Skip to content
Post Views: 4,508
அத்தியாயம் – 30
“ஹலோ ..மஞ்சரி.”
“சொல்லுங்க நான்தான். என்னாச்சு ? அப்பாக்கு ட்ரை பண்ணா, எடுக்கவேயில்லை.”
“இடியாப்ப சிக்கலாகிடுச்சு.நீ உங்க ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டுட்டு என் ஆபிஸ் வா. நாம கொஞ்சம் தனியா பேசணும். அஞ்சு மணிக்கு அங்க இருக்க மாதிரி வா. நான் என் ஸ்டாஃப அனுப்பிடறேன்.”, இன்னதென்று பிரிக்க முடியாத வகையில் இருந்தது ராஜேந்திரனின் குரல்.
Advertisement
“என்னாச்சுபா ? அதுக்குத்தான் எங்க அம்மாவை போக வேண்டாம்னு சொன்னோம். கேட்டத்தானே.”, கவலையாய் சொன்னாள்.
“ப்ச்…நீ வா, நேர்ல பேசிக்கலாம்.”
“சரி வரேன்.”, என்று மஞ்சரி கூறவும், தொடர்பைத் துண்டித்துவிட்டான்.
Advertisement
கோமதி ஹாலில் ஏதோ பேசுவது கேட்டது. மனதுக்குள் அவ்வளவு வருத்தம், சலிப்பு ஆதங்கம். அங்கிருக்க முடியாமல், கிளம்பிவிட்டான்.
Advertisement
“என்னடா சொல்லிட்டுப் போனாங்க ? பொண்ணு குடுக்க மாட்டாங்களாம்னு சொல்றார் உங்கப்பா ? யார் கேட்டா அவர் பொண்ணை. வெச்சிக்க சொல்லு அவங்களையே.”, ஆங்காரமாய் ஒலித்தது அவர் குரல்.
பதிலே பேசாமல், அவர் புறம் திரும்பாமல் கிளம்பிவிட்டான்.
“பாருங்க, நான் கேக்கறேன், அவன் பாட்டுக்குக் காதிலேயே வாங்காம போறான் ?”
Advertisement
“யார் சொன்னதை நீ காதுல வாங்கிருக்க ? உன் பிள்ளை உன்னாட்டம்தான இருப்பான்? “, அவர் பங்குக்கு கடித்துவிட்டு தினசரியின் பின் ஒளிந்துகொண்டார் சௌந்தர்ராஜன்.
ஆபிசில், வேலைக்கு இருந்த இரு பையன்களையும் வேலை கொடுத்து வெளியில் அனுப்பினான் ராஜேந்திரன். அப்படியே வீட்டுக்குப் போய்விட்டு நாளை வந்து விவரம் சொன்னால் போதும் எனவும், அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.
ஆபிஸ் மேற்பார்வை மற்றும் அக்கவுண்ட்ஸ் பார்க்கும் ஒரு பெண்மணியையும் ஐந்து மணிக்கு கிளம்பச் சொல்லி உத்தரவிட்டான்.
[the_ad id=”6605″]
மஞ்சரி உள்ளே நுழையவும், அவளை வரவேற்று அவன் அறைக்கு அழைத்துச் சென்றான். அவன் நாற்காலியில் உட்காராமல், விசிட்டர் சேரில் அவளை அமர்த்தி அவனும் அருகே அமர்ந்தான்.
“எதுவும் சாப்பிடறயா ?”
“இல்லை , வேணாம். என்னாச்சுன்னு சொல்லுங்க,ஒரே டென்ஷனா இருக்கு,”
பொறுமையாக விவரித்தான். மஞ்சரியின் கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது. தன்னால் அப்பா அம்மாவிற்கு எவ்வளவு ஒரு அவமானம் ? ஆனால் அவர்கள் போகாமல் இருந்திருந்தால் வந்திருக்காது. போவேன் என்று அடம் பிடித்துச் சென்றது அம்மா தானே ? வருத்தமும் கோவமும் ஒரு சேர ஆட்கொண்டது அவளை.
“ஷ்… அழாதே மஞ்சரி. அழறதுனால ஒரு புண்ணியமும் இல்லை.”, அவள் கை பிடித்து அழுத்தினான்.
“பயமா இருக்குங்க. பிரிச்சிடுவாங்களா ? இதுவரைக்கும் சப்போர்ட் பண்ண அப்பாவே இப்ப மாட்டேங்கறாங்க.”, கேவலுடன் கேட்டாள்.
“இங்க பார். இப்பதான் தைரியமாய் இருக்கணும். நம்ம வைராக்கியம் பார்த்துத்தான் அவங்க மாறணும்.”
“உங்கப்பாவே சொல்றார், மாற மாட்டாங்கன்னு.அப்பறம் எப்படி சொல்றீங்க ?”, நம்பிக்கையில்லாமல் கேட்டாள்.
“அதுக்குன்னு அவர் சொல்றபடி, அவங்களை மீறி நான் உன்னைக் கல்யாணம் பண்ணா, என்னாகும்னு சொல்லிட்டேன். இது சினிமா இல்லை, கல்யாணம் முடிஞ்சதும் சுபம்னு முடிக்க. விக்ரம் மாதிரி வெளினாட்ல வேலைன்னா கூட, ஆனது ஆகட்டும், நாம கண்காணாத இடத்துலதான இருக்கோம்னு ரிஸ்க் எடுக்கலாம். ஆனா இங்க பிசின்ஸ் கமிட்மென்ட்ஸ் இருக்கு. இப்பதான் நல்லா வளர்ந்து வருது. “
“என்னதான் வழி ? “, கேசம் கலைந்து, கண்கள் கண்ணீரில் பளபளக்க, கன்னத்தில் கண்ணீர்க் கோடுகள், சிவந்த மூக்கின் நுனியும், அதை அடிக்கொரு தரம் உறிந்து கொண்டு, உதடுகளைக் கடித்து கேவலைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவளைப் பார்க்க நெக்குருகிப்போனது ராஜேந்திரனுக்கு.
தன் கர்சீப்பை அவளிடம் கொடுத்தவன், எழுந்து அவளுக்குத் தண்ணீர் பிடித்துக் கொடுத்தான். சற்று ஆசுவாசப்பட்டவளை, மெல்ல தன் வயிற்றொடு அணைத்து, “எனக்கு கொஞ்சம் டைம் குடும்மா. அந்த ஜோசியக் கடங்காரன் திரும்பி வரட்டும். அவர்கிட்ட பேசி, இதை சரி பண்ணறேன் நான். அவர் சொன்னாத்தான் எங்க அம்மா அடங்குவாங்க. ஆனா, அதுக்காக சும்மா இருக்கமாட்டேன். என் மேல அவங்களுக்கு பாசம் ஜாஸ்தி.
அவங்களுக்கு என் கோபமும் வருத்தமும் புரியணும். அவங்க நம்பிக்கைக்கும் என் மேல இருக்க பாசத்துக்கும் மத்தியில தவிச்சாதான், ஜோசியர், சுமாரா எதாச்சம் சொன்னலும், அதுலயே தன்னை சமாதானப் படுத்திக்கிட்டு ஒத்துக்குவாங்க.”, பொறுமையாக தன் திட்டத்தை விளக்கினான்.
“அவங்க சரின்னாலும், இப்ப எங்கப்பா அம்மாவை எப்படி சரி கட்டுவேன் ?”, புலம்பலாய்க் கேட்டாள்.
“ம்ம்…உங்களுக்காக, இனிமே அவரோட பழகலை நான். ஆனா, எனக்காக எதுவும் வரன் பாக்காதீங்க. என்ன தனியா விடுங்கன்னு சொல்லு. கொஞ்ச நாள் நாம பிரிஞ்சிருக்க வேண்டியிருக்கும். உன் வருத்தம் பார்த்து உங்க வீட்லையும் , என் வருத்தம் பார்த்து எங்க வீட்லையும் இளகுவாங்கன்னு நம்புவோம். “, மீண்டும் அவள் அருகில் அமர்ந்தான்.
“எதுக்கு நாம பிரிஞ்சிருக்கணும் ?”, கொஞ்சம் சந்தேகமாகவே கேட்டாள்.
“உங்கப்பா நிலையிலருந்து யோசி. நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டார். அதுக்கு மேலயும் என்னோட பழகினா வேடிக்கையா பார்த்துகிட்டு இருப்பார் ? அவர் வேண்டாம், பழகாதேன்னு சொல்றதுக்கு முன்னாடி, உங்களுக்கு வேண்டாம்னா, நான் இனி பழகலைன்னு நீ சொல்லிடு.”
“இது சரி வருமாங்க ?”
“வரும், வரணும். என் யூகம் சரின்னுதான் நெனைக்கிறேன்.”
“அதுக்கு எதுக்கு நாம் நெஜமா பிரியணும் ? பார்க்கலைன்னாலும் போன்ல பேசக் கூடாதா ?”
“ம்ம்…நைட் என் கூட கடலைய போட்டுட்டு, காலைல நல்லா சாப்டுட்டு ஆபிஸ் போ. அடுத்த மாசமே வேற வரன் பார்த்துடுவாங்க.”, அவளை முறைத்தான்.
“ஆனா, பேசலைன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சிடுமே ? “, பாவமாய்க் கேட்டாள்.
“எந்த எமோஷனையும் மறைக்காதே. உன் கோபம், எரிச்சல், அழுகை, ஆதங்கம், விரக்தி எல்லாம் காட்டு. உன் வைராக்கியத்தையும் சேர்த்துக் காட்டு. எந்த காண்டாக்டும் வேண்டாம். ரொம்ப அவசியம்னா, உன் பாஸ்கிட்ட சொல்லு. அவன் எனக்கு தகவல் சொல்லுவான். உயிர் போற அவசரமாய் இருந்தாலொழிய, எனக்கு போன் பண்ணாதே. இது சீரியசாத்தான் சொல்றேன். புரியுதா. எல்லா வகையிலயும் இது நமக்கு பிரேக்கப்தான். “, கடைசி வரி சொல்லும்போதே குரல் கரகரத்தது ராஜேந்திரனுக்கு.
“அச்சோ, அப்படி சொல்லாதீங்க…நான் தாங்க…”, அவள் வாய் பொத்தியிருந்தான்.
“ம்ம்… மொதல்ல உங்கிட்ட உண்மையச் சொல்லாம , பிரிஞ்சிடலாம்னு மட்டும் சொல்லலாம்னு நெனச்சேன். அப்பறம் இப்படி எதாச்சம் ஏடாகூடமா யோசிப்பயோன்னுதான் சொல்லிட முடிவு பண்ணேன்.”
“வேண்டாம்னு சொல்லியும் வலிய வந்து வம்பிழுத்தாங்க இல்லை எங்கம்மா ? வெச்சி செய்யறேன் அவங்களை…”, சூளுரைத்தாள்.
“அப்ப எங்கம்மாவை என்ன பண்ணுவே ?”, கொஞ்சம் உதறலோடே கேட்டான்.
“அது உங்க பாடு. எங்கிட்ட பேசாம பார்க்காம இருக்கற எரிச்சலெல்லாம் அவங்ககிட்ட காட்டுங்க, அது போறும் எனக்கு.”
வரண்ட புன்னகையை உதிர்த்தவாறே, “ம்ம் எப்படி தள்ளப்போறேனோ தெரியலை. சரி நீ கிளம்பு. நேரமாச்சு.” ,என்றான்.
“ம்ம்…”, மறுபடி கண்ணீர் ஆறாகப் பெருகியது மஞ்சரிக்கு. “இதுக்கே இப்படி வலிக்குதே ? ஆறு மாசம் கழிச்சும் உங்க அம்மா ஒத்துக்கலைன்னா ? “
“ஷ்…எந்த முயற்சியும் பலிக்கலைன்னா, எங்கப்பா சொன்ன வழி இருக்கவே இருக்கு. அட்லீஸ்ட், நம்மால ஆனதெல்லாம் முயற்சி பண்ணோம்னு ஒரு திருப்தியாச்சம் இருக்கும். என் மேல இருக்க நம்பிக்கையை விடாதே. எப்பவும்.”, அவளை இறுக அணைத்து விடுவித்தான்.
“கிளம்பு. சீக்கிரம்.”, வழியனுப்பி வைத்தவன், மறுபடி தன் இருக்கையில் வந்தமர்ந்தான்.
தான் செய்வது சரிதானா ? என்ற எண்ணம் வாட்டியது. அதே நேரம் தன் தாயிடம் பேசிப் புரிய வைக்க முடியாது என்றும் தெரிந்தது. அதிரடிதான் சரி. ஆனால் அதற்கான இந்த பிரிவு மனதை அறுத்தது.
சோகம் கப்பிய முகத்தோடு வந்த மகளைப் பார்த்ததும் மஞ்சரியின் பெற்றோருக்கு அவள் ராஜேந்திரனைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.
“முகம் கழுவிட்டு வா மஞ்சரி. கொஞ்சம் பேசணும்.”, என்றார் கைலாசம்.
தலையசைத்துச் சென்றவள், சற்று நேரத்தில் முகம் திருத்தி, உடை மாற்றிக்கொண்டு வந்தமர்ந்தாள். கைக்கு காபி வந்தது.
“மஞ்சும்மா…அப்பா சொல்றதைக் கொஞ்சம் கேளு. ராஜா நல்ல பிள்ளையா இருந்தாலும் அவங்கம்மாகிட்ட இருக்கிற இந்த கண்மூடித்தனமான நம்பிக்கை உனக்கு பின்னாடி ரொம்ப பிரச்சனையாகும்டா. அவங்களுக்கு ஜோசியத்துமேல இருக்கிற நம்பிக்கையவிட, அந்த ஜோசியர் சொல்ற வாக்குலதான் நம்பிக்கை போல. அவங்க வீட்ல அந்தம்மா ராஜ்ஜியம்தான். அவங்க வீடுக்காரரை எங்க முன்னாலயே, பேசாதீங்கன்னு அடக்கறாங்க. அவங்களுக்குப் பிடிக்காதது எதுவும் அவங்க காது குடுத்து கேக்கறதுகூட இல்லை. அவங்க பிடியிலயே நிக்கறாங்க. இந்த இடம் வேண்டாம்மா.”, என்றார்.
“சரிப்பா. ராஜனும் சொன்னார். நீங்க சொன்னதை. இரண்டு பேருமே வீட்டுக்கு ஒரே பிள்ளை, பொண்ணாகிட்டோம். உங்களை மீறி எதுவும் பண்றதுக்கு எங்களுக்கும் பிடிக்கலை. அதான்…பிரி…. பிரிஞ்சிடலாம்னு…முடிவு பண்ணோம். “, கண்களில் மறுபடியும் அருவியாகக் கொட்டியது கண்ணீர்.
[the_ad id=”6605″]
“கொஞ்ச நாள்ல சரியாகிடும். இதைவிட உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்கறோம் மஞ்சு. அழாதம்மா.”, காஞ்சனா சமாதானம் செய்வதாய் நினைத்து, அவள் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டார்.
“நான் பார்த்த மாப்பிள்ளைக்கு ஒரு குறைச்சலும் இல்லை. அவர் அம்மாவைப் பிடிக்காமத்தான் அவரை வேண்டாம்னு சொல்றீங்க. “, காஞ்சனாவை முறைத்தவள், “நீங்க கேட்டதும் அவர் ஜாதகம் வாங்கிக்குடுத்து தப்பு பண்ணினது நான். அவங்க வீட்டுக்குப் போக வேண்டாம்னு சொல்லியும், போய், தேவையில்லாம விஷயத்தை சொதப்பி விட்டது நீதாம்மா.”
“இல்லடி, அந்தம்மா…”, அவரை பேசவிடாமல் கைகாட்டி நிறுத்தியவள்,
“ எல்லாருமா சேர்ந்து போட்டு உடைச்சிட்டோம். உங்ககிட்ட இதை ஒரு வாட்டிதான் சொல்லுவேன். நானே சொல்ற வரைக்கும் எனக்கு வேற வரன் எதுவும் பார்க்காதீங்க. பாக்கறதா தெரிஞ்சா, நான் ஹாஸ்டலுக்குப் போயிடுவேன். அப்பறம் மானம் போச்சு, மரியாதை போச்சுன்னு புலம்பக்கூடாது சொல்லிட்டேன்.”, தந்தை தாய், இருவரின் முகத்தையும் கூர்மையாகப் பார்த்து, உறுதியாய்க் கூறினாள்.
“நீ எப்ப டி சொல்லுவே ?”, காஞ்சனா கேட்டார் கவலையோடு.
“ராஜனைத்தவிர என்னால யாரையும் யோசிக்க முடியலை. அப்படி யோசிக்க முடியற நிலைமை வந்தா, அப்ப சொல்றேன்.”
“இப்படி சொன்னா எப்படிம்மா ?”, காஞ்சனா குரலில் அழுகை எட்டிப்பார்த்தது. கைலாசம் அவர் கையை பிடித்து சைகை செய்ய,
எதையும் கண்டுகொள்ளாமல்,தோளைக் குலுக்கி, பாதி காப்பியை அப்படியே வைத்துவிட்டு, எழுந்து அவளறைக்குச் சென்றுவிட்டாள் மஞ்சரி.
“என்னங்க இப்படி சொல்றா ?”, கணவர் முகம் பார்த்துக் கேட்டார் காஞ்சனா.
“ஒரு வருஷத்துக்கும் மேலா பழகிருக்காங்க. இருக்கிற நிலைமை தெரிஞ்சு, விலகிக்க முடிவு பண்ணிருக்காங்க. அதுவே பெரிய விஷயம். விலகியிருக்காங்களான்னு பார்க்கலாம். அதுக்குள்ள நீ வேற யாரைக்கொண்டு வந்தாலும் அவ ஏடாகூடமா முடிவு எடுப்பா. அதனால கொஞ்சம் ஆறப் போடு.”
மகள் விஷயத்தில் பொறுமையைக் கைப்பிடிக்க முடிவு செய்தார் கைலாசம்.
ராஜேந்திரனோ, அவன் அலுவலகமே கதி என்றானான். இரவு பதினோரு மணிபோல் வீடு செல்வான்.காலை ஏழு மணிக்கு எழுந்தால், எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவான். வீட்டில் கோமதி கேட்கும் எந்தக் கேள்விக்கும் ஒரு தலையசைப்பு அல்லது ஒரு சில வார்த்தைகள். அதிலும் வேண்டாம் அல்லது ஒன்றுமில்லை மட்டுமே வரும். காலைக் காபி மட்டும் வீட்டில் வேண்டா வெறுப்பாய் குடிப்பான். மிச்ச நேரமெல்லாம் வெளியில்தான் சாப்பாடு.
கோமதி கத்திப் பார்த்துவிட்டார், கதறியும் பார்த்துவிட்டார். ஒன்றும் வேலைக்காகவில்லை. இவரால் முடியவில்லை என்று, மகளுக்கும் போன் செய்து ஒரு பாடு அழுது தீர்த்தார். வேதா ராஜேந்திரனை அழைத்து இது பற்றிப் பேச ஆரம்பிக்கவும்,
“இந்தப் ப்ரெச்சனையில் நீ வராதே வேதா. மஞ்சரி விக்ரமுக்கு சொந்தம். நீ யார் பக்கமும் நிக்க முடியாது. பழிய என் மேலயே போடு. இது பத்தி பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்னு சொல்லு.”, என்று வேதாவையும் தடுத்துவிட்டான்.
வேதா, கோமதியை போன் செய்து ஒரு பிடி பிடித்தாள்.
[the_ad id=”6605″]
“அந்த ஜோசியர் சொன்னாரேன்னு எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணாதான் ஆச்சுன்னு ஒத்தக் கால்ல நிண்ணே. எல்லாரும் உனக்கு வளைஞ்சி கொடுத்தோம். ஒரு வருஷம் அதுனால நாங்க பிரிஞ்சி கிடந்தோம். இப்ப ஜோசியர் வேண்டாம்னு சொல்லிட்டாருன்னு, அவங்களை பிரிக்கற. இத்தனைக்கும் மாலினியக்கா சொன்னாங்க, அவங்க வேற இரண்டு மூணு ஜோசியர்கிட்ட காமிச்சா, அவங்க தாராளமா பண்ணலாம்னு சொல்லிருக்காங்க. அப்பறம் அண்ணா என்ன பண்ணும் ? உன் சங்காத்தமே வேணாம்னு அதுவே போய் கல்யாணம் பண்ணாம, அந்த பொண்ணுகிட்டர்ந்து விலகிருக்குது. அதுனால அண்ணனைப் புடுங்காம இரு. அதுவே மனசு கஷ்டத்துல இருக்கு.”, அவள் அண்ணன் படும் வேதனையில் பட்டாசாய் படபடத்தாள்.
“என்னடி, உங்கப்பாவும், எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க சும்மா இருங்கன்னுதான சொன்ன, இப்ப என்ன பேச சொல்றன்னு கழண்டுகிட்டாரு. நீயும் இப்படி சொல்ற. என் புள்ள முகமே பார்க்க முடியலை என்னால.”, குரல் இரங்கிப்போய் வந்தது.
“எல்லாம் உன்னால வந்ததுதான். இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது ? குட்டி எழுந்துட்டான். நான் அப்பறம் பேசறேன்.“, என்று வைத்துவிட்டாள் வேதா.
கோமதி அடுத்து தன் அண்ணன் கணேசனிடம் தஞ்சமடைந்தார். விஷயத்தை முழுதுமாகக் கேட்டவர், ராஜேந்திரனை சந்தித்துப் பேசுவதாக வாக்களித்தார்.
மறு நாள் இரவு ஏழு மணி போல் அவன் அலுவலகம் சென்றார். அவன் பேசிக்கொண்டிருந்த க்ளையன்ட் செல்லும் வரை காத்திருந்தார்.
“என்ன மாமா இவ்வளவு தூரம் ? மெடீரியல் எதுவும் வேணுமா ? “, என்று விசாரித்தான்.
“ஏன் ராஜா, வேலை இருந்தாத்தான் வரணுமா ? உன்னை பார்க்க வரக் கூடாதா ?”
ஒன்றும் சொல்லாமல் சிரித்தவன், “சாப்பிடறீங்களா ? இல்லை காபி சொல்லவா ?”
“வேலை ஆச்சுன்னா கிளம்புடா. நாம வீட்டுக்கே போயிடலாம்.”, என்றார்.
“இல்ல மாமா. இனிதான் கணக்கு வழக்கெல்லாம் பார்க்கணும். வாரக் கடைசீல ஆடிட்டர் டைம் கொடுத்திருக்கார். அதுக்குள்ளே நான் எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணணும். வர லேட்டாகும்.”, அவர் வலையை லாவகமாகத் தவிர்த்தான்.
“ராஜா, நான் நேராவே கேக்கறேன். கோமதி எல்லாம் சொல்லுச்சு. கஷ்டம்தான் இல்லைங்கலை. பொருந்தலைன்னப்பறம் என்ன பண்ணமுடியும் ? அதுக்காக நீ வீட்டுக்கே போகாம, அப்பா அம்மா கூட பேசாம இருந்தா எப்படிப்பா ?”, கணேசன் அவர் தங்கைக்காகப் பரிந்து வந்தார்.
கோபம் தலைக்கேறினாலும், இழுத்துப் பிடித்து முகத்தில் ஒரு பாவனையும் காட்டாமல், “உங்க பொண்ணு லவ் பண்றேன்னு சொன்னப்போ பொருத்தம் பார்க்க சுந்தரமூர்த்தி ஜோசியரைப் பார்த்தீங்களா மாமா ?”, என்று கேட்டான்.
“ அது… மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு அது வழக்கம் இல்லைடா. கூட மனப் பொருத்தம் இருந்தாப் போறும்னு சொன்னாங்க. பார்க்கலை.”, அவன் எங்கே வருகிறான் என்று அவருக்குப் புரிந்தது.
“உங்க தங்கைகிட்டவும் சொல்லுங்க அதையே.”
“பொருத்தம் பார்க்கலைன்னா பரவாயில்லை, ஆனா பார்த்து, அவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டு, அதை மீறி எப்படிப்பா ?”
“பணக்கார சம்மந்தம்ன்னு தெரிஞ்சதும், பொண்ணு விருப்பம்தான்னு தெலுங்கு பையன்னாலும் சரின்னு கட்டி வெச்சீங்களே ? அந்த புத்திசாலித்தனம் உங்க தங்கைக்கு இல்லை. நீங்க சொல்லிக்குடுங்க.”
“ராஜா… “, மேலே எப்படி கொண்டுபோவது என்பது தெரியாமல் முழித்தார் கணேசன்.
“என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம, ஜாதகம் வாங்கிட்டுபோய் பாத்திருக்காங்க. சாயந்திரம் நான் வரதுக்குள்ள பொண்ணு வீட்டுக்கும் போன் பண்ணி, உங்க பொண்ணு ஜாதகத்துல தோஷம் அது இதுன்னு பேசிருக்காங்க. மறு நாள், அவங்க ரெண்டு ஜோசியரைக் கேட்டு , இல்லையே, தோஷம் இல்லையே ஜாதகம் பொருந்துதேன்னு சொல்லவும், வீட்டுக்கு வந்தவங்களையும் எடுத்தெறிஞ்சி பேசிருக்காங்க. பொண்ண பெத்தவரு, இப்படி ஒரு மாமியார் கிட்ட மாட்டினா, என் பொண்ணுக்கு வாழ்க்கை பூரா கஷ்டம்னு சொல்லி, பொண்ணு தர முடியாதுன்னு போயிட்டார். நீங்களே சொல்லுங்க மாமா ? இதுல என் விருப்பத்தை ஒரு நிமிஷம் யோசிச்சாங்களா ? அப்பா சொன்னதையாச்சம் கேட்டாங்களா ? எல்லாம் எனக்குத்தான் தெரியும்னு, அநியாயமா சிதறடிச்சிட்டாங்க என் சந்தோஷத்தை. எப்படி என்னை வீட்டுக்குப் போக சொல்றீங்க ? எரிச்சல்ல எதாச்சம் பேசிட்டா அப்பறம் எல்லாருக்கும் கஷ்டம். அதான் முடிஞ்சமட்டும் தவிர்க்கறேன். “, பொரிந்து தள்ளிவிட்டான்.
“இதைப் பத்தி பேசறது இதுவே கடைசி மாமா. மொதல்ல வேதாவை விட்டு பேச சொன்னாங்க. இப்ப நீங்க. இத்தோட நிறுத்திக்கச் சொல்லுங்க. ஒவ்வொருத்தரையா பஞ்சாயத்துக்கு கூப்பிட்டாங்கன்னா, நைட் தூங்க வரதுகூட வரமாட்டேன்னு சொல்லிடுங்க. என் ப்ர்ச்சனை எல்லாருக்கும் தெரிய வரதுல எனக்கு இஷடமில்லை. அந்த பொண்ணுக்கும் தேவையில்லாத தொந்தரவு குடுக்கும்.”, கட்டளையாக வந்தது ராஜேந்திரனின் குரல்.
அவன் இறுகிய முகம் பார்த்த கணேசன், இதில் தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று புரிந்து , அவன் தோள்தட்டி கிளம்பிச் சென்றார்.
கோமதியிடம் இதை சொன்ன கணேசன், “அவன் மனசு கொஞ்சம் ஆறட்டும். இப்போதைக்கு அவனை தொந்தரவு செய்யாதே.” என்று கைலாசத்தின் முடிவையே கோமதிக்கும் சொல்லிக்கொடுத்தார்.
ஆறப் போட்டால், மனசு மாறிவிடுமா என்ன ?
error: Content is protected !!