Skip to content
Post Views: 1,039
விழிகள் 2
“இந்த கல்யாணத்துல எந்த குறையும் வந்துரகூடாது மாப்பிளை.. எல்லாத்தையும் நீங்க எல்லாரும் தான் கவனிக்கனும்” என சுந்தராம்பாள் கூற.. மாப்பிளைகள் தலையாட்டினர்..
Advertisement
“அதெல்லாம் ஜமாய்ச்சுடலாம் அத்தை..”
“ஆமா அத்தை எதுவும் கவலைப்படாதீங்க..”
Advertisement
Advertisement
“ஹ்ம்ம்..”
“சுந்தராம்பா பொண்ணு வீட்டுல கேட்டுட்டேன்.. நம்ம பக்கம் பேரு மட்டும் போட்டுக்க சொன்னாங்க.. அவங்க சொந்தக்காரங்க பேரு வேண்டாமா..”
Advertisement
“இது என்னமா இப்படி சொல்றாங்க.. கல்யாணத்துல சொந்தபந்தம் பேரு போடணும் தானே..” என கஜலட்சுமி கேட்டாள்..
“அது ஒன்னுமில்ல அண்ணி.. எல்லாரும் பேரு மட்டும் போடணும்ன்னு நினைக்க மாட்டாங்க.. அவங்க தொழில் படிப்பு இப்படியெல்லாம் போட சொல்வாங்க.. ஒருத்தர் நல்லா வசதியா இருப்பார்.. இன்னோருத்தர் ஏழ்மையா இருப்பார்.. அவனுக்கு அப்படி போட்ருக்க.. எனக்கு இப்படி போட்ருக்க.. என்னை அசிங்கப்படுத்திட்டியான்னு ஆயிரம் பிரச்சனை வரும்.. அதான் மொத்ததுக்கு யாரு பேரும் சில இடங்களில் போடமாட்டாங்க.. பொண்ணு வீட்டுக்காரவங்க அப்படி நினைக்கிறாங்கன்னு தோணுது” என தான்யலட்சுமி கணவன் சொல்ல..
சுந்தராம்பாள் “ஹோ இருக்கும்.. சரி அதை விடுங்க.. அவங்க இப்படி சொல்லியாச்சுல்ல இனி நம்ம பக்கம் ஆக வேண்டியதை பாருங்க..” என கூறினார்..
“பொண்ணு வீட்ல இருந்து எப்ப நம்ம வீடு பார்க்க வராங்க.” என கேட்டார் சுந்தராம்பாள்
“இன்னும் ரெண்டு நாள்ல வரதா சொல்லி இருக்காங்க” என சொன்னார் சதாசிவம்..
“அப்புறம் ஏதோ வரவேற்பு வைக்கணும்னு சொன்னாங்களே, அத கல்யாணம் முடிஞ்சு ஒருவாரத்துக்கு அப்புறம் வைக்க சொல்லுங்க” என சுந்தராம்பாள் கூற அனைவரும் அவரை பார்த்து விழித்தனர்..
“அத்தை ரிசப்ஷன் எல்லாம் கல்யாணமான மறுநாள் இல்ல ரெண்டு நாளிலேயே வைக்கிறது” என கார்த்திக் சொல்லவும் சுந்தராம்பாள் முகம் கடுகடுத்தது..
இந்த வீட்டில் அவரின் முகத்திற்கு நேராக தன் எண்ணங்களையும் எதிர்ப்பையும் சொல்லக்கூடிய, ஒரே மாப்பிள்ளை கார்த்திக் மட்டும் தான். அதனால் சுந்தராம்பாளிர்க்கு அவன் மீது சற்று கடுப்பு..
தாயின் முகம் கடுகடுவென மாறுவதை கண்ட தான்யா, “ஏங்க நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என தன் கணவனை பார்த்து முறைப்பும் கெஞ்சுதலுமாக சொல்ல, அவன் தோளை குலுக்கியவாரு அமர்ந்து கொண்டான்..
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும் மாப்பிளை, கல்யாணம் முடிஞ்சு, என் மகன் குலதெய்வ கோயிலுக்கு பொங்க வச்சுட்டு அப்புறம் அவளோட அக்காளுங்க எல்லார் வீட்லயும் விருந்து கொண்டாடி முடிச்சிட்டு தான் மதுரைக்கு போகனும். அதோட மறுவீடு அவுக உறவுமுறை விருந்தெல்லாம் முடிஞ்சுட்டு, ஒருவாரம் கழிச்சு வரட்டும். அதுக்குத்தான் ஒருவாரம் செண்டு போக சொன்னேன்” என நீட்டி முழங்கினார் சுந்தராம்பாள்..
ஆக மொத்தம் இந்த அத்தையம்மா, இவங்களோட சடங்கு, பொண்ணுங்க வீட்டு விருந்துன்னு எல்லாத்தையும் முடிச்சிட்டு தான், என் மாப்பிள்ளை மாமனார் வீட்டு பக்கமே போகணும்னு மறைமுகமா சொல்றாங்க என உள்ளுக்குள் தன் அத்தையின் சாமர்த்தியத்தை நினைத்து பல்லைக் கடித்தான், கார்த்திக்.
*********************************
இன்னும் சற்று நேரத்தில் பெண் வீட்டிலிருந்து மாப்பிளை வீட்டினரை பார்க்க அல்லிமலரின் குடும்பம் வர இருக்கிறது..
அதனால் சுந்தராம்பாள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தார்..
அப்பொழுது கடைசி மகள் தான்யலட்சுமி அங்கு வர, அவரின் முகம் மாறியது..
“என்னடி உடுப்பு இது, பொண்ணு வீட்டு காரவுங்க முன்னாடி இப்படித்தான் நூல் சேலைய கட்டிக்கிட்டு நிப்பியா, கழுத்துலயும் ஒன்னும் போடாம இருக்க, போடி நல்ல ஒரு பட்ட எடுத்துக் கட்டு, கழுத்துல ஆரம் நெக்லசை எடுத்து போடு.” என தன் மகளை விரட்டினார் சுந்தராம்பாள்.
“அம்மா இதுவே நல்லா தான்மா இருக்கு” என நூல் புடவையை சுழற்றி காண்பித்தாள்.. அது அவளுக்கு மிகவும் நன்றா தான் இருந்தது.. தரமாகவும் விலை கூடியதான புடவை தான்.. ஆனால் சுந்தராம்பாளிர்க்கு அது ஏற்றதாக தோணவில்லை..
“என்ன உன் புருஷன் சொன்னாரா இதெல்லாம் கட்டிக்காதன்னு” என சுந்தராம்பாள் ஆரம்பிக்கும் போதே, கையெடுத்து கும்பிட்ட தான்யலக்ஷ்மி, “அம்மா போதும் நான் போய் மாத்திக்கிட்டு வரேன் நீ அவர இழுக்காத” என தங்கு தங்குவென நடந்தவாரு தன்னறைக்கு சென்றாள்..
அஞ்சாவது பொண்ணு பிறந்தா அதிர்ஷ்டம்ன்னு சொல்லி சொல்லியே இவளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்துட்டாரு அந்த மனுஷன் என தன் கணவனை மனதிற்குள் திட்டிகொண்டிருக்க..
“கூப்பிட்டியா சுந்தராம்பா” என தன் மனைவியின் மனம் போக்கு தெரியாது, தானாகவே வந்து தலையை கொடுத்தார் சதாசிவம்..
“நீங்கதான மாப்பிள்ளை அதான் எல்லாரும் உங்களை தேடிகிட்டு இருக்காங்க, எந்த வேலையாவது உருப்படியா செய்ய தெரியுதா எல்லாம் என் தலைவிதி” என சுந்தராம்பாள் திட்ட, என்ன ஏதேன்று கூட புரியாது பாவமாக திட்டு வாங்கிக் கொண்டிருந்தார் சதாசிவம்..
“அம்மா அப்பாவ அப்பொறம் திட்டிக்கலாம் வாங்க, பொண்ணு வீட்டுக்காரவுங்க வந்தாச்சு” என தாயை அழைத்தாள் சந்தானலட்சுமி..
“அட ஆமாடி” என வாசலுக்கு விரைந்த சுந்தராம்பாள் “சும்மா மச மசன்னு நிக்காம, என் பின்னாடி வாங்க” என அப்போதும் தன் கணவரை திட்டு விட்டே செல்ல, சதாசிவமும் பாவமாக தன் மனைவியை பின் தொடர்ந்தார்..
வாங்க வாங்க என அனைவரையும் வரவேற்று உபசரிக்க ஆரம்பித்தனர். எல்லா சம்பிரதாய பேச்சுக்களும் முடிந்து, தாலி உருக்குவதற்கு, திருமணப்பட்டு எடுப்பதற்கு பந்தக்கால் நடுவதற்கு என நாட்களும் இரு குடும்பத்தினரால் குறிக்கப்பட்டது..
“அப்பொறம் சம்பந்தி மதுரையில நடக்கப்போற வரவேற்ப கல்யாணம் முடிஞ்சு ஒருவாரம் கழிச்சு வைங்க. முதல் நாள் நிச்சயம் மறுநாள் கல்யாணம் அப்பொறம் குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்கிறதுன்னு அடுத்தடுத்து இருக்கு. அதோட வரவேற்பும் வச்சா பசங்க உடம்புக்கு முடியாம போயிடப்போகுது” என சுந்தராம்பாள் சொன்னார்..
ராமநாதன் சிறிது நேரம் யோசித்தாலும், “ஆமாங்க சம்மதியம்மா நீங்க சொல்றது சரிதான். கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு ரிசப்ஷன் வச்சுக்கலாம்” என தன் சம்பந்தி முடிவிற்கு மறு வார்த்தை கூறாது சம்மதம் சொன்னார்.
அதில் சுந்தராம்பாளிர்க்கும் அவர் பெண்களுக்கும் ஏகத்திருப்தி.
“எங்க எப்படி பேசினா காரியம் சாதிக்கலாம்ன்னு உங்க அம்மா கிட்ட தாண்டி கத்துக்க முடியும்” என தன் மனைவியின் காதில் முனுமுனுத்தான் கார்த்திக்..
“ஷ்ஷ் அமைதியா இருங்க”
பிறகு விருந்து முடித்து ராமநாதன் மற்றும் அவரை சார்ந்தோர் கிளம்பிவிட்டனர.
**************************************
“ஏன்டி ஒருமாதிரி மூஞ்ச தூக்கி வச்சுருக்க?” என விஜயலட்சுமியை பார்த்து கேட்டாள் சந்தானலட்சுமி..
“அதெல்லாம் ஒன்னுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்..” என நொடித்துக் கொண்டாள்..
“அக்கா உனக்கு இன்னும் புரியலையா? அக்காவோட நாத்தனாவை தனாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலேன்னு கோவமா இருக்கா..” என கேலியாக கூறினாள் தான்யா..
“ஏய் உன் வேலைய பார்த்துட்டு போ..”
கஜலட்சுமி “ப்ச் இப்போ ஏன்டி அவகிட்ட எரிஞ்சு விழுகுற.. அதான் அம்மா வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்கள்ல.. அதை விடு..”
“ப்ச் போக்கா.. நமக்கு இருக்கிறது ஒரே தம்பி.. அவனை சொந்தத்துல கொடுத்தா நம்ம பேச்சு அவன் பொண்டாட்டிகிட்ட எடுபடும்.. உனக்கே தெரியும் என்னதான் அம்மாக்கு நாம எல்லாம் சமம்னாலும், தனாக்கு மட்டும் அம்மா கொஞ்சம் அதிகம் பார்க்கும்.. அதை உங்களால இல்லைன்னு சொல்ல முடியுமா.. என் நாத்தனாவா இருந்தா தம்பிகிட்ட இன்னும் நெருங்கி இருக்கலாம்.. அம்மாக்கு தெரிஞ்சும் தெரியாமையும் அவன் நமக்கு செஞ்சுக்கிட்டு இருந்திருப்பான்.. நீங்க எல்லாம் அம்மாகிட்ட சொல்லிருந்தா அம்மா கொஞ்சம் யோசிக்கவாவது செஞ்சிருப்பாங்க..” என கோபமாக கூறினாள்..
சுந்தராம்பாள் மகன் மகள்களுக்கு அனைத்தும் செய்வார்.. அவர்கள் கேட்பதை வாங்கி கொடுப்பார்.. ஆனால் அது அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே.. அவருக்கு ஒன்று பிடிக்கவில்லையெனில் பிள்ளைகளுக்கும் அது பிடிக்ககூடாது.. விஜயலட்சுமிக்கு தங்களுக்கு நிகரான அந்தஸ்த்தில் உள்ள இடத்தில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை.. ஆனால் சுந்தராம்பாள் ஒப்புக்கொள்ளவில்லை.. அவளின் மூத்தவர்களைப் போல அவளுக்கும் நடுத்தர குடும்பத்திலிருந்து தான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தார்.. அந்த கோபம் இன்னும் விஜயலட்சுமிக்கு தன் தாயின் மேல் இருந்தது..
இங்கபாரு விஜயா.. பெரிய இடத்துல இருந்து மாப்பிளைங்க வந்துட்டா நாம எல்லாம் இப்படி ஒன்னா உட்கார்ந்து பேசுமுடியாது.. இப்போ நம்மகிட்ட என்ன இல்லை பணம் இல்லையா.. இல்லை அந்தஸ்து இல்லையா.. இல்ல மாமியார் வீட்டுல மரியாதை இல்லையா.. எல்லாம் அதிகமாகத்தான் இருக்கு.. அம்மா நாலையும் யோசிச்சு தான் நமக்கு இப்படி கல்யாணம் செஞ்சுவச்சிருக்காங்க.. அதோட தம்பிக்கு ஒன்னும் பெரிய இடத்துல இருந்து பொண்ணு பார்க்கலையே.. அவங்களும் நம்ம வீட்டுக்காரவங்க போலத்தானே.. சும்மா இதையே பிடிச்சுட்டு இருக்காத.. மத்ததையும் யோசி..” என பெரியவளாய் அவளுக்கு புத்திமதி கூறினாள் ஆதிலட்சுமி..
“ஹ்ம்ம் உண்மைதான்.. அம்மா தனாக்கு செய்யுறது மாதிரித்தான் தெரியும்.. ஆனா அதுல நமக்கான நலன் இல்லாம இருக்காது” என சந்தானம் கூறினாள்..
“நாம இப்படி பேசுறோம்ன்னு தெரிஞ்சாலே அம்மா என்ன செய்வாங்கன்னு தெரியாது.. ஒழுங்கா இருந்துக்கோ விஜயா” என கூறிசென்றார்கள்.. ஆனாலும் விஜயாவின் மனது சமன்பட மறுத்தது..
************************************
தொலைபேசியில் ஒளிர்ந்த தன்னவளையே விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தான் தனஞ்ஜெயன்.. திருமணத்தின் வேலைகள் அனைத்தும் சரூராய் நடந்துக்கொண்டிருந்தது..
அவர்களுக்கு சொந்தமான மண்டபத்தில் தான் கல்யாணம்.. பத்திரிக்கை விநியோகம் எல்லாம் சுந்தராம்பாளும் அவர் பெண்களும் பார்த்துக் கொள்கின்றனர்.. தொழில் முறை உறவுகளுக்கு தனஞ்ஜெயனும் அவன் மாமாக்களும் பார்த்துக் கொள்கின்றனர்..
இன்னும் முப்பது நாளில் திருமணம்.. ஆனால் இன்றுவரை அவனால் அல்லிமலரை பார்க்கவும் முடியவில்லை.. பேசவும் முடியவில்லை..
முடியவில்லை என்பதை விட அவன் முயற்சிக்கவில்லை என்பதே உண்மை.. திருமணத்திற்கு முன்பே முழுவதும் பேசிவிட்டால்.. சுவாரஸ்யம் இருக்காது என்பது அவனது எண்ணம்… காத்திருப்பிற்கு பின் வரும் காதலும் அன்பும் அலாதியானது..
“டேய் மாப்பிளை என்ன கனவா.. ஏன்டா இப்படி போட்டோவ பார்த்து கனவு காணுறதுக்கு தங்கச்சிக்கிட்ட பேசலாம்ல..”என அவன் முதுகில் அடித்தவாறு வந்தார், தான்யலட்சுமியின் கணவன் கார்த்திக்..
“அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா” என்று கூறியவன் முகத்தில் வெட்கபுன்னகை… அவன் மாமாக்களில் தனஞ்ஜெயனுக்கு மிகவும் நெருக்கம் கார்த்திக் தான்.. இருவரும் ஒருவித தோழமையுடன் பழகுவார்கள்.. இருவருக்கும் ஐந்தாறு வருடங்கள் தான் வித்தியாசம்…
“ஏண்டா.. அந்த பிள்ளைக்கும் ஆசையா இருக்காதா..”
“இல்ல மாமா அதெல்லாம் வேண்டாம் அம்மாக்கு பிடிக்காது.. நாளைக்குத்தான் புடவை எடுக்க போறோம்ல.. அப்போ பார்த்துக்கிறேன்..”
“என்னமோ போ..” என சலித்தவாறு சென்றான்..
***********************************
தஞ்சையின் முகப்பெரிய பட்டுமாளிகையில் முகூர்த்தபுடவை எடுப்பதற்காக இருகுடும்பமும் கூடியிருந்தனர்.. நடுவினில் அல்லிமலர் அமர்ந்திருக்க ஒருபக்கம் சுந்தராம்பாளும் மறுபக்கம் அவளின் தாயும் அமர்ந்திருக்க.. அவர்களின் பின்னே லட்சுமி சகோதரிகள் மற்றும் அல்லியின் பெரியம்மா, சித்தி, அத்தை எல்லாம் புடவை பார்ப்பதற்கு வாகாய் நின்றுக்கொண்டிருந்தனர்..
அப்பாவி ஆண்மக்கள் அவர்களின் உடை குழந்தைகளுக்கான உடை கூட எடுத்துவிட்டனர்.. ஆனால் இன்னும் பெண்களின் புடவை தேடுதல் முடிந்த பாடில்லை.. அவர்கள் பாவமாய் ஓரிடத்தில் அமர்ந்திருக்க.. தனஞ்ஜெயன் மட்டும் சகோதரிகளின் அருகே நின்றிருந்தான்…
மலர் எந்த புடவையை எடுத்தாலும் சுந்தராம்பாளும் அவர் மகள்களும் அது சரியில்லை இது சரியில்லை என மறுத்துக்கொண்டிருக்க, மலர் பாவமாய் அமர்ந்திருந்தாள்..
அவள் வந்த சிறிது நேரத்திலேயே அவளுக்கு விருப்பமான நிறத்தில் அழகிய வேளைப்பாடுள்ள புடவையை எடுத்துவிட்டாள்.. ஆனால் சுந்தராம்பாள் “என்னம்மா இந்த கலர்ல எடுத்திருக்க… கல்யாணத்துக்கு அரக்கு இல்லனா சிவப்பு கலர்ல தான் புடவை எடுக்கனும்.” என தன் கணீர்க்குரலில் கூறியவர்.. அடுத்து அவள் எடுத்த சிவப்பு நிற புடவைகளுக்கும் ஏதேனும் கூறிக்கொண்டிருந்தார்..
ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த அவள் தாய் கற்பகம்… “சம்பந்தி மலர்க்கு சரியா எடுக்க தெரில.. பேசாம நீங்களே ஒரு புடவைய எடுத்துடுங்களேன்..” என கூற..
சுந்தராம்பாள் “ம்ம்ம் அதுவும் சரிதான்.. இந்த காலத்து புள்ளைகளுக்கு பாரம்பரியமான புடவை எடுக்க தெரியல..” என மிடுக்குடன் கூறி.. நல்ல அர்தபழையதான டிசைனை எடுக்க.. மலர் பரிதாபமாய் தன் அம்மாவை பார்த்தாள்.. கற்பகம் மகளின் மனம் புரிந்து… அவள் விரல்களுக்கு அழுத்தம் கொடுக்க.. தன் விழியை திருப்பினாள்..
தனஞ்ஜெயனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவனுக்கே தன் தாய் எடுத்த புடவையில் அவ்வளவு விருப்பமில்லை என்றால்.. மலரின் நிலையை சொல்லவேண்டுமா.. அங்கிருந்த ஓர் அரக்கு நிற புடவை அவனின் கவனத்தை மிகவும் ஈர்க்க.. “அக்கா அம்மாகிட்ட இந்த புடவையை எடுக்க சொல்லேன்.. இது அவளுக்கு ரொம்ப அழகாயிருக்கும்.. அதோட அவளுக்கு பிடிச்ச புடவைய நிச்சயம் புடவையா எடுத்துக்கொடுக்க சொல்லேன்..” என தன் கடைசி சகோதரி தான்யலட்சுமியிடம் கெஞ்ச..
“பார்ரா.. இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள புடவையெல்லாம் செலக்ட் பண்ண ஆரம்பிச்சுட்ட..” என தம்பியை ஓட்டினாலும்.. தாயிடம் கூறி அந்த புடவையையே எடுத்தாள்..
மலருக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.. அதோடு அவள் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி தெரிய.. தனஞ்ஜெயனும் ஹேப்பி..
error: Content is protected !!