“அப்படி என்ன பிடிவாதம் உனக்கு? கோவிலுக்குதானே கூப்பிடறோம். அதுவும் பக்கத்தில் இருக்கும் காஞ்சிபுரம்தானே. அதுக்கு ஏன் இவ்வளவு வீம்பு பண்றே.” பாட்டி அவளை பல முறை அழைத்தும் கோவிலுக்கு வர ஒப்புக் கொள்ளவில்லை ஸ்வாதி.
அவள் மனநிலை அப்படி இருந்தது. இன்னும் மூன்று நாட்களில் அவள் அறிவித்த ப்ரெஸ் மீட். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தார் ரங்கநாதன்.
Advertisement
.இந்தக் கோவில் அவங்க குல தெய்வம் கோவில். அரவிந்த் வைஷாலி எல்லாரும் எங்களோட வராங்க. ரெண்டு நாள் நீ தனியாத்தான் இருக்கணும்
“நான் என்ன சின்ன குழந்தையா? அதெல்லாம் இருந்துப்பேன். போயிட்டு வாங்க” அப்போது உறுதியாக சொல்லி இருந்தாள் ஸ்வாதி.
“இன்னும் மூணு நாளிலே ப்ரெஸ் மீட் வேறே. இதுக்கு நடுவிலே அர்ஜுன் ஜாதகப் படி அவனுக்கு நேரம் ரொம்ப மோசமா இருக்கு. எதுக்கும் போய் அவனுக்கும் சேர்த்து கோவில்லே வேண்டிட்டு வரேன்.” போகிற போக்கில் பாட்டி கிளப்பிவிட்டு சென்றுவிட்டார்.
Advertisement
இது வரை இது போல தனியாக இருந்து அவளுக்கு பழக்கமே இல்லை. யார் விட்டுச் சென்றாலும் அர்ஜுன் அவளை தனியாக இருக்க விட்டதே இல்லை. விளையாட்டு நிமித்தம் வெளிநாடு செல்லும் நாட்களில் கூட அப்படித்தான்.
Advertisement
இப்போது நான் தனியாக இருப்பது தெரிந்தாலும் ஓடி வந்து நிற்பானோ? நினைத்தவுடனேயே வாசல் பக்கம் அவன் நிழலாடுவது போல் ஒரு பிரமை.
மனதை திசைத் திருப்பிக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள்
வீட்டில் இருக்கும் வேலைக்கார்கள் வேலையை முடித்துவிட்டு அவுட் ஹவுசுக்கு உறங்க சென்று விட வீட்டில் அவள் மட்டும் தனியே. யாரையும் போனில் அழைத்து பேசக் கூடத் தோன்றவில்லை அவளுக்கு.
Advertisement
அவனை விட்டால் நண்பர்கள் என்று யார் இருகிறார்கள் அவளுக்கு. வாட்ஸ் ஆப்பை திறக்க அவன் ஆன்லைனில் இருப்பதை காட்டியது அது.
“என்னவும் செய்து கொள்ளட்டும் அவன்.” கைப்பேசியை தூர எரிந்து விட்டு படுத்துக் கொண்டாள் அவள்.
நேரம் இரவு ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. உண்ட மயக்கமோ என்னவோ கட்டிலில் சாய்ந்தவளின் கண்கள் உடனேயே உறக்கத்துக்குள் விழுந்திருந்தன.
இருபது நிமிடங்கள் கூட கடந்திருக்காது. திடுக்கென விழித்துக் கொண்டாள் அவள்.
“கனவா? கனவா அது? என்ன கனவு?” தெளிவாக புரியவில்லை அவளுக்கு. இருந்தாலும் கனவில் வந்தது அர்ஜுன் என்று புரிகிறது. அவனுக்கு வலிக்கிறது என்று புரிகிறது. யாரும் அவனை அடிக்கிறார்களா என்ன? அவனுக்கு ரத்தம் வருகிறதா? அவன் அழுகிறானா என்ன?
“அவனுக்கு நேரம் சரியில்லை என பாட்டி சொல்லிவிட்டு போனதன் விளைவா இந்த கனவு?”
தலையை குலுக்கிக் கொண்டு கட்டிலை விட்டு எழுந்திருந்தாள் அவள். மனம் எங்கும் அப்படி ஒரு பாரம் ஏறி அமர்ந்திருந்தது. இனி உறக்கம்கிட்டே வரப் போவதில்லை.
எழுந்து சென்று ஜன்னலில் அருகே நின்று நட்சத்திரங்களை தேடினாள் அவள். மேகங்கள் எல்லாவற்றையும் திரையிட்டு மறைத்து வைத்திருந்தன. மழை வருவதற்கான அறிகுறியாக தூரத்தில் ஒரு மின்னல் வெட்டியது.
ஏ.ஸி யை நிறுத்தி விட்டு ஜன்னல் கதவுகளை திறந்து விட்டாள். காற்று வெள்ளெமென உள்ளே புகுந்தது. அவள் அணிந்திருந்த சாக்லேட் வண்ண நைட்டியை தாண்டி குளிர் அவளை சீண்டிக் கொண்டிருந்தது.
ஜன்னல் வழியே உள் நுழைந்த காற்று ஒரு பெரும் விளையாட்டை நிகழ்த்தி முடித்திருந்தது. அந்த ஜன்னலின் அருகே இருந்த மேஜை மீதிருந்த அர்ஜுனின் புகைப்படத்தை கீழே தள்ளி விட்டிருந்தது அது. புகைப் படத்தின் கண்ணாடி துண்டாகிக் கிடந்தது.
புகைப் படத்தின் கண்ணாடி உடைந்தால் சம்மந்தப் பட்டவருக்கு எதோ ஒரு ஆபத்து என்பது தமிழ் சினிமா கற்றுத் தந்த பாடம். ஸ்வாதி திரைப்படங்கள் அதிகம் பார்த்ததில்லை என்றாலும் அவள் பார்த்த ஒரு சில படங்களில் இது போன்ற காட்சிகள் வந்ததுண்டு.
கீழே விழுந்த குழந்தையை அள்ளிக் கொள்ளும் அன்னையை போல் அவள் ஓடி வந்து அந்த புகைப்படத்தை அள்ளிக் கொள்ள அதன் மீதிருந்த கண்ணாடி துண்டு அவள் கையை பதம் பார்த்திருந்தது. கை நிறைய ரத்தம்.
இப்படி எல்லாம் தனியே அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு பழக்கமே இல்லை. இந்த நேரத்தில் அர்ஜுன் இங்கே இருந்திருந்தால் ஓடி வந்து உதவி இருப்பான் சொல்லி வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது மனசாட்சி.
“அவன்தான் அன்று விக்ரமை அப்படி அணைத்துக் கொண்டானே. எனது அருகில் எல்லாம் வரமாட்டான்” வலியிலும் பலவித மன உளைச்சலிலும் அழுகை பீறிட்டது. எப்படியோ சமாளித்து ரத்தத்தை நிறுத்தி கட்டுப் போட்டுக்கொண்டு ஒரு வழியாக கண்ணாடி துகள்களை அப்புறப் படுத்திவிட்டு கண்ணீரை துடைந்து வந்து கட்டிலில் அமர்ந்தாள் அவள்.
“ஒரு வேளை நிஜமாகவே அர்ஜுனுக்கு ஏதும் ஆபத்தா என்ன?” இப்போது மனம் மறுபடியும் முதல் கட்டத்திலேயே வந்து நின்றது.
‘அவனை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வந்தால் என்ன?”
“அவனையா? நானா? ஸ்வாதி அவன் முன்னால் சென்று நிற்பதா?” வாய்ப்பே இல்லை.
அவனது புகைப்படம் கண்ணாடி இல்லாமல் மேஜை மீது வீற்றிருந்தது.
“இங்கேயாவது வேலைக்கென ஆட்கள் இருக்கிறார்கள். அங்கே அர்ஜுன் வீட்டில் யாருமில்லை. அவன் இப்போது இருப்பது இவளது அன்னையின் வீட்டில். அந்த வீடு இங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கிறது. சென்ற வருடம் நடந்த பிரச்சனைக்கு பிறகு இவனது அன்னை அவனோடு அங்கேதான் தங்கி இருந்தார். இவளை விட்டும் அதிக தூரம் சென்றுவிட அவருக்கு மனமில்லாமல் இருந்திருக்கலாம்.
அர்ஜுனின் சொந்த வீடு இங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் சென்னையின் புறநகரில் இருக்கிறது. அங்கே செக்யூரிட்டியாவது உண்டு இங்கே இந்த வீட்டில் அவனைத் தவிர வேறே யாரும் இல்லை. அவனுக்கு எதாவது ஒன்று என்றாலும் உதவுவதற்கு கூட யாருமில்லை” மனம் அங்கலாய்த்து போனது இவளுக்கு’
‘ஒரு முறை ஒரே ஒரு முறை அவன் வீட்டு வாசல் வரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடேன்” உள்ளுக்குள் ஏதோ ஒன்று அவளை உந்தித் தள்ளியது.
“ஒரு முறை அவன் வீட்டின் அருகில் சென்று பார்த்துவிட்டால் போதும் அவன் வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அல்லது அவனது நடமாட்டம் கண்ணில் பட்டால் போதும் மனம் ஒரு விதத்தில் நிம்மதி அடைந்து விடும்”
அப்படி இப்படி என கடைசியில் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் ஸ்வாதி.
“ஆயிரம் கோபங்கள் வந்து போனாலும் உண்மையான அன்பு வரப்போகும் ஆபத்துக்களை பற்றிக் கூட எச்சரிக்குமோ?’ அவசரமாக உடை மாற்றிக் கொண்டு வீட்டு காவலாளியின் கேள்விப் பார்வைக்கு விடை ஏதும் சொல்லாமல் காரை நகர்த்திக் கொண்டு அவன் வீடு நோக்கி நகர்ந்தாள் ஸ்வாதி.
இடியும் மின்னலும் உறுமிக் கொண்டிருந்தன.
“அப்படி எல்லாம் எந்த ஆபத்தும் அவனுக்கு வந்து விடாது. எல்லாம் எனது கற்பனை” சொல்லிக் கொண்டாள் தனக்குள்ளே.
“சும்மா கனவுக்கெல்லாம் பயந்து போறே. நீ என்ன குட்டி குழந்தையா குஷ்பூ” அர்ஜுன் அவளது தலை மீது குட்டிய சம்பவங்கள் ஒன்றிரண்டு உண்டுதான்.
“இன்று மனம் ஏனோ ஆறவேயில்லையே? ஒரு வருடமாக இல்லாமல் இன்று அவனது நினைவுகள் என்னை இப்படி அலைக்கழிக்கிறதே ஏனடா இறைவா?”
ஒரு வழியாக அவன் வீடு இருக்கும் தெருவுக்குள் வந்திருந்தாள் அவள். சாலையின் வலப்பக்கம் அவனது வீடு இருக்க வீட்டுக்கு மிக அருகில் சென்று விடாமல் நூறு அடிகள் முன்னாலேயே சாலையின் இடப் பக்கத்திலேயே காரை நிறுத்தி விட்டு அங்கிருந்தே வீட்டை கவனித்தாள் ஸ்வாதி.
வீட்டுக்குள் விளக்கு எரிவது போல் தோன்றவில்லை.
மனதிற்குள் ஏதோ ஒன்று புரண்டது “என்னவாயிற்று அவனுக்கு?”
மழைத் தூறல்கள் விழ ஆரம்பித்து இருந்தன. மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது ஒரு ஓரத்தில். குழப்ப மிகுதியில் அவள் அவன் வீட்டை பார்த்துக் கொண்டேயிருக்க அப்போது அவன் வீட்டு வாசலுக்கு வந்து நின்றது அவனது ஸ்கோடா.
அவள் விழிகள் சற்றே விரிய காரை விட்டு இறங்கினான் அவளது அர்ஜுனன். ஜீன்ஸும் டி ஷர்டுமாக ஒயிலாக ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கியவனை ரசித்துக் கொண்டாள் தூரத்திலிருந்து.
அவன் நலமாக இருக்கிறான் என்றொரு நிம்மதிப் பிரவாகம் அவளுக்குள்ளே.
காரின் முகப்பு விளக்கை எரிய விட்டுவிட்டு கீழே இறங்கியவன் வாசல் கேட்டைத் திறந்து விட்டு உள்ளே சென்று வீட்டின் கதவை திறந்துக் கொண்டிருக்க இவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க திடீரென நிகழ்ந்தது அந்த விபரீதம்.
யாருமே எதிர்ப் பார்க்காத வகையில் பற்றி எரிய ஆரம்பித்தது அவனது ஸ்கோடா. எங்கிருந்து தீ பற்றிக்கொண்டது என்று யோசிப்பதற்குள் பெரிதாக ஒரு சத்தம் வேறு. உள்ளே என்ன வெடித்தது என்று புரியவில்லை. கார் தீப் பிழம்பாக மாறியிருந்தது.
“அ..ர.. ஜூ..ன்..” அதிர்ச்சியில் அலறியவள் காரை விட்டு இறங்கி அவன் வீட்டை நோக்கி ஓடி வந்தாள். வீட்டின் கதவை திறந்துக் கொண்டிருந்தவன் கார் வெடித்த சத்தத்தில் அதிர்ந்து திரும்பி ஓடி வர முயல காரின் வெப்பம் அவர்கள் இருவரையும் தூரத்திலேயே நிறுத்தியது.
அவன் அவளை கவனிக்கவில்லை. தீ பெரிதாக அந்த நிலையில் அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லையா என்று அவளால் கணிக்க முடியவில்லை.
அங்கே எழுந்த சத்தத்தில் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து சிலர் வெளியே வந்து பார்க்க அப்போது மொத்தமாக கொட்ட ஆரம்பித்தது மழை. இது அத்தனையும் ஒன்றரை நிமிட இடைவெளியில் நடந்து முடிந்திருந்தது.
கொட்டிய மழையின் வேகத்தில் தீயின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. மேலே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தனர் நண்பர்கள் இருவரும். கண்ணீர் சேர்ந்துக் கொண்டது இருவர் விழிகளிலும். மழை அவர்களை எத்தனைப் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்றும் இருவருக்கும் புரிந்திருந்தது.
அவன் இன்னமும் அவளை கவனித்ததாக தெரியவில்லை. எப்படி நிகழ்ந்தது என்று அவளுக்கே புரியாமல் அவனருகில் ஓடி அப்படியே அவன் தோளில் சேர்ந்திருந்தாள் அவனது தோழி.
மழை அவர்கள் இருவரையும் மொத்தமாக நனைத்துக் கொண்டிருந்தது.
“உனக்கு ஒன்றுமில்லைல. உனக்கு ஒன்றுமில்லைல” அவன் முகத்தை அவனது கை கால்களை என மாறி மாறி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள் அவனது உயிரானவள்.
சில நொடி இடைவெளியில் உயிர் பிழைத்திருக்கிறான் அவளது நண்பன் என்று தெள்ளத் தெளிவாக புரிந்து போனது அவளுக்கு. கார் தீப்பிடித்த நிமிடத்தில் அவன் உள்ளே இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னோடு இறுக்கிக் கொண்டாள் அவனை.
அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவள் தனது முன்னால் வந்து நிற்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தன அர்ஜுனுக்கு.
அதற்குள் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள் என்னவென்று விசாரிக்க அவர்கள் வீட்டின் அருகே வர
“ஒரு நிமிஷம்டா” என அவளை விலக்கி விட்டு அவர்களை நோக்கி சென்றான் அர்ஜுன்.
மழை இன்னமும் கொட்டிக் கொண்டிருக்க பொம்மை போல நின்றாள் ஸ்வாதி.
“ஹெட் லைட் எரிஞ்சிட்டு இருந்ததா. அப்போ அதிலே எதுவும் ஷார்ட் சர்கியூட் ஆகியிருக்கும்.. நல்ல வேளை உங்களுக்கு ஒண்ணும் ஆகலை” யாரோ ஒருவர் அர்ஜுனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
‘வாழ்க்கை என்பது இதுதானா? நாம் விடும் மூச்சுக்கு இவ்வளவுதான் உத்திரவாதமா?” உயிர் நடுங்கியது ஸ்வாதிக்கு.
சென்ற வருடம் பீச் ஹவுசில் நடந்த களேபரம் இப்போது கண்முன்னே வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.
அந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் அர்த்தம் என்ற ஒன்றே இல்லை எனத் தோன்றியது அவளுக்கு. மனித உயிருக்கே எந்த நிமிடத்திலும் உத்திரவாதம் இல்லை எனும் நிலையில் மற்றது எல்லாம் தூசு இல்லையா.?
“எனது அர்ஜுனை எனது விஜயனை என்னிடம் திருப்பித் தந்திருக்கிறாயே உனக்கு ஒரு கோடி நன்றிகள் இயற்கையே” வானத்தை பார்த்து கைக் கூப்பினாள் ஸ்வாதி.
அர்ஜுன் டென்னிஸ் அவளது தாய் தந்தையர் எனும் சின்ன வட்டத்தை தாண்டி அதிக தூரம் பயணித்திறாத அந்த குழந்தையான குமரிக்குள் இன்று நிறையவே புது ஞானங்கள்.
அவள் அர்ஜுனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க அவளுக்கு ஒரே நிமிடத்தில் பலநூறு பாடங்களை கற்பித்துவிட்டு கருகிக் கிடந்தது அந்த ஸ்கோடா.
“சரி மழை ரொம்ப கொட்டுது. நீங்க உள்ளே போங்க. நாளைக்கு காலையிலே பார்ப்போம் பக்கத்து வீட்டுகாரர்கள் கலைந்து செல்ல அவளருகில் வந்தான் அர்ஜுன்.
“குஷ்பூ” அவனது குரலில் அப்படி ஒரு பாசம்.
“மழை கொட்டுது பார் உள்ளே போய் பேசலாம் வா” அவள் தோள் அணைத்துக் கொண்டு அவன் நகர முற்பட அவள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.
“உள்ளே வர மாட்டியாடா?” அவனது தொனியில் அத்தனை ஏக்கம்.
“அதெல்லாம் நல்லா வருவேன்” என அவனை முறைத்தவள் உள்ளே சென்ற மறுநொடி அவனை சேர்த்து அணைத்துக் கொண்டாள்
இதமாய் ஒரு புன்னகை அர்ஜுனின் இதழ்களில். மெல்ல அவள் பின் தலையை வருடியது அவனது கரம்.
“நான் உன் கூட சண்டை போட்டதுக்கு, உன்னோட பேசாம இருந்ததுக்கு உன்னை பிடிக்கலைன்னு சொன்னது எல்லாம் உன்கிட்டே சாரி எல்லாம் கேட்க மாட்டேன் போ”
“சரி அவ்வளவுதானே கேட்க வேண்டாம்”
“இன்னும் நிறைய சண்டை போடுவேன் போ”
“சரி போடலாம்” மெல்லச் சிரித்தான் அவளது நண்பன்.
“உன்னை இப்போ மொத்தப் போறேன்” என்றவள் நிமிர்ந்து அவனை ஓங்கி ஓங்கி அடிக்க அவன் கலகல சிரிப்புடன் அவளை தடுக்க அவள் கையில் சற்று முன் பட்ட காயத்தின் வலியில்
“ஸ்ஸ்ஸ்..ஆ..’ என கத்தி அவள் விலக
“குஷ்பூ கையிலே என்னடா?” அவசரமாக அவள் கையை பிடித்து பார்த்தான் அர்ஜுன். “எப்படி டா அடிப் பட்டது. மருந்து எதுவும் போட்டியா இல்லையா?
“எல்லாம் உன்னாலேதான் போ” என்று முறைத்தாள் அவனை.
“நான் என்ன பண்ணேன்?” அவன் கேட்க நடந்ததை அப்படியே சொல்லி முடித்தாள் அவள்.
நிஜமாகவே வியப்பு மேலோங்கியது அர்ஜுனுக்கு.
‘தனக்கு வரப் போகும் ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்து கொண்டிருக்கிறாளா என்ன?’ அவள் தனது கையை ஆராய்ந்துக் கொண்டிருக்க
“குஷ்பூ” என்றான் மெதுவாக.
“ம்?”
“நீ எனக்கு ஜஸ்ட் அ ஃப்ரெண்ட் இல்லைன்னு இப்போவாவது புரியுதா? அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு கேட்டான் அர்ஜுன்
“எங்க அம்மாக்கு அப்பாக்கு அண்ணனுக்கு யாருக்கும் மனசு பதறலை. எனக்கு எதுவும் ஆபத்துன்னு தோணலை. ஆனா நீ ஓடி வந்திருக்கே. இதுக்கும் மேலே நம்ம நட்புக்கு யாரும் சர்டிஃபிகேட் குடுக்கணுமா என்ன?” அவள் முகத்தில் நிறைய மாற்றங்கள் வந்து வந்து போக அவனது தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்
“நீ சர்ட்ஃபிகேட் ஒண்ணும் குடுக்க வேண்டாம் உன்னோட டிரெஸ் ஏதாவது குடு. குளிருது”
அவள் உடை மாற்றிக் கொண்டு வர அவன் சூடாக காபியை தயாரித்துக் கொண்டு வந்தான்.
“எதுக்கும் போலிஸ்க்கு சொல்லிடுவோமா.?” என்று அவள் முகம் பார்த்தான் அர்ஜுன்.
“அடுத்து ப்ரெஸ்க்கு போயிடுமே அர்ஜுன். அப்பாவைக் கேட்போமா?’ அவள் கேட்க
“இல்லடா இப்போ அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். கார் விக்ரம் பேரிலே இருக்கு. அதனாலே அவனைக் கேட்போம். அவன் டீல் பண்ணிப்பான்” என்றபடியே அவன் அவள் முகம் பார்க்க அவள் சரியென தலையசைக்க பல நாட்கள் கழித்து அண்ணனின் எண்ணை அழைத்தான் அர்ஜுன்.
முக்கால் மணி நேரங்கள் கடந்திருக்க வாசல் கதவு திறந்தே இருக்க ஒரு வருட கதையை பேசியபடியே இருவரும் கூடத்தில் அமர்ந்திருக்க ஊன்று கோலை பிடித்தபடி அவர்கள் முன்னால் வந்து நின்றான் அந்த சக்ரவர்த்தி.
அவள் அங்கே இருப்பாள் என நினைக்கவில்லையோ அவன். மெல்ல மாற்றம் கொண்டது அவனது முகம்.
“வா விக்ரம்” புன்னகையுடன் அவனை வரவேற்றான் அர்ஜுன்.
“உட்காரு விக்ரம்” என்றான் தம்பி “காபி குடிக்கறியா”
அமரவில்லை விக்ரம்.
“வேண்டாம். நாம வெளியே போய் பேசுவோம் அர்ஜுன்” என்றான் அவள் முகம் பார்த்துக் கொண்டே.
“ஏன் விக்ரம்?” அர்ஜுன் புரியாமல் பார்க்க
“இது தி கிரேட் ஸ்வாதியோட அம்மா வீடு. அப்புறம் இங்கே ஏன் உட்கார்ந்தேன்னு சண்டை போடுவாங்க. நமக்கு நம்ம பீச் ஹவுஸ் போதும்” அவள் முகம் விட்டு அவன் பார்வை அகலவில்லை. அவளை கீறிப் பார்க்கும் ஆவல் இன்னமும் குறையவில்லை விக்ரமுக்கு.
லேசாக பயம் பற்றியது அர்ஜுனை. “சும்மா இரு விக்ரம் நீ…” என அவன் ஏதோ சொல்ல வர
“இப்போ என்ன உங்களுக்கு அந்த பீச் ஹவுஸ் வேணுமா?” என்றாள் அவனருகில் வந்து அவன் கண்களுக்குள் பார்த்து “எடுத்துக்கோங்க”
சத்தியமாய் வார்த்தைகள் எழவில்லை விக்ரமுக்கு
“எங்கே கையெழுத்து போடணும்ன்னு சொல்லுங்க ரெண்டு பேரும் போடறோம். எங்க அண்ணனுக்கு இல்லாததா.” இன்னமும் அவள் புன்னகை மாறவில்லை.
“பிடிச்சதை பிடிச்சவங்களுக்காக விட்டுக் கொடுக்கறதை விட பெரிய சந்தோஷம் இந்த உலகத்தில் இருக்கா என்ன?” அன்று அரவிந்தன் சொன்ன வார்த்தைகள் அவளும் அறியாமல் அவள் உதடுகள் வழி வெளிவந்தன.
பெரிய பெரிய எதிரிகளை, அவர்கள் கோபதாபங்களை சண்டைகளை மிக லாவகமாக கையாளும் வீரன் அவன். ஆனால் உண்மையான அன்பு நேருக்கு நேராக நிற்கும் போது அதை சந்திக்கத் தெரியாத மிகப் பெரிய கோழை நமது சக்ரவர்த்தி. எங்க அண்ணன் என்ற வார்த்தையிலேயே அவன் உடல் நடுங்கிப் போயிருந்தது. ஊன்றுகோலை அழுத்தமாக பற்றிக் கொண்டான் அவன்.
அர்ஜுனின் இதழ்களில் ஆனந்த புன்னகை.
“இன்னைக்கு என் கண் முன்னாடி அரை நிமிஷ இடைவெளியிலே என் அர்ஜுன் உயிர் பிழைச்சதை நான் பார்த்தேன் ஆண்டவன் இன்னைக்கு எனக்கு எவ்வளவு பெரிய வரம் கொடுத்திருக்கான்னு அப்போதான் புரிஞ்சது. இதிலே நம்ம ஈகோ எல்லாம் ஒண்ணுமே இல்லை. எனக்கு அவன் மட்டும் போதும். மத்தது எல்லாம் தூசுன்னு தோணிப் போச்சு அண்ணா. அர்ஜுனோட அண்ணன் எனக்கும் அண்ணன் அவ்வளவுதான்”
பேச்சிழந்து போனான் விக்ரம்
“நான்.. நான் கார் என்னாச்சுன்னு பார்த்திட்டு வந்திடறேன்” அவசரமாக விலகினான் அங்கிருந்து. சிறு புன்னகையுடன் அவன் பின்னாலேயே நடந்தான் அர்ஜுன்.
அந்த நினைவுகளில் மூன்று பேர் முகத்திலுமே இப்போது ஒரு சிறு புன்னகை.