Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வருவதோ! புது வசந்தம்!

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 11

வருவதோ ! புது வசந்தம்! அத்தியாயம் 11

       கரிகால பாண்டியன் என்ற ஒருவனின் பெயரை கூட மது வீட்டில் யாரும் பேச வில்லை. ஆரம்பத்தில் கத்திய மீனாட்சி கூட பேரன், பேத்தி என்று அமைதியாகி கொண்டார். மாதவன் சென்னை சென்று இருந்தான். வீட்டின் சூழ்நிலை சரியில்லை, தம் பிள்ளைகள் இருந்தால் பெத்தவங்களுக்கு ஆதரவு என்று கருதி தான் ரம்யா, குழந்தைகளை விட்டு சென்று இருந்தான்.

     சுந்தரம் இதய நோயாளி என்பதால் அறையை வீட்டு வெளி வராமல், முழு ஓய்வு தான். வீட்டு ஆட்கள் தான் அவர் அறைக்கு சென்று பார்த்து வருவார்கள். தன் மகளின் வாழ்வு தன்னால் தான் முறிந்து போனதோ என்று நினைவு அவரை வாட்ட, உடல் நிலை குன்ற தொடங்கியது. அதன் பொருட்டு தான் முழு ஓய்வும். மகளை காணும் போதெல்லாம் அவர் வேதனையில் வாடுவதால், மது தந்தை அறைக்கு செல்ல கூடாது என்று உத்தரவு போட்டு விட்டார் மீனாட்சி.

     மதுவும் ஒதுங்கி கொண்டாள். முதல் முறை அட்டாக் வந்ததும் இவளால் தான். அதனால் தள்ளியே இருந்து கொண்டாள். கணவனும் பேச முயற்சி செய்ய வில்லை, ஆதரவு தரும் தந்தையும் உடன் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்திற்கு உள்ளானாள். தன் அறையிலே முடங்கி கொண்டாள். சாப்பிட கூட வெளியில் எங்கும் செல்லவில்லை.



Advertisement

       அதுவும் மது தாய் வீடு வந்த சேதி அறிந்து தள்ளி நின்ற சொந்தம் எல்லாம் துக்கம் விசாரிக்க வர தொடங்கியது. அவளையும் அழைத்து வேறு விசாரிக்க, இன்னும் ஒடுங்கி கொண்டாள் மது. இதில் ரம்யா வீட்டு ஆட்கள், அவளுக்கு மேலும் ஒரு தலைவலி. சொந்த தாய் மாமன் தான், எதுவும் சொல்வதற்கு இல்லை. பதில் கொடுக்க வாய் துருத்தாலும், அடக்கி கொண்டு அமர்ந்திருப்பாள்.

       அதன் பொருட்டு மது முழுதாக அறைக்குள் முடங்க, ரம்யா வெளி வந்து விட்டாள். வீட்டின் நிலவரத்தை முழுதாக தன் வச படுத்தி கொண்டாள். மாமனார், மாமியார், வீடு, வரவு, செலவு எல்லாம் அவள் கையில் தான். மீனாட்சிக்கு மகள் வாழ்வை பற்றி, அவள் கணவனை பற்றி பேசி அலசுவது தான் நாள் முழுசும், யார் வந்தாலும் மகள் வாழ்க்கை பற்றிய பேச்சு தான்.

      மது கொஞ்சம் தெளிந்தாள். ஆரம்ப கட்டத்தில் இருந்த கணவன் தன்னை விட்டு விட்டான் என்ற பரிதாபம், எப்படி விடலாம் என்ற கோபம் போய் தன்னை தேடி வரவில்லையே என்ற ஏக்கம் வந்து, அதற்கு ஒரு பாடு அழுது தீர்த்து, கடந்த காலம், நிகழ் காலம் என்று குழப்பி அடித்து, தேவை மட்டும் அழுது தீர்த்த பின் தான் தெளிந்தாள். இனி தன் எதிர்காலம் என்ன என்பதில் ஒரு தெளிவு கண்டு கொண்டாள்.

Advertisement

       உண்மையில் மது ரொம்ப மென்மையான மனம் கொண்டவள். சுடு சொல் கூட தாங்க மாட்டாள். கோபம் வந்தால் பட்டேன்று அழுகையும் வந்து விடும். அதனால் தான் பொது வெளியில் அழ மாட்டாள், அடமாக நின்று விடுவாள். என்னை யாரும் வீழ்த்த முடியாது என்பது போல். அது மற்றவர்களுக்கு திமிராக, மெத்தனமாக, அசால்டாக, அடாவடியாக தான் தெரிந்தது. அவ சரியான திமிர் புடிச்சவ என்ற ஒற்றை வார்த்தையில் அவளை சொல்லி விடுவார்கள்.

Advertisement

       கரிகாலன் தான் வாழ்க்கை என்று ஆன பின், அவனுக்கு தக்க தன்னை மாற்றினாள். அதாவது, முழுதாக அவனை ஏற்று, வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்வதற்கு தன் மனதை தயார் செய்தாள். மனம் என்றோ அவன் புறம் சென்றாலும், உடலால் கணவனுடன் வாழ தன்னை நெறி படுத்தி கொண்டாள்.

    வாழ வேண்டிய தாங்கள் தெளிவாக இருந்தால், மற்றவைகளை உதாசீன படுத்தி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்து அமர்ந்தது. தன்னை சுற்றி அடைக்க பட்ட கதவுகளை திறந்து, தனக்கு தேவையான வெளிச்ச பாதையில் நேர்மையாக நின்று கொண்டாள்.

       அவளிடம் இருந்து தெளிவு, கரிகாலனிடம் இல்லை. விதி இழுத்து செல்லும் பாதைக்கு சென்று கொண்டு இருந்தான்.

Advertisement

        இவர்கள் இருவரின் மனநிலை இப்படி இருக்க, இவர்கள் வீட்டு ஆட்கள் வேற முடிவு எடுத்தார்கள்.

       மதுவின் வீட்டில் அவள் தாய்மாமன் அன்பு செல்வம் தான் அடுத்தடுத்து நடக்க வேண்டியதை பட்டியல் போட்டார். அதில் முதலாவது, கரிகாலன் வீட்டில் பேசுவது என்பதை தான். தனியாக இல்லாமல் இரு பக்க பெரிய ஆட்கள், மூத்தவர்கள் என்று கலந்து பேசி முடித்து விடுவோம். ஒத்து வந்தால் பார்ப்போம் இல்லையென்றால் அத்து விடுவோம்.

       சுந்தரமும் அதை ஏற்று கொண்டார். ஒரு முறையாவது பேசி பார்ப்போம், இரண்டு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. தற்போது தெளிவும், நிதானமும் வரும் தானே. அதன் படி, ஆட்கள் சொல்லி அனுப்ப, கரிகாலன் வீட்டு பக்கமும் சரி என்று ஒத்து கொண்டார்கள். அவர்கள் எதிர்பார்த்ததும் பெண் வீட்டார் இறங்கி வர வேண்டும் என்பதை தானே.

        கருப்பாயி நினைத்தது போல் தான் நடந்தது. மது வீட்டு ஆட்கள் தான் கரிகாலன் வீட்டிற்கு முதலில் பேச சென்றது. அதில் கருப்பாயிக்கு ஒரு திருப்தி, பெண் பிள்ளை பெத்தவர்கள் இறங்கி வந்து விட்டார்கள் என்று. அது உண்மையும் கூட, இரண்டு மாதத்திற்கு மேல் மது, அம்மா வீட்டில் இருக்க. ஊர் பேச்சை வாங்க முடியவில்லை. ஏதேனும் ஒரு முடிவுக்கு வர வேண்டுமே… ஒன்னு அத்து வாழ், இல்லையென்றால் ஒத்து வாழ். ஏதுமில்லாமல் வாழ வெட்டியாக பெண் நிற்க, பலரும் பலவிதத்தில் பேச தொடங்கினர். இதில் மதுவை ரொம்ப நோகடித்த ஒன்று, “ அந்த பொண்ணுக்கு முன்ன இருந்தே ஒரு பையனோட பழக்கம் இருக்காம். அதை கருப்பாயி விசாரிக்க போய் தான் பிரச்சனையாம்” என்று பேச்சு உலா வர, பயந்து போனார்கள் பெண் விட்டார். எது ஒன்று என்றாலும் முடிவு கண்டு விடுவோம் என்று தான் பேச அழைத்தது. பின்னாளில் பேசி தீர்த்து வைத்தது இருக்கலாமோ!… என்ற எண்ணம் வர கூடாதே. கடைசி முயற்சியாக பேசி பார்ப்போம் என நினைத்தார்கள்.

       இருவர் வீட்டிலும் அல்லாமல், பொதுவான இடத்தில் தான் பேச்சு வார்த்தை நடந்தது. இருவர் பக்கமும் கிட்டத்தட்ட இருபது பேர் மேல் வந்தார்கள். பெண்கள் யாரும் வர வில்லை. அன்று இவர்கள் வாய் தானே பிரச்சினையின் முக்கிய புள்ளி, அதனால் ஆண்கள் மட்டும் தான். சம்மந்தப்பட்ட தம்பதிகளும் வர வில்லை. மதுக்கு தெரியும், கரிகாலனுக்கு தெரியாது, அவன் வீட்டில் யாரும் சொல்ல வில்லை. இவனும் வீட்டு ஆட்களுடன் பேசுவதில்லை. ஊர் பெரியவர்களும் அடக்கம் என்பதால் யாரும் அத்து விடு என்ற பேச்சை எடுக்க வில்லை. சமரசம் தான் பேசினார்கள். நாள் பார்த்து வந்து அழைப்பதாக கூட பேச்சு எழுந்தது.

       மதுவின் தாய் மாமன் அன்பு செல்வம், “ பேசுனா சீரை வீட்டுல கொண்டு வந்து இறக்கி வைக்கிறோம். எங்க பொண்ணு கூடவே சீரும் வரும், அத்தோட மாப்பிள்ளைக்கு அஞ்சு பவுன் சங்கிலியும் போட்டுறோம். ஆனா, சொந்த மருமகளை, மகன் பொண்டாட்டிய தப்பு, தப்பா பேசினதுக்கு பதில் என்னன்னு கேட்டு சொல்லுங்க. வாழ வேண்டிய பொண்ணு, இவங்க வீட்டை நம்பி தான பொண்ணு குடுத்தோம், என்னைக்கு தாலி கழுத்தில ஏறிச்சோ அன்னைக்கே மது அவங்க வீட்டு பொண்ணு, ஏன் தரகுறைவா பேசணும். அதுக்கு எங்களுக்கு பதில் வேணுங்க…” என்று மரியாதையாகவே கேட்டார்கள்.

        அங்கு நடப்பதை போன் மூலம் அறிந்து கொண்ட மாதவன்… மீனாட்சியிடம்,

  “ம்மா… எல்லாம் நல்ல படியா முடியிற மாதிரி தான் இருக்கு. நல்ல நாள் பார்த்து மதுவ அனுப்பி வைப்போம். நீங்க வாயவே திறக்க கூடாது” என்று பேசி கொண்டிருந்தான்.

    மேலே நின்று பார்த்து கொண்டிருந்த மதுக்கு அவ்வளவு நிம்மதி. இனி எல்லாம் சுபமே. பேச்சு வார்த்தை முடிந்து வீட்டுக்கு வந்தாலும் வருவார்கள் என்று தோண, விரைவாக தன் ஆடையை மாற்றினாள். கிளி பச்சை கலரில் சின்ன கரை வைத்த பட்டு சேலை அணிந்து, தன்னை தயார் படுத்தி கொண்டாள்.

     ஆனால், அங்கு நடந்தது வேறு… கரிகாலனின் தாய் மாமா பிடியை கொஞ்சமும் தளர்த்த வில்லை. தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாகவும், தன் அக்கா கருப்பாயி மன்னிப்பு கேட்கவும் மாட்டார் என்று கூற, லேசாக சலசலப்பு உருவானது.

    மது வீட்டு பக்கம் நீங்கள் கேட்ட சீர் தருகிறோம். ஆனால், எங்கள் வீட்டு பெண்ணை பேசியதற்கு நியாயம் சொல்ல வேண்டும் என்று நெருக்க. வாக்குவாதம் முத்தியது. யார் பக்கமும் விட்டு கொடுக்காமல், அவரவர் பக்கம் இழுத்து பிடிக்க, மரியாதை தேய தொடங்கியது.

       நிலமை கட்டுப்பாட்டை மீறி செல்லும் சமயம், “எங்கக்கா சொன்னதில் என்ன தப்பு இருக்க. மருமகள சொல்ல கூடாது தான். அதுக்காக, மன்னிப்பு கேட்க சொல்லுவீங்களா!… இல்லாதது எதுவும் சொல்லலையே, அந்த பொண்ணுக்கு ஏற்கனவே ஒரு பையன் கூட பழக்கம் இருந்துச்சு தான… ஒரு ஆதங்கத்தில பேசி புடுச்சு, இனி பேசாது. எதையும் மனசுல வைக்காம எங்க குடும்பம் பெருந்தன்மையாக, அந்த புள்ளையா மருமகளா ஏத்து கிட்டோம். அதை மனசுல வைங்க. தப்பா யோசிச்சா, அந்த புள்ளை கழுத்துல தாலி ஏற விட்டுருக்க மாட்டோம்…” என்று அவரின் பேச்சில், சுந்தரம் எழுந்து கொண்டார்.

        அங்கு கூடி இருந்த எல்லோரும் அவரையே பார்க்க, “ சரியில்லாத பிள்ளையை பெத்தவன் நான் தான். அந்த பாரத்தை நான் தான் சுமக்கணும். அத்து விட்டுருங்க….” என்று சொல்லியவர், மற்றவர்கள் பேச இடம் கொடாமல் வெளியேறி விட்டார்.

    பின்னாடியே வந்த செல்வம், “ என்ன மாமா நீங்க… நாங்க பேசி சரி செய்றோம் தானா… அதுக்குள்ள ஏன் அவசரம். கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாம்…” என்று சொல்ல.

       “ என்ன பொறுமை செல்வம். எம் புள்ளைய கூறு போடுறாங்க, பார்த்திட்டு நிக்க சொல்றீங்களா…” என்று ஆவேசமா சொன்னவர்.

     “இவங்களாம் யாரு?… ம்ம் யாரு?… என்ன தகுதி இருக்கு எம் மகளை பேச… அங்க அத்தனை ஆம்பளைகளுக்கு மத்தியல எம் பொண்ணை விமர்சனம் செய்றத பார்த்து … பெத்த தகப்பனா முடியலை செல்வம்… நெஞ்சு எரியுது. வேண்டாம் இந்த வாழ்க்கை. காலத்துக்கும் எம் மகளா எம் வீட்டுல இருக்கட்டும்… இந்த உடம்புல உசுர் இருக்குற வரை நான் தாங்குறேன், அதுக்கு பின்ன எம் மகளுக்கு படிப்பு இருக்கு. இந்த மாதிரி நாதாரிக கூட்டத்தில வாழ வேண்டாம். காலத்துக்கும் பொம்பள பிள்ளையை கூட வச்சுக்கிற பாக்கியம் யாருக்கு கிடைக்கும்…” என்று வேதனையில் கண்கள் கலங்க சுந்தரம் சொல்ல,

      செல்வதிற்கும் கண்கள் கலங்கியது. அவரும் ஒரு பெண் பிள்ளையை பெற்று வளர்த்தவர் தானே… ரம்யாவின் அப்பா. அவள் காதலித்தது சொந்த அத்தை மகன். எந்த பிரச்சனையும் இல்லை. சீரும் சிறப்புமாக வாழ வைத்து விட்டார். ஆனால், மது காதலித்தது வேற்று சாதி பையனை, எங்கும் ஒத்து வர வில்லை. காதல் தோல்வியில் முடிந்து விட்டது.

       இங்கு மதுக்கு ஒரே படபடப்பு, இன்றே அழைத்து செல்வார்களா!… கரிகாலன் வருவான!… வெளியே வண்டி சத்தம் கேட்க. தன்னை சரி படுத்தி கொண்டு வெளி வந்தாள்.

        படியில் இறங்கி வந்தவள், பாதி படியிலே தேங்கி நின்றாள்,மாமன் செல்வத்தின் பேச்சை கேட்டு. அதிர்ந்து நிக்கும் மகளை தான் பார்த்தார் சுந்தரம். புத்தம் புது பூ போல் இருந்தாள் மது. என்றுமில்லாமல் அவள் சேலை உடுத்தியதும், உச்சி குங்குமமும், அவள் மனதை சொல்ல, வேதனை தான் பெற்ற தந்தைக்கு.

     என்ன குறை… நல்ல அழகி, கம்யூட்டர் என்ஜினீயர், நகை, சொத்து என்று எதுவும் குறையில்லை. ஆனால், நல் வாழ்க்கை… மீண்டும் ஒரு நிராகரிப்பு. அவள் ஆசையெல்லாம் தேடி, தேடி நிறைவேற்றிய தந்தை தான். இன்று அவள் மனம் அறிந்தும், ஒன்றும் செய்ய இயலாது போனது.

       தாய் மீனாட்சிக்கு கோபம் வந்தது, யார் மீது மகள் மீது தான்…

    “பாப்பான்னு தூக்கி வச்சு ஆடுங்க. உங்க சோழியை முடிக்காம விட மாட்டா… எம்புட்டு செல்லம் குடுத்தோம். கேட்டது எல்லாம் வாங்கி குடுத்தோம், அவ சொல்றது தான் சட்டம் வீட்டுல… அப்படி என்ன காதல். இருவது வயசிலே, நாங்க நல்ல மாப்பிள்ளை பார்க்க மாட்டோம். இவ மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா, என் வீட்டு படியேற தகுதி இல்லாத ஆளுக எல்லாம் எம் புருசனா பேசுமா… நம்ம செஞ்சா பாவத்துக்கு இது புள்ளையா வந்து வாச்சுருக்கு… இவளாள இன்னும் எத்தனை இடத்தில தலை குனிய…” என்ற சொற்களில் முழுதாக முடங்கி போனாள் பெண்.

     மதுவின் அலங்காரத்தை கண்டு, ரம்யா இளக்கார பார்வை பார்த்து சென்றாள்.

       நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தாலும், அதன் சாராம்சம் கருப்பாயியை கொதிப்படைய செய்தது.

    “நான் வந்து மன்னிப்பு கேட்கணுமா… இவ பெரிய கண்ணகி, சீதை… குறை சொன்னதும் பொறுக்க முடியலை. அத்துக்கு போறதா இருந்தா போ… பிள்ளையா ஒழுங்கா வளர்க்க துப்பு இல்லை, ரோசம் மட்டும் மூச்சுக்கு நிக்குது. ஆம்பிளைக்கு ஆயிரம் வாச( வாசல்)… சின்ன பாண்டிய நான் சரி கட்டிக்கிறேன். ஆக வேண்டிய வேலையை பாருங்க… ஒரே கெடுல அத்து விடனும். நாள் தள்ளி போக கூடாது…” என்று கருப்பாயிம் வீம்பாக சொல்ல, அத்து விட தான் ஏற்பாடு நடந்தது.

      வாசல் கூட்டி கொண்டு இருந்த சகுந்தலாவிடம்,

  “ஏத்தா சகுந்தலா… என்ன ஆச்சு உங்க வீட்டு சமாச்சாரம். சின்னவன் பொண்டாட்டி வாராள…” என்க.

     “ஒன்னும் ஒத்து வரலை சின்னம்மா… அத்து விட பேசுறாங்க…” என்று பதில் சொல்லிய படி கோலம் போட தொடங்கினாள்.

     “அடி ஆத்தீ… என்னடி இப்படி சொல்ற?… பேச்சு வார்த்தை நடந்துச்சாம். கூட, குறையோ அனுசரிச்சு போக வேண்டி தானா…” என்ற கேள்விக்கு.

      “எனக்கும் ஒரு விவரமும் தெரியாது சின்னம்மா. சின்ன பாண்டி கல்யாணத்துக்கு முந்தியே நான் தனியா வந்துட்டேன். அங்க நடந்த முழு விவரமும் எனக்கு தெரியாது. மாமியார், மருமகள் பிரச்சனை போல, சின்ன பாண்டி தான் வீட்டை விட்டு போக சொன்னது… நாங்க என்ன செய்ய?… கட்டுன புருசன் தள்ளி வைக்கும் போது…” என்ற அவளின் பேச்சு நியாயமாக பட்டது.

      “ நீ சொல்றதும் சரிதான். ஊருல பேசிகிட்டாங்க, ஒத்த வேலையும் செய்யதாம், திமிராதான் இருக்குமாம், கொஞ்சம் குணமும் சரியில்லையாம். முன்னவே விசாரிச்சு கட்ட வேண்டி தானே… பாவம் சின்ன பாண்டி, இருக்குற இடம் தெரியாது. அமைதியான புள்ளை, அதுக்கு போய் இப்படி ஒருத்திய கட்டி வைக்கலாமா…” என்று பேசி சென்றார் அந்த பெண்மணி.

    யார் கேட்டாலும் சகுந்தலா பதில் இது தான். எங்களுக்கு ஒன்றும் தெரியாது… அவ புருசன் தான் போக சொன்னான். நாங்க தனி தான்.

      மதுக்கு அடுத்து என்ன என்றே தெரியவில்லை. தந்தையே சொல்லி விட்டார், கரிகாலன் வேண்டாம் என்று. கட்டிய கணவனும் அமைதியின் பின், தனி ஒருத்தியாக தான் என்ன செய்ய இயலும்.

     தூக்கம் என்பதே இல்லாமல் போனது. பகல், ராத்திரி என்று ஒரே சிந்தனை தான். ஒரு முடிவும் காண மாட்டாள். ஆனால், ஒரே நிலை தான், மாறாமல். பசி கூட மறந்து போனது. இப்போது எல்லாம் அவளை சாப்பிட சொல்லும் ஆள் கூட இல்லை. மனம் கணவனை தான் தேடியது.

     தன் வீட்டில் விதவிதமாக செய்தாலும், ஒரே குழம்பு போர் என்று சொல்லும் கணவன் வீட்டை தான் மனம் நாடியது. சாப்பாடு போட்டு குடுத்து, சாப்பிட்ட பின் தட்டை கூட எடுத்து செல்லும் கணவனை எண்ணி தான் ஏக்கம்.

     தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் கொஞ்சம் கூட வரவில்லை. கண்களை இறுக மூடி கட்டாய படுத்தி தூங்கினாலும் நடு இரவில் முழிப்பு வந்து விடும். தன் கல்யாண போட்டோவை தான் போனில் திரும்ப, திரும்ப பார்த்து கொண்டிருப்பாள். இன்னும் ஆல்பம் வாங்கவில்லை. இந்த மாதம் வந்து விடும் என்று சொல்லி கொண்டிருந்தான் கணவன். இனி தேவையில்லை என்று விட்டு விடுவார்கள் தானே… நினைக்கும் போதே கண் கலங்கியது.

        நடு இரவில் வானத்தை பார்த்து முழித்து கொண்டு இருப்பாள். கடவுளோடு மனதில் பேசுவது போல் ஒரு நம்பிக்கை. தனக்கு ஏன் இந்த நிலை என்று முகம் தெரியாத கடவுளிடம் கேட்க வில்லை. தன் வாழ்வை சரி படுத்தி கொடு என்று தான் கேட்கிறாள். போதும் மட்டு அழுதாச்சு, இனி ஒரு ஆறுதல் தரலாம் அல்லவா… என் மேல் கொஞ்சம் கருணை வை இறைவா… நானாக தேடி சென்றது கிடைக்க வில்லை, தானாக மடியில் விழுந்த வாழ்வை காப்பாத்தி கொடு… மனம் விட்டு, வாய் திறந்து சொல்லும் போது, மனம் உருகி கசிந்து அழும் போது ஏதோ ஒரு ஆறுதல். யாரும் வாய் வார்த்தையாக சொல்லாத ஆறுதலை, தனிமையில் கை கூப்பி கடவுளிடம் மண்டி இடும் போது கிடைத்தது.

        பகலில் கோவில், தேவாலயம் என்று செல்பவள், இரவில் தனிமையோடு பழைய நிகழ்வுகளை ஆசை போடுவாள். பைத்தியக்காரத்தனம் என்று அவளுக்கும் தெரியும், இருந்தும் என்ன செய்ய, கணவனின் நினைவு தரும் உற்சாகம் வேற எதுவும் தருவதில்லை. ஒவ்வொரு நாளையும் பார்ப்பாள், போன மாதம் இதே தேதியில் கரிகாலன் உடன் என்ன செய்து கொண்டிருந்தோம் என்ற யோசனையில் அன்றைய நாள் கழியும்.

    வீட்டில் யாருடனும் அவள் பேசுவதில்லை அல்லது யாரும் பேச தயாராக இல்லை. தந்தை அறையிலே முடங்க, தாய் புலம்பியே தள்ளுவார். இவள் ஒழுங்காக இருந்திருந்தால் இவ்வளவு அவமானம், அசிங்கம், வலி தேவையில்லையே. அவரின் ஆதங்கம், இயலாமை எல்லாம் கோபமாக மதுவின் மேல் தான் திரும்பும். அதனால் அவர் பக்கம் கூட செல்லாமாட்டாள் மது.

      ரம்யா நடத்தயில் சமீப காலத்தில் வேறுபாடு கண்டது. அவளை கண்டாலே மது ஒதுங்கி கொள்வாள் தான். ஆனால், ஒரே வீட்டில் தவிர்க்க முடியாது தானே… ரம்யாவுக்கு ரொம்ப இளப்பம் மதுவை பார்த்து, திருமணம் முடித்து வந்ததில் இருந்தே பிடிக்காது. மது செல்லம், இளவரசி, மகாலட்சுமி, தேவதை என்று எதிலும் அவளை முன்னிலை படுத்துவது ரம்யாவுக்கு சுத்தமாக பிடிக்காது. அவளை பேசி தான் முன்னாடி வீட்டை விட்டு வெளியேறி சென்றது.

      முழுதாக நாலு ஆண்டுகள் கடந்து தான் திரும்ப வீடு வந்தது. தன் வீட்டில் தனக்கான இடம் என்பது இப்போது தான், அதை முழுமையாக அனுபவித்தாள் ரம்யா. ஏற்கனவே ஒருவனுடன் காதல் என்று ஊர் பேச்சு வாங்கிவள், எவ்வளவோ முயற்சி செய்து அமைத்து கொடுத்த வாழ்க்கையும் கை பற்ற தெரியாமல் தொலைத்து விட்டு வந்தாகிவிட்டது, இதோ அத்து விட தான் பேச்சு வார்த்தை நடக்கிறது. இதற்கு மேல் இவளுக்கு என்று ஒரு வாழ்க்கை சாத்தியமில்லை. காலத்திற்கும் இங்கு தான். தங்களை அண்டி தான் என்ற நினைப்பு ரம்யாக்கு. அதனால் வெளிப்படையாகவே உதாசீன படுத்த தொடங்கினாள். இதை பெரிதாக எடுக்கும் அளவுக்கு இயல்பாக மது வாழ்க்கை செல்ல வில்லையே. நீ யார் என்பது போல் மது ஒதுங்கி கொள்ள, ரம்யாக்கு தான் கடுப்பு எகிறியது. தன் வீட்டில் தன்னை மதிக்கவில்லை என்று. மது என்ன செய்வாள், அவள் வாழ்க்கையே அந்தரத்தில் இதில் இவளை கவனிக்க எல்லாம் நேரமில்லை.

      தன் தோழியை பார்த்து விட்டு ஆட்டோக்கு காத்திருக்கும் நேரத்தில் தான், தன் மாமனார் நடந்து வருவதை கண்டாள். முப்பது கிலோமீட்டர் தூரம் தான் மதுரைக்கும், அவர்கள் ஊருக்கும். எது ஒன்றிற்கும் மதுரை தான் வர வேண்டும். இத்தனை நாளில் ஒரு முறை கூட அந்த வீட்டு நபர்களை அவள் சந்தித்தது இல்லை. இன்று தான் பார்க்கிறாள்.

     அவரும் , அவளை பார்த்தே வர… கண்டு கொண்டாள் தன்னை காண தான் வருகிறார் என்று. ஏதோ ஒரு சந்தோசம், தன் வீட்டு மனிதர், பார்த்தாலும் பார்க்காதது போல் செல்லாமல், பேச வருகிறார். அப்படியென்றால் உறவாக எண்ணி தானே… கொஞ்சம் இதமாக இருந்தது.

       “மருமகளே… எப்படி இருக்க? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?…” என்று கேட்க.

   மது முகத்தில் சின்ன சிரிப்பு. அங்கு அத்து விட நாள் பார்க்கிறார்கள், இவர் வாய் நிறைய மருமகளே என்கிறார்.

   “ நல்லா இருக்கேன்… மாமா” என்றாள் தயங்கி. வேற என்ன சொல்வது என்று தெரியவில்லை.

     கொஞ்சம் சமாளித்து வேண்டாம் என்று தோன்றினாலும் கேட்டு விட்டாள்.

   “ அவங்க… கரிகாலன் எப்படி இருக்காங்க?…” அவசியமா உனக்கு என்று தோன்றினாலும், அவளுக்கு தேவை பட்டது.

       “தெரியலை மருமகளே… சின்னவன் வீட்டுக்கே வாரது இல்லை. போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறான். இடையில ஒரு நாள் வீட்டுக்கு வந்தான், பொழுதுசாய கூட இல்லை, ஒரு வாய் சோறு வாய்ல வைக்கல, என்ன நினைப்பு ஓடுச்சோ, வந்தவன் அடுத்த பஸ்சுக்கு ஊருக்கு போய்ட்டான். உங்க அயித்த தான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரனும்ன்னு இருக்கா… கூறு கெட்டவ பேச தெரியாம பேசி இம்புட்டு தூரம் இழுத்து விட்டுட்டா… யார் வம்பு தும்புக்கும் போகாம அமைதிடானவன் சின்ன பாண்டி, அவனுக்கு தான் மன கஷ்டம். புள்ளைக்கு ஒடிஞ்ச கை இன்னும் சேரால…” என்று சோகமாக பாண்டி சொல்ல.

    “ என்ன சொல்றீங்க. அவங்க கைக்கு என்ன ஆச்சு?…” படபடப்பு கூடியது.

    “அதான் மருமகளே, அன்னைக்கு நடந்த கலவரத்துல பாண்டி நிலைபடிய ஓங்கி அடிச்சான்ல, அதுல தான் எலும்பு முறிஞ்சு போச்சு. ரோசகாரன். எங்கள யாரையும் ஆண்ட விடலை. மனசு தான் அடிச்சுகிது. இம்புட்டு கோபமெல்லாம் ஒருநாளும் சின்ன பாண்டிக்கு வராது…” ஒரு பெருமூச்சு விட்டவர்.

    “நீயும் ஏந்த்தா வத்தி போய் தெரியுறா?… நல்ல சாப்பிட வேண்டிய தான…” என்றவருக்கு என்ன பதில் சொல்லுவாள்.

    “ ஒன்னும் வெசனபடாதத்தா… நடக்குற எதுவும் சின்ன பாண்டிக்கு தெரியாம தான் நடக்குது. நீயி ஒரு போன்ன போட்டு உம் புருசனுக்கு பேசு, மத்த எல்லாம் அடங்கிடும். அந்த பைத்தியக்காரி வாய்ல நீ விழ வேண்டாம்ன்னு தான் உன்னை போக சொல்லிருப்பான். அதை மனசுல வச்சு கோபத்தை இழுத்து பிடிக்காத…” என்று சொல்லியவர் கூடுதலாக,

    “நான் நாலு பேர கூட்டி வந்து உங்கப்பாட்ட பேசட்டுமா… இங்க வேணாம், அங்க தம்பி வேலை பாக்குற ஊர்ல குடி வைப்போம். ஒரு நல்லது, கெட்டதுக்கு மட்டும் தலைய காட்டி போங்க. பிள்ளை குட்டி வந்தா சரியா போகும்…” என்க.

   மது மனதில் ஒரு ஆர்வம். “இதை அவர்கிட்ட சொன்னிங்களா மாமா?…” என்றதற்கு,

   “ சொல்லாம என்ன… சொன்னேன், அந்த பேச்சை காது கொடுத்து வாங்க மாட்றான். குடிகாரன் பேச்சு எடுபடலை” என்று கவலையாக சொன்னார்.

      “அய்யா! பாண்டி… போலாமா பஸ் வந்துரும். யார் இந்த புள்ளை, புதுசா இருக்கு?” என்று பாண்டியை தேடி வந்த நபர் கேட்க.

    “ புதுசா… எம் மருமகளே…. எம் மகன் சின்னவன் இருக்கான்ல, வாத்தியார், அவன் சம்சாரம்” என்று பெருமையாக அறிமுகம் செய்தார்.

    மதுவும் அவரை பார்த்து வணங்க, “ வாத்தியார் சம்சாரமா… நல்ல இருக்கியாமா?” என்க.

      “நல்லா இருக்கேன்” என்றாள் பெண்.

   அங்கிருந்த டீ கடையில் சூடாக இருந்த வடை, கருப்பட்டி ஜீரணியை பார்சல் பண்ணி கொண்டு வந்து மருமகள் கையில் கொடுத்தார் பாண்டி.

     தயங்கிய போதும் வாங்கி கொண்டாள்.

   “காய்கறி லோடு ஏத்த வந்தேன். சின்ன பாண்டி இருந்தா, இந்த வேலைக்கு என்னை அனுப்பவே மாட்டான்…” அவர் முகத்தில் மகனுக்கான ஏக்கம் தெரிந்தது.

    சின்ன மகன் மேல் பாசம் போல என்று நினைத்தாள் மது.

     “உன்னை ஆட்டோ ஏத்தி விட்டு நாங்க போறோம். பொழுது மசங்கி போச்சு, தனியா நிக்க வேணாம்” என்று அவர் சொல்ல.

   மது முகத்தில் சின்ன சிரிப்பு. அவள் பிறந்து வளர்ந்த ஊர். சிட்டி என்பதால் போக்குவரத்து அதிகம், பயம் இல்லை. ஆனால், அவர் உடன் நிற்பது… தன் மருமகள், தன் மகனின் மனைவி, தன் வீட்டு பெண் என்பதால் தானே. இந்த அக்கறை அவளுக்கு இனித்தது. எதுவும் கை மீறவில்லை என்று ஒரு ஆறுதல்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!