Skip to content
Post Views: 1,241
விழாக் காணுமே வானம் 07
வத்சலா ராகவன் – மது ஹனி
பிரிவின் வேர்களை இணைத்த நறுமலர்.
“நேத்து உங்க அம்மா அப்பாகிட்டே பேசினியா இல்லையா அர்ஜுன்? மறுநாள் காலையில் அர்ஜுனிடம் கேட்டுக்கொண்டிருந்தார் மகாலக்ஷ்மி.
Advertisement
“இல்ல அத்தை நான் பேசலை” பால்கனியில் அமர்ந்து கையிலிருந்த காபியை ருசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான் அவன்.
“உன் அம்மா என்கிட்டே ரொம்ப வருத்தப்பட்டா. தப்புப்பா இது”
“ஸ்வாதி முதலிலே அவங்க அம்மாவோட சேரட்டும். சந்தோஷமா ஆகட்டும். அப்புறம் பேசுவோம்” கையிலிருந்த கைப்பேசியை விட்டு பார்வை அகற்றாமல் வந்தது அவன் பதில்.
Advertisement
“ப்ச்..” சலித்துக் கொண்டார் அத்தை “அது இருக்கட்டும் இதுக்கு பதில் சொல்லு .ஒரு வருஷம் ஆச்சு அர்ஜுன் நீ அவங்களோட பேசி. அவர் சொல்ல
Advertisement
“வேணும்னா அன்னிவர்சரி கொண்டாடுவோமா?” படு அலட்சியமாக வந்தது அவன் பதில்.
“நீ என்கிட்டே அடி வாங்க போறே” அத்தையின் குரல் உயர கைப்பேசியை விட்டு நிமிர்ந்தான் அர்ஜுன்.
“அத்தை என்னாலே இந்த விஷயத்தில் இறங்கி வர முடியாதுன்னு. உங்ககிட்டே பல தடவை சொல்லிட்டேன். தேவை இல்லாம என்கிட்டே பேசி உங்க எனர்ஜியை நீங்க வீணாக்கிகாதீங்க.” காபியை முடித்துவிட்டு எழுந்து உள்ளே சென்று விட்டான் அர்ஜுன்.
Advertisement
உள்ளே ஹாலுக்குள் வந்தவனின் பார்வை அந்த பத்திரிக்கையின் மீது படிந்தது. அந்த டீபாயின் மீது கிடந்தது அது. வைஷாலியின் அந்த கவர் ஸ்டோரி வந்திருக்கும் பத்திரிக்கை.
அதை எடுத்து விழிகள் மலர ஆர்வமாக திருப்பினான் அவன்.
“வாவ்!” தன்னையும் அறியாமல் கூவின அவனது உதடுகள் “அத்தை இது பார்த்தீங்களா.”
“பார்த்தேன் பார்த்தேன் காலையிலேயே பார்த்தேன். எல்லாம் படிக்க நல்லத்தான் இருக்கு. அவ மலையிறங்கி வரணுமே” ஆதங்கத்துடன் சொன்னார் மகாலக்ஷ்மி.
அந்த அட்டைப் படத்தை பார்த்துக்கொண்டே நின்றிருந்தவன்
“வர மாட்டாளா அத்தை?’ ஏக்கம் பொங்க கேட்டான்
“எனக்கு கவலை எதுவமே இல்லைங்கிற மாதிரித்தான் சுத்தறேன். ஆனா ஒரு சில நேரம் மனசு அவளை ரொம்ப தேடுது” சொல்லியும் விட்டான் வாய்விட்டு.
அவன் மனநிலை நன்றாக தெரியும் அத்தைக்கு. அதனால்தானே அவனை விட்டு எங்கும் போகாமல் அவனுடனே இருக்கிறார். மெல்ல அவனருகில் அவனது தோள் மீது அத்தை கைவைக்க சட்டென சுதாரித்துக் கொண்டான்
“எங்க ரெண்டு பேருக்கும் ஸ்பான்சர் பண்ற கே வி க்ரூப்ஸ் சேர்மேன் பொண்ணுக்கு நாளைக்கு கல்யாண ரிசப்ஷன் அத்தை. பத்து நாள் முன்னாடி டெல்லிலே கல்யாணம் நடந்தது போக முடியலை. நாளைக்கு நாம ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுவோமா? பேச்சை திசைத் திருப்பினான் அர்ஜுன்.
“போவோமே” என்றார் புன்னகையுடன் “ஸ்வாதியும் வருவாளா?”
“வரலாம். சான்ஸஸ் ஆர் தேர்” புன்னகைத்தான் அழகாக.
அதன் பிறகுதான் அந்தப் பத்திரிக்கையில் இருந்த அந்த வரி அவனது கண்ணில் விழுந்தது.
‘ஸ்டோரி அண்ட் போட்டோகிரபி பை வைஷாலி’
வைஷாலி என்றால் அவள்தானோ?
மறுநாள் மாலை ஆறு மணி. அந்த திருமண வரவேற்பு நடக்கும் அந்த ஹோட்டலை நெருங்கினர் அத்தையும் அர்ஜுனும். தன்னுடைய ஒவ்வொரு இழையிலும் பகட்டையும் பிரம்மாண்டத்தையும் பிரதிபலித்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் அது. ஹோடேலின் செக்யுரிட்டிகள் மரியாதையாக கேட்டை திறந்து விட,
அவனது கார் அந்த வளாகத்துக்குள் வந்து கார் நிறுத்தும் இடத்தில் நுழைய அவர்களை சர்ரென முந்திக் கொண்டு அவன் காரை நிறுத்த தீர்மானித்த இடத்தில் சென்று நேராக நின்றது அந்த ஹோண்டா சிட்டி. அது ஸ்வாதியின் ஹோண்டா சிட்டியேதான். ஆனால் அதை ஓட்டிக் கொண்டு வந்தவன் அரவிந்தன். அவனருகில் ஸ்வாதி.
சடக்கென பிரேக்கை மிதித்து சமாளித்தான் அர்ஜுன். அந்தக் காருக்கு அருகிலேயே காலியாக இருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு அர்ஜுன் கீழிறங்க ஒரு விதமான அலட்சிய முறைப்புடன் அவனை பார்த்தபடியே காரை விட்டு இறங்கினான் அரவிந்தன்.
சர்வதேச விளையாட்டு போட்டிகள் கொண்ட களத்திலேயே வலம் வருபவனுக்கு இது போன்ற பல முறைப்புகளை கடந்து வரும் அனுபவம் உண்டு என்பதால் இது எல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.
அதற்கும் மேலாக அவனது காருக்கு குறுக்காகத்தானே தனது காரை கொண்டு வந்து நிறுத்தினான் அவன். அதில் என்ன பாதகம்? அரவிந்தனது வாழ்க்கைக்கு குறுக்காகவே சென்று தகர்க்கும் விதமாக நடந்த நிகழ்வுகளுக்கு இவன் என்ன பதில் சொல்வானாம்.
அதே நேரத்தில் ஸ்வாதியும் கீழிறங்க அவளே அறியாமல் அவளது கையிலருந்த கைப்பேசி தவறி விழுந்து அர்ஜுனின் காருக்கு அடியில் சென்று கிடந்தது. அவள் திகைக்க அடுத்த நொடி அதை எடுக்க கீழே குனிந்திருந்தான் அர்ஜுன். அவனது கையிலிருந்து அந்தக் கைப்பேசி நேராக அத்தையின் கைக்கு சென்றிருந்தது.
அதை வாங்கிக்கொண்டவர் அதை அவளிடம் கொடுத்து விடாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தார். அவளும் அசையாமல் நிற்க அர்விந்த் முன்னே வந்தான்.
“எப்படி இருக்கே அர்விந்த்?” என்றார் மகாலக்ஷ்மி.
“எனக்கென்ன ராஜா மாதிரி இருக்கேன்” என்றவன் “நீங்க எப்படி இருக்கீங்க” கேட்டபடியே அதை வாங்கிக் கொள்ள அவன் கை நீட்ட
“ஏன் உங்க மேடம் வந்து கேட்க மாட்டாங்களா?” என்றார் அவர் அவளை ஊடுருவிக் கொண்டே
“ஏன் நீங்க என்கிட்டே தர மாட்டீங்களா? என்றான் எடக்காக
“மாட்டேன். அவ வந்து என் போன் குடுங்கன்னு வாய் விட்டு கேட்டாத்தான் நான் அவகிட்டே கொடுப்பேன்” என்றார் அழுத்தமாக.
இப்போதும் அசைவில்லை பெண்ணிடத்தில்.. கரும்பச்சை சல்வாரில் அழகாக ஒளிர்ந்தவளை சற்று நேரம் இமைக்காமல் பார்த்தார் மகாலக்ஷ்மி.. அவளது உடையும் அவனது உடையும் இப்போதும் கூட பொருத்தமாகவே இருந்தது. இதை கவனிக்க தவறவில்லை அரவிந்தன்.
“இப்போ எதுக்கு அவளை வம்புக்கு இழுக்கறீங்க? இவ்வளவு வயசாச்சு உங்களுக்கு புரிஞ்சுக்க மாட்டீங்களா? பாவம் அவளே..” அரவிந்தன் முடிக்கவில்லை.
“நீ வாயை மூடறியா? நான் பார்த்து வளர்ந்த பையன் நீ எனக்கு அட்வைஸ் பண்ணாதே” என்றார் மகாலக்ஷ்மி பட்டென “இது எனக்கும் அவளுக்கும் நடுவிலே நடக்குற விஷயம். நீ குறுக்கே வராதே”
மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாளே தவிர ஸ்வாதியிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
‘அட என்ன அத்தை நீங்க..” அடுத்ததாக அர்ஜுன் வர
“அவனுக்கு சொன்னதுதான் உனக்கும் அர்ஜுன். தேவை இல்லாம என்கிட்டே வாங்கிக் கட்டிக்காதே. பேசாம வா.. அவ மட்டும் நான் கிளம்புற வரைக்கும் கேக்கலைன்னா இந்த ஐ போன் நெருப்புக்கு போயிடும் அவ்வளவுதான்” சொல்லிவிட்டு போனுடன் நடந்தார் அத்தை.
கத்தி முனையில் நிறுத்தி வைக்கபட்ட ஒரு உணர்வுடன் கோபத்தை உள்ளே இறுக்கிக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தாள் ஸ்வாதி.
நாட்டின் பிரபலமான பணக்கார முகங்கள் ஒன்று கூடியிருக்க பிரம்மாண்டமாக ஜொலித்துக்கொண்டிருந்தது அந்த மேடை. ஹோட்டலின் உள்ளே நுழைந்ததுமே அரவிந்தனின் முகமும் மனமும் பலவித மாற்றங்களை கொண்டது. அதை கவனிக்கவில்லை ஸ்வாதி.
கஷ்டப்பட்டு தன்னை இயல்புக்கு தள்ளிக்கொண்டு ஸ்வாதி அறிமுகப்படுத்தி வைத்தவர்களுடன் பேசலானான் அவன்.
தெரிந்த முகங்களின் புன்னகைகளும் வரவேற்புகளும் வழக்கமான நலம் விசாரிப்புகளும் அங்கே அரங்கேறிக் கொண்டிருக்க
“எவ்வளவு இருக்கணும் இந்த குஷ்புக்கு?” அர்ஜுனிடம் கிசுகிசுத்தார் மகாலக்ஷ்மி. “ஒரு வார்த்தை என்கிட்டே வந்து கேட்கிறாளா பார்? சொல்லிக்கொண்டே திரும்பியவரின் விழிகள் அரவிந்தன் ஸ்வாதி மீது விழ அவன் கரம் இவள் தோள்களை அணைத்திருக்க ஏனோ அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
எத்தனையோ முறை அர்ஜுன் ஸ்வாதியின் தோளில் கையை போட்டுக்கொண்டு பேசுவதை கவனித்திருக்கிறார் மகாலக்ஷ்மி. அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது ஏன் துளிர்க்கிறது? அவருக்கே புரியவில்லை. அரவிந்தன் குணம் பற்றி நிறைய கேள்வியுற்றதாலா?
அவர் யோசித்துக் கொண்டே நின்றிருக்க அப்போது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது
“ஹாய் அர்ஜுன்” இருவரும் திரும்ப அங்கே முகம் முழுவதும் சந்தோஷ மின்னல்களுடன் நின்றிருந்தாள் அந்தப் பெண்.
“ஹாய் அர்ஜுன்”
“ஓ ஹாய்“ கை குலுக்கினான் அர்ஜுன். அவள் முகம் பார்த்தவுடனேயே நேற்று காலையில் எழுந்த சந்தேகம் தீர்ந்திருந்தது அவனுக்கு. ‘அவள் அவன் நினைத்த அதே வைஷாலிதான்!’
அர்ஜுன் புன்னகைத்த அதே நேரத்தில் அவள் முகத்தில் சில மாற்றங்கள் வந்து போனதை கவனிக்கத் தவறவில்லை. அவனது முகம் அவளுக்கு எந்தெந்த நிகழ்வுகளை நினைவு படுத்தி இருக்குமென தெரியுமே அவனுக்கு.
அவள் திருமண வரவேற்பு முடிந்த அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையிலேயே இதே ஹோடேலில் நடந்த அந்த சம்பவம் நடக்காமலே இருந்திருந்தால் எல்லாம் சரியாகத்தானே நடந்திருக்கும்.
அன்று இந்த ஹோடேலுக்கு செல்வோம் என முடிவெடுத்தது இவன்தான். அதை இவன் செய்யாமலே இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும்’ இவன் யோசித்துக்கொண்டிருக்க
அடுத்த சில நொடிகளில் சுதாரித்து தன்னை புன்னைகைக்குள் தள்ளிக் கொண்டாள் அவள்.
“எப்படி இருக்கீங்க?” அவனிடத்தில் வெகு இயல்பாக நலம் விசாரித்தாள் பெண்.
“சாரி வைஷாலி” நடந்த நிகழ்வுகளுக்காக அவளிடம் மன்னிப்புக் கூட கேட்டு விடத் தோன்றியது. ஆனால் அது அவளது பல வலிகளை முன்னிழுத்து கேலிப் பேசுமே. அதனாலேயே அதைப் பற்றி வாய் திறக்கவில்லை இவன்.
எங்கேயோ பார்த்தாக தோன்றி சற்று நேரத்தில் அவள் யாரென்ற நினைவு மெல்ல எழுந்தது மகாலக்ஷ்மிக்கு
அவள் அரவிந்தனின் மனைவி.
மற்றவர்களின் பார்வைக்குதான் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் மிக பாந்தமாக உடுத்தி, காதோடு ஒட்டிய காதணிகளும் கழுத்தோடு ஒட்டிய சின்ன சங்கியிலும் என அழகாக இருந்த அவளது நேர்த்தியும் மகாலக்ஷ்மியை மொத்தமாக இழுத்துப் போட்டது.
அவளது பேச்சில் இயல்பாக ஒளிர்ந்தது ஒரு புத்திசாலித்தனம். அவளது பேச்சிலும் சிரிப்பிலும் அந்த இடமே கலகலத்து போனதைப் போல் இருந்தது.
டென்னிஸ் பற்றிய செய்திகளை விரல் நுனியில் வைத்திருந்தாள் பெண். அவனது ஒவ்வொரு மேட்சிலும் தான் ரசித்த சின்ன சின்ன நுணுக்கங்களை மிக அழகாக பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
‘இப்படி ஒரு பெண்ணை எப்படி இந்த அரவிந்துக்கு பிடிக்காமல் போனது?’ குடைந்தது மகாலக்ஷ்மிக்கு. “ஒரு வேளை இந்த புத்திசாலித்தனத்தைதான் தாங்கிக் கொள்ள முடியவில்லயோ அவனால்? இருக்கும் அப்படிதான் இருக்கும். அவனுக்கு எல்லா இடத்திலும் தானே முன்னிலையில் இருக்க வேண்டும்”
“இந்த வீக் ஸ்போர்ட்ஸ் வீக்லி லே என்னோட கவர் ஸ்டோரி படிச்சீங்களா?” என்றாள் உற்சாகம் பொங்க.
“எஸ்” புன்னகையுடன் தலையசைத்தான் அர்ஜுன்.
“ஸ்வாதி வரலை?” அவள் கேட்க அவன் ஸ்வாதியை விழிகளாலே சுட்டினான்.
“இருங்க ஒரு நிமிஷம். இதோ வரேன்” அவசரமாக அவர்கள் அருகில் சென்றவள் அப்படியே நின்று விட்டாள்தான். அவள் ஸ்வாதியை அழைத்த மாத்திரத்தில் அரவிந்தனும் உடன் சேர்ந்து திரும்ப சில நொடிகள் உறைந்து நின்றாள் பெண்.
அவள் யாரென சட்டென புரிந்துக் கொள்ள அவர்கள் இருவரின் உடல் மொழியும் ஸ்வாதிக்கு துணை புரிந்தன. அவள் பெயரை சட்டென நினைவுக்கு கொண்டு வந்து கொண்டு
“ஹாய் வைஷாலி” கை குலுக்கி இருவரையும் சற்றே தரை இறக்கினாள் பெண்.
உற்சாகம் என்பதே வைஷாலியின் தனிப் பட்ட அடையாளம். அடுத்த சில நொடிகளில் தன்னை உற்சாக ஏரியில் தள்ளிக்கொண்டு அவளே எதிர்ப்பார்க்காத நொடியில் ஸ்வாதியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அர்ஜுனின் அருகில் நிறுத்தி இருந்தாள் அவள்.
மெல்ல நடந்து அவர்கள் அருகில் நின்றான் அரவிந்த். அது ஏனோ வைஷாலி அர்ஜுனுடன் பேசிக் கொண்டிருப்பதில் இவனுக்கு வலித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை இவன்.
‘நீங்க ஸ்போர்ட்ஸ் வீக்லிலே என்னோட கவர் ஸ்டோரி படிச்சீங்களா ஸ்வாதி?” வைஷாலி கொக்கி போட
“ஓ உங்களோடதா அது கிரேட்” உதடுகளில் புன்னகையை பொருத்திக் கொண்டு சொன்னாள் ஸ்வாதி.
“என்ன கிரேட். பதில் சொல்லுங்க. இந்த ஜனவரிலே ஆஸ்திரேலியன் ஓபன். அதுக்கு டைம்ஸ் அப். அட்லீஸ்ட் ஜூன்லே விம்பிள்டன் ஆடுவீங்களா ரெண்டு பேரும். சொல்லுங்க சொல்லுங்க சீக்கிரம் சொல்லுங்க” அவளது குரலின் ஒவ்வொரு துளியிலும் உற்சாக துகள்கள்.
மெல்லத் திரும்பி ஸ்வாதியின் முகம் பார்த்தான் அர்ஜுன்.
“உங்க ரெண்டு பேர் பத்தியும் ஊருக்குள்ளே எவ்வளவு காசிப்ஸ் தெரியுமா? ரெண்டு பேருக்கு நடுவில் ஏதோ பெரிய சண்டையாமாம். ஈகோ கிளாஷ், லவ் அது இதுன்னு என்னவோ பேசிக்கறாங்க. ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் மறுபடியும் பட்டையை கிளப்ப வேண்டாமா? சொல்லுங்க சொல்லுங்க கமான் கமான்”
அவளது துருதுருப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை மகாலக்ஷ்மியால். அங்கிருந்து சற்றே விலகிச் சென்று நின்றுக் கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்
அவனை பார்க்கும் போது நிஜமாகவே பற்றிக் கொண்டு வந்தது மகாலக்ஷ்மிக்கு “பொறாமை பிடித்த ஆண் வர்கத்தின் ஒரு அடையாளம் இந்த அரவிந்த்” மனதிற்குள் திட்டிக் கொண்டார் அவனை..
“கமான் அன்ஸர் மீ கைஸ்” இது வைஷாலி.
“இல்ல இப்போதைக்கு இது மாதிரி ஐடியா இல்லை” மெல்ல சொன்னாள் ஸ்வாதி.
“ஏன் ஏன் இல்லை. அப்போ நிஜமாவே உங்க ரெண்டு பேருக்கும் சண்டைன்னு ஒரு கவர் ஸ்டோரி போட்டுடுவேன் அப்புறம். ஒகே வா”
பதில்லை இருவரிடமிருந்தும்
“உங்க ரெண்டு பேரையும் இங்கே சேர்த்து பார்த்ததே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடினா உங்க ஃபேன்ஸ் எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷமா இருக்கும். முதலிலே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கறேன். ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க. ஸ்வாதி தோளிலே கை போடுங்க அர்ஜுன். கமான் கமான்”
ஒரு வருடமாக அவர்கள் குடும்பத்தில் யாரும் செய்ய முடியாததை இந்தப் பெண் சில நிமிடங்களில் சாதித்துக் கொண்டிருந்தாள். அர்ஜுன் யோசிக்க ஸ்வாதி தயங்க அவள் கைப் பிடித்து இழுத்து அர்ஜுனின் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு அவங்க தோளிலே கை போடுங்க அர்ஜுன் ஆணையிட்டாள் பெண்.
தயங்கித் தயங்கித்தான் அவள் தோளில் கை வைத்தான் அர்ஜுன். அவள் உடல் மொத்தமும் ஒரு முறை சிலிர்த்து நின்றது. அவனோடு சற்றே ஒட்டித்தான் நின்று கொண்டாள் என்று சொல்ல வேண்டும்.
“ஸ்மைல் ப்ளீஸ்” அதட்டியவள் அவர்கள் இருவரையும் சில முறைகள் தனது காமெராவில் பதித்துக் கொண்டாள். அடுத்த நொடி அர்ஜுனை விட்டு சடக்கென விலகிக் கொண்டாள் ஸ்வாதி.
அடுத்த வாரத்தோட நாம எல்லா கிசுகிசுக்கும் ஃபுல் ஸ்டாப் வைக்கிறோம்” இது வைஷாலி.
இயல்பாக திரும்பிய மகாலக்ஷ்மியின் விழிகளில் அரவிந்த் விழ அவன் முகத்தில் எந்த விதமான பாவங்கள் இருந்தன என்பதை கணிக்கவே முடியவில்லை அவரால்.
“ராஷஸன்” திட்டிக்கொண்டார் அவனை. “இருவரின் நெருக்கம் பிடிக்காமல் வயிறெரிந்து கொண்டிருப்பான் அவன்” சொல்லிக் கொண்டார் தனக்குள்ளே.
“சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” புகைப்படம் எடுத்து முடிந்ததும் சடக்கென விலகி நின்ற இருவரையும் பார்த்துக் கேட்டாள் வைஷாலி.
ஸ்வாதிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ‘இன்னும் பதினைந்து நாட்கள் இங்கேதான் இருக்கப் போகிறேன்’ என்று அரவிந்த் சொன்னானே அதற்குள் அம்மா அவளுடன் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் சொன்னாளா தெரியவில்லை.
“ஜனவரி 12த் எங்க ஈ.ஸி.ஆர் பீச் ஹவ்ஸில் ஒரு ப்ரெஸ் மீட். அதிலே நான் விளையடுறேனா இல்லையானு சொல்றேன்” அறிவித்தும் விட்டாள் அவள்.
“நான் விளையாடுகிறேனா இல்லையா என்றால்?’ புரியவில்லை அர்ஜுனுக்கு.
“ரெண்டு பேரும் வரணும் அந்த ப்ரெஸ் மீட்கு. நான் எல்லா அர்ரேஞ்மென்ட்ஸ்ம் பண்ணிடுவேன்” என்றாள் வைஷாலி உற்சாகமாக. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட அசைவில்லை அரவிந்தினிடத்தில்
அதே நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் வந்து நின்றது லண்டனில் இருந்து வந்த அந்த விமானம்.
“அர்ஜுன் ஸ்வாதி இருவரும் பிரிந்த பிறகு ஒரு வருடம் கழித்து இப்போதுதானே இந்திய மண்ணில் கால் வைக்கிறேன்” யோசித்தபடியே கையிலிருந்த ஊன்றுகோலை பிடித்தபடியே விமானத்தை விட்டு இறங்கியது அந்த உருவம்.
இங்கே அடுத்து மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்த வேண்டிய நேரம். அதற்கொரு வரிசை காத்திருந்தது. எப்படி நிகழ்ந்ததோ அரவிந்தின் பின்னாலேயே நின்றிருந்தாள் வைஷாலி. அவள் மனம் கல்லாய் போய்க் கிடந்தது. அவளது வரவேற்பும் இதே ஹோட்டலில் தானே நிகழ்ந்தது.
இதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட நினைவில்லாதவனாக ஸ்வாதியுடன் அளவளாவி சிரித்துக் கொண்டிருந்தான் அரவிந்த். ஒரு கட்டத்தில் மகாலக்ஷ்மிக்கும் கூட இந்த விஷயம் நினைவுக்கு வந்து விட இருவரையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் அவர். அவரும் கூட இவர்கள் வரவேற்புக்கு வந்திருந்தாரே..
மேடையேறியதும் வைஷாலியின் உடலில் அப்படி ஒரு நடுக்கம். அதை புரிந்து கொண்டவாராக அவள் தோள்களை அணைத்து அவளை திசைத் திருப்ப ஏதேதோ கதைகளை பேசிக் கொண்டிருந்தார் மகாலக்ஷ்மி. அவள் வருத்தப்படுவதை ஏனோ பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை அவரால்.
“கிராதகன் இந்த அரவிந்த்” மனதிற்குள் திட்டிக்கொண்டார் பலமுறை.
மேடையேறினர் அனைவரும் எல்லாரும் மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்க, சில நொடிகள் வைஷாலியின் அருகில் நின்ற அரவிந்த் சடக்கென திரும்பி அவளின் கண்களுக்குள் பார்த்தான். அவளது உடலெங்கும் மேளதாளங்கள்.
அடுத்த சில நொடிகளில் மேடையை விட்டு இறங்கி அவளது பார்வையை விட்டு விலகியிருந்தான் அரவிந்தன்.
அடுத்ததாக அனைவரும் இரவு உணவுக்காக கூடியிருந்தனர். பொதுவாக இது போன்ற ஐந்து நட்சத்திர ஹோடேல்களில் பஃபே முறையில் நடக்கும் விருந்துக்கு மாறாக தலை வாழை இலையில் உணவு பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தது எல்லாருக்கும். அந்த கம்பனியின் சேர்மனுக்கு எப்போதும் இதுதான் விருப்பம் என பேசிக் கொண்டனர் அங்கே.
அரவிந்த் ஸ்வாதியின் அருகில் அமரப் போக அவர்கள் இருவருக்கும் இடையில் நுழைந்து அமர்ந்துக் கொண்டார் மகாலக்ஷ்மி. அர்விந்த் அர்ஜுனின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
மகாலக்ஷ்மி எப்போதும் உபயோகப் படுத்தும் பெர்ஃபியூமின் மனம் ஸ்வாதியின் சுவாசத்தை நிறைத்தது. கண்களை மூடிக் கொண்டாள் பெண். இன்னமும் அவரிடமிருந்து கைப்பேசியை கேட்டு வாங்க அவளது மனம் ஒப்பவில்லை.
அவரது கைப்பையினுள்ளே இரண்டு முறை அவளது கைப்பேசி ஒலித்து ஓய்ந்தது. அப்பாவாக இருக்குமோ? பாட்டியாக இருக்குமோ? வேறே தோழிகள் யாராக இருக்குமோ? மனம் பல கேள்விகள் கேட்டாலும் அசையாது அமர்ந்திருந்தாள் நமது டென்னிஸ் வீராங்கனை.
“அத்தனை ஈகோவாடி பெண்ணே உனக்கு?” ஒரு முறை அவள் முகம் பார்த்து திரும்பிக் கொண்டார் மகாலக்ஷ்மி.
உணவுகள் பரிமாறப் பட ஒரு கட்டத்தில் பனீரால் செய்யபட்ட ஒரு உணவு வகை பரிமாறப் பட அவரே அறியாமல் வெகு இயல்பாக அவள் இலைக்கு நேராக சென்றிருந்தது அவர் கரம். அது அவளுக்கு பரிமாறப் பட வேண்டாம் என மறுத்திருந்தார் அவர்.
அவளுக்கு பனீர் சேர்த்த உணவு வகைகள் பிடிக்காதே. அடுத்த நொடி தான் செய்ததை உணர்ந்து அவர் சடக்கென விலகி அமர்ந்துக் கொள்ள இவளுக்குள் சிலிர்த்தது. இன்னும் இதைக் கூட நினைவு வைத்திருக்கிறாரே இவர்.
ஆனாலும் இன்னமும் அவரிடம் பேசி விடவில்லை அவள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு கார் நிறுத்தத்துக்கு வந்திருந்தனர். இன்னமும் கைப்பேசியை கேட்கவில்லை அவள். தனது காரின் மீது சாய்ந்து கொண்டு அவள் நின்றிருக்க காருக்குள் சென்று அமர்ந்துவிட்டிருந்தார் மகாலக்ஷ்மி.
அர்ஜுன் காரை கிளப்பிய நேரத்தில் என்ன தோன்றியதோ “இரு அர்ஜுன்” என்றபடியே காரை விட்டு இறங்கி ஸ்வாதியின் அருகில் வந்தார் அவர். எப்படி வந்ததோ அவர் கண்களில் கண்ணீர் சேர்ந்து விட்டிருந்தது.
“உனக்கு நான் எவ்வளவு செஞ்சிருப்பேன். வாய் திறந்து என்கிட்டே பேச முடியலை இல்லையா உன்னாலே?” குரல் நடுங்கியது அவருக்கு. உடல் நடுங்கியது இவளுக்கு “இந்த உலகத்திலே இருக்கிற எல்லா உறவையும் விட உனக்கு உன் ஈகோதான் முக்கியம் அப்படித்தானே? ரொம்ப சந்தோஷம்”
பேச்சில்லை பெண்ணிடத்தில்.
“இந்தா பிடி, நீயும் உன் போனும்” அதை அவள் கையில் திணித்து விட்டு காருக்குள் வந்து அமர்ந்து விட்டிருந்தார் அத்தை “போலாம் அர்ஜுன்”
சிலையாகிப் போய் நின்றிருந்தாள் ஸ்வாதி. அவர் கண்ணீர் அவளை என்னமோ செய்து கொண்டிருந்தது.
கார் அவளை கடந்த அந்த மூன்று நொடிகளில் ஜன்னலின் வழியே அவள் முகம் பார்த்த அர்ஜுன் இடம் வலமாக தலை அசைத்தான். நீ செய்வது பெரிய தவறு என அழுத்தமாக உரைத்தது அந்த தலையசைப்பு. அவன் விழிகளில் அப்படி ஒரு தீவிரம்.
அவனுடன் ஆயிரம் மனஸ்தாபங்கள் இருந்த நாட்களில் கூட அவன் இத்தனை அழுத்தமாக தனது மனதை வெளிப்படுத்தியது இல்லை. இப்போது அந்த தலையசைப்பில் ஆடிப் போய் நின்றிருந்தாள் ஸ்வாதி.
உணர்ச்சிகளின் பிடியில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தார் மகாலக்ஷ்மி. கார் நகர்ந்து கொண்டிருந்தது.
“அட விடுங்க அத்தை. அவளை பத்தி தெரியாதா நமக்கு”
“மனசு தாங்கலை அர்ஜுன்’ கண்ணீரை துடைத்துக் கொண்டார் அவர்.
“நான் ஒண்ணு சொல்லவா? இதெல்லாம் அவங்க அம்மாகிட்டேர்ந்துதான் வந்திருக்கு அப்படின்னு நான் சொன்னா உங்களாலே மறுக்க முடியுமா?”
“அப்படி எல்லாம் இல்லை அர்ஜுன்” அவசரமாக சொன்னார் அவர்
“நான் சொல்றது உண்மை அத்தை. நீங்க யோசிச்சு பாருங்களேன். இப்போ அவங்க அம்மா போன் அவகிட்டே போயிருந்து அவங்க வீட்டுக்கு வந்தாதான் நான் போன தருவேன்னு அவ சொன்னா அவங்க போயிடுவாங்களா என்ன?”
பதில் பேச முடியாமல் அவன் முகம் பார்த்தார் மகாலக்ஷ்மி.
error: Content is protected !!