பித்தான். முகத்தில் இருந்த சோர்வு பறந்து விட, ‘இன்னேரம் வேலைய விட்டு வீட்டுக்கு போயிருப்பா தானே?’ என்று நினைத்தவன் உடனே அவளை அழைத்து விட்டான்.

வைசாலியும் எடுத்து, “ஹலோ போலீஸ் ஆபிசர். ஹவ் ஆர் யூ?” என்றாள் நக்கல் குரலில்.

“என்ன கோபமா பேசுற?”

“நான் கோபமா இல்ல காண்டுல இருக்கேன்”

“என் மேலயா?”

“நோ. என்னை பெத்த அம்மா மேல”

“பாவம் அவங்க”

“அவங்களா? நான் தான் பாவம்.‌ நீங்க எனக்காக தானே முறுக்கு அனுப்புனீங்க? இங்க அம்மா வந்த எல்லாருக்கும் அள்ளி வச்சுக் கொடுத்துட்டாங்க. இப்ப வந்து கேட்டா, இவ்வளவு நாளா வச்சுருப்பாங்க? தீர்ந்து போச்சுனு சொல்லிட்டாங்க. ஒரே கடுப்பு. அந்த கடுப்புல கத்திட்டு இருக்கப்போ கால் பண்ணிட்டீங்க”

“உனக்கு அந்த முறுக்கு அவ்வளவு பிடிச்சுடுக்குனா, எங்க ஊருக்கு வா. தினமும் வீட்டுல முறுக்கு இருக்கும். சாப்பிட்டுப்ப”

“அப்ப பர்மெணென்ட்டா அங்கயே தங்கிடுவேன். பரவாயில்லையா?”

“ஆல்வேய்ஸ் வெல்கம்” என்று அரசன் சிரித்தான்.

சொன்னது நடந்தே விடும் என்று உணராமல், இருவரும் சேர்ந்தே சிரித்தனர்.

“சரி எதுக்கு கூப்பிட்டீங்க?”

“சும்மா.. உன் கல்யாண வேலை எப்படிப்போகுது? என்ன நடக்குதுனு விசாரிக்கலாம்னு தான்”

வைசாலியும் திருமண ஏற்பாடு கதைகளை சொல்ல ஆரம்பிக்க, அரசனுக்கு நேரம் பறந்தது. களைப்பு எதுவும் தெரியாமல் மதுரை வந்து சேர்ந்து விட்டான்.

_______

ஆதிப்பட்டி கிராமம்.

சிறிய ஊர் அது. மிகக்குறைவான மக்கள் தொகை இருந்தாலும் வளமான ஊர் தான். அங்கு சற்று அதிக வசதி படைத்தவர்கள், நான்கைந்து குடும்பங்கள் மட்டுமே. அதில் ஒன்று அரசேந்திரனின் குடும்பம்.

அரசேந்திரனின் தாத்தாவும் பாட்டியும் அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களது வாழ்வு மொத்தமுமே அந்த ஊரை சுற்றித்தான் இருந்தது.

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒன்று மகாலட்சுமி. மற்றொன்று மகேந்திரன்.

மகாலட்சுமியை அதே ஊரில் உள்ள மற்றொரு குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தனர். மகேந்திரனுக்கு அருகே இருக்கும் ஊரிலிருந்து பெண் எடுத்தனர். அவர் அமுதவல்லி.

மகேந்திரன் அமுதவல்லிக்குப்பிறந்த இரண்டு பிள்ளைகள் அஞ்சனாவும் அரசேந்திரனும்.

மகலாட்சுமிக்கும் இரண்டு பெண்கள் பிறந்து இருந்தனர். இருவருமே இப்போது வெவ்வேறு ஊரில் திருமணம் முடிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மகேந்திரன் அந்த ஊரிலேயே இருக்காமல், படித்து வெளியே சென்று வங்கி ஒன்றில் வேலை பார்க்க, அங்கு தான் அரசேந்திரனும் அஞ்சனாவும் படித்தனர்.

அதே ஊருக்கு மாற்றல் கிடைத்து வந்திருந்தார், வைசாலியின் தந்தை ஜோதிலிங்கம். அதனால் வைசாலி, அரசேந்திரன் அஞ்சனா படிக்கும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தாள்.

ஒரே பள்ளியில் படித்ததால் இருவரும் நண்பர்களானார்கள்.

பள்ளி முடிந்து அரசேந்திரன் கல்லூரி செல்லவும், அஞ்சனாவின் திருமணம் முடிந்தது. அடுத்த சில மாதங்களில் மகேந்திரன் இறந்து போக, மகனை பறி கொடுத்த தாத்தா பாட்டி இருவருமே அடுத்தடுத்து இறந்து விட்டனர்.

அமுதவல்லி தனித்து விடப்பட்டார். ஆனாலும் அவர் என்றும் துவண்டது இல்லை. படித்துக் கொண்டிருந்த மகன் ஊருக்கு வருவதாக கூறியும், மறுத்து விட்டார்.

தானே தன் மாமனாரின் அத்தனை தொழில்களையும் கையில் எடுத்துக் கொண்டார். ஆளாளுக்கு அவரை மூலையில் முடக்கி விடத்துடித்து, ஏமாந்து நின்றனர்.

அமுதவல்லி அமைதியானவர். அதிகம் கோபப்பட மாட்டார். முகத்தில் எப்போதுமே சாந்தம் இருக்கும். அந்த குணங்களை வைத்து அவரை எடை போட்ட அத்தனை பேருக்கும், பதில் பலமாகவே கொடுத்தார்.

மகேந்திரன் உடல் நிலை சரியில்லாமல் போனதும், அஞ்சனாவை தகுதியே இல்லாதவர்கள் கூட பெண் கேட்டு வந்தனர்.

“நீயே படுத்த படுக்கையாகிட்ட.. இனி ஓடியாடி சம்பாதிக்கவா போற? பேசாம வர்ர வரனுக்கு கட்டிக் கொடு” என்று உபதேசம் செய்யக்கிளம்பினர்.

அப்போதெல்லாம், அஞ்சனாவின் தாத்தா தான் சண்டையிட்டு துரத்தியடித்தார்.

இதை எல்லாம் பார்த்து அமுதவல்லி, சத்தமில்லாமல் ஒரு காரியம் செய்திருந்தார்.

அது சில நாட்களுக்குப்பிறகு தான் தெரிந்தது.

சிவகங்கை மாவட்ட கலெக்டரான பார்த்த சாரதிக்கு, அஞ்சனாவை பெண் கேட்டு வந்திருந்தனர். அதை பார்த்து ஊரே மூக்கில் விரலை வைத்தது.

கலெக்டர் என்ற ஒரே காரணத்திற்காக, அஞ்சனா சம்மதம் சொல்லி விட்டாள். பார்த்தசாரதியோ அஞ்சனாவிடம் பேச வேண்டும் என்று நின்றான்.

“எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. ஆனா நல்லா கேட்டுக்கோ.. நான் லஞ்சம் வாங்காத ஆளு. என் மாச சம்பளத்துல தான் பொழைப்ப ஓட்டனும். கை சுத்தம்னு பல பிரச்சனைகளை விலைக்கி வாங்கி வாச்சுருக்கேன். அதோடவும் சேர்ந்து தான் வாழனும். இதுக்கெல்லாம் சரினு தோனுச்சுனா.. வா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லனா இப்பவே பேச்ச முடிச்சுடலாம்” என்று படபடவென பேசினான்.

அவனுக்கு முதலில் பார்த்த பெண்கள் வீட்டினர் எல்லோரும், அவன் கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். இல்லையென்றால் அவனுக்கு இருக்கும் உயிர் மிரட்டலை கண்டு அஞ்சினர். அப்படிப் பல சம்பந்தம் தட்டிப்போய் தான், அஞ்சனா வந்திருந்தாள்.

அவளுக்கு சேவை செய்வதில் கொள்ளை பிரியம். ஆனால், தானாக சம்பாதிக்காமல் பைசா கூட செலவு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

மாப்பிள்ளை கலெக்டர் என்று கேட்டதும், அவரோடு இருந்தால் சேவை செய்யலாம் என்ற ஒரே காரணத்திற்காக சம்மதித்து விட்டாள். பார்த்தசாரதியும் தெளிவாக பேச, உடனே திருமணம் நடந்து முடிந்தது.

ஊரில் இருக்கும் எவனோ ஒருவனுக்கு கட்டி வைப்பார்கள் என்று எதிர்பார்த்த கூட்டம், அஞ்சனாவின் திருமணத்தைப் பார்த்து அசந்து போனது.

அதன் பிறகு நடந்த அடுத்தடுத்த இழப்புகளில், பலர் அரசனிடம் தொழில் போய்விடும் என்றே நினைத்தனர். ஆனால், அமுதவல்லி விடவில்லை.

அரசன் அப்போது தான் ஐபிஎஸ் எழுத தயாராகிக் கொண்டிருந்தான். மகனை, வெளியூரில் இருந்தே படிக்கச் சொல்லி விட்டு, அவர்கள் குடும்பத்தின் விசுவாசிகளை துணையாக கொண்டு, தொழிலில் இரும்பு பெண்மணியாக மாறி இருந்தார் அமுதவல்லி. அவரால் மகனின் கனவுகளை களைத்துப்போட முடியாது. அதனால் குடும்ப தொழில், விவசாயம், தோப்புக்கள் எல்லாம் அவர் கையில் வந்தன.

அவரது உயரம், திறமை, நிமிர்வு எல்லாம் இன்னும் கூட ஊரில் பல பெண்களின் கண்ணை உறுத்தும்.

“புருஷன இழந்தாலும் நிமிர்ந்துட்டு திரியுறதெல்லாம் என்ன பழக்கமோ?” என்று ஜாடைமாடையாக அவரை மட்டம் தட்டிக் கொண்டிருந்தனர்.

நேராக வந்து பேசாதவரை எதற்கும் பதில் சொல்வதில்லை என்று, அமுதவல்லி தன் வேலையை பார்த்தார். அந்த அலட்சியம் பலரை அவரிடமிருந்து தள்ளி வைத்தது. ஆனால் அமுதவல்லி யாரிடமும் முகம் முறித்து இது வரை பேசியதே இல்லை.

இன்றும் கூட வேலையை கவனிக்கத்தான் வந்திருந்தார்.

சிறு குடிசை தொழிலாக ஆரம்பித்த முறுக்கு வியாபாரம், இன்று நன்றாக விரிந்து இருந்தது. தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்று விற்கும் அளவு வளர்ந்து இருந்தது.

எந்த கடைகளுக்கு? சூப்பர் மார்கெட்டிற்கு எவ்வளவு சென்றது? என்று கணக்கு பார்த்துக் கொண்டிருநதவர் கண்ணில் அது விழுந்தது.

பணம் எதுவும் வராமல், இரண்டு முறை இராமநாதபுரத்துக்கு சரக்கு சென்றிருந்தது.

“என்ன இது?” என்று கேட்க, “அரசு தான் அம்மா அனுப்பு சொன்னாரு” என்று பதில் வந்தது.

‘யாராவது ஃப்ரண்டுக்கா இருக்கும்’ என்று நினைத்தவர், மற்ற கணக்குகளை சரி பார்த்து முடித்தார்.

திடீரென தோன்ற, “அரசுக்கு போன் போடுங்க” என்றார்.

அங்கு முக்கியப்பணியில் இருப்பவர் அரசனை அழைத்தார். அழைப்பை அவன் ஏற்கவில்லை.

“சரி விடுங்க” என்று விட்டு விட்டார்.

ஒரு மணி நேரம் கழித்து அரசன் திரும்ப கூப்பிட்டான்.

“என்னணே கால் பண்ணிருக்கீங்க?”

“அது அம்மா தான் கூப்பிடச்சொன்னாங்க”

“என்ன விசயம்?”

“இன்னைக்கு கணக்க பார்க்கும் போது நீ அனுப்ப சொன்னத பார்த்தாங்க. நீ சொன்ன மாதிரி சொன்னேன். அதான் கூப்பிடச் சொன்னாங்க”

பேசிக் கொண்டே அமுதவல்லியிடம் வந்து விட்டார்.

“அரசு தம்பி பேசுதுமா”

“காசு கேளுங்க” என்றார் அமுதவல்லி.

அவர் திருதிருவென முழிக்க, அமுதவல்லி கைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு விட்டு கண்ணை காட்டினார்.

“என்னணே பேசிட்டே இருந்து சைலண்ட் ஆகிட்டீங்க?”

“அது வந்து.. அம்மா காசு கேட்குறாங்க அரசு”

“என்ன?” என்று குழப்பமாக கேட்டவன் உடனே புரிந்து கொண்டு, “ஓஓ.. காசா?” என்றான்.

“ஆமா”

“நானே பாவம். லஞ்சம் கூட வாங்காத போலீஸ்காரன். என் கிட்ட காசு இல்லனே. வேணும்னா ஒன்னு பண்ணுங்க. அதே ஊருல எங்கம்மா அமுதவல்லி இருப்பாங்க. என் பேர சொல்லி கேளுங்க நிறைய கொடுப்பாங்க.”

“கொடுப்பேன் கொடுப்பேன். நிறைய அடி தான் கொடுப்பேன்”

அமுதவல்லி இடையில் பேச, அரசன் சிரித்தான்.

அழைப்பை துண்டித்து விட்டு, தன் கைபேசியில் மகனை அழைத்தார் அமுதா.

“யாருக்கு அனுப்பி இருக்க? என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல?”

“வைசாலிக்கு மா.. என் கூட ஸ்கூல்ல படிச்சதே.. அந்த பொண்ணு. இப்ப தான் மீட் பண்ணேன்.” என்று ஆரம்பித்தவன், கதை கதையாக சொல்லி முடித்தான்.

“ஓ.. சரி கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழட்டும் புள்ள. ரொம்ப வருசம் ஆச்சா.. முகம் கூட நினைவு வரல.”

“நான் ஃபோட்டோ இருந்தா அனுப்புறேன். அப்புறம் என் மேல கோவம் போயிடுச்சா?”

“போச்சு போச்சு. நல்ல வேளை நீ ஊருக்கு வரலனு தோனுச்சு. இங்க இன்னும் நிறைய நடந்துட்டு இருக்கு.”

“ஏன்மா இப்படி பண்ணுறாங்க?”

“என்ன பண்ண? நடக்குறதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு?”

“நான் வந்தேன்னா பெருசா பேசி விட்டுருவேன். ஆனா அங்க வரவே எனக்கு பிடிக்கல.”

“சரி சரி இத விடு. போய் வேலைய பாரு. இங்க எனக்கும் வேலை இருக்கு”

அமுதவல்லி மகனை அமைதிபடுத்தி விட்டு அமர்ந்தார். மனதில் தங்கமீனாட்சி எழுந்தாள். அவளை நினைக்கும் போது வருத்தமாக இருந்தது.

‘அந்த பிள்ளை வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்கொடு தாயே’ என்று கடவுளிடம் கோரிக்கை வைக்கத்தான் முடிந்தது அவரால்.

வரம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!