Skip to content
Post Views: 1,298
ஆராதனா வாசுதேவன் 04
பத்து மணி ஃப்ளைட் என்பதால் காலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பி விட்டேன். செக் இன் செக்யூரிய்டி எல்லாம் முடித்து கேட்டை அடைந்த போது ஃப்ளைட் கிளம்ப இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது.
காபியும், சாண்ட்விச்சும் வாங்கிக் கொண்டு கேட் முன் வந்தமர்ந்தேன்.
மனம் முழுவதும் ஷ்யாம் அனுப்பிய டாகுமன்ட்டையே அசை போட்டுக் கொண்டிருந்தது.
Advertisement
வெளிப்படையாகப் பார்த்தால் விக்ரமின் ப்ரோபோசல் வாஸ் பெர்ஃபெக்ட். ஆனால் ஷ்யாமின் உள்ளுணர்வு இதில் ஏதோ சரியாக இல்லை என்று சொல்லவும் அந்த ஆங்கிளில் நான் பார்க்கவும் எனக்கு சந்தேகங்கள் எழுகின்றன.
முதலில் எனக்கு விக்ரம் பற்றி தெரிந்தாகணும். எப்படித் தெரிந்து கொள்வது? எங்கள் நிறுவனத்தின் பிரைவேட் இன்வஸ்டிகேடரை அணுகுவது சரிவராது.
நான் யோசனையில் இருக்க போர்டிங் அனௌன்ஸ்மன்ட் கொடுத்தார்கள்.
Advertisement
“ஆராதனா” என்னருகில் குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தேன்.
Advertisement
“அட்வகேட் ராணா சர்” என் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
உடனே எழுந்து நின்று அவர் பாதம் தொட்டு பணிய நான் குனியவும் அவர் என்னைத் தடுத்தார்.
“ஒஹ். மகள்கள் தேவிக்கு சமம். அவர்கள் பாதம் பணிவதில்லை” என்றவர் “சென்னை ஃப்ளைட் ?” என வினவினார்.
Advertisement
நான் ஆம் என்றதும் “கம் வித் மீ” என்று பிஸ்னஸ் கிளாஸ் வரிசை வழியே என்னை அழைத்துக் கொண்டு போனார்.
எனது சீட் நம்பரைக் கேட்டவர் அவருடன் கூட வந்தவரை என் சீட்டில் அமரச் சொல்லி என்னை அவர் அருகில் பிஸ்னஸ் கிளாசில் அமர்த்திக் கொண்டார்.
அவர் அடிக்கடி பிஸ்னஸ் கிளாசில் பயணம் செய்வார் போலும். ஏர் ஹோஸ்டசிடம் இந்த சீட் மாற்றத்தை அவர் சொல்லவும் அவர் சரி என்று ஒத்துக் கொண்டு விட்டார்.
நாட்டிலேயே தலை சிறிந்த கிரிமனல் லாயர். எங்களுக்கெல்லாம் செலிப்ரிட்டி அவர்.
நான் லா படித்துக் கொண்டிருந்த போது நேஷனல் லெவல் MOOT COURT COMPETITION ல் ஜட்ஜ்களில் ஒருவராக இருந்தார் ராணா சர்.
கற்பனையான ஒரு வழக்கை கொடுத்து அதை ஆராய்ந்து விவாதிக்கச் சொல்வார்கள்.
மிகவும் கடினமான ஒரு கிரிமினல் வழக்கு (கற்பனை வழக்கு தான்) எனக்கு கொடுக்கப் பட்டது. ராணா சர் தான் ஜட்ஜாக இருந்தார்.
அந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்ற போது பரிசை எனக்கு வழங்கிய ராணா சர் தன்னிடம் ஜூனியராக சேர அழைப்பு விடுத்தார்.
எனது விருப்பம் கார்பரேட் லா என்று நான் சொல்லவும் பெஸ்ட் விஷஸ் சொல்லி என்னைத் தட்டி கொடுத்தார்.
வாஷிங்டனில் நடந்த சர்வதேச அளவிலான JESSUP MOOT COMPETTIONல் கார்பரேட் பிரிவில் எங்கள் டீம் வெற்றி பெற்ற போது யாரிடம் எப்படி என் நம்பரை வாங்கினார் என்று தெரியவில்லை.
எனக்கு கால் செய்து என்னைப் பாராட்டி வாழ்த்தினார்.
மும்பையில் லால் அண்ட் ஷர்மாவில் சேர்வதற்கு முன் அவரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன்.
“எப்போது என்ன தேவை என்றாலும் ஒரு போன் செய்தால் போதும் மகளே” என்று ஆசிர்வதித்தார்.
இந்த ஐந்து வருடங்களில் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. மறக்காமல் டீச்சர்ஸ் டே அன்று அவருக்கு நான் வாழ்த்து அனுப்புவேன். அவரும் பதில் அனுப்புவார்.
இங்கே எதிர்பாராத விதமாக அவரைச் சந்திப்பேன் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை.
“நெகோஷியேஷன் குவீன். ஷேர்னி கெஹ்தே ஹைன் துஜே. (சிங்கப் பெண் என்கிறார்கள் உன்னை ) ஐ ஆம் ப்ரவுட்” என்னைப் பற்றி என்னுடைய வெற்றிகளைப் பற்றி அவர் நிறையவே தெரிந்து வைத்திருந்ததில் எனக்கு மிகுந்த ஆச்சரியம்.
“லால் இஸ் எ குட் ஃப்ரண்ட். சந்திக்கும் போதெல்லாம் உன்னைப் பற்றி விசாரிப்பேன்” என்றார்.
பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டே போனதில் நேரம் சென்றதே தெரியவில்லை.
விமானம் தரையிறங்கும் தருவாயில் சென்னையில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
ஜன்னல் வழியே கார்மேகங்கள் தென்பட மழைத் துளிகள் விண்டோ ஷீல்டை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
ஒரு குலுங்கலுடன் விமானம் தரையைத் தொடவும் என்னுள் சட்டென ஓர் எண்ணம் உதித்தது.
“சர் கேன் ஐ ஆஸ்க் யூ எ ஃபேவர்” என்று கேட்கவும்
“எனிதிங் ஃபார் யூ மை கர்ல்” என்றார்.
“எனக்கு ஒரு நல்ல பிஐ சஜஸ்ட் செய்ய முடியுமா. சென்னை பேஸ்டா இருந்தா நல்லாயிருக்கும்” என்றவுடன் தனது மொபைலை எடுத்தவர் “சஞ்சய் இஸ் ரியலி குட். நான் சொன்னேன்னு சொல்லு” என்று என்னிடம் சஞ்சய் என்பவரின் நம்பரைக் கொடுத்தார்.
மொபைல் போனை உபயோகம் செய்யலாம் என்று அறிவிப்பு வந்தவுடன் சஞ்சய் என்பவருக்கு கால் செய்தே விட்டிருந்தார்.
என்னைப் பற்றிச் சொல்லி “எனக்கு செய்வதைப் போலவே அவளுக்கும் செய்து கொடு” என்று அதிகாரமாகவே சொன்னார்.
நான் வீட்டிற்கு அழைக்க, அன்று இரவே அவர் தில்லி திரும்ப வேண்டியிருந்ததால் இன்னொரு முறை வருவதாகச் சொல்லி விடை பெற்றார்.
எனக்கு ஒரு வாரம் தான் டைம் இருக்கிறது. அதனால் லக்கேஜ் எடுக்க நின்று கொண்டிருந்த போதே சஞ்சய் என்பவருக்கு ஃபோன் செய்தேன்.
பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு என் தேவையை அவரிடம் சொன்னேன்.
முதல் கட்ட தகவல்களை இரண்டு மூன்று நாட்களில் தருவதாக அவர் சொன்னார்.
விக்ரம் பற்றி ஓரளவேனும் எனக்குத் தெரிந்தால் தான் அவர் என்ன நோக்கத்தில் அந்த ப்ரோபோசலை டிராஃப்ட் செய்தார் என்று தெரிந்து கொள்ள முடியும்.
மே பீ ஹி இஸ் ஜெனியூன் என்று நான் நினைக்கவும் எனக்கே சிரிப்பு வந்தது.
கண்டிப்பாக இல்லை. க்ரோசிங் டைகர். பதுங்கும் புலி பாயத் தானே செய்யும். ஊர்ந்தா செல்லும். எதை அடைவதற்கு பதுங்குகிறாரோ. அதைக் கண்டுபிடிக்கிறேன்.
விக்ரம் பற்றிய நினைவெல்லாம் ஏர்போர்டில் அம்மா அப்பா இருவரைப் பார்த்ததுமே கலைந்து போனது.
வீட்டிருக்கு வரும் வழியில் அட்வோகேட் ராணாவை சந்தித்தது பிஸ்னஸ் கிளாசில் வந்தது என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே வந்தேன்.
“ஒரு வாரம் லீவ் என்று சொன்ன. இப்படி செவ்வாய் கிழமை வந்துட்டு ஞாயிறு ஈவனிங் போறேன்னு சொன்னா எப்படி” என்று அம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.
“அம்மா மொத்தம் ஏழு நாள் வருது. அப்போ ஒரு வாரம் கணக்கு சரி தானே” டியூச்டே, வேட்னேஸ்டே என்று எண்ணிக் காண்பித்தேன்.
“அதெப்படி இப்போவே மதியம் இரண்டு மணி ஆச்சு. சண்டே மதியம் ஏர்போர்ட் போகணும், இன்னிக்கும் சண்டேவும் கணக்கில் வராது” என்று அவர் ஒரு கணக்கைச் சொன்னார்.
“உங்க கணக்குபடி ஐஞ்சு நாளே என்று வச்சுக்கிட்டாலும் வீட்டில் ஒன்னும் செய்யாம சும்மா எனக்கு போர் தான் அடிக்கும்” என்று நான் சொல்லவும் அப்பா என்னைப் பார்த்து கண்களை உருட்டினார்.
அம்மா அந்த பக்கம் சென்றதும், “பட்டு நீ வந்தா இதை செய்யணும் அதை செய்யணும்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சிருக்கா. பார்த்து” என்று என் காதில் ரகசியமாய் சொல்லி விட்டுச் சென்றார்.
சாப்பிட்டு முடித்து அம்மா அப்பா இருவரும் குட்டி தூக்கம் போடுவதாக சொல்லி சென்று விட என் பெட்டியை பிரித்து அடுக்கி வைத்தேன்.
ஷ்யாம் அனுப்பிய ஃபைலை இன்னொரு முறை நிதானமாக படித்துப் பார்த்தேன்.
ஷ்யாமிடம் கேட்க எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. திங்கட்கிழமை அன்று முதல் மீட்டிங் என்று சொன்னான். எதுவென்றாலும் சஞ்சய் ரிபோர்ட் கொடுக்கட்டும்.
நானும் சற்றே சாய்ந்து படுக்கவும் எப்போது கண் மூடினேன் என்றே தெரியவில்லை.
“பட்டூடூடூ”
அப்பா சொன்னபடியே மாலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மாவின் அழைப்பு வந்துவிட்டது.
“பட்டு. காபி ஆறிட போகுது. வா சீக்கிரம்”
அம்மாவிடம் காபியை வாங்கிக் கொண்டு ஹாலில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டே உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.
“பட்டு, காபியைக் குடிச்சிட்டு நல்லதா ட்ரஸ் பண்ணிட்டு கிளம்பு. கோயிலுக்குப் போயிட்டு வரலாம்” அம்மா சொல்லவும் கோயிலுக்குச் செல்ல நான் கிளம்பி நிற்க என்னருகில் வந்து “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிச் சென்றார் அப்பா.
அப்பா எதற்கு அப்படிச் சொன்னார் என்று கோயில் சென்ற பிறகு தான் எனக்குப் புரிந்தது.
“சுமித்ரா. உங்க பொண்ணு நேர்ல பார்க்க இன்னும் அழகா இருக்காளே. வரன் பார்த்துட்டு இருப்பதா ஜானகி மாமி சொன்னா. என் அக்கா பையன் மும்பையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கான்” என்று அம்மாவிற்கு தெரிந்த ஆன்டி ஒருவர் என்னைப் பார்த்ததும் ஸ்டார்ட் மியூசிக் என ஆரம்பிக்க இன்னும் நான்கு ஆன்டீஸ் அங்கே ஆஜர் ஆகிவிட்டனர்.
“நீ லாயர்ன்னு சுமித்ரா சொன்னாங்க. கோர்ட் எல்லாம் எப்படி சினிமாவில் காட்டுவது போலத் தான் இருக்குமா” என்று ஆளுக்கு ஒரு கேள்வி.
“நான் கார்பரேட் லாயர் ஆன்டி. அது ஆஃபீஸ் ஜாப் போலத் தான்” என்னவென்று இவர்களிடம் விளக்கம் சொல்வது.
அம்மாவோ அவர்களிடம் ரொம்பவும் கேசுவலாக உரையாடிக் கொண்டிருந்தார்.
“நீங்க எல்லோரும் பேசிக் கொண்டே இருங்க. நான் கோவில் சுற்றிப் பார்த்துட்டு வரேன்” என்று அங்கிருந்து நழுவி பிரகாரத்தின் ஓர் ஓரத்தில் படியில் அமர்ந்தேன்.
“ஏன் விக்ரம் SOLE INVESTOR (தனி முதலீட்டாளர்) ஆக இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரெஸ் செய்திருக்கார். 49% ஸ்டேக்னா ஈகுவல் பார்ட்னர். லாஸ் என்றால் இரண்டு பேருக்கும் தான். ஷ்யாம் கான்ட் ஹாண்டில் லாஸ். பட் விக்ரம்?” என் மனதில் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன.
விக்ரம் யார். அவர் பிஸ்னஸ் என்ன. எல்லாம் எனக்குத் தெரியணும்.
என் அம்மா என் அருகில் வந்து அமர்ந்ததைக் கூட நான் கவனித்திருக்கவில்லை.
“பட்டு” என்று அவர் அழைக்கவும் தான் திரும்பிப் பார்த்தேன்.
“என்னமா இதுக்குத் தானா என்னை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு வந்தீங்க” என் அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.
“உன் அப்பா தான் தெரிஞ்சவங்க கிட்டே சொல்லி வைக்கணும்னு சொல்றார். நான் மேட்ரிமொனியில் போடலாம்ன்னு சொல்றேன்” என் அம்மா விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அம்மா இப்போ எதுக்கு மா இதெல்லாம்” எனக்கு அலுப்பாக இருந்தது.
“பட்டு இப்போன்னா நாளைக்கே இல்ல. பார்த்துட்டே இருந்தா தானே அமையும். கல்யாணமே வேண்டாம்னு இருக்க போறேன்னு சொல்லு. விட்ருவோம். யாரையாச்சும் மனசில் வச்சிருந்தா சொல்லு பட்டு” என்று அம்மா சொல்லவும்
விக்ரமைத் தான் இப்போதைக்கு மனசில் வச்சிட்டு இருக்கேன்னு சொல்லவா முடியும். இந்த அம்மாவும் தான் என்ன கேள்வியைக் கேட்டு வைக்கிறார்.
நல்ல வேளையாக அபிமன்யு வைஃப் உத்ரா கிட்ட இருந்த கண்ணாடி போல அம்மாகிட்ட இல்ல. உத்ரா வச்சிருந்த கண்ணாடி மனசில் யாரை நினைத்துக் கொண்டிருக்கோமோ அவங்களைக் காட்டுமாமே.
“சரி உனக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்பு இருக்கு அதாவது சொல்லு” அம்மா விடாப்பிடியாக கேட்கவும் எனக்கு உண்மையில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“அம்மா நான் அதைப் பற்றி யோசிச்சு பார்த்ததே இல்லை. இனிமே யோசிக்கிறேன் ஒகே. நோட்ஸ் எடுத்து வைக்கிறேன். அப்புறம் சொல்றேன்” என்று நான் சொல்லவும் அப்போதைக்குச் சரி என்று விட்டுவிட்டார்.
கண்டிப்பாக இதைப் பற்றி அப்பாவிடம் புலம்ப முடியாது. இந்த விஷயத்தில் ரெண்டு பேரும் கூட்டு.
அடுத்த நாள் காலை அப்பாவுடன் நான் வாக்கிங் செல்ல வேண்டும் என்று அம்மா சொல்லவும் லீவ் எடுத்துக் கொண்டு வந்ததே நன்றாகத் தூங்கத் தான் என்று சொல்லியிருப்பேன்.
ஆனால் பீச் ரோடில் வாக்கிங் எனவும் மிகுந்த உற்சாகமாக ஒகே என்றேன்.
நல்ல வேளையாக அப்பாவின் ஃப்ரண்ட்ஸ் யாரும் சங்கடமான கேள்விகளைக் கேட்கவில்லை. என் ஜாப் பற்றி, டீல் செய்யும் கேஸ் பற்றி எல்லாம் கேட்டார்கள்.
பேச்சுவாக்கில் தி ஃபேமஸ் டென்னிஸ் ஸ்டார் அர்ஜூன் அப்பா தான் பார்த்தசாரதி அங்கிள் என்று தெரிய வர எனக்கு ஆச்சரியம்.
வாவ் என்ன பேர் பொருத்தம்! பார்த்தசாரதி அர்ஜூன்.
எனக்கு பார்த்தசாரதின்னு அங்கிள் பேர் சொல்லவுமே பிடிச்சு போச்சு.
கண்ணன் பார்த்தசாரதியாக இருந்த போது தானே உலகத்திற்கே கீதை கிடச்சுது.
ஆனா அங்கிள் சொல்றார் அவருக்கு டென்னிஸ் பற்றி பெருசா ஒன்னும் தெரியாதாம். ஸ்வாதி அப்பா தான் எல்லாமே டேக் கேர் பண்றாராம்.
ஷ்யாம் கிட்டே இதைப் பற்றி சொல்லணும். அர்ஜூன் யாரென்று தெரியாது என்ற போது என்னைக் கேலி செய்தான்.
“என் பெரிய பையன் பிஸ்னஸ் விஷயமா மும்பை அடிக்கடி போவான்” பார்த்தசாரதி அங்கிள் சொன்னார். அவரும் அப்பாவைப் போல ரிடயர்ட் பாங்க் ஆஃபீசராம்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடலில் கால் நனைக்கப் போகிறேன் என்று அப்பாவை அவர் ஃப்ரண்ட்ஸ் கூடப் பேச விட்டு கடல் நோக்கிச் சென்றேன்.
அடுத்த இரண்டு நாளும் மகாபலிபுரம், காஞ்சிபுரம் ஷாப்பிங் என்று நாங்கள் மூவரும் ஊர் சுற்றினோம்.
வெள்ளிக்கிழமை காலை வாக்கிங் செல்லும் போது பார்த்தசாரதி அங்கிள் சனி ஞாயிறு வெளியூர் செல்கிறார் என்று தெரிய வரவும் சண்டே மும்பை செல்வதாகக் கூறினேன்.
“நைஸ் மீட்டிங் யூ அங்கிள். மும்பை வந்தா கண்டிப்பா சொல்லுங்க” என்றேன்.
வாக்கிங் முடித்து வரவும் சஞ்சயிடமிருந்து மெசேஜ் வந்தது. “மேம். நீங்க கேட்ட ரிபோர்ட் ரெடி. மெயிலில் அனுப்பவா” என்று மெசேஜில் கேட்டிருந்தார்.
ஒரு முறை நேரில் சென்று அவரை சந்தித்து வந்தால் பெட்டர் என்று தோன்றவே நேரில் வருவதாக பதில் அனுப்பினேன். .
“இது நீங்க கேட்ட ரிப்போர்ட். இன்னும் டீடைல்ஸ் வேணும்னா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்று சஞ்சய் சொல்லவும் நன்றி சொல்லிவிட்டு அவருடைய ஃபீஸ் எவ்வளவு என்று கேட்க அவரோ அதிர்ந்தார்.
“மேடம். ராணா சர் பர்சனலி உங்களுக்காக செய்யச் சொல்லியிருக்கார். இனிமேல் உங்களுக்கு என்னோட சர்வீஸ் தேவைப்பட்டால் ஐ வில் சியூர்லி சார்ஜ். நாட் திஸ் டைம்” என்று சொல்லவும் நன்றி சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
மாலையில் லேசாக மழை தூற ஆரம்பித்து இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
எனக்குப் பிடிக்கும் என்றே என்னுடைய ரூமில் பால்கனி வைத்திருந்தார் அப்பா.
மூங்கில் சேரில் அமர்ந்தபடி விக்ரம் பற்றிய பர்சனல் டீடைல்ஸ் அடங்கிய ரிபோர்ட்டை எடுத்தேன்.
அம்மாகிட்டே சொல்லணும் இந்த மேட்ரிமொனியில் போடுவது தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைப்பது இதை எல்லாம் விட பெஸ்ட் கான்டேக்ட் சஞ்சய்….இதோ! விக்ரமோட முழு ஜாதகமும் என் கையில்.
கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கு. பட் பட்டு பீ சீரியஸ்.
திஸ் மேன் இஸ் நாட் எ ஜோக்கர்.
எனக்கு நானே சொல்லிக் கொண்டு முதல் பக்கத்தைப் பார்க்கவும் வானத்தில் பலத்த மின்னலும் இடியும்.
“காட். நோ வே. பார்த்தசாரதி அங்கிளோட சன் விக்ரமா. மை குட்னஸ். இன்னிக்கு மார்னிங் கூட சொல்லிட்டு இருந்தாரே இவனைப் பற்றித் தானா. அர்ஜூனோட அண்ணா இந்த விக்ரம்ன்னு எப்படி நான் யூகித்து இருக்க முடியும்”
ஷ்யாம் கூட விக்ரம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டானே. அர்ஜூனோட அண்ணா தான் விக்ரம் என்பதை தான் சொல்ல வந்தானோ!
பத்து நிமிடங்களில் விக்ரமைப் பற்றிய முழு ரிபோர்டையும் படித்து விட்டிருந்தேன்.
நவ் ஐ கேன் கெஸ் விக்ரம். உனக்கு ஷ்யாமிடம் இருந்து என்ன வேண்டுமென்று.
கேம் ஆன்.
வானம் இன்னும் பலமாக கர்ஜனை செய்தது.
“தத: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யன்தனே ஸ்திதௌ
மாதவ: பாண்டவஸ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதத்மது:”
(BG:1,14)
பேரில் பார்த்தசாரதி இருப்பதால் மட்டும் உன் பக்கம் கண்ணன் இருப்பதாக அர்த்தமில்லை விக்ரம்.
பாஞ்ஜசன்யத்தைப் பாண்டவர்களுக்காக அன்று ஊதினான் கண்ணன். இன்று ஷ்யாமிற்கு துணை நிற்கும் எனக்காக ஒலிக்கிறது இடியாக பாஞ்ஜசன்யம்.
error: Content is protected !!