Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 8

அத்தியாயம் – 8

 

 

” செவத்த நிறத்தவளே



Advertisement

  என் பாட்டைக் கேட்டு ரசிச்சவளே

  அடி உன்னை போல அழகு புள்ளை

  கிளாசுக்குள்ள யாரு புள்ளை

Advertisement

  உன் பட்டு போன்ற கன்னம் தொட்டு

Advertisement

  என் ஹார்ட்டு பீட்டு ஏறுதடி ” 

 

  என்று எப்போதும் போல் தனக்குத் தோன்றுவதைப் போல் பாடல் வரிகளை மாற்றி அமைத்து தன் போக்கில் பாடிக் கொண்டிருந்த மலரைக் கண்டு வந்தனா தலையில் அடித்துக் கொண்டாள்.

Advertisement

 

“ஹேய் எருமை!! பஸ்ல எல்லாரும் நம்மளயே பார்க்குறாங்க டி.. கொஞ்ச நேரம் உன் திருவாயை மூடிட்டு தான் வாயேன்” என்ற வந்தனாவை சற்றும் சட்டை செய்யாமல் அடுத்த வரிகளைப் பாடிய மலர் இடையில் வந்தனாவின் கன்னத்தை பற்றி வேறு கொஞ்சி அவளை சீண்ட வேறு செய்ய, வந்தனா மேலும் கடுப்படைந்தாள்.

 

இது அவர்கள் எப்போதும் வழக்கமாக பயணிக்கும் பேருந்து தான் என்பதால், நடத்துநர் ஒரு புன்னகையுடன் கடந்துவிட்டாலும், புதிதாய் அவர்களைக் காணும் பயணிகளுக்கு மலரின் பாடலும் அவள் பாவனையும் சுவாரஸ்யத்தைத் தந்தது.

 

“கண்ணிருக்க எல்லாரும் பார்க்கத் தான் செய்வாங்க புள்ள.. நம்மளை பார்க்குறாங்கன்னு அவெங்க கண்ணை என்ன நோண்டியா எடுத்துட்டு வார சொல்லுத.. கம்முனு பாட்டை கேட்டுகிட்டு வா.. நானே திருவிழா அதுவுமா பிராஜெக்டு பண்ணு முட்டைக்கோசை தின்னுண்ணு காலேஜுல கடுப்பேத்துறானுங்கன்னு கோவத்துல இருக்கேன்.. ” என்ற மலர் தன் பையில் கொண்டு வந்திருந்த கடலை மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டே மீண்டும் வேறு பாடலுக்குத் தாவினாள்.

 

இதுதான் மலர். எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அதை போட்டு மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் வாழ்க்கையை போகிற போக்கில் தனக்குப் பிடித்தவாறு ரசித்து வாழ்பவள். தன்னைப் பற்றிய பிறரின் எண்ணங்களுக்கு என்றுமே மதிப்பளிக்க மாட்டாள். தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே அவளது இயல்பு. மலரும் வந்தனாவும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்ததினால் இருவருக்குள்ளும் தன்னாலே ஒரு நெருக்கம் உண்டாகிவிட்டது. இருவரின் வாழ்வில் இதுவரை ஒளிவு மறைவு ஏதுமிருந்ததில்லை. இப்போது முதல்முறையாக வினய்யைப் பற்றி அவளிடம் இதுவரை கூறாமல் இருப்பதே வந்தனாவிற்கு மனம் குறுகுறுப்பாக இருந்தது. அவளின் அலைப்புறுதலை மலர் கண்டுகொண்டாலும் அவளைத் தோண்டித் துறுவாமல் மேலும் ஏதேதோ சேஷ்டைகள் செய்து வந்தனாவை இயல்பாக்கியிருந்தாள்.

 

அதற்குள் அவர்கள் கல்லூரியும் வந்துவிட இருவரும் பேசியபடியே உள்ளே நுழைந்தனர்.

 

“என்ன புள்ள?? என்ன விஷயம்?? உன் மண்டைக்குள்ள எந்த குருவி குறுக்கா மறுக்கா ஓடுது??” என மெதுவாக ஆரம்பித்தாள் மலர்.

 

சட்டென அவள் கேட்கவும் பதறிய வந்தனா, “ஹான்!! என்ன ஓடுது?? அதெல்லாம் ஒன்னுமில்லையே” என்று சமாளிக்க,

 

அவள் பதட்டத்தை கவனித்த மலரும், “ஒன்னும் இல்லைன்னா சரித்தான்” என அந்தப்பேச்சை விட்டுவிட்டு வேறொன்றுக்கு தாவிவிட்டாள்.

 

மலர் மேலும் அதைப் பற்றி ஏன்? எதற்கு? என்று தோண்டித் துறுவினால் கூட பரவாயில்லை போலும் இருந்தது. இப்படி அதைப்பற்றி ஏதும் கேட்காமல் இருந்தது வந்தனாவை மேலும் குறுகுறுக்க வைக்க, அவளே உண்மையைக் கூறுவது என்று வாய் திறந்தாள்.

 

“மலரு!! உன்கிட்ட ஒன்னு சொல்லணும் டி” என வந்தனா தயங்கித் தயங்கி ஆரம்பிக்க,

வழியில் இருந்த மரங்களில் உள்ள இலையை எட்டிப் பறித்துக் கொண்டு வந்த மலரும், “நீ எப்போ புள்ள சொல்ல போற??? தப்பென்ன செஞ்சேன் தள்ளிப் போற??” என பதிலுக்கு தன் பாணியில் பாட்டாகவே படிக்க,

 

“ப்ச்!! விளையாடாம நான் சொல்றதை சீரியஸா கேளு மலரு” என்றாள் வந்தனா ஆயாசமாக.

 

“சீரியஸா கேக்க நான் என்ன சிட்டி ஆஸ்பத்திரியில சிக்கன் குனியா வந்தா படுத்திருக்கேன்” என்று அவள் மேலும் கடுப்பேற்ற,

 

வந்தனா அவளை முறைத்துவிட்டு ஏதும் பேசாமல் நடக்க ஆரம்பிக்க,

 

அவள் தோள்களை உரசியவாறு அவளை நெருங்கி நடந்த மலர், 

“கோவக்காரக் கிளியே!!

தனியா நடந்து போகாதே!! 

நீ விட்டுபுட்டு போனா

நான் தவிச்சிப் போக மாட்டேனா??” என்று மேலும் அவளை சீண்ட,

 

“ஏண்டி என்னை படுத்துற??” என்ற வந்தனா நொந்தே விட்டாள்.

 

“சரி புள்ள சாந்தியாகு (அமைதியாகு).. என்ன சொல்லணும் சொல்லு” என்று தன் விளையாட்டை கைவிட்டாள் மலர்.

 

இப்போது மீண்டும் வந்தனாவின் வாய் தன்னாலே பூட்டிட்டுக் கொள்ள,

 

“இந்தா!! ஒழுங்கா சொல்றதுன்னா சொல்லு இல்லைன்னா நான் அடுத்து நம்ம ஹச். ஓ. டிக்கு ( H.O.D) ஒரு பாட்டு ரெடி பண்ணனும்” என்று மலர் அவசரப்படுத்த,

 

ஒருவித தயக்கத்துடன், “அது வந்து.. நான் சங்கீ அக்கா நிச்சயத்துக்கு சென்னை போனேன்ல” என்று வந்தனா துவங்க,

 

“ஆமா இதுதான் தெரியுமே.. இதைத்தான் நேத்து நம்ம சன் டிவி நியூஸ்ல தலைப்புச் செய்தியா சொன்னாங்கல” என்று மலர் இடக்காக பதிலளிக்க,

 

“ப்ச்!! என்னடி??” என அவள் சேஷ்டையில் காலை தரையில் உதைத்துக் கொண்டு சிணுங்கினாள் வந்தனா.

 

அவளின் அந்த செய்கை மலருக்கு பெரிய புன்னகையை தோற்றுவிக்க, “அழகு புள்ள நீ” என்று தன் தோழிக்கு திருஷ்டி கழித்தாள்.

 

“சரி மேல சொல்லு!!” என மீண்டும் வந்தனாவிற்கு எடுத்துக் கொடுக்க,

 

“அங்க!! அங்க!!!” என்று அடுத்து வினய்யைப் பற்றி எப்படித் தொடங்குவது என்று புரியாமல் அவள் திணறினாள்.

 

 சொன்னால் அவள் புரிந்து கொள்வாளா? இல்லை தன்னைத் தவறாக நினைத்து விட்டால்?? அந்த நினைப்பே அய்யோ என்றிருந்தது வந்தனாவிற்கு.

 

“அங்க என்ன?” என்ற மலர் ஓரளவிற்கு விஷயத்தை யூகித்து விட்டாள்.

 

“ஒருத்தங்க எனக்கு.. எனக்கு ப்ரபோஸ் பண்ணிட்டாங்க டி” என ஒருவழியாய் வந்தனா இதை கூறி முடிப்பதற்குள்ளாகவே பதட்டத்தில் அவளின் காதோர பூனை முடிகள் கூட வேர்த்திருந்தது.

 

ஆனால் மலரோ அவள் எதிர்பார்த்த எதிர்வினையை கொடுக்காமல், “சரி அதுக்கென்ன?? நம்ம காலேஜூல கூடத்தான் உன்னை நாலு பேரு லவ்வுன்னு தொரத்துனானுங்க.. அவனுங்களை நான் திருப்பி ஓட விட்டேன்ல.. அது மாதிரி இவனையும் ஓட விடனுமா?” என சாவதானமாகக் கேட்க,

 

அடுத்த நொடியே பதறிப் போய், “இல்லை!! இல்லை!! அதெல்லாம் இல்லை” என உடனடியாக மறுத்தாள் வந்தனா.

 

“சரி அப்போ நீயும் அவரை லவ் பண்ற.. அதானா??” என சரியாக விஷயத்திற்கு வர,

 

இல்லை என்று சொல்லவும் முடியாமல், ஆமாம் என்று ஒத்துக் கொள்ளவும் முடியாமல் அவஸ்தையாக அவளைப் பார்த்து அனைத்து பக்கமும் தலையை ஒரு மையமாக ஆட்டி வைத்தாள் வந்தனா. 

 

அவள் செய்கையில் சத்தம் போட்டே மலர் சிரித்து விட,

 

“என்னடி சிரிக்கிற??” என்று பாவமாக வந்தனா பார்த்து வைக்க,

 

“அச்சோ அமுல் பேபியே தான் புள்ள நீ!!” என்று அவளை கொஞ்சிக் கொண்ட மலர், 

 

“உன் மூஞ்சிக்கு பொய் சொல்றதே செட் ஆவாது.. இதுல என்கிட்ட மறைக்க சுத்தமா முடியாது.. இந்த மூஞ்சியை எனக்குத் தெரியாதா?? நீ சொல்லலைனாலும் நானே கண்டுபிடிச்சிருவேன்னு தெரியாதா?.. நீ சென்னையில இருந்து அவசரமா கிளம்பி வந்தப்போவே எனக்கு டவுட்டு தான்.. அன்னைக்கு உன் வீட்டுக்கு வந்து உன் மூஞ்சியை பார்த்ததுமே எனக்குத் தெரிஞ்சு போச்சு.. சும்மா உன் வாயில இருந்தே வரட்டும்னு தான் நான் எதுவும் கண்டுக்கலை.. ” என்று அவள் சொல்ல,

 

“அய்யோ அவ்ளோ அப்பட்டமாவா தெரிஞ்சிருச்சு.. அப்போ எங்க அப்பா அம்மாக்கும் தெரிஞ்சிருக்குமா டி?? போச்சு நான் செய்தேன்” என்று உடனே வந்தனா புலம்பத் தொடங்க,

 

“அட சும்மா எல்லாத்துக்கும் இப்படி பயந்துகிட்டே இருந்தா சரியா போச்சா?? இதுக்கே பயந்தா அப்பறம் மத்ததெல்லாம் எப்படி” என அடுத்து வீட்டை சமாளித்து கல்யாணம் செய்வதைப் பற்றி மலர் கேட்கவும் வந்தனாவின் முகமே கசங்கிப் போனது.

 

அதைக் கண்டு அவளை ஆதுரமாய் அணைத்துக் கொண்ட மலர், “ச்ச என்ன புள்ள நீ!! அதான் நான் இருக்கேன்ல எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.. பையன் யாருன்னு மட்டும் சொல்லு சும்மா தட்டித் தூக்கிரலாம்” என அவளை இலகுவாக்க முயன்றாள்.

 

அவளின் முயற்சி புரிந்ததும் ஓர் வெற்றுப் புன்னகையை சிந்திய வந்தனா, “இல்லை மலரு!! இது சரி வராது.. தப்பு இது!! நானே எனக்குள்ள எப்படி யாருனே தெரியாதவங்க மேல இப்படி ஒரு பிடித்தம் வந்ததுன்னு தெரியாம முழிக்கிறேன்.. எங்க அப்பா பத்தி தெரிஞ்சும் நான் இப்படி பண்ணது எவ்ளோ பெரிய தப்புல்ல மலரு.. இது வேணாம் மலர். அவர் யாரோ எவரோ எங்கேயோ இருக்காரு.. கொஞ்ச நாள்ல இது மறந்து போய்டும் .. கண்ல படாதது கருத்துலயும் படாது” என்று அவளுக்கு சொல்வது போல் தனக்குத் தானே சொல்லி தன் மனதை ஏமாற்றிக் கொள்ள முயன்றாலும் அவனையும் அவன் கண்களையும் மறக்க முடியுமா உன்னால் என்று கேட்டு அவள் மனம் அவளை எள்ளி நகையாடியது.

 

“இந்தா பைத்தியம் மாதிரி உளறிகிட்டு திரியாத.. லவ்வு என்ன எக்ஸ்யூசு மீ மே ஐ கம் இன்னுனு கேட்டுட்டா வரும்.. இப்போ என்ன வந்திருச்சு.. காய்ச்சலை விரட்ட மாத்திரை போடுற மாதிரி லவ்வை விரட்ட ஏதும் மாத்திரை வச்சிருக்கியா? இல்லைல.. இப்போ நீ பண்ண வேண்டியது பையன் யாரு?? என்ன?? எல்லாம் பார்த்து உண்மையாவே உன்னை விரும்புறாங்களா? நல்ல பையனான்னு மட்டும் தான் பாக்கணும்.. சரியா?? அப்பான்னா அப்படித் தான் இருப்பாங்க.. அதுக்காக பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து நீயும் கஷ்டப்பட்டு அதைப்பார்த்து அவங்களும் கஷ்டப்படனுமா?? அதெல்லாம் புரிஞ்சுப்பாங்க கொஞ்ச நாள்ல.. நீ கண்டதையும் போட்டு மனசை அலட்டிக்ககாத.. பையனைப் பத்தி எங்க அண்ணன் தடிமாடுகிட்ட சொல்லி விசாரிக்க சொல்லுவோம்.. உண்மையாவே விரும்புனா அவுகளா வரட்டும் அப்பறம் மித்ததை யோசிச்சுக்கலாம்.. அதுவரைக்கும் இதையே யோசிக்காம இந்த பிராஜெக்டை நீ பண்ணி முடிச்சிருவியாம் சரியா?” என ஒரு குழந்தைக்கு விளக்குவது போல் மலர் வந்தனாவின் சஞ்சலத்தை களைய முயன்றாலும் வந்தனாவால் சட்டென அப்படி மனதை மாற்ற முடியவில்லை, அவள் சொல்வதையும் ஏற்க முடியவில்லை.

 

நாட்டரசனை நினைக்கையிலே அவள் நெஞ்சம் பயத்திலும், குற்ற உணர்விலும் கிடந்து தவித்தது. இருந்தாலும் இதுவரை மனதில் தான் மட்டுமே பூட்டி அழுத்தி வைத்துக் கொண்டிருந்ததை மலரிடம் பகிர்ந்து கொண்டதில் அவளின் நெஞ்சம் சற்றே ஆசுவாசம் அடைந்தது.

 

மீண்டும் அந்தப் பேச்சை தொடர விரும்பாத வந்தனா, “சரி நடக்கிறது நடக்கட்டும் பார்த்துக்கலாம்.. இப்போ வா ஹெச்.ஓ.டி கெளம்பிறப் போறாரு” என்று மலரை இழுத்துக் கொண்டு வேதியியல் துறை அமையப்பெற்றிருந்த வளாகத்தினுள் நுழைந்தாள்.

 

 

வந்த அரை மணி நேரத்திற்குள்ளே அவர்கள் பிராஜெக்ட் பற்றி விளக்கி அதற்கான அனுமதியையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.

 

“இந்தா புள்ள!! கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு.. கேன்டீன் பக்கம் நடையை கட்டு.. ஏதாவது வாங்கி வயித்துக்குள்ள போட்டாத்தான் அது கம்முன்னு கெடக்கும்” என்று மலர் சொல்ல,

 

“நீ இருக்கியே!! இப்போ தான வீட்டுல இருந்து கொண்டு வந்த ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்டு முடிச்ச.. அதுக்குள்ள பசிக்கிதா?? இதென்ன வயிறா?? இல்லை வேற எதுவுமா?” என்று அவளை கிண்டல் செய்தாள் வந்தனா.

 

இவர்களின் டிபார்ட்மென்ட் கல்லூரியின் கடைக்கோடியில் இருந்தால் கேன்டீன் கல்லூரியின் நுழைவாயில் அருகில் அமைந்திருந்தது. எனவே மெதுவாக ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு இரு பெண்களும் நடையை போட்டனர்.

 

“ஆமா புள்ள உன் ஆளு பேர் என்ன?” என்ற மலர் தூரத்தில் வந்து கொண்டிருந்த வாகனத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“ஏய் ஆளுன்னு எல்லாம் சொல்லாத மலரு!! அவங்க பேர் வினய்” என அதட்டிய வந்தனாவின் முகத்தில் வினய்யின் பெயரை சொல்லும் போது வந்து போன பாவனையைக் கண்டு சிரித்துக் கொண்டாள் மலர்.

 

“பேரை சொல்லும் போதே இவளோ வெக்கப் படுறியே புள்ள!! மூஞ்சி இப்படி செவந்து போச்சு .. அப்போ அவுகளை நேருல பார்த்தா என்னாவியோ??” என்ற மலரின் வாக்கு அடுத்த நிமிடமே பலித்தது.

 

ஆம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த கார் அவர்கள் அருகில் வந்து நிற்க, இரு பெண்களும் யாரது? என்பது போல் வாகனத்தைப் பார்க்க,

 

அங்கே, வந்தனாவின் மீது இருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் காதல் ததும்பும் விழிகளுடன் உள்ளிருந்து தோரணையாக இறங்கிய வினய்யை சத்தியமாக வந்தனா எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் விரிந்த கண்களிலே தெரிய, அதைக் கண்டு வினய்யின் புன்னகை பெரிதாய் விரிந்தது.

 

இவனைக் கண்டு வந்தனா திகைத்துப் போக, மலர் குழம்பிப் போனாள். 

 

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!