Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 21

அத்தியாயம் – 21

“ராஜா…நீயும் விக்ரமுக்கு பேசு.”, என்றான் ராகவன்.

“நீங்க சொல்லிட்டீங்களா ?”

“ம்ம்…நீயும் போன் பண்ணு.”, என்றான் மொட்டையாக. நடந்தது எதுவும் சொல்லாமல்.



Advertisement

உள்ளூர் சொந்தங்களிடம் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்கள் பெரியவர்கள் மூவரும். ராஜாவின் போனில்தான் கோமதி பேசிக்கொண்டிருந்தார் அவரின் பக்க சொந்தங்களுக்கு.

அவரை பேசி முடிக்கச் சொல்லி வாங்கியவன், வாட்சப்பில் விக்ரமிடம் செய்தி இருக்கவும் அதைப் பார்த்தான்.

மீட்டிங்கில் இருக்கிறேன். அரை மணி நேரம் கழித்துப் பேசுகிறேன். வேதாவின் போன் அவளிடம் வைத்திருக்கச் சொல்லு, என்ற செய்தி மட்டும் இருந்தது.

Advertisement

ராகவனுக்கும் காட்ட, அவனும் விக்ரமின் மெசேஜைப் பார்த்துவிட்டு, தன் சம்மந்திகளிடம் பூரிப்புடன் பேரன் பிறந்த செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்த அம்மாவை தனியே அழைத்து, நடந்ததைச் சொன்னான்.

Advertisement

“டேய், அவன் சின்ன பையன்டா, எல்லாம் சொன்னா புரிஞ்சிக்குவான். அவன் நல்லதுக்குதானே செஞ்சோம். விடு.”, என்று அதை பெரிய விஷயமாகவே கருதவில்லை பர்வதம்.

மாலினியிடம் குழந்தை பிறந்த செய்தியை பர்வதம் சொல்லிவிட்டதால், ராகவன் அவள் வருகைக்காக காத்திருந்தான்.

வேதா அறைக்கு வந்ததும், எல்லோரும் அவளை பார்க்கவும், குழந்தையைப் பார்க்கவும் சரியாக இருந்தது. அவள் அண்ணன் விக்ரமின் செய்தியைச் சொல்லி, போனையும் கொடுத்துவிட்டு சென்றிருந்தான்.

Advertisement

விக்ரமிடமிருந்து அழைப்பு வந்ததும் எடுத்தாள்.

“தேனூ…எப்..எப்படி இருக்க ? வலி இருக்கா இன்னும் ?”, ஒய்ந்து வந்தது விக்ரமின் குரல்.

“என்னாச்சுப்பா…குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு.”, பின்னால் எல்லோரும் பேசும் ஓசை அவனுக்கும் கேட்டது.

“எல்லாரும் இருக்காங்களா ? பாப்பா எப்படியிருக்கான் ?”, இருவரும் கேள்விகள் கேட்டார்களே ஒழிய, பதில்களை சொல்லவில்லை.

“ஒரு நிமிஷம்”. என்றவள், “ மா, அவர் பேசறார், எனக்கு எதுவும் கேக்கலை. நீங்க எல்லாம் வெளிய போய் பேசுங்க.”, எனவும், அறை காலியானது.

“விரூ, விடியோ கால் பண்ணு”, என்று சொல்லி போனை அணைத்தாள்.

வீடியோ கால் அழைப்பை ஏற்றவள், “விரூ…இப்ப சொல்லு”

அவள் முகத்தைத்தான் இமைக்காமல் பார்த்தான். களைப்பாய் தெரிந்தாள். கண்களில் சோர்வு. ஆனாலும் ஒரு பூரிப்பு தெரிந்தது. மணிகணக்காய் வலிசுமந்து அவன் பிள்ளையை பெற்றுக்கொடுத்திருக்கிறாள். தனியாய்.

முகம் கசங்க, “சாரிமா, எனக்கு யாருமே தகவல் சொல்லலை…குழந்தை பிறந்த அப்பறம், அண்ணன் போன் பண்றார். எல்லாருக்கும் தகவல் சொல்ற மாதிரி எனக்கும் சொல்றார். அத்தனை வலியிலயும் நான் உன் கூடவும் இல்லை, ஒரு போன்ல கூட பேசவோ, தைரியம் சொல்லவோ முடியாதபடி செஞ்சிட்டாங்க எல்லாரும் சேர்ந்து.”, குரலில் அவ்வளவு வேதனை.

‘ஐய்யோ, காலைல சொல்றேன்னு சொன்னவங்க, சொல்லவே இல்லையா ? கடவுளே ‘, என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவள்,

“வீரு, இப்ப வலி எல்லாம் மறந்து போச்சு. நான் டயர்டா இருக்கேன் மத்தபடி ஒண்ணும் வலியில்லை. உன் பிள்ளையை பார்க்கணுமா வேண்டாமா ?”, அவனை திசை திருப்பினாள்.

[the_ad id=”6605″]

“காமி…கைல அள்ளிக்க ஆசை, ஆனா நீதான் நான் வரதுக்குள்ள அவசரமா பெத்துட்ட..”, , ஆதங்கமாய் குரல் வர, போனை குழந்தையின் புறம் திருப்பினாள்.

“நான் ஒண்ணும் செய்யலை, உன் பிள்ளைக்குத்தான் அவசரம். நீயே அவன் கிட்ட சண்டை பிடிச்சிக்கோ. “, குழந்தை சுற்றியிருந்த துணியை விலக்கி, கை கால்களை எல்லாம் காண்பித்தாள்.

“பார்த்துக்கோப்பா, கண்ணு, மூக்கு, கை, காலு, பத்து விரலு எல்லாம் கரக்டா இருக்கு, அப்பறம் அதெங்க, இதெங்கன்னு கேக்கக் கூடாது.”, என்று சிரித்து வம்பு வளர்த்தாள்.

போனைத்தன் புறம் திருப்பியபோது, விக்ரம் கண்களில் கண்ணீரைக் கண்டாள்.

“இதான் சிரித்துக்கொண்டே அழுகறதா பாஸ் ?”

சிரித்துக்கொண்டே கண்களை துடைத்தவன், “போடி…”, என்றான்.

“நான் எங்க போறது, நீதான் வரணும்.”

“வெள்ளிக்கிழமை கிளம்பிடுவேன் தேனு, உடனே வர ஆசைதான், ஆனா நாளைக்கும், மறு  நாளைக்கும் முக்கியமா நான் இருக்கணும், புது க்ளையன்ட் கூட மீட்டிங் இருக்குமா…”, வருத்தமாய் சொன்னான்.

“சரி, அதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்னு நினைக்கிறேன். பார்த்துக்கலாம். வீரு, நீ கூட இல்லைன்னு கில்டியா ஃபீல் பண்ணாதே. இங்க அம்மாவைவிட அத்தை நல்லா பார்த்துக்கிட்டாங்க என்னை. தைரியம் சொன்னாங்க, எப்படி வலிய பொறுத்துக்கறதுன்னு சொல்லி குடுத்தாங்க. அந்த லாமேஸ் கிளாஸ்ல சொன்னதைவிட அத்தை சொன்னது ஈசியா இருந்தது.  எனக்கு கஷ்டமில்லை. சரியா ?”

அவன் எதை நினைத்து வருந்துகிறான் என்று சரியாக நாடி பிடித்து, சமாதானம் செய்தாள்.

“அண்ணி வரலையா ? உன் கூட இருக்க ?”

“குழந்தைகளை யார் பார்த்துப்பா ? சித்துவுக்கு கோல்ட், ஃபீவர்ன்னு இருக்கு, சிந்து ஸ்கூல் அனுப்பிட்டு, சித்துவை அவங்க அம்மா வீட்ல விட்டுட்டு , இப்போ வந்துடுவாங்கன்னு அண்ணா சொன்னார். பாவம் அத்தையும் அம்மாவும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணுமில்லை.”

நர்ஸ் உள்ளே வரவும், “சரி நான் வெக்கறேன் வீரு, மெசேஜ் பண்ணறேன் அப்பப்ப. ஃப்ரீயா இருக்கும்போது பேசிக்கலாம்.”, புன்னகையுடன் விடை கொடுத்தாள்.

நர்ஸ் போனதும், தன் அண்ணனை வரவழைத்து அவன் காது தீயும் மட்டும் பேசினாள். விக்ரமிற்கு மெசாஜாவது செய்திருக்க வேண்டும். எப்படி பர்வதம்மா சொன்னால் நீ சும்மாயிருக்கலாம் என்று.  அவள் பேசப் பேசத்தான் ராஜனுக்கும் தவறு புரிந்தது. எல்லாம் முடிந்த பின், என்ன செய்ய ?

[the_ad id=”6605″]

மாலினியை அழைக்க பார்க்கிங் வாயிலில் காத்திருந்தான் ராகவன். அவள் வந்து வண்டியை நிறுத்தி வரவும், விக்ரமிடம் குழந்தை பிறந்த பிறகு தகவல் சொன்னதையும், அவனின் கோபத்தையும் சொல்ல, மாலினிக்கு அவ்வளவு கோபம் வந்தது அதைக் கேட்டு.

“அவங்கதான் சொன்னா, உங்களுக்கு எங்க போச்சு அறிவு ? சரி தூங்கினா, ஒரு மெஸேஜ் போட்டிருக்கலாமில்ல, எனக்கு போட்ட மாதிரி ? எழுத்ததும் பார்த்துட்டு கூப்டிருப்பானில்ல ?”, கடித்துத் துப்பினாள்.

“அப்பறம் போடலாம்னு நெனச்சேன்… தூங்கிட்டேம்மா…”

“கடவுளே, என்ன பண்ணி வெச்சிருக்கீங்க ? அந்த பிள்ளை, ஏற்கனவே அவ கூட இல்லைன்னு அவ்ளோ வருத்தபடறான். பிள்ள பிறக்கும்போதும் அவ கூட இல்லாதபடி பண்ணிட்டீங்களே ?

“இல்ல… அவன் தனியா இருக்கான், ஒண்ணு கிடக்க ஒண்ணு யோசிக்கப்போறான்னுதான்…”

“என்ன யோசிப்பான். போன்ல நம்மகூட பேசிட்டுதான இருப்பான். வலியில நான் கத்தின போ, கூட வந்து கையபிடிச்சிட்டு நின்னீங்க இல்லை ? எனக்கு அது எவ்ளோ ஆறுதலா இருந்துது.. அவன் போன்ல பேசியாவது கொஞ்சம் ஆறுதலா இருந்திருப்பான் வேதாவுக்கு. எப்ப அம்மா பேச்சை கேக்கறதுன்னு வெவஸ்தை இல்லைப்பா உனக்கு. ஒரு நாள் அவன் தூங்காட்டா என்ன ? இவ வலியில கத்தினா, அவன் போன்லயாச்சம் கூட இருந்திருப்பான் இல்லை ? அவனுக்கும் பிள்ளை பிறந்ததுல ஒரு பங்கிருந்திருக்கும். “, எரிச்சலாய் அவனுக்கு புரிய வைத்துக்கொண்டிருந்தாள்.

“அவ கஷ்டபட்டுட்டு இருக்கும்போது, எதுவுமே தெரியாம நாம சுகமா தூங்கிட்டுஇருந்திருக்கோம்னு அவன் மறுகிட்டு இருப்பான்.   நம்மள நம்பித்தான போனான். என்ன பதில் சொல்றது அவங்கிட்ட ? போங்க உங்கம்மா சொல்றபடியே கேளுங்க, எங்கிட்ட எதுவும் பேசாதீங்க”, கோபமாய் விடுவிடுவென்று முன்னால் சென்றுவிட்டாள்.

ராகவனுக்குத்தான் முழி பிதுங்கியது. தான் செய்து வைத்திருக்கும் குளறுபடி இப்போது புரிந்தது.என்ன செய்து சரி படுத்துவது என்றுதான் புரியவில்லை. வேதாவிடமாவது மன்னிப்பு கேட்போம் என்று சென்றான்.

மாலினி வந்தவள், அவர்கள் எல்லோரையும் கிளம்ப சொல்லிக்கொண்டிருந்தாள். “எல்லாம் ராத்திரி பூரா கண் முழிச்சிருக்கீங்க. போய் படுங்க. சாயந்திரம் நாலு மணிக்கு வந்தா போறும். விசிடிங் ஹவர்ஸ்ல, வர சொந்தங்களை சமாளிக்கணும். பகல் நான் பார்த்துக்கறேன் இன்னைக்கு.”

இரவு யார் தங்குவது என்று சம்மந்திகள் பேச, மாலினி உள்ளே சென்றாள் வேதாவையும் புது வரவையும் பார்க்க.

“வாழ்த்துக்கள் வேதா ! விக்ரம் பேசினானா ? ரொம்ப சாரிமா, இவர் பண்ணி வெச்ச குளறுபடிய எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலை. விக்ரமை ரொம்ப தேடினியா ?”, வருத்தமாய் முடித்தாள்.

“கொஞ்சம் தேடினேன். ஆனா அவர் கிட்ட சொல்லாதீங்க. பேசினார் அக்கா. குழந்தையைப் பார்த்தார். தெரியபடுத்தலைன்னு வருத்தப்பட்டார். கொஞ்சம் பேசி தேத்தி வச்சிருக்கேன்.”

கை கழுவி, குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்தாள். அவள் உடல் நிலை, பிள்ளைக்கு பால் கொடுத்தாளா என்றெல்லாம் விசாரித்து, கொண்டுவந்த ஃபளாஸ்கிலிருந்து ஹார்லிக்ஸை ஊற்றிக் கொடுத்தாள்.

“நீ தூங்கு, பிள்ளை எழுந்தா நீயும் எழுந்துக்கணும். நான் போய் எல்லாரையும் அனுப்பிட்டு வரேன்.”

வெளியே வந்தவள், பர்வதத்திடம், “அத்தை, சமைச்சி வெச்சிட்டேன். போய் ரெண்டு பேரும் சாப்பிட்டு படுங்க. நான் கோமதிமா வந்ததும் வீட்டுக்கு வந்துடறேன் சித்துவை கூட்டிட்டு. நீங்க அப்பறம் கிளம்பி இங்க வந்துக்கோங்க.”,  மறந்தும் அவள் கணவன் புறம் திரும்பவில்லை.

ராகவன் உள்ளே சென்று, வேதாவிடம், “மன்னிச்சிடு மா. வேணும்னு செய்யலை.”

“அச்சோ, பெரியத்தான், அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீங்க எதுக்கு இப்படியெல்லாம் சொல்றீங்க…”

“அவங்கிட்ட சொல்லுமா…என் போன் எடுக்கமாட்டேங்கறான். விடிஞ்சதும் சொல்லணும்னுதான் நெனச்சேன்.தூங்கிட்டேன். உன் அப்பாவுக்கு கொஞ்சம் மயக்கமா இருக்கவும், ராஜா எழுப்பினதும், அவரை கூட்டிப்போய் காபி வாங்க அது இதுன்னு தள்ளிப்போயிடிச்சு. ராஜா கிட்ட சொல்லிருந்தேன். அவன் கூப்பிட போனபோதும் அம்மா, பிறக்கட்டும் சொல்லிக்கலாம்னு சொல்லிட்டாங்களாம். எனக்கு தெரியலை.”, வருத்தமாய் பார்த்தான் அவளை.

“நீங்க வீட்டுக்கு போங்க. அவர் உங்ககிட்ட பேசுவார். நானுமே சொல்லிருக்கேன். நீங்க வொர்ரி பண்ணாதீங்க பெரியத்தான்.”, ராகவன் மன்னிப்பு கேட்டது வேதாவிற்கே சங்கடமாக போயிற்று.

அவன் கிளம்பியதும், ‘விக்ரமிற்கு மெசேஜ் தட்டினாள். அவன் அழைத்ததும் பொரிந்துவிட்டாள்.

“ஹே, என்ன நெனச்சிட்டு இருக்க ? பெரியத்தான் போன் பண்ணா எடுக்கலையாம் ?அவர் எங்கிட்ட வந்து மன்னிப்பு கேக்கறார். அவளோ பெரிய அப்பாடக்கரா நீ ? எந்த ஊர்ல தம்பி பொண்டாட்டி பிரசவத்துக்கு அண்ணன் வாசல்ல தேவுடு காத்திட்டு இருக்காங்க இந்த காலத்துல ? அத்தைய கொண்டு வந்து விட்டுட்டு அவர் அக்கா தனியா பிள்ளைகளோட இருக்காங்கன்னு திரும்ப போயிருந்தா கூட நியாயம்தான். அத செய்யாம உக்கார்ந்திருந்தார் பாரு. நீ ஏன் கோவிக்கமாட்ட அவர ?”

“ஹே…கொஞ்சம் காப் விடுடி…”

[the_ad id=”6605″]

“மாட்டேன். நான் வேணும்னு பண்ணலைமா, அசதில தூங்கிட்டேன். உங்கப்பாவுக்கு சுகர் கம்மியாயிடவே, ராஜாவோட காபி வாங்கி குடுத்து, அம்மாக்கும் அத்தைக்கும் எடுத்து வந்துன்னு நேரம் போயிடிச்சின்னு வருத்தபடறார்.”, என்றவள், சற்று பொறுமையாக,

“வீரு, எனக்குத் தெரியும் இது உனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்னு,  உடனே சொல்லப் போனவரை தடுத்தது உங்கம்மாதான். அவர் பாவம்.”, என்று நிறுத்தினாள்.

“ம்ம்… தெரியுது.”

“என் அண்ணனும்தான சொல்லலை. அவனை நானே காய்ச்சிட்டேன். நீ ஒழுங்கு மரியாதையா ராகவன் அத்தானுக்கு போன் பண்ணி பேசற. புரிஞ்சுதா ?”

“எனக்கு மட்டுமில்லை, பக்கத்து சீட்ல இருக்கறவனுக்கும் புரிஞ்சிருக்கும். நல்ல வேளை சீனாக்காரனா போயிட்டான். வீட்டுக்கு கிளம்பிட்டாரா ? அரை மணியில பேசறேன். நீ தூங்கு. நீ சொல்லாட்டியும் பேசிருப்பேன்.ஆனா, என் அண்ணாக்காக நீ வரிஞ்சிகட்டி எங்கிட்ட சண்டை போட்டது, சோ ஸ்வீட்.அப்புறமா உம்மா தர்றேன்.”, என்று போனை வைத்தான்.

நிமிர்ந்தவள், புன்னகையோடே நின்ற மாலினியைக் கண்டதும் அசடு வழிந்தாள். “விக்ரம் கூட பேசறேன்னு வெளிய போயிருப்பேன், ஆனா, என் வீட்டுக்காரரைப்பத்தி உயர்வா பேசவும், நின்னு கேட்டேன்.”, கல கல வென்று சிரித்தவள், “என்ன சொன்னான் விக்ரம், இவ்ளோ மிரட்டல்லுக்கெல்லாம் பயந்துடுவானே !”

உடன் சிரித்தவள். “ பெரியத்தான் வீட்டுக்கு போனதும் பேசறேன்னு சொன்னார்.”

“விக்ரம் மன்னிச்சாலும், என்ன மலையிறக்க அவர் காத்திருக்கணும்.”

“ஏங்க்கா ? பாவமில்லையா ?”

“அம்மா சொன்னாலும், இவருக்கு அறிவு எங்க போச்சு ?  அத்தனை மணி நேரமிருந்தது, நீயோ அவனோ இதை மன்னிச்சாலும், எனக்கு விக்ரமை தெரியும். அவனுக்கு இது ஒரு பெரிய குறையாத்தான் இருக்கும். நான் பேசாம இருந்தா கொஞ்சமாவது வருந்துவார். அடுத்த முறை, அத்தை எதாவது சொன்னா, அப்படியே எடுத்துக்காம அறிவை யூஸ் பண்ணுவார். “

புருஷனைக் கையாள்வதில் அனுபவப்பாடமொன்றையும் அன்று கற்றாள் வேதா.

வீட்டிற்கு வந்து உண்டு முடிந்து, உட்கார்ந்திருந்த ராகவன், விக்ரம் போன் வரவும் உடனே எடுத்தான்.

“ஹலோ…விக்ரம் ?”

“அண்ணா, சாரிண்ணா. உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு இல்லை. அந்த நேர வருத்தம், ஏமாற்றம், கோவம்ன்னு எல்லாம் சேர்ந்து, எதாச்சம் ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசிடப் போறோம்ன்ற பயத்துலதான் எடுக்கலைண்ணா.”, வேகமாய் தன் நிலையைக் கூறினான் விக்ரம்.

“டேய்.. நான் தாண்டா மன்னிப்பு கேட்கணும். யோசிக்காம முட்டாள்தனமா இருந்தது என் தப்புடா. எவ்வளவு முக்கியமான விஷயம், உனனை மிஸ் பண்ண வெச்சிட்டேன். ஒரு மெசேஜ் போட்டிருக்கணும். என்னத்தான் நான் விளக்கம் சொன்னாலும் உன் குறை தீர்க்கமுடியாதுதானே…”, வருத்தமாய் பதிலளித்தான் ராகவன்.

ஒரு சங்கடமான மௌனம். ஆம், மன்னித்தாலும் மறக்கமுடியாதுதானே.

“விடுங்கண்ணா,  நடந்தது நடந்து போச்சி. அடுத்து பேசுவோம். நான் சனிக்கிழமை காலைல வந்துடறேண்ணா. நான் கிளம்பறத்துக்குள்ள தொட்டில் போட முடியுமான்னு பாருங்க. அவங்க வசதிக்கு வெச்சா, மறுபடி லீவ் கேக்க முடியாது.என் வேலையோட சேர்த்து இப்ப மூணு பார்ட் டைம் பாக்கறேன். எல்லார்கிட்டயும் லீவ் கேக்கறது கஷ்டம். ராஜா கிட்டயும் சொல்லிருக்கேன். பிளீஸ், ரெண்டு அம்மாக்களையும் சமாளிச்சு, தேதி குறிங்க. ”

“சரிடா…சீனு ஐயரை நானே ராஜாவோட போய் பார்த்து பேசிட்டு சொல்றேன். நீ உங்க அண்ணிகிட்ட பேசுடா. எங்கிட்ட ரொம்ப கோவமா இருக்கா.”, என்றான் பாவமாக.

“ஏண்ணா ?”

“ உங்கிட்ட சொல்லாததுனால, ரொம்ப கோச்சிகிட்டா எங்கிட்ட.”

சிரித்தவன், “நான் பேசறேண்ணா. எனக்கு கோவம் இல்லைன்னு சொல்றேன். ஆனா, என் ரெக்கமண்டேஷன் எல்லாம் வேலைக்காகுமா என்ன ? எனக்குத் தெரியும் போடான்னுவாங்க.”

இப்போது சிரிப்பது ராகவன் முறையாயிற்று. “ அதுனாலெல்லாம் மலையிறங்க மாட்டா, ஆனா உன் பக்கம் நீ கிளியர் பண்ணு, அப்பறம்  நான் பார்த்துக்கறேன்.”

“ஆல் தெ பெஸ்ட்ண்ணா.”, புன்னகையோடே வைத்தான்.

மதிய உணவு நேரம், ஆன்லைனில் பெரிய பல வண்ண ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்துக் கூடை, நீல வண்ண பலூன்கள் கட்டியிருந்த ஐட்டத்தை தேர்வு செய்து, ‘என் வாழ்வை வசந்தமாக்க வந்த என் இதய ராணிக்கும், குட்டி இளவரசனுக்கும் கோடானுகோடி நன்றிகள். ‘, என்று வாழ்த்து அட்டையில் வாசகம் பொருத்தி, வேதாவின் மருத்துவ அறைக்கு உடனே அனுப்புமாறு ஆர்டர் செய்தான்.

அண்ணி போன் எடுக்காததால், மெசேஜ் தட்டிவிட்டு, வேலையில் ஆழ்ந்தான்.

மூன்று மணி அளவில், பூங்கொத்து வந்து சேர்ந்தது. அந்தத் தளத்திலிருந்த நர்ஸ், டியூட்டி டாக்டர் எல்லோரும் ஆர்வமாய் பார்த்தனர். இரண்டு டஜன் ரோஜா பூக்கள், இன்னபிற இலை தழைகளுடன், கலக்கலாய் இருந்தது. வேதாவின் அறைக்கு எடுத்து வந்த மத்திம வயது நர்ஸ்,

“அடேயப்பா, உங்க வீட்டுக்காரருக்குத்தான் எவ்ளோ ஆசை ? பூங்கொத்து வரும்தான், ஆனா இவ்ளோ பெரிசு, வீட்டுக்காரர் அனுப்பி இப்பத்தான் பார்க்கறோம். குடுத்து வெச்சவமா நீ”, என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

பூங்கொத்தைப்பார்த்து முழித்துக்கொண்டிருந்தாள் வேதா. விக்ரமிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. தன் பிறந்த நாளுக்குக்கூட பிடித்ததை வாங்கிக்கொள் என்று பணத்தை அக்கௌண்டில் போட்டான். நைட் வாழ்த்துக்கூறினான். இப்படியெல்லாம் செய்யவில்லை.

மாலினிதான் சட்டென்று அவள் அதைப்பார்த்து முழிப்பதை போட்டோ எடுத்து, விக்ரமிற்கு அனுப்பினாள்.

சுதாரித்து, பெரிய புன்னகையோடே, “அக்கா…என்ன பண்றீங்க ? “, என்றாள்.

உன்னோட முதல் ரியாக்ஷன் எப்படி இருந்துச்சுன்னு அவனுக்கு தெரியணும் இல்ல ? அதான்.”, கண்ணடித்தவள், “வேதாவின் மகிழ்ச்சியும், பூரிப்பும் சேர்த்து, அடுத்த போட்டோவை அனுப்பினாள்.

சிரிக்கும் ஸ்மைலீக்கள் அனுப்பிய விக்ரம், இன்னும் அரை மணியில் வீடு சென்று பேசுவதாக மேசேஜ் தட்டினான்.

அதற்குள், கார்டில் இருந்த மெசேஜ் படித்து, கண்களில் நீர் கோர்த்துவிட்டது வேதாவிற்கு.

“அவளை அணைத்த மாலினி, ஷ்…இன்னும் மூணு நாள்ள வந்துடுவான். அங்க இருக்கவேதான அனுப்பினான். உன் கூட இருந்திருந்தா, நைட்டெல்லாம் முழிச்சிருந்ததுக்கு இப்ப குப்புற படுத்து தூங்கிட்டு இருப்பான். எஞ்ஜாய் தி மொமென்ட்.”, வேதாவைத் தேற்றினாள்.

சொன்னதுபோலவே விக்ரம் போன் செய்தான். குழந்தைக்கு பால் கொடுத்து முடித்தவளிடம், குழந்தையை வாங்கிக்கொண்டு மாலினி, “நான் வாசல்ல இருக்கேன். நீ பேசிட்டு கூப்பிடு.”, என்று சென்றாள்.

“வீரு, எப்படி இந்த மாதிரி ஐடியா எல்லாம் ? கலக்கிட்ட போ !”

“எங்களுக்கும் வரும். நீதான் நம்ப மாடேங்கற..”, காலரை உயர்த்திச் சொன்னான்.

“பொய்… உனக்கு முன்னமே தெரிஞ்சிதுன்னா, போன மாசம் என் பர்த்டேக்கு அனுப்பியிருப்ப. இது யார் சொன்னா, சொல்லு.”, கண்கள் இடுக்கி சிரிப்பை அடக்கிக் கேட்டாள்.

“நீ அநியாயத்துக்கு புத்திசாலியா இருக்க..ஏதோ புருஷன் ஆசையா அனுப்பினானேன்னு சந்தோஷப்படாம, நோண்டி நொங்கெடுக்கற…”, சிலிர்த்துக்கொண்டான்.

உதட்டை குவித்து ஒரு முத்தம் வைத்து, “செல்லம், பார்த்துட்டு ரொம்பவே ஹாப்பி ஆனேன்பா…”

“ம்கும்…அண்ணிதான் போட்டோ அனுப்பினாங்களே… பேஸ்த் அடிச்சிபோய்தானே பார்த்தே “, கலாய்த்தான்.

அசடு வழிந்தவள், “அது மொதல்ல, அப்பறம் பார்த்தல்ல, அடுத்த போட்டோல ?”

“ம்ம்…வாயெல்லாம் பல்லா சிரிச்சயே..பகலா இருக்கத்தொட்டு நான் பார்த்து பயப்படலை..”

“ஐய…ரொம்பத்தான். ஆனா, மெசேஜ் கண்டிப்பா உன்னுதுதான். இப்படி சென்ட்டியா எழுத எப்படி வருது ?”, சீரியசாய் கேட்டாள் வேதா.

கொஞ்சம் வெக்கப்பட்டவன், “தோணினதை எழுதினேன்டி…அதுக்கும் ஆராய்ச்சில இறங்கிடாத !”

“அதப் பார்த்து கொஞ்சம் நானும் கண் கலங்கிட்டேனா, அப்பறம் அக்காதான் ஒரு பெரிய உண்மையை சொன்னாங்க.”,  புருவம் ஏற்றி, ரகசியம் சொல்வது போல் சொன்னாள்.

“என்னா உண்மை?”

“நீ இங்க இருந்திருந்தா, நைட் முழிச்சிருந்ததுக்கு குப்புற படுத்து தூங்கிருப்ப, இப்படி பூங்கொத்து, மெசேஜ் எல்லாம் அனுப்பிருக்கமாட்டேன்னு. அப்பத்தான் எனக்குமே தோணுச்சு, கரெக்ட்தானேன்னு. இப்ப என் ஃப்ரெண்ட்ஸ், சொந்தமெல்லாம் வருவாங்க, அவங்க எல்லாம் பார்த்து பொறாமை படுவாங்கதானே ? இதுவரைக்கு ஐயோ பாவம், கல்யாணமான கையோட தனியா இருக்குன்னு பரிதாபமாத்தான பார்த்தாங்க.”, வேதா என்னவோ சாதாரணமாய்த்தான் அவள் மனக்குறையைக் கூறினாள்.

[the_ad id=”6605″]

விக்ரமுக்குத்தான் சுருக்கென்றது. இந்தப் பெண் என்னிடம் இந்த கஷ்டத்தையெல்லாம் சொல்லவேயில்லை பார். சொன்னால் மட்டும் என்ன செய்துவிட முடியும். இருக்கட்டும், இங்கே அழைத்து வந்தபின் அவள் வருத்தமெல்லாம் போக்கிடலாம் என்று உறுதி எடுத்துக்கொண்டான்.

அவளிடம் பேசி, அண்ணியுடனும் பேசினான். அண்ணனுடன் கோவமில்லை என்று சொன்னான்.அதைப்பற்றி பேசாமல், அவன் பூங்கொத்து அனுப்பியதற்கு அவனை ஓட்டிவிட்டு வைத்தாள்.

பூங்கொத்து டேபிள் மேல் அமர்ந்து, அறையே சுகந்தமாக்கிக் கொண்டு இருந்தது.  நாலு மணிக்கெல்லாம் வந்துவிட்டார் கோமதியம்மா, கணவனோடு.

பூங்கொத்தைப்பார்த்து பெற்றவர்களுக்கு பெருமிதம். மாலினி வீட்டிற்கு கிளம்பினாள். ஐந்து மணிபோல் உறவினர், நண்பர்கள் படையெடுப்பு ஆரம்பித்தது. ராஜேந்திரன் கரெக்டாக மருத்துவ மனை வாசலில் ஆஜராகியிருந்தான். பின்னே, மஞ்சரி வருவதாய் சொல்லியிருந்தாளே.

அவள் வரவும், “எப்படியிருக்காங்க என் நாத்தனாரும் மருமகனும் ?”, என்று விசாரித்தாள்.

“அம்மா தாயே, சமர்த்தா பாத்துட்டுப்போம்மா, அங்க வெச்சு வம்பு பண்ணாதே”, என்று அவன் சொல்லிக்கொண்டிருகையிலேயே, ராகவனும் அவன் அம்மாவும் வந்து இறங்கினார்கள்.

“மஞ்சு, அம்மா வந்திருக்காங்களா ?”,பர்வதம் விசாரித்தார்.

“இல்லத்தை. எனக்கு ஆபிஸ் பக்கம், அதனால விக்ரம் சொன்னதும், இன்னிக்கே பார்க்க வந்துட்டேன். அப்பா அம்மா அப்பறமா வருவாங்க.”, சரளமாய் சமாளித்தாள்.

“சரி, நீ வாம்மா.”, என்று அவளை அழைத்துக்கொண்டு பர்வதம்மா செல்ல, அவரை தொடர்ந்தனர் ராகவனும் ராஜேந்திரனும்.

வந்தவர்கள் அனைவரும் குழந்தையை பார்ப்தோடு, பூங்கொந்தையும் பார்த்து பேசிக்கொண்டும், வேதாவைக் கிண்டல் செய்துகொண்டும் இருந்தனர்.

உள்ளே வந்த பர்வதம்மா பூவைப் பார்த்தாலும், வந்தவர்களைப் பார்க்கவேண்டியிருந்ததால், எதுவும் சொல்லவில்லை.

சமர்த்தாய் சென்று வேதாவிடமும், கோமதியிடமும் பேசி, குழந்தையை எட்ட நின்று கொஞ்சிவிட்டு வந்த மஞ்சரி, ராஜேந்திரனை மெதுவாய் ஓரம் கட்டினாள்.

“தலைவரே, இதெல்லாம் நோட்ஸ் எடுக்கறீங்களா ?”, அவன் காதைக் கடித்தாள்.

“ஹ..எதை ?”, புரியாமல் பார்த்தான்.

“பூங்கொத்து மாட்டரைத்தான் சொல்றேன்.”

“அதுக்கென்ன ?”

“அதுக்கு… என்னவா ? நமக்கு குழந்தை பிறந்தா, எனக்கும் இந்த மாதிரி பெரிசா பொக்கே வாங்கித்தரணும்.”, ஆர்டர் பறந்து வந்தது.

“அடிப்பாவி…எங்கம்மா கொண்டே போட்றுவாங்க. “

“ஓ..மருமகன் அனுப்பினா கொண்டாடுவாங்க, அதுவே நீங்க எனக்கு வாங்கினா கொண்ணுடுவாங்களோ ? “, சண்டைக்கு ரெடியானாள்.

“ஷ்…யாராச்சம் பாக்கப் போறாங்க… விக்ரம் கூட இல்லாததுனால அனுப்பியிருக்கான். நாந்தான் கூடவே இருப்பேன் இல்லை, அப்பறம் என்ன ?”

“ஏன், கூடவே இருந்தா, குடுக்கக் கூடாதுன்னு இருக்கா ? இல்லை, உள்ளூர்ல ஆர்டர் பண்ணா, டெலிவரி பண்ணமாட்டாங்களா ?”

“இப்பவே கண்ணக்கட்டுதே கடவுளே ! சரி அதை அப்ப பார்க்கலாம். இப்ப நீ கிளம்பு. நேரமாச்சு. தனியா வேற போகணும் அவ்வளவு தூரம். போயிட்டு எனக்கு மெசேஜ் போடு. காத்திட்டு இருப்பேன்.”

“ஓகே ஆபிஸர். சொல்லிட்டு கிளம்பறேன்.பை.”, அப்பவும் அவனை வாரிவிட்டே சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!