Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஷோபா குமரனின் நேசம் மறப்பதில்லை நெஞ்சம் part 2

“எப்புடி?” என்றவனுக்கு, பெரிய கும்பிடோடு நமுட்டு சிரிப்பையும் பதிலாக உதிர்த்து மீண்டும் களை பிடுங்கும் வேலையில் மூழ்கினாள். அவன் மனம் இன்னும் பெரியவரையே சுற்றி வந்தது. அவர் உணர்வுகள்… அதில் தெரிந்த வலி…ஏன் ஆண்களுக்கு உணர்வு இல்லையா என்ன? அதிகம் காட்டிக் கொள்வதில்லை அவ்வளவு தான்!

“ஆசை முகம் மறந்து போனா அது எத்தன கொடுமையான வலி! உயிரா நேசிச்ச என் மனைவி என்னை விட்டுட்டுப் போய் இத்தன வருஷத்துல அவ முகம் எனக்கு மறக்கவே இல்ல. இறந்தவங்க முகத்த நினைவு படுத்த ஃபோட்டோஸ் இருக்கும்… ஆனா எல்லார்கிட்டயும் அந்த குரல் இருக்காது, அதுனால இறந்தவங்க குரல் தான் முதல்ல மறந்து போகும். ஆனா என் சந்திரிகாவோட முகமும் எனக்கு மறக்கல, அவ குரலும் எனக்கு மறக்கல. அவ என் நினைவில இருக்கும் போதே என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சுட்டு கண்ண மூடிடணும்” அடுக்கடுக்காக அந்தப் பெரியவரின் முகபாவங்களும் அவர் கூறியதும் நினைவில் வந்தது.



Advertisement

காதல் மனைவியின் முகம் அவருக்கு ஏன் மறக்கவில்லை? அவர் காதல் உண்மை என்றதாலா? அப்பொழுது தன் காதல்? ச்ச… என்ன நினைப்பிது? தலையை உலுக்கிக் கொண்டு நாளிதழில் கவனம் செலுத்த முயன்றான். முயன்றவன் படு கேவலமாகத் தோற்றான்.

Advertisement

கண்ணன் முகம் மறந்து போனால்

Advertisement

இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ..

வண்ண படமும் இல்லை கண்டாய்

இனி வாழும் வழி என்னடி தோழி

Advertisement

 

ஆசை முகம் மறந்து போச்சே மனைவி நிறுத்தாது பாடலை ஹம் செய்துகொண்டே இருந்தாள்.

அவன் ஒரு காலம் ஆசையாகப் பார்த்த அந்த அழகு முகத்தை நினைவு படுத்த முனைந்தான். அந்தோ பரிதாபம்! முகம் முழுவதுமாக நினைவில் இல்லை. அவள் அவனைக் கடைசியாகப் பார்த்தது மட்டும் நினைவில் வந்தது. இன்றும் அந்தப் பார்வை மனதைப் பிசைகிறதே! எல்லாம் கடந்த காலம் தான் என்றாலும் நினைவில் நின்றவை. அவளை நினைவில் வைத்துக்கொள்ளக் கூடாதென்றே அவள் நினைவுகளை ஒதுக்கியவன் தான். ஆனால்… இன்று? இன்று ஏன் திடீர் என்று அவளின் எண்ணம்? என்ன ஆனாள் அவள்? யாரை மணமுடித்திருப்பாள்? அந்தப் பெரியவர்… அதுதான் அவளின் தகப்பனார்… அவரின் மனைவியின் நினைவோடு நன்றாக இருப்பாரல்லவா? பதிலில்லா கேள்விகள்!

மனம் அவள் முகத்தை முன் கொண்டு வர முயன்றது. மிகுந்த முயற்சிக்குப் பின், அவன் முன் நடனமாடியது அவள் கருவிழிகள். நீள விரல்கள் அபிநயம் படிக்க, போட்டி போட்டுக் கொண்டு இதழ்கள், குவிவதும் நீள்வதுமாகச் சத்தமில்லா மொழியை மொழிந்தன.

அவனுக்குள் ஒரு அவஸ்தையான உணர்வு வர ஆரம்பித்தது. கண்களை இறுக மூடினான். இவன் மூச்சுக் காற்று படும் தூரத்தில் யசோதராவின் நெற்றி இருந்தது. “நான் உன்ன காதலிக்கறேன். உன் மேல பைத்தியமா இருக்கேன்னு சொன்னா ஏன் உனக்கு புரியல!” என்று ஆற்றாமையோடே அவளிடம் கேட்க, அவள் கண்களில் மெலிதான நீர்திரை. “நீ சொல்ற காரணம் எல்லாம் ஒரு காரணமா? அதுக்காக எனக்கு உன் மேல காதல் வரக்கூடாதா? அப்படித்தான் வரும். என் உயிர் என் உடம்பில இருக்க வரைக்கும் உன்னை காதலிச்சுட்டே இருப்பேன். நமக்குப் பேரப் பிள்ளைங்க பிறந்த பிறகும் உன்ன உயிரா காதலிப்பேன். உன் அப்பா… என் அப்பா காதல் மாதிரி என் காதலும் உண்மையானது.”

நீரில் எழுதிய எழுத்தாகக் கலைந்தே போனது அவன் காதல். இன்று அவளும் இல்லை… அவள் மீது அவன் கொண்டிருந்த காதலும் இல்லை!

தலை ஏதோ செய்தது. முடிந்ததை நினைக்காதே மனமே! தலையை ஆட்டி நினைவுகளிலிருந்து விடுபட நினைக்க, இன்று அவன் மனைவி அவனை விடுவதாக இல்லை போலும்.

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்

எனில் நினைவு முகம் மறக்கலாமோ

ஆசை முகம் மறந்து போச்சே

இதை ஆரிடம் சொல்வேனடி தோழி”

 

பாகீரதியின் கவனம் முழுவதும் செடியின் மீதிருந்தாலும் தேய்ந்த ரெக்கார்டர் போல் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது பாடல் வரிகளை. இதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காது, பாடல் கேட்காத தூரத்திற்குச் சென்றுவிட்டான். தூரச் சென்றவனைத் துரத்தவென்றே அன்று முழுவதுமே அவன் சிந்தையில் யசோதரா வருவதும் போவதுமாகவே இருந்தாள்.

அவளின் சிரிக்கும் விழிகள், கண்ணீர் திரையிட்ட விழிகள், ஏக்க விழிகள், முட்டையாய் விரிந்து அவனை விழுங்கிய கோப விழிகள்… எல்லாம் அவனிடம் மட்டும் தானே காட்டினாள்! ஏன் வேண்டாம் என்றாள்? ஏன் அவளுக்குத் தன்னை பிடிக்கவில்லை? என் காதலை ஏன் அவள் உணரவில்லை?  என்று எத்தனைவிதமான கேள்விகளால் எத்தனை நாட்கள் அவனின் தூக்கத்தை விழுங்கியிருப்பாள் அவனின் யஷோ.

‘கௌதம் உனக்காக நானே பண்ணினது’ என அவள் நீட்டிய திருநெல்வேலி ஹல்வா அவளின் எத்தனை மணி நேரத்தை விழுங்கியிருக்கும் என்று அவன் அன்று வியந்தது நினைவில் வந்து போனது. வியந்ததோடு ஏன் அன்று அவன் உணர்வு நின்று போகவில்லை? அவளின் ஆவலான விழியில் ஏன் விழுந்து போனான்? “எனக்காகவா?” என்ற வேளை அவன் மனம் குதிரையாய் அவளைத் தானே நோக்கி ஓடியது.

‘அம்மா… என் அம்மாவ நான் தான் கொன்னேன் கௌதம்’ என்று அவனின் மார்பை கண்ணீரால் நனைத்த அன்று முற்றிலும் அவன் உடைந்து போனானே. அதைக் கைப்பேசியில் எழுதும் வேளை அவள் கைகள் நடுங்க, அன்று அவளின் பலமாக அவன் தானே நின்றான். அவள் கொடியாய்… அவளின் மரமாக… தான் இருப்பேன் என்று எப்படி எல்லாம் கனவு கண்டான்? எல்லாம் கனவாகவே ஏன் போனது?

யசோதராவிற்கும் தன்னைப் பிடிக்கும் என்று உணர்ந்த அன்று அவன் கொண்ட ஆனந்தத்தை அவள் அனுபவிக்க விடவே இல்லை. “காதலிக்கிற தான?” என்றதற்கு, ‘நீயா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை’ என்பது போல் பார்த்துச் சென்றுவிட்டாள். தனக்குப் பிடித்ததை அவனிடம் ஒத்துக்கொள்ளும் அளவு கூட அவனுக்கு அருகதை இல்லை என்று நினைத்துவிட்டாள் போலும் என்றுதான் எண்ணத் தோன்றியது. பிடித்தமிருந்தும் ஏன் தன் காதலை மறுத்தாள்? என்று கலங்கியவனுக்கு, அவள் மறுத்த காரணம் தெரிந்தபின்னும் என்ன செய்ய முடிந்தது? அவனால் மாற்றவே முடியாத ஒன்றைக் காரணமாகக் கூறினால் அவனும் என்னதான் செய்வான்? அன்று அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே!

அன்று முழுவதுமே அவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொன்றும் வரிசைகட்டி வந்து நின்றது.

அவளுள் இருக்கும் காதலை அவளைக் கொண்டே உரைக்க வைப்பேன் என்ற பிடிவாதத்தை அவனும் விடவில்லை. “காதல் இல்லை” என்ற பார்வை பார்த்தவள், காதல் இல்லாமலா சாலையில் பேச்சு மூச்சில்லாது மயங்கிக் கிடந்தவனை மடியில் ஏந்தி, சத்தம் வராத அந்தத் தொண்டை கிழியக் கதறி அழுதாள்? அவன் கண் விழித்ததும், ‘உன்னை விடுவதில்லை’ என்பது போல் மார்போடு அவனை அணைத்து நெஞ்சம் அதிரத் தேம்பியது பொய்யில்லையே.

அவன் ஒரேயடியாக அவளை விட்டுச் சென்றதற்கு மௌனமாய் கதறி அழுதிருப்பாளா? “யஷோ…” சத்தமில்லாது மனம் விம்மியது. அவள் முகம் கூட நினைவில் இல்லையே… இருந்தும், இன்றும் தொண்டையில் அதே வலி எப்படி சாத்தியம்?

அவன் வலியைப் பொறுக்க முடியாது மனம் ஒரு முறை அவளின் முகத்தை முன் கொண்டு வந்து அவனுக்காகக் கொடுத்தது. அவன் திருமணப் பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. அது கொட்டிவிடாமல் இருக்க அவனை அண்ணாந்து பார்த்து நின்றிருந்தாள் அவனின் யசோதரா. இவ்வளவு போராட்டத்திற்குப் பின், வலியோடு தவித்த மலர் முகமா நினைவில் வர வேண்டும்? மனம் கனத்துப் போனது.

“வாசல்ல இருக்கேன்” என்று கைப்பேசியில் அறிவித்து, அவள் வீட்டு வாசலில் நின்றிருந்தவனை மொட்டை மாடியிலிருந்து எட்டிப் பார்த்தவள், ஓடிவந்த வேகத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாலும் அவனைப் பார்த்து மலர்ந்து நின்றாள். கல்லூரியின் கடைசி நாள் அன்று, “நான் பேரிஸ் கிளம்பறதுக்கு முன்ன உன்ன பாக்க வருவேன். காதல ஒத்துக்கோ இல்ல நேரா நமக்குக் கல்யாணம் தான்!” என்றிருந்தவன், உண்மையிலுமே வீடு தேடி வந்திருக்க, அவளும் என்ன நினைப்பாள்? தன்னைத் தான் மணப்பான் என்று எண்ணியிருப்பாள். சிறகில்லாது வானில் பறந்திருப்பாள். ‘எஸ்… ஐ லவ் திஸ் இடியட்.! ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்!’ என சத்தமிட்டு உரைக்க இயலாது, மனதிற்குள் கத்திக் கூப்பாடு போட்டிருப்பாள்.

அவள் உள்ளத்தை, வாய் வார்த்தை கொண்டு கூற முடியாதவளாய், அவன் முன் தன் கரைகாணா காதலைக் கண்களில் தேக்கி, அடக்க முடியா புன்னகையோடு அவன் கைபிடித்து உள்ளே அழைத்தவள் சற்றும் அவன் திருமண அறிவிப்பை எதிர்பார்த்திருக்க மாட்டாள். அதை அவளிடம் உரைக்கும் முன் அன்று ஆயிரம்… லட்சம்… கோடி… முறை செத்துப் பிழைத்தான். அவளின் அதிர்ந்த முகம் காணும் முன்னமே, “யஷோமா… சாரி. சாரி யஷோ” என்று அவன் மனதோடு கண்களும் இறைஞ்சியது. தன் மனதை… பேச முடியாது தொண்டை அடைக்க நின்றிருந்த அன்று தான் அவளின் சத்தமில்லா மௌனத்தின் வலி, அவனுக்கு உண்மையிலுமே புரிந்தது.

அன்று அவள் தேக்கி வைத்திருந்த கண்ணீரை இன்று அவன் கண்கள் சொரிந்தன. உலகின் ஏதோ ஒரு மூலையில் மகிழ்ச்சியோடு இருப்பாள் என தன்னை தேற்றிக்கொண்டான். ஆசைப்பட்டவளின் முகம் மறந்த பின்னும், ஏன் அவளையே மறந்த பின்னும் கூட அவள் பால் அவன் கொண்ட நேசம் மறக்கவில்லை.  மறக்கக் கூடிய நேசமா அது? யசோதராவை சுற்றிச் சுற்றி வந்து, மௌனமான அவளிற்கும் சேர்த்தே அவன் பேசி… காதல் மழையை அவள் மீது பொழிந்து, பூட்டியிருந்த அவளின் உள்ள கதவை அவனுக்காக மட்டுமே காதலோடு திறந்து நின்றவளிடம், ‘சாரி யஷோ’ என்று திருமண பத்திரிக்கையை நீட்டிய அன்று அவளைப் போலவே அவனும் உயிரோடே செத்துத்தான் போயிருந்தான்.

முடியா பகல் ஒருவழியாக முடிவடைந்தது. “கௌதம்… தூக்கம் வரலியா?” எனப் படுத்திருந்தவன் அருகில் விளக்கணைத்துப் படுத்தாள் மனைவி.

“ஏதோ யோசனை.” என்றவனின் தலையை வருடி, “என்ன யோசன?” என நெற்றியில் முத்தம் வைத்தாள்.

“ஆசை முகம் எப்படி மறக்கும்ன்னு கேட்டியே அதைத் தான்” என்றான்.

“எப்படி?” என்றவளை ஆக்டோப்ஸாக மாறி அணைத்தவன், “காதல் முகம் மூளைய முழுசா ஆக்கிரமிச்சா… ஆசை முகம் மறந்திடும் ரதி.” என்றான் காதல் ததும்ப.

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்

எனில் நினைவு முகம் மறக்கலாமோ

 

ஆசை முகம் மறந்து போச்சே

இதை ஆரிடம் சொல்வேனடி தோழி”

 

******* ******* *******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!