Skip to content
Post Views: 4,325
“ஹாய் பரணி! குட் மார்னிங்!” என்றாள் ஜனனி தன் முகபாவத்தை மறைத்துக்கொண்டு போலியாக சிரித்தபடி.
“குட் மார்னிங்” என்றான் வேண்டா வெறுப்பாய் பரணியும்!
“இவ எதுக்கு இப்ப இங்க வந்தா என்ற பார்வையுடன்! இவளுக்கு எல்லாம் இது அர்த்த ஜாமம் ஆச்சே!” என்ற நினைப்புடனும்!
“ஹாய்!” என்றாள் ஜான்வி ஜனனியைப் பார்த்து சிநேகமாய் சிரித்தபடி!
Advertisement
“ஹாய்!” என்று என்று சொல்லி பரணி அருகில் உட்காரப் போனாள் ஜனனி.
அவன் டக்கென்று எழுந்து கொண்டான், “ஓகே ஜானு, சீக்கிரம் கிளம்பு” என்றபடி!
“எங்க போறோம் பரணி?” என்று ஜனனி கேட்க,
Advertisement
“நான் ஜான்வியை சொன்னேன், அவளுக்கு ட்யூட்டிக்கு டயம் ஆச்சு! உன்னை இல்லை தீபிகா!” என்றான் பரணி.
Advertisement
சுறுக்கென்றது ஜனனிக்கு!
முன்பு எல்லாம் அவளை அவன் ஜானு என்று அழைத்தால்,
“ப்ளீஸ் பரணி, என்னை தீபு என்று கூப்பிடு, ஜனனி என் அப்பாவின் எக்ஸ்சோட பேர், அத சொல்லிக் கூப்பிட்டா எனக்குப் பிடிக்கல!” என்பாள்.
Advertisement
ஆனால், “எனக்கு ஜானுன்னு கூப்பிட தான் பிடிச்சுருக்கு” என்றால் கோபப்பட்டும் இருக்கிறாள்!
அதைத்தான் இப்போது குத்துகிறான் அவன்!
“கமான் ஜானு லெட்ஸ் கோ” என்று ஜான்வியை தோளோடு அணைத்த மாதிரி அவன் அழைத்து செல்வதைக் குரோதம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி!
அன்று மாலைக்குள் அவளுக்கு எல்லோருடைய தினப்படி நடவடிக்கைகள் எல்லாம் தெரிந்து விட்டிருந்தன.
முக்கியமாக ஜான்வியும் பரணியும் தனிமையில் எப்போது சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதை அவள் ஒருவாறு தெரிந்துக் கொண்டு, அந்த நேரம் அவர்களை சந்திக்க விடாமல் பண்ண வேண்டும் என்றும் முடிவு எடுத்து காத்திருந்தாள்.
பரணிக்கு வேலை கொஞ்சம் அதிகம் தான்! பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்திருந்த போதிலும்!
அவன் ஜான்வியை ஹாஸ்பிட்டலில் டிராப் செய்யும் நேரமும், இரவு உணவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் கார்டனில் அல்லது அவள் அவுட் ஹவுசில் வைத்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்!
அதுவே அவர்களுக்கான நேரம்!
இதை தான் கெடுக்க எண்ணினாள் ஜனனி!
ஆரம்பத்தில் ஜான்விக்கு நைட் ட்யூட்டி எல்லாம் கொடுக்கப்பட்டது.
ஆனால், இப்போது ஜகது சீப் டாக்டரிடம் பேசி அவளுக்கு பகலில் மட்டுமே டுயுட்டி அசைன் பண்ண சொல்லிவிட்டார்.
அதே போல, அவள் தன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டியை எடுக்கவும் இப்போதெல்லாம் விடுவதில்லை!
பரணி தான் டிராப் செய்ய வேண்டும் என்றும் சொல்லி விட்டார்.
மாலையில் மணி போய் கூட்டி வந்து விடுவான்.
முதல் நாள் இதை கவனித்த ஜனனி, அடுத்த நாள், அவளும் காலையில் எழுந்து கிளம்பி, பரணியிடம் “அம்மா சமயபுரம் கோவில் போக சொன்னாங்க, ப்ளீஸ் என்னை அங்க கூட்டிட்டு போக முடியுமா?” என்று கேட்டாள்.
அவன் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டு, “ச்ச்.” என்று சொல்லியபடி “சரி சீக்கிரம் போய் ரெடி ஆகிவா” என்றான்.
முடியாது என்று சொல்லலாம் தான்! ஆனால் கேள்வி வரும்!
அவளை ரொம்ப க்ளோஸ் பிரன்ட் என்று இதற்கு முன் இந்த வீட்டிற்கு அழைத்து வந்தவனும் அவன் தானே, மற்றபடி அவன் இவளைக் காதலித்ததோ, அதுக்கப்புறம் ப்ரேக் அப் ஆனதோ யாருக்கும் தெரியாதே!
வீட்டினரைப் பொறுத்தவரை அவள் பரணியின் பிரன்ட், கொஞ்ச நாள் இங்கு தங்க வந்திருக்கும் விருந்தாளி!
அப்படி அழைத்து வந்த விருந்தாளியை இன்சல்ட் பண்ணினால், ஏன் என்று கேள்விகள் வரும்!
இதைத் தவிர்க்கவே, வேறு வழியில்லாமல் தான் அவளையும் கிளம்ப சொன்னான்.
ஆனால் அவளுக்கு அவனுடன் தனியே போக வேண்டும், அதற்காக வேண்டும் என்றே லேட் பண்ணினாள்.
அப்போது தானே ஜான்விக்கு லேட் ஆகுது என்று அவளே அவள் ஸ்கூட்டியில் தனியே சென்று விடுவாள்!
ப்ளான் நன்றாகவே இருந்தது!
ஆனால், அதை எச்சில் தொட்டு அழித்து விட மூவர் கூட்டணி இருப்பதும், கூடவே இன்னொரு வாலண்டியர் வேறு இருப்பதும் அவளுக்கு தெரியவில்லை!
வாலண்டியர்? அது மணி தான்!
யாரும் எதுவும் சொல்லாமலே, அவனுக்கு இந்த ஜனனியைக் கண்டாலே பிடிக்க வில்லை!
அவளும் அவள் பார்வையும்! பெரிய மகாராணி பாரு!
பரணி அண்ணனுக்கும் ஜானு அக்காவுக்கும் நடுவே ஏன் இந்த சனியன் வருது என்ற எண்ணமே அவனுக்கு!
இங்கு நடப்பதைக் கவனித்த அவன், “அண்ணே, நீ ஜானு அக்காவைக் பைக்கில் கூட்டிட்டுப் போ, நான் இந்த புது அக்காவை காரில் கொண்டு போய் விடுறேன்” என்று சமய சஞ்சீவி போல வந்து பரணியின் டென்சனைக் குறைத்தான்!
“இதுவும் நல்ல ஐடியா இல்ல! சரி அப்ப தீபிகா, மணி உன்னை டிராப் செய்வான், இங்க ஜான்விக்கு லேட் ஆகுது, நீ பொறுமையா கிளம்பு!” என்றபடி சிட்டாக ஜான்வியுடன் பறந்துப் போய்விட்டான் பரணி!
போகும் அவர்களை ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி!
அவளை நமுட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது, நம்ம கனகு தான்!
ஜனனியைக் காரில் ஏற்றிக் கொண்ட மணி, அவளை சமயபுரம் பஸ் நிற்கும் இடத்தில் இறக்கிவிட்டு, “அக்கா, கோச்சுக்காதீங்க, பெரிய அய்யாவுக்கு அவசரமா கொஞ்சம் மருந்து வாங்கணும், ப்ளீஸ் நீங்க கொஞ்சம் இறங்கி, இதோ இந்த டவுன் பஸ்ல ஏறிப் போய்டுங்க, கவர்மென்ட் பஸ்! டிக்கெட் கூட ப்ரீ தான்” என்றான்.
பல்லைக் கடித்துக் கொண்டு அவனை முறைத்தபடியே காரை விட்டு கீழே இறங்கிக் கொண்டாள் ஜனனி!
பரணியுடன் சமயபுரம் கோவில் சென்று இளம் தம்பதிகள் போல அம்மன் தரிசனம் செய்து ஜோடியாக வீட்டிற்கு வந்து எல்லோருக்கும் ப்ரசாதம் கொடுத்து சீனைப் போட்டு,
வீட்டுப் பெரியவர்கள் குட் புக்கில் இடம்பெறலாம் என்று அவள் போட்ட ப்ளானை சொதப்ப வைத்த மணியை அவள் பார்த்த பார்வைக்கு புராணக் காலம் என்றால், அவன் எரிந்து அப்படியே சாம்பல் ஆகியிருப்பான்!
ஸோ சேட்!
அடுத்த நாள் சனிக்கிழமை. ஜனனி தன் அடுத்த முயற்சியை ஆரம்பித்தாள்!
அடுத்த நாளும் சீக்கிரம் கிளம்பியவள், பரணியிடம், “ஆமா, இங்க பக்கத்துல குணசீலம்னு ஒரு கோவில் இருக்காமே, திருப்பதிக்கு வேண்டிக்கிட்ட பிரார்த்தனையை இங்க கூட பண்ணலாம்னு அம்மா கிட்ட நேத்து யாரோ சொல்லியிருக்காங்க போல, அம்மா அவங்களோட ஒரு பழைய வேண்டுதல் ஒண்ணை என்னைப் போய் செய்துட்டு வர சொன்னாங்க. இங்க இருந்து பக்கம் தானாமே, ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் கூட்டிட்டு போறியா?”
“இன்று என்ன சொல்லி அவாய்ட் பண்றது?’ என்று பரணி யோசித்துக் கொண்டிருக்கும் போது பரத் வந்தான்!
அவனுக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு!
பின்னே, வீட்டில் நான் வெஜ் செய்வதில்லை என்று அவன் தானே அவளுக்கு பறப்பதில் இருந்து நீந்துவது வரை அத்தனை அசைவ சாப்பாட்டையும் ஹோட்டலில் இருந்து வர வைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறான்!
“நீங்க என் அண்ணாவோட கெஸ்ட்! நீங்க இங்க இருக்க போற இந்த ஒரு வாரமும் உங்களை நல்லபடி கவனிக்க வேண்டியது என்னோட கடமை!” என்று , அந்த “கெஸ்ட்” மற்றும் “ஒரு வாரம்” வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து சொன்னவனும் அவனே!
“கோவில் கோவிலா போற மூஞ்சியப் பாரு! கொஞ்சம் கூட வாயைக் கட்டாத இது தான் கோவிலுக்குப் போறேன்னு சொல்லி அவங்க பிரைவசியைக் கெடுக்க நினைக்குது! நான் விடுவேனா அதை ! வாடி வா!”
என்று உள்ளுள் நினைத்தபடி, ஜனனியை தன் பைக்கில் அழைத்து சென்றான் பரத்!
அவனுக்கும் அவளை சேர வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் விட மனதில்லை!
எனவே பாதி வழியில், வண்டியை நிறுத்திவிட்டு, “என்னென்னு தெரியல, பைக் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது, இருங்க, நான் உங்கள வேற எதாச்சும் வண்டியில ஏத்தி விடுறேன்” என்று சொல்லி , அப்போது பார்த்து அங்கு வந்து கொண்டிருந்த பால்க்காரர் வெங்கியிடன்,
“அண்ணே, எங்கண்ணே கோவிலுக்கா?”
“ஆமாம்பா, இன்னிக்கு சனிக்கிழமை, குணசீலம் போயிட்டு இருக்கேன்!”
“அப்போ ரொம்ப நல்லதா போச்சு, அண்ணே, இவங்க என் வீட்டு விருந்தாளி. இவங்களும் குணசீலம் தான் போறாங்க, வண்டி கொஞ்சம் ரிப்பேர் ஆகிடுச்சு, உங்களோட இவங்கள கொஞ்சம் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?”
“அதுக்கென்ன தம்பி, தாராளமா!, வாங்கம்மா, வந்து உட்காருங்க” அவர் முன்னே நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
ஜனனி வேறு வழியில்லாமல் அவளும் ஏறி உட்கார்ந்தாள்.
பின்னால் சீட்டே இல்லை, முழுக்க கம்பியால் ஆன சதுரமான ப்ரேம் மட்டுமே! அது பால் கேன் ஏற்றும் வண்டி!
அதில் தான் அவளை ஏற்றி விட்டான் பரத்!
முறைத்தபடியே சென்றாள் ஜனனி!
“போடி, போ, உன் வண்டவாளம் வீட்டுல இருக்கிற மத்தவங்களுக்கு வேணுமின்னா தெரியாம இருக்கலாம், ஆனா எனக்கு தெரியும்!
அண்ணன் முதல்ல உன்னை லவ் பண்ணிய விசயமும் தெரியும், நீ என் அண்ணனை எப்படி பேசி கழட்டி விட்டுட்டுப் போனேன்னும் தெரியும்!”
கதிரிடம் பரணி அவன் காதலைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது, அப்போது பதின்பருவத்தில் இருந்த பரத் ஒரு க்யூரியாசிட்டியில் ஒட்டுக் கேட்டு தெரிந்து கொண்டிருந்தான்!
பின் பரணியும் ஜனனியும் காரசாரமாக பேசி பிரிந்த போது அதை பேச்சை எதேச்சையாக கேட்டும் அறிந்து கொண்டவன் தான் பரத்!
அதனால் தான் அவளை வில்லி என்றே அழைத்தான் அவள் மறுபடி வந்த போது!
அவன் சொன்னதுக்கு தகுந்த மாதிரி தான் இருந்தன அவள் செய்கைகளும்!
வேண்டுமென்றே ஜான்வியை பரணியுடன் பேச விடாமல் செய்து கொண்டிருக்கிறாள்!
இரவு உணவு முடிந்த பின் கொஞ்ச நேரம் அவர்கள் தனியே சந்தித்துக் கொள்வதை அவனும் பாட்டிமார்களும் நன்கு அறிவார்கள்!
அதற்கேற்றார் போல அவர்களுக்கு இடம் விட்டு நாசூக்காக நகர்ந்தும் விடுவார்கள் மூவரும்!
ஆனால் இவள் வந்ததில் இருந்து, பழைய காலேஜ் கதைகளைப் பேசி, சோசியல் மீடியாவில் அவர்களின் நட்பு வட்டத்தை, அவர்களின் போஸ்ட்களை காட்டி அதையும் இதையும் வளவளவென்று பேசிப் பேசி, பரணியை நிறுத்தி வைத்து கொண்டிருக்கிறாள்.
அண்ணனும் வேறு வழியில்லாமல் போக வேண்டியிருக்கிறது!
அண்ணனுக்காக வெயிட் பண்ணிப் பார்த்து விட்டு தூங்கப் போயிடறாங்க ஜான்வியும்!
இது பத்தாதுன்னு காலையில் அவங்க சேர்ந்து போறதையும் தடுக்கப் பார்க்கிறியா நீ, விடுவேனா நான்!
பரத் உள்ளுக்குள் திட்டிக் கொண்டே அவன் பைக்கை எடுத்துக் கொண்டு ஆபிஸ் சென்றான்!
பார்த்தாள் ஜனனி!
தான் தான் பரணியோடு காரில் போக முடிவதே இல்லை, அட்லீஸ்ட் ஜான்வி போவதை ஆவது தடுக்க வேண்டும் என்று எண்ணி, நைசாக அவளுடன் பேச்சுக் கொடுத்தாள்.
மாதவிலக்கு சம்பந்தமாக அவளுக்கு இருக்கும் ஒரு சின்ன பிரச்சினைக்கு மருத்துவ ஆலோசனைக் கேக்கும் சாக்கில் அவளுடன் தனியே பேசப் போனவள், பேச்சுவாக்கில் சொல்வது போல,
“ஏன் ஜான்வி நீங்க தினமும் பரணியோடு டுயூட்டிக்கு போறீங்க! உங்களுக்கு ஏழு மணிக்குப் போகணும், அவனுக்கு பத்து மணிக்குப் போனா போதும்!
ஏற்கனவே அவனுக்கு நிறைய ஒர்க் ப்ரஷர், கண்டிப்பா தூக்கம் பத்தாது!
இப்ப உங்க கொண்டு போய் விடன்னு சொல்லி, நைட்டும் லேட்டா தூங்கிட்டு காலையிலும் உங்களுக்காக சீக்கிரம் எழுந்துக்கிறான், அவன் பாவம் இல்லையா?” என்று கேட்டாள்.
ஜான்வி யதார்த்தமாக, “நானும் சொல்லிப் பார்த்துட்டேன், கேட்டா தானே! அதுக்கு மேல இந்த அம்மாச்சிங்க ரெண்டுபேரும் விட மாட்டேங்கிறாங்க!”
“நீங்க தான் ஸ்ட்ராங் ஆ சொல்லிட்டு உங்க ஸ்கூட்டியில கிளம்பனும்! ரெண்டு நாள் கோச்சுப்பாங்க, அப்புறம் சொன்னா கேக்காதுன்னு அவங்களே விட்டுடுவாங்க! நீங்க டிரை பண்ணுங்க” என்று ஸ்க்ரு ஏற்றி விட்டாள்!
ரொம்ப நாள் கழித்து அன்று இரவு, ஜான்வியும் அவள் ஸ்கூட்டியை எடுத்து துடைத்து சார்ஜ் போட்டு விட்டுப் படுத்தாள்.
மறுநாள் காலை.
வழக்கம் போல ஜான்வி குளித்து சாப்பிட்டுவிட்டு, கிளம்பும்போது, பரணி வர, “நானே போய்க்கிறேன், நீங்க போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க” என்றாள்.
“ஏய் என்ன ஆச்சு உனக்கு இன்னிக்கு?” என்று அவன் ஆச்சரியமுடன் கேட்க,
“எப்படி போவ ஜானும்மா?” கனகு கேட்டார்.
“ஏன், என் ஸ்கூட்டில தான்”
“சார்ஜ் போட்டியே ஸ்விட்ச் ஆன் பண்ணினியா?”
“ம். போட்டேனே!”
“எங்க இங்க பாரு” அவர் காட்டிய போது ஆன் செய்யப்படாமல் இருந்தது அது!
“இது எப்படி ஆச்சு? நான் ஆன் பண்ணி தானே வச்சேன்!” என்றாள் ஜான்வி குழப்பத்துடன்!
“பேசிட்டு இருக்க நேரம் இல்ல, நீ கிளம்பு” என்றபடி அங்கு வந்த ஜகது அவள் தலையில் கொஞ்சம் முல்லைப் பூவை வேறு வைத்து விட்டு அனுப்பி விட்டார்!
இந்த முறையும் ஜனனியின் ஐடியா புஸ்..
ஆனால் அவளும் விடுவதாக இல்லை!
அடுத்தது இன்னும் கொஞ்சம் டிராமா சேர்க்க வேண்டியிருந்தது அவளுக்கு!
அவளால் தொடர்ந்து செய்ய முடிந்த ஒன்று, ஜான்வியையும் பரணியையும் இரவில் பேசிக் கொள்ள முடியாமல் செய்தது!
பகலில் இருவருமே பிஸி! இதில் பரணிக்கு போனில் கூட பேச நேரம் இருக்காது!
அன்று மாலை நேரம்.
வீட்டில் தமிழும் வத்சலாவும் மட்டுமே இருந்தனர்.
பாட்டிகள் இருவரும் ஊரில் ஒருவரின் இறப்பிற்கு சென்று இருக்க, பவி, பாரதி மற்றும் தாமரை கூட வீட்டில் இல்லை. பள்ளி, கல்லூரி, மற்றும் ஆபிசில்!
பரத் வெளியூர் சென்றிருந்தான்.
பரணியின் அப்பாவும் சித்தப்பாவும் கூட துணைக்கு மணியும் என்று அவர்களும் கூட பெரிய நியூரோ ஸ்பெசாலிஸ்ட் டாக்டரைப் பார்க்கவென்று ஹாஸ்பிட்டலில் இருந்தார்கள்.
ஜான்வியும் அவர்கள் கூட இருந்தவள், சீப் டாக்டர், “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொன்ன பிறகு வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
அப்போது பார்த்து தான் தன் டிராமாவை ஆரம்பித்தாள் ஜனனி!
திடீரென்று அவளுக்கு நெஞ்சு பட படவென்று அடித்துக் கொள்வதாகவும், மூச்சு விட முடியவில்லை, இடது தோள்ப்பட்டையில் வலிக்கிறது, வேர்த்துக் கொட்டுகிறது என்றெல்லாம் பரணியின் அம்மாவிடம் திக்கித் திணறி சொன்னாள், அவள் ரூமில் இருந்து மெல்ல சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்து!
தமிழ் அப்படியே பதறிப் போய் விட்டார்!
“இது என்ன, இப்படி ஊரான் வீட்டுப் பெண்ணிற்கு நம் வீட்டில் வைத்து இப்படி ஆகி விட்டது!”
அவர் பரணியை போனில் அழைத்து உடனே வரும்படி சொல்லி விட்டார்.
அவனும் உடனே வந்து விட்டான்.
“என்ன ஆச்சு தீபிகா, உனக்கு?”
“அது ஒண்ணுமில்ல, இன்னிக்கு இன்டர்வியூ கொஞ்சம் சொதப்பிட்டேன், வேலை கிடைக்குமோ கிடைக்காதோன்னு ஒரு பயம்!
அதையே நினைச்சுட்டு இருந்தேனா, அப்படியே பட படங்குது! பேச முடியல” அப்படியே அரை மயக்கமாக விழுவது போல் அவன் மேல் சாய்ந்தாள்.
பரணிக்கே கொஞ்சம் பாவமாகப் போய் விட்டது.
அவளை கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் ஏற்றிக் கொண்டான்.
காரை அவர்கள் ஹாஸ்பிட்டலை நோக்கி வேகமாக ஓட்டிசென்றான்.
எதிரில் டுயூட்டி முடிந்து தன் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் ஜான்வி!
அவளைக் கடந்து வேகமாக சென்றது பரணியின் கார். அவனின் கவனம் அப்போது ஜனனிக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்பது மட்டுமே!
நிஜமாகவே அவன் ஜான்வியைக் கவனிக்க வில்லை!
ஆனால் அவன் மேல் சாய்ந்துகொண்டு இருந்த ஜனனி ஜான்வியைக் கவனித்து விட்டு, வேண்டுமென்றே அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்!
ஜான்விக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது!
அவளுக்கும் ஜனனி அவனின் எக்ஸ் என்பது தெரியும்!
அவளிடம் மறைக்க வில்லை பரணி! ஆனால் ப்ரேக் அப் ஆகி விட்டதாக தானே சொன்னான்.
இப்போது இப்படி நெருக்கமாக காரில்!
“ச்சே. தப்பா நினைக்காதே!” என்று படித்த புத்தி சொன்னாலும், காதல் மனது ஏற்கவில்லை!
அது நெஞ்சம் முழுக்க சோகத்தை நிரப்பிக் கொண்டுவிட்டது!
அவள் பரணிக்கு போன் செய்தாள்.
அவன் அப்போது டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்ததால் கட் பண்ணினான். பின் அழைத்துப் பேச மறந்தும் விட்டான்!
இல்லை, போன் பேச, அதைப் பற்றி நினைக்கக் கூட அவகாசம் தரவே இல்லை ஜனனி!
ஒன்று மாற்றி ஒன்று அவனிடம் கேட்டுக் கேட்டு வைத்தாள். இதில் ஜான்விக்கு திரும்ப அழைக்கவே மறந்து விட்டான் பரணி!
இங்கே பெண் மனதில் சோகம் இன்னும் ஆழமாகி விட்டது!
என்ன செய்யப் போகிறாள் ஜான்வி!
error: Content is protected !!