Skip to content
Post Views: 7,062
அத்தியாயம் – 23
“யோவ் மிலிட்டரி!!! நீ எங்க இங்க???” என சென்னை விமான நிலையத்தில் சதீஷைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியில் வினய் வினவ,
“என்னைப் பார்த்தே ஷாக் ஆனா எப்படி?? கொஞ்சம் அக்கடச் சூடு சகலை” என அவன் முகத்தைப் பற்றி பக்கவாட்டில் திருப்பிக் காண்பிக்க,
அங்கே சங்கீதா, வைஜெயந்தி மற்றும் அறிவழகன் மூவரும் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
Advertisement
“எல்லாரும் என்ன ஃபாமிலி டிரிப் கிளம்பியாச்சா?? சொல்லவே இல்லை” என வினய் ஆச்சரியப்பட,
“இந்த நக்கல் தானா வேணாங்குறது!!” என அவன் வயிற்றில் லேசாய் குற்றிய சதீஷ்,
“எல்லாரும் உன்கூடத் தான் திருச்சி வரோம்!!! மொத்தமா போறோம்!! நாட்டு மாமா கிட்ட பொண்ணைக் கேட்கிறோம்!! குடுத்தா தட்டை மாத்துறோம்!! குடுக்கலையா?? பொண்ணைத் தட்டித் தூக்குறோம்” என கைகளைத் தட்டிக் கொண்டு சதீஷ் கூறுவதற்கும், மற்ற மூவரும் அவர்களை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.
Advertisement
“மாமா!! சதீஷ் சொல்றது உண்மையா?? நீங்களும் வயலூர் வரிங்களா??” என நம்பாமல் அறிவழகனிடம் வினய் கேட்க,
Advertisement
“இதுல பொய் சொல்ல என்னப்பா இருக்கு?? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இழுத்துட்டு இருக்க?? உங்கம்மா எடுத்த முடிவு தான் சரி!! அரசன் கிட்ட நம்மளை மாதிரி அமைதியா இருந்தா ஒரு காரியமும் சாதிக்க முடியாது!! போய் பேசி இன்னைக்கு ஒரு முடிவை கட்டுவோம் இதுக்கு.. இப்படியே அவனை விட்டுட்டே இருந்தா ரொம்பத்தான் ஆடுவான்.. எவ்வளவு திண்ணக்கம் இருந்தா, இத்தனை வருஷம் ஒன்னு மண்ணா இருந்த எங்களையே வேணாம்னு உதறிப்போட்டுட்டு இத்தனை மாசம் அவனும் பேசாம, அந்த பிள்ளைங்களையும் பேச விடாம வச்சிருப்பான்?? அவனை இன்னைக்கு சும்மா விடப் போறதில்லை நான்” என்ற அறிவழகன் நிரம்பவுமே உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
சிறுவயதிலேயே அன்னையை இழந்திருந்த நாட்டரசன் மற்றும் அறிவழகனுக்கு, ஒருவருக்கொருவரே துணையாகிப் போயிருக்க, நாட்டரசன் எப்படியோ தெரியாது?? ஆனால் அறிவழகன் அவரின் உடன்பிறப்பு மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்.
அதனால் தானோ என்னவோ, இந்தப்பிரிவு அவரை உடலளவிலும், மனதளவிலும் மிகவுமே தளர்ச்சி அடைய வைத்திருந்தது.
Advertisement
அவரின் நிலையை உணர்ந்த வைஜெயந்தி, ஆதரவாய் அவரின் கரத்தைப் பற்ற,
“அப்பா ரிலாக்ஸ்!! நம்ம மேலயும் தப்பு தானே?? சித்தப்பா போன்னு சொன்னதும் நம்மளும் கோபத்துல அவங்களை கண்டுக்காம இருந்துட்டோம்.. உண்மையா சித்தியும், தனுவும் ரொம்ப பாவம்.. சித்தப்பாவை விட தனு தான் நம்ம மேல கோவமா இருப்பா!! எப்படி எங்களை தனியா விட்டுட்டு போனீங்கன்னு!! அவளை சமாளிக்க உங்க ஹெல்ப் நிச்சயம் வேண்டும் வினய்!!” என சங்கீதா சூழ்நிலையை இலகுவாக்க,
வினய்க்கு இவர்களின் ஒற்றுமையும் அன்பையும் கண்டு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவனின் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால், உறவென்று சொல்லிக்கொள்ள பெரிதாய் யாரும் இருந்ததாய் அவனுக்கு நினைவில் கூட இல்லை, எனவே இவர்களின் அன்பு அவனுள் தித்திப்பாய் இறங்க, இப்படி நல்ல உள்ளம் கொண்ட உறவுகள் தனக்குக் கிடைக்க காரணமாக இருந்த வந்தனாவிற்கு, “தேங்க் யூ ஏஞ்சல்!!” என மனதார நன்றி தெரிவித்துக் கொண்டான் அவன்.
“சரி சரி!! டைம் ஆச்சு வாங்க கிளம்பலாம்!!!” என சதீஷ் முன்னால் நடக்க,
மற்றவர்களும் அங்கு அகிலாவே அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டதை அறியாமல், நாட்டரசனை ஒரு கை பார்த்துவிடும் முடிவுடன் கிளம்ப,
விதியோ, “ஒரு மனுஷனை ஒரு நாளைக்கு எத்தனை பேரு தான் டா அடிப்பீங்க??” என நாட்டரசனை எண்ணி பரிதாபப்பட்டது.
இவர்கள் திருச்சி வந்த சமயம், கணேசன் அவர்களுக்கு முன்பே அங்கே வந்து அவர்களுக்காய் காத்துக் கொண்டிருக்க, அனைவரும் ஒரு வாடகை வண்டியை பிடித்துக் கொண்டு வயலூரை நோக்கிப் புறப்பட்டனர்.
****
இங்கே, நாட்டரசன் கிளம்பிச் சென்ற பின் நடந்துவிட்டதை நம்ப முடியாமல் இன்னமும் கனவோ என நின்றிருந்த வந்தனாவைக் கண்டு அகிலாவிடம் இளநகை ஒன்று மலர,
அவரின் கண்கள் அவளைத் தான் ஆராய்ந்தது இப்போது!!!
முதன்முதலில் அவளைப் பார்த்த அன்று, நிறுத்தி நிதானமாய் பார்க்கும் சூழல் அமையவில்லை, இதோ அதற்கடுத்து இன்று தான் அவளைப் பார்க்கும் வாய்ப்பே அகிலாவிற்கு கிடைத்திருக்க,
அப்படி என்ன இவளிடம் இருக்கிறது??? என்று தான் பார்த்திருந்தார் அவர்.
நிச்சயம் வினய்யின் திருமணத்திற்கான எதிர்பார்ப்பில் ஒன்று கூட வந்தனாவுடன் பொருந்தவில்லை என சில நொடிகளிலேயே கண்டுகொண்டவருக்கு,
காதலுக்குத் தான் எவ்வளவு சக்தி என எண்ணி வியந்தவர், முப்பது வருடங்களுக்கு முன் வினய்யைப் போல் நாமும் நின்று போராடியிருந்தால், இன்று தன் பெற்றவர்களும் தன்னுடன் இருந்திருப்பார்களோ எனும் ஏக்கம் சிறிதாய் எழுவதை தடுக்க முடியவில்லை.
குழந்தை போல் இன்னும் விழித்துக் கொண்டு நின்றிருந்த அவரின் மருமகளைக் காண்கையில், “இப்படி குழந்தை மாதிரி மூஞ்சியை வச்சே என் பையனை பைத்தியமாக்கிட்டா இவ!!” என சந்தோஷமாய் சலித்துக் கொண்டவர்,
“இங்க வாம்மா!!!” என அவளை அழைத்து வந்தனாவின் கவனத்தைத் தன் மீது திருப்பினார்.
‘அய்யோ இவங்க எதுக்கு கூப்பிடுறாங்க?’ என பயந்து கொண்டே அவரின் அருகில் வந்தனா நகர,
“சரி தனு நீ உங்க அத்தை கூட பேசிட்டு இரு!! நான் போய் விருந்து தயார் பண்றேன்!! உங்க அப்பா இப்படி சட்டுனு ஒத்துப்பாருன்னு நான் நினைக்கவே இல்லை.. எனக்கு சந்தோஷத்துல கையும் ஓடலை காலும் ஓடலை!!” என படபடத்த இளவரசி,
“மதினி!! நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகணும்” என அகிலாவிற்கு அன்புக்கட்டளை விடுத்தவர், சமையலைப் பார்க்க உள்ளே சென்று விட,
மலரும் அவருக்கு உதவவென உள்ளே சென்றுவிட்டாள்.
இப்போது வரவேற்பறையில் மாமியாரும், மருமகளும் மட்டும் தனித்திருக்க, வந்தனாவிற்கு அகிலாவின் சாதாரண பார்வைக்கே வியர்த்து வழிந்தது.
“என்னைப்பார்த்தா அவ்ளோ பயங்கரமாவா இருக்கு?? இப்படி பயப்படுற நீ??” என கேட்டவர்,
“வா வந்து இப்படி உட்காரு!!” என தண்ணருகில் அமர்த்திக் கொண்டார்.
அவளாக எதுவும் பேசப்போவதில்லை என்று உணர்ந்து, “என்ன படிச்சிருக்க??” என அவரே பேச்சைத் தொடங்க,
“B.sc கெமிஸ்ட்ரி” என மெதுவாய் வந்து விழுந்த பதிலில்,
“இவளோ மெதுவா பேசுனா என் காதைக் கழட்டி உன் வாய் பக்கத்துல வச்சிடனும் போல!!! அப்போதான் கேட்கும் நீ என்ன பேசுறன்னு” என கேலி போல் கூறிய அகிலா,
“பொண்ணுங்க இவளோ பயந்துட்டு இருந்தா இந்த சொசைட்டில சர்வைவ் பண்ண முடியாது வந்தனா!! தைரியமா இருக்கணும்!! எப்பவுமே!! நம்ம தப்பு பண்ணலைன்னா எதிர்ல யாரு இருந்தாலும் பயப்படவே கூடாது, நிக்க வச்சு தைரியமா கேள்வி கேக்கணும் உடனுக்குடனே!! சும்மா எதையும் வெளிய சொல்லாம மனசுக்குள்ள பூட்டி வச்சிட்டு இருந்தா உனக்கு தான் ஸ்ட்ரெஸ் ஆகும்.. என்ன புரிஞ்சுதா??” என அவர் பாடம் எடுக்க,
வந்தனாவிற்கோ அகிலாவை எண்ணி மலைப்பாக இருந்தது.
‘ரொம்ப ஸ்ட்ரிக்ட் பிரொஃபசரா இருப்பாங்க போல’ என அவரின் குரலில் தெரிந்த கடுமையை எண்ணி அவள் பயத்துடன் தலையசைக்க,
“ப்ச்!! சாரி மா!! கிளாஸ் எடுக்குற மாதிரி பேசி உன்னை பயங்காட்டிட்டேனோ??” என சிரித்தவர்,
“ஆனா நான் சொன்னது நிஜம் தான், நீ இன்னுமே மாறனும்!! ரொம்ப பயப்படுற நீ” என அவர் அறிவுறுத்தவும்,
“மாற ட்ரை பண்றேன் அத்தை!!” என மெதுவாய் அவளும் கூற,
“குட்!!” என அவளின் தோளைத் தட்டிக் கொடுத்தவர்,
அடுத்து என்ன படிக்கப் போகிறாய் என்பது போல் பேச்சுக் கொடுக்க, சற்று நேரத்திலே வந்தனாவிற்கு அவரிடம் உள்ள பயம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்திருந்தது அகிலாவின் இலகுவான அணுகுமுறையால்.
“கல்யாணம் பண்ணிட்டு பிஜி பண்ணனுமேன்னு யோசிக்காத!! நான் எல்லாம் வினய் வயித்துல இருக்கப்போ தான் பி.எச்.டி பண்ணேன்.. படிப்பு பொண்ணுங்களுக்கு ரொம்ப முக்கியம்” என அவர் அறிவுரை வழங்க,
இதை சமையற்கட்டில் இருந்து தேங்காயை கொறித்துக் கொண்டே கேட்டுக்கொண்டிருந்த மலருக்கு, சிரித்து புரைஏறிவிட்டது.
“ஒரு ஹெட் மாஸ்டர்(நாட்டரசன்) கிட்ட இருந்து தப்பிச்சு இன்னொரு எச்.ஓ.டி(HOD) கிட்ட உன் பொண்ணு மாட்டிக்கிட்டா அத்தை” என இளவரசியிடம் சொல்லி அவள் நகைக்க,
“ஹேய் வாலு!! சும்மா இருடி” என அவளை அடக்கிய இளவரசிக்கு, மகளின் வாழ்க்கை சரியான இடத்தில் சேர்ந்து விட்டதை எண்ணி சொல்லாலான நிம்மதி வந்து மனதை நிறைத்தது.
நேரம் போவது தெரியாமல் மதியமும் வந்திருக்க, அகிலா கிளம்பியிருப்பார் எனும் நம்பிக்கையுடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த நாட்டரசனுக்கு,
அங்கே அனைவருடனும் அமர்ந்து உற்சாகமாய் கதை பேசிக் கொண்டிருந்த அகிலாவைக் கண்டு ‘அய்யோ’ என்றிருந்தது.
“இந்தம்மாவைலாம் வீட்டுல தேட மாட்டாங்களா??” என எண்ணி நொந்தவர்,
எதுவும் பேசாமல் தன்னறைக்குள் நுழையப் போக,
“அண்ணா!!!” என அழைத்து நிறுத்தியிருந்தார் அகிலா.
‘இன்னும் என்னம்மா வச்சிருக்க??’ என்பதைப் போல் அவர் பாவமாய் திரும்பிப் பார்க்க,
மலருக்கு அவரை எண்ணி சிரிப்பாய் வந்தது.
“எப்படி இருந்த மாமாவை இன்னைக்கு இப்படி ஆக்கிப்புட்டீங்களே??” என வந்தனாவின் காதில் சொல்லி வேறு அவள் சிரிக்க,
மலரை முறைத்த வந்தனாவிற்கும், நாட்டரசனை எண்ணி ஆச்சரியமாய் இருந்தது.
“சாப்பிடாம போறீங்களே?? அதான் கூப்டேன் அண்ணா!!!” என அவர் கேட்பதும், அவரின் ‘அண்ணா’ எனும் விழிப்புமே அவரை கிண்டல் செய்வதாய் நாட்டரசனுக்குத் தோன்றினாலும், அகிலாவின் முகத்தில் இருந்து அவரால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.
“இல்லை எனக்கு பசிக்கலை!!! நீங்க சாப்பிடுங்க” என அவர் கிளம்பப் பார்க்க,
“நிச்சயம் பண்ணாம பொண்ணு வீட்டுல கை நனைக்கிறது முறை இல்லையே அண்ணா!! எனக்கு எதுவும் வேண்டாம்.. ஜீஸ் மட்டும் இளா கொடுத்தாங்க!! போதும் எனக்கு” என இளவரசியிடம் சொல்லிய காரணத்தையே அவரிடமும் அகிலா சொல்ல,
“ஆமா இங்க எல்லாம் முறைப்படி தான் நடக்குது!!” என முணுமுணுத்துக் கொண்ட மனிதர்,
“சரி மா பாருங்க!!” என சொல்லி உள்ளே நகர்ந்தாலும்,
“இந்தம்மா இங்கேயே இருந்துருமோ?? ஊர்க்காரணுங்க யாருன்னு கேட்டா என்ன சொல்ல??” என அகிலா இன்னும் கிளம்பாமல் இருப்பது குறித்த கவலை அவர் மனதை அரித்தது.
அகிலாவிற்கும் அவரின் பார்வை புரியத்தான் செய்தது.
ஆனாலும், சங்கீதாவின் மூலம் விஷயம் அறிந்து, தன் கணவனும் மகனும் இங்கே வருவார்கள் என உறுதியாக நம்பிய அகிலா, அவர்களுக்காக மட்டுமே அங்கேயே காத்திருந்தார்.
அவரின் நம்பிக்கையை பொய்யாக்காமல் மாலை நேரம் போல், அனைவரும் அங்கே வந்து இறங்க,
நாட்டரசனுக்கு உண்மையில் அனைவரையும் அங்கு கண்ட அந்த நொடி, “என்னை விட்டுடுங்க டா!!” என கத்த வேண்டும் போல் இருந்தது.
மாலை நேரம் போல், நாட்டரசனின் வீட்டின் முன்பு வந்து நின்ற அந்த இன்னோவா காரைக் கண்டு, வினய் தான் வந்துவிட்டானோ அன அகிலாவுடன் சேர்ந்து, வந்தனாவும் ஆவலாக வாசலுக்கு விரைய,
அங்கே கையில் ஸ்வீட் பாக்ஸுடன், வாய் கொள்ளா புன்னகையுடன் இவர்களை நெருங்கினான் ரஞ்சித்.
“இவரா??” என வந்தனா ஏமாந்து போய் பார்க்க,
“யார் இந்த கோமாளி??” என்பதைப் போல் அகிலா அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.
“ஹேய் வந்தனா!! நான் வரப்போறேன்னு எனக்காக வாசல்லயே காத்துட்டு இருக்கீங்களா?? சோ ஸ்வீட்!!” என அவன் எப்போதும் போல் கிண்டலாக பேச,
அவகிலாவின் பார்வையில் காரம் கூடியது.
“யார் இவங்க?? நம்ம ரிலேஷனா??” என வேறு கேட்டுவைக்க,
“யோவ் போலீசு!! இங்கேயும் வந்திட்டியா நீ??” என கேட்டுக்கொண்டே மலர் வர, ரஞ்சித்தின் கண்களில் ஒரு மின்னல் மின்னி மறைந்தது.
“அடடே!! நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?? அப்போ ரொம்ப வசதியா போச்சு!!” என அவன் கேட்டுக்கொண்டே உள்ளே நடக்க,
“யோவ் இருய்யா!!” என மலர் அவனை நிறுத்த முற்பட்டது எல்லாம் அவன் காதிலே விழுகவில்லை.
நேராக உள்ளே சென்று, சட்டமாய் சோஃபாவில் அமர்ந்து கொண்டவன்,
“அத்தை!! மாமா!!” என குரல் கொடுக்க,
“இப்போ யாருடா??” என கடுப்புடன் வெளியே வந்தவருக்கு அங்கே ரஞ்சித்தைக் காணவும்,
“இவனை வேற இனி சமாளிக்கணுமா??” என எண்ணி ஆயாசமாக இருந்தது.
இருந்தும் முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டே, “வாங்க தம்பி!!” என வரவேற்றவர்,
“நானே அப்பா கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு பேச வரலாம்னு இருந்தேன்” என தயக்கத்துடன் அவர் தொடங்க,
‘ எங்கே கல்யாணப் பேச்சுவார்த்தையை தொடங்கி விடுவாரோ’ என அஞ்சிய ரஞ்சித்,
“இல்லை மாமா!! அப்பா காசி, ராமேஸ்வரம்ன்னு டிரிப் கிளம்பப் போறாரு.. இன்னும் என் ஜாதகத்துல கட்டம் சரியாகலையாம்.. இன்னும் ஒரு ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு அப்பா சொல்ல சொன்னாங்க.. ” என உடனடியாக சமாளித்துவிட்டு,
“எப்புடி?? ஓகே வா??” என்பதைப் போல அவன் வந்தனாவைப் பார்க்க,
அவள் அருகில் இருந்த மலரோ, “முந்திரிக்கொட்டை!! முதல்ல எதிர்ல இருக்கவங்க பேசுறதை கேளுடா!!” என அவனை முறைத்திருந்தாள்.
அவனை சங்கடமாய் எதிர்கொண்ட நாட்டரசன், “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி!! பொண்ணுக்கு வேற ஒருத்தரை பிடிச்சுப் போச்சு.. எனக்கே இப்போதான் தெரியும்.. இல்லைனா உங்களையும் இப்படி இதுக்குள்ள இழுத்துவிட்டு காக்க வச்சிருக்க மாட்டேன்.. அதான் அப்பாவை சந்திச்சு இதைப்பத்தி பேசலான்னு இருந்தேன்” என இப்படி தன்னை விட சிறிய பையனிடமெல்லாம் இறங்கிப் போய் பேச வேண்டியதாகிப் போயிற்றே என கடுப்புடன் நாட்டரசன் கூற,
ரஞ்சித்தோ, “இது எப்போ டா நடந்தது???” என நம்பாமல் பெண்கள் இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தான்,
அவனின் அதிர்ச்சியை தவறாக புரிந்து கொண்ட இளவரசியும், தன் பங்கிற்கு அவனிடம் மன்னிப்பு வேண்ட, அவனும் பெருந்தன்மையாக அதை கடந்து விட்டதாக ஒரு நாடகம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்க, மீண்டும் அவர்களின் வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது.
“இப்போ எவண்டா??” என நாட்டரசன் நொந்தே போக,
இன்முகத்துடன், “உள்ளே வரலாமா??” என அனுமதி கேட்டு வாசலில் நின்றிருந்தார் கணேசன்.
நாட்டரசனை முந்திக்கொண்ட இளவரசி, “வாங்க!! வாங்கண்ணே!!” என வாயெல்லாம் பல்லாக அவரை வரவேற்க, அவரைத் தொடர்ந்து, வலது காலை எடுத்து வைத்து மாமனாரின் வீட்டிற்குள் தன் அக்மார்க் புன்னகையுடன், வந்தனாவிற்காக வந்தான் அவளின் வினய்!!!
‘முழுதாய் எத்தனை மாதங்கள் கடந்துவிட்டது, அவனையும் அவனின் புன்னகையையும் கண்டு’ என எண்ணிய வந்தனா, சுற்றத்தை மறந்து அவனை மட்டுமே ரசித்து, இத்தனை நாள் பிரிவுக்கும் சேர்த்து கண்களில் மொத்தமாய் நிறைத்துக் கொண்டிருக்க,
பெண்ணவளின் கண்களில் தெரிந்த எல்லையில்லா காதலில், காதலன் அவன் திக்குமுக்காடிப் போனான்.
உலகையே கட்டி ஆள வேண்டும் என அவனுக்கு சக்கரவர்த்தி என அகிலா பெயர் வைத்திருக்க, அந்த சக்கரவர்த்தியை தன் ஒற்றைப் பார்வையால் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள் தையலவள்.
இங்கே இவர்கள் காதல் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க,
நாட்டரசனோ, இவர்களை எதிர்பாராமல் தவித்து, எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போய் நின்று விட்டார்.
என்னதான் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாலும், இன்னமும் நாட்டரசனால் அவனை முழுமனதாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
எனவே கணேசனைக் கூட பெயருக்கு ‘வாங்க’ என வரவேற்ற மனிதர், வினய் பக்கம் திரும்பவே இல்லை.
அது வந்தனாவிற்கு வருத்தமளிக்க, தன் பார்வையாலே அவளை சமாதானப்படுத்திருந்த வினய்யின் முகத்தில் இருந்த புன்னகை மட்டும் வாடவே இல்லை.
கணேசன் வந்தவுடன் அவரிடம் மெதுவாய் அனைத்தையும் அகிலா தெரிவித்திருக்க, மனைவியின் திறமையை எண்ணி மெச்சிக் கொண்ட கணேசன், அவரை காதலாய் பார்த்திருக்க,
“ஷ்!! அவர்கிட்ட பேசுங்க!!” என கண்களாலேயே நாட்டரசனை சுட்டிக்காட்டினார் அகிலா.
“ரொம்ப சந்தோஷம்!! நீங்க மனசு மாறினதுல!!” என மனநிறைவுடன் பேசத் தொடங்கிய கணேசன்,
தன்னுடைய நட்பான அணுகுமுறையால், நாட்டரசனின் மனநிலையை சகஜமாக்கியிருக்க, பேச்சும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தது.
முதலில் இவர்களைப் போகச் சொல்லிவிட்டு காரில் காத்திருந்த அறிவழகனின் குடும்பமும், இதற்கு மேல் பொறுமை இல்லாமல் உள்ளே வர,
“இன்னும் யார் யாரு டா வரப்போறீங்க??” என அயர்ந்து விட்டார் நாட்டரசன்.
இருந்தும், தான் அத்தனை பேசியும் இன்று தன்னைத்தேடி வந்து விட்ட அவரின் அண்ணனைக் கண்டதும், இத்தனை நேரம் இருந்த மனஉளைச்சல் சற்று சமன்பட்டு, மனதில் புதிதாய் பலம் கிடைத்ததை போல் உணர்ந்தவருக்கு, இரத்த சொந்தத்தின் அருமை அப்போது தான் விளங்க,
தான் செய்த செயலைக் குறித்து முதன் முதலாய் வருந்தி, குற்ற உணர்வு கொண்டு அவர்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார்.
அவரின் மனநிலையை உணர்ந்து கொண்ட அறிவழகனுக்கு, எப்போதும் திமிராய், நிமிர்வாய் கண்டே பழகிவிட்ட தன்னுடைய தம்பியை இவ்வாறு காணப் பிடிக்காமல்,
“டேய் அரசா!! வந்தா வான்னு கூட கூப்பிட மாட்டியா?? அவ்ளோ வேண்டாதவனா போய்ட்டேனா நானு??” என உரிமையுடன் கோபித்துக் கொண்டவர், தன் தம்பியை வந்து அணைத்துக் கொள்ள,
அந்த நொடி மொத்தமாய் உடைந்து விட்டார் மனிதர் அவர்!!!!
“அண்ணே!!!! மன்னிச்சிருண்ணே!!” என்றவரின் கலங்கிப் போன குரலைக் கேட்க, அனைவருக்குமே மனது ஏதோ போல் ஆகி விட,
சூழ்நிலையே கனமாக மாறியது.
“சப்டைட்டில் இல்லாம சைனீஸ் படம் பார்க்கிற மாதிரி ஒன்னுமே புரியலை எனக்கு?? யாரு சாமி நீங்க எல்லாம்?? என்ன நடக்குது இங்க??” எனக் கேட்டது சாட்சாத் ரஞ்சித்தே!!
அவனின் கேள்வியிலும், முகபாவத்திலும் அனைவருக்குமே லேசாய் புன்னகை அரும்ப,
அதன் பின் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்த தருணம் கோபம், கண்ணீர், சிரிப்பு என அவர்களின் நேரங்களும் கரைய, நேரம் ஆவதை உணர்ந்து அகிலா தான் மீண்டும் கல்யாண பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்தார்.
“ஆனாலும் உன் மாமியார் காரியத்துல கன் மாதிரி இருக்காங்க புள்ளை!!” என மலர் அப்போதும் கிண்டல் செய்ய, வந்தனா வெட்கம் கலந்த ஆர்வத்துடன் அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நாட்டரசனுக்கு இப்போது உறவுகளின் உன்னதம் நன்றாகவே புரிந்து விட, அன்று தான் யோசியாமல் சிதற விட்டுவிட்ட வார்த்தைகளை எண்ணி குற்ற உணர்வில் தவித்தவர்,
தான் அத்தனை பேசியும் இன்று அதை பேச்சுக்கு கூட குத்திக்காட்டாமல் பெருந்தன்மையாக நடந்துகொண்ட கணேசனை எண்ணி வியந்தவருக்கு, கணேசனின் மீதிருந்த மதிப்பு உயர்ந்தது.
தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, திருமண பேச்சுவார்த்தையில் தன் அண்ணனையே முன்னிறுத்திய நாட்டரசன், அனைத்து முடிவுகளையும் அறிவழகனின் கைகளில் ஒப்படைத்து விட்டார்.
அதன் படி, திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாகத் துவங்க, மணமக்கள் இருவரின் முகத்திலும் எல்லையில்லா ஆனந்தம் வந்து ஒட்டிக்கொண்டது.
சதீஷும், மலரும் சேர்ந்து இருவரையும் கிண்டல் செய்து வெட்கப்பட வைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் திருமணத் தேதி முதற்கொண்டு முடிவு செய்யப்பட்டிருந்தது.
“அப்பறம் என்ன சகலை?? ஆல் ஓகே!! இனி சின்ராசை கையில பிடிக்க முடியாது” எனக்கேட்டு ஆர்ப்பாட்டமாக சதீஷ் சிரிக்க,
அவனின் சிரிப்பு மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது.
“அப்பறம் சின்ன மாமா!! எங்க பையனுக்கு உங்க பொண்ணு கூட தனியா பேசணுமாம்” என அவன் கொளுத்திப் போட,
நாட்டரசனின் குணம் மீண்டும் தலைதூக்க, சதீஷை அவர் தன்னை மீறி முறைத்து வைக்க,
“உனக்கு தேவையா??” என சங்கீதா அதைக் கண்டு சிரித்து விட்டாள்.
ஆனால் வினய்யின் கண்களில் தெரிந்த ஆசையை கண்டுகொண்ட அகிலா,
“இதுல என்ன இருக்கு?? இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் தான் ஆகப் போகுதே!! போய் பேசிட்டு வரட்டும்!! அண்ணன் என்ன சொல்லப் போறாரு??” என்றவர்,
“என்ன அண்ணா போய் பேசட்டும் தான??” என அந்த அண்ணாவில் அழுத்தம் கொடுத்து அகிலா கேட்க,
“படுத்துதே இந்தம்மா!!” என நொந்து கொண்ட நாட்டரசன்,
கடுப்புடன் தலையசைக்க,
உடனே, “தனு!! தம்பியை கூப்பிட்டு பின்வாசல் பக்கம் போய் பேசிட்டு இரு!! ” என அனுப்பியே வைத்துவிட்டார் இளவரசி.
“நான் பொண்ணு பார்க்க வந்தப்போ உங்களை மாதிரி ஒரு தெய்வம் இல்லாம போய்டுச்சு ஆன்ட்டி!!” என ரஞ்சித் போலியாய் அகிலாவிடம் வருத்தப்பட,
மலர் அவனை முறைத்தாளோ?? என ஐயம் கொள்ளும் வகையில் ஒரு நொடி அவளின் பார்வை அவனில் பதிந்து மீண்டது.
இங்கே இவர்கள் பேச்சு எதுவுமே நாட்டரசனின் மனதில் பதியவில்லை.
அவரின் கவனம் எல்லாம் தனியாக பேசச் சென்றிருந்த இருவரின் மீது மட்டுமே பதிந்திருக்க,
இங்கே ஒருவரின் இரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அறியாத வினய், காதலாய் அவளை கண்களால் தழுவியிருந்தான்.
“வதனா!!!” மென்மையிலும் மென்மையாய் ஒரு அழைப்பு,
அவனின் குரல் உள்ளம் நுழைந்து, உயிரை உருக வைப்பதாய் ஒரு மாயை பெண்ணவளுக்கு!!!
அவனின் குரலில் கொட்டிக்கிடந்த காதலுக்கு என்றும் போல் இன்றும் மயங்கியவள், அவனை கண்ணோடு கண் நோக்க,
அவன் மனதைப் போல், வானிலும் ஒரு மின்னல் ஒன்று பளிச்சிட்டு கண்களை கூசச் செய்தது.
“மழை வரும் போல!!!” என வந்தனா வானத்தைப் பார்த்துக் கொண்டே கூற,
“என் மனசுல ஆல்ரெடி மழையோட சேர்த்து ஒரு குட்டிப் புயலும் வந்திருச்சு வதனா!!” என தன் நெஞ்சைத் தொட்டுக்காட்டி அவன் மயக்கும் குரலில் பதிலளிக்க,
அவன் பார்வையிலும், வார்த்தையிலும் பொங்கிப் பெருகிக் கிடந்த காதலில், நழுவத் தொடங்கிய இதயத்தை இறுக்கிப் பிடிப்பதற்குள் பெரும்பாடாகிப் போனது பெண்மைக்கு!!
“இவளோ சீக்கிரம் எல்லாம் சரியாகும்னு நினைச்சே பார்க்கலைல வதனா!!! நிச்சயம் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு தெரியும்.. பட் அந்த நாள் இன்னைக்கா இருக்கும்னு யோசிக்கவே இல்லை” என உட்சகட்ட மகிழ்ச்சியில் நெற்றியை நீவிக் கொண்டு அவன் கூறவும்,
‘இது சீக்கிரமா???’ என்பதைப் போல் பதிலுக்கு கண்ணைச் சுருக்கி அவள் லேசாய் முறைக்க, வெயிலும் மழையும் ஒன்றாய் வந்தது போல் கோபமும் காதலும் கலந்திருந்த அவளின் விழிகளில் இருந்து பார்வையை அவனுக்கு அகற்ற முடியாமல் போக,
“சீக்கிரம் இல்லை தான்!!! பட் உங்கப்பா இருந்த கோபத்துக்கு இது உண்மையிலேயே சீக்கிரம் தான் என்னைப் பொறுத்த வரைக்கும்” என்றான் அவள் கேள்விக்கு பதிலாய்.
“உங்க மேல நான் கோவமா இருக்கேன்!!!” என பொய்கோபம் கொண்டு அவள் முறைக்க முயல,
“க்யூட் ரே!!! கொல்றாளே!!!” என தவிப்புடன் தலை கோதிக் கொண்டவன்,
“என்ன கோவமாம் இந்த பொண்ணுக்கு???” என்றான் தன் தவிப்பை மறைத்துகொண்டு ரசனையான புன்னகையுடன்.
“பின்ன என்ன?? நீங்க பாட்டுக்கு வீராப்பா எங்க அப்பாகிட்ட இனி என்னைப் பார்க்க மாட்டேன் பேச மாட்டேன்னு சொல்லிட்டு என் கண்ணு முன்னாடியே வரலை.. ஆனா நீங்க மட்டும் திருட்டுத்தனமா மலர் போன்ல இருந்து வீடியோ கால்ல எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டு என்னைப் பார்த்துட்டு இருந்தீங்க தான இத்தனை நாளா??? என்னைப் பத்தி யோசிக்கவே இல்லை நீங்க?? நான் எவ்ளோ…” என ஏதோ நினைவில் தன் மனதின் தேடலை வார்த்தைகளில் அவள் ஆதங்கமாக வடித்துக் கொண்டிருக்க, சட்டென சுயம் வந்து,
‘நல்லா உளறிட்ட டி தனு!!!’ என மாட்டிக்கொண்ட பாவனையில் அவள் மானசீகமாய் தலையில் அடித்துக் கொள்ள,
அடக்கி வைத்த குறுஞ்சிரிப்புடன் அவளையே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்திருந்த வினய், “ஹான் அப்பறம்??? முழுசா சொல்லு வதனா!!! நீ எவ்ளோ???” என அவன் கேட்க,
வெட்கத்தில் முகத்தை எங்கே சென்று மறைக்க எனத் தெரியாமல் அவன் திண்டாடிப் போவதை தித்திப்பாய் உள்வாங்கியவன்,
“நிஜமா உன்னைக் கஷ்டப்படுத்தனும்னு நான் இந்த முடிவை எடுக்கலை டா!!! எங்க உன்னைப் பார்க்குறப்போ, இதோ இப்போ சொன்ன மாதிரி உன் மனசையும் அதிக இருக்க எனக்கான தேடலையும், உன் வாய்மொழியா கேட்டுட்டா நிச்சயம் நான் எதையும் யோசிச்சிருக்க மாட்டேன்.. அப்போவே உன்னைத் தூக்கிட்டு போயிருப்பேன்.. அந்த அளவுக்கு உன் விஷயத்துல கன்ட்ரோல் இல்லாம இருக்கேன் வதனா!! புரிஞ்சுக்கோ!!!” என தன் உள்ளத் தவிப்பை அப்படியே வெளிப்படுத்தியவன்,
“அப்படி அந்த நேரத்து உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு நாம எடுக்குற சில முடிவுக்களோட பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் வதனா!! என் அம்மா, அப்பா எல்லாரும் இருந்தும் யாரும் இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு கூட இருந்து பார்த்து வளர்ந்தவன் நான்!!! அந்தக் கஷ்டத்தை என்னைக்கும் உனக்கு கொடுத்துடக் கூடாதுன்னு நான் உறுதியா இருந்தேன் டா!! அதான் உன்னைக் கேட்காமையே அன்னைக்கு நான் அப்படி சொல்லிட்டு போய்ட்டேன்.. அது உன்னை ஹர்ட் பண்ணிருக்குல இவளோ… ரியல்லி வெரி சாரி டா வதனா!!” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
இப்படி ஒவ்வொன்றையும் தன்னைக்கொண்டே யோசித்து, தனக்காகவே வாழும் இவனின் அன்பின் ஆழத்தை உணர்ந்த வந்தனாவிற்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டியது.
‘நிச்சயம் இவன் தன் வாழ்வில் தவமேதும் செய்யாமல் கிடைத்த அற்புதமான வரம் தான்’ என உளமார நம்பியவள், அவனைக் காதலாய் பார்த்திருக்க,
“இப்படி பார்க்காத வதனா!!! ஐ கான்ட் கன்ட்ரோல்!!” என்றவன்,
“உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்!!! பிடிச்சிருக்கா பாரு!!” என பேச்சை மாற்ற,
தன் பார்வையில் சிறிதும் மாற்றம் கொள்ளாமல் அவனை சீண்டிப் பார்க்க விரும்பியது அவனின் சிட்டுக்குருவி.
“ஒரு முடிவோட தான் இருக்க நீ!!! உங்கப்பா உள்ள தான் இருக்காரு மறந்துடாத” என எச்சரித்தவன்,
அவளுக்காக வாங்கி வந்திருந்த மோதிரத்தை எடுத்து அவள் முன் நீட்டினான்.
அந்த மோதிரத்தில், ஒரு ஆணின் விரல்கள் பெண்ணின் மென் விரல்களை அழகாய் கோர்த்துக் கொண்டிருக்க, நடுவில், மிக மிக சிறியதாய் இதய வடிவில் அவர்கள் காதலைப் போல் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்தது வைரம் ஒன்று.
அவ்வளவு அழகாய் இருந்தது அந்த ஒற்றை மோதிரம்!!
“பிடிச்சிருக்கா???” என ஆவலுடன் அவன் கேட்க,
கண்கள் மின்ன அதைப் பார்த்திருந்தவள், அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் அவனின் முன் தன் இடக்கரத்தை நீட்டி, போட்டுவிடுமாறு கண்களால் சமிக்ஞை செய்ய,
“ஆர் யூ ஸ்யூர்???” என நம்பமாட்டமல் அவன் கேட்டுவிட,
“போட்டுவிடுங்க!!!” என அவள் உறுதியாக சொல்லவும்,
உள்ளார்ந்த பூரிப்புடன் நீட்டிய அவளின் மென்கரங்களை காதலுடன் பற்றியவன்,
அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே, “இன்னைக்கு பிடிச்ச கையை என்னைக்குமே விட மாட்டேன் ஏஞ்சல்!!!! லவ் யூ வதனா!!!! ஆல்வேய்ஸ் அன்ட் ஃபார்எவர்” என ஆத்மார்த்தமாக அவன் காதலை உரைத்து, அவளின் விரல்களைப் பற்றி மோதிரத்தை அணிவிக்க,
அவனையே காதலோடு பார்த்திருந்தவள், “நீங்க எனக்குக் கிடைச்ச பெரிய வரம் வினய்!!!! தாங்க்ஸ் ஃபார் கமிங் இன்டூ மை லைஃப்..” என மனதில் இருந்து கூறியவள், அவன் சுதாரிககும் முன்பே, சிரிக்கையில் லேசாய் குழி விழும் அவனின் இடக்கன்னத்தில் தன் முதல் அச்சாரத்தை பதித்துவிட்டு அவள் வெட்கத்துடன் உள்ளே ஓடியிருக்க,
“இப்போது என்ன நடந்தது??” என அவன் யோசிக்க, கன்னத்தில் மிச்சமிருந்த முத்தத்தின் ஈரம் அவனை மொத்தமாய் கிறங்கடிக்க,
“ஓஹ்!!! வதனா!!!” என செல்லும் அவளைப் பின் தொடர்ந்து கூட செல்ல முடியாமல், அவள் இதழின் ஸ்பரிசத்தில் லயித்து, மந்திரித்து விட்டதைப் போல், ஒரு மாய உலகில் மெய்மறந்து நின்று விட்டான் அந்த காதல் கிறுக்கன்!!!
error: Content is protected !!