Skip to content
Post Views: 6,643
அத்தியாயம் – 10
“உன் அத்தான் வந்தாக…
Advertisement
ஒரு முத்தம் கொடுத்தாக..
உன் அச்சம் வெக்கம் கூச்சம்…
அதை அள்ளி ருசிப்பாக…”
Advertisement
Advertisement
தன்னருகில் நடந்து வந்து கொண்டிருந்த வந்தனாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மலர் இவ்வாறு பாட்டுப் படிக்க,
தன் நடையை நிறுத்தி விட்டு அவளை நன்றாய் திரும்பி முறைத்தாள் வந்தனா.
Advertisement
“என்னா?? என்ன மொறைப்பு?? உண்மையைத் தானே பாடுனேன்” என மலரும் அசராது கேட்கவும்,
“கிழிச்ச!!” என திட்டிவிட்டு வந்தனா முன்னே நடந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட,
“என்னாவாம் இந்த பொண்ணுக்கு??” என யோசனையுடன் அவளைப் பின்தொடர்ந்தாள் மலர்.
“என்னா புள்ளை முகமே வாட்டமா இருக்குது!! நியாயமா இந்நேரம் அந்த அண்ணன் கூட பேசிட்டு வந்ததுக்கு நீ வெட்கத்தில செவந்து போய் வருவ.. உன் மூஞ்சில இருக்க செவப்பு கலரை எடுத்து எங்க மச்சிக்கு(மாடி) பெயிண்ட் அடிச்சுப்புடலாம்ன்னு பார்த்தேன்.. இப்படி என்னை ஏமாத்திட்டியே!!” என மலர் உச்சுக்கொட்ட,
அவளை முடிந்தமட்டும் முறைத்த வந்தனா பதிலேதும் பேசாமல் திரும்பிக்கொள்ள, மலரின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.
“ஏன் புள்ளை எல்லாம் சரிதான?? என்ன பேசுன அவுககிட்ட?? எங்கிட்ட உளறுன மாதிரி அவங்ககிட்டயும் பேசிவச்சியா??” என சந்தேகமாய் அவளைப் பார்த்து மலர் கேட்க,
வந்தனாவிற்கு மீண்டும் சற்று முன் வினய்யின் கண்களில் தெரிந்த அபரிமிதமான காதலும், அதைத் தான் மறுத்து அவனை விட்டு விலகி ஓடி வந்ததும் நினைவில் வர, அவளின் மதிமுகமோ அவளின் நிலையை எண்ணி கசங்கியது.
“கிடைக்காதுன்னு தெரிஞ்சும் ஆசைப்படுறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இல்லையா மலர்??? நான் தான் இப்படி முட்டாளா இருக்கேன்.. அட்லீஸ்ட் அவராச்சும் நிம்மதியா இருக்கட்டுமே.. அதான் வேண்டாம்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டு வந்துட்டேன்.. இனியாச்சும் என் பின்னாடி வராம இருந்தா சந்தோஷம்” என்று அவள் எங்கோ பார்த்துக் கொண்டு வெற்றுக் குரலில் கூறவும், மலருக்கு தோழியை எண்ணி ஆதங்கமாய் இருந்தது, இப்படி அவளையும் ஏமாற்றி தன்னைத்தானே தண்டித்துக் கொள்கிறாளே என.
வினய்யைப் பார்த்தவரையில் நல்லவன் போல் தெரிந்தாலும், முழுதாய் அவனைப் பற்றி அறிந்து கொள்ளாமல் வந்தனாவிடம் பேசி அவள் மனதை இன்னும் கலைக்க வேண்டாம் என முடிவெடுத்த மலரும், அந்தப்பேச்சை அத்துடன் விட்டுவிட்டு வேறு பேச்சுகளுக்கு தாவி, முடிந்தமட்டும் வந்தனாவின் மனநிலையை மாற்ற முயன்றாள்.
தோழியின் முயற்சி புரிந்த வந்தனாவும், முடிந்தவரை தன் காதலையும், கவலையையும் தனக்குள்ளேயே பூட்டி புதைத்து வைக்க முடிவு செய்தவள், வெளியே தன்னை இயல்பாக காட்டிக் கொள்ளவே முயன்றாள்.
தூரத்தில் காரில் இருந்து வந்தனாவின் முகமாற்றம் ஒவ்வொன்றையும் அவதானித்துக் கொண்டிருந்த வினய்க்கு, அவளின் முயற்சி நன்றாகவே புரிந்தது.
“எதுக்காக உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற ஏஞ்சல்??” என தனக்குள் கேட்டுக்கொண்டவன்,
“எனக்குள்ள வந்த மாதிரி என் வாழ்க்கைக்குள்ளயும் சீக்கிரம் வந்திடு ஏஞ்சல்!! உன்னை எதுவும் கஷ்டப்படுத்தாம நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிக்கொண்டவன், அவள் பேருந்தில் ஏறிச் செல்லும் வரை அங்கேயே காத்துக் கிடந்து, அவளை மொத்தமாய் தன் கண்களுக்குள் நிரப்பி, மனதிற்குள் சேமித்து வைத்துக் கொண்டே திருச்சியில் இருந்து கிளம்பினான்.
இங்கே நாட்டரசனின் வீட்டில் பெரும் வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது கணவனுக்கும் மனைவிக்கும்.
“உங்களுக்கு என்ன மண்டை எதுவும் கலங்கிப்போச்சா?? இன்னும் படிச்சே முடிக்காத புள்ளைக்கு மாப்பிள்ளையை பார்க்குறேன் வேப்பிலையை கோர்க்குறேன்னு ஆடிட்டு இருக்கீங்க???” என இளவரசி என்றும் இல்லாத கோபத்துடன் நாட்டரசனிடம் பாய,
நாட்டரசனோ அவருக்கு சற்றும் குறைவில்லா கோபத்துடன், “என் புள்ளைக்கு எப்போ என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்.. நீ உன் வாயை மூடிட்டு நான் சொல்றதை மட்டும் செய்!!” என அதிகாரமாய் கர்ஜிக்க,
“அப்படியெல்லாம் எல்லா விசயத்திலும் அமைதியா இருக்க முடியாதுங்க.. அவ உங்களுக்கு மட்டும் புள்ளை இல்லை.. உங்க வறட்டு கௌரவத்துக்கு என் புள்ளை வாழ்க்கையை பலி கொடுக்க நான் விட மாட்டேன்” என இளவரசியும் உன்னை விட்டேனா பார் என சிலிர்த்துக் கொண்டு நிற்க,
நாட்டரசனுக்கு அது இன்னும் இன்னும் கோபத்தைத் தூண்டியது.
இத்தனை வருடங்களில், நாட்டரசனின் பேச்சிற்கு முடிந்தவரை கட்டுப்பட்டு நடக்கும் இளவரசி, பிடிக்காத சில விஷயங்களை தன்மையாக, பேசும் விதத்தில் பேசி மறுத்திருக்க, இத்தனை வருடமும் அவர்களின் இல்லறம் நல்லறமாக சென்று கொண்டிருந்தது.
இன்று மகளின் எதிர்காலம் என்று வருகையில், இளவரசிக்கு இடம், பொருள், ஏவல் பார்த்து பேச பொறுமையில்லை, அதுவே அவரின் கணவருக்கு இன்னும் தான் நினைத்ததை நடத்திக் காட்டுவேன் எனும் பிடிவாதத்தை அதிகரித்தது என பாவம் அப்போது அவருக்கு புரியவில்லை.
படிப்பு முடியப் போகிறது அடுத்து திருமணம் செய்யலாம் என ஒரு தகப்பனாய் அவர் கேட்டிருந்தால், நிச்சயம் இளவரசி அதற்கு சம்மதித்திருக்கக் கூடும். ஆனால் நாட்டாரசனோ, எங்கே அன்று நடேசன் சவால் விட்டது போல் எதுவும் நடந்துவிடுமோ என அஞ்சியே முடிந்தளவு வந்தனாவை விரைவில் திருமணம் செய்து அனுப்பி, தன் கௌரவத்தை நிலைநாட்ட வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தார். அதுவே இளவரசியின் கோபத்திற்கு தூபம் போட, மகளுக்காக கணவரை எதிர்த்து நின்றார்.
“அப்படி என்ன என் புள்ளை மேல உங்களுக்கு நம்பிக்கையில்லை.. அவ நீங்க சொல்றதை மட்டும் கேட்டு கிட்டத்தட்ட உங்க அடிமை மாதிரி தான வாழ்ந்துட்டு இருக்கா.. எவனோ வந்து என்னத்தையோ உளறிட்டு போனா என் மவளை சந்தேகப்பட்டு உடனே கல்யாணம் பண்ணி வைப்பீங்களா நீங்க?? எல்லாத்துக்கும் உங்க பேச்சைக்கேட்டு ஆட முடியாது.. நீங்க என்ன சொன்னாலும், என் புள்ளைக்கு இப்போ கல்யாணம் பண்ண மாட்டேன்” என இளவரசி விடாமல் கத்திக் கொண்டிருக்க,
நாட்டரசனின் பொறுமை கரையைக் கடந்து அங்கிருந்த கண்ணாடி மேசையை காலால் ஓங்கி அவர் உதைக்க, அடுத்த நொடி அது சில்லு சில்லாய் உடைந்து சிதறியிருந்தது.
அவரின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காமல் இளவரசி அதிர்ந்து போய் நிற்க, அவருக்கு எதிரே இதுவரை கண்டிராத ஒரு கோபத்துடன் உக்கிரமாய் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார் நாட்டரசன்.
“இனி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சு நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.. சங்கீதா கல்யாணம் முடிஞ்ச அடுத்த வாரம் நம்ம பொண்ணுக்கு நிச்சயம்.. மாப்பிள்ளை எல்லாம் நான் பார்த்துட்டேன்.. அதை உன் மனசுல நல்லா பதிச்சு வச்சுக்கோ.. இதை நிப்பாட்டனும்னோ இல்லை வேற ஏதாவது வம்பு பண்ணனும்னு நீ நினைச்சா இப்போவே நீ வீட்டை விட்டு கிளம்பிடு.. என் வீட்டுல இருக்காத!!!” என கோபத்தில் வார்த்தைகளை சிதற விட,
அது சரியாய் இளவரசியின் இதயத்தை குத்திக் கிழித்தது.
‘அவர் வீடாமே!!’ என அவரின் அதரங்கள் இகழ்ச்சியாக வளைய,
அவரின் மனநிலையை உணர்ந்துகொள்ளாமல் மேலும் வார்த்தைகளால் அவரை சிதறடித்தார் நாட்டரசன்.
“எனக்கு அடங்கி இருக்கதுனா இங்க இரு.. இல்லை நான் என் இஷ்டத்துக்கு தான் பண்ணுவேன்னு நின்னா இப்போவே பொட்டியைக் கட்டிட்டு உங்க அப்பன் வீட்டுக்கு கிளம்பி போய்ட்டே இரு.. ” என இறுதியாய் உறுமிவிட்டு அவர் திரும்ப,
அங்கே இவரின் ருத்ரதாண்டவத்தைக் கண்டு மிரண்டு போய் நின்றிருந்தாள் அப்போது தான் கல்லூரியில் இருந்து வீடு திரும்பி இருந்த வந்தனா.
அவளைக் கண்டு ஒரு நொடி உள்ளே அதிர்ந்தாலும் வெளியே முகத்தை இன்னும் இறுக்கமாய் வைத்துக் கொண்டவர், “சொன்னது எல்லாம் உனக்கும் சேர்த்துத்தான்!! ஒழுங்கா உங்கம்மா கூட சேர்ந்து வீட்டு வேலையெல்லாம் இப்போ இருந்தே பழகு.. போற வீட்டுல என் பேரை கெடுத்துறாத” என கண்டிப்புடன் சொல்லிவிட்டு,
“என்ன புரிஞ்சுதா??” என அதட்டல் வேறு போட,
அவரின் சப்தத்தில் வந்தனாவின் உடல் தூக்கிப் போட்டது.
கண்களில் மிரட்சியுடன் தன்னாலே அவள் தலை அவருக்கு சாதகமாய் அசைந்திருக்க, உள்ளமோ ஊமையாய் கதறிக் கொண்டிருந்தது.
மகளின் செயலில், நாட்டரசனின் கோபம் சற்று மட்டுப்பட்டிருக்க, ” போ போய் உங்கம்மா கிட்ட சொல்லி எதுனா பலகாரம் செஞ்சு கொடுக்க சொல்லி சாப்பிடு.. எனக்கு வெளிய ஒரு வேலை இருக்கு.. நான் கிளம்புறேன்” என்று அவர் கிளம்பி விட,
வந்தனா இருந்த இடத்தில் இருந்து அசையாமல், சிதைந்த சித்திரமாய் அப்படியே ஓய்ந்து போய் நின்றிருக்க, இளவரசிக்கு மகளைக் காணக் காண நாட்டரசனின் மேல் கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது.
‘என்ன மனுஷன் இவரு??’ என வெறுத்துப் போய் விட்டது அந்த பெண்மணிக்கு.
இருந்தும் மகளுக்காக தன் வலிகளை தனக்குள்ளேயே மென்று முழுங்கியவர்,
“தனுக்குட்டி நீ சோஃபால உட்காரு.. நான் இதை சுத்தம் பண்ணிடுறேன்.. இல்லைனா உன் கால்ல எதுவும் குத்திரும்” என அவர் மகளிடம் இயல்பாய் எப்பொழுதும் போல் பேச,
வந்தனாவின் நிலைதான் மிகவும் மோசமாய் இருந்தது.
இப்போது தான், புதிதாய் மொட்டவிழ்ந்து நேசம் ஒன்றை, அது விரிந்து மணம் வீசும் முன்னே வலிக்க வலிக்க தூக்கி எறிந்து விட்டு வந்திருக்க, காயம் ஆர அவகாசம் கூட அளிக்காமல் அடுத்ததாய் ஒரு முள்செடியை அவள் மனதில் நட்டுவைக்க நாட்டரசன் பதியம் போட்டுச் சென்றிருக்க, அவள் இதயம் இரணமாய் வலித்தது.
நிச்சயம் வினய்யின் மேல் அபரிமிதமான காதல் என்று எல்லாம் இல்லை. ஆனால், இத்தனை வருடங்களில் முதன்முதலாய் அவள் மனமெனும் பூட்டைத் திறந்து அதில் அழகாய் தன் காலடியை எடுத்து வைத்திருந்தது அவன் மட்டுமே. அவன் மேல் பிடித்தத்தையும் தாண்டிய ஒரு நேசம். சில காலங்கள் சென்றால் அவனைத் தன்னால் கடந்து வந்து விட முடியும் என அவளாக நினைத்திருக்க, அப்படியொரு வாய்ப்பைக் கூட வழங்குவதற்கு விதியும், நாட்டரசனின் மதியும் இடமளிக்கவில்லை.
இப்போது மனம் முழுவதும் ஒருவனை நினைத்துக் கொண்டு, இன்னொருவனை எப்படித் திருமணம் செய்து கொள்ள என தன்னைக் குறித்தே வந்தனாவிற்கு அசிங்கமாக இருக்க, தனக்கு ஏன் இந்த நிலை என கடவுளிடம் மனதளவில் மன்றாடினாள்.
வாய்விட்டு தன் கவலையை சொல்லி அழக் கூட முடியாத தன் நிலையை அறவே வெறுத்தவள், ‘நீங்க என் லைஃப்ல வராமையே இருந்திருக்கலாம் வினய்’ என மனதோடு அவனிடம் பேசிக் கொண்டாள்.
இத்தனையும் அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்க, முகமோ அனைத்தையும் கடந்து விட்ட ஒரு ஓய்ந்து போன நிலையில் இருக்க, இளவரசிக்கு மகளைப் பார்க்கத் தாளவில்லை.
“இந்த ஆளையெல்லாம்!!!” என கண்டபடி கணவனை மனதிற்குள் அர்ச்சித்தவர்,
“டேய் தனு!! அவர் பேசுறதை எல்லாம் நீ கணக்குலயே எடுத்துக்காத.. அம்மா எதுக்கு இருக்கேன்?? நான் பார்த்துக்கிறேன்.. நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு.. நீ நல்லா படிச்சு வேலைக்கு போ.. அப்பறம் இந்த கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்.. வேலைக்கு போனா தான் வெளி உலகம் உனக்கும் புரியும்.. உங்க அப்பா பேச்செல்லாம் நீ மனசுல போட்டு குழப்பிக்காத சரியா??” என அவளருகில் வந்து வாஞ்சையாய் அவளின் தலையைத் தடவ, அடுத்த நொடி உடைந்து போய் அவரின் கரங்களில் தஞ்சமடைந்திருந்தாள் தையல் அவள்.
எதற்கு என குறிப்பிட முடியாவகையில் மொத்தமாய் அனைத்திற்கும் போட்டு வைத்திருந்த அணையை உடைத்துக்கொண்டு பெருக்கெடுத்தது கண்ணீர் அவளிடம்.
மகளின் கண்ணீர் பெற்றவரை மேலும் வலுவிழக்கச் செய்ய,
“என்ன டா தனு!! இங்க பாரு.. அதான் அம்மா இருக்கேன்ல.. அழாத.. உனக்கு பிடிக்காததை நடக்க விட்டிடுவேனா??” என அவர் தேற்ற, இன்னுமின்னும் கண்ணீர் பெருக்கெடுத்தது அன்னையின் அன்பில் அவளுக்கு.
இப்படி பெற்றவர்களை ஏமாற்றுகிறோமே என அவள் இன்னும் தனக்குள் ஒடுங்க, இளவரசியின் கோபம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.
பலன், அடுத்து வந்த நாட்களில், நாட்டரசனின் முகம் பார்ப்பதைக் கூட தவிர்த்து விட்டார்.
முதலில், “போனால் போ!!” என தெனாவெட்டாக இருந்தவர், நாளாக நாளாக மனைவி மற்றும் மகளின் புறக்கணிப்பில் மனதளவில் மிகவும் தளர்ந்து போனார்.
ஆனால் அதை வெளியே சொல்லி விட்டால் அவர் நாட்டரசன் அல்லவே.. எனவே வெளியே இன்னும் அதே இறுமாப்புடன் தான் மகளுக்கு ஏற்ற ஒரு மணாளனை சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தார்.
இளவரசி மூலமாக அறிவழகன் வீட்டிற்கும் விஷயம் சென்றிருக்க, “இவனுக்கு ஏன் இப்படி புத்தி போகுது??? நான் பேசுறேன்” என வந்தனாவை எண்ணி வருந்தி பேசியவரை தடுத்து விட்ட இளவரசி, முதலில் சங்கீதாவின் திருமணம் நல்லபடியாக முடியட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டார்.
சரி வந்தனாவையாவது இப்போதே இங்கு அனுப்பி வையுங்கள் என அவர்கள் கேட்டதற்கு, வந்தனாவே வினய்யை அங்கே ஏதும் சந்திக்க நேருமோ என பயந்து கொண்டு அங்கே செல்ல மறுத்துவிட்டாள்.
இளவரசியும் மகளை வற்புருத்தாமல் அவளின் விருப்பத்திற்கே விட்டுவிட, வந்தனாவின் நாட்கள் அனைத்தும் வினய்யை நினைக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் நரக வேதனையோடு கழிந்தது.
error: Content is protected !!