Skip to content
Post Views: 1,535
விழாக் காணுமே வானம் 17 (03)
அவனிடம் சவால் விட்டால் அதை முறியடித்து வெற்றி கொள்வான். ஆனால் ‘நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று அவளுக்குப் பிடித்தமான பீச் ஹவுஸையும் விட்டுக் கொடுத்து விட்டாளே. அர்ஜூனுக்கு முன் எதுவும் பெரிதல்ல என்று உணர்த்தி விட்டாளே.
நான் வேறு அர்ஜூன் வேறில்லை என்று முன்பு திமிராக சொன்னவள் இன்று அர்ஜூனின் தமையன் தனக்கும் அண்ணன் என்று அன்பையும் பாசத்தையும் அல்லவா அவன் முன்னிருத்தினாள். அண்ணா என்று அர்ஜூன் கூட விக்ரமை அழைத்ததில்லையே.
ஸ்வாதி ‘விக்ரம் அண்ணா’ என்ற போது ஆடித் தான் போய்விட்டிருந்தான் அந்தப் பாயும் புலி.
Advertisement
விக்ரம் அங்கிருந்து எழுந்து பக்கவாட்டில் போடப்பட்டிருந்த சேரில் சென்று அமர்ந்து கொள்ள அவனது அருகில் ஆராதனா வந்து அமர்ந்து அவனிடம் ஐ பேடை காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘இப்படி ஒரு மாற்றம் விக்ரமிடம் எப்படி வந்தது’ என்று சிந்தனை வயப்பட்ட ஸ்ரீதேவி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆராதனா ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அதற்கு சரி சரி என்பது போல தலையை ஆட்டிக் கொண்டிருந்த விக்ரமைப் பார்த்ததும் ஸ்ரீதேவிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
Advertisement
“யாரிந்த பெண்” என்ற கேள்வி அவர் மனசில் எழ பார்த்தசாரதி அவளைப் பற்றி ரங்கநாதனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
Advertisement
“என் பிரண்ட் வாசுதேவன் பொண்ணு ஆராதனா. ப்ரில்லியன்ட் கர்ல். லாயர். கார்பரேட் லாவில் ஸ்பெஷலைஸ் செய்து மும்பைல பெரிய லீகல் கன்சல்டிங் கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். விக்ரமோட சேர்ந்து வேலை செய்கிறாள்ன்னு இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன் தான் எனக்கே தெரியும்” என்று விவரங்களை கூறிக் கொண்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் கார் வெடித்த அந்த இரவில் புதிய ஸ்வாதி மட்டுமல்ல புது விக்ரமும் உருவாகியிருந்தான்.
சில நாட்களுக்கு முன் வைஷாலி அரவிந்தை அதே ஹோட்டலில் வைத்து சந்தித்தவன் அவர்களுக்கு மனமார வாழ்த்துச் சொன்னதை நினைவு கூர்ந்தான். வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது என்பதை உணர்ந்தான்.
Advertisement
உறவுகளின் பிரிவுகளுக்கு அவன் காரணமாகிப் போனதற்கு எந்த பீச் ஹவுஸ் சாட்சியாக இருந்ததோ அதே பீச் ஹவுஸில் அனைவரயும் இணைத்து வைக்க அவன் மனம் விரும்பியது.
இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இந்த கார் விபத்தும் பர்சனல் என்பதால் கொஞ்சம் ரகசியமாகவும் அதே சமயம் திறமையாகவும் இதை கையாள இத்தனை நாட்களாக அவனுக்கு சட்ட ஆலோசகராக இருக்கும் ஆராதனவை விட்டால் யாரால் கையாள முடியும்?
இந்த சந்திப்பின் முழுப்பொறுப்பையும் அவள் ஏற்றுக் கொண்டிருந்தாள்.
பிரஸ் மீட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் லஞ்ச் வரை கேட்டரிங் மூலம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாள்.
நிருபர்கள் ஸ்வாதியையும் அர்ஜூனையும் நோக்கித் திரும்பினர்.
“இவளுக்கு பிரஸ் மீட் எல்லாம் பழக்கமில்லையே. அவங்க ஏதாவது கேள்வி கேட்க இவ கோபமா பதில் சொல்லிவிட போறா” ஸ்ரீதேவிக்கு மகளை நினைத்து கலக்கம்.
“ஸ்வாதி மேடம் ஸ்வாதி மேடம் டு யுவர் ரைட்” என்ற குரலில் வலது பக்கம் திரும்பினாள் ஸ்வாதி.
“ஒரு வருஷமா ஏன் இந்த ப்ரேக். உங்கள் ரசிகர்கள் உங்கள் மேல் அப்செட்டா இருக்காங்க. தே வான்ட் ஆன்சர் ” கேள்வி கேட்ட பெண் நிருபர் இவர்களின் ரசிகை போலும். அவரின் குரலில் நிறையவே ஆதங்கம்.
இதழ்களில் மெலிதாக ஒரு புன்னகை ஓட ஒரு முறை அர்ஜுனை பார்த்துவிட்டு திரும்பினாள் ஸ்வாதி.
“எங்க ரசிகர்கள் எல்லோருக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றிகள். கூடவே அவர்களிடம் சாரியும் கேட்டுக் கொள்கிறோம். சில பர்சனல் பேமிலி சிச்சுவேஷன் காரணமாக நாங்கள் விளையாடவில்லை
வரும் விம்பிள்டனில் நீங்க பங்கேற்க போகிறீர்களா”
“கண்டிப்பாக, இந்த வருடமும் விம்பிள்டன் சம்பியன்ஷிப்பை நாங்கள் வெற்றி பெறுவோம்” ஸ்வாதியே பதில் கூறினாள்.
“திஸ் ஸ் ஃபார் அர்ஜூன். செக் வீரர் ஸ்வாதியோடு மிக்ஸ்ட் டபிள்ஸ் ஆட விருப்பம் தெரிவித்தாரே. நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து… அது உங்க இரண்டு பேருக்கும் நடுவில் பெரிய கருத்து வேறுபாடு ஏற்படுத்தியதால் தான் இந்த ப்ரேக்கா” நிருபர் ஒருவர் கேட்கவும் அர்ஜூனின் கையில் இருந்து ஸ்வாதி மைக்கைப் பிடுங்கிக் கொண்டாள்.
“போச்சுடா” என்று ஸ்ரீதேவி தலையில் கை வைத்துக் கொள்ள மெலிதான புன்னகை அர்ஜுனின் இதழ்களில்.
என்னத் தோன்றியதோ அருகில் அம்ர்ந்தருந்த நண்பனை நோக்கி அவள் கை நீட்ட அவன் தனது கரத்தை அவளிடம் கொடுக்க அதை இறுக பற்றிக் கொண்டாள் ஸ்வாதி.
நடந்த விபத்து பற்றியும் இவளது மனமாற்றம் பற்றியும் ஏதும் அறியாத குடும்பம் முழுவதும் பூரித்து போனது.
“அவர் விருப்பம் தெரிவித்ததற்கு நன்றி. ஏன் ஸ்விஸ் வீராங்கனை கூட இரண்டு வருடங்களுக்கு முன் அர்ஜூனோடு ஆட விருப்பம் தெரிவித்தாரே. அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கலாம். பட் அவர் பார்ட்னர்ஷிப் இஸ் வெரி ஸ்ட்ராங் அன்ட் ஃபார் எவர்”
பெற்றவர்களின் விழிகளில் ஈரம்.
“டென்னிஸ் மேட்சில் உங்க பார்ட்னர்ஷிப் ஸ்ட்ராங் அன்ட் ஃபார்எவர். ஆனா உங்க பர்சனல் லைஃப்ல அது சாத்தியமா” இடக்காக கேள்வி கேட்டார் ஒருவர்.
ஸ்வாதியின் கையில் மைக் இருக்க அவளின் கரத்தின் மேல் தனது கரத்தைப் பதித்து மைக்கை தனது உதடுகளை நோக்கி உயர்த்தி “வை நாட்” என்று அர்ஜூன் சொல்ல கேமராக்கள் அந்த தருணத்தை பதிவு செய்து கொள்ள போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.
அங்கிருந்த குடும்பத்தினர் அனைவருமே ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நிற்க நிருபர் கூட்டத்தில் ஆரவாரமும் கேள்வி மழைகளும். ஒரு கட்டம் வரை புன்னகையுடன் சமாளித்து விட்டு
“நோ மோர் பர்சனல் க்வஸ்டின்ஸ் ப்ளீஸ்” என்றவன் ஸ்வாதியின் கரம் பற்றியபடியே எழப் போக அங்கே ஆராதனா வந்து மைக்கை பெற்றுக் கொண்டு பிரஸ் மீட்டை முடிவிற்கு கொண்டு வந்தாள்.
“சோ லெட்ஸ் கால் இட் எ டே. உங்கள் நேரத்தை செலவழித்து இங்கே வருகை தந்தற்கு நன்றி. லஞ்ச் இஸ் ரெடி. ப்ளீஸ் ஹெல்ப் யுவர்செல்வ்ஸ்” என்றதும் அனைவரும் கலைந்து சென்றனர்.
“ஸ்வாதியும் அர்ஜூனும் விம்பிள்டன் ஆடுவதை பார்க்க நாம லண்டன் போறோம். இப்போவே சொல்லிட்டேன்” உத்தரவிட்டாள் அரவிந்தனின் மனைவி.
“அதுக்கு முன் நாம எப்போ எங்கே ஹனிமூன் போகப் போறோம்ன்னு சொல்லு” அவளைச் சீண்டினான் அரவிந்த்.
குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் சென்றிருக்க ஆராதனா லஞ்ச் ஏற்பாடுகளை கவனித்து விட்டு வரும் வரை விக்ரம் அவளுக்காக காத்திருந்தான்.
உள்ளே சென்ற மாத்திரத்தில் அர்ஜுனின் பார்வை பெற்றவர்களின் பக்கம் செல்ல உடனே அவர்கள் முன் சென்று நிற்க ஏதோ ஒரு தயக்கம் அவனுக்குள்ளே. அவன் முகம் பார்த்து மனம் படித்தாளோ
“இவனை என்ன பண்ணலாம். ஒரு வருஷமா உங்களோட பேசாம இருந்திருக்கான் பாருங்க” ஸ்வாதி அவன் முகம் பார்த்துக்கொண்டே சொல்ல
அர்ஜுன் அடிப் பாவி என்பதைப் போல் பார்க்க
“அங்கிள் ஆன்டி ஐ ஆம் சாரி, அர்ஜூன் ஒரு வருஷமா என்னால தான் உங்க கூட பேசாம இருந்தான்” என்றாள் ருக்மணியின் கரம் பற்றிக் கொண்டு. அவள் குரலில் நிறையவே வருத்தங்கள். “இனிமே இப்படி எப்பவும் நடக்காது”
அப்போது தான் ஆராதனாவுடன் பேசிக் கொண்டே அவளோடு அங்கே நுழைந்தான் விக்ரம்.
“ஆராதனாவை பார்க்கும் போதெல்லாம் நம்ம விக்ரமிற்கு பொருத்தமாக இருப்பான்னு என் மனசில தோணும். அருமையான பொண்ணு” எப்போதும் அதிகம் பேசாத பார்த்தசாரதி தனது மனதில் தோன்றியதை சொல்லிவிட ருக்மணி ஆராதனாவை ஆசையாகப் பார்த்தார்.
அந்த வார்த்தைகள் விக்ரமுக்குள் எந்த விதமான உணர்வுகளை தோற்றுவித்தது என்று அவனுக்கே புரியவில்லை.
விழிகள் விரிய ஒரு முறை ஆராதனாவை பார்த்தான் விக்ரம்.
“அர்ஜூன் ஸ்வாதியைப் போலவே இவங்க ஜோடிப் பொருத்தமும் அற்புதமா இருக்கு. இல்லையா தேவி” என்று ருக்மணி ஸ்ரீதேவியிடம் கூறவும் அன்று ஸ்வாதியை மருமகளாக்கிக் கொள்ள அவர் பிரியப்பட்டது ஸ்ரீதேவியின் நினைவில் வந்தது.
இந்த வார்த்தைகளில் அர்ஜுனும் ஸ்வாதியும் கொஞ்சம் பேச்சற்றுப் போய்தான் நின்றனர். இப்படி ஒரு எண்ணம் இருவருக்குமே இதுவரை வந்ததில்லைதான்.
ஆனால் திருமண விஷயங்கள் பேசும் முன் பிரஸ் மீட்டில் நடந்த விஷயங்களைப் பற்றி பெரியவர்களுக்கு முழுவதுமாக தெரிய வேண்டியிருந்தது. விக்ரம் பொறுப்பேற்றுக் கொண்டு குடும்பத்தினருக்கு அனைத்தையும் சொல்லி முடித்தான்.
கார் வெடித்து தீப்பிடித்ததை மட்டும் பெரிதாக சொல்லாமல் சும்மா ஸ்பார்க் ஆனது என்று கூறவும் அர்ஜூனும் ஸ்வாதியும் நிம்மதி கொண்டனர்.
சரளா அனைவருக்கும் உணவைப் பரிமாற அவரவர் ஜோடிகளுடன் சேர்ந்து அனைவரும் அமர விக்ரமின் அருகில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தாள் ஆராதனா.
“உன் கல்யாணத்தைப் பற்றி நீ ஏதேனும் முடிவு செய்திருக்கிறாயா ஆராதனா” நண்பரின் மகள் என்ற முறையில் உரிமையாய் கேட்டார் பார்த்தசாரதி.
அவர் அப்படிக் கேட்கவும் விக்ரமிற்கு ஏன் படபடத்து போனது என்று அவனுக்கே புரியவில்லை.
“அப்பா பார்க்கிறேன்னு தான் சொன்னார் அங்கிள். நான் தான் கொஞ்சம் டைம் கேட்டிருந்தேன். இப்போ தான் என் ஜாப்ல செட்டில் ஆகியிருக்கேன்” சிரித்த முகத்துடன் தெளிவாக பதில் கூறினாள்.
“வாழ்க்கையிலும் செட்டில் ஆக வேண்டாமா மா. எங்க விக்ரமை கல்யாணம் செய்துக்க உனக்கு விருப்பமா. நான் வாசுகிட்ட பேசறேன்” அவர் அப்படி பட்டென்று கேட்டு விடவும் அனைவரின் பார்வையும் விக்ரமிடத்தில். ஆனால் அவனின் பார்வை அவன் அருகிலே அமர்ந்தவளிடத்தில்.
திடீரென்று பார்த்தசாரதி கேட்கவும் ஆராதனா சற்று திகைத்துத் தான் போனாள். அவள் விக்ரமை அறியாதவள் இல்லை. பிஸ்னஸ் உலகின் முடி சூடா சக்ரவர்த்தி அல்லவா அவன். க்ரௌசிங் டைகர் என்று அனைவரும் அவனைக் குறிப்பிட்டதை அறிவாள் அவள்.
இத்தனை நாட்கள் அவனுடன் பணி புரிந்ததில் அவனது கண்ணியத்தையுமே அறிவாள் அவள். அவனோடு சேர்ந்து வேலை செய்ததில் அந்த பாயும் புலிக்குள் அன்பிற்காக ஏங்கும் மனம் இருந்ததையும் அவள் அறிவாள்
லாயர் என்ற முறையில் இல்லாமல் ஒரு தோழியிடம் பகிர்ந்து கொள்வதைப் போலத் தான் விக்ரம் அவளிடம் பர்சனல் குடும்ப விஷயங்களை கூறியதும் உண்டு.
ஆனால் விக்ரமிற்கு விருப்பமா? அவள் மனதின் கேள்வியை அவளது விழிகள் கேட்டன அவனிடத்தில்.
அங்கே ஒரு வித அமைதி நிலவ இந்த உரையாடலை மிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர் வைஷாலியும் அரவிந்தும்.
என்ன தான் அவன் மனதார வாழ்த்தி விட்டிருந்த போதும் விக்ரமைப் பார்க்கும் போது ஓர் ஓரத்தில் சிறு உறுத்தல் இருக்கத் தான் செய்தது வைஷாலிக்கும் அரவிந்துக்கும். இப்போது விக்ரமின் திருமண பேச்சில் அந்த உறுத்தல் அகன்று அவனும் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டியது அவர்கள் மனம்.
தனது தந்தைக்கு பதில் கூறாமல் தன்னைப் பார்த்து விழிகளால் கேள்வி கேட்டவளின் வதனத்தில் தன் பார்வையைப் பதித்திருந்தான் விக்ரம்.
நட்சத்திரங்கள் போல உச்சபட்ச கொதிநிலையிலே இருக்கும் அவனை குளிர்விக்க வந்த நிலவா இவள். அலைகள் போல ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் அவன் மனம் நாடும் கரையா இவள்.
அது புரியவில்லை அவனுக்கு. ஆனால் அவளை சந்தித்த நாள் முதலாக அவளை சட்ட ஆலோகராக அவன் ஏற்றுக் கொண்ட நாள் முதலாக அவள் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டிக் கொண்டே அல்லவா இருக்கிறான்.
இன்று அவளது விழிகளின் கேள்விகளுக்கும் தலை அசைத்து விடவே தோன்றியது அவனுக்கு.
“உனக்கு ஓகேவா விக்ரம்” விக்ரமிற்கு வலது புறம் அமர்ந்த அர்ஜூன் அவன் தோள் மீது கை போட்டபடி அவனது காதில் ரகசியமாய் கேட்கவும் விக்ரம் திடமானான்.
“எனக்கு ஒகே” விக்ரம் முணுமுணுத்தது ஆரதானாவின் செவிகளையும் தீண்டிச் சென்றது.
“விக்ரமிற்கு ஒகேன்னா அப்பாகிட்ட பேசுங்க அங்கிள்” தனக்கும் சம்மதம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாள் பெண்ணிலவு.
விக்ரம் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிறு புன்னகையுடன் ஓகே என்று முணுமுணுத்ததை கண்ட அவன் தந்தை “அப்போ வாசுகிட்ட இன்னிக்கு சாயந்திரமே பேசறேன்” எனவும் அவர் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்ட விக்ரமிற்கு ஏனோ மனம் நிறைந்து போனது.
“அப்போ அர்ஜூன் ஸ்வாதி கல்யாணத்தையும் நிச்சயம் செய்திடலாமா” ருக்மணி கேட்கவும் ஸ்வாதியும் அர்ஜூனும் எதுவுமே பேசாமல் மௌனமாக இருக்கவும் ஸ்ரீதேவி அவர்களின் சம்மதத்தை கேட்டார்.
என்ன தான் ஊரறிய நாங்கள் வாழ்விலும் பார்ட்னர்ஸ் என்று சொல்லிவிட்டாலும் அவர்களின் விருப்பத்தை நேரடியாக கேட்டு விடுவது நல்லது என்று நினைத்தார் அவர்.
இப்போது ஸ்வாதி அர்ஜுனின் முகம் பார்க்க
“எனக்கு கல்யாணமா? அது ஏழெட்டு ஆயிடுச்சு அத்தை” என அவன் சொல்ல அவன் முதுகில் ஓங்கி அடித்தாள் ஸ்வாதி. அழகாய் சிரித்தான் அர்ஜுன்.
“கோல்டன் ஸ்லாம் வின் பண்ணனும்மா” ஸ்வாதி மெல்ல சிணுங்க
“சரி அதுக்குள்ளே நான் மத்த எல்லாரையும் டைவர்ஸ் பண்ணிடறேன்’ என்றான் அர்ஜுன் அங்கே அழகான சிரிப்பலைகள்.
இருவருக்கும் அந்த திருமண பேச்சை மறுக்கத் தோன்றவில்லை என்பதுதான் இனிப்பான நிஜம்.
இப்போ நிச்சியம் மட்டும் செய்திடலாம் கண்ணா” ஸ்வாதி அர்ஜூனின் லட்சியம் கோல்டன் ஸ்லாம் என்று அறிந்தவர் கூறவும் சரி என்று இருவரும் தலையாட்டினர்.
(ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாமுடன் சேர்த்து ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வதை கோல்டன் ஸ்லாம் என்பர்)
உணவு முடிந்து நக்ஷத்ரா ட்ரஸ்ட் குறித்தும் அதை ரங்கநாதனின் அகேடமியில் இணைப்பது பற்றியும், ட்ரஸ்ட்டிற்காகவும் ரசிகர்களுக்காகவும் ஸ்வாதி அர்ஜூன் இருவருக்குமிடையில் பிரண்ட்ஷிப் மேட்ச் நடத்தாலாம் என்றும் ஆலோசித்து அது குறித்த ஏற்பாடுகளை விவாதித்திக் கொண்டிருந்தனர் அனைவரும்.
மாலை மங்கும் நேரம்.
சூரியன் மறைந்து விட்டானா என்று மெல்ல எட்டிப் பார்த்த நட்சத்திரங்கள் நிலவிடம் தம்ப்ஸ்அப் காட்ட தனது உலாவிற்கு தயாரானது வெண்ணிலவு.
பகலோ இரவோ கரையை முத்தமிட நாங்கள் ஓய்ந்ததேயில்லை தெரியுமா என்று ஆர்பரித்துக் கொண்டிருந்தன அலைகள்.
பீச்சீன் மணலில் அர்ஜூனின் தோளில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் ஸ்வாதி. அவள் நினைத்தும் பார்த்திரா நிகழ்வுகள் இந்த மூன்று நாட்களில் நடந்ததை இன்னும் அவளால் முழுவதுமாக கிரகித்துக் கொள்ள முடியவில்லை தான்.
ஆனால் இந்த நிமிடம் விஜயனின் தோளில் சாய்ந்து கொண்டிருக்கிறாள் குஷ்பூ. இது தான் சாசுவதம் என்று அவளுக்கு தெளிவாக புரிந்திருந்தது.
“குஷ்பூ”
“ம்ம்”
“அன்னிக்கு விக்ரம் எனக்கு வாட்ச் கிப்ட் செய்த போது எனக்கில்லையான்னு கேட்டியே”
“ம்ம்”
“என்கிட்ட நீ ஒரு போதும் கிப்ட் கேட்டதே இல்லையே ஏன்?” அர்ஜுன் கேட்க நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் அவன் குஷ்பூ.
வான் மேகங்களும், நிலவும், நட்சத்திரங்களும், அலையும் அவர்களை தான் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
“தெரியல” என்றாள் அவள். அது தான் உண்மையும் கூட.
அவள் முன் தனது கையை நீட்டினான் அர்ஜூன். அவன் உள்ளங்கையில் எதை மறைத்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகின்றன அவன் விரல்கள்.
“நம்ம சில்வர் ஜூப்ளி பர்த்டேக்கு உனக்கு கொடுக்கணும்னு வச்சிருந்தேன்” அன்று கொடுக்க முடியாமல் போனதன் வருத்த ரேகைகள் அவன் முகத்தில்.
ஆனால் ஸ்வாதியின் விழிகளோ வான் நட்சத்திரங்கள் அனைத்தும் தோற்றுப் போகும் படி ஒளிர்ந்தன. அவள் முகத்தின் பிரகாசமோ நிலவிற்கு சவால் விட்டது.
“ஹை…எனக்கு நீ கிப்ட் வாங்கி வச்சிருந்தியா. காட்டு காட்டு” அவளின் ஆர்வமும் உற்சாகமும் அவனையும் தொற்றிக் கொண்டது.
“இந்த பிடி” என்றவன் அவளுக்கு போக்கு காட்டி ஓட அவள் அவனை துரத்திக் கொண்டிருந்தாள்.
அவள் அவனை எம்பிப் பிடிக்க அலையும் அவளுக்கு உதவி செய்ய இருவரும் மொத்தமாய் நனைந்து மணலில் விழுந்தனர்.
“எனக்கு பொறுமையில்லை. நான் கீழேயே போய் பார்க்க போகிறேன்” என்ற மேகம் மழைத்துளியாய் வடிவம் கொண்டு அர்ஜுனின் கரத்தை ஸ்பர்சிக்கும் முன் ஸ்வாதி அவனது விரல்களைப் பிரித்திருந்தாள்.
ஸ்டார் வடிவ பென்டன்ட்டில் ஒற்றை பிங்க் நிற முத்து பதித்த தங்கச் சங்கிலியை அவள் ஆசையாக பார்த்துக் கொண்டிருக்க அந்த முத்தின் மேல் முத்தமிட்டுச் சென்றது ஓர் மழைத்துளி.
“ஸ்வாதி நட்சத்திரத்தில் மழை பெய்யும் போது அதில ஒரு துளியை சிப்பி முத்தாக பாதுகாத்து வைக்குமாம்” அர்ஜூன் சொல்லவும் அவனை நோக்கியவளின் முகத்தில் கொள்ளை மகிழ்ச்சி.
“போட்டு விடு” அவள் சொல்லவும் அவளின் கழுத்தில் அவன் அணிவிக்க மழைப்பூக்கள் தூவி வாழ்த்தியது வானம்.
error: Content is protected !!