Skip to content
Post Views: 5,059
அத்தியாயம் – 18
மாலை வேதாவின் வளைகாப்பு அழகாய் நடந்துகொண்டிருந்தது. வேதாவும் சிந்துவும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தனர். விக்ரமிற்குப் பிடித்த மயில்கழுத்து நீலம். ராக்கொடி, குஞ்சம் வைத்து பின்னி, பின்னலின் நடுவில் பொன்மணி சொருகியிருந்தார்கள் இருவரும். தலை நிறைய மல்லி. நெத்திச்சுட்டி, மிதமான மேக்கப். கண்களில் அடர்த்தியாய் மை, உதட்டில் வெறும் க்ளாஸ். குடை ஜிமிக்கி, அட்டிகை என்று நகை கூட ஒன்று போலவே. வேதா மாங்காய் மாலை போட்டிருக்க, சிந்து அவள் தாயின் காசு மாலை. வேதா சாஃப்ட் சில்க் பட்டுப் புடவையில்,சிந்து லெகங்காவில் இருந்தார்கள்.
அலங்காரம் முழுதும் வாணியின் கைவண்ணம். காயத்ரி, நான் உதவட்டுமா என்று வந்த போதும், “வேண்டாம் அண்ணி, வாணியே பார்த்துக்குவா. நீங்க மாலினியக்காக்கு உதவி பண்ணுங்க.”, என்று அனுப்பிவிட்டாள். மாலினி, “எல்லாம் நேத்தே வெச்சிட்டேன் காயத்ரி.” என்று வேதாவிடம் அனுப்பியிருந்தாள். காலையிலிருந்தே அவளிடம் அன்னையைத்தவிர யாரும் முகம் கொடுத்து பேசவில்லை, அவள் கணவன் உட்பட. கனன்று கொண்டிருந்தாள் காயத்ரி.
வேதா, சிந்து இருவரின் அழகையும் மெச்சாதவர்கள் இல்லை. சுத்தி போடுங்க என்று சொல்லாதவர்கள் இல்லை. சிந்துதான் கண்ணாடி வளையல்கள் அடுக்கியிருந்த தட்டை ஏந்தியிருந்தாள். எல்லா பக்கத்திலிருந்தும் பழுத்த சுமங்கலிகள் வந்து நலங்கிட்டு வளை பூட்டினர்.
Advertisement
பர்வதம்மா வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். விக்ரம் எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டிருந்தான். மாலினி வழக்கம்போல் பம்பரமாக சுழன்று எல்லாம் சரியாக நடக்குமாறு பார்த்துக்கொண்டாள். வேதா, மாலினியை அழைத்து கிசுகிசுத்தாள். மாலினி சென்று கோமதியை அழைத்து வந்தாள். இருவரிடமும் எதோ சொன்னாள். கோமதி தயங்கியமாதிரி இருக்க, வேதா இன்னும் எதுவோ சொல்ல, உடனே தலை அசைத்து, பர்வதம்மாவை கையோடு அழைத்து வந்தார். மாலினி வேதாவை கட்டி அணைத்து தலையில் முத்தமிட்டாள். பார்த்தவர்களுக்கு முதலில் புரியவில்லை. விக்ரம் மட்டும் சட்டென்று அந்தக் காட்சியை கிளிக்கினான்.
என்னவோ என்று வந்த பர்வதம்மாவை நலங்கிட சொல்லவும், ஒரெட்டு பின் சென்றார். கோமதி, “என் பொண்ணு ஆசைப் படறா. அவ நல்லபடியா பெத்து பிழைக்கணும்னு உங்களவிட யார் மனசார ஆசீர்வாதம் செய்யமுடியும். நாலு பேரப் பிள்ளைங்க எடுத்திருக்கீங்க. தாராளமா செய்யலாம், செய்யுங்க.”, என்றார்.
பர்வதம்மா மாலினியை பார்க்க, அவளும் புன்னகையோடு ஆமோதித்தாள். அவர் மகள் காயத்ரி கூட இந்த மரியாதையை அவருக்கு கொடுக்கவில்லை. இந்த சின்ன பெண், எனக்குக் கொடுத்தாளே என்று கண்ணில் நீர் கட்டியது.
Advertisement
சந்தோஷமாய் நலங்கிட்டு வளையல் பூட்டினார். பார்த்த மகன்கள் இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. என்னதான் அவ்வப்போது குதறினாலும் அம்மாவாயிற்றே.
Advertisement
இறுதியாய், விக்ரம் வந்தான். ராகவன் புகைப்படமெடுக்க, நலங்கின் ஒவ்வொரு செயலும் ரசித்து செய்தான். சிந்து வளையல் தட்டை நீட்ட, மறுத்து, பாக்கெட்டிலிருந்து ரத்தினமும், மரகதமும் பதித்த கங்கண் போன்ற இரு வளையல்களை அணிவித்தான்.
“இது எப்ப வாங்கினீங்க ? சொல்லவேயில்லை.”, வேதா மலர்ந்த சிரிப்புடன் கேட்டாள்.
“எங்களுக்கும் ஐடியா தோணும். பிடிச்சிருக்கா, ரொம்ப யோசிச்சு எடுத்தேன்”, மெல்லிய குரலில் கேட்டான்.
Advertisement
“வீரு மை ரெமோ….”, என்று குறும்பாய் கண்ணடிக்க, முகம் சிவந்தவன்,
“ஷ்…சும்மாயிரு”, என்று தெரித்து ஓடிவிட்டான்.
இங்கே விழா நடந்துகொண்டிருக்க, ராஜேந்திரனும், மஞ்சரியும் தனியே ஒரு ரொமான்ஸ் ட்ராக் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அடம் பிடித்து அவனுக்கு கத்தரிப் பூ கலரின் மாட்சிங் வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்திருந்தாள் மஞ்சரி. அவள் பட்டுப்புடவையும், லைட் பிங்க், கத்தரிப்பூ நிறங்கள் கொண்டிருந்தது. சேர்ந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தாள்.
“யாராச்சம் பார்த்தா வம்பாகிடும். போய் உங்கம்மா கூட உக்காரு மஞ்சரி.”, கெஞ்சிக்கொண்டிருந்தான் ராஜேந்திரன்.
“முடியாது. இப்ப நான் வேதாகிட்ட போறேன். விஷ் பண்ண. நீங்க வந்து எங்களை போட்டோ எடுக்கற மாதிரி வற்றீங்க. நான், உங்களையும் கூப்பிடுவேன். வந்து நிக்கறீங்க, செல்ஃபி எடுக்கறோம். இது கூட மாட்டேன்னு சொன்னீங்க, இப்பவே போய் நானே எல்லார்கிட்டயும் சொல்றேன்.”
“ஐயோ, சம்மந்தி வீட்ல வெச்சு, இப்படி கலாட்டா பண்ணாத செல்லம். சரி நீ போய் நில்லு. நான் வரேன்.”
விக்ரம் மஞ்சரியையும் வேதாவையும் நிக்க வைத்து போட்டோ எடுக்க, அங்கே வந்த ராஜேந்திரன், “விக்ரம், நீங்க வேதாகூட நில்லுங்க. நான் எடுக்கறேன், என்று மூவரையும் சேர்த்து எடுத்தான்.
வேதாவே, “நீங்களும் வாங்கண்ணா, செல்ஃபியா எடுக்கலாம்.” என்றாள். தங்கச்சினா, தங்கச்சிதான் என்று மனசுக்குள் மெச்சியவாறே சமர்த்தாய், மஞ்சரி புறம் சென்று ,நால்வரும் வருவதுபோல கிளிக்கித் தள்ளினான்.
‘ஹை அண்ணா, மஞ்சரி புடவை கலரும் உன் ஷ்ர்ட்டும் ஒரே கலர். பாரு போட்டோ அழகா வந்துருக்கு. விக்ரமும் என் புடவை கலர்ல ஷர்ட் போட்டிருக்கார்.”, வேதா அரிய கண்டுபிடிப்பாய் சொல்ல, ‘இவளே போறும் போல, சிக்க வைக்க.’, என்று நினைத்தவன், மஞ்சரி புறம் திரும்பாமல், “ஹான் அப்படியா ? சரி நான் வந்தவங்களை சாப்பிட கூட்டிட்டு போய் கவனிக்கறேன்.”, என்று நகர்ந்துவிட்டான்.
“ராஜன் சார்”, மஞ்சரியின் குரல் தடுத்தது.
‘வச்சு செய்யறாளே !’, மனதுக்குள் புலம்பியவாரே திரும்ப, “எனக்கு எடுத்த போட்டோ எல்லாம் வாட்சப் பண்ணுங்க ப்ளீஸ். என் நம்பர் தரேன்.”,
‘பண்றதெல்லாம் வில்லத்தனம், முகத்தை மட்டும் எப்படித்தான் வெகுளித்தனமா வெச்சுக்கறாளோ.. ‘, பல்லைக்கடித்தபடி, வேதா எதிரில் அவள் நம்பர் சொல்ல, போனில் அழுத்தியவன், ‘அனுப்பறேன்’ , என்ற அடுத்த நொடி காணாமல் போனான்.
“அது என்ன எங்கண்ணனை சார்ன்னு கூப்பிடற ? என்ன முறை வரணும் உனக்கு அவர் ?”, என்று வேதா கேட்க, தோளைக் குலுக்கியவள், “ ஆபிஸ்ல அப்படி கூப்பிட்டு பழகிடுச்சு. அதே இருக்கட்டும்.”, என்றாள் இலகுவாக.
“தப்பா எடுத்துக்காத மஞ்சரி. அண்ணாக்கு பொண்ணுங்கன்னா கொஞ்சம் அலர்ஜி. அதான் ஓடிட்டார்.”, வெள்ளந்தியாய் அவள் அண்ணனுக்கு வக்காலத்து வாங்கினாள்.
பொங்கி வந்த சிரிப்பை அடக்கி, “பரவாயில்லை வேதா. நீ போய் சாப்பிடு. நான் அம்மாவை கூட்டிட்டு, சாப்பிட போறேன்.”, என்று மாடிக்குச் சென்ற ராஜேந்திரனை தேடிச் சென்றாள்.
ராஜேந்திரன் பந்தி விசாரிக்க, மஞ்சரி தன் தாயுடன் அமர்ந்ததாள். அவர்களை பார்த்து கவனித்தான். வேண்டுமென்றே,அவனிடமே அவள் குழம்பு வேண்டும் ரசம் வேண்டும் என்று கேட்க, உள்ளுக்குள் ரசித்தாலும், வெளியே தெரியாதவாறே பார்த்துக்கொண்டான்.
“உங்க வீட்டு விசேஷமாட்டம் கவனிச்ச தம்பி. ரொம்ப சந்தோஷம் என்று மஞ்சரியின் அம்மா காஞ்சனா பாராட்டிவிட்டு சென்றார்.
ஆரத்தை எடுத்து, விழா இனிதே முடிய, வேதாவிற்கு வேண்டியதை ஒரு தட்டில் வைத்து, விக்ரமே எடுத்து வந்து கொடுத்தான். மருமகன், மகளுக்கு போட்ட வளையலும், பார்த்துப் பார்த்து கவனிக்கும் பாங்கும் பார்த்து, கோமதிக்கு அவ்வளவு பெருமை.
மாலினியுமே ராகவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். “இன்னைக்கு காலைல அத்தை பேசின பேச்சுக்கு, வேதா இப்படி பண்ணது எனக்கு ரொம்ப ஆச்சர்யம். அதுவும் அவ அம்மாகிட்ட சொல்லி கூட்டிட்டு வந்தது செம்ம பிளான். அவங்களே கூப்பிட்டப்பறம் யார் என்ன சொல்லமுடியும். சின்ன பொண்ணுன்னு நெனச்சேன், சீக்கிரமே பக்குவமாகிடுவா. மாஸ்டெர் ஸ்ட்ரோக் இது. அந்த காலத்துல எனக்கு தோணலை…”, என்று சிரித்தாள்.
“உன் சீமந்தமப்போ இருந்த நிலைமையே வேற. உன்ன மாதிரி எங்கம்மாவை நான் கூட சமாளிக்க முடியாது. இல்லைன்னா, கோமதிம்மா சொன்னப்பறமும், உங்கிட்ட ஒபினியன் கேட்டு நிப்பாங்களா ?”
“நீங்க பார்த்தீங்களா அதை ?”, புன்சிரிப்புடன் கணவனை நோக்கினாள்.
“ம்ம்…பார்த்தேன் பார்த்தேன். ரெண்டு மருமகள்களும் மாமியாருக்கு நல்லாவே குல்லா போட்டுடீங்க..”, கன்னம் தட்டி கண்ணடித்து வந்தவர்களை கவனிக்க சென்றான் ராகவன்.
கிடைத்த சில நிமிட தனிமையில், விக்ரமும் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தான் வேதாவிடம். “ தேனு, அம்மாவை நலங்கு வெக்க சொன்னது அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். அண்ணிக்கு, காயத்ரிக்கு கூட செஞ்சதில்லை. ரொம்ப சந்தோஷம்டா. அம்மா காலைல வந்ததும் வராததுமா ஆரம்பிச்ச சுப்ரபாதத்திற்கே, நான் அவங்ககிட்ட சரியா பேசாம டபாய்ச்சிட்டு இருக்கேன்.”
“ம்ம்…தெரியும். அம்மா பிள்ளைக்கு நடுவுல நான் வரவேணாம்னுதான், உங்களை ஒண்ணும் கேக்கலை. எதுக்கு அவங்களோட மல்லு கட்டறீங்க ? அவங்க இப்படி புடுங்கவும்தானே, இப்ப காச குடுத்து முடிச்சிடீங்க ? இருவத்தெட்டு வயசுக்குள்ள வீட்டு நெலத்துக்கான காச குடுத்து, பாங்க் லோன் எடுத்தாலும், வீட்ட கட்டி முடிச்சிட்டீங்க. எத்தன பேரால சொல்லிக்க முடியும் ? மேபீ அவங்க அந்த ப்ரெஷர் குடுக்காட்டி, வெளி நாட்டு வேலைக்கே ட்ரை பண்ணிருக்க மாட்டீங்க.”
“அதுக்கு என்ன விலை கொடுத்திருக்கோம் தேனு, அதுவும் சொல்லு. “
“இல்லைன்னு சொல்லல. அது அந்த ஜோசியக் கடங்காரனால. பொறுமையா கல்யாணம் பண்ணிருந்தா, இந்த கஷ்டம் இல்லைதான? ஆனாலும் நமக்கு ஸ்கைப், வீடியோ கால்னு இருக்கு, இதெல்லாம் இல்லாத காலத்துலயும் குடும்பத்தை விட்டு வெளினாட்ல சம்பாதிச்சிட்டு இருந்தவங்க நிலைமைக்கு நாம பரவால்லைதானே ?”
“எல்லாத்துக்கும் ஒரு பாசிடிவ் பக்கத்தை சொல்லிடு. மசக்கையில கஷ்டபட்டப்போ மட்டும் இது தோணலையோ ?”
கொஞ்சம் அசடு வழிந்தவள், “ ம்ம்ம்…எனக்கும் இது புது அனுபவம்தான..சிலது பட்டு கத்துக்கறேன்.”
அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “என்னைவிட உனக்கு பக்குவம் ஜாஸ்திதான். சீக்கிரமே கத்துக்குவே. பாயசம் சாப்பிடு, நான் இனிதான் சாப்பிடணும்.”
“ ஓஹ் …ஆமாம். அம்மாவ வர சொல்லிட்டு, நீங்க போய் சாப்பிடுங்க.”
சரியென்று வெளியே சென்றவன், கோமதியைக் காணாது தேட, பர்வதம்மா, “நான் பார்த்து அவளுக்கு துணைக்கு அனுப்பறேன். நீ போய் சாப்பிடு.”, என்று அனுப்பினார். சாப்பிட்டு இறங்கிய காயத்ரியை பார்த்தவர், “நீ போய் வேதாகூட கொஞ்சம் இரு.”, நான் அவங்க அம்மாவை அனுப்பறேன்.”
வேதா இருந்த அறைக்கு வந்த காயத்ரிக்கு, இதற்கு மேல் அடக்கமுடியவில்லை. “விக்ரம் போட்ட வளையல் காட்டு வேதா ? பாரேன், ஒரு வார்த்தை யார் கிட்டயும் வரதையும் மூச்சுவிடலை, உனக்கு வளையல் வாங்கினதையும் மூச்சு விடலை. நல்லாதான் ட்ரெய்ன் பண்ணிருக்க உன் புருஷனை.”
வேதாவிற்கு கோபம் கனன்றாலும், அமைதியாய் கையை நீட்டினாள். “நீதான் செலெக்ட் பண்ணியா ?அங்கேர்ந்து உனக்கு போட்டோ எடுத்து காட்டினானா ?” வேதாவின் கையை இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தாள்.
“அவர் என்கையில போடும்போதுதான் எனக்கே தெரியும். நம்ப உங்களுக்கு கஷ்டமா இருந்தாலும் அதான் உண்மை.”, நீ நம்பினா எனக்கென்ன, நம்பாட்டி எனக்கென்ன என்று விட்டேத்தியாய் பதிலளித்தாள் வேதா.
“கழட்டிதான் காமியேன்.”, வெளிச்சத்துல கிட்டக்க பார்க்கறேனே ?”, என்றவள் வளையலை கழட்டப்போக, “அண்ணி, என்ன பண்றீங்க ? வளைகாப்புக்குன்னு போட்டது. அதைப் போய் கழட்டுவீங்களா ?”, கையை ஒரு உதறு உதறி உருவிக்கொண்டாள் வேதா, அவளை சற்றே முறைத்தவாரே ?
“இதென்னவோ போட்டுகிட்டே இருக்கபோறா மாதிரி சொல்ற. வீட்டுக்கு போனதும் கழட்டிதான வெக்கபோற ? இதுக்குபோய் சிலுத்துக்கற ? , காயத்ரி பேசவும் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் கோமதி.
“ஏம்மா காயத்ரி, புள்ளதாச்சிகிட்ட என்ன இப்படி பேசற ? ரெண்டு புள்ள பெத்தவ மாதிரியே இல்லயே ? முன்ன பின்ன கல்லு வெச்ச வளை நீ பார்த்ததில்லையா ? கைல போட்டத உருவற ?”, வெங்கல மணியோசையாய் ஒலித்தது அவர் குரல்.
ஐயோ, இந்தம்மா என்ன இப்படி கத்துது, யார் காதுலயாவது விழுந்தா வம்பாச்சே என்று உதறல் எடுக்க, “ஹி ஹி இல்லமா, டிசைன் பாக்க கேட்டேன்”, என்று தன்மையாக பேசினாள்.
“சிக்கினடி செல்லமே”, என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தாள் வேதா.
“அத உங்கூர்ல கழட்டிதான் பார்ப்பாங்களோ ? கையிலயே பார்த்தா ஆகாதா ? இல்ல உனக்கு கண்ணு மங்குதா ?”, அவள் ஊரிலிருந்து வயது வரை ஒரு நொடியில் தாக்கினார்.
சத்தம் கேட்டு அவள் மாமியாரும் , சின்ன மாமியுமா உள்ளே வர வேண்டும் ? “போச்சு, இந்தம்மா என்ன மாட்டபோகுது, என்று அவசரமாய் வேதாவைப் பார்த்தாள், காப்பாற்றும்படியாக.
காலையில் அவள் கணவனை அவமானப்படுத்திய காயத்ரியின் மேல் துளியும் பச்சாதாபமில்லை வேதாவிற்கு. இப்ப பாரு உன் கொட்டத்தை அடக்கறேன் என்று, “மா..எதோ புதுசா இருக்கவும் கழிட்டி பார்க்க போனாங்க, விடுங்க”, பாவமாய் கூறினாள். காயத்ரியே கழட்டப் பார்த்தாள் என்று தெரிந்ததும், இன்னும் சலங்கை கட்டிக்கொண்டார் கோமதி. அது தெரிந்து தானே வேதாவும் சொன்னாள்.
“வயசான அளவுக்கு வழமை தெரியலையே உனக்கு. வளைகாப்புக்குன்னு அவ புருஷன் போட்டது, உடனே எப்படி கழட்டுவ ? இதுல அவள சிலுத்துகறன்னு வேற கேக்கற ?, என்றவர் அவள் மாமியாரிடம் திரும்பி, “ஏம்மா, உங்க பிள்ளை நகை ஒண்ணும் போடலியோ உங்க மருமகளுக்கு ? ஒரு கல்லு வெச்ச வளையலபாக்க இப்படி ஆவலாதியா இருக்கா பாவம் ?”, என்று வினவ, காயத்ரியின் மாமியார் மங்கையர்கரசிக்கு மிகுந்த அவமானமாய் போய்விட்டது. அதுவும் அவர் தங்கை சாவித்ரியின் முன் நடந்தது கூடுதல் அவமானம். அவர்கள் பக்க சொந்தத்திற்கு நாளைக்குள் செய்தி பரவிவிடும்.
எள்ளும் கொள்ளும் வெடிக்க, “அங்க ரகு இரண்டு பிள்ளைகளையும் தனியா சாப்பிட வெச்சிட்டு இருக்கான். நீ இங்க வந்து இந்த அல்பத்தனம் பண்ணிட்டு இருக்க, பீரோ பூரா நகை இருந்தாலும், அடுத்தவங்க போடறதுதான் உனக்கு கண்ண உறுத்தும். குடும்ப மானத்த வாங்காம, போய் புருஷன், புள்ளைங்களை கவனி.”, என்று சிடுசிடுத்தார். அந்தக் கடுப்பிலும் கோமதியின் கேள்விக்கு லாவகமாய் பதிலும் கொடுத்தார். முகம் கன்றிப்போய், மறு வார்த்தை பேசாது தலை குனிந்து வெளியேரினாள் காயத்ரி.
“விடுங்கக்கா, சில பேரு குணராசி அப்படி.”, என்று கோமதி உடனே வெள்ளைக்கொடி அசைத்தார். தான் நல்லவர் என்று காட்டிக்கொள்ள. மங்கையும், அவர் தங்கையை கிளப்ப, “வா, நாமும் போய் சாப்பிடுவோம். கிளம்பணும்.”, என்று கையோடு அழைத்துச்சென்றார்.
“அவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு வேதா, அவங்க குடும்பத்துலயே இதுதான் கொஞ்சம் விஷம் போல. இப்ப குடுத்ததுக்கே உங்கிட்ட வரமாட்டா. அப்படி வந்தா, சும்மா இருக்காத, திருப்பி குடு, இல்ல எங்கிட்ட சொல்லு, நான் பார்த்துக்கறேன்., கோமதி பாடமெடுத்தார் மகளுக்கு.
மஞ்சரி வேதாவின் அறை தேடி வரவும், “நீ சாப்பிட்டியா மா ?” , என்று கேட்டார் கோமதி.
“ம்ம்.. ஆச்சு ஆண்ட்டி.”
“இவ கூட கொஞ்சம் இரும்மா. நான் சொந்தக்காரங்களை கவனிக்கணும். “, என்று சொல்லி கிளம்பிச் சென்றார். வழியில் ராஜேந்திரனைப் பார்க்க,
“டேய் , வந்தவங்களை விசாரிச்சயா ?”, என்று கேட்டார்.
“இப்பதான் மா , ரெண்டு பந்தி கிட்ட நிண்ணு எல்லாரையும் கவனிச்சு அனுப்பினேன். விக்ரமை கூட்டிட்டு போய் சாப்பிட போலாம்னு வந்தேன்.
“சரி, நீ பாரு, நான் கிளம்புறவங்களை வழி அனுப்பறேன். உங்கப்பா மட்டும் இருக்கார்”, என்று வெளியே செல்லவும், விக்ரம் அங்கே வரவும் சரியாக இருந்தது.
“சாப்பிடலாமா விக்ரம் ?”, என்று ராஜேந்திரன் கேட்கவும், வேதாவின் அறையிலிருந்து பெண்களின் சிரிப்பொலி கேட்கவும், இருவரும் தன்னால் அங்கே சென்றனர்.
வேதாவும் மஞ்சரியும்தான் சிரித்துக்கொண்டிருந்தனர். “ என்ன ஜோக் ? வெளிய வரை சிரிப்பு சத்தம் கேட்குது ?”, விக்ரம் கேட்டான்.
“உங்களைத்தான் மஞ்சரி டாமேஜ் பண்ணிகிட்டு இருந்தா.”, இன்னமும் பொங்கிய சிரிப்பை நிறுத்தமுடியாது சொன்னாள் வேதா.
“ஏ வாலு ! என்ன சொல்லி வெச்ச அவகிட்ட ?”, மஞ்சரியிடம் கேட்டான் விக்ரம்.
தொண்டையை கனைத்தவள், “அது, இவ்ளோ அழகா, முறைப் பொண்ணு நான் இருக்க, என்னை கட்டாம , உனக்கு ஏன் வெளிய பொண்ணு பார்த்தாங்கன்னு வேதா கேட்டாங்க.”
“அடிப்பாவி, கத்தி சொல்லாத… அத்தை காதுல விழுந்தா நான் செத்தேன்.”, அவசரமாய் ஒரு பார்வை வெளியே பார்த்தான்.
மீண்டும் கலகலவென்று சிரித்தார்கள் பெண்கள். விக்ரம் சொல்லிய விதத்தில், ராஜேந்திரனுக்கே சிரிப்பு வந்தது.
அடக் கடவுளே ! அப்ப மஞ்சு சொன்னது உண்மைதானா ? அவங்க அம்மா கண்ண குத்திடுவாங்கன்னு பயப்படுவீங்களா ?”, வேதா அவனை கேலியாய்க் கேட்டாள்.
“சே, அப்படியில்லை..” என்று விக்ரம் சொல்லும்போதே, “ஆனா கொஞ்சம் அப்படித்தான்.”” என்று மஞ்சரி முடிக்கவும், மறுபடியும் அங்கே சிரிப்பலை.
“அப்பா, இவ இருக்காளே’, என்று ராஜேந்திரனின் பார்வை மஞ்சரியைத் தழுவியது.
“இல்லை வேதா, இவளுக்கு பன்னென்டாவது பப்ளிக் எக்ஸாமுக்கு அக்கவுண்ட்ஸ் சொல்லித்தர மாமா கூப்பிட்டார். நான் அவங்க வீட்டுக்கு போனேன். அப்ப அத்தை, ‘வந்தமா, பாடம் சொல்லிக்குடுத்தமான்னு இருக்கணும். எவனாவது முறைப் பொண்ணு அது இதுன்னு சொல்லி ஏத்திவிட போறாங்க. அவ உனக்கு தங்கச்சி புரியுதான்னு’, கண்ணை உருட்டிக் கேட்டாங்களா, நான் தலைய உருட்டினேன். “, தோளை குலுக்கி விக்ரம் ரகசியக்குரலில் சொல்லவும், மறுபடி ஒரு சிரிப்பலை.
ஒரு வழியாய் எல்லோரும் உணவருந்தி, தாய் வீட்டிற்கு கிளம்பினாள் வேதா. உடன் விக்ரமும். கூட இருக்கும் இரண்டு இரவுகளை அவன் தனியே இருக்க மறுத்துவிட்டான்.
பர்வதம்மாவிற்கு இது பிடிக்கவில்லை என்றாலும் மகன் இருப்பதே இரண்டு நாட்கள், அதுவும் இப்போது அவரின் மேல் கோபத்தில் வேறு இருக்கிறான் என்பதால் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. காயத்ரிக்கு இன்று கிடைத்த அர்ச்சனையில் அவளும் எதுவும் பேசாமல் இருந்தாள்.
வேதாவின் பெற்றோர் அவர்கள் அறையை மகளுக்கும், மருமகனுக்கும் கொடுத்திருந்தனர். மேக்கப் கலைத்து, நைட்டி மாற்றி, கட்டிலில் வேதா அமர்ந்திருக்க, நின்றவாறே, அவள் பின்னலை அவிழ்க்க உதவிக்கொண்டிருந்தான் விக்ரம். அவனை வம்பு பண்ணிக்கொண்டிருந்தாள் வேதா.
“தேனூ…சும்மாயிரு. நிறைமாசம்னு நானே கண்ட்ரோல்ல இருக்கேன். நீ சும்மா என்னை சீண்டாதே.”, விக்ரம் அவஸ்தையாய் சொன்னான்.
கல கலவென்று சிரித்தவள். “ஓ…அதான் காலைலேர்ந்து ஒரு முத்தத்துக்கு கூட பஞ்சமா போச்சா ? நான், சரி வீடு நெறைய எல்லாரும் இருக்கவும் அடக்கி வாசிக்கிறன்னு நெனச்சேனே ? “
“வேதா….”, கோமதியின் குரல் கேட்டது வெளியே.
வேண்டுமென்றே, அவன் இடுப்பைப்பிடித்துக் கொண்டே கட்டிலில் இருந்து எழுந்தாள். விக்ரம் மீது உரசியவாறே, நகர்ந்து, ‘வரேன்மா…’ என்று குரல் கொடுத்து, அவனை இழுத்து ஒரு முத்தம் வைத்துச் சென்றாள்.
பாவம் விக்ரம். கட்டிலில் பொத்தென்று அமர்ந்தவன், மனதையும் உடலையும் அடக்க போராடிக்கொண்டிருந்தான்.
பால் வேண்டுமா என்று கேட்ட தாயிடம், இல்லை எதுவும் வேண்டாம் என்று மறுத்து, கதவைத் தாள் போட்டவள், குறும்புச் சிரிப்புடன் விக்ரம் நோக்கி வந்தாள்.
அவளை பரிதாபமாகப் பார்த்தவன், “வேணாம்டி, எதாச்சம் எக்குதப்பாச்சுன்னா நாளைக்கு யார் முகத்தையும் என்னால பார்க்கமுடியாது. எல்லாரும் என்னைத்தான் கேவலமா பார்ப்பாங்க…” என்று கெஞ்சவே ஆரம்பித்துவிட்டான்.
“ஷ்…அவன் வாய் பொத்தியவள், சரியான மண்டு பா நீ. நிறை மாசம் எனக்குதான, உனக்கில்லைல ? ”
“எனக்கு குடுத்த புக்லர்ந்து ஒரு ரெண்டு சாப்டர் நான் ரிவைஸ் பண்ணிக்கறேன். நீ ரிலாக்ஸ் பண்ணிக்கோ.”, வெக்கமும் குறும்பும் கலந்து சிரித்துக் கண்ணடித்தாள்.
பிறகென்ன, விக்ரம் காற்றாடியாய் பறக்க, வழக்கம்போல் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினாள் வேதா, அவள் ரிவிஷன் பேப்பரில்!
error: Content is protected !!