Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 2

 மாடியறையில் தன் உடற்பயிற்சி முடித்த, பரணி, வியர்வையைத் துடைத்துக் கொண்டே சற்று நேரம் மாடி பால்கனியில் நின்று கீழே வேடிக்கைப் பார்த்தான்.

அந்த கிராமத்துப் பண்ணை வீடு, வழக்கம் போல், தன் காலை வேலைகளைத் துவங்கி விட்டிருந்தது.

மாடுகள் வெளியே கட்டப்பட்டு, மாட்டுக் கொட்டகையைக் கூட்டிப் பெருக்கி, ஹோஸ் கொண்டு தண்ணீர் விட்டு சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான் மணி. வீட்டோடு உதவிக்கு இருக்கும் பையன்.

படுத்தப் படுக்கையில் இருக்கும் அவன் அப்பாவுக்கு அவன் உதவிகளைக் கொண்டே எல்லா சேவைகளும் செய்துக் கொண்டிருக்கிறார் அவனின் சித்தப்பா  பாஸ்கர்.



Advertisement

உள்ளே அடுப்படியில் அம்மாவும் சித்தியும் குளித்து முடித்து விட்டு காபி வேலையைத் தொடங்கியிருந்தனர்.

வெளியே ஜாகிங் போயிருந்த பரத், திரும்பி வந்து, தங்கை பாரதியிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

“நானும் இனிமே அண்ணன் மாதிரி மாடியிலேயே ட்ரெட் மில்லில் எக்ஸர்சைஸ் செய்யப் போறேன்! வணக்கம் போட்டு மாளல எனக்கு!”

Advertisement

அவன் சொல்லிக் கொண்டிருந்தது பரணிக்கும் கேட்டது.

Advertisement

அவனும் இந்த காரணத்தால் தானே, அவன் ஆசைப்படி காற்றாட வெளியே ஜாகிங் போகும் ஆசையை விட்டுவிட்டு இப்படி வீட்டுக்குள் பண்ணுவது!

பெரிய பண்ணைக் குடும்பத்தின் தற்போதைய குடும்பத் தலைவன் பொறுப்பிலிருப்பதன் பொருட்டு செலுத்தப்படும் மரியாதை!

போகிற வழியில் எதிர்படுபவர்களுக்கு வணக்கம் சொல்லியும், அப்பா பற்றிய நல விசாரிப்புகளுக்கு பதில் சொல்லியே அந்த காலை வேளையிலேயே டயர்ட் ஆகிவிட்டிருக்கிறான் அவன் பலமுறை!

Advertisement

ஜாகிங் போகும்போது மட்டுமல்ல, நிம்மதியாக கோவில் சென்று சாமி கும்பிடவும் முடியவில்லை!

அவனுக்கு மிகவும் பிடித்த இடம் தான் அவன் ஊரில் இருக்கும் பழைய காலத்து சிவன் கோவில்!

ஆனால், இப்போது அங்கு போனாலும் குருக்கள் ஆரம்பித்து, மேளம் அடிப்பவர், அர்ச்சனை டிக்கெட் கிழிப்பவர், மடைப்பள்ளி ஆட்கள், கோவிலைக் கூட்டி சுத்தம் செய்யும் சிப்பந்திகள் வரை தொடரும் அவன் அப்பா பற்றிய நல விசாரிப்புகள்!

மனமொன்றி சாமி கும்பிடவும் முடியவில்லை அவனால்!

அதனால் அவன் கோவிலுக்கும் போவதே இல்லை.

போக நேரமும் இருப்பதில்லை என்பதும் உண்மை!

ஜெர்மனியில் அவன் பார்க்க விரும்பிய தனது கனவு வேலையைப் பார்க்க முடியாவிட்டாலும், அங்கு அவன் படித்த படிப்பை வீணாக்காமல், அதை இங்கு இந்த கிராமத்தில் இருந்தே செயல் படுத்த தொடங்கினான்.

அவன் சித்தப்பாவும் மாமாவும் இறந்த செய்திக் கேட்டு உடனே இங்கு வந்தவன் கண்டது, நிலை குலைந்து தடுமாறிக் கொண்டிருந்த குடும்பத்தை!

தனியாக எதையும் செய்ய தெரியாமல் நின்று தவித்துக் கொண்டிருந்த சித்தப்பா பாஸ்கரனை!

அவருக்கு அப்பா சொன்னால், சொல்வதை செய்ய தெரியும்! அவருக்காக எந்த சுயமாக எந்த முடிவையும் எடுக்கவே தெரியாது!

அம்மாவும் சித்தியும் குடும்பம் தவிர வெளியுலகம்  தெரியாதவர்கள்.

கடைசி சித்தி தாமரை மற்ற நேரமாக இருந்திருந்தால், எல்லாவற்றையும் அவளே ஏற்று நடத்தியிருப்பாள்.

ஆனால், அவளே இப்போது கதிர் மறைவினால் உடைந்து போயிருக்கும் போது, அந்த குடும்பம் அப்படியே தவித்து தான் போய்விட்டிருந்தது.

பரத் அப்போது தான் பள்ளியிறுதியில் இருந்தான். பவித்ராவும் பாரதியும் கூட பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆதவன் கேஜியில் மகிழினி இரண்டு வயதே ஆன கைக்குழந்தை!

நண்டும் சிண்டும் ஆன குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துப் போக கூட ஆள் இல்லாமல் இருந்தது அப்போது.

அந்த விபத்தில் சித்தப்பா மாமாவோடு இறந்தது, அந்த குடும்பத்தின் நம்பிக்கையான, துடிப்பான, அவனின் அப்பா இட்ட வேலைகளை பாஸ்கர் மறந்தாலும் நினைவுப்படுத்தி செய்து முடிக்கும் திறமையான டிரைவர் பழனியும் தான்!

யாரையும் புதிதாக வேலைக்கு சேர்க்கவே பாஸ்கருக்கு பயம்! மூன்று பெண் குழந்தைகள் உட்பட இந்த வீட்டின் அனைத்து வாரிசுகளையும் புதிய ஒருவனை நம்பி காரில் அனுப்பவே அவருக்கு பயம்!

பரணி தான், தனக்கு தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லி, ஒரு டிரைவர் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று!

இப்படி இந்த ஒரு விசயம் மட்டும் இல்லாமல் விவசாயம் பார்ப்பதிலும் கூட அவருக்கு சவால்கள் இருந்தன.

அவராக ஆட்களை அமர்த்தி சாகுபடி செய்யவும் பயம்!

குத்தகைக்கு ஆட்களை அமர்த்தவும் பயம்!

அவர் அண்ணனால் பேச முடியவில்லை. ஆரம்பத்தில் எழுதிக் காண்பிக்க சொல்லி கூட கேட்டு நடந்தார்.

சொல்ல நினைப்பதை தினகரனுக்கு எழுத வரவில்லை.

ஒரு கட்டத்தில் அதையும் கைவிட்டு விட்டார்.

தினமும் ஒரு பிசியோதெரபிஸ்ட் மூலம் அவருக்கு பயிற்சி அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

வருடங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இன்னும் அவரிடம் முழுமையான முன்னேற்றம், அல்லது சொல்லும்படியான முன்னேற்றம் இன்னுமே வரவில்லை.

ஆனால் அவர்கள் முயற்சியையும் நிறுத்தவில்லை!

இப்படி தன் குடும்பம் , பார்த்துக் கொள்ள தலைவன் இல்லாது தவித்துக் கொண்டிருக்கையில், தான் மட்டும் சுகமாக வெளிநாட்டில் வேலைப் பார்த்து ஜெயித்தாலும் அதைக் கொண்டாட குடும்பம் இல்லாமல் அந்த வெற்றிக்குப் பயனில்லை என்றே நினைத்தான் பரணி.

அதனால், வீட்டுப் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டான்.

சித்தப்பா பாஸ்கரன், அப்பாவைப் பார்த்துக் கொள்வதோடு ஒதுங்கிக் கொண்டார்.

பரணி, தான் படித்த படிப்பை, இங்கு செயல்படுத்தினான்.

புட் சப்ளை செயின் மானேஜ்மென்ட்டை இங்கு அவன் கிராமத்தில் இருந்தே செயல்படுத்தினான்.

FARM TO HOME அல்லது FARM TO FORK என்பது பரவலாக பேசப்படும் விசயமாக இருக்க, அதை தன் பண்ணை நிலத்தில் இருந்தே தொடங்கினான்.

அதாவது விவசாயியிடம் இருந்து, எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாகவே, பயன்படுத்தும் நுகர்வோரை விவசாயப் பொருட்களை உணவுப்பொருட்களை  சென்று சேர்ப்பது!

முதலில்  இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள் கீரைகளில் தொடங்கினான்.

அதை விற்பதற்கென அவனே ஒரு ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப் தொடங்கினான்.

படித்த, இதில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.

மேலும் அவர்களுக்கு சொந்தமான அரிசி ஆலையை நவீனப்படுத்தினான்.

இம்போர்ட் எக்ஸ்போர்ட் லைசன்ஸ் அப்ளை செய்து வாங்கினான்.

இங்கிருந்து நான்-பாஸ்மதி  ரைஸ் எனப்படும், நாம் சாப்பிடும் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்தான்.

அரிசி மட்டுமல்ல. வாழையிலை உள்ளிட்ட பொருட்கள் கூட!

கூடவே மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானியப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, அதற்கு தாமரையை CEO ஆக்கியிருந்தான் அவன்!

கதிர் இறந்த அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்த அவளை, அப்படியே விட்டு விட்டால், டிப்ரசனுக்குப் போய் விடுவாள் என்று, அவளை கட்டாயப்படுத்தி எம். பி ஏ சேர்த்து விட்டான்.

“குழந்தைகளை அம்மாவும் வத்சலா சித்தியும் பார்த்துப்பாங்க, நீங்க படிக்கிற வேலையை மட்டும் பாருங்க” என்று அனுப்பி வைத்து,

அவள் படித்து முடித்தவுடன் மில்லெட் கம்பெனிக்கு அவளையே CEO ஆக்கி, அவளை எப்போதும் ஏதாவது வேலையில் அல்லது பொறுப்பில் கமிட் பண்ணி  வைத்துக்கொண்டே தான் இருந்தான் பரணி!

“கொஞ்சம் நேரம் அவங்கள  ஐடில்(Idle)ஆ இருக்க விட்டா கூட  எதாச்சும் கதிர் சித்தப்பாவை பத்தி நினைச்சு அழுதுக்கிட்டே இருப்பாங்க, அதான், அவங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ராவா வேலை தரேன்” என்று கேள்விக் கேட்ட வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லி விட்டான்.

கொஞ்ச நாட்களில்  இன்ஜினியரிங் படித்து முடித்து விட்ட, தம்பி பரத்தையும் அவர்களின் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பொறுப்பு கொடுத்து உட்கார வைத்து விட்டான்.

வீட்டில் அவன் தங்கை பவித்ரா ஆங்கில இலக்கியம் படித்து விட்டு, டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியை!

பாரதி, எம் சி ஏ முதல் படித்துக் கொண்டிருக்கிறாள்.

அவர்கள் இருவரையும் கல்யாணம் ஆகிப் போகும் வரை வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வைத்திருந்தான்.

ஆன்லைனில் இபி, வைபை பில் கட்டுவது, வீட்டுவரி கட்டுவது, வீட்டிற்கு தேவையான மளிகை மற்றும் டெய்லி எசன்சியல் பொருட்களை வாங்குவது, வீட்டு மனிதர்கள் மற்றும் வாகனங்களின் இன்ஸ்யூரன்ஸ் கட்டுவது உள்ளிட்ட பொறுப்புகள் அவர்கள் இருவரிடத்தும்.

ஆதவனையும், மகிழினியையும் பார்த்துக் கொள்வது சித்தி வத்சலாவின் பொறுப்பு.

இவர்கள் எல்லோரையும் கவனித்துக் கொள்வது தமிழரசியின் வேலை.

இவர்கள் எல்லோருக்கும் ஹெட் ஆபிசர், வீட்டில் முக்கிய முடிவு எடுப்பவர், இன்னமும் தினகரனும் ஆத்தா ஜெகதாம்பாளும் தான்.

தினகரனால் பேச முடியாவிட்டாலும், அவர் தலையசைப்பைக் கொண்டு வேலைகள் செய்தனர் எல்லோரும்.

இப்படி ஒருவரிடமே எல்லா பொறுப்புகளும் இருந்து, அவருக்கு எதாச்சும் ஆகி விட்டால், குடும்பமே ஸ்தம்பித்துப் போகும் நிலை இனி வந்துவிடக் கூடாது என்றே பொறுப்புக்களைப் பிரித்துக் கொடுத்து இருந்தான் பரணி!

இதைத் தானே, தான் உயிருடன் இருக்கும் போதே, கதிர் பல முறை வலியுறுத்தியது!

ஆனால் யாரும் அப்போது அதைக் கேட்கவில்லை.

பரணிக்கு அவன் கதிர் சித்தப்பா என்றால் ரொம்ப நெருக்கம்!

பாஸ்கரிடமும் அன்பு உண்டு என்றாலும், அது கொஞ்சம் மரியாதைக் கலந்த அன்பு!

இது கொஞ்சம் நட்போடுக் கூடியது!

அவன் அப்பா தினகரனுக்கும் கடைக்குட்டி கதிருக்கும் இருந்த அதிக வயது இடைவெளிக் காரணமாக, பரணிக்கும் கதிருக்கும் எட்டு ஒன்பது வயதுதான் வித்தியாசம் இருக்கும்!

அதனால் அவர்கள் இருவரும் கொஞ்சம் நண்பர்கள் போலவே இருந்தனர்.

ஒன்றாகவே ஊர் சுற்றுவது, மரம் ஏறுவது, ஆற்றில் குளிக்கப் போய் ஆட்டம் போடுவது, திருட்டு தம் கூட அடித்து ஜெகதாம்பாளிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

“டேய்! கதிரு, நீ அவனுக்கு அப்பா முறைடா! அப்பனும் பிள்ளையும் மாதிரியாடா நடந்துகிட்டு இருக்கீங்க? அவனைக் கண்டிக்க வேண்டிய நீயே, கூட சேர்ந்துகிட்டு இப்படி அட்டூழியம் பண்றியேடா?” என்று இருவரையும் கம்பு எடுத்து அடித்தது இன்றும் பரணியின் நினைவில் இருக்கிறது!

பருத்தி வீரன் படம் பார்த்து விட்டு, அவனை அறிந்தவர்கள் எல்லோரும், “அப்படியே உங்க ரெண்டு பேர் மாதிரியே தாண்டா இருக்கு, சரவணன் கார்த்தியோட பாண்டிங்” என்று ஆச்சர்யப்பட்டார்கள்!

கதிர், அவனது அரசியல் ஆசானின் மகளை காதலிப்பது தெரிந்து, அவர்களுக்கு தூதுப் போனவனும் பரணி தான்!

தாமரைக்கும் கதிர்க்கும் திருமணம் நடக்க நிறைய உதவிகள் செய்தான் பரணி!

“என்னடா மவனே, இப்படி கொடுக்கிற காசுக்கு மேலே கூவுறே? என்னா விஷயம்?” கிண்டலாக கதிர் கூட கேட்டான் தான்!

“அது வந்து .. சித்தப்பு.. இந்த ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா, தான் பிள்ளை தானே வளரும்னு சொல்வாங்க இல்ல?”

“ஆமாம் . அதுக்கும் நீ செய்றதுக்கும் என்ன சம்பந்தம்?”

“ம்ம். உன் காதலுக்கு நான் இன்னிக்கு ஹெல்ப் பண்ணினா, நாளைக்கு நீ என் காதலுக்கு உதவிப் பண்ண மாட்டே? அதான்!”

“அடப்பாவி, நான் உன் சித்தப்பன்டா!”

“ஓ! சாருக்கு இப்ப தான் அது ஞாபகம் வருதா? தாமரை சித்திக்கு போன் போட்டுக் கொடுக்க சொன்ன போது அது எங்கப் போச்சு!”

“சரி விடுடா மவனே, யாருடா பொண்ணு! நம்ம ஊரா, இல்ல உன் கூட காலேஜ்ல படிக்கிறாளா?”

“கூடப் படிக்கிற பொண்ணு தான், பேர் ஜனனி தீபிகா! ஆனா நான் இன்னும் அவ கிட்ட என் லவ்வை சொல்லல!”

“சரி, அடுத்த மாசம் நம்மூர் காளிக் கோவில் திருவிழா வருது இல்ல, அப்ப நீ, உன் மத்த பிரண்ட்ஸ்சோட சேர்த்து, அவளையும் இங்க கூட்டிட்டு வா”

“சரி சித்தப்பா” என்றவன், அதே மாதிரி அந்த வருடம் அவளையும் அழைத்து வந்தான், நண்பர்களோடு நண்பர்களாக!

அவளும் அப்போது இங்கே வந்தவள், அடுத்து சென்னை திரும்பியவுடன், அவன் ப்ரபோஸ் செய்த போது ஏற்றுக் கொண்டாள்!

அவனோடு சேர்த்து அவனின் குடும்பத்தையும் அவளுக்கு ரொம்ப பிடித்து விட்டதாக சொன்னாள்!

அப்படி எல்லாம் சொன்ன அவளே தான், அவன் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க  வந்த போது , அவளிடம் அவன் இங்கேயே செட்டில் ஆகப் போவது பற்றி சொல்லியதும்,

“சாரி.. பரணி. நாம் ப்ரேக் அப் ஆறது நல்லதுன்னு நினைக்கிறேன்! என்னால எல்லாம் இந்த மாதிரி பட்டிக்காட்டுல வந்து, இந்த கிராமத்து ஜனங்களோட எல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்க முடியாது!

நான் உன் கூட ட்ரீம் செய்து வச்சுருந்த லைப் இது இல்லை! என்னால இவங்க எல்லாம் ஒரு நாள் கூட டாலரேட் பண்ண முடியாது!

இப்ப கூட பாரு, எட்டி நின்னு, நாம் பேசுறத பார்த்துக்கிட்டு இருக்காங்க! நான் தனியா இங்க உட்கார்ந்து இருந்தா, வந்து வந்து பார்த்துட்டுப் போறாங்க! ஒருத்தர் கூட பேசல! நான் என்ன ஜூ இருக்கிற குரங்கா! இவங்க வந்து வேடிக்கைப் பார்த்துட்டுப் போறதுக்கு?

சரி அவங்க தான் படிக்காதவங்கன்னு பார்த்தா , உன்னோட சிப்ளிங்க்ஸ் கூட யாரும் என் கிட்ட ப்ரண்ட்லியா பேச மாட்டேங்கிறாங்க!

நான் எப்படி இவங்க கூட சர்வைவ் பண்ண முடியும்?”

“ஏய்.. ஜானு! என்ன சொல்ற? அவங்க எல்லோரும் என் பாமிலி! நீ நான் வேணுமின்னா, அவங்களையும் ஏத்துக்க தான் வேணும்!”

“சாரி பரணி! அதான் நான் சொல்லிட்டேனே! ப்ரேக் அப் பண்ணிக்கலாம்னு! என்னால உன் லக்கேஜ்களை சுமக்க முடியாது!

கல்யாணம் பண்ணும் போது இப்படி சுமையோட வர உன் கூட சேர்ந்து பாரம் சுமக்கவெல்லாம் என்னால ஆகாது! ப்ளீஸ் என்னை விட்டுடு!”

“அப்ப.. அன்னிக்கு என் பாமிலியை பிடிச்சு இருக்குன்னு சொன்னியே! அது பொய்யா?”

“நிச்சயம் பொய்யில்லை! ஆனா, இப்படி ஒட்டுமொத்த ரெஸ்பான்சிபிலிட்டியையும் சுமந்துகிட்டு இருக்கிற உன்னோட நான் எப்படி சந்தோசமா லைப் ப லீட் பண்ண முடியும்? இம்பாசிபிள்!”

மனம் வெறுத்துப்போய் கோபமாக “கெட் லாஸ்ட்!” என்று கையை எடுத்துக் கும்பிட்டு விட்டு வந்து விட்டான்!

இதோ ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன!

ஐந்து ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள்!

ஆனால் எல்லாமே பாஸிடிவ் தான்! அவனின் காதல் தோல்வியைத் தவிர!

அவ்வபோது நினைவில் அவள் முகம் வந்தாலும், வலுக்கட்டாயமாக வேறு திசையில் எண்ணங்களை மாற்றிக் கொண்டு விடுவான் அவன்!

பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தவன், தலையை உலுக்கிக் கொண்டு, நார்மலுக்கு வந்து, பாத்ரூம் சென்று குளித்து விட்டு சாப்பிட சென்றான்.

“அம்மா, டிபன் ரெடியா!” என்றவாறு டைனிங் டேபிள் முன்னே அமர்ந்தான்.

“ம்ம் ஆச்சுப்பா, உட்கார்.”

“எங்கம்மா, பசங்க யாரையும் காணோம்?” சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.

“வருவாங்கப்பா, நீ எங்கயோ வெளிய சீக்கிரம் போகணும்னு சொன்னியே? நீ சாப்பிடு அவங்க வந்து சேர்ந்துப்பாங்க.”

“எங்க ஆத்தாவையும் காணோம்?”

“அவங்க ஜானுவ சாப்பிட கூப்பிடப் போய் இருக்காங்க”

“என்ன.. ஜானுவா?” ஒரு முறை உள்ளுக்குள் ஜெர்க் ஆனான் பரணி!

“ஆமாப்பா, அந்த டாக்டர் பொண்ணு ஜான்விய தான் கூப்பிடப் போய் இருக்காங்க, இன்னிக்கு புரட்டாசி மாசம் பொறந்துடுச்சு, இனி நம்ம வீட்டுல ஒரு மாசம் நான் வெஜ் கிடையாது, அதனால அந்த பொண்ண இங்கியே சாப்பிடனும்னு சொல்லிட்டாங்க உங்க ஆத்தா!

அந்த பொண்ணு கொஞ்சம் கூச்சப்படும் இங்க சாப்பிட! அதான் கையோட கூட்டிட்டு வரேன்னு போய் இருக்காங்க!”

“ஓ!” கொஞ்சம் நிம்மதியானான் பரணி!

டாக்டர் ஜான்வியைத் தான் இப்படி கூப்பிடறாங்களா!

அவன் அவளை ஜான்விதேவி என்று முழுப்பெயர் சொல்லித் தான் கூப்பிட்டு இருக்கிறான் ஒன்று இரண்டு முறை பேசிய போது கூட!

அவன் தான் அவளிடம் பேசியது இல்லையே தவிர வீட்டில் இருப்பவர்களோடு அவள் க்ளோஸ் என்று அவனுக்கும் தெரியும்!

குறிப்பாக ஆத்தாவிற்கு!

ஏனென்றால் ஆத்தாவை ஜகது என்று அழைக்கக் கூடியவர்கள் சிலரே! அவர்களின் தாத்தா, கனகு பாட்டிக்கு பிறகு அவனின் கதிர் சித்தப்பா மட்டுமே!

ஆனால் இந்த ஜான்வி ஆத்தாவை செல்லமாக அவர்கள் இருவரோடு கனகு பாட்டியும் மட்டுமாக இருக்கும் போது  “என்ன ஜகது, போ ஜகது வா ஜகது” என்று அழைப்பதை அவன் மாடியில் இருந்து கேட்டிருக்கிறான்!

ஆனால் அடுத்தவர் முன்னிலையில் அப்படியெல்லாம் கூப்பிட மாட்டாள் ஜான்வி!

“சரிம்மா, எனக்கு நேரம் ஆகிடுச்சு , நான் போய் ரெடி ஆகிறேன்” என்று சொல்லி விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான்.

அவன் வெளியே கிளம்ப தயார் ஆகி, வந்த போது கண்டது, பரத், பாரதி, பவித்ராவுடன் அரட்டை அடித்துக் கொண்டு, போனில் எதையோ காட்டி சிரித்துக் கொண்டிருந்த ஜான்வியை!

இவளும் படித்த சிட்டி பெண் தானே! இத்தனைக்கும் அவள் ஒரு டாக்டர்! இருந்தும் அவள் இங்கே கிராமத்து ஆட்களுடன் நன்றாக பழகுவதும், அவன் குடும்பத்தில் எல்லோரிடமும் நன்றாக மிங்கிள் ஆகி இருப்பதையும் பார்த்தவனுக்கு அவனின் ஜானு முகம் ஒரு முறை நினைவில் வந்து சென்றது!

“ச்சே. நான் ஏன் இப்படி ஜானுவுடன் இவளை கம்பேர் செய்துப் பார்க்கிறேன்!”

“நீ சொல்றதும் சரி தான்! போயும் போயும் அந்த ஜானு எங்கே, இந்த டாக்டர் ஜான்வி எங்கே? யாரோட யாரை கம்பேர் செய்றது?” அவன் மனசாட்சி கேட்டது!

தலையை உதறிக் கொண்டு கிளம்பும் முன், வழக்கமாக அவன் ஒரு முறை அந்த வீட்டின் பின் புறம் இருந்த பேக்கிங் செக்சன் கூடத்திற்கு சென்றான்.

போகும் வழியில் வீட்டின் பின்புறம் புறவாசல் வெளிப்புறம் இருந்த இடது புற திண்ணையில் அமர்ந்து, தன் மாத்திரை டப்பாவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார் ஜகது பாட்டி.

அவரைக் கடந்து, கூடத்தின் அருகே நின்று கொண்டிருந்த கனகுப் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தான் பரணி!

அங்கிருந்து ஜகதுவுக்கு ஏதோ சிக்னல் காட்டியது கனகு பாட்டி!

உடனே “யம்மாடி ஜானகி. இதில காலையில் போடுற மாத்திரை எதுன்னு எடுத்து கொடும்மா சித்த,” உள்ளே நோக்கி குரல் கொடுத்தார் ஜகது!

“இதோ வரேன் அம்மாச்சி” என்றபடி வெளியே வந்தவள், அவளின் காலை “எதுவோ” இடறி விட்டிருக்க, “அய்யோ” என்று கத்தியபடி கீழே விழப் பார்த்தாள் அவள்.

அது கொஞ்சம் சறுக்கலான ராம்ப் போன்ற இடம்!

இரு திண்ணைகளுக்கும் நடுவில் இருப்பது! நெல் மூட்டைகளை உள்ளே கொண்டுப் போய் வைக்க வசதியாக கட்டப்பட்டிருந்தது!

அதில் தான் இப்போது சறுக்கி விழப் பார்த்தாள் ஜான்வி!

ஆனால் விழ வில்லை! அதற்குள் அவளைத் தாங்கிப் பிடித்து விட்டிருந்தான் பரணி!

இப்போது தான் அவள் முகத்தை இவ்வளவு நெருக்கமாக பார்க்கிறான் அவன்!

அந்த அழகான முகம் பயம், அதிர்ச்சியுடன் கொஞ்சம் சங்கடத்தைக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் அதற்கு காரணம், அவன் அவளின் இடுப்பைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்துக்கொண்டதால் தான் என்று அறிந்தவன் டக்கென்று கைகளை எடுத்துக் கொண்டு “சாரி” என்றான்!

சொல்லிவிட்டு அவன் விரைந்து வெளியே சென்று விட்டான்.

ஜான்விக்குத் தெரியாமல் ஜகதுவை நோக்கி தம்ப்ஸ் அப் காட்டினார் கனகு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!