Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

வெந்து தணிந்தது காதல்! – 3

தனது பெருத்த உடலைத் தூக்கியபடி, ஆத்திரத்துடன் தன் முன்னே வந்து நின்ற உருவத்தை அசையாது பார்த்து நின்றாள் நவிரா.

“ஏய்.. என்ன தலைவரையே மரியாதை இல்லாம பேசற? பார்த்து நடந்துக்கோ. இல்ல.. இங்க இருக்கற அத்தனை பேரும் ஆம்பளைங்க.. உன்னை என்ன செய்வோம்னே தெரியாது.

நீயும் வேற கொஞ்சம் அழகா தான் இருக்க. வெளிநாட்டு குதிரை மாதிரி..” என்று அசிங்கமாகப் பேச, அதற்கும் கூட கொஞ்சமும் அசராது அவனையே நேராய் பார்த்த நவிரா, பொறுமையாக தனது இடுப்பிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தாள்.

அதைக் கண்ட அந்த தொப்பை, பக்கென வாயமூடிக் கொண்டு இரண்டு எட்டு பின்னே வைக்க, கொஞ்சமும் யோசிக்காது அவனது தோள்பட்டையை நோக்கிச் சுட்டாள் அவள்.



Advertisement

கட்சியிலிருந்த மொத்த பேரும் அதிர்ந்து போய் பயத்துடன் அங்குமிங்கும் ஓட, மீண்டும்.. “சைலன்ஸ்..” என்ற நவிராவின் கர்ஜனை மைக்கில் ஒலிக்க, அனைவரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து அசையாது அவளைப் பார்த்து நடுங்கியபடி நின்றனர்.

ஜீவானந்த தயாளனுக்கும், அவர்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லாத அதிர்ச்சி தான்.. பயம் தான்!

‘இவளுக்கு முழுசா மூளை கெட்டுப் போய்டுச்சா? கட்சியோட மினிஸ்டர்கள்ல ஒருத்தன் இவன். இவனையே சுட்டிருக்கா. போலீஸ் வந்து இவளை பிடிக்கும்னு தெரியாதா?’ என்றெல்லாம் அவர் யோசிக்க, தனது போனை எடுத்து தானே போலீசுக்கு அழைத்திருந்தாள் நவிரா.

Advertisement

மறுமுனையில் சென்னை சிட்டியின் கமிஷனர் போனை எடுக்க, இவள் தனது பெயரைக் கூறவும் முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

Advertisement

ஆனால், தமிழக மக்கள் கழகத்தின் புதிய தலைவர் பேசுவதாக அவள் கூறியதும் ஒரு இனம் புரியாத படபடப்பு அவருக்குள் எழுந்தது.

‘இந்தப் பொண்ணு, அமெரிக்காவுல ஏதேதோ நடந்து, செத்துப் பிழைச்சு இங்க வந்திருக்கு இல்ல?’ என்று தனக்குள்ளாக எண்ணியவர், “சொல்லுங்க மேடம்..” என்றார் தன்னையும் அறியாது உண்டான மரியாதையில்.

“இங்க என் கட்சி கூட்டத்துல, எங்க கட்சி மினிஸ்டர். தண்டபாணி, என்கிட்டே தப்பா நடக்க முயற்சி பண்ணினார். அதனால தற்காப்புக்கு அவரைத் தோள்பட்டைல சுட்டுட்டேன்.” என்று அவள் கூறியதும், தனது இருக்கையிலிருந்து சட்டென மேலே எழுந்தவரோ..

Advertisement

“மேடம்.. மேடம்! என்ன சொல்லறீங்க நீங்க?” என்று பதறியபடி கேட்டார்.

“ஆமாம் கமிஷனர் சார். இதுக்கு என் மேல, சட்டப்படி என்ன ஆக்ஷன் வேணாலும் எடுக்கலாம்.” என்று அவள் கூற, ஒரு கணம் கண்களை இறுக்க மூடித் திறந்தவரோ..

“நானே நேரா ஸ்பாட்டுக்கு வரேன் மேடம். கூடவே மினிஸ்டர். தண்டபாணியை ட்ரீட் பண்ண நானே டாக்டர்ஸ் டீமை கூட்டிட்டு வரேன். அது வரைக்கும் விஷயம் வெளில தெரிய வேணாம்.” என்று கூறி தனக்கு மிகவும் நெருங்கிய மருத்துவருக்கு போனில் அழைத்தவரோ, அவரிடம் விஷயத்தைக் கூற, ஒரு ஆம்புலன்சில் மருத்துவர்கள் குழு, கமிஷனுருடன் தமிழக மக்கள் கழகத்தின் கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டது.

செல்லும் வழியெல்லாம் கமிஷனருக்கு ஒரே யோசனை.

அவரைப் பொறுத்த வரைக்கும் தமிழகத்தை ஆண்ட, ஆளும் இரண்டு கட்சிகளின் மீதும் மதிப்பு இருந்ததில்லை.

தங்களது அரசியல் லாபத்துக்காகப் பல கொலைகளை இரு கட்சிகளுமே செய்துள்ளனர். அரசியல் ரவுடிகளை வளர்த்து விட்டிருக்கிறார்கள். கூடவே லஞ்சம், கொள்ளை, நில அபகரிப்பு என்று அத்தனையும் அடியாழம் வரைக்கும் புரையோடிப் போயிருந்தது இருவரது ஆட்சி காலத்திலும்.

சரி அடுத்த தலைமுறையாவது இதையெல்லாம் சீர் செய்யும் என்று எண்ணினால், ஆளுங்கட்சியின் அடுத்த வாரிசான அந்த ஷிவ்வோ, அவன் அப்பனுக்கே அப்பனாக அல்லவா இருக்கிறான்?

ஆனால் இந்தப் பெண் அமெரிக்காவில் பாடகியாக இருக்கும் பொழுதே இங்கேயும் பேசப்பட்டவள் தான். இந்திய வம்சாவழிப் பெண், அமெரிக்காவின் பாப் உலகில் பெரும் பாடகியாக இருக்கிறாள் என்று அனைவருமே அறிந்தது தான். ஆனால் அவளது பெற்றோர், பூர்வீகம் பற்றி அப்பொழுது தெரியாவிட்டாலும் இங்கேயும் அவள் வெகு காலமாகவே பிரபலம் தான்.

அமெரிக்காவில் படிக்கும் அவரது மகள், நவிராவைப் பற்றி நிறைய பேசியிருக்கிறாள்.

ஆகவே நவிராவின் மீது நல்ல பிம்பமே இருந்தது அவருக்கு. ஆனால் காதல் பிரச்சனையில் ஏதோ கசமுசாவாகி அந்தப் பெண் உயிருக்கே போராடி மீண்டு வந்திருக்கிறாள். அதில் இப்பொழுதைய தமிழக முதலமைச்சரின் மகனும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஷிவ்வுக்கும் கூட தொடர்புண்டு என்ற கிசுகிசுக்களும் பரவின.

இப்பொழுது பார்த்தால் தமிழகமோ, அதன் அரசியலோ எதுவுமே தெரியாத அவள் இந்த தமிழக மக்கள் கழகத்தின் தலைவியாக பதவியேற்றிருக்கிறாள்.

அமெரிக்காவில் அவளுக்கிருந்த புகழ், பணம் என அனைத்தையும் துறந்துவிட்டு, இந்த சாக்கடைக்குள்.. அதையும் விட, காதலித்து, மணம் புரிவதாய்க் கூறித் தன் தாயை ஏமாற்றியவனிடமே அவள் திரும்பி வந்திருப்பதன் காரணம் என்ன என்று அவருக்கு நிச்சயமாய் புரியவே இல்லை தான்.

அதுவே அவருக்குக் குழப்பமாக இருக்கிறதென்றால், இந்தக் கட்சியின் தலைவியாக பொறுப்பேற்கும் பதவியேற்பு விழாவில், தானே ஒரு முக்கிய அமைச்சரைச் சுட்டுவிட்டதாக போன் செய்து கூறுகிறாள்!

என்ன பெண் இவள்? என்று சற்று ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் தான் இருந்தது அவருக்கு.

அதே வேளையில் கமிஷனரிடம் போனில் பேசுகையில் மைக்கில் அனைவருக்கும் கேட்கும்படி தான் பேசினாள் நவிரா. அவளது பேச்சைக் கேட்டு மற்ற கட்சி உறுப்பினர்களெல்லாம் குழம்பினாலும், “நீ இப்படி எல்லாம் கமிஷனர்கிட்ட மாத்தி சொன்னா, அதை நாங்க சும்மா விட்டுடுவோமா?

நாங்களே கமிஷனர்கிட்ட உனக்கு எதிரா சாட்சி சொல்லுவோம். நீ இங்கிருந்து எப்படி முழுசா வெளில போறன்னு பார்க்கறோம்..” என்று அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு சூளுரைக்க, நவிராவோ மெதுவாய் பின்னே திரும்பி தயாளனைப் பார்த்தாள்.

தயாளனோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார். நவிரா செய்வதை எல்லாம் பார்த்தால் இன்னும் ஒரே மாதத்தில் இந்தக் கட்சிக்கு மூடுவிழாவே நடத்திவிடுவாள் என்று துளியும் சந்தேகமின்றி உணர்ந்தார் அவர்.

ஆனால் தன் கழுத்தில் கத்தி வைத்திருக்கும் இந்த நிலையில் அவரால் எதுவும் செய்யவே முடியாத நிலை.

அதனால் வேறு வழியின்றி நவிராவுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்.

வெறுத்த முகத்துடன் தனது இருக்கையிலிருந்து அவர் மேலெழுந்து வர, நவிராவைப் பார்த்து மேடைக்கு கீழே இருந்து கத்திக் கொண்டிருந்த தொண்டர்கள் அனைவரும் தயாளனைப் பார்த்து சற்றே அமைதியடைந்தனர்.

ஆனால் அவரோ மைக்கின் முன்னே வந்து நின்று..

“கட்சிக்காகவும், அதன் அமைதிக்காகவும் நம் தொண்டர்கள் அனைவரும் நவிராவுக்கு ஆதரவாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அதுவும் இன்றி இனி நம் கட்சிக்கே தலைவி நவிரா என்பதாலும், நானும் என் எதிர்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாலும், நவிராவின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கான விண்ணப்பத்தை தமிழக ஆளுநர் ஒப்புக்கொண்டு விட்டதாலும், நமக்கு வேறு வழி இல்லை.” என்று அவர் எந்திரம் போலக் கூற, அவர் கூறிய இந்தச் செய்திகளெல்லாம் தொண்டர்களுக்குப் புதிதாக இருந்தது.

ஏனென்றால், அவர் எதிர்கட்சித் தலைவர் பதவியேற்ற அடுத்த நாளே அந்தப் பதவியை ராஜினாமா செய்ததையோ, மாறாக நவிரா எதிர்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் விண்ணப்பத்தை ஆளுநர் உடனே ஏற்றுக் கொண்டதையோ இன்னமும் அவர் கட்சியினரிடம் தெரிவிக்கவே இல்லையே?

இப்பொழுது திடுமென அவர் இந்த விவரத்தையெல்லாம் கூறவும் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூட யாருக்கும் தெரியவில்லை.

சூழ்நிலையைக் கருதி அனைவரும் அமைதி காத்தாலும், நவிராவின் மீது உள்ளுக்குள் பெரும் பழி வெறி அனைவருக்குமே தோன்றியதென்னவோ உண்மை தான்.

கட்சி உறுப்பினர்களெல்லாம் இந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாது தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கையில் கூட்டத்துக்குள்ளிருந்து ஒருவன் எழுந்தான்.

அவன் எழுந்ததுமே கூட்டத்தில் முழு நிசப்தம். தமிழக மக்கள் கழகத்தை ஆரம்பித்து, இரண்டு முறை முதல்வராக இருந்த தயாளனுக்கு இல்லாத மரியாதை, அவர் மீது உண்டாகாத பயம், அந்த அவனைக் கண்டதும் அனைவரிடத்திலும் தோன்றியது.

அவன் தான் சூரியவர்மன்! முன்னால் நிதித்துறை அமைச்சர். என்ன தான் தமிழக மக்கள் கழகத்தில் தலைவர் ஜீவானந்த தயாளனாக இருந்தாலும் கூட, இளம் வயதிலேயே அரசியலில் சேர்ந்து, வெகு விரைவாகவே கட்சிக்குள் முக்கிய பதவிகளை வகித்து, சென்ற தேர்தலில் தமிழக மக்கள் கழகம் வெற்றி பெற்ற பொழுது, இந்த சூர்யவர்மன் நிதித்துறை அமைச்சராகவே பதவியேற்றான். அதுவும் இருபத்தெட்டு வயதில்!

இந்த முறையும் வாக்கு விகிதத்தைப் பார்த்தால், இப்பொழுதைய முதல்வரின் வாக்கு சதவிகிதத்தை விட, சூர்யவர்மனின் வாக்கு விகிதம் அதிகம்.

அவன் பரிசுத்தமானவன்; மென்மையானவனும் கூடத் தான். ஆனால் அந்த மென்மைக்குள் ஒரு வன்மை இருந்தது.

யாரும் பார்க்க விரும்பாத வன்மை. அப்படிப் பார்த்தவர்களை அதன் பிறகு உயிரோடு விட்டு வைத்திராத வன்மை!

ஆகவே தான் அவன் எழுந்ததும் சபையில் சட்டென அமைதி.

அவன் எழுந்து வருவதைக் கண்டதும் தயாளனுக்குமே கொஞ்சம் உதறல் தான். தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தக் கட்சி தயாளனுக்குப் பிறகு சூர்யவர்மனுடையது. அதை தயாளன் நினைத்தாலும் கூட மாற்ற முடியாது என்பதே இத்தனை நாள் இருந்த நிலை!

கட்சியின் எந்த முடிவாக இருந்தாலும் தயாளனும், சூர்யவர்மனும் சேர்ந்து எடுத்ததாகவே இதுவரை இருந்திருக்கிறது. இப்பொழுது இவ்வளவு பெரிய முடிவை அவனைக் கேட்காமல் எடுத்திருக்கிறார் அவர்.

ஆனால்.. சூர்யவர்மனின் எதிர்வினையைக் காட்டிலும், நவிராவை எண்ணி ஐயப்பட்டார் தயாளன். ஆகவே தான் இந்த முடிவு.

கூரான பார்வையுடன் நவிராவைப் பார்த்தபடி வந்த சூர்யவர்மனோ, ஒரே தாவலில் மேடையேறி அவளருகே இருந்த மைக்கை தன் கையில் பற்றினான்.

“எல்லாரும் பயந்து போயிருக்கீங்கன்னு தெரியுது. ஆனா நம்ம தலைவர், நம்ம யாரையும் கேட்காம இவ்வளவு பெரிய முடிவை எடுத்துருக்காருன்னா, அதுக்கு பின்னாடி பெரிய காரணம் இருக்கும். அதனால நீங்க எல்லாரும் தலைவருக்கும், நம்ம இப்போதைய தலைவி நவிராவுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கணும்.

இது இந்த சூர்யவர்மனோட வேண்டுதல் இல்ல.. உத்தரவு!” என்று அனைவரையும் பார்த்து கூற, நவிரா உட்பட அங்கிருந்த அனைவருக்குமே அவன் இப்படி சட்டென நவிராவின் தலைமைக்கு ஒப்புக்கொண்டது பெரும் வியப்பாய் இருந்தது.

அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், குண்டடி பட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த தண்டபாணியைப் பார்த்து,

“யோவ்.. என்ன இன்னமும் அணத்திட்டு இருக்க? நெஞ்சுலையா சுட்டாங்க? தோள்ல தான? கொஞ்சம் பொறுத்துக்க.. செத்துட மாட்ட!” என்று அலட்சியமாகக் கூறிக் கொண்டிருந்தவனின் குரல் சட்டென உறுமியது.

“ஆமா.. என்ன தைரியம் இருந்தா, தலைவர் இனிமே இவங்க தான் நம்ம தலைவின்னு சொன்னதுக்கு அப்பறமும், அவங்கள அசிங்கமா பேசுவ?

ஹாஸ்ப்பிட்டல்ல போய் இந்த குண்டடிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு வா.. அப்பறம் உன்னை நானே என் கையால கொல்லறேன்..” என்று அவன் கர்ஜிக்க.. அந்த தண்டபாணிக்கோ குலை நடுங்கியது.

மன்னிப்பு கேட்கக் கூட திராணியற்று அவன் படுத்திருக்க, அந்த நேரத்தில் கமிஷனருடன், மருத்துவக்குழுவும் அந்த அறைக்குள் நுழைந்தது.

வந்ததும் நிலைமையைக் கையிலெடுத்துக் கொண்டார் கமிஷனர்.

பத்திரிகைகளுக்கு அவரே விஷயத்தை சொல்லியும் விட்டார்.

நம் சட்டத்தில் தற்காப்புக்காக திருப்பி தாக்குவது குற்றம் இல்லை என்பதாலும், நடந்தது ன்னவென்று சூர்யவர்மனே, நவிராவின் பாதுகாப்புக்கு ஏற்றபடி சாட்சி கூறியதாலும் எந்த விதமான வழக்கும் அவள் மீது போடப்படவில்லை.

ஆனால் அவர்கள் எல்லோருமாகக் கட்சிக்குள் நிலைமையை ஒளரவுக்கு சமாளித்துவிட்டாலும், தண்டபாணியால் தனக்கு நேர்ந்ததை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஒரு பெண், அதிலும் அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாதவள், தன்னை இத்தனை பேருக்கு நடுவில் சுட்டுத் தள்ளியிருக்கிறாள். அதில் தனக்கு ஆதரவு காட்ட கட்சியில் எவனுக்கும் துணிவில்லையே என்ற கோபமுமாக எல்லாம் சேர்ந்து தனது ஆதரவாளர்களை, நவிராவுக்கு எதிராக மறைமுகமாகக் கிளப்பிவிட்டான்.

இத்தனைக் களேபரத்துக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை கட்சி உறுப்பினர்களிடம் தன்னைப் பற்றிக் கூற முயலவில்லை நவிரா. மாறாக..

“இங்க என்னை மதிச்சு, என் தலைமைக்குக் கீழே இருக்க சம்மதிச்சு இருக்கறவங்க மட்டும் இருந்தா போதும். இவ வெறும் பொம்பள தானே.. இவளை என்ன வேணாலும் செஞ்சுடலாம்னு அசால்ட்டா நினைச்சு இங்க இருக்க நினைச்சா, அந்த தண்டபாணிக்கு என்ன கதியாச்சோ, அதே கதி தான் உங்களுக்கும்..” என்று எச்சரிக்கை விடுத்தவள், முறைப்பாக சூர்யவர்மனையும் பார்த்தாள்.

அந்தப் பார்வையில், “உன் அதிகாரத்துக்கும், மக்கள் பலத்துக்கும் யார் வேண்டுமானாலும் ஐயப்படலாம். ஆனால் எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை..” என்ற பொருள் இருந்தது.

அதை உணர்ந்த சூர்யாவோ மெல்ல தனக்குள்ளாக சிரித்துக் கொண்டான்.

அங்கு ஓரளவுக்கு நிலமையைக் கட்டுப்படுத்தி அவர்கள் வீடு திரும்ப மாலை தாண்டி விட்டது.

தயாளனும், சூர்யவர்மனும் ஒரு காரில் புறப்பட, நவிராவையும் உடன் அழைத்தான் சூர்யவர்மன்.

அவனை கீழ்ப்பார்வை பார்துவிட்டு, தனது உதவியாளர் ஜான்சியுடன் கிளம்பினாள் நவிரா.

அவள் செல்லுவதைப் பார்த்த தயாளனுக்கோ உள்ளும் புறமும் பற்றிக்கொண்டு எரிந்தது.

வாய்க்குள் மிகக் கேவலமான கெட்ட வார்த்தையால் தான் பெற்ற மகளையே அவர் திட்ட, அதைப் போலி அதிசயத்துடன் திரும்பிப் பார்த்தான் சூர்யவர்மன்.

அவனிடம், தயாளன் ஏதோ கூற வரும் முன், “வாங்க தலைவரே நாம கிளம்பலாம்.” என்று கூறி அவன் காரில் என்ற, அவனைத் தொடர்ந்து ஏறிய தயாளனுக்கோ இன்னமும் அவனைப் புரிந்து கொள்ள இயலவில்லை.

அதே வேளையில் ஷிவ்வுக்கோ, நவிராவின் கட்சி அலுவலகத்தில் நடந்தது செய்தி மூலமாக தெரியவந்திருக்க,

“என்ன நினைச்சுட்டு இருக்கா இவ?” என்று எரிச்சலாகிப் போனது.

அவர்கள் கட்சியில் ஏதாவது பிரச்சனையென்றால், நியாயமாக ஷிவ்வுக்கு சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு பதட்டமாகத் தான் இருந்தது.

அந்த தண்டபாணி ஒன்றும் சாதாரணமான ஆள் கிடையாதே.

கட்சிக்குள், “தலைவரே.. தலைவரே..” என்று குழைந்தாலும்.. அவன் ஒரு மிருகம். அதிலும் தனது தன்மானத்திற்கு சிறு கரை உண்டானாலும் அவர்களை உயிரோடே விட்டு வைக்காத மிருகம்!

இங்கு நவிராவுக்கு, அவள் தந்தை எந்த அளவுக்கு பாதுகாப்பு அளித்திருக்கிறாரோ?என்று அவன் ஐயப்பட்டாலும், உடனே..

“அதெல்லாம் சிறப்பா தான் செய்திருப்பர். இல்லைனா, கட்சியோட தலைவியா பதவியேத்த உடனே, அந்தக் கட்சில இருக்கற ஒரு முக்கியமான ஆளையே சுட்டிருப்பாளா அவ? அதுவும் அத்தனைப் பேர் முன்னாடி?

இதெல்லாம் அவ அப்பாவோட சப்போர்ட் இல்லாம அவளால செய்ய முடியுமா என்ன?” என்று மிகவும் இகழ்ச்சியாக எண்ணியவன், தனது மாநாட்டுக்குக் கிளம்பினான்.

அவனது கவனம் இப்பொழுது மக்களுக்கு நன்றி செலுத்தும் இடமான மாநாட்டில் குவிந்திருக்க வேண்டும்.

மேடையில் கட்சியின் பிரதான தலைவர்கள், கூடவே முதலமைச்சரான ஷிவ் சேயோன் மகிழனின் தந்தை, வெற்றிச் செல்வன் அனைவரும் வெற்றிப் பெருமிதத்துடன் வீற்றிருந்தனர்.

மற்ற அமைச்சர்களெல்லாம் பேசி முடித்திருக்க, இப்பொழுது மகிழனின் முறை.

முதல் மேடை என்ற தயக்கமெல்லாம் இல்லை அவனுக்கு.

அவனுடைய முதல் மேடையும் இல்லை இது!

ஆனால் முதல் மேடையில் பேசுவதற்காக அவன் ஏறவில்லை!

பாடுவதற்காக.. அதிலும் வேறு யாருக்காகவும் இன்றி.. அவளுக்காக!!

அவளை இனிதாய் அதிரச் செய்து, மணம் புரியக் கேட்பதற்காக.

தன் முன்னாலிருக்கும் மைக்கை ஒரு கணம் பார்த்தான் மகிழன்.

“Moonlit Melody: A Promise of Forever” என்ற தலைப்பில் நவிரா ஒரு கான்செர்ட்டை நடத்திக் கொண்டிருந்த பொழுது, அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அவளது இசையின் அசைவுக்கு ஏற்ப இவன் பாடல் வரிகளைத் தயாரித்து அதை அந்த மேடையிலேயே, அவளது பாட்டின் இடையில் இவன் மேடையேறி பாடல் மூலமாக தன்னைத் திருமணம் புரியக் கேட்டது தான் அவன் முதன்முதலாக மேடையேறி நிகழ்வு!

அந்தப் பாடலும், அதன் வரிகளும் இன்னமும் கூட அவனுக்கு நினைவிருந்தது.

இன்னமும் கூட என்ன? எல்லாம் நடந்து முடிந்து ஒரு ஆறு மாதங்கள் தானே ஆகியிருந்தது?

“With this ring, a promise true,
Forever, darling, me and you.”

என்று அவன் உருகியதும், அதற்கடுத்த வரிகளில்..

“Through every storm, through every tear,
Our love will conquer every fear.”

என்று அவன் பிதற்றியதும்!

அன்று என்னென்னவெல்லாம் நடந்துவிட்டது?

எத்தனைக் கனவுகளுடன் அவள் கையில் அந்த வைர மோதிரத்தை அணிவித்திருப்பான் அவன்?

அவனுடைய அப்பொழுதைய சம்பளத்துக்கு, அவனுடைய முழு சேமிப்பையும் போட்டு அந்த மோத்திரத்தை வாங்கியிருந்தானே?!

ஆனால்.. என்று எண்ணிக் கொண்டே போனவனுக்குக் கண்களின் ஓரம் அவனையும் அறியாது துளிர்த்தது நீர்மணி ஒன்று!

“ச்சே.. அவளுக்காக.. அந்தக் கேடு கெட்டவளுக்காக.. என்னைக் காதல்ன்ற பேர்ல, ஊர் உலகம் முழுக்க அசிங்கப்படுத்தினவளுக்காக நான் கண்ணீர் சிந்தறேனா?” என்று உள்ளுக்குள் தீப்பொறியொன்று கனன்றது அவனுக்கு!

அந்த நெருப்பின் வீரியத்தில்..

“நம் வெற்றித் தமிழர் கட்சிக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்களாகிய நீங்கள் கொடுத்த வெற்றி, நம் தமிழகத்தின் புது வெளிச்சம்.

அந்த ஒளி, என் உதிரத்தை நெய்யாய் இட்டு.. இதயத்தில் பற்ற வைத்த நெருப்பாய் ஒளிர்கிறது.

மக்களே.. இது என் வெற்றியல்ல, என் கட்சியின் வெற்றியல்ல!

உங்களின் வெற்றி.. தமிழக மக்களின் வெற்றி!

என் அடுத்த இலக்கு.. உங்களது வேலையை எளிதாக்குவது.

என்னன்னு புரியலையா? இப்போ ரெண்டு கட்சி இருக்கறதால, எந்தக் கட்சிக்கு ஓட்டு போடறதுன்னு கொஞ்சமே கொஞ்சம் குழப்பம் இருக்குதில்லையா உங்களுக்கு?

உங்கள குழப்பவும் நிறைய ஆட்கள் இருக்காங்க இல்ல?

அந்தக் குழப்பம் கூட உங்களுக்கு இருக்கக் கூடாது.. உங்களைக் குழப்பவும் ஆட்கள் இருக்கக் கூடாதுன்னு நான் ஆசைப்படறேன்.

அதனால.. என்னோட குறிக்கோளெல்லாம், இனி இந்தத் தமிழ்நாட்டுல இருக்கப் போறது ஒரே ஒரு கட்சி!

அது.. “வெற்றித் தமிழர் கட்சி!”” என்று கூறி அசுரத்தனமாகச் சிரிக்க, அவனது சிரிப்பின் அர்த்தம் யாருக்குப் புரிந்ததோ இல்லையோ, முதல்வர் வெற்றிசெல்வனுக்குப் புரிந்தது.

ஆனால் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாது, தனது இலக்கை, மக்களிடம் உறுதிசெய்தபடி தனது தீர்க்கமான விழிகளால் மக்கள் கூட்டத்தைப் பார்த்து தனது அரக்கச் சிரிப்பைப் பகிர்ந்து கொண்டிருந்த மகிழனின் கண்களோ கூட்டத்தின் எல்லையைப் பார்த்ததும் இடுங்கின.

அந்த எல்லையில் நின்று புடவையில் முக்காடிட்டு, மாஸ்க்கினால் முகத்தை மறைத்து நின்றிருந்த பெண்ணவளோ, அவன் தன்னைக் கண்டுகொண்டான் என்பதை அறிந்ததும்.. தன்னருகே இருந்த மற்றொரு பெண்ணிடம்..

“வாங்க ஜான்சி கிளம்பலாம்..” என்று கூறி அருகில் நிறுத்தியிருந்த தங்களது இருசக்கர வாகனத்தை நோக்கிச் செல்ல, இடுங்கியிருந்த மகிழனின் கண்கள் ரத்த நிறமாய்ச் சிவந்தன!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!