Skip to content
Post Views: 9,392
அத்தியாயம் – 5
“அடடே!!! வாங்கண்ணே!! எப்படி இருக்கீக?? மதினி சௌக்கியமா?? ரொம்ப நாளா ஊர்ப்பக்கமே வாரதில்லையே.. அம்புட்டு சோலியா??” என அவர்களின் தூரத்து உறவினரான நடேசனை வரவேற்று வீட்டிற்குள் அமர வைத்த இளவரசி, அவர் குடிப்பதற்காக மோர் கொண்டு வந்து அவரை உபசரித்தார்.
Advertisement
அதை பெற்றுக் கொண்டு தொண்டையை ஈரம் செய்த நடேசனோ, “எங்கம்மா.. பையனுக்கும் மூணார் பக்கமே வேலை கிடைச்சிருச்சு.. எனக்கும் டீ எஸ்டேட்டைப் பார்க்கவே நேரம் போதலை.. ஏதாவது விசேஷம்னா மட்டும் தான் இங்குட்டு தலை காட்ட முடியுது.. எங்க நாட்டரசனைக் காணோம்?? இன்னுமா வயல்ல இருந்து வரலை?” என அவர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே முற்றத்தில் இருந்து உள்ளே வந்து கொண்டிருந்தார் நாட்டரசன்.
“வாப்பா நடேசா!! எதுவும் காரியம் இல்லாம நீ ஊருக்கெல்லாம் வர மாட்டியே என்ன விஷயம்??” என எந்தவித பூசல் பேச்சுகளுமின்றி அவர் நேராக விஷயத்திற்கு வர,
Advertisement
Advertisement
“அது ஒன்னுமில்லைப்பா என் பையனுக்கு பக்கத்துல மருதம்பட்டியில ஒரு பொண்ணு வந்திருக்கு.. அதை விசாரிக்க வந்தேன்.. அப்படியே ஒரு எட்டு உங்களையெல்லாம் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.. திருவிழாக்கு வேற இன்னைக்குத் தான் காப்பு கட்டுறாங்கலாம்ல..அதுக்குள்ள கிளம்பணும்” என்று பதிலளித்தார் நடேசன்.
“மருதம்பட்டியில யாரு மவ?” என நாட்டரசன் விசாரிக்க, பேச்சு இப்படியே நீண்டு கொண்டு போனது.
Advertisement
“அப்பறம் உங்க அண்ணன் மவ ஏதோ ஒரு மந்திரியோட மவனை வளைச்சுப் போட்டுட்டாலாம்ல.. புடிச்சாலும் புடிச்சாங்க பெரிய புளியங்கொம்பாதான்யா உங்க அண்ணன் புடிச்சிருக்காக.. சொன்னமாதிரி நீயும் ஓரே பொம்பளைப்புள்ளையைத் தான் பெத்து வச்சிருக்க, வந்தனாக்கும் அம்புட்டு சாமர்த்தியம் இருந்தா அப்படியே உங்க அண்ணனை மாதிரி நீயும் ஒரு பெரிய இடமா வளைச்சுப் போட்டுறலாம்” என்று பேச்சுவாக்கில் நடேசன் வார்த்தையை விட,
அடுத்த நொடி அவரின் சட்டையை கொத்தாக பற்றிய நாட்டரசன் ருத்ரமூர்த்தியாக மாறியிருந்தார்.
“படியேறி வீட்டுக்கு வந்தவங்க மேல கை வைக்கக் கூடாதுன்னு பார்க்குறேன்.. மரியாதையா வெளிய போய்டு.. என்ன தைரியம் இருந்தா என் வீட்டுல உட்கார்ந்துகிட்டே என் புள்ளைகளைப் பத்தி தப்பா பேசுவ?? நாக்கை அறுத்து வீசிப்புடுவேன் ஜாக்கிரதை!!” என கண்களில் கணல் பொங்க கர்ஜித்தார்.
நடேசன் பேசிய பேச்சு அதிகப்படி தான் என்றாலும், இப்படி வீடு தேடி வந்தவரிடம் மூர்க்கமாக நடந்து கொள்வது சரியல்ல என்று உணர்ந்த இளவரசியோ, “அய்யோ விடுங்க!! என்ன பண்றீங்க?? அவர் பேசுனது தப்பாவே இருந்தாலும் இப்படியா வீட்டுக்கு வந்தவரை அடிக்கப் பாய்வாங்க.. முதல்ல சட்டையில இருந்து கையை எடுங்க” என தன் கணவரை நடேசனிடமிருந்து பிரிக்க முயன்றார்.
“நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்.. உண்மையைத் தான சொன்னேன்.. உன் அண்ணன் மவ வேலை பார்க்க போன இடத்துல எவனையோ இழுத்துட்டு வந்துட்டா.. அதை தட்டிக் கேட்க துப்பில்லாம அவனுக்கே கட்டி வைக்க போறீங்க.. இதுல என் சட்டையிலே கை வைக்கிறியா நீயி?? இன்னைக்கு உன் அண்ணன் மவ பண்ணினத நாளைக்கு உன் மவ பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம்?? பெருசா வந்துட்டான்.. கையை எடுடா முதல்ல” என நடேசனும் ஆத்திரத்தில் மீண்டும் வார்த்தையை சிதறவிட,
அதில் நாட்டரசனின் சினம் மேலும் தூண்டப்பட அவர் தன்னிலை இழந்தார்.
இளவரசி எவ்வளவு தடுத்தும் கேளாமல் நடேசனின் மேல் பாய்ந்திருந்தார்.
சற்று நேரத்திலே அங்கே ஒரு கைகலப்புத் தோன்றே அவர்களின் சப்தத்தில் ஊரே கூடிவிட்டது.
ஊர்மக்கள் கூடி இருவரையும் ஒருவழியாக பிரித்துவிட்டாலும், இன்னும் இருவருக்குமே ஆத்திரம் சற்றும் குறையவில்லை.
“எம்மேலையே கை வச்சுட்டல்ல!!! உன்னை நான் சும்மா விடமாட்டேன்.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நிச்சயம் உன் மவ எவனையாச்சும் இழுத்துட்டு வந்து உன்னை சந்தி சிரிக்க வைப்பா.. நெஞ்சை நிமித்திக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வந்த நீ, அன்னைக்கு இந்த ஊர் முன்னாடி தலைகுனிஞ்சு நிப்ப!! இது நடக்குதா இல்லையான்னு மட்டும் பாரு” என்று கோபத்தில் சவால் போல் நடேசன் பேசிக் கொண்டு போக,
நாட்டரசன் மீண்டும் அவரைத் தாக்கப் பாய்ந்தார்.
“ஏலேய்!! இன்னுமின்னும் எதுனா உளறிகிட்டு இருந்த பேச வாய் இருக்காது!! என் பொண்ணைப் பத்தி இன்னொருவாட்டி எதுனா இந்த வாயில இருந்து வந்தது நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. இந்த மண்டையில நல்லா ஏத்திக்கோ!! என் புள்ளை நான் சொல்ற பையனுக்குத் தான் கழுத்த நீட்டுவா.. இந்த காதல் கன்றாவி எல்லாம் அவ காலால கூட சீந்திப் பார்க்க மாட்டா.. புரிஞ்சுதா!!! கண்டதையும் பேசி என்கிட்ட அடிவாங்கிச் சாகாம மரியாதையா உன் ஊருக்கு பொட்டியைக் கட்டு” என்று நாக்கை மடக்கிக் கொண்டு மிரட்டியவர் நடேசனை முறைத்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.
சற்று நேரத்தில் நடேசனும் இவர்களை பழித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப,
ஊர்மக்களும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டே கலைந்து சென்றனர்.
அனைவரும் சென்ற பின் புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது இளவரசிக்கு.
‘எங்கேயோ போன மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்ற மாதிரி சும்மா இருந்த மனுஷனை கண்டதையும் பேசி சொரிஞ்சு விட்டுட்டு போய்ட்டாரு அந்த மனுஷன்!! சும்மாவே கண்டிப்புன்ற பேர்ல நான் பெத்த மகளை இந்த கொடுமை பண்றாரு இந்த ஆளு.. இப்போ வேப்பிலை வேற அடிச்சு விட்டிருக்காங்க.. இனி என்னென்ன கூத்து பண்ணப்போறாரோ!! நீ தான் என் புள்ளையை இந்த மனுஷனோட கொடுமையில இருந்து காப்பாத்தனும் மாரியாத்தா’ என கடவுளிடம் வேண்டிக் கொண்ட இளவரசியோ அடுத்த வேலைகளை கவனிக்கச் சென்று விட்டார்.
****
“என்ன வினய் எங்க போய்ட்ட? நைட்டெல்லாம் இப்படி சொல்லாம கொள்ளாம எங்க போன நீ? போன் பண்ணினாலும் எடுக்கலை” என வினய் வீட்டிற்குள் நுழைந்தது தான் தாமதம் அகிலா தன் கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்து விட்டார்.
தாயை எப்படி பேசி சமாளிக்க வேண்டும் என முன்பே தன்னை தயார் செய்து கொண்டு வந்திருந்த வினய்யோ, “மாம்!! நான் என்ன ஸ்கூல் படிக்கிற பையனா? என் வேலை விஷயமா இது வரைக்கும் எத்தனை நாள் வெளியே நைட் ஸ்டே பண்ணிருக்கேன்.. இது ஒரு விஷயம்ன்னு வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே இந்த என்கொயரி தேவையா??” என்று அவன் சலிப்பான குரலில் கேட்க,
சரியாக அதே நேரம் வெளியே ஒரு கிளையண்ட்டை சந்திக்கச் சென்றிருந்த கணேசனும் வீடு நுழைந்தார்.
“வேலை விஷயமா போனா ஸ்டல்லாக்கு கூடவா தெரியாம போகும்.. அவளுக்கு கால் பண்ணினாலும் அவளும் தெரியலைன்னு சொல்றா?” என அகிலா அப்போதும் தன் விசாரணையை கைவிடாமல் இருக்க,
‘போச்சுடா ஸ்டல்லாவுக்கு வேற கால் பண்ணினாங்களா? லவ் சக்சஸ் ஆன பின்னாடி வீட்டுல சொல்லலாம்னு பார்த்தா இந்த மாம் பண்ணுற புலன் விசாரணையில இன்னைக்கே சொல்லிருவோம் போலயே’ என்று நினைத்துக் கொண்டே வினய் என்ன சொல்லி சமாளிக்க என்று யோசிக்க,
அதற்கு அவசியமே இல்லாததைப் போல் கணேசனோ, “அகிலா!! இப்படித்தான் வந்ததும் வராததும் பிள்ளையை நிப்பாட்டி கேள்வி கேட்டுட்டு இருப்பியா?? அவனைப் பார்த்தாலே அவ்ளோ டையர்டா இருக்கான்.. அவனுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்குறதை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்க நீ?? முதல்ல அவனுக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வா.. ஹி லுக்ஸ் சோ டையர்ட்” என்று தன் மனைவியை கண்டித்து அனுப்பியவர் தன் தனையனிடம் திரும்பி, “நீ போய் ஃப்ரெஷ் ஆய்ட்டு வா வினய்” என்று அவன் தோளைத் தட்டிவிட்டு உள்ளே சென்றார்.
“தேங்க் யூ டாட்!!” என்று முணுமுணுத்தவன் விட்டால் போதும் என தன்னறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
இன்னும் சற்று நேரத்தில் தன்னவளை மீண்டும் காணப் போகிறோம் என்னும் எண்ணமே அவனை சந்தோஷ வானில் சிறகடிக்க வைத்தது.
“ஏஞ்சல்!! நான் உன்னையே நினைச்சுட்டு இருக்க மாதிரி நீ என்னைப் பத்தி கொஞ்சமாச்சும் நினைக்கிறியா?? உன்னால பாரு இன்னைக்கு அம்மா என்னை ஏதோ அக்யூஸ்ட் மாதிரி நிக்க வைச்சு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.. எல்லாம் நீ பண்ணின வேலை..” என ஏதோ அவள் எதிரில் இருப்பது போல் தன்போக்கில் அவன் பேசிக் கொண்டிருக்க அகிலா காபிக் கோப்பையுடன் உள்ளே நுழைந்தார்.
“என்ன வினய் தனியா சுவத்தைப் பார்த்து பேசிட்டு இருக்க?? என்னாச்சு உனக்கு??” என அகிலா குழப்பத்துடன் வினவ,
“போச்சுடா மறுபடியும் மறுபடியும் உங்க கிட்டயே மாட்டனுமா?” என மனதிற்குள் கூறிக் கொண்டவன்,
“நத்திங் மாம்.. ஜஸ்ட் வரப்போ ஒரு சாங் கேட்டேன் அதைத்தான் பாடிட்டு இருந்தேன்.. தேங்க்ஸ் ஃபார் தி காஃபி மாம்” என்று சமாளித்து அகிலாவின் கைகளில் இருந்த காஃபியைப் பெற்றுக் கொண்டான்.
அவன் பதிலில் சுத்தமாக நம்பிக்கை இல்லாவிடினும் தற்போது இது முக்கியமல்ல என்று நினைத்த அகிலாவும் அதை விட்டுவிட்டு, “ஏன் வினய்?? பிரியங்காவை ஏன் பிடிக்கலை உனக்கு?” என தனக்கு வேண்டிய விஷயத்திற்கு வந்தார்.
நேற்றிலிருந்து வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வினய்க்கோ தன் தாய் யாரைக் குறிப்பிடுகிறார் என்று கூட புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை.
“எனக்கு பிரியங்கா சோப்ராவை பிடிக்குமே மாம்.. ஏன் இப்படி கேட்குறீங்க?” அவன் புரியாமல் வினவ,
“விளையாடாத வினய்!! நான் எவ்ளோ முக்கியமான விஷயம் பேசுறேன் நீ விளையாடிட்டு இருக்க? நான் யாரைக் கேட்குறேன்னு உனக்கு தெரியலையா?” என அவன் பதிலில் எரிச்சலடைந்த அகிலா கோபம் கொள்ள,
உண்மையிலும் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியாத வினய்யும், ” சத்தியமா நீங்க யாரை சொல்றிங்கன்னு தெரியலை மாம்.. யாரு பிரியங்கா?? உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா?” என பதில் கேள்வி கேட்டு அகிலாவின் இரத்தைக் கொதிப்பை ஏற்றினான்.
“வினய்!!! அவ தான் நான் உனக்கு பார்த்த பொண்ணு.. நீ கூட நேத்து அவளைப் பார்க்கப் போனியே!! ஒருவேளை நீ உன் வேலையில அவளை மீட் பண்ண மறந்துட்டியோ அதான் அந்த பொண்ணு கோச்சுகிட்டு இது ஒத்துவராதுன்னு சொல்லிட்டாளா?? விடு நான் அந்தப் பொண்ணுகிட்ட பேசுறேன் இன்னைக்கு போய் அந்த பொண்ணை பார்த்திரு நீ.. கண்டிப்பா உனக்கு பிடிக்கும்” என தனக்குச் சாதகமான ஒன்றை அவராக அனுமானம் செய்து கொண்டு பேசிக் கொண்டே போனார்.
‘ஒஹ் ஷிட்!! இப்படியா வினய் இருப்ப!! விட்டா உன்னையே நீ மறந்துருவ போல.. எல்லாம் அவ பண்ணுற வேலை!! என்னை பைத்தியம் ஆக்கிருவா போல ‘ என நினைத்துக் கொண்ட வினய்,
“மாம்!! மாம்!! நிறுத்துங்க!! நான் அந்தப் பொண்ணை மீட் பண்ணேன் நேத்து.. ஆனா சடன்னா நீங்க கேட்கவும் அந்தப் பொண்ணு தான் பிரியங்கான்னு ஸ்ட்ரைக் ஆகலை எனக்கு.. உடனே நீங்களா ஒன்னை கற்பனை பண்ணிட்டு அந்தப்பொண்ணுக்கு கால் பண்ண போறிங்க.. என்ன மாம் இது” என தன் அன்னையின் ஆசையில் ஒரு லாரி மண் அள்ளிப் போட்டு அப்பாவியாக அமர்ந்திருந்தான்.
“அப்போ நிஜமாவே நீங்க மீட் பண்ணிங்களா??” என அகிலா உள்ளே போன குரலில் வினவ,
“அஃப்கோர்ஸ் எஸ் மாம்!!” என உடனடியாக வந்து விழுந்தது பதில்.
“உனக்கு ஏன் வினய் அந்தப் பொண்ணை பிடிக்கலை? நீ தான சொன்ன உன் கேரக்டருக்கு அப்படியே ஒத்துப்போற பொண்ணு அமைஞ்சா தான் லைஃப் நல்லா இருக்கும்னு.. அதுனால தான் அம்மா அவ்ளோ தேடி தேடி பிரியங்காவை செலக்ட் பண்ணேன் வினய்.. அவளோட திங்கிங் கூட உன்னை மாதிரியே தான்.. ரெண்டு பேருக்கும் நிறைய சிமிலாரிட்டிஸ் இருக்கு.. கண்டிப்பா யூ போத் வில் மேக் அ பெர்பெக்ட் கப்பில்.. கொஞ்சம் நல்லா யோசிச்சு பொறுமையா கூட உன் முடிவை சொல்லு.. நான் அந்த பொண்ணுக்கிட்ட பேசுறேன்..” என வினய்யை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடும் நோக்குடன் அவர் பேசிக்கொண்டு போக,
“மாம்!!! என்னாச்சு உங்களுக்கு?? நான் நேத்து தெளிவா சொல்லிட்டு தான போனேன்.. எனக்கு பிடிச்சா மட்டும் தான் ஓகே சொல்லுவேன்னு.. அப்பறம் இப்போ வந்து கம்பெல் பண்ணுறீங்க.. வொய் மாம்??” வினய் தன் தாயின் மனநிலை அறியாமல் வினவினான்.
“அச்சோ நான் கம்பெல் பண்ணலை வினய்.. அம்மாக்கு உன்னைப்பத்தி நல்லா தெரியும்.. அதான் உனக்கு அந்த பொண்ணு ரொம்ப பொருத்தம்.. இப்படி மிஸ் பண்ணிற வேண்டாமேன்னு தான்.. வேறொண்ணுமில்லை.. உனக்கு பிடிக்கலைனா வேண்டாம்.. அம்மா வேற பொண்ணு பார்க்குறேன்” என எங்கே தன் மகன் தன்னை தவறாக நினைத்து விடப் போகிறானோ என்று உடனே அகிலா பதறிப்போய் பதிலளித்தார்.
“இனி எனக்கு நீங்க பொண்ணு பார்க்க வேண்டாம் மாம்.. எனக்கு தோணுறப்போ நானே சொல்றேன்.. ” என வினய் தன்னவளை மனதில் வைத்து உடனடியாக மறுத்தான்.
“ஏன்? ஏன்? ஏன்? ஏன்!!? ஏன் பார்க்கவேண்டாம்?” என அகிலா படபடக்க,
“மாம்!! என்னாச்சு உங்களுக்கு?? எனக்கு இப்போதைக்கு வேண்டாம்னு தோணுச்சு.. இதுக்கு ஏன் இவளோ ‘ஏன்???’ ரொம்ப வித்தியாசமா பண்றீங்க மாம்” வினய் தன் தாயைப் புரியாமல் பார்த்துக் கொண்டே கூறினான்.
அடுத்து அகிலா அவனை மறுத்து ஏதோ கூற வரும் முன்னே கணேசன் அவரை அழைக்க, சரி பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து அகன்றார்.
அந்த அறை வாசலிலே கண்களில் கோபம் கொப்பளிக்க அகிலாவை எதிர்கொண்டார் கணேசன்.
“இல்லைங்க நான் சும்மா..” என அகிலா ஏதோ சமாளிக்க முயல,
கை நீட்டி அவரைத் தடுத்தவர், “நான் அவ்ளோ சொல்லியும் கேட்காம நீ இப்படி பண்ணிட்டு இருக்க? உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை அகி.. வினய் உன் பையன் தான்.. அதுக்காக அவன் உன் அடிமை கிடையாது நீ சொல்றதை மட்டுமே கேட்க.. அவனுக்குன்னு தனியா மனசு இருக்கு அதுல ஆசைகள் இருக்கும்.. அதை புரிஞ்சுக்கோ.. நீ இந்த மனநிலையிலேயே இருந்தா நிச்சயம் நான் சும்மா இருக்க மாட்டேன்.. நீ ஒரு புரோஃபசர் தானே? கொஞ்சமாச்சும் சிந்தனையை விரிவுபடுத்த பாரு.. இல்லைன்னா கஷ்டம்.. இன்னொரு முறை இந்த மாதிரி பண்ணி என் கோபத்துக்கு ஆளாகாத அகி!! அவ்ளோ தான் சொல்லுவேன்.. வா போகலாம்” என எச்சரித்தவர் தன் மனைவியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
****
“பெரியம்மா எனக்கு போதும்!!” என குழிப்பனியாரத்தை வாயில் வைத்துக் கொண்டே சமயலறைக்கு குரல் கொடுத்தாள் வந்தனா.
“டேய் தனு!! வளர்ற பிள்ளை இப்படியா சாப்பிடுறது? இன்னும் ஒரு ஈடு உனக்கு சுட்டுட்டேன் நீ சூடா போட்டு சாப்பிடு.. உனக்கு பிடிக்குமேன்னு தான் பனியாரமும் காரச்சட்னியும் செஞ்சேன்.. நல்லா போட்டு சாப்பிடுடா” என வாஞ்சையாகக் கூறிய வைஜெயந்தி, சுடச்சுட பனியாரங்களை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தார்.
“அடடே!! நல்லா இருக்கு ம்மா உங்க நியாயம்.. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் முடிஞ்சு அடுத்த வீட்டுக்கு போகப் போறது நானு.. நியாயப்படி எனக்குப் பிடிச்சதை தான் நீங்க செஞ்சு போடணும்.. ஆனா இந்த எருமையை விழுந்து விழுந்து கவனிச்சுட்டு இருக்கீங்க.. அவளை கவனிச்சது போதும்.. முதல்ல எனக்கு சாப்பாடை வைங்க மா.. பசிக்குது” என அப்போது தான் குளித்து விட்டு வந்த சங்கீதா தன் தங்கையை இடித்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தாள்.
“அடிக் கழுதை!! எழுந்ததே லேட் இதுல குழந்தையை வேற கிண்டல் பண்றியா?? கல்யாணம் ஆகப்போகுதுன்னு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? சீக்கிரம் எழுந்து வந்து அம்மா கூட இருந்து சமையல் கத்துப்போம்னு கொஞ்சம் கூட பொறுப்பில்லை உனக்கு.. போற இடத்தில எனக்கு கெட்ட பேர் வாங்கிக் கொடுக்காம ஒழுங்கு மரியாதையா நாளையில இருந்து எங்கூடவே எழுந்து சமையல் கத்துக்குற” என்று அக்மார்க் அம்மாக்களின் வசனத்தை அச்சுப் பிசகாமல் கூறியவர் வந்தனாவின் தட்டில் பனியாரத்தை நிரப்பி விட்டே அங்கிருந்து நகன்றார்.
அவர் சென்ற பின் தன் தமக்கையை பார்த்து பலிப்பு காட்டிய வந்தனாவோ, “தவளை தன் வாயால் கெடும்னு சும்மாவா சொன்னாங்க” என கிண்டல் செய்து சங்கீதாவிடம் சில பல அடிகளையும் பரிசாக பெற்றுக் கொண்டாள்.
இப்படியாக அவர்களின் காலைப் பொழுது அழகாகவே நகர, சரியாக 12.30 போல் சங்கீதாவின் வருங்காலக் கணவனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
“ஹேய் சங்கி மங்கி!! மாமா கிட்ட இருந்து போன்” என அறிவித்துக் கொண்டே தமக்கையின் கைபேசியை சமையலறைக்குள் எடுத்துக் கொண்டு வந்தாள் வந்தனா.
“என்ன இந்த நேரத்தில கூப்பிடுறாங்க?” என யோசித்துக் கொண்டே கைபேசியை வாங்கி காதுக்குக் கொடுத்த சங்கீதா அங்கிருந்து தனதறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளைப் பார்த்த வந்தனாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
“லவ் பண்ணா நேரம் காலமே கிடையாதோ?? நேத்து நைட் ஃபுல்லா பேசினாங்க பேசினாங்க பேசிட்டே இருந்தாங்க.. இப்போ மறுபடியுமா?? அப்படி என்ன தான் டா பேசுவீங்க??” என சலித்துக் கொண்ட வந்தனாவிற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை தானும் சில காலத்தில் இப்படியான ஒரு அழைப்புக்கு ஏங்கப் போகிறோம் என்று..
நொடிகள் நிமிடங்களாகக் கரைய, இருபது நிமிடம் கழித்து தான் வெளியே தலை காட்டினாள் சங்கீதா.
“என்ன இவளோ சீக்கிரம் வந்துட்ட?? போன் டெட் ஆய்ருச்சா சார்ஜ் இல்லாம??” என வந்தனாவின் கேலிப் பேச்சில் பொய்க்கோபம் கொண்டு அவளுடன் சண்டைக்கு நிற்க,
சில நிமிடங்கள் இவர்களின் வம்புப் பேச்சில் கரைந்தது.
“சரிடி சாப்பிட்டு கும்பகர்ணி மாதிரி தூங்கிறாம கிளம்பு நம்ம வெளிய போகணும்” என சங்கீதா முன் அறிவிப்பாக கூறினாள்.
அதைக்கேட்ட வந்தனாவிற்கு முன்தினம் பார்த்த வினய்யின் பார்வை மனதில் மின்னல் போல் வந்து போக, ‘ இன்னைக்கும் வெளிய போறப்போ அந்த மேக்கப் மேன் கண்ணுல பட்டுட்டா?? ஆத்தி வேண்டவே வேண்டாம்.. சென்னையில இருந்து கிளம்புற வரைக்கும் வீட்டு வாசப்படியை தாண்டக் கூடாது ‘ என முடிவெடுத்த வந்தனாவோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டாள்.
“நான் வரலை.. நீ அண்ணனை கூட்டிட்டு போ.. எனக்கு தூக்கம் வருது” என கழண்டு கொள்ளப் பார்த்தாள்.
“என்னடி உன் பிரச்சனை.. கல்யாணத்துக்கு மேக்கப் ட்ரையல் பார்க்கணும் டி.. இன்னைக்கு விட்டா அவரை பிடிக்க முடியாது.. அவ்ளோ பிசி அவர் தெரியுமா.. அவரே கால் பண்ணி வர சொல்லிருக்காராம்.. சந்தோஷ்க்கு அவ்ளோ பொறுமை எல்லாம் இல்லை.. சோ என்னைக் கடுப்பேத்தாம மரியாதையா கிளம்பி வா.. ” என சங்கீதா வெளியே போவதற்கான காரணத்தைச் சொல்ல வந்தனாவிற்கு திக்கென்றானது.
இருந்தும் தான் கேட்டது சரியா என உறுதி படுத்திக் கொள்ள, “மேக்கப் ட்ரையலா?? யாரு வரா?? நேத்து வந்த மேக்கப் மேன் இல்லை தான??” என ஒரு நப்பாசையில் மீண்டும் கேட்க,
அவள் நெஞ்சில் இடியை இறக்குவதைப் போல்,”அட அவரே தான்.. அவர் தான் தி பெஸ்ட் தெரியுமா?? கல்யாணத்துக்கு நிறைய பொலிட்டிசியன்ஸ் சென்ட்ரல், ஸ்டேட்ல இருந்து வருவாங்க.. சோ அவங்க வீட்டுல எல்லாமே பெஸ்டா இருக்கணும்னு நினைக்கிறாங்க.. அதான் முன்னாடியே மேக்கப் ட்ரையல்லாம் பண்ணிப் பார்க்கணும்னு உங்க மாமா அவர்கிட்ட கேட்டிருப்பாங்க போல.. முன்னாடி டைம் இல்லை பார்க்கலாம்னு சொன்னவரு இன்னைக்கு அவராவே கால் பண்ணி மூணு மணிக்கு வர சொல்லியிருக்காராம்.. அதுனால இப்படி கேள்வியா கேட்காம முதல்ல கிளம்பி வா” என சங்கீதா கூறினாள்.
“சுத்தம்!!! யாரைப் பார்க்க கூடாதுன்னு நினைச்சு வெளிய வரலைன்னு சொன்னா அவனையே பார்க்க கூட்டிட்டு போறேன்னு நிக்கிறா இந்த எருமை” என மனதில் புலம்பிக் கொண்ட வந்தனாவோ,
“ஏண்டி இவளோ பெரிய சென்னையில உனக்கு ஒரு பொம்பளை கூடவா மேக்கப் போட கிடைக்கலை.. அந்த பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா??” என்று கடுப்புடன் கேட்க,
“அடி லூசு!! நீயே பார்த்தல எங்கேஜ்மெண்ட் மேக்கப்பை எத்தனை பேர் பாராட்டுனாங்கன்னு.. கழுதைக்கு தெரியுமா கருவாடு வாசனை.. சும்மா உளறாம போய் சாப்பிட்டு கிளம்பு.. நீ தான் கூட வர.. இல்லைன்னா நேத்து நீ தியேட்டர்ல பண்ண கூத்தை வீடியோ எடுத்து வச்சிருக்கேன் அதை சித்தப்பாக்கு அனுப்பிருவேன் பார்த்துக்கோ” என மிரட்டிவிட்டே அங்கிருந்து அகன்றாள்.
வந்தனாவின் கெஞ்சல்கள் மிஞ்சல்கள் என அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் போக, அந்த மாயக்கண்ணனின் வலைக்குள் விழ விருப்பமே இல்லாமல் கிளம்பி வந்திருந்தாள்… வரவழைக்கப்பட்டிருந்தாள் என்று சொல்ல வேண்டுமோ??
error: Content is protected !!