Skip to content
Post Views: 1,093
விழாக் காணுமே வானம் 09 (02)
“சொ.. சொல்லுங்க”
“நான் யாருன்னு தெரியுதா?” பால்கனியின் ஓரத்தில் இருந்த தொட்டியில் பூத்திருந்த சிகப்பு நிற செம்பருத்தி மலரை விரல்களால் வருடிக் கொண்டே கேட்டான் அரவிந்த்.
“தெரியாம என்ன?” சற்றே இறங்கிய குரலில் கேட்டாள் வைஷாலி.
Advertisement
‘அப்படியா குட்” என்றவனின் வார்த்தைகுள்ளே ஒளிந்திருந்த அர்த்தங்கள் ஓராயிரம்.
மறுமுனையில் மௌனம் படர்ந்தது.
இல்ல என் நம்பர் கூட உன்கிட்டே இருக்கான்னு கேட்டேன்.” இவனே தொடர்ந்தான்.
Advertisement
“இருக்கு. நாம ரிசப்ஷன் முடிஞ்ச செகண்ட்டே அன்னைக்கு நாம அந்த ஹோட்டல்க்கு டின்னருக்கு போகணும்ன்னு நீங்க போன் பண்ணீங்களே அப்போ சேவ் பண்ணி வெச்சேன். அதுக்கு அப்புறம் இப்போதான் போன் பண்றீங்க”
Advertisement
அந்த வார்த்தையில் சற்றே ஏக்கம் தொனித்ததா இல்லை இவனுக்குத்தான் அப்படித் தோன்றியதா தெரியவில்லை.
“போன் பண்ணினேனா. எனக்கு ஞாபகமே இல்லை”. “அங்கே இருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டு அந்த மலர் இருந்த கிளையை தனது பக்கமாக சற்றே சாய்த்துக்கொண்டான் அரவிந்த்
“போன் பண்ணி என்ன சொன்னேன்?” அத்தனையும் நினைவிருந்தும் வேண்டுமென்றேதான் கேட்டான் அவன்.
Advertisement
“இல்ல உன்கிட்டே நிறைய பேசணும். நைட் டின்னர் போலாம் ரெடியா இருன்னு சொன்னீங்க. அவ்வளவுதான்”
“சரி அதுக்கு அப்புறம் ?” தெரிந்து கொண்டேதான் கொக்கி போட்டான் அரவிந்த்
“அதுக்கு அப்புறம் ஒண்ணுமில்லை” மெல்ல சொன்னாள் அவள்.
“ஒண்ணுமே இல்லையா?” சற்றே ஆதங்கம் தங்கிய குரலில் கேட்டான் அவன்
அதனோடு செம்பருத்தி மலரை தன்பக்கமாக இழுத்து மெலிதாக முத்தமிட்டான் அரவிந்த். அந்த சத்தம் எதிர்முனையில் கேட்டிருக்கவில்லை.. இவன் மனதின் ஏக்கங்கள் அவளுக்கு புரிந்திருக்கவும் நியாயமில்லை.
“ஹலோ அரவிந்த்” அழைத்தாள் அவள்
.“ஆங் சொல்லு அப்புறம் வேறே என்ன விஷயம்?” கேட்டான் இயல்பாக.
“நீங்கதானே திடீர்னு போன் பண்ணீங்க? என்ன விஷயம்ன்னு நீங்கதான் சொல்லணும்”
“நானா?” என்றவனின் குரலில் கொஞ்சம் கோபம் விரவியது “அந்த கடங்காரன் போன் பண்ணான். அவனுக்கு உன் நம்பர் வேணுமாம்.”
“யாரு?”
“அதான் அந்த அர்ஜுன். ராஸ்கல்” அவன் கொஞ்சம் கொதிப்புடன் சொல்ல
“பாவம் அவரை ஏன் திட்டறீங்க. அவர் என்ன தப்பு செஞ்சார்” அவளும் அறியாமல் கேட்டு விட்டாள் வைஷாலி. சில நொடிகள் இறுகிப் போனான் அரவிந்தன் உள்ளுக்குள் கொஞ்சம் சிதறிப் போனான் என்று சொல்ல வேண்டும்.
“பாவம்” என்ற ஒரு வார்த்தை அவனுக்குள் அப்படி ஒரு ஏமாற்றத்தை விரவ செய்திருந்தது.
‘இன்னமும் இத்தனை நடந்தும் அந்த அர்ஜுனும் அவன் குடும்பமும் உனக்கு பாவமா பெண்ணே. அது சரி நான்தான் ஏதோ ஒரு உந்துதலில் உன்னுடன் பேச விழைந்தேன். நீயும் அப்படித்தான் யோசிக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?”
‘ஹலோ என்னாச்சு அரவிந்த்” அவள் அழைக்க
“ஸாரிம்மா” என்றான் அவன்.
“அய்யோ..ஏன்..?
“இல்லமா. அன்னைக்கு ஹோட்டல் போகும் முன்னாடி நான் ஏதாவது தப்பா செஞ்சிருந்தா ஸாரி” அவன் எதை குறிப்பிடுகிறான் என்று நன்றாக புரிந்தது வைஷாலிக்கு
“அர்விந்த் நான்..”
“இல்லைமா. இதுக்கு உன்கிட்டே சாரி கேட்கணும்னு நான் ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன்”
“எனக்கு ரொம்ப..’
“இப்போ உனக்கு அர்ஜுன் நம்பர் வேணுமா?” அவளை முடிக்க விடாமல் கேட்டான் அரவிந்த்.
“அது இருக்கு என்கிட்டே. ஆனா நீங்க ஏன்?”
“ஓ… நம்பர் இருக்கா” அவன் குரலில் அளவற்ற ஏமாற்றம்.
“குட் நைட் மா” அடுத்த நொடி துண்டித்திருந்தான் அழைப்பை.
அவனது வாழ்வின் அடுத்தக் கட்டம் என்ன புரியவில்லை அவனுக்கு.
“லவ் யூ ஷாலு” சொல்லிக் கொண்டே கைப்பேசியை கட்டிலின் மீது வீசினான். அடி மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அவை. “நான் உன்னை விரும்பிகிறேன் பெண்ணே. இந்தக் காதலினால் நான் எதை இழக்கப் போகிறேன். உன்னையா? அல்லது மொத்தமாக என்னையேவா?
எது எப்படியானாலும் அன்று நான் உனக்கு கொடுத்த வாக்கு கொடுத்ததுதான். உன் மகிழ்சிக்காக எதையும் விட்டுத்தர நான் தயார்.
அதே நேரத்தில்
அந்த பீச் ஹவ்ஸில் தனது உதவியாளன் பூபாளனுடன் நின்றிருந்தான் அவன். அவனுக்கு பிடித்தமான நிறமான வெளிர் நீல நிற டி ஷர்டும் அடர் நீல ஜீன்சும் அவனது அழகையும் கம்பீரத்தையும் இன்னமும் அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
பிராண வாயுவை விட அதிகம் வெற்றியையே சுவாசித்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபன் அவன். அவனது இத்தனை வருட வாழ்க்கையில் அவன் நினைத்த எதை அடையாமல் விட்டிருக்கிறான்
கடலலைகள் கூட அவன் அருகில் வர பயந்து அவன் நின்றிருந்த இடத்திலிருந்து சில அடிகள் முன்பாகவே திரும்பிக் கொண்டிருந்தன. தங்கள் மீதும் ஆசைப் பட்டு தங்களையும் அவன் சொந்தமாக்கி கொண்டால் என்ன செய்வதாம்.
யாருமே மோதத் துணியாத அவன் மீது கடல் காற்று மோதியது. அவன் கேசத்தை கலைத்துப் போட்டது. காற்றின் விளையாட்டை அவன் ரசிக்கவில்லை. ஏன் எந்த விளையாட்டையும் இதுவரை அவன் ரசித்ததேயில்லை.
‘அப்படியா நீ ரசித்ததேயில்லையா’ அவன் மனம் அவனை பரிகாசம் செய்தது. மனம் எழுப்பிய கேள்வியை அவனால் அலட்சியம் செய்ய முடியவில்லை.
அவன் விக்ரம்!
ஒரு வருடம் கழித்து லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கிறான் விக்ரம். அவனிடம் இருக்கும் ஒரே குறை அவனது காலில் இருக்கும் ஒரு சிறு ஊனம்.
பிறவியிலேயே அவனது வலது கால் சற்றே வளைந்து இருக்க அவன் நடக்க ஊன்றுகோலின் துணை எப்போதும் தேவைப் படும்.. இதனாலேயே இவனை பெற்றவர்களுக்கு கூட இவன் மீது பாசம் அதிகம்.
“அது எப்படி மா உன் வயித்திலே பிறந்தவங்க மத்தவங்க இப்படியா இருக்காங்க. என்னை மட்டும் ஏன் இப்படி படைச்சே” என அவன் அம்மாவை கலங்க வைத்த நாட்களும் உண்டு.
“நீ உள்ளே போ பாலா. நான் அப்புறம் கூப்பிடறேன்” பூபாலனிடம் சொல்லிவிட்டு கையிலிருந்த அந்த சிறு ஊன்றுகோலை ஊன்றியபடியே நடந்து கொண்டிருந்தான் அவன்.
தாய் தந்தையின் பாசம், சகோதரனின் அன்பு, நட்புகளின் அரவணைப்பு என அனைத்தையும் சில வருடங்கள் முன்னால் வரை அவன் அலட்சியம் செய்து வந்திருக்கிறான்.
‘பாசமாம் பாசம். நான் இப்படி குறையுள்ளவனா இருக்கேன்னு பரிகாசம்’ அவன் அனைத்தையுமே பரிகாசமாகவே கருதினான்.
ஆனால் இப்போது?
அவன் குறையினால் மற்றவர் அவனுக்கு விட்டுக் கொடுப்பதை அவன் விரும்பவில்லை. தானாக அனைத்தையும் அடைய வேண்டும் என்ற வெறி அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது.
எப்படி காய்களை வீழ்த்தாலம் என சில மாதங்கள் முன்னால் வரை அவன் தீவிரமாக மனதில் ஆலோசித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனது கவனத்தை கலைக்க கங்கணம் கட்டிக் கொண்ட காற்று அங்கே டீபாய் மேலிருந்த பத்திரிக்கைகளை பிரித்து விளையாடியது.
கோபமாக திரும்பியவன் அந்தப் பத்திரிக்கைகளை எடுத்து வீசிவிடவே கையில் எடுத்தான்.
அந்த ஸ்போர்ட்ஸ் வீக்லியின் அட்டைப்படத்தின் கீழே இருந்த சிறு வாசகத்திற்கு எரிமலையை தணிக்கும் சக்தி இருந்ததா! அவன் கைகளுக்கு விலங்கிடும் துணிவு கொண்டதா!
பத்திரிக்கையை டீபாயின் மேலே வைத்தவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை இறுக மூடினான்.
மறுபடி மறுபடி அவனது மனக்கண்ணில் அந்த ஸ்போர்ட்ஸ் வீக்லிதான் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.
‘இஸ் தி சாம்பியன்ஷிப் கப் வெயிண்டிங் பார் தி விக்டோரியஸ் பேர்!!!” அவனது கணக்குப் படி எல்லாம் நடந்து முடிந்து ஒரு வருடம் முடிந்திருக்கிறது.
அடுத்து என்ன? நிமிர்ந்து வானத்தை பார்த்தான் அவன். அங்கே மின்னிக் கொண்டிருந்தன நீல நிற நட்சத்திரங்கள். அவனது உயிர் தோழமைகள்
ஒரு முறை அந்த கடற்கறை வீட்டின் அழகை விழிகளால் உள்வாங்கிக் கொண்டவனின் மனக் கண்ணில் ஸ்வாதி வந்து போனாள்.’
ஸ்வாதி!!! அவனது வாழ்க்கையில் அவனுக்கு நேருக்கு நேராக நின்று சவால் விட்ட ஒரே பெண்!
“அவளிடம் பேச வேண்டும். ரசிக்க வேண்டும் அதை. அவளது கோபத்தையும் ஆற்றாமையையும் ரசித்தே ஆகவேண்டும் அவனுக்கு. அவனது விரல் நுனி அவளது எண்ணை மிக லாவகமாக தொட்டிருந்தது.
அங்கே பல்வேறு யோசனைகளுடன் கைப்பேசியை துழாவிக் கொண்டேதான் அமர்ந்திருந்தாள் ஸ்வாதி. இப்போதுதான் அவள் வைஷாலியுடன் பேசி முடித்திருந்தாள். அது அவளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சியை பரப்பியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
விக்ரமின் பெயருடன் அவளது கைப்பேசி பளிச்சிட்டதும் அந்த மகிழ்ச்சி மொத்தமும் காற்றில் கலந்து பறந்தது.
‘இவன் எதற்கு என்னை அழைக்கிறான் இப்போது?” அவளது கொதிநிலை பல மடங்கு உயர்ந்தது.
இந்த கோபத்தில் மட்டும் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரியான ஜோடிதான்..
“ஏற்கப் போவதில்லை. அவனது அழைப்பை நான் ஏற்கப் போவதில்லை.. அழைத்து அழைத்து வெறுத்து போகட்டும் அவன்” பற்றி எரிந்தது அவளுக்கு.
ஒரு கட்டத்தில் அவள் கைப்பேசியை அணைத்துவிட எரிமலையின் வடிவமானான் அவன். அவனையே பார்த்துக் கொண்டிருந்தன வானத்தில் இருந்த நட்சத்திரங்கள்.
பல பொருட்கள் அதிகமாக சூடேறும் போதும் அதன் வெப்பம் அதிகரிக்கும் போதும் சிகப்பு நிறத்தை அடையும். ஆனால் வானத்தை பொறுத்தவரை சற்றே குறைவான வெப்பநிலையை பெற்ற நட்சத்திரங்கள் சிகப்பு நிறத்தில் ஒளிரும் எனவும் நீல நிறத்தில் ஒளிரும் நட்சத்திரங்களே அதிக தட்ப வெப்பம் கொண்ட நட்சத்திரங்கள் எனவும் அவன் அறிவான்
அவனும் அந்த நட்சத்திரங்களும் ஒரு வகையில் ஒன்றுதான். எப்போதும் உச்சபட்ச கொதி நிலையிலேயே வலம் வருவதுதான் இந்த நீல நிற பிரியனின் வாடிக்கை..
அருகில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து வரப்பட்டிருந்த ஒரு பாட்டில் தண்ணீரை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான். முகத்திலும் ஊற்றிக் கொண்டான் தணியவில்லை அவனது கோபம்.
“இப்படி கொதித்து கொதித்து வாழ்வதுதான் எங்கள் வாழ்வியல் முறை. உனக்கென்ன அரசன் நீ. கொஞ்சமாகத்தான் தணிந்து விடேன். கொஞ்சமாகத்தான் குளிர்ந்து விடேன்.” கண் சிமிட்டி கண் சிமிட்டி அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள். “அத்தனை கோபம் உடல் நலத்துக்கு நல்லதில்லை”
“தணிவதா யார் நானா?” சிரித்தான் அவன். “உங்களில் யாராவது காதலித்திருக்கிறீர்களா?”
“ஆமாம் எனக்கு விக்ரம் மட்டும்தான் பிடிக்கும்” அன்றொரு நாள் கூவிய அந்தக் குரல் அவன் செவிக்குள் ஒலித்தது. அந்த நினைவில் அழகாய் வாய்விட்டு சிரித்தான் விக்ரம்.
மௌனமாக கண்சிமிட்டின நட்சத்திரங்கள்.
சப்தரிஷி நட்சத்திரங்களில் வசிஷ்டரையும் அவசரமாக தேடினான். அவன் கண்ணுக்கு அவர்கள் தென்படவில்லை. பொதுவாக கோடை காலங்களில்தான் சப்தரிஷி மண்டல நட்சத்திரங்கள் தெளிவாக தென்படும்.
“ரிஷி முனிகளுக்கு கூட காதல் இருக்கிறது. எனக்கு இருக்கக் கூடாதா என்ன? கேட்டான் நட்சத்திரங்களினிடத்தில். இதுவரை அவன் அவர்களிடத்தில் பல முறை கேட்ட கேள்விதான் அது.
அது போன்ற நேரங்களில் பதில் கொடுக்காமல் அவை மேகங்களினிடையே மறைந்து கொள்ளும்.
‘சரி அது கிடக்கட்டும். அப்படி உங்கள் காதலில் ஒரு தோல்வி ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
இது இதுவரை அவன் அவர்களிடம் கேட்டிராத கேள்விதான் அது. கேள்வி கேட்டுவிட்டு வானத்தையே பார்த்திருந்தான் விக்ரம்.
“பதில் சொல்லுங்கள் உங்களில் யாருக்காவது காதல் தோல்வி ஏற்பட்டால் என்ன நடக்கும்?”
அவன் கேட்டுக்கொண்டே இருந்த வேளையில் ஒரு எரி நட்சத்திரம் வானிலிருந்து கீழே விழுந்தது.
பூமியை நோக்கி வரும் போது பூமியில் புவியீர்ப்பு விசையால் இழுக்கப் பட்டே அவை விரைந்து வருகின்றன. காற்று மண்டலத்தில் நுழையும் போது காற்று அதன் மீது உராய்கிறது. அதனாலேயே அதிக வெப்பமாகி பூமியை தொடுவதற்கு முன்பாகவே ஆவியாகி மறைந்து போகின்றன எரி நட்சத்திரங்கள்.
அந்த நட்சத்திரம் கீழே விழ
“இதுதான் உங்கள் பதிலா? வாய்விட்டு கம்பீரமாக சிரித்தான் விக்ரம்.
“‘காதலில் தோல்வி ஏற்பட்டால் உடனே தோல்வியை ஒப்புக்கொண்டு விட வேண்டுமா என்ன? தாடி வைத்துக் கொண்டு மது அருந்திக் கொண்டு திரிய வேண்டுமா என்ன?
ஆனால் அவனால் ஒரு உண்மையை மட்டும் மறுக்கவே முடியாது. காதல் தோல்வி எல்லா தோல்விகளையும் விட வலிமை வாய்ந்தது. அந்த வாள் வீச்சை எதிர்கொள்ள உதவிய ஒரு கவசம் அவனுக்கு கிட்டியது அவன் செய்த அதிர்ஷ்டம்.
அவனது சிரிப்பு ஏதேதோ நினைவுகளில் ஒரு புன்னகையில் வந்து முடிந்தது
தொடரும்
error: Content is protected !!