Skip to content
Post Views: 9,887
அத்தியாயம் – 4
தன் அறைக்குள் வந்த பின்பு கூட வந்தனாவின் படபடப்பு சற்றும் குறையவில்லை.
Advertisement
இன்னும் வினய்யின் பார்வை தன்னைத் துளைப்பதைப் போல் உணர்ந்தவள், அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து தன் முகத்தில் குளிர்ந்த நீரை அடித்து மனதின் வெம்மையை குறைக்க முயன்றாள்.
அதற்கு பலனும் இருந்தது. சற்று நேரத்திலே நிதானத்திற்குத் திரும்பிய வந்தனா, அங்கு கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்து தன் மனக்குமுறலைக் கொட்டினாள்.
Advertisement
Advertisement
“ப்பாஹ்!!! என்ன பார்வைடா சாமி அது!! ஆளையே முழுங்குற மாதிரி.. இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்திருந்தா கண்ணாலையே உன்னை சாப்பிட்டு ஏப்பம் விட்டிருப்பான் டி தனு.. எவ்ளோ கொழுப்பு இருந்தா கண்ணு வேற அடிப்பான்.. நம்ம அப்பா மட்டும் அங்க இருந்துருக்கணும் பார்க்குற கண்ணை பிடுங்கி கைமா பண்ணிருப்பாரு.. ” என நினைத்துக் கொண்டவள்,
“இங்க இருக்க கொஞ்ச நாளும் அந்த மேக்கப் மேனை மட்டும் என் கண்ணுல காட்டாம இருந்துரு மாரியாத்தா.. உனக்கு நான் அடுத்த தடவை கோவிலுக்கு வரப்போ அடிப்பிரதக்ஷனம் செய்யுறேன்” என்று அவசரமாக சமயபுரம் மாரியம்மனுக்கு ஒரு வேண்டுதலை வைக்க, மாரியம்மனோ அடுத்த நொடியே அவள் வேண்டுதலை நிராகரித்ததை பாவம் அவள் அறியவில்லை.
Advertisement
“ஆமா அவன் ஏன் நம்மளை அப்படிப் பார்த்தான்? அந்தக் கண்ணுல ஏதோ இருந்துச்சே!!” என அவளின் மனம் அவனின் பார்வைக்கான அர்த்தத்தை கண்டறிய முயல, அதைத் தடை செய்வதைப் போல் கதவு தட்டும் ஓசை அவளின் சிந்தனையைத் தடை செய்தது.
“இந்த சங்கி மங்கிக்கு வேற வேலை இல்லை” என நினைத்தவள், “வரேன் டி!! கதவை ஒடைச்சிராத” என்று கூறிக்கொண்டே கதவைத் திறந்தாள் வந்தனா.
வெளியே வந்தவளை ஆராய்ச்சியாகப் பார்த்த சங்கீதாவோ, “ஆமா எதுக்கு நீ ஏதோ பேயைக் கண்ட மாதிரி நான் கூப்பிடுறது கூடக் கேட்காம அங்க இருந்து அப்படி ஓடி வந்த?? வர வழியெல்லாம் நான் பேசுறது ஏதும் காதுல விழுகாத மாதிரி மந்திரிச்சு விட்டது போலவே வந்தியே.. வாட் இஸ் தி மேட்டர்??” என்று விசாரிக்க,
‘அய்யோ இவகிட்ட சொன்னா என்னை ஒரு வழி பண்ணிருவா.. எஸ்கேப் ஆகிரு டி தனு’ என்று மனதில் கூறிக் கொண்ட வந்தனாவோ,
“அது… ஆஹ்!! நம்ம ஊருல லட்சுமி அத்தை இருக்காங்கல அவங்க பையன் இங்க தான் வேலை பார்க்குறாங்க… இன்னைக்கு அந்த கஃபேயில அவரை மாதிரியே ஒருத்தரைப் பார்த்தேனா.. எங்க ஒருவேளை அவரா இருந்து அவரும் என்னைப் பார்த்துட்டு அப்பாக்கிட்ட சொல்லிடுவாரோன்னு பயம் வந்திருச்சு.. அதான் ஓடி வந்துட்டேன்..” என கோர்வையாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்தாள்.
நாட்டரசனின் கெடுபிடியும், வந்தனாவின் பயமும் பற்றி நன்கு அறிந்த சங்கீதாவும் அதை உண்மை என்றே நம்பியவள்,
“அட இவ்ளோ பெரிய சென்னையில உன்னை யாரு பார்த்து சித்தப்பா கிட்ட சொல்லப்போறா? அப்படியே பார்த்தாலும் நீ என்ன உன் ஆளு கூடயா ஊர் சுத்துன? என் கூட தான வந்த.. அப்பறம் என்ன?” என்று கேலி செய்ய,
‘உன் ஆளு’ என்றதும் வந்தனாவின் மனம் தன்னையுமறியாமலே வினய்யைப் பற்றி நினைக்க,
‘ச்சே என்ன நினைப்பு இது!! ரொம்பத் தப்பு தனு’ என நினைத்துத் தலையைக் குலுக்கிக் கொண்டவள், சங்கீதாவை நோக்கி, “லூசு மாதிரி பேசாத சங்கி மங்கி!!! என் வாழ்க்கையில காதல், கத்திரிக்காய்க்குலாம் இடமே இல்லை.. இதுல எங்க இருந்து எனக்கு ஆளு வருவாங்க? இதுல அவங்க கூட நான் ஊர் சுத்த வேற போறேனா?? உன் கூட வெளியே போனது தெரிஞ்சாலே அப்பா என்னைய உப்புக்கண்டம் போட்டிருவாங்க.. இதுல நீ வேற உளறிகிட்டு இரு.. கொஞ்சமாச்சும் லாஜிக்கோட பேசு” எனத் தன் தமக்கையை அடக்கிய வந்தனாவிற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, சங்கீதாவின் இந்த உளறல் ஒரு நாள் உண்மையாகப் போகிறதென்று.
அதன் பின் சகோதரிகள் இருவரும் கேலி கிண்டல்களுடன் பொழுதைக் கழிக்க, அவர்களுடன் சந்தோஷும் இணைந்து கொண்டதில் நேரம் ரெக்கை கட்டிப் பறந்தது.
மூவரும் அடித்த லூட்டிகளில் வினய் என்று ஒருவனை சந்தித்ததையே வந்தனா மறந்திருந்தாள்.
ஆம், அவள் அப்படித்தான் நினைத்திருந்தாள். ஆனால் விதியோ, ‘அவ்வளவு எளிதில் உன்னை மறக்க விட்டுவிடுவேனா?’ என்பது போல் அடுத்த நாளே அவர்களை மீண்டும் சந்திக்க வைத்து வந்தனாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்த தயாராகக் காத்திருந்தது.
*****
“என்னங்க இந்த பொண்ணு இப்படி சொல்லிருச்சு!! ரெண்டு பேருக்கும் எல்லாம் பொருந்தி போகும்னு தெரிஞ்ச பின்னாடி தான நான் வினய் கிட்டவே இதை கொன்டு போனேன்.. கடைசியில அந்த பொண்ணு இப்படி ஒத்துவராது ஆண்ட்டின்னு சொல்லிருச்சே!!” என நூறாவது முறையாக கணேசனிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அகிலா.
“அகி!!! இதை கொஞ்சம் விடேன்.. வாழப்போறது அவங்க ரெண்டு பேர்.. பேசிப் பார்த்தாங்க பிடிக்கலை, வேண்டாம்னு ஒதுங்கிட்டாங்க.. ஏதோ உலகத்துலேயே அந்தப்பொண்ணு மட்டும் தான் பொண்ணு மாதிரி, அவ இல்லைன்னா நம்ம வினய்க்கு பொண்ணே கிடைக்காத மாதிரி அப்போ இருந்து புலம்பிகிட்டு இருக்க.. வினய்க்கான பொண்ணை இன்னும் அவன் பார்க்கலை போல.. அவனுக்கு என்ன வயசா ஆய்டுச்சு.. அது அது நடக்க வேண்டிய நேரத்துல அதுவாகவே நடக்கும்.. நீ சும்மா எதையாவது நினைச்சுக்கிட்டு உன் உடம்பை கெடுத்துக்காத அவ்ளோ தான் சொல்லுவேன்” என்று சற்றே கண்டிப்புடன் கூறியவர் அங்கிருந்து நகர்ந்தார்.
கணேசன் கூறியது அகிலாவின் செவிக்குள் நுழைந்தாலும் மனதிற்குள் நுழையவில்லை.
“அது எப்படி தப்பா போகும்!! நான் என் பையனோட குணம் அறிஞ்சு அந்த பொண்ணு அவனுக்கு ஒத்து வரும்ன்னு அவகிட்ட பேசி பார்த்த பின்னாடி தான அவளையே செலக்ட் பண்ணேன்.. அப்பறம் எப்படி ரெண்டு பேருக்கும் பிடிக்காமல் போகும்?” என அதையே நினைத்து நினைத்து மாய்ந்து போனார்.
‘வினய் வரட்டும் அவன் கிட்டயே கேப்போம்’ என நினைத்தவர் மகனுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.
நேரம் தான் கழிந்ததே தவிர வினய் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
அவனின் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அகிலாவிற்கு இது மேலும் கவலையைக் கொடுக்க, கணேசனைத் தேடிச் சென்றார்.
தன் மனைவியின் முகத்தை வைத்தே அவரின் எண்ணவோட்டத்தை துல்லியமாக கணித்துவிட்ட கணேசனோ, “இப்போ என்னம்மா பிரச்சினை?” என சலிப்படைய,
“மணி பத்தாகப் போகுது இன்னும் வினய்யைக் காணோமேங்க.. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறான்.. நீங்க ஒரு தடவை கால் பண்ணி கேளுங்களேன்” என அகிலா தயங்கிக் கொண்டே கேட்க,
“எந்த ஒரு பிரச்சனையும் இல்லைன்னா அதையே ஒரு பிரச்சனையா நினைச்சுட்டு கவலைப்படுவ போல நீ!! அவன் என்ன குழந்தையா? அவன் வேலை பத்தி உனக்கு தெரியாதா? மாசத்துல பாதி நாள் அவன் வீட்டுலயே இருக்குறது இல்லை. இதெல்லாம் உனக்கும் தெரியும் தான? அப்பறம் என்ன புதுசா அவன் வரலை வரலைன்னு? முதல்ல நீ போய் படுத்துத் தூங்கு” என கணேசன் கோபம் கொண்டார்.
“அது இல்லைங்க… இன்னைக்கு அந்த பொண்ணை பார்க்க போனானே.. அதான்” என்று அகிலா தொடங்க,
“வாயை மூடு அகி!! இந்தப் பேச்சை இதோட விடு.. உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் அவனுக்கு பிடிக்காமல் நம்ம விருப்பத்தை அவன் மேல திணிக்கக் கூடாதுன்னு.. நீ என்னடான்னா என் பையனைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச நான், ஒரு பொண்ணை பார்த்தா அது எப்படி ஒத்துவராம போகும்னு அதையே நினைச்சுட்டு இருக்க.. வினய் உன் பையன் தான்.. உனக்கு அவனைப் பத்தி தெரியும் தான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா விருப்பம் எப்போ யார் மேல வரும்ன்னு யாராலும் சொல்ல முடியாது..”
“அவனுக்கு என்னமோ நீ காட்டின பொண்ணு மேல அந்த விருப்பம் தோணாமல் போயிருக்கலாம்.. இது ஒரு பெரிய விஷயமே இல்லை.. முதல்ல உன்னோட இந்த மனநிலையை மாத்து.. நம்ம குழந்தை மேல அன்புன்ற பேர்ல நிறைய பேர் ஆதிக்கத்தை செலுத்துறாங்க.. அந்த மாதிரி ஒரு அம்மாவா நீயும் மாறிடாத… அவனுக்கு எது வேண்டும் வேண்டாம்னு நீ முடிவு பண்ணாத.. காலம் வரும்போது அவனுக்கு வேண்டியது அவன் கையில வந்து சேரும், அதை முழுமனசா ஏத்துக்க பழகிக்கோ.. கண்டதையும் போட்டு மனசை அலட்டிக்காம போய் படும்மா லேட் ஆச்சு.. வேலை முடிஞ்சா வினய்யே கால் பண்ணுவான் ” என கோபத்தில் தொடங்கி அக்கறையில் முடித்த கணேசன் தன் மனைவியையும் கையோடு அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தார்.
என்னதான் கணேசன் கூறியதை மனதில் ஏற்றிக் கொள்ள முயன்றாலும், ‘என்னை விட என் பையனை யாருக்குத் தெரியும்?? அவனுக்கு எப்படிப்பட்ட பொண்ணைப் பிடிக்கும்னு எனக்குத் தான் தெரியும்.. இவ இல்லைன்னா இவளைவிட இன்னும் பெட்டரா இன்னொரு பொண்ணை கூடிய சீக்கிரமே பார்க்கணும்’ என முடிவெடுத்துக் கொண்ட அகிலாவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, மனிதனின் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட காதல் வினய்க்குள் மலர்ந்துவிட்டது என்று.
மகனைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை நானறிவேன் என்று இறுமாப்புடன் இருக்கும் அகிலாவுக்கு வினய்யின் காதல் தெரிய வரும்போது என்னாகுமோ???
*****
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
என்ற வைரமுத்துவின் வரிகளில் இருக்கும் உண்மையை இந்த நொடி நன்றாகவே உணர்ந்தான் வினய்.
தன்னுள் காதல் மொட்டவிழ்ந்த நிமிடம் அவனும் புதிதாய் பிறப்பெடுத்ததைப் போல் உணர்ந்தான்.
நாடி எங்கும் புது இரத்தம் பாய்ந்தோட, மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தவனுக்கு யானை பலத்தை அவனுடைய காதல் கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது.
தன் காதலைக் கண்டுகொண்டவனுக்கு வந்தனாவும் தன்னை காதலிப்பாளா? தங்கள் காதல் கைகூடுமா? என்று எந்தவித சந்தேகமும் இல்லை.
எத்தனை போராட்டங்களைக் கடந்தும் நினைத்ததை அடைந்தே தீரும் குணம் கொண்ட வினய்க்கோ, தன் காதல் நிச்சயம் கைகூடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தன் மீதும் தன் காதல் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தவனுக்கு அந்த இயற்கையே தன் காதலை தன்னிடம் சேர்த்துவிடும் என்பது திண்ணம்.
எனவே எவ்வித எதிர்மறை எண்ணங்களும் அவன் மனதை அண்டாமல் அந்த நொடியை பரிபூரணமாக அனுபவித்தான்.
வந்தனா அவனைக் கண்டு பயந்து ஓடியது கூட அவன் மனதில் உற்சாக ஊற்றெடுக்க வைத்தது.
வாயெல்லாம் பல்லாக அங்கிருந்து கிளம்பியவனுக்கு உடனே வீடு திரும்பத் தோன்றாததால் மனம் போன போக்கில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.
சாலையில் கவனம் இருந்தாலும் மனமும் ஒருபக்கம் அவளுடன் வாழப்போகும் வாழ்வைப் பற்றி ஓர் இனிய கற்பனையில் மூழ்கி அவன் முகத்தில் நீங்கா புன்னகை ஒன்றை தோற்றுவித்திருந்தது.
மாலை நேரம் தொடங்கிய அவனின் கார் பயணம், பெட்ரோல் இல்லாத காரணத்தால் நள்ளிரவு நிறைவடைந்தது.
ஆனால் மனதில் அவளுடன் தொடங்கிய காதல் பயணம் முடிவே இல்லா முடிவிலியாக நீண்டு கொண்டே போகும் என்று அவன் மனமாற நம்பினான்.
வண்டி கிரீச்சிட்டு நின்றதும் மாயவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வினய் இவ்வுலகிற்கு வந்திறங்கினான்.
அப்போது தான் சுற்றம் உணர்ந்து தன் கைபேசியை எடுத்துப் பார்க்க அது மணி அதிகாலை மூன்று முப்பது என்று காட்டியதோடு மட்டும் இல்லாமல் பல தவறிய அழைப்புகளையும் காட்டியது.
“ஓஹ் ஷிட்!!! ஹேய் ஏஞ்சல் யூ ஆர் டிரைவிங் மீ கிரேசி!! இப்படி நான் இருந்ததே இல்லை தெரியுமா?? ஒரே பார்வையில என்னை மொத்தமா மாத்திட்ட யூ கியூட்டி.. பட் ஐ லவ் திஸ் ஃபீல்!! என்னை எனக்கே புதுசா காட்டிட்டு இருக்க ஏஞ்சல்!!” என மனதோடு வந்தனாவுடன் உரையாடியவன்,
பின் தன் கைபேசியில் வந்திருந்த அழைப்புகளுக்கு கவனத்தை திருப்பினான்.
“ஓஹ் காட்!! அம்மா பத்து தடவை கூப்பிட்டுருக்காங்க.. நாளைக்கு மும்பை வேற போகணும்ல.. அதுக்கு ஸ்டெல்லா வேற கூப்பிட்டிருக்கா.. காட்!!! இப்படி எல்லாத்தையும் மறந்துட்டு டீன் ஏஜ் பையன் மாதிரி சுத்திட்டு இருந்திருக்கேனே” என தன்னை நினைத்தே வெட்கப் புன்னகை பூக்க,
‘இந்நேரத்துக்கு கால் பண்ண வேண்டாம் யாருக்கும்’ என்று நினைத்தவன்,
“ஒன் அர்ஜென்ட் வொர்க்.. வில் கால் யூ மார்னிங்” என்று மட்டும் அன்னைக்கு குறுஞ்செய்தி அனுப்பியவன், தற்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்று அறிய கூகுள் ஆண்டவரை நாடினான்.
கூகுள் ஆண்டவர் சொன்ன பதிலைக் கேட்டவன், அதிர்ந்தே போனான்.
சென்னையில் இருந்து கிளம்பியவன் தற்போது தனுஷ்கோடிக்கு மிக அருகில் வந்திருந்தான்.
“இப்படி ஒரு பொண்ணுனால என்னையே மறந்து எங்க இருக்கோம் என்ன பண்றோம்னு கூட தெரியாம பைத்தியக்காரன் மாதிரி நான் சுத்துவேன்னு யாருன்னா நேத்து சொல்லியிருந்தா கூட நம்பிருக்க மாட்டேன்.. எப்படி இருந்த என்னை எப்படி மாத்தியிருக்க பார்த்தியா ஏஞ்சல்??” என வானத்தில் மினுமினுக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து வினவியவன், ஒரு சந்தோஷ சலிப்புடன் காரிலிருந்து இறங்கினான்.
யாருமற்ற சாலையில், அந்தகாரம் பூசிய வானத்தில், புள்ளினங்களின் சப்தம் கூட இல்லாத அந்த அமைதி கூட அவன் மனதில் அளவில்லா ஆனந்தத்தை ஆர்ப்பரிக்கச் செய்தது.
அந்தகாரம் அச்சம் மட்டுமல்ல அழகும் கூட.. அது பார்ப்பவரின் மனநிலையைப் பொருத்தது.
சற்று நேரம் அந்த இருளில் நடந்தவனை கடல் அன்னை தன் இரு கரம் நீட்டி வரவேற்றாள்.
ஆம், அவன் நடந்து கொண்டே தனுஷ்கோடியின் கடற்கரைக்கு வந்திருந்தான்.
அவன் மனதைப் போல ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் இப்போது அமைதியாகக் காட்சியளித்தது.
அந்த ஏகாந்தம் அவன் மனதை குளிர்விக்க, கடலை பார்த்தபடி அப்படியே மணலில் அமர்ந்து விட்டான்.
எத்தனை நேரம் அப்படியே கடந்ததோ!! செங்கதிரோன் கடலன்னையின் மடியில் இருந்து துயில் கலைந்து எழுந்து தன் பணியை தொடங்கி செங்கதிர்களை திசை எட்டும் பாய்ச்சவும் தான் வினய்யின் மோனநிலை கலைந்தது.
சூரியனின் கதிர்கள் அவன் மேல் ஊடுருவி அவன் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்க, பொங்கிப் பெருகும் உற்சாகத்துடன் தன் மனதிற்கினியவளை காணக் கிளம்பினான்.
அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்து வண்டியைக் கிளப்பியவன், அங்கிருந்து மதுரை சென்று ஆகாயம் வழியாக காலை பதினொரு மணிக்கெல்லாம் சென்னை வந்தடைந்தவன், மதுரையில் விட்டுவிட்டு வந்த தன் வாகனத்தை இங்கு எடுத்து வரவும் ஏற்பாடு செய்துவிட்டே கிளம்பியிருந்தான்.
வரும் வழியிலேயே தன்னவளைக் காண்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டவன், “ஐ அம் கமிங் ஃபார் யூ பேபி!!” என கூறிக்கொண்டே ஒரு துள்ளலுடன் தன் வீட்டிற்குள் நுழைந்தான்.
error: Content is protected !!